Saturday, April 25, 2020

அழகின் அரசியல் - பிரளயன்


ழைய தமிழ்த்திரைப்படங்களான எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன், சிவாஜி நடித்த ‘திருவிளையாடல்படங்களைப் பார்த்திருக்கிறீரா? இவ்விரு படங்களிலும் ‘சாவித்திரிதான் கதாநாயகி இப்படங்களில் நடிக்கிற போது சாவித்திரி சதைபோட்டு பூசிய உடம்பாய் பார்க்க சற்று எடை கூடியவராய்த் தெரிவார். எனினும் ரசிகர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. இப்படங்களை பெருத்த வெற்றி பெறச்செய்தனர்.

அதேபோல், 70களில் வெளியான கே.ஆர்.விஜயா நடித்த படங்களும் இப்படித்தான். சிவாஜியுடன் நடித்த ‘பாரதவிலாஸ்,எம்.ஜி.ஆருடன் நடித்த ‘நல்லநேரம்இவற்றிலிலெல்லாம் கே.ஆர்.விஜயா, இரட்டைநாடி உடம்புள்ளவராய் சற்று எடைகூடியவராய்த்தான் தெரிவார். பாரதவிலாஸ் படத்தில் தம்பதியரான சிவாஜி-கே.ஆர்.விஜயாவுக்குள் பலத்த வாக்குவாதம் நடப்பதாக ஒரு காட்சி;அதில் இப்படி ஒரு வசனம் வரும். சண்டையின் உச்சக்கட்டத்தில் கே.ஆர்.விஜயா, “மொத்தத்துல என்னை உங்க ளுக்குப் பிடிக்கல அவ்வளவுதானே?” என்று கத்துவார். பதிலுக்கு சிவாஜி அவரை ஏறஇறங்கப் பார்த்துவிட்டு கைகளால் அவர் உருவத்தை பாவனை செய்து காட்டியபடி, “ஆமாம் மொத்தத்துல உன்னைப்பிடிக்கல!” என்பார். தியேட்டர் முழுதும் ’கொல்லெனச் சிரிக்கும். அவரது உருவத்தை கிண்டல் செய்கிற மாதிரி காட்சிகள் இருந்தாலும்கூட மக்கள் அத்திரைப்படங்களில் கே.ஆர்.விஜயாவை ரசித்தனர்.

சாவித்திரிக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் அந்தக்காலத்தில்  மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. நான் கல்லூரியில் படிக்கிறபோது எங்களுக்கு ஆங்கில ஆசிரியர் ஒருவர் இருந்தார், அவர் ஓர் ஆங்கிலோ இந்தியர். தமிழை தட்டுத்தடுமாறித்தான் பேசுவார். உலக சினிமாவைப் பற்றி கொஞ்சம் ஞானம் உள்ளவர் அவர். வகுப்பறையில் அத்திரைப்படங்களைப் பற்றியெல்லாம் பேசுவார். எப்போதாவது தமிழ்ப்படங்களைப்பற்றி பேசினால் சாவித்திரியைப் பற்றி தான் அதிகம் பேசுவார். சாவித்திரியின் தீவிர ரசிகர் அவர். சாவித்திரி நடிக்கிற படங்களையெல்லாம் மூன்று நான்கு முறை பார்த்துவிடுவாராம். சாவித்திரியை அந்தக்காலத்து ஹாலிவுட் நடிகை ‘கேத்தரின் ஹெப்பர்ன்னோடு ஒப்பிட்டுப்பேசுவார். இந்தக் கதைகளையெல்லாம் அவர் எங்களிடம் பேசுகிறபோது சாவித்திரி ஃபீல்டிலேயே இல்லை என்பது வேறு விஷயம். அது ஸ்ரீதேவி ஸ்ரீப்ரியா காலம்.

இன்று சாவித்திரி போலவோ, கே.ஆர்.விஜயா போலவோ தோற்றமுள்ள ஒருவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துவிட முடியுமா? இந்தக் கேள்வியே பலருக்கு நகைப்புக்கிடமாகத் தோன்றலாம். ஏனெனில் காலம் அப்படி மாறிவிட்டது. அழகு பற்றிய கருத்தாக்கங்களும் மாறிவிட்டன. பென்சில் போன்ற குச்சியான உடல்வாகு, இடுப்பு எலும்புகள் தெரிய ஒட்டிய வயிறு, காலர் எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் கழுத்து, தேவையான இடங்களில் மட்டும் மிதமான சதைப்பிடிப்பு.. இவைதாம் இன்று அழகிய பெண்ணின் இலக்கணங்கள் என்றாகிவிட்டது. ’ஒல்லிப்பிச்சான், ’எலும்பிஎன்று சொல்வதெல்லாம் பழைய கதை. இன்று இவைதாம் அழகிய பெண்ணின் லட்சணங்கள்.

சற்று பருமனாக இருந்துவிட்டாலோ லேசாக கொஞ்சம் வயிற்றில் சதை போட்டு விட்டாலோ பெண்கள்! அதுவும் படித்த நடுத்தரவர்க்கத்துப் பெண்கள் என்னமாய்த் தவித்துப் போகிறார்கள் தெரியுமா? ஹெல்த் கிளப்பிற்குப் போவது, ஃபிட்னஸ் கிளப்பிற்கு போவது, மருத்துவ ஆலோசனைகள் பெறுவது, டயட்டில் இருக்கிறேனென்று பட்டினி கிடப்பது எனப் பலவிதமான சாகஸங்களில் ஈடுபடுகிறார்கள். உடல் நலத்தைப் பேணுவது என்பது இங்கு தோற்றத்தைப் பேணுவது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இது ஒருபக்கம், மறுபக்கத்தில், தனது உடல் பருமன் பற்றி கவலைப்படாமல் பொருட்படுத்தாமல் இருக்கும் பெண்கள்மீது சோம்பேறி!, உடல்நலம் பேணுவதில் அக்கறையற்றவள்! தின்னுங்கூலி என்றெல்லாம் சுலபமான  தீர்ப்புகள் எழுதப்பட்டு விடுகின்றன.

வேலைக்குப்போகிற பெண்கள், ‘கேரீர்பெண்கள், சமூக ஏணியில்  வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறத்துடிக்கும் பெண்கள் இவர்களுக்கெல்லாம் ‘உடல் பருமன்என்பது மிகப்பெரும் “தடைக்கல்என்றே அறிவுறுத்தப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கும், தாழ்வுணர்ச்சிக்கும் உடல் பருமன் கொண்ட பெண்கள் ஆளாக்கப்படுகின்றனர். உண்மையில் இந்த ‘உடல் பெருக்கம் (obesity)  என்பது ஆரோக்கியக்கேடுதானா என்பதே சர்ச்சைக்குரிய விஷயம்.

ஒருவர் அவரது உயரத்திற்கும் வயதிற்கும் ஏற்ப இருக்கவேண்டிய எடையைவிட இருபது சதம் கூடுதலாக எடை கொண்டிருப்போரை உடல் பெருத்தவர் என்று சொல்லலாம். ‘டயாப்படீஸ் - டைப் -2’ என்கிற நீரிழிவுக் குறைபாடு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இக்கூடுதலான எடை ஆபத்தை உண்டாக்கலாம்.

முறையான மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சையும் பெற்று, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து உடல் எடையை குறைக்கமுடியும். உடல் நலத்தைப் பேண முடியும். அதுவும் உடல் எடையை குறைக்கலாமே தவிர தனது தோற்றத்தை முழுவதுமாக மாற்றிக்கொள்ள எல்லோராலும் இயலாது. இது அவரவர் உடல்வாகைப் பொருத்தது. ஆனால் என்ன நடக்கிறது?

உயர் ரத்தஅழுத்தமோ நீரிழிவுக்குறைபாடோ இல்லாத பெண்கள் கூட ‘உடல் பருமனைபெரிய பிரச்சினையாக கருதுகிறார்கள். டயட்டில் இருக்கிறெனென்று பட்டினி கிடந்து உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்வது மட்டுமல்ல, ஃபிட்னஸ்கிளப், ஹெல்த் கிளப், என்று எந்திரங்களோடு எந்திரங்களாக தேகப்பயிற்சியில் இறங்குகிறார்கள். உடலை மெலிய வைப்பதற்கான ‘டயட்ஆலோசனைகளில் பல ஆபத்தானவை.  உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது “1000 கலோரிகளுக்கு கீழாக உணவு உட்கொள்ளுவது அரைப்பட்டினிக்குச் சமம்.” என்று. குறிப்பாக பெண்களை இது பலவிதமான  உடல்நலக் குறைபாட்டிற்கு இட்டுச் செல்லும்.” என்றும் சொல்கிறது. ஆனால் பல டயட் ஆலோசனைகள் 1000 கலோரிகளுக்கு குறைவான உணவையே பரிந்துரை செய்கின்றன.

பலவிதமான ஆய்வுமுடிவுகள் தெரிவிப்பது என்னவெனில், உடல் பெருக்கம் கொண்டவரனைவருமே டயட் மற்றும் தேகப்பயிற்சிகள் மூலம் உடலை மெலியவைத்துவிட முடியாது. அவரவர் உடல்வாகைப்பொருத்தே இது அமையும் என்பதையே. ஆனால் இந்த உண்மையை ‘மெலிந்த தேகப்பண்பாடுவசதியாக மறந்துவிடுகிறது.

பெண்களின் உடலமைப்பு ஆண்களைவிடக்கூடுதலாக கொழுப்பைச் சேமித்து வைக்கிற இயல்பு கொண்டது. மாதவிடாய் காலங்களில் நிகழ்கிற உதிரப்போக்கினால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பெண்ணுடல் கொண்டிருக்கிற தற்காப்பு அம்சம் இது. ஆனால் பெண்களை  தங்களது உடல்பருமனை ஓர் அவமானமாகவும் தனது ஆளுமையின் தோல்வியாகவும் கருதச்செய்கிறது இம்மெலிந்த தேகப் பண்பாடு. அதனால் உடல்மெலிவு முயற்சிகளில் இறங்கி, தனது உடற்கூற்றின் இயல்புக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

மேட்டிமை நாகரீகமும்,நடுத்தரவர்க்க மனோபாவமும் இப்படியிருந்தாலும் கூட இன்றும் பெரும்பாலான மக்கள் குண்டாயிருப்பதைதான் அழகு என்று கருதுகிறார்கள். என்னதான் தொழில்வளர்ச்சி, பெருநகரங்களின் வளர்ச்சியென்று ஏற்பட்டிருந்தாலும் இந்திய மக்களின் உளம்  ‘விவசாய உளம்தான் என்கின்றனர் சமூகவியலாளர்கள். விவசாய உளம், செழிப்பை, வளமையைத்தான் அழகெனக் கருதும். நமது பண்டைய சிற்பங்கள், ஓவியங்களில் வடிக்கப் பட்டிருக்கிற பெண்ணின் தோற்றம் பருத்த உடலமைப்பைத் தான் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் பல நாடுகளிலும் இப்படித்தான். ஐரோப்பிய நாடுகளிலும் கூட இப்படித்தான்.

16ம் நூற்றாண்டைச்சேர்ந்த இத்தாலிய மறுமலர்ச்சி யுகத்தின் ஓவியங்கள் சிற்பங்களைப் பாருங்கள். அவை மெலிந்த தேகமுடையவராக பெண்ணைச் சித்தரிக்கவில்லை. ’ரெம்பிராண்டின்புகழ்பெற்ற ஓவியமான ‘குளிக்கும் அழகி (Bathsheba at her bath) குச்சியான உடல்வாகைக் கொண்டிருக்கவில்லை. வாளிப்பான சதைப்பிடிப்புள்ள பெண்ணாகத்தான் அவள் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். செழிப்பும் வளமையும்தான் அவர்களுக்கும் ‘அழகு. நடிகை ‘குஷ்பு, மெலிந்த தேகம் உள்ளவரென்று சொல்லமுடியாது. ஆனால் இவருக்குத்தான் தமிழ்நாட்டில் கோவில் கட்டப் பட்டது. இதெல்லாம் இன்று மறக்கடிக்கப்படுகிறது.

சதைப்பிடிப்பற்ற மெலிந்த தேகம் எனும் அழகுக்கோட்பாடு இன்று ஒரு மதம் போல் மட்டுமல்ல “மெலிந்த தேகமில்லாப் பெண்களுக்கு இவ்வுலகமில்லைஎன்று ‘மத அடிப்படைவாதம்போலக் கோலோச்சத் தொடங்கிவிட்டது. 

உண்மையில் ஃபேஷன் தொழிலும், அட்வர்டைஸிங் தொழிலும் சேர்ந்து பெற்றெடுத்த  ’கார்ப்பரேட் குழந்தை தான்இந்த ‘அழகுக்கோட்பாடு. விளம்பரங்களும், ஃபேஷன் உலகும் ஊட்டி வளர்த்த ‘இந்த தரப்படுத்தப்பட்ட அழகைப்பேணுவதற்கு, சந்தையில் நிறைய பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்தப்பொருட்களைத் தயாரிக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆண்டொன்றிற்கான டர்ன் - ஓவர் எவ்வளவு தெரியுமா? டயட் இண்டஸ்ட்ரி - 3,300 கோடி டாலர், காஸ்மடிக் (அழகுச்சாதனங்கள்) இண்டஸ்ட்ரி - 30,000 கோடி டாலர், காஸ்மடிக் சர்ஜரி இண்டஸ்ட்ரி  - 300 கோடி டாலர். இது அமெரிக்காவிற்கு மட்டும். இந்தியக்கணக்கு என்ன தெரியுமா? 2008ம் ஆண்டு 12,000 கோடி ரூபாயாக இருந்த இத்தொழில் 2012ம் ஆண்டில் 64,000 கோடியாக வளரும் என்று சொல்லப்படுகிறது. பெண்கள் தாங்கள் குண்டாயிருந்தாலென்ன ஒல்லியாயிருந்தாலென்ன என்று அலட்டிக் கொள்ளாமலிருந்துவிட்டால் என்னவாகும்? இந்த கார்ப்பரேட் நிறுவனங்களெல்லாம் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு போய்விடவேண்டியதுதான். ஆனால் பெண்கள் அலட்டிகொள்ளாமல் இருந்துவிடுவதில்லை.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதியம் மூன்று மணி இருக்கும். ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டிலுள்ள அனை வரும் கொர்கொர்ரென்று குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். நண்பனின் தங்கை மட்டும் தூங்காமல் டி.வி. முன்னால் உட்கார்ந்திருந்தார். என்னம்மா எல்லாரும் தூங்கறாங்க! உனக்கு தூக்கம் வரல்லியா என்றேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே எழுந்து போய்விட்டார். உறக்கம் கலைந்த நண்பனின் தாய்தான் பதில் சொன்னார் ‘பகலில் தூங்கினா வெயிட் போட்டுடுமில்லியா, அதான் எப்பவுமே பகல்ல தூங்கமாட்டாஎன்று.

நண்பனின் தங்கை ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறவர். தினமும் பகலில் நிச்சயமாய் அவரால் தூங்கமுடியாது. ஏதோ ஞாயிற்றுக்கிழமையில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் என்ன பெரிய பிரச்சினை வந்து உடம்பு வெயிட் போட்டுவிடப் போகிறது.? எனது நண்பனின் தங்கையைப்போல் பல பெண்கள் இருக்கி றார்கள். பகலிலே தூங்கமாட்டார்கள். மனசுக்கு பிடித்ததை சாப்பிடமாட்டார்கள். அது எண்ணெய், இது கொலஸ்ட் ரால் என்று வயதானவர்கள் பத்தியம் பேணுவதைப்போல பலதை ஒதுக்குவார்கள். உடலைச்சீராக வைத்திருக்க பல தியாகங்களைச் செய்வார்கள். உண்மையில் இது ஒரு பண்பாடு. இந்தப் பண்பாடு பெண்களை மறுபடியும் தியாகம் செய்யச் சொல்லுகிறது. ஏற்கனவே குடும்பத்திற்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக தியாகங்களை செய்தவர்கள் நவீனகாலத்தில் செய்கிற நவீன தியாகம் இது.

இந்த மெலிந்த தேகப்பண்பாட்டிற்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. உண்மையில் இந்த அழகுக்கோட்பாடுகள் பெண்கள் மீதாகத் தொடுக்கப்படுகிற புதியதோர் வன்முறை என்கிறார்கள் பெண்ணியவாதிகள். அழகு என்பது சார்புடையது. அவரவர் மனப்பாங்கை பொருத்தது. ஒருவருக்கு அழகாகப்படுவது மற்றொருவருக்கு படாமல் போகலாம், அழகென்பது அவரவர் மட்டத்தில் வித்தியாசப்படுவது. இதில் எல்லோருக்கும் பொதுவான அளவுகோல்களை உருவாக்க முடியாது. அப்படி உருவாக்குவது ஒரு வித பாசிஸத்திற்குத்தான் வழிவகுக்கும் என்கின்றனர் இவர்கள்.

மேலும் இம்மெலிந்த தேகப்பண்பாடு உயர்த்திப்பிடிக்கும் அழகின் இலக்கணங்களை தோற்றப்பொலிவை எல்லாப் பெண்களும்  அடைவது என்பது சாத்தியமே இல்லை. மாறாக பருமனாக தோற்றமளிக்கும் பெண்கள் பாரபட்சத்திற்கும் ஓரவஞ்சனைக்கும் ஆளாக்கப் படுவதுதான் நிகழும்! என்கின்றனர் இப்பெண்ணியவாதிகள். இவர்கள் சொன்னது போலவே அமெரிக்காவில் பணியிடங்களில் பருமனான பெண்கள் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப் படுகிறார்கள். தனது உடல் எடையைக் குறைக்காததால் ஒரு பெண்அலுவலரின் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து கலிஃபோர்னியாவின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மறுக்கப்பட்ட பதவிஉயர்வை திரும்ப பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் இப்பெண்ணியவாதிகள்.

மருத்துவரிடம் ஆலோசனை பெறச்செல்லும்போது,பொது இடங்களில் க்யூவில் காத்திருக்கும் போது, வேலைக்காக, உயர்கல்விக்காக நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போது எனப் பல தருணங்களில் பருமனான பெண்கள் மீது பாரபட்சங்கள் இழைக்கப்படுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தோற்றத்தை அடிப்படையாகக்கொண்ட பாரபட்சங்களில் (Size discrimination) தலையிடுவதற்காகவே பல பெண்ணிய அமைப்புக்கள் அமெரிக்காவில் செயல்படுகின்றன.

தொடக்கக்காலத்தில் பெண்ணியவாதிகள், தோற்றம் குறித்த பாரபட்சங்களை, தரப்படுத்தப் பட்ட அழகு பற்றிய கருத்தாக்கங்களை ஒரு பிரச்சினையாக கருதியதில்லை. 1970களின் மத்தியிலிருந்துதான் இப்பிரச்சினைகளை கையிலெடுக்கத் தொடங்கினர். அதுமட்டுமல்ல, காலங்காலமாக பெண்ணுடலை தனது கட்டுக்குள் வைத்திருக்க ஆணாதிக்கம் செய்த வன்செயல்களின் நீட்சியாகத்தான் இவற்றைக் காணமுடியும் என்கின்றனர்.

16ம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பா மற்றும் மேற்கு நாடுகளின் பிரபுத்துவ குடும்பங்களின் பெண்கள் ‘கார்சட்’ (corset) என்கிற இரும்பு அங்கியை அணிந்திருந்தார்கள். மத்திய கால வரலாற்றுப் பின்னணியுள்ள கதையம்சம் கொண்ட ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படியொரு அங்கியை பெண்கள் அணிவதை நீங்கள் பார்த்திருக்க முடியும். கிட்டத் தட்ட 15 முதல் 20 கிலோ வரை எடையுள்ள இரும்பிலான இவ்வங்கி, இடுப்பையும் அடிவயிற்றையும் இறுக்கமாக அழுத்திப்பிடித்து  குட்டைப்பாவாடை போல் கால்முட்டி வரை விரிந்திருக்கும்.  மேலே அணியும் பாவாடை குடை போல் விரிந்து தரையில் தவழ இந்த அங்கிதான் உதவுகிறது. வசதியாக உட்காரவோ, மூச்சுவிடவோ கூட சிலநேரத்தில் இவ்வங்கி அணிந்தவர்கள் சிரமப்படுவர்.  சிறுநீர் மற்றும் உபாதைகளை கழிப்பதெல்லாம் கூட இவர்களுக்கு பெரும் பாடுதான். தங்களது இடுப்பையும், வயிற்றையும் கவர்ச்சிகரமாக வைத்திருக்கவே பெண்கள் இந்த அங்கிகளை அணியக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அதேபோன்று, சீனாவில் பண்டைய காலத்தில் அரச குடும்பத்தினரின், பிரபுக்கள் குடும்பத்தினரின் பெண்களது கால்களை சிறுவயதிலிருந்தே கட்டைகளால் இறுக்கிக் கட்டி வைத்துவிடுவார்கள். இதனால் பெண்களது பாதங்கள் குறுகிச் சிறுத்துவிடும். சரியாக நடக்கக்கூட முடியாமல் போய்விடும். ஐரோப்பிய பிரபுத்துவ குடும்பத்து ஆண்களுக்கு குறுகிய இடையும் ஒட்டிய வயிறும் எப்படி பாலுறவு வேட்கையைத் தூண்டியதோ அதேபோல குறுகிச்சிறுத்த பெண்களின் பாதங்கள்தாம் பிரபுக்கள்குலச் சீனர்களுக்கு கிளர்ச்சியைத் தருமாம். குறுகிச்சிறுத்த பாதங்கள் அமையாத சீனத்துப் பெண்களின் திருமணம் நடப்பது அவ்வளவு கடினமாம்.

இது இப்படியெனில், மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பூப்ப டைந்த பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள ’கிளிடோரிஸ்எனும் பகுதியை அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிடுவார் கள். பெண்களது பிறப்புறுப்பில் விறைப்புத்தன்மையடை கிற உணர்ச்சியை வெளிப்படுத்துகிற பகுதி அதுவே. அதனைத்தான் நீக்கிவிடுவார்கள். இது இன்றும்கூட நடக்கி றது. ஐரோப்பிய யூனியனில், மத்திய ஆப்ரிக்க நாட்டு தூத ரகத்தில் பணியாற்றும் உயரதிகாரியொருவரின் மகளுக்கு இப்படிப்பட்ட அறுவைச்சிகிச்சையை நடத்தியதாக ஐரோப் பாவின் புகழ்பெற்ற மருத்துவமனையொன்றின் மீது பெண் ணியவாதிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

இப்படி காலங்காலமாக பெண்ணுடம்பின்மீது செலுத்தப்படுகிற ஆதிக்கத்தின் வன்முறையின் நீட்சிதான் இந்தப்புதிய அழகுக்கோட்பாடு என்கின்றனர் இப்பெண்ணியவாதிகள். சுருங்கச் சொல்லவேண்டுமெனில் பெண் ஒரு போகப்பொருள்; காட்சிப்பொருள்! என்கிற பழைய கள்ளை புதிய மொந்தையில் விற்பதுதான் இந்த மெலிந்த தேகப்பண்பாடு. தற்போது பழையகாலம் போல கட்டாயப்படுத்தியெல்லாம் பெண்ணுடம்பை தனது பார்வைக்கினியதாக வைத்திருக்க முடியுமா? இது ஜனநாயக யுகமல்லவா! அதனால் இந்த ஆணாதிக்கச் சமூகம், பெண்களின் ஒப்புதலோடு இச்செயல்களைத் தொடர   சில வழிமுறைகளை கண்டுபிடிக்கிறது. அதில்  ஒன்றுதான் ‘பார்பி கேர்ள்பொம்மைகள்.

மெலிந்த தேகப்பண்பாட்டை சிறுவயதிலேயே பெண்களது மனதில் விதைக்கிற ஒரு ஏற்பாட்டை “பார்பி கேர்ள்பொம்மைகள் சுலபமாகச்செய்து விடுகின்றன. மெலிந்த தேகப் பண்பாடு லட்சியமாய்க் கருதுகிற “36 - 18 -38’’ விகித உடலமைப்பை பெற்றிருக்கிற இந்த ‘பார்பி கேர்ள்பொம்மைகள் இன்று பள்ளிச்சிறுமிகள் மத்தியில் மிகவும் பிரபலம். ஆங்கிலவழிக்கல்வி பயிலுகிற சிறுமிகளிடத்தில் மட்டுமல்ல, தமிழ் வழிக்கல்வி பயிலுகிற அரசுப்பள்ளிகளின் சிறுமிகள் மத்தியிலும் இது பிரபலமாயிருக்கிறது. இந்த ‘பார்பி கேர்ள்  பொம்மையை வடிவமைத்தவர் யார் தெரியுமா? அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பெண்டகனில்ஏவுகணைகளை வடிவமைத்துக் கொண்டிருந்த “ஜாக் ரியான்என்கிற டிஸைன் எஞ்சினீயர்!.

ஐயம் எ பார்பி கேர்ள்என்கிற ஆங்கிலப் பாடலைத் தெரியாத பள்ளிச்சிறுமிகளை அதுவும் ஆங்கிலவழிக்கல்வி பயிலும், வளரிளம் பருவத்துப் பெண்களை, டீன் ஏஜ் பெண்களை காண்பது அபூர்வம். “அக்குவாரியம் (Aquarium) என்கிற இசைக்குழு உருவாக்கிய பாடல் இது. பார்பி கேர்ள் பொம்மையை பற்றிய பாடல் என்பதால் மட்டுமல்ல, இப் பாடல் இப்படி செல்வாக்கு பெற்றதற்கு வேறு ஒரு காரண மும் உண்டு. டீன் ஏஜ் பெண்கள் பார்ட்டிகளில் கலந்து கொள்வதையும், டேட்டிங் வைத்துக் கொள்வதையும் கொண்டாடுகிற பாடல் இது. மில்லியன் கணக்கில் இப்பாடல் சிடிக்கள் விற்பனையாயின. ஆனால் இப்பாடலை உருவாக்கிய ’அக்குவாரியம்இசைக்குழு மீது ‘பார்பி கேர்ள்பொம்மையை தயாரிக்கும் ‘மேட்டல் இங்க் (Mattel.Inc) நிறுவனம் வழக்கொன்றை தொடர்ந்தது. தனது ‘காப்பிரைட்உரிமையினை ‘பேட்டண்ட்உரிமையினை “அக்குவாஇசைக்குழு அத்துமீறியதாக ‘மேட்டெல்குற்றஞ்சாட்டியது.

முதலில் கீழ்கோர்ட்டில் தொடரப்பட்ட இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேல்முறையீட்டுக்குச் சென்ற ஹைக்கோர்ட், சுப்ரீம் கோர்ட் என எல்லாவற்றிலும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கை தள்ளுபடி செய்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது. “பார்பிகேர்ள்பொம்மை சமூகத்தில் பிரபலமாகிவிட்ட ஒன்று.! பிரபலமாயிருக்கிற ஒன்றை `பதிவுசெய்வதும், ‘பகடிசெய்வதும் கலை-இலக்கியங் களின் இயல்பு ஆகும். இதில் தலையிடுவதா னது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாகி விடும். எனவே வழக்கைத் தொடர்ந்தவர்கள் இதனை பெரிது படுத்தாமல் இருப்பதே நல்லது.!” என்று வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் ‘மேட்டெல்நிறுவனத்திற்கு அறிவுரையும் கூறியது. இன்றும்கூட ‘காப்பிரைட்மற்றும் ‘பேடண்ட் உரிமைதொடர்பான வழக்குகளில் ‘மேட்டெல் இங்க், ‘அக்குவாவழக்கு தொடர்பாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு ஒரு முக்கிய முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. இவ்வழக்கு விவரங்கள் எதைக் குறிக்கிற தென்றால், `பார்பி கேர்ள்பொம்மைகள் மேற்கத்திய சமூகத்தின், பண்பாட்டின் பிரிக்க முடியாத அம்சமாக மாறிவிட் டது என்பதைத்தான்.

நமது வாண்டுகள் மத்தியில் மிகவும் பிரபலமாயிருக்கிற ‘ஹாட் வீல்ஸ்கார் பொம்மைகளும் இந்த ‘மேட்டெல் இங்க்நிறுவனத்தின் தயாரிப்புகள்தாம்.

பார்பிகேர்ள் பொம்மைகள் உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. மேட்டெல்நிறுவனத்தின் மூன்று பங்குதாரர்களில் ஒருவரான ‘ரூத் ஹேண்ட்லர்என்ற பெண்மணி, தான் டென்மார்க் சென்றிருந்தபோது தனது மகள் பார்பராவுக்காக பொம்மையொன்றை வாங்கி வந்தார்.  ‘பில்டி லில்லிஎனும் அப்பொம்மை ஒருஜெர்மானிய தயாரிப்பு. ஜெர்மனியில் பிரபலமாயிருந்த ‘காமிக்’ ஒன்றின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப் பட்ட பொம்மை இது. இப்பொம்மை குழந்தைகள் விளையாடுவதற்கானதல்ல. வயது வந்தோர்களுக்கான பொம்மை இது. 7 இன்ச் முதல் 12 இன்ச் அளவுவரை உள்ள பொம்மை யின் உடலமைப்பு மற்றும் அதன் விகிதாச்சாரம் டீன் ஏஜ் பெண்களை மிகவும் கவரவே பிரபலமானது இது.

தன் மகளுக்காக இதனை வாங்கி வந்த ரூத் ஹேண்ட்லரின் கவனத்தை இப்பொம்மை மிகவும் ஈர்க்கவே, இப்படியொரு பொம்மையை தமது நிறுவனமே தயாரித்தாலென்ன என்ற முடிவுக்கு  வந்தார் அவர். மேட்டெல்நிறுவனத்திடம் தனது ஆலோசனையைச் சொன்னார் அவர். மேட்டெல் நிறுவனம் இதுவரை பொம்மைகளை தயாரித்ததுஇல்லை. வீட்டு உபயோகத்திற்கான ஃபர்னீச்சர்கள், உள்ளலங்காரத் திற்கான பொருட்கள் மற்றும் தட்டுமுட்டு சாமான்கள் இவற்றையே அது தயாரித்து வந்தது. எனவே ரூத் ஹேண்ட் லரின் ஆலோசனையை ஏற்க முதலில் தயங்கிய மேட்டெல் பின்னர் இசைவு தெரிவித்தது. பொம்மை தயாரிப்பை மேற்பார்வையிடும் பணியை ரூத் ஹேண்ட்லரிடமே ஒப்படைத்தது. ரூத் ஹேண்ட்லர்,  அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்டகனில்  ‘ஸ்பேர்ரோ, ‘ஹாவ்க் (Sparrow, Hawk) போன்ற ஏவுகணைகளை வடிவமைத்துக் கொண்டிருந்த டிஸைன் என்ஜினீயரான ‘ஜாக் ரியான்என்ப வரை அழைத்து இந்த பொம்மையை வடிவமைக்குமாறு கூறுகிறார். அவரும் பொம்மையை உருவாக்குகிறார். அப்பொம்மைக்கு தன் மகள் பார்பராவின் பெயரைச் சூட்டுகிறார்கள். இப்படிபிறந்ததுதான்  `பார்பி கேர்ள்.

பிறகு மூன்று வருடம் கழித்து பிலடெல்பியாவில் நடக்கிற மிகப்பெரும் பொம்மைக் கண்காட்சிக்கு ‘பார்பியைஅனுப்புகிறது மேட்டெல். கண்காட்சியில் பலத்த வரவேற்பைப் பெறுகிறது ‘பார்பி. பார்பியை அறிமுகப்படுத்திய பத்தே ஆண்டுகளில், உலகத்தின் முன்னணியில் இருக்கிற கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றாகமேட்டெல்வளர்ந்தது. இன்றும் உலகின் ஏதேனும் ஒரு மூலையில் நொடிக்கு இரண்டு பார்பி பொம்மைகள் விற்பனையாகிக் கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பார்பியை உருவாக்குகிறபோது மேட்டெல் நிறுவனத்தின் ரூத் ஹேண்ட்லருக்கு இப்படியொரு நோக்கம் இருந்ததோ என்னவோ! ஆனால் ஃபேஷன் உலகமும் விளம்பர உலகமும் உருவாக்கிய மெலிந்த தேகப்பண்பாட்டின் ‘கொடிக்கப்பலாகபார்பி கேர்ள் பொம்மைகள் பரிணாமம் கொண்டன. பெரும்பாலான பெண்களுக்கு இயற்கையாக கைவரப் பெறாத, அமையச் சாத்தியமில்லாத “அழகின் அளவுகோல்களைபார்பி பொம்மைகள் உயர்த்திப் பிடித்தன. 36-18-33 என்ற விகிதத்தில் பார்பி பொம்மைக்கு இருப்பது போன்ற உடலமைப்பு ஒரு பெண்ணுக்கு இருந்தால் என்னவாகும்?

பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில் உள்ள மத்திய மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வறிக்கை இவ்வாறு கூறுகிறது. “மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கை ஈடுகட்ட ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கொழுப்புச்சத்து தேவைப்படுகிறதோ அதைவிட 17 முதல் 22 சதம் குறைவான கொழுப்புச்சத்தே ‘பார்பிபோன்ற உடலமைப்பு கொண்ட பெண்களிடத்தில் இருக்கும்!” என்று. 

பார்பி கேர்ள் பொம்மைகளோடு விளையாடுகிற சிறுமிகள் ,அதன் கூந்தலை விதம் விதமாய் அலங்கரிப்பது, புதிது புதிதாய் ஆடைகளை அணிவித்து மகிழ்வது உறங்கும்போது கட்டிபிடித்துக்கொண்டு உறங்குவது என்று அப்பொம்மை யோடு உணர்வுபூர்வமான ஓர் உறவினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். டீன்ஏஜ் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பார்பி கேர்ளுக்கு இருப்பது போன்ற தேக அமைப்பை பெறுவதற்காக அவர்கள் பல முயற்சிகளில் இறங்குகின்றனர். இது அனோரெக்ஸியா (anorexia)  என்கிற மனச்சிக்கலுக்கு இவர்களை ஆட்படுத்திவிடுகிறது.

இச்சிக்கலுக்கு ஆட்பட்டவர்கள் குறைந்த எடையுள்ளவர்களாயிருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டார்கள். அப்படி சாப்பிட்டுவிட்டாலும் எடை கூடிவிடுமோ என்கிற பயத்தில் வலுக்கட்டாயமாக சாப்பிட்டதை வாந்தி எடுத்து விடுவார்கள். இவர்களுக்கு ஹார்மோன் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை எல்லாம் வந்துவிடும். சேர்ந்தால் போல மூன்று மாதங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போகும். இவையெல்லாம் தான் அனோரெக்ஸியாவின் அறிகுறிகள்.

1983ல் ‘கரேன் கார்பெண்டர்என்கிற பிரபலமான இளம் பாப் பாடகி உடலை மெலிய வைக்கும் முயற்சிகளில் இறங்கி கடைசியில் மாரடைப்பில் இறந்துபோனார். அனோரெக்ஸியாவால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு ஏற்பட்ட உடன்விளைவே இம்மாரடைப்பு. மேற்கத்திய பாப் இசை உலகினை இச்சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1990களில் இவரது வாழ்க்கையை பின்னணியாக கொண்டு ‘சூப்பர் ஸ்டார்என்ற திரைப்படமொன்று ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டது. பெரிதும் பேசப்பட்ட இப்படம், மெலிந்த தேகப்பண்பாட்டை கடும் விவாதத்திற்கு உள்ளாக்கியது. இச்சூழலில்தான் பெண்ணியவாதிகள் பார்பி கேர்ள் பண்பாட்டை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்ப ஆரம்பித்தனர். பார்பி கேர்ள்  பொம்மை விற்பனையாகும் கடைகளுக்குள் புகுந்து பொம்மைகளை அடித்து நொறுக்கினர்.

லட்சத்தில் ஐந்து பெண்களுக்குகூட  பார்பி போன்ற உடலமைப்பு இருக்காது. இயற்கையின் நியதி இவ்வாறிருக்கையில் மெலிந்த தேகப்பண்பாட்டை பறைசாற்றுகிற பார்பி பொம்மைகள் பெண்களின் நலனுக்கு பெரும் கேட்டினை விளைவிக்கின்றன. பெரும்பாலான பெண்களை தாழ்வுணர்ச்சி கொள்ளச்செய்கின்றன. மனப்பிறழ்வுக்குள்ளாக்குகின்றன. மெலிந்த தேகம் ஆரோக்கியத்தின் அடையாளமல்ல. மாறாக அழகுச்சாதன உற்பத்தியாளர்கள், பிட்னஸ் கருவிகள் தயரிப்பாளர்கள், ஃபேஷன் நிறுவனங்கள் மற்றும் காஸ்மடிக் சர்ஜரி நிறுவனங்கள் போன்ற கார்ர்ப்பரேட் நிறுவனங்கள் பணம் பண்ணுவதற்காக பெண்களின் நலனை பலி கொடுக்கும் ஏற்பாடுதான் இந்த மெலிந்த தேகப்பண்பாடுஎன்றெல்லாம் கருத்துப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த னர் பெண்ணியவாதிகள்.

லிபொசக்ஷன் (Liposuction) என்கிற காஸ்மடிக் சர்ஜரி அதாவது உடம்பிலுள்ள கொழுப்புச் சத்தை உறிஞ்சி எடுக்கிற சிகிச்சை தற்போது பரவலாக சர்வசாதாரணமாக செய்யப் படுகிறது. ஆனால் இது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதை பலரும் உணர்வதில்லை. இருபதுகளின் இறுதியில் அல்லது முப்பதுகளில் வயதுகொண்டிருக்கும் பெண்கள்தாம் ஏற்கனவே இதுபோன்ற உடலை மெலிய வைக்கும் முயற்சிகளில் இறங்குவார்கள். இப்போதென்னவென்றால் டீன் ஏஜ் பெண்கள்கூட இதற்கு இரையாகத் தொடங்கிவிட்டனர்.

பார்பி கேர்ள்மெலிந்த தேகப்பண்பாட்டை மட்டுமல்ல வெள்ளை நிற மேலாதிக்கத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது ; நியாயப்படுத்துகிறது  என்று பெண்ணியவாதிகள் குற்றஞ்சாட்டினர். உடனே மேட்டெல்.இங்க் நிறுவனம் என்ன செய்தது தெரியுமா? பெண்ணியவாதிகளின் விமர்சனத்தில் இந்த ஒன்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டது.  கறுப்பு இனச்சாயலில் ஒரு பொம்மை, செவ்விந்தியச் சாயலில் (Hispanic) ஒரு பொம்மை, ஆசியர்களை போன்ற அதாவது சீன, ஜப்பானியர்களைப் போன்ற ஒரு பொம்மை (ஆசியர்கள் என்றாலே மேற்கு உலகிற்கு சீனர்களும் ஜப்பானியர்களும்தான்)  இவற்றையெல்லாம் தயாரித்து சந்தைக்கு அறிமுகம் செய்தது அதாவது நிறபேதத்தை கைகழுவிவிட்டு.

பிறகு பேசுகிற பார்பி பொம்மைகளையும் மேட்டெல் அறி முகப்படுத்தியது. “நான் ஃபேஷன் மாடலாகப் போகிறேன்!”.  “நான் டேட்டிங் வைத்துக்கொள்ளப்போகிறேன்என்றெல்லாம் இப்பார்பி பொம்மைகள் பேசும். 1990களில்  அறிமுகம் செய்யப்பட்ட இப்பேசும் பொம்மைகள் சிறுமிகளிடத்தில் வெகுசீக்கிரத்தில் பிரபலமாகிவிட்டன. அப்போது பெண்ணியவாதிகள் என்ன செய்தனர் தெரியுமா? இப்பேசும் பொம்மைகள் வைக்கப் பட்டிருக்கும் குடோனுக்குள் இரவோடிரவாக யாருக்கும் தெரியாமல் நுழைந்து பேசுவதற்காக புரோக்ராம் செய்யப்பட்டு அப்பொம்மைகளில்  பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ சிப்புகளை அகற்றிவிட்டு வேறு ‘சிப்களை வைத்துவிட்டு வந்துவிட்டனர். அந்தப் பொம்மைகளை வாங்கி சென்றவர்களெல்லாம் அதிர்ந்து போய்விட்டனர். ஏனெனில் அந்த பார்பி,  “மெலிந்த தேகம் வேண்டுமா? விஷத்தைக்குடி! பென்சிலில் இருக்கிற ‘லெட்டைத் தின்னு! பாம்புகளைச் சாப்பிடு!” என்றெல்லாம் பேசியது. பெண்ணியவாதிகளின் எதிர்ப்புச் செயல்பாடுகளை இச்சம்பவம் பிரபலமாக்கியது என்றாலும் பார்பி கேர்ளின் செல்வாக்கை அவற்றால் குறைக்க இயலவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் வேறொரு போக்கும் தலையெடுத்தது. 30-22-32 என்ற அளவில் உடலமைப்பு கொண்டவர்கள் அணிவதற்கேற்ற ‘சிக்கெனப்பிடிக்கும் ஆடைகளை பேஷன் நிறுவனங்கள் தயாரிக்க ஆரம்பித்தன.

இந்த உடைகளை அணிவதற்கேற்ற மெலிந்த உடல் கொண்ட மாடல்கள் ‘ஸைஸ் ஜீரோ (Size Zero) மாடல்கள் என்றழைக்கப்பட்டனர். ஸைஸ் ஜீரோ நிலையை எட்டிப் பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு பலர் உடல்மெலிவு முயற்சிகளில் இறங்கினர். 2006 ம் ஆண்டு, இப்படி ஸைஸ் ஜீரோ மாடல் என்றறியப்பட்ட ‘லூஸல் ராமோஸ்என்கிற் 22 வயதுள்ள மாடல் உருகுவேயில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் கேட் வாக் செய்யும்போது மயக்கமடைந்து கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு இரண்டுநாட்களில் நினைவு திரும்பாமலேயே அவர் உயிர் பிரிந்தது. இது நடந்த ஆறே மாதங்களில் அவரது தங்கை பதினெட்டு வயதேயான ‘எலீனா ராமோஸ்என்பவர் இதேபோன்று இறந்துபோனார். இவர்களிருவருமே “அனோரெக்ஸியாவால்பாதிக்கப்பட்டவர்கள்.

இப்படி மெலிந்ததேகப் பண்பாட்டிற்கு இரையாகும் பெண்கள் பற்றி ‘மார்கே பியர்ஸிஎன்கிற கவிஞர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ‘பார்பி கேர்ள்என்று தலைப்பிடப்பட்ட அக்கவிதையின் தளர்த்தியான எனது மொழியாக்கம் இது:

எவரையும் போலவே
இவளும் பிறந்தாள் தவழ்ந்தாள்; நடந்தாள்.
அடுப்பு பொம்மை பானை பொம்மை மற்றும் 
படுக்கையை நனைக்கும் குழந்தை பொம்மை  
இவற்றினோடே விளையாடிக்களித்தாள்.

செர்ரி நிறத்து லிப்ஸ்டிக்கட்டியை கரைத்தாற் போன்று
மூத்திரம் போனாள் ஒருநாளில். 
பருவமடைகிற மாயமிதுவென பலரும் சொல்லினர் அவள் காதில்.

இப்படி நாட்கள் கழிந்திடும்போது
வகுப்புத்தோழன்
அவளிடம் சொன்னான்:
உனக்கு  புடைத்த மூக்கு!
பருத்த கால்கள் என்று.

வலிய கரங்கள் நெடிய முதுகென
அவள் திண்மையானவள்
ஆரோக்கியசாலி.
தன் பாலியல் விழைவை துணிச்சலாய்ச்சொல்வாள்
தேவையை நிறைக்கும் திறனும் கொண்டாள். 
எனினும்
அவள் வருத்தப்பட்டாள்
தனது புடைத்த மூக்கிற்காகவும் 
பருத்த கால்களுக்காகவும்

எல்லோரிடத்திலும் மன்னிப்பு கோரினாள்.
அனைவரும்
அவள்  மூக்கையும் கால்களையும் மட்டுமே பார்த்தவாறு
அடக்கம் காக்கச்சொன்னார்கள்
அவளை
உண்மை உணரச் சொன்னார்கள்.

சூழலின் கணைகள் துளைக்க துளைக்க
இடையறாத உடற்பயிற்சி பட்டினி கிடப்பதுவென
கவசங்களெடுத்து அணிந்துகொண்டாள்.
புன்னகையொன்றை முகத்தில் ஒட்டிக்கொண்டாள்.

இழுத்துச்சலித்த ராட்டினக்கயிறு
ஒருநாள்  இற்று விழுவதுபோல
அவளிடமிருந்த அருங்குணங்கள் அறுந்து விழுந்தன.
தனது புடைத்த மூக்கை அரிந்தெடுத்தாள்.
பருத்தக் கால்களை வெட்டினாள்
ரத்தம் சொட்டச்சொட்ட அவர்களுக்கு அர்ப்பணித்தாள்.

இதோ மெழுகிட்டு சரிசெய்யப்பட்ட மூக்கும்
அழகுப்பொடி பூசப்பட்ட முகமுமாய்
வெண்ணிற ஸாட்டீன் துணி விரிக்கப்பட்ட பேழைக்குள் அவள் ... 
வெட்டப்பட்ட கால்களை மறைக்கும் 
வெண்ணிற உள் பாவாடையும் பிங்க் நிற ஆடையும் அணிவிக்கப்பட்டு.  
இவளல்லவோ அழகி! 
பார்ப்பவரனைவரும் சொன்னார்கள் 
இப்படியாக அவள் முழுமையடைந்தாள்’ 
எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் சுபமுடிவே அவளுக்கும்

அந்தப்பெண் இறந்துவிட்டாள் என்பதை நேரடியாகச் சொல்ல இக்கவிதை முயலவில்லை. “பேழைக்குள் அவள் கிடத்தப்பட்டிருக்கிறாள்என்றே சொல்லப்பட்டிருக்கிறது. சவப் பெட்டியைக் குறிக்கும் காஃபின் (coffin) என்கிற சொல்லை  அவரிதில் பயன்படுத்தவில்லை. மாறாக விலையுயர்ந்த நகைகள் வைக்கப்படும் பேழையைக்குறிக்கும் `காஸ்கட் (casket) என்கிற சொல்லையே அவர் பயன்படுத்தியிருக்கிறார். இந்தக்கவிதை பெண்கள் மத்தியில் மெலிந்த தேகப் பண்பாடு பற்றிய பெரும் விவாதங்களை உருவாக்கியது.

ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பெண்ணிய அமைப்பு அரசுக்கு இப்படியொரு கோரிக்கை வைத்தது. தற்போது சிகரெட் விளம்பரங்களில் எப்படி ‘புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானதுஎன்று எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறதோ அதேபோன்று மெலிந்த தேகமுடைய பெண்களை மாடலாகப் பயன்படுத்தும் விளம்பரங¢களில் ‘மெலிந்த தேகம் உடல்நலத்திற்கு தீங்கானதுஎன்ற வாசகம் பொறிக்கப்படவேண்டும்என்றனர். அதாவது பிஃப்டி ‘கேஜி தாஜ் மஹால்களாயிருப்பது உடல்நலத்திற்கு தீங்கானது என்று.

இக்கோரிக்கைகள் நிறைவேறவில்லையென்றாலும் கூட பெண்ணியவாதிகளின் குரல்களுக்கு ஓரளவு  பலன் இருக்கத்தான் செய்தது. பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் சில இக்குரல்களுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்தன. விளம்பரங்களுக்கு சில கட்டுப்பாடுகளை கொண் டுவந்தன. இதனைத் தொடர்ந்து மெலிந்த தேகம் கொண்ட பெண்களை மட்டு மல்ல, பருத்த தேகம் கொண்ட பெண்களையும் சராசரி உடலமைப்பு கொண்ட பெண்களையும் கொண்டு ஃபேஷன் ஷோக்கள் நடைபெற ஆரம்பித்தன. இருந்தபோதிலும் மெலிந்த தேகப்பண்பாட்டின் மேலாண்மையை, பார்பி பண்பாட்டை இவற்றால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இந்தியாவில் மட்டும் மேட்டெல்.இங்க் நிறுவனத்திற்கு 1500 அவுட்லெட்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் நடைபெறுகிற பொம்மை விற்பனைகளில் மேட்டெல்லின் பங்கு 8 சதம்தான். 92 சத பங்கினை இதர நிறுவனங்கள் மற்றும் சீனத்தயாரிப்புகள்தான் வகிக்கின்றன எனினும் கடந்த ஆண்டில் மேட்டெல் நிறுவனத்தின் ஹாட்வீல்ஸ் கார்களின்  விற்பனை 32 % அதிகரித்ததெனில் `பார்பிபொம்மைகள் மட்டும் 40 சதம் அதிகரித்துள்ளன.

எந்த சானலைத் தட்டினாலும் அதில் வருகிற டெலி ஷாப்பிங் விளம்பரங்களைப் பாருங்கள். அரைகுறை ஆடையோடு ஒரு பெண், எக்ஸர்ஸைஸ் செய்துகொண்டோ, ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டோ இந்த மெலிந்த தேகப்பண்பாட்டை நமக்கு உபதேசம் செய்வதைப் பார்க்க முடியும். அதில் காட்டப்படுகிற உபகரணங்களையெல்லாம் வாங்கிக் குவித்து நம் ஒவ்வொருவரின் வீட்டையும் ஜிம்னாஸியமாக்கிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.

இந்தப்போக்குகளெல்லாம் கடந்த இருபதாண்டுகளாகத் தான் நம்நாட்டில் பரவலாக ஆரம்பித்தது. அதற்கு ஒரு பின்னணியும் உண்டு. பி.வி.நரசிம்மராவ் பிரதமராகவும், மன்மோஹன்சிங் நிதியமைச்சராகவும் இருந்த 90களின் தொடக்கத்திலிருந்துதான் இப்போக்கு பரவலாக அறிமுகமாகிறது. அவர்கள் செயல்படுத்தத் தொடங்கிய ‘புதிய பொருளாதாரக் கொள்கைதான் இவற்றின் ஊற்றுக்கண். ராஜீவ்காந்தி காலத்திலேயே இப்புதிய பொருளாதாரக் கொள்கைக்கான அஸ்திவாரங்கள்  இடப்பட்டுவிட்டாலும், நரசிம்மராவ் காலத்தில்தான் அவை உயர்வேகம் பெற்றன. தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம், அன்னிய முதலீட்டிற்கான தங்குதடையற்ற அனுமதி இவையே இவற்றின் பிரதான அம்சங்கள்.

அரசியலில் பொருளாதாரத்தில் மிகப்பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்த சமயத்தில்தான் வேறொரு விஷயமும் இங்கே நடக்கிறது. 1993லிருந்து பல இந்தியப்பெண்கள் உலக அழகிகளாகவும் பிரபஞ்ச அழகிகளாகவும் தேர்ந்தெடுக்கப்படலாயினர். சுஷ்மிதாசென், ஐஸ்வர்யாராய், லாரா தத்தா, டயானாஹெய்டன், யுக்தாமுகி, பிரியங்கா சோப்ரா என்று பலர் உலக அழகிகளாயினர். இவர்களெல்லாம் போட்டியில் முதல் பரிசை வென்றவர்கள், இரண்டாவது பரிசு அல்லது சிறந்த தலைமுடி, சிறந்த உடலமைப்பு, சிறந்த பல்வரிசை என்ற வகைகளில் பரிசு பெற்றவர்களைக் கணக்கிட்டால் அதாவது கடந்த 2010ல் உலக அழகிப் போட்டியில் இரண்டாவது பரிசுபெற்ற ‘பார்வதி ஓமனகுட்டன்போன்றவர்களைச் சேர்த்தோமானால்  இப்பட்டியல் அனுமார் வால் போல இன்னும் நீளும்.

இதற்குமுன் 1966ம் ஆண்டு ரீட்டா பரியா என்கிற இந்தியப் பெண் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப்பின் 1993-94 காலத்திலிருந்துதான் அடிக்கடி இந்தியப் பெண்கள் ‘உலக அழகிகளாயினர். நமக்கு ஒரு கேள்வியெழலாம். 1993க்கு முன்பு நமது இந்திய நாட்டில் அழகிகளே இல்லையா என்று. இது குதர்க்கமான கேள்வி தான் எனினும், இக்கேள்வி சில உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் இவ்வழகிப்போட்டிகள், அழகுச்சாதனங்கள் மற்றும் ஃபிட்னஸ் சாதனங்கள் உற்பத்தி யில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தை விரிவாக்க உத்திகள்தாம். அவைதாம் இவ்வழகிப் போட்டிகளை ஸ்பான்ஸர் செய்கின்றன.

இந்நிறுவனங்கள், வாங்கும் திறன் கொண்ட கோடிக்கணக் கான வலுவான நுகர்வோர்களைக் கொண்ட சந்தையாக இந்தியாவைப் பார்த்தன. இந்தியப்பெண்கள் உலக அழகி களாவதற்கும் இச்சூழலுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. அழகு பற்றிய புதிய கருத்தாக்கங்கள், ஃபிட்னஸ் குறித்த விழிப்புணர்வுகள் எல்லாம் இதன் பிறகே பரவலாக ஆரம்பித்தன. உண்மையில் இன்று இந்தியப்பெண்களின் மிகமுக்கியமான ஆரோக்கியப்பிரச்சினையாக எது இருக்கிறது தெரியுமா? ‘ரத்த சோகைதான். 

மத்திய அரசின் ஆய்வுக்குறிப்பொன்று இவ்வாறு கூறுகிறது. இந்தியாவில் 54 சத பெண்கள் ரத்த சோகையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்களென்று. இந்த ரத்த சோகை பல நேரத்தில்  அதுவும் கருவுற்ற காலத்தில் பெண்களின் உயிரைக்குடிக்கிற எமனாக மாறிவிடும். இந்தியாவில் பிரசவகாலத்தில் இறந்து போகிற பெண்கள் விகிதம் பல ஆப்பிரிக்க நாடுகளின் விகி தத்தைவிட அதிகம். மிகவும் பின்தங்கிய நாடான ‘ஹெய்தியில் 1000க்கு 52 பெண்கள் பிரசவகாலத்தில் இறக்கிறார் களென்றால் இந்தியாவில் 1000க்கு 54 பேர் இறக்கிறார்கள். இது உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கை.

அதனால்தான் கருவுற்றுள்ள பெண்கள் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடவேண்டும். அல்லது இரும்புச்சத்துள்ள கீரை மற்றும் பயறுவகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென பல நலவாழ்வுத்திட்டங்கள் அறிவுறுத்துகின்றன. விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்கின்றன. இப்பிரச்சார உத்திகளிலுள்ள பிரச்சினைகளென்னவெனில் இவையெல்லாம் பெண்களை குறிவைத்தே நடத்தப்படுகின்றன. இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடு! கருவுற்ற காலத்தில் மாதம் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரைப் பார்.! எடைப்பரிசோதனை செய்து கொள்! அரசு தருகிற சத்துணவு உருண்டைகளை தவறாமல் சாப்பிடு!! என்று பெண்களை நோக்கியே புத்திமதிகளை அள்ளிவீசுகின்றன.

இது என்னவிதமான தோற்றத்தை ஏற்படுத்துகிறதென்றால், ஏதோ பெண்கள்தான் வீம்பாக இவற்றையெல்லாம் செய்ய மறுக்கிறார்கள் என்கிற மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. பலியாகிகொண்டிருக்கும் பெண்களின்  தலையிலேயே இந்த பழியை சுமத்திவிடுகின்றன.. உண்மையில் இப் பிரச்சினைக்கு ஆளாயிருப்பது  பெரும்பாலான கிராமப்புறத்து பெண்களும் நகர்ப்புறத்து அடித்தட்டு பெண்களும்தான். பார்பி கேர்ள் பொம்மைகளை வாங்கிவைத்து விளையாடாமலேயே  மெலிந்த உடலமைப்பு பெற்ற பெண்கள் இவர்களில் பலருண்டு. எக்ஸர்ஸைஸ் செய்து மெலியவைத்த தேகமல்ல இது. சரியாக சாப்பிடாமல், சத்துள்ள உணவை உட்கொள்ளாமல், முறையாக ஓய்வு எடுக்காமல் உழைத்து உழைத்து நலிந்துபோன தேகம் இவர்களுடையது.

கிராமப்புறத்து உழைக்கும் பெண்கள் ஒருநாளைக்கு 16மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது. சமையல் செய்வது, தண்ணீர் சேகரிப்பது, குழந்தைகளை பராமரிப்பது, வீட்டை பராமரிப்பது, முதியோர் எவரேனும் வீட்டிலிருந்தால் அவர்களைப் பராமரிப்பது அதோடு சம்பாதிப்பதற்காக வேலைக்குப் போவது என்று அதிகநேரம் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. இந்தச்சூழலில் கருவுற்றபெண் தன் உடல்நலம் குறித்து எத்தகைய அக்கறை எடுத்துக்கொள்ள முடிகிறது.? நீங்கள் இத்தகைய பெண்களை சந்தித்து கேட்டுப் பாருங்கள் அவர்களின் பதில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்: “மருத்துவமனைக்குப் போனால் ஒருநாள் வேலை போய்விடுகிறது. மற்ற வேலைகளும் கெட்டுவிடுகிறது. அதுவும் மாதாமாதம் போவதென்பதெல்லாம் முடிகிற காரியமா? சத்துணவு உருண்டைகள் தருகிறார்கள்தான். குழந்தைகளை  பார்க்க வைத்துக்கொண்டு நான் மட்டும் எப்படிச் சாப்பிடுவது? அதையெல்லாம் குழந்தைகளுக்கு கொடுத்துவிடுவேன். ஏதோ முடியும்போது மருத்துவமனை சென்று வருவேன். முடியாவிட்டால் விட்டு விடுவேன்!”. இதுதான் அவர்களின் பதில். பெண்கள் இங்கே  மறுபடியும் தியாகம் செய்கிறார்கள். தங்கள் உடலநலத்தை ஏன் உயிரையும் கூட.

ஒரு பெண் கருவுற்றால் அது அவளது பொறுப்பு மட்டும்தானா? அவளது கணவனுக்கு பொறுப்பில்லையா? அவளது குடும்பத்திற்கு பொறுப்பில்லையா?அந்த சமூகத்திற்கு பொறுப்பில்லையா?  கருவுற்ற பெண்ணின் நலம் என்பதும் தாயின் நலம் என்பதும் கணவனின், அந்த குடும்பத்தின், அந்த சமூகத்தின் பொறுப்பாக ஏன் மாறுவதில்லை? ஏன் இப்படியொரு பண்பாட்டை நாம் வளர்ப்பதில்லை? பார்பி பண்பாட்டையும் மெலிந்த தேகப்பண்பாட்டையும் பெண் களை தியாகம் செய்யச்சொல்லுகிற பண்பாட்டையும் இன்னும் ஏன் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். 

பின்னுரை :
சோஸலிஸ்ட் அப்பீல் என்கிற பத்திரிகையின் ஆசிரியரும், புகழ்பெற்ற மார்க்ஸீய சிந்தனையாளருமான பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் வுட், 2001ம் ஆண்டு, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் கோடைக்கால மார்க்ஸீயப் பள்ளியொன்றில் ‘கலையும் வர்க்கப் போராட்டமும்எனும் தலைப்பில் உரையாற்றினார். அதில் சில பகுதிகள் இங்கே: இப்போதெல்லாம் அழகியல் பற்றி பல முட்டாள்தனமான விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது அழகு? எது அசிங்கம்? என்று அடித்துப்பேசுகிறார்கள். எது அழகு, எது அசிங்கம் என்று யாராவது அறுதியிட்டுச் சொல்லிவிட முடியுமா? அதெல்லாம் இருக்கட்டும்.. அழகென்றால் என்ன என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா.? உண்மையில், அழகென்றால் என்ன அசிங்கமென்றால் என்னவென்று நமக்கு நன்றாகத் தெரியுமென நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா? எல்லா சமூகங்களுக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்ற பொதுவான ‘அழகென்பதுஎப்போதுமே இருந்ததில்லை. அது சமூகத்திற்கு சமூகம், காலத்திற்கு காலம் வேறுபட்டும் மாறிக்கொண்டும்தான் இருந்தது; இருக்கிறது.”

ஆரம்பகாலத்து சமூகங்களில் அல்லது தொல் சமுகங்களில் அழகு பற்றிய கருத்தாக்கங்கள் போன்ற பண்பாட்டு மதிப்பீடுகளுக்கும், அச்சமூகத்தின் பொருளாதார அடித்தளத்திற்கும் இருக்கிற உறவுகள் தெள்ளத்தெளிவாக அடையாளம் காட்டக்கூடியதாக இருந்தன. ஆனால் பிந்தைய, தற்போதைய சமூகங்களில் இவ்வுறவுகள் அவ்வளவு தெளிவாக அடையாளம் காட்டக்கூடியதாயில்லை. மிகவும் சிக்கல் மிகுந்ததாகவும் தெளிவற்றதாகவுமே அவை புலப்படுகின்றன.

உதாரணமாக, கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள மாசாய் பழங்குடியினர் ஒட்டகச்சிவிங்கி போல் கழுத்து நீண்டிருக்கிற பெண்களையே அழகெனக்கருதுவர். அவ்வழகை அடையவேண்டி, சிறிய வயதிலிருந்தே கழுத்தை நீண்டதாக்க பல முயற்சிகளில் இறங்குவர். இப்படி கழுத்து நீண்டிருப்பது நம்மில் பலருக்கு அழகெனப்படாதுதான்.. ஆனால் மாசாய் பழங் குடியினர்க்கு அழகு பற்றிய இக்கருத்தாக்கம் எப்படி வந்தது என்று நம்மால் விளக்கிடமுடியும்.

இந்நடைமுறைக்கு மூலகாரணம் இதுதான். மாசாய் பழங்குடியினர், செல்வமெனக் கருதுவது இரண்டு விஷயங்களையே. ஒன்று அவர்கள் வைத்திருக்கும் கால்நடைகளை, மற்றொன்று அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செம்பு உலோகத்தை. ஏனெனில், அவர்களைப் பொறுத்தவரை செம்பு அரிதானது; விலை மதிப்பற்றது. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு பெண் செம்பினாலான அணிகலன்களை அணிந்திருக்கிறாளோ அவ்வளவுக்கவ்வளவு அவள் கவர்ச்சியுடையவளாய்க் கருதப்படுவாள். அதுவும் குறிப்பாக கழுத்தில் அணிந்திருந்தால் கவர்ச்சி மேலும் கூடும். எனவேதான் அதிகமான செம்பு வளையங்களை அணிய வேண்டி மாசாய் பெண், தனது கழுத்தை நீண்டதாக்கிகொள்கிறாள். இக்கருத்தாக்கம் இவர்களிடம் வேர்கொண்டதற்கு காரணம் இதுதான். காலம் செல்லச்செல்ல இந்த மூலகாரணத்தை அவர்கள் மறந்து போகிறார்கள். எனினும் பண்பாட்டு மரபுகளும், சடங்கு சம்பிரதாயங்களும் இதனையே வலியுறுத்த கழுத்து நீண்ட பெண்தான் அழகென மெல்ல மெல்ல அவர்கள் நம்பத் தொடங்கிவிடுகிறர்கள் அவர்கள் சமுக ஆழ்மனத்தில் இக்கருத்தாக்கம் வேர்கொள்ளத் தொடங்கிவிடுகிறது.

சரி இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? ஆகப் பொதுவான அழகென்பது எதுவுமில்லை; அது சார்புடையது. ஆனால் அது வரலாற்று வளர்ச்சியில் பரிணாமம் கொள்கிறது; பல மாற்றங்களுக்குட்படுகிறது என்பதைத்தானே.?

எனினும் இந்த நேரத்தில் ஒன்றை நாம் எச்சரிக்க வேண்டியிருக்கிறது. இதை ஒரு சூத்திரமாக்கி எந்திரகதியில் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது மிகவும் அபாயகரமானது. கலைகளும், சமயங்களும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியோடு - அதாவது பொருளாதார அடித்தளத்தோடு  நேரடித் தொடர்புடையதென்று கருதமுடியாதென மார்க்ஸ் தெளிவாகக் குறிப்பிடுகிறார் . இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

புதுவிசை, இதழ் 33, செப்டம்பர் 2011

Tuesday, April 21, 2020

மார்க்சியம் : வர்க்கமும் அடையாளமும் - ந. முத்துமோகன்

மூன்று அரசியல்கள்

வீனகால ஐரோப்பா இரண்டு விதமான அரசியல்களை நமக்குப் பரிச்சயப்படுத்தியது. முதலாவது, பூர்ஷ்வா (முதலாளிய) தாராளவாத அரசியல். தேசிய அரசு, அரசியல் சட்டம், அரசியல் கட்சிகள், பாராளுமன்றம், தேர்தல், நீதிமன்றம், காவல்துறை ஆகியவற்றை நிறுவனக்கூறுகளாகக் கொண்ட அரசியல் இது. தனிச்சொத்துரிமை, தனிமனிதன், மனித உரிமைகள் ஆகியவை இந்த வகையான அரசியல் கோட்பாட்டில் மையமான இடம் வகிக்கின்றன. இரண்டாவது, மார்க்சிய வர்க்க அரசியல். சமூகம் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது என்பது மார்க்சிய அரசியலின் கோட்பாடு. சுரண்டும் வர்க்கம் ஆளும் வர்க்கமாகவும், சுரண்டப்படும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவும் உள்ளன. எனவே வர்க்க முரண்பாடுகள் அரசியலாக வெளிப்படுகின்றன. தொழிற்சங்கங்கள், பொருளாதாரப் போராட்டங்கள், அவற்றோடு அரசியல் போராட்டங்கள், உழைக்கும் வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஆகியவை வர்க்க அரசியலின் கூறுகள். இவை இரண்டிலும் நேரடியாகச் சேராதது அடையாள அரசியல். தேசம், சாதி, மதம், மொழி, பிரதேசம், பண்பாடு, பாலினம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை மையமாகக் கொண்டு மக்களைத் திரட்டி நடத்தும் அரசியலை அடையாள அரசியல் என்கிறோம். இந்தியா போன்ற நாடுகளில், இன்னும் விரிவாக, மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடையாள அரசியல் கடந்த இரு நூற்றாண்டுகளில் வலுவான ஒன்றாக இடம்பெறுகிறது.

அடையாள அரசியலின் பண்புகள்

அடையாள அரசியல் என்பது பின்னை நவீனத்துவச் சூழலில் உருவான ஒருவகை அரசியல் என்று சில மேற்கத்திய சிந்தனையாளர்கள் எழுதி வருகின்றனர். மேலைநாடுகளின் நவீன அரசியல் லட்சியங்கள் பொய்த்துப்போன பின்னர், உலக அளவில் சோசலிசத்திலும் நெருக்கடிகள் எற்பட்ட பின்னர் அடையாள அரசியல் முன்னுக்கு வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். சமீபகாலங்களில் அடையாள அரசியல் தீவிரப்பட்டு வருவதற்கும் அது கோட்பாட்டு ஆதரவைப் பெற்றமைக்கும் மேலே குறிப்பிட்ட சூழல்கள் காரணமாக இருக்கலாம். ஆயின் ஆசிய ஆப்பிரிக்க லத்தின் அமெரிக்க நாடுகளில், காலனியச்சூழல்களில், 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தொடர்ந்து ஓர் அரசியல் நடந்து வந்திருக்கிறது. முதலாளியத்திற்கு முந்திய பழங்குடிச் சமூகங்களின் சமூகப்பிரிவுகளையும் சமூகத்திரட்சிமுறைகளையும் கொண்டு இவ்வகை அரசியல் தன்னை வடிவமைத்து வந்துள்ளது. இந்தியச் சூழல்களில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதற்கொண்டு, இந்துக்கள், இஸ்லாமியர், சீக்கியர் போன்ற மதத்திரட்சிகளும், தமிழ்ச்சூழல்களில், வைகுண்டரின் அய்யாவழி இயக்கம், ஆறுமுக நாவலரின் சைவ மீட்டுருவாக்கம், கால்ட் வெல்லின் திராவிடம் பற்றிய கருத்தாக்கத்திற்குப் பிறகான அச்சு நூல்கள் பதிப்பு இயக்கம், அயோத்திதாச பண்டிதரின் பூர்வபௌத்தம், நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் இயக்கம், பின்னர்  பெரியாரின் நுழைவு, தனித்தமிழ், தமிழிசை இயக்கங்கள், திராவிட அரசியல் கட்சிகள், இன்று பழங்குடிகள் என நீண்ட நெடிய ஓர் அரசியலைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் கண்டு வந்திருக்கிறோம். இவை காலனிய ஆட்சியின் பிரித்தாளும் உத்திகளால் உரு வாக்கப்பட்டவை என்ற ஒரு கருத்து உள்ளது. ஆட்சியாளர்கள் பிரித்தாண்டனர் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. அவர்கள் பிரித்தாள முடியாதபடி நாம் ஒன்றுபட்டு வாழ்ந்துகொண்டிருந்தோம் என்பதும் வரலாற்று ரீதியாகத் தவறான கற்பிதம். இந்துத்துவச் சிந்தனையாளர்கள் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னால், இஸ்லாம் இந்தியாவில் பரவுவதற்கு முன்னர் இந்தியா ஒரு பொற்கால வாழ்வை வாழ்ந்து வந்ததாக எழுதுவதுண்டு. இது போன்ற ஒற்றைப்படையான மதிப் பீடுகளைக் கடந்து இந்திய சமூகத்தை நாம் அணுகிச் செல்லுவதே சரியாக இருக்கும். எனவே ஆட்சியாளர்கள் பிரித்தாளுவதற்கான சமூக அடிப்படைகள் நமது சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த விவாதம், அடையாள இயக்கங்களின் வரலாற்றுரீதியான சமூக அடிப்படைகளை நோக்கி நம்மை இட்டுச் செல்ல வேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் பழஞ்சமூக அமைப்புகளிலிருந்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களும் உட்காலனியக் கூறுகளும் அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப் பட்டன என்றே இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

அடையாள இயக்கங்கள் பலபடித்தானவை என்பது தெளிவு. அவற்றைக் குறைந்தபட்சம் மூன்று வகைப்பட்டவையாகப் பிரித்துக்காட்டலாம்: (1) பழைய சமூகத்தின் நில உடமை மற்றும் மேட்டிமைச்சாதிகளின் மரபுரீதியான அனுகூலங்களைத் தக்கவைப்பதற்காக அடையாள மீட்டுருவாக்கங்களில் ஈடுபட்ட இயக்கங்கள் உண்டு. (2) மேற்கத்திய மதங்கள், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி, சனநாயக உரிமைகள் ஆகியவை பற்றிய அறிமுகத்தால் முன்னெடுக்கப்பட்ட இயக்கங்கள் உண்டு. (3) காலனிய ஆட்சிக்காலத்தில் சமூக அடித்தளங்களில் ஏற்பட்ட அசைவுகளால் உருவான இயக்கங்கள் உண்டு. எனவே எல்லா அடையாள இயக்கங்களையும் ஒரேவித அளவுகோல்களால் மதிப்பிட முடியாது. அடித் தளங்களில் வேர்கொண்ட இயக்கங்கள் குறித்த தனித்த கவனம் நமக்குத் தேவைப்படும். மரபார்ந்த சமூகத்தில் வழக்கிலிருந்த சமூக அநீதிகளுக்கு எதிரான இயக்கங்கள் குறித்த பிரத்தியேக அக்கறை நமக்குத் தேவைப்படுகிறது.

19-20ஆம் நூற்றாண்டுகளின் அடையாள இயக்கங்களில், குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அவை சமயம், இனம், மொழி, சாதி என எந்த வடிவில் தோன்றியிருந்த போதும், அவற்றில் இந்தியச் சமூகம் குறித்த பிரச்சினை (Social Question) ஏராளமாக விவாதிக்கப்பட்டுள்ளது. சமூக அமைப்பு குறித்த ஓர்மை என்று இதனைக் குறிப்பிடலாம். கிறித்தவ மிஷனரிகள் தமது மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவில் சாதி, இந்து மதத்தில் சாதி என்ற பிரச்சினையைப் பெரிதுபடுத்தினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே சாதி அமைப்பு, இந்தியச் சமூக அமைப்பு, பிராமணியம் மற்றும் இந்து மதத்தோடு அதற்குள்ள உறவு போன்ற விஷயங்கள் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன எனலாம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் எந்த ஒரு இயக்கமும் எந்த ஒரு சிந்தனையாளரும் சாதி குறித்த, இந்தியச் சமூக அமைப்பு குறித்த நேரடியான அல்லது மறைமுகமான விவாதத்தைத் தவிர்த்துச் செல்ல முடியவில்லை என்பது குறிப்பாகச் சொல்லப்படவேண்டிய விஷயமாகும்.

அடையாள இயக்கங்கள் ஒவ்வொன்றும் தம் இருப்பை நியாயப்படுத்த தத்தமது வரலாற்றைக் கட்டமைக்கின்றன. தமது வரலாற்றை மட்டுமின்றி, கடந்தகாலத்திய தமது மெய்யியலை, சமயவேர்களைக் கண்டடைகின்றன. வேதங்கள், உபநிடதங்கள், சங்க இலக்கியம், பூர்வ பௌத்தம், வாய்மொழி வரலாறுகள் எனப் பலவகையான ஆதாரங்களைக் கொண்டு தம்மைக் கட்டமைத்துக்கொண்ட அடையாள இயக்கங்களை நாம் அறிவோம். (வர்க்கங்கள் இப்படித் தம்மை வரலாற்றுரீதியாக, மெய்யியல்ரீதியாக கட்ட மைத்துக் கொள்கின்றனவா?) அடையாள இயக்கங்கள் பண்பாட்டு ஞாபகத்திலிருந்து (Cultural Memory) தகவல்களைப் பயன்படுத்துகின்றன. மானுடக்கூட்டங்களின் ஞாபக அடுக்குகளில் வரலாற்றுக் காயங்கள், பண்பாட்டு இழிநிலைகள் ஆகியவை படிந்திருக்கின்றன. பண்பாட்டுப் பெருமிதங்கள், வரலாற்றில் பெற்ற வெற்றிகள் ஆகியவை இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. அடக்கு முறைகளும் அவற்றுக்கு எதிரான போராட்ட அனுபவங்களும் இருக்க வாய்ப்புண்டு. அடையாள இயக்கங்களின் வரலாற்றுக் கட்டமைப்புகளில், இவையெல்லாம் முழுக்க முழுக்க உண்மையாக, புறவயமாக எடுத்துப் பயன்படுத்தப்பட்டன என்று சொல்வதற்கில்லை. சமகால அரசியல் தேவைகளுக்கு ஏற்ப தெரிவுசெய்யப்பட்ட ஞாபகத்தகவல்கள் அடையாள அரசியலாளர்களால் எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடையாள அரசியலாளரின் வரலாற்றுக் கட்டமைப்பு என்பது ஒரு சிக்கலான நிகழ்வுப்போக்கு. இந்நிகழ்வுக்கு நீண்டகால தொடர்விளைவுகள் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. இருப்பியல்ரீதியான உண்மைத் தன்மையையும் வரலாற்றுத்தன்மையையும் (Ontologisation) அவை ஈட்ட முயல்கின்றன என்பது இதன் பொருள். மெய்யியல் அல்லது சமய வேர்களைக் கண்டடையும்போது, அவை உலகு கடந்த மெய்மைத்தன்மையை (Metaphysical, Divine, Revelatory) கட்டியமைக்க முயலுகின்றன என்று பொருள். இது குறிப்பிட்ட ஒரு குழுவின் அடையாளத்தை நிரந்தரப் படுத்தும் பண்புக்கு இட்டுச்செல்கிறது. அடையாள அரசியலே நிரந்தரமான ஒன்று என்ற தருக்கவியலுக்கே இது இட்டுச் சென்றுவிடலாம். அடையாளங்கள், குறிப்பாக அவை இழிவான அடையாளங்களாக இருக்கும்போது, அவற்றை அழிப்பதற்கு இவ்வகை வரலாற்றுக் கட்டுமானங்கள் உதவுமா என்ற கேள்வி எழுகிறது. மேட்டுக்குடிகள் மிகப் பெருமிதமான வரலாற்றுப் புனைவுகளைக் கட்டி எழுப்பும்போது, அவை தத்தமது அடையாளங்களை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ளவே முயலுகின்றன என்றும் பொருளாகிறது.  
           
வரலாறு, மெய்யியல், சமயம் போன்ற அடிப்படைகளைத் தேடி அடையும்போது, ஒவ்வொரு அடையாளமும் தன்னை மறுவரையறை செய்து கொள்ளுகிறது என்பது உண்மை. அதாவது, அடையாளம் தன்னை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைத்துக்கொள்ளாமல், தனது அடையாளம் எது? என்ற தொடர்ந்த தேடலுக்குள் ஈடுபடுத்திக் கொள்கிறது என்று பொருள். திராவிடன், தமிழன், சங்கத்தமிழன், சைவத் தமிழன், பௌத்தத் தமிழன் என்று அடுத்தடுத்த பல வரையறைகளின் ஊடாக (Fluid Signifier) தமிழ் அடையாள அரசியல் நகர்ந்ததை நாம் அறிவோம். இப்படிச் சொல்லும் போது, ஒவ்வொரு அடையாளமும் தன்னை இதுதான் என்று அறுதியிட்டுக் கூறி முடித்துவிடாமல், தன்னைப் பற்றிய தேடலில் ஈடுபட்டு வருகிறது என்பதையும் புரிந்துகொள்கிறோம். அடையாள உருவாக்கத்தின்போது இன்னும் வரையறுக்கப்பட்ட வடிவில் உறுதிப்படாத (திரவ நிலையிலுள்ள) ஓர் அடையாளம் தன்னை விறைப்பாக (திட நிலையில்) ஆக்கிக் கொள்கிறது என்றும் சொல்லலாம். விறைப்பான அடையாளம் எல்லா வேளைகளிலும் சனநாயகபூர்வமானது என்று கூற முடியாது.       

அடையாளங்கள் பொதுவாக ஒற்றை அளவுகோலைக் கொண்டு தம்மை வரையறுப்பதில்லை. (வர்க்கங்கள் தம்மைப் பொருளாதாரரீதியாக ஒற்றைப்படையாக வரையறுத்துக் கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றன.) அரசியல், பண்பாடு, வரலாறு, சமயம், மெய்யியல் எனப் பலவகையான  அச்சுக்களில் அடையாளங்கள் தம்மை வரையறுத்துக் கொள்கின்றன. அல்தூசரின் மிகை நிர்ணயம் (Over Determination) என்ற கருத்தாக்கம் இங்கு நினைவுக்கு வருகிறது. பலவகையான சமூகப் பண்பாட்டுக் காரணிகள் ஒரு நிகழ்வைக் கூட்டாகவும் சிக்கலான முறையிலும் நிர்ணயம் செய்வதை அல்த்தூசர் மிகை நிர்ணயம் அல்லது குவி நிர்ணயம் என்பார். பலவகையான அச்சுக்களில், பல விதமான அளவைகளின் அடிப்படையில் அடையாள இயக் கங்கள் தம்மை வரையறுத்துக்கொள்வதால், வெகுமக்கள் அரசியலில் அவை ஈடுபடுவது எளிதாக்கப்படுகிறது. ஒற்றை அளவைகளைக் கொண்ட இயக்கங்கள் வெகுசனப்பரப்பை முழுவதும் தழுவிநிற்கமுடியாமல் தேங்கிப் போவதுண்டு.
 
அடையாள இயக்கங்கள் கடந்தகாலத்தில் தமது வேர்களைத் தேடுவதால், அவை கடந்த காலத்தை நோக்கியவை, அவை எதிர்காலப்பார்வை அற்றவை என்று சொல்லிவிடமுடியாது. சமூக மாற்றத்தை விரும்பாத மேட்டுக்குடிகள் தமது கடந்தகாலத்தை அதிகம் சிலாகிப்பவர்களாகவும், சமூகமாற்றம் கோரும் அடித்தள இயக்கங்கள் எதிர்காலம் நோக்கியனவாகவும் இருப்பது இயல்பு. அடையாள இயக்கங்கள் கால ஓட்டத்தில் முன்னும் பின்னுமாக நகருகின்றன. அவை மீட்டுருவாக்கம், சமூகமாற்றம் என்ற இரட்டைநிலையைக் கொண்டவையாக உள்ளன. இருப்பினும், நவீனமயமாக்கம் அடையாள இயக்கங்களின் முனைப்பான ஒரு வேலைத்திட்டமாகும். மரபும் நவீனமயமாக்கமும் என்ற இரட்டை நிலையோடு நகரும்போது, அவை ஒரு மாற்றுப்பண்பைக் கொண்ட நவீனமயமாக்கத்தைச் (Alternative Modernity) சென்றடைகின்றன. ஜப்பான், கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகள் தமது பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்கொண்டு நவீனமயமாகியிருப்பதை இங்கு நினைவுக்குக் கொண்டுவருவோம். சீன சோசலிசம்கூட பண்பாட்டு அடையாளத் தன்னுணர்வுடன் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுவார்கள்.

அடையாள அரசியல் பூர்ஷ்வா தாராளவாத அரசியலைப்போல தனிமனிதரை மையப்படுத்துவது கிடையாது. அது பாராளுமன்ற சனநாயக அரசியலின் முறைமையாகிய பிரதிநிதித்துவ அரசியலைப் பின்பற்றுவதும் கிடையாது. அடிப்படையில் அவை தமது அடையாளம் சார்ந்த மக்கள் திரட்சியையும் அவர்களின் நேரடிப் பங்கேற்பையும் கொண்டமைகின்றன.  இந்தியச்சூழல்களில் எந்த ஓர் அடையாளமும் அறுதிப் பெரும்பான்மை கொண்டதாக இல்லாததால், அடையாள இயக்கங்கள் பாராளுமன்ற அரசியல் அனுமதிக்காத போராட்ட முறைகளையும் பின்பற்றுகின்றன. தமது கோரிக்கைகளின் வலுவைப் பெருக்கிக் காட்டுவதற்கு அவை வன்முறையான வழிமுறைகளையும் கையாளுகின்றன. அடித்தள மக்களின் அடையாள இயக்கங்கள் பெரும்பாலும் இடதுசாரி இயக்கங்களின் போராட்ட முறைகளைப் பின்பற்றுகின்றன.
           
இன்று என்ன நடக்கிறது?

அரசியல் பொதுவெளியில் அடையாளங்கள் அதிக இடத்தை ஆக்கிரமித்து வருவதால், அடையாள அரசியலை உள்வாங்க முதலாளிய சக்திகள் முயற்சிக்கின்றன. சோசலிச சக்திகளும் (வர்க்க சக்திகளும்) முயலுகின்றன.

முதலாளிய சக்திகள், அடையாள அரசியலின் சிக்கல்களுக்குத் தாங்கள் பொறுப்பில்லை, பழைய இந்திய சமூக அமைப்பு, இந்துமதம் போன்றவை பொறுப்பாக இருக்கலாம், ஆயின் தாராளவாத முதலாளிய சனநாயகத்தால்தான் அடையாள அரசியலின் முரண்களுக்குத் தீர்வுகளை வழங்க முடியும் என்று கூறிவருகின்றன. எனவே அடையாள அரசியல் சக்திகள் முதலாளிய எதிர்ப்பிலோ, உலகமயமாக்க எதிர்ப்பிலோ பங்கேற்கவேண்டியதில்லை, உண்மையில் முதலாளிய சனநாயகமும் உலகமயமாக்கமும் அடையாள அரசியல் சக்திகளுக்கு அனுசரணையாகத்தான் உள்ளன என்று அவை கூறிவருகின்றன. இதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய அடை யாள அரசியல் சக்திகள் உண்டு என்பது கவனிக்கத்தக்கது.

சோசலிச சக்திகளும் அடையாள அரசியலை கையாள முயற்சிக்கின்றன. இந்திய மண்ணில் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக வர்க்க அரசியலை நடத்திவரும் இடதுசாரிகள் அடையாள அரசியலோடு உரையாடல் நடத்த முன்வந்துள்ளனர். இதற்கு முன்பும் இந்த உரையாடல்கள் பல முரண்பட்ட சூழல்களில் நடக்கத்தான் செய்துள்ளன. வங்காளியர் பண்பாட்டு மனோபாவங்களை இடதுசாரிகள் சுவீகரிக்கத் தெரிந்திருந்தனர். கேரளத்தில் நாராயண குருவை இடதுசாரிகள் வரித்துக்கொண்டதுண்டு. தமிழில் சிங்காரவேலர், ஜீவா, நாவா போன்றோருக்கு பண்பாட்டு அரசியல் குறித்த தீவிர முன்னுணர்வுகள் இருந்தன. இருப்பினும் முன்னெப்போதையும்விட தீர்க்கமாக இப்போது வர்க்கமும் அடையாளமும், இடதுசாரிகளும் அடையாள அரசியலும் போன்ற தலைப்புகள் முக்கியப்பட்டு வருகின்றன. அடையாள அரசியலை வரலாற்றுரீதியாகவும் சமூகரீதியாகவும் புரிந்துகொள்வது எப்படி? அடையாள அரசியலின் பிரச்சினைத்தளத்தை சோசலிச அரசியலோடு இணைப்பது எப்படி? போன்ற விவாதங்களை நடத்த நாம் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறோம். இந்த விவாதங்களை விரிவாக நடத்துவதில் தாமதித்துவிட்டோம் என்ற உணர்வும் நம்மிடம் உள்ளது. முதலாளிய எதிர்ப்பும் உலகமயமாக்க எதிர்ப்பும் கொண்ட சக்திகளாக அடையாள அரசியல் சக்திகளை உருவமைக்கும் கடப்பாடும் இடதுசாரிகளுக்கு உள்ளது. இத்தகைய பின்புலத்தில்தான் வர்க்கமும் அடையாளமும் என்ற பிரச்சினை முக்கியமாகிறது. இதனை எப்படிச் செய்வது?

செய்யவேண்டியது என்ன?

1. அடையாளம், அடையாள அரசியல், அடையாள அரசியல் இயக்கங்கள் என்ற பிரச்சினைகள் இந்திய, தமிழ்ச் சூழல்களில் வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பிரச்சினைகள் என்பது நம்மால் முதலில் அங்கீகரிக்கப்படவேண்டும்.

2. இது, இந்தியச் சமூக அமைப்பு, இந்தியச் சமூக வரலாறு, இன்றைய இந்தியப் புரட்சி ஆகியவற்றின் பிரச்சினை என்பது நம்மால் ஆழமாக அங்கீகரிக்கப்படவேண்டும்.

3. இடதுசாரி இயக்கங்கள் வெகுசன இயக்கங்களாக மாறவேண்டும் என்ற வேலைத் திட்டத்தோடு இணைத்து இப் பிரச்சினை அணுகப்படவேண்டும்.

4. வர்க்கம் என்ற கருத்தாக்கம் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய முதலாளியச் சூழல்களில் உருவான கருத்தாக்கம் என்பதை அங்கீகரித்து, மேற்கல்லாத சமூகங்களின் பிரத்தியேகப் பண்புகளுக்கு ஏற்ப அக்கருத்தாக்கம் நெகிழ்வாகக் கையாளப்படவேண்டும்.

5. வெவ்வேறு அடையாள இயக்கங்களின் தோற்றம், வரலாறு, செயல்பாடுகள், வர்க்க உள்ளடக்கம் ஆகியவை மார்க்சிய நோக்கில் பயிலப்படவேண்டும்.

வர்க்கம் குறித்த மார்க்சின் கருத்துக்கள்

இந்த இடத்தில் மார்க்சியர்களின் வர்க்கம் பற்றிய கருத்தாக்கத்தைச் சிறிது தெளிவுபடுத்தி விட்டு முன்செல்வோம். அடையாள அரசியலார் இந்தியச்சூழல்களிலும் சர்வதேசச் சூழல்களிலும் மார்க்சியத்தின் வர்க்க அணுகுமுறை குறித்து முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளை மனதில் இருத்தி இங்கு பேசமுனைவோம்.

வர்க்கம் என்பது ஒரு பொருளாதாரக் கருத்தாக்கம், அது மக்கட்கூட்டங்களிடையிலான பொருளாதாரச் சுரண்டலை (Exploitation) மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுகிறது, அது சாதிரீதியான, நிற அடிப்படையிலான அல்லது இன அடிப்படையிலான, பாலியல் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் (Oppressions)  கணக்கில் கொள்ளுவது கிடையாது என்பது அடையாள அரசியல் நம்மீது வைக்கும் குற்றச்சாட்டாகும். சுரண்டல் என்பது, பொருளாதாரச் சுரண்டல் என்பது மார்க்சியத்தின் மிக வலுவான ஒரு கருத்தாக்கம். மார்க்சின் “மூலதனம்என்ற மிகப் பிரும்மாண்டமான நூல் அக்கருத்தாக்கத்தைச் சுமந்து நிற்கிறது. பொருளாதாரச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டே சமூக அடக்குமுறைகளை மார்க்சியம் பேசுகிறது என்பதும் பெருமளவில் உண்மைதான். இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, மார்க்ஸ், லெனின் ஆகியோரின் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தைப் பரிசீலிப்போம். 

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல்வரிகள் வர்க்கப்போராட்டம் பற்றியதாக அமைந்துள்ளன. “இதுவரை இருந்து வந்திருக்கிற சமுதாயத்தின் சரித்திரம் எல்லாம் வர்க்கப்போராட்டத்தின் சரித்திரமே. சுதந்திரப்பிரஜையும் அடிமையும், பாட்ரீஷியன் என்ற மேல்குடிமகனும் பிளேபியன் என்ற கீழ்க்குடிமகனும், பிரபுவும் பண்ணையடிமையும், கில்டு மாஸ்டரும் ஜேர்னிமேனும், சுருங்கச்சொன்னால், ஒடுக்குபவனும் ஒடுக்கப்படுபவனும் என்றென்றும் எதிரெதிரே நின்றுகொண்டு, சில சமயங்களில் மறைவாகவும், சில சமயங்களில் பகிரங்கமாகவும் இடையறாத போர் நடத்திவந்தனர்.”

இந்த வரிகள் வரலாறு குறித்த ஒரு புத்தம் புதுப்பார்வையை முன்வைக்கின்றன. வரலாற்றின் இயக்குசக்தியாக வர்க்கப்போராட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன என்பதைத் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய வரலாற்றின் பல்வேறு சமூக அமைப்புகளில் (அடிமைச் சமூகத்தில், நில உடமையில்) எந்தெந்த வர்க்கங்கள் எதிரெதிராக நின்று போரிட்டிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கிறது. சுதந்திரப்பிரஜை- அடிமை, பாட்ரீஷியன் - பிளெபியன், பிரபு - பண்ணையடிமை, கில்டு மாஸ்டர் - ஜேர்னிமேன் என்ற எட்டு வகைப்பட்ட, நான்கு ஜோடி வர்க்கங்களை சொல்லியபிறகு, மார்க்ஸ், “சுருங்கச்சொன்னால், ஒடுக்குபவனும் ஒடுக்கப் படுபவனும்என்று எடுத்துச்சொல்லுகிறார். இங்கு “சுரண்டுபவனும் சுரண்டப்படுபவனும்என்ற சொற்களை மார்க்ஸ் பயன்படுத்தவில்லை. மார்க்சியம் ஒரு பொருளாதார நிர்ணயவாதம், வர்க்கம் என்பது பொருளாதாரச் சுரண்டலை முன்வைக்கும் கருத்தாக்கம் என்றெல்லாம் சொல்லுபவர்கள் இந்த வரிகளைக் கவனிக்க வேண்டும். மார்க்சின் மேற்குறித்த வரிகளில் பொருளாதாரம் நேரடியாகப் பேசப்படவில்லை. ஒடுக்குமுறைதான் பேசப்பட்டிருக்கிறது.

மார்க்ஸ் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தை அவரது எழுத்துக்களில் ஏராளமாகப் பேசியிருக்கிறார் என்பது உண்மை. பொருளாதாரச் சுரண்டலை மையப்படுத்திய கருத்தாக்கமாக அவர் அதனைப் பெருமளவில் பயன்படுத்தியுள்ளார் என்பதும் உண்மை. ஆயின் அக்கருத்தாக்கத்தைத் தனியான ஒரு பிரச்சினையாகத் தலைப்பிட்டு பேசியிருக்கிறாரா? என்று ஒரு கேள்வியை முன்வைத்தால் அக்கேள்விக்குப் பதில் சொல்லுவது கடினம். மூலதனம் நூலில் 3வது பாகத்தில் கடைசி அத்தியாயம் “வர்க்கங்கள்எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் “வர்க்கங்கள்என்ற கருத்தாக்கத்தை மார்க்ஸ் அவருக்கே உரிய துல்லியத்துடன் வரையறுக்க விழைந்திருக்கவேண்டும். ஆயின் இந்த அத்தியாயம் இரண்டே பக்கங்களில் முடிந்துபோகிறது. அந்த இரண்டு பக்கங்களும்கூட மூலதனம் நூலில் அவர் பேசிவந்த முதலாளியச் சமூகத்தின் வர்க்கங்கள் குறித்தவையாக உள்ளனவே தவிர வர்க்கம் என்ற கருத்தாக்கத்தை எல்லாச் சமூக அமைப்புகளுக்கும் பொருந்தும் வகையில் கோட்பாட்டு ரீதியாக வரையறுப்பனவாக இல்லை. அங்கு அவர் முதலாளியத்தின் மூன்று வர்க்கங்கள் பற்றிச் சொல்லுகிறார். மூலதனத்திற்கும் உற்பத்திச்சாதனங்களுக்கும் சொந்தக்காரனான முதலாளி, நிலத்தை மூலதனமாகவும் உற்பத்திச்சாதனமாகவும் கொண்ட நிலஉடமையாளன், உழைப்புச்சக்தியை விற்றுப் பிழைக்கும் நிலையிலிலுள்ள பாட்டாளி என்ற மூவரைப் பற்றி மார்க்ஸ் அங்கே பேசத் தொடங்குகிறார். லாபம் (உபரி மதிப்பு), நில வாடகை, கூலி ஆகிய மூன்று ஆதாரங்களைக் கொண்ட மூன்று வர்க்கங்களைப் பற்றி அங்கு மார்க்ஸ் உரையாடத் தொடங்குகிறார். அந்த உரையாடலும் தொடரவில்லை.

முதலாளியத்திற்கு முந்திய சமூக அமைப்புகளையும் உள்ளடக்கிய வர்க்கம் என்ற ஒரு கருத்தாக்கத்தை மார்க்ஸ் எந்த இடத்திலும் வரையறுத்து வழங்கியதாகத் தெரியவில்லை. ஆயின் முதலாளியத்திற்கு முந்திய சமூகங்களில் வர்க்கம் என்ற ஒன்று அதன் தூய்மையான பொருளாதார அர்த்தத்தில் காணப்படுவது இல்லை என்று மார்க்ஸ் பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். கம்யூனிஸ்ட் அறிக்கையிலேயே மார்க்ஸ் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். “சரித்திரத்தின் ஆரம்பகால சகாப்தங்களில், அனேகமாக எங்குமே சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைக் கொண்ட சிக்கலான ஏற்பாட்டைக் காணுகிறோம்; சமூக அந்தஸ்தில் பல படிகளைக் காண்கிறோம். பழங்காலத்து ரோமாபுரியில், பாட்ரீஷியன்கள், நைட்டுகள், பிளேபியன்கள், அடிமைகள் ஆகியோரைக் காண்கிறோம். மத்தியகாலத்தில், நிலப்பிரபுக் களையும், மானியக்காரர்களையும், கில்டு மாஸ்டர்களையும், ஜேர்னிமேன்களையும், புதிதாக வேலை பயில்பவர்களையும், பண்ணையடிமைகளையும் காண்கிறோம். மேலும், அனேகமாக, இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றுக்கொன்று கீழ்ப்பட்ட உட்பிரிவுகளையும் காணலாம்.” (கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் ஏங்கெல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1969, ப.42). இங்கு மக்கள் பிரிவினர் வர்க்கங்கள் என்ற சொல்லால் குறிக்கப்பட்டாலும், அவை சிக்கலான ஏற்பாட்டைக் கொண்டிருந்தன, அந்தஸ்து படி நிலைகள் கொண்டவையாக இருந்தன என்றும் மார்க்ஸ் எழுதிச் செல்கிறார். முதலாளியத்தை விட அதற்கு முந்திய சமூகங்களில் பொருளாதார அளவுகோல் கறாராக வேலை செய்வதில்லை என்பதை மார்க்ஸ் இங்கு உணர்ந்து எழுதுகிறார் என்று புரிந்துகொள்கிறோம்.
  
மார்க்ஸ் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தைவிட வர்க்கப் போராட்டம் என்ற விடயத்தில் அதிகக் கவனம் செலுத்துகிறார். ஜெர்மானிய இயங்கியலில் ஆழமான புலமை கொண்ட மார்க்ஸ், கருத்துக்களின் இயங்கியலிலிருந்து சமூக இயங்கியலுக்கு வந்து சேர்ந்தார். சமூக இயங்கியலில் எதிரெதிரான வர்க்கங்களின் முரண், போராட்டம் என்ற கோட்பாட்டைக் கொண்டே அவர் சிந்தித்தார். எனவே வர்க்கங்கள் என்ற கருத்தாக்கத்தைவிட வர்க்கங்களுக்கிடையிலான போராட்ட உறவுகளுக்கே அவர் முன்னுரிமை வழங்கினார். வர்க்க உறவுகள் என்ற அமைப்பியல் பண்பு வர்க்கங்களை நிர்ணயிக்கின்றன என்ற கோட்பாட்டுநிலை அவரில் தொழில்படுவதாகவும் பல அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர். முரண்பட்ட வர்க்க உறவுகள் என்று பார்க்கும்போது அங்கு பொருளாதாரச்சுரண்டல் மட்டுமே சம்பந்தப்படுகிறது எனக்கொள்ளுவது மிக எளிமைப்படுத்தப்பட்ட சித்திரம் ஆகும். முரண்பட்ட உறவுகளின் ஊடாக எல்லா வித அடக்குமுறைக்கூறுகளும்தான் தொழில்படும்.    

வர்க்கம் குறித்த லெனினின் வரையறை:

(புரட்சிக்குப் பிறகு) 1919ல் எழுதப்பட்ட, லெனினது மாபெரும் தொடக்கம் (Great Beginning) என்ற கட்டுரையில் வர்க்கம் என்றால் என்ன என்பதற்கான வரையறை உள்ளது. “வர்க்கங்கள் என்பவை வரலாற்றுவழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் அவை வகிக்கும் இடத்தாலும், உற்பத்திச்சாதனங்களுடன் அவற்றுக்குள்ள உறவாலும் (மிகப்பெரும்பாலும் இது சட்டத்தால் நிலைநிறுத்தப்பட்டு வரையறுக்கப் பட்டிருக்கிறது), உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச்செல்வத்தில் அவற்றின் செயலாட்சிக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களாலும், இந்தப் பங்கை அவை சுவாதீனமாக்கிக் கொள்ளும் முறையினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதிகளாகும் (வி.இ.லெனின், தேர்வுநூல்கள், தொகுதி 12, முன்னேற்றப் பதிப்பகம், 1982, 312-313). இது வர்க்கம் என்ற கருத்தாக்கம் குறித்த முழுமையான ஒரு வரையறையாகும். லெனின் இங்கு முன்னிலைப்படுத்தும் கூறுகளை வரிசைப்படுத்திக் கொள்வோம். வர்க்கம் என்பதை நிர்ணயிக்கும் கூறுகள் எவை? 

1. வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் (மக்கள் பகுதிகள்) வகிக்கும் இடம்
2. உற்பத்திச் சாதனங்களுடன் உள்ள உறவு - சட்டத்தால் நிலைநிறுத்தப்படுபவை
3. உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றின் பாத்திரம்
4. சமூகச்செல்வத்தில் அவை பெறும் பங்கின் பரிமாணங்கள்
5. அந்தப் பங்கை சுவாதீனமாக்கிக் கொள்ளும் முறை  
6. இவை அனைத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதிகள்

உற்பத்திச் சாதனங்களுடனான உறவு என்ற ஒற்றை அளவுகோலையே மார்க்சியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறுவோர் லெனினின் இந்த வரையறையை உற்றுக் கவனிக்க வேண்டும். முதல்வரியில் “வகிக்கும் இடம்என்று சொல்லப்படுவது பொதுவானதுதான். இருப்பினும் இந்த வரியில் “வரலாற்றுவழியில் நிர்ணயிக்கப்பட்டஎன்று சொல்லப்படுவதை உற்றுக் கவனித்தாக வேண்டும். சமூகப் பொருளுற்பத்தி அமைப்பும் அதில் மக்கள் கூட்டங்கள் வகிக்கும் இடமும் ஒவ்வொரு நாட்டிலும் அந்தத்த நாட்டின் பிரத்தியேக வரலாற்றுப் பண்புகளுக்கேற்ப அமைகின்றன என்பது குறிப்பான ஒரு விடயமாகும்.

இரண்டாவது வரியில், உற்பத்திச் சாதனங்களுடன் உள்ள உறவு என்பது மிகக் குறிப்பாகப் பொருளாதார உறவை எடுத்துச் சொல்லுகிறது. ஆயின் அந்த உறவுகள் சட்டத்தால் நிலைநிறுத்தப்படுகின்றன எனச் சொல்லப்படுவதைக் கவனிக்க வேண்டும். அடிப்படையான பொருளாதார உறவுகளும் மேற்கட்டுமானக்கூறுகளான அரசியலாலும் சட்டத்தாலும் நிலைநிறுத்தப்படுகின்றன எனச் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
மூன்றாவது வரி, உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரம் எனச் சொல்லுகிறது. உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பு, முதல்வரியில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, ஒவ்வொருநாட்டிலும் அந்தந்த நாட்டின் வரலாற்று வளர்ச்சிப்போக்கில் நிறுவப் படுகிறது என்றும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பு என்ற சொற்கள் இந்தியா போன்ற நாட்டில் சாதி அமைப்பை நினைவுக்குக் கொண்டுவருவதைத் தவிர்க்க முடியவில்லை. அம்பேத்கர் சாதி அமைப்பைப் பற்றிப் பேசும்போது, சமூகரீதியாக (அதாவது சாதிரீதியாக, பிறப்பு அடிப்படையில்) நிர்ணயிக்கப்பட்ட பொருளாதாரமே  (Social Economics) இந்த நாட்டில் நிலவி வந்திருக்கிறது என்பார். அம்பேத்கர் பெரும்பாலும் அவர் எழுத்துக்களில் சமூகஒழுங்கு (Social Order) என்ற சொற்களையே பயன்படுத்துவார். லெனினின் “சமூக ஒழுங்கமைப்புஎன்ற சொல்லாக்கம் இந்திய விஷயங்களைப் பேசுவதற்கு உதவலாம். உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பு என்ற சொற்களை சமூக வேலைப் பிரிவினை (Social Division of Labour) என்று கொண்டால், மீண்டும் அம்பேத்கர் சொல்லும் சமூக வேலையாட்களின் பிரிவினை (Social Division of Labourers), அதாவது சமூக ஒழுங்கமைப்பு இங்கு பிறப்பின் அடிப்படையில் நிர்ணயமாகிறது என்ற கருத்து கணக்கில் கொள்ளப்படவேண்டும்.  

நான்காவது வரியிலும் ஐந்தாவது வரியிலும், சமூகச் செல்வத்தில் குறிப்பிட்ட ஒரு வர்க்கம் பெறும் பங்கு, அதனை அவ்வர்க்கம் தன்னகப்படுத்தும் முறை ஆகியவை சொல்லப்படு கின்றன. மார்க்சியர்கள் உற்பத்திமுறையைப் பற்றி மட்டுமே பேசுவார்கள், சமூகச்செல்வம் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. சமூகச்செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதைப் பற்றியது சமூகநீதி என்ற கோட்பாடு என்று அவர்கள் கூறுவார்கள். அது உண்மையல்ல என்பதை இந்த வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. சமூகச்செல்வம் என்ற சொல்லே கவனத்திற்குரியது. சமூகச் செல்வம் பகிர்ந்தளிக்கப்படுவதில் சாதி அமைப்பு சில நிரந்தர ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தது என்பதில்தான் இந்தச் சமூகத்தின் பிரத்தியேகப்பண்புகள் அடையாளப் படுகின்றன. சமூகச் செல்வம் மறுபகிர்வு செய்யப்பட வேண்டும் என்ற செய்தியை உள்ளடக்கியதாகவே லெனினின் வர்க்கம் குறித்த வரையறை அமைந்திருப்பதைக் காண்கிறோம். 

மார்க்சின் ஆசிய உற்பத்திமுறை என்ற கருத்தாக்கம்

ஐரோப்பாவை முன்வைத்துக்கூட, முதலாளியத்திற்கு முந்திய சமூகங்களில் கறாரான பொருளாதார வர்க்கங்கள் பற்றிப் பேசமுடியாது என  மார்க்ஸ் குறிப்பிட்டதை மேலே குறிப் பிட்டோம். இப்போது நாம் இந்தியாவிற்கு வருவோம். இந்தியாவைப் பொறுத்தமட்டில், இங்கிருந்த சமூக அமைப்பு மேலும் சிக்கலானதாக இருந்தது என மார்க்ஸ் உணர்ந்து எழுதியுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், மார்க்ஸ் இரண்டுவித மான சிக்கல்களை உணர்ந்து சொல்லியிருக்கிறார். ஒன்று, இந்தியச் சமூக வரலாறு அடிமை முறை, நில உடமை முறை என்று ஐரோப்பா குறித்து சொல்லியிருப்பதைப்போல நேர் கோட்டு வடிவில் அமையவில்லை. 18ஆம் நூற்றாண்டு வரை இங்கிருந்த சமூக அமைப்பை மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை என்ற பெயரால் அடையாளப்படுத்தியுள்ளார். புராதன இனக்குழு அமைப்பு, அடிமை முறை, நில உடமை முறை ஆகிய மூன்றுக்கும் பதிலாக, அவை மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றாகச் செம்மிப்போய்க் கிடந்த ஒரு சமூக அமைப்பை மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை என்ற சொல்லாக்கத்தால் குறித்துள்ளார். இது முதல் சிக்கல். (ஆசிய உற்பத்திமுறை குறித்து எனது நூலான “தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல்நூலைப் பார்க்கவும். என்சிபிஎச், 2012 வெளியீடு). இரண்டாவதாக, 17-18ம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்குள் நுழைந்த காலனியாதிக்கம் தூய முதலாளியம் அல்ல. அது நவீன முதலாளியத்தின் அடிமைமுறை. எனவே, அடிமைத்தனம் கொண்ட காலனிய முதலாளியம் இங்கிருந்த மரபுரீதியான ஆசிய உற்பத்திமுறை என்ற வகையிலான சமூகஅமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை விட, அதனைச் சிதைத்தது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இது இந்தியா குறித்த, இன்னும் விரிந்த அர்த்தத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா என்ற மூன்று தென்கண்டங்களின் வரலாறு குறித்த இரண்டாவது சிக்கல்.

இனி இந்த இரண்டு சிக்கல்களையும் சிறிது விரிவாகக் காண்போம். ஆசிய உற்பத்தி முறை என்றால் என்ன? அதன் பண்புகள் என்ன? அவை குறித்து மார்க்ஸ் என்ன கூறுகிறார்?

18ஆம் நூற்றாண்டுவரை இங்கு தனிஉடமை வேர் கொள்ளவில்லை என்கிறார் மார்க்ஸ். புராதன இனக்குழு வரலாறு தொட்டு இங்கு குழுமச் சமூக உறவுகளே நிலவின என்கிறார் மார்க்ஸ். அப்படியானால் இங்கு வர்க்கச் சமூகமே தோன்றவில்லை என்று மார்க்ஸ் சொல்லுகிறாரா? அப்படியல்ல. இனக்குழுக்கள் இங்கு அடியோடு அழியாத நிலையில், அடிமைச்சமூக உறவுகளும், நிலஉடமை உறவுகளும் அவற்றினுள் ஊடுபாய்ந்து வித்தியாசமான ஒரு சமூக அமைப்பை உண்டுபண்ணியுள்ளன என்று மார்க்ஸ் சொல்லுகிறார். இனக்குழுக்களே படிநிலை வரிசையில் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உகந்தவகையில் இங்கு அடுக்கப்பட்டன என்று மார்க்ஸ் சொல்லுகிறார் எனலாம்.

தனிமனிதனை விட இனக்குழு முக்கியப்படும் ஓர் ஏற்பாடு இங்கு தொழில்பட்டது என்பது மார்க்சின் விளக்கம். 1857-59 பொருளாதாரக் கையெழுத்துப் பிரதிகள் என்ற பகுதியில் மார்க்ஸ் இதனைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “இங்கு முழுமை என்பது அதன் உட்பகுதிகளால் உருவான ஒன்றல்ல - முழுமையே இங்குச் சுதந்திரமான அமைப்பாகச் செயல் படுகிறது.. ஒரு குழுமத்தில் இடம்பெறும் உறுப்பினர்களின் உள்ளீடான ஒற்றுமை பிறப்பு (அல்லது பரம்பரை), மொழி, பொதுவான கடந்தகாலம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் வழி வடிவம் பெறுகிறது. (their intrinsic unity is embodied in descent, language, common past and history etc)” (Marx Engels, Pre-Capitalist Economic Formations, Progress, Moscow, 1979, P.94). வர்க்கம் குறித்த விவாதங்களில் தொடங்கிய நாம் அடையாள அரசியலுக்கு வந்து சேரும் இடம் இதுவே. 

ஆசிய உற்பத்தி முறை அல்லது ஆசிய கம்யூன்கள் என்பவை “உள்ளீடான ஒரு திடத்தன்மையுடன் (Internal Solidity)” நிலவி வந்திருக்கின்றன என்று மார்க்ஸ் மூலதனம் நூலின் மூன்றாவது பகுதியில் குறிப்பிடுகிறார். எத்தனை ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், அடிப்படையில் எந்தவித மாற்றமுமில்லாத “தயாராக வரைந்து வைக்கப்பட்டுள்ள வரைபடத் திட்டமாகஇது தொழில்பட்டு வந்திருக்கிறது என்கிறார் மார்க்ஸ் (மூலதனம், முதல் பாகம், NCBH, 1998, 484). ஆசியக் குழுமச் சமூகத்தில் தனிமனிதனைவிட அக்குழுமம் முதன்மையானது. குழுமத்தின் முன்னுரிமை அரசனின் ஆளுகை உரிமையாகவோ, தெய்வமாகவோ (a higher Unity that is satisfying and comforting) குறிக்கப்படலாம் (Marx's Grundrisse, p.485). “இவ்வகைச் சமுதாயங்களில், எந்தவொரு தனிநபரும் தனது குலம் அல்லது சமுதாயத்தின் தொப்புள்கொடியிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதில்லை (ஒரு தேனீயைப்போல)” (மூலதனம், முதல்பாகம்,453). அம்பேத்கர் சொல்லும் அகமண முறையைக் கணக்கில் கொண்டால் இது வெறும் புராதன உறவு அல்ல, ஒவ்வொரு திருமணத்தின்போதும் தினசரி புதுப்பித்துக் கொள்ளப்படும் உறவு. திருமண உறவுகள் என்பவை பொருள்வகை உறவுகள் என்று ஏங்கெல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு நூலின் முன்னுரையில் குறிப்பிடுவார்.       
           
சனநாயகப் புரட்சி என்ற மார்க்சியக் கருத்தாக்கம்

அடையாள அரசியலை மார்க்சியர்கள் எவ்வாறு எதிர்கொள்வது? என்ற கேள்விக்கு அது சனநாயகப்புரட்சியின் பிரச்சினை என்றொரு பதில் மார்க்சியரிடையில் நிலவுகிறது. இது நியாயமான பதிலாகவே தென்படுகிறது. ஆயின், சனநாயகப்புரட்சியின் பிரச்சினைகளைச் சோசலிசப்புரட்சியுடன் ஒப்பிட்டு அவற்றை இரண்டாந்தரமான பிரச்சினைகளாக ஓர் அலட்சியப்பார்வையுடன் அணுகும் போக்கு நம்மிடம் உள்ளது. நாம் ஒரு வெகுசன இயக்கமாக மாறுவதற்குத் தடையாக இந்த மனோபாவம் செயல்படுகிறது எனலாம்.

லெனின், சனநாயகப்புரட்சியின் பிரச்சினைகள் உடனடியானவை, நேரடியானவை (Immediate), சனநாயகப் புரட்சியின் பிரச்சினைகளை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து (Mediated) அமைவது சோசலிசப்புரட்சியின் வளர்ச்சிப்போக்கு என்று கூறுகிறார். “சனநாயகத்திற்கான போராட்டம் சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பாட்டாளி வர்க்கத்தைத் திசைதிருப்பிவிடுமென்றோ, அதனைப் பின்னுக்குத் தள்ளிவிடுமென்றோ, மூடி மறைத்துவிடுமென்றோ (overshadow) கருதுவது ஒரு தீவிரவாதத்  தவறாகும் (radical mistake). மாறாக சனநாயத்திற்கான போராட்டம் முழுமையானதாக, தொடர்ச்சியானதாக, புரட்சிகரமானதாக (all-round, consistent, revolutionary) அமைய வேண்டும்என்று லெனின் சோசலிசப்புரட்சியும் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையும் என்ற கட்டுரையில் (1916) குறிப்பிடுகிறார்.

அதே ஆண்டில் எழுதிய மார்க்சியம் பற்றிய கேலிச்சித்திரமும் ஏகாதிபத்தியப் பொருளாதார வாதமும் என்ற கட்டுரையில் (1916) லெனின், சனநாயகப்புரட்சியை அலட்சியப் படுத்துபவர்களுக்கு மார்க்சியம் பற்றிய அறிவே இல்லை (No Knowledge of Marxism)  என்று கோபப்படுகிறார். சனநாயகம் வர்க்க ஒடுக்குமுறையை ஒழிக்காது என்பதை மார்க்சியர்கள் நன்கு அறிவார்கள். (பின் ஏன் சனநாயகத்திற்காகப் போராடவேண்டும்?) “சனநாயகம் வர்க்க மோதலை அதிகபட்சம் நேரடியானதாக, விரிவானதாக, வெளிப்படையானதாக, தெளிவானதாக (more direct, wider, more open and pronounced)  மாற்றுகிறது. அதுதான் நமக்குத் தேவை. அவை வெறுமனே சனநாயக உரிமைகள் குறித்த பிரச்சினை அல்ல, முதலாளிய அமைப்பே அடிப்படையான பிரச்சினை என்று மக்கள் புரிந்துகொள்ளுவார்கள்என்று லெனின் எழுதுகிறார்.
           
லெனின் மேலும் சொல்லுகிறார்: சனநாயகப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது முதலாளிகளின் கைகளில், எதிர்ப்புரட்சி சக்திகளின் கைகளில் அவற்றை ஒப்படைப்பதற்குச் சமமாகும் என்கிறார். சனநாயகப் பிரச்சினைகளை கம்யூனிஸ்டுகள் (முதலாளிய மற்றும் சிறுமுதலாளியக் கட்சிகளைப் போல) சீர்திருத்த வடிவில் முன்வைக்காமல் அவற்றை இன்னும் தீவிரமான புரட்சிகரமான வடிவில் முன்வைப்பதன் மூலமாகவே அவற்றைச் சரியாகக் கையாளமுடியும் என்று லெனின் கூறுகிறார். சனநாயகப் பிரச்சினைகளை பிற கட்சிகளை விட தீவிர புரட்சிகர வடிவில் (radically founded, in a revolutionary manner) நமக்கு முன்வைக்கத் தெரியவில்லை எனில் நாம் வெளிறிப்போன புரட்சிக்காரர்கள் (Poor Revolutionaries)  என்பது பொருளாகும் என்கிறார்.
              
சனநாயகப்புரட்சியின் பிரச்சினைகளை “புரட்சிகர வடிவில்முன்வைப்பது என்பது லெனின் முன்வைக்கும் திட்டம். நம்மைத்தவிர மற்ற கட்சிகளை முதலாளிக்கட்சிகள், இன்னும் பல, சிறுமுதலாளியக் கட்சிகள் என்று நாம் வரையறை செய்கிறோம். அவை சனநாயகப் பிரச்சினைகளை அவரவர் வர்க்க நலனுக்கு ஏற்ப, குறுகிய வடிவில், தேர்தல் அரசியலுக்கு ஏற்ப, தாராளவாத சீர்திருத்த வடிவில் முன்வைக்கின்றன என்பதெல்லாம் உண்மை. எனவேதான், சனநாயகப் பிரச்சினைகளை கம்யூனிஸ்ட்கள் புரட்சிகர வடிவில் முன்வைக்க வேண்டும் என்று லெனின் கூறுகிறார். ஆயின் நமது சூழல்களில், பலவேளைகளில் முதலாளிய சிறு முதலாளியக் கட்சிகள் சனநாயகப் பிரச்சினைகளை முன்வைக்க, நாம் தாமதமாக அப்பிரச்சினைகளுக்கு வந்து சேர்வதுபோல் உள்ளது. ஆட்சியிலிருக்கும் கட்சிகளைப் பெருமுதலாளியக் கட்சிகள் எனக் கொண்டால், சனநாயகப் பிரச்சினைகளைக் கையிலெடுப்போரை சிறுமுதலாளியக் கட்சிகள் எனக் கொண்டால், பலவேளைகளில் அவை இரண்டுக்குமிடையில், தாமதமாக வந்துநின்று, சமரசம் பேசுவோர்களாக, சமூக நல்லிணக்கம் பேசுவோர்களாக நாம் ஆகிவிடுகிறோம். இது நிச்சயமாக லெனின் சொல்லிய “புரட்சிகர வடிவம்அல்ல. எனவே சனநாயகப் பிரச்சினைகளை சிறுமுதலாளியக் கட்சிகள் கையிலெடுக்க முடியாத வகையில் அவற்றை முந்திச் சென்று கைப்பற்றிக் கையாளுவோராக நாம் பரிணமிக்கவேண்டும். அவற்றைப் புரட்சிகரமான வடிவில் வரையறுக்கத் தெரிந்தவர்களாகவும் முன்வைக்கத் தெரிந்தோராகவும் கையாளுவோராகவும் நாம் உருவாக வேண்டும். சனநாயகப் புரட்சி என்ற கருத்தாக்கம் மார்க்சிய சிந்தனையில் வரையறுக்கப் பட்டிருப்பதே, அந்தந்த நாடுகளின் பிரத்தியட்சமான சமூக அமைப்புகளில் எழத்தக்க சனநாயகப் பிரச்சினைகளை நாம் முன்னுணர வேண்டும் என்பதற்காகவே. சனநாயகப் பிரச்சினைகளை நாம் முன்னுணர்ந்து கையாளும் முறைமையைக் கொண்டு முதலாளிய மற்றும் சிறுமுதலாளியக் கட்சிகளின் சனநாயக விரோத மற்றும் குறுங்குழும அரசியல்களின் சாயம் வெளுக்க வேண்டும்.

இந்தியா போன்ற ஒரு பழைய சமூகத்தில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர அசைவுகளின்றித் தேங்கிக்கிடந்த சமூகத்தில், சனநாயகப்புரட்சியின் செயல்பாடுகள் மிக வன்முறையாக நிகழ்த்தப்படவேண்டி வரலாம். எடுத்துக்காட்டாக, சாதி ஒழிப்பு என்ற இலக்கு சோசலிசம் என்ற இலக்கைவிட கடுமையானதாகக்கூட அமையலாம்.  இதற்குப்பொருள் வன்முறையை நாம் தூண்டிவிடப் போகிறோம் என்பதல்ல, இங்குள்ள சாதி மேலாக்கம் சாதி ஒழிப்பு என்ற இலக்கை மிகத் தீவிரமாக எதிர்த்தே தீரும். எனில் கம்யூனிஸ்டுகள் அதனை எதிர்கொண்டே தீரவேண்டும். இந்திய சனநாயகப் புரட்சி சாதாரணமானதாக இருக்கப் போவதில்லை.

முடிவுரை
           
உலகமயமாக்கச் சூழல்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள் உள்ளிட்ட கிராமப்புறப் பாட்டாளிகள், தேசிய இனங்கள், சமயச் சிறுபான்மையினர், கடற்கரை மற்றும் மலைவாழ் பழங்குடிகள், பெண்கள் எனப் பலவகைப்பட்ட மானுடக்கூட்டங்களின் சனநாயக உரிமைகள் மிகக் கொடூரமாகப் பறிக்கப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் இம்மக்களின் வாழ்வுரிமைகளுக்கான பிரச்சினைகளைக் முந்திச் சென்று கையிலெடுக்கத் தயங்கினால், அவர்கள் தன்னிச்சையான, தம்மளவிலான இயக்கங்களைக் கட்டமைப்பார்கள். போராட்டங்களை வடிவமைப்பார்கள். இம்மாதிரியான நிலைமைகளை இன்று இந்தியாவில், தமிழ்ச்சூழல்களில் முன்னெப்போதுமில்லாத அளவில் மிக அதிகமாகச் சந்திக்கிறோம். சனநாயகப்புரட்சி பற்றி நம்மிடையிலான கூடுதலான வெளிப்படையான விவாதங்களும் நடைமுறை அரசியலுமே இச்சூழல்களில் நமக்குத் தேவைப்படுகின்றன.             

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் முகாமில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

புதுவிசை  இதழ் 38,  மே 2013