Tuesday, April 21, 2020

மார்க்சியம் : வர்க்கமும் அடையாளமும் - ந. முத்துமோகன்

மூன்று அரசியல்கள்

வீனகால ஐரோப்பா இரண்டு விதமான அரசியல்களை நமக்குப் பரிச்சயப்படுத்தியது. முதலாவது, பூர்ஷ்வா (முதலாளிய) தாராளவாத அரசியல். தேசிய அரசு, அரசியல் சட்டம், அரசியல் கட்சிகள், பாராளுமன்றம், தேர்தல், நீதிமன்றம், காவல்துறை ஆகியவற்றை நிறுவனக்கூறுகளாகக் கொண்ட அரசியல் இது. தனிச்சொத்துரிமை, தனிமனிதன், மனித உரிமைகள் ஆகியவை இந்த வகையான அரசியல் கோட்பாட்டில் மையமான இடம் வகிக்கின்றன. இரண்டாவது, மார்க்சிய வர்க்க அரசியல். சமூகம் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது என்பது மார்க்சிய அரசியலின் கோட்பாடு. சுரண்டும் வர்க்கம் ஆளும் வர்க்கமாகவும், சுரண்டப்படும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவும் உள்ளன. எனவே வர்க்க முரண்பாடுகள் அரசியலாக வெளிப்படுகின்றன. தொழிற்சங்கங்கள், பொருளாதாரப் போராட்டங்கள், அவற்றோடு அரசியல் போராட்டங்கள், உழைக்கும் வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஆகியவை வர்க்க அரசியலின் கூறுகள். இவை இரண்டிலும் நேரடியாகச் சேராதது அடையாள அரசியல். தேசம், சாதி, மதம், மொழி, பிரதேசம், பண்பாடு, பாலினம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை மையமாகக் கொண்டு மக்களைத் திரட்டி நடத்தும் அரசியலை அடையாள அரசியல் என்கிறோம். இந்தியா போன்ற நாடுகளில், இன்னும் விரிவாக, மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடையாள அரசியல் கடந்த இரு நூற்றாண்டுகளில் வலுவான ஒன்றாக இடம்பெறுகிறது.

அடையாள அரசியலின் பண்புகள்

அடையாள அரசியல் என்பது பின்னை நவீனத்துவச் சூழலில் உருவான ஒருவகை அரசியல் என்று சில மேற்கத்திய சிந்தனையாளர்கள் எழுதி வருகின்றனர். மேலைநாடுகளின் நவீன அரசியல் லட்சியங்கள் பொய்த்துப்போன பின்னர், உலக அளவில் சோசலிசத்திலும் நெருக்கடிகள் எற்பட்ட பின்னர் அடையாள அரசியல் முன்னுக்கு வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். சமீபகாலங்களில் அடையாள அரசியல் தீவிரப்பட்டு வருவதற்கும் அது கோட்பாட்டு ஆதரவைப் பெற்றமைக்கும் மேலே குறிப்பிட்ட சூழல்கள் காரணமாக இருக்கலாம். ஆயின் ஆசிய ஆப்பிரிக்க லத்தின் அமெரிக்க நாடுகளில், காலனியச்சூழல்களில், 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தொடர்ந்து ஓர் அரசியல் நடந்து வந்திருக்கிறது. முதலாளியத்திற்கு முந்திய பழங்குடிச் சமூகங்களின் சமூகப்பிரிவுகளையும் சமூகத்திரட்சிமுறைகளையும் கொண்டு இவ்வகை அரசியல் தன்னை வடிவமைத்து வந்துள்ளது. இந்தியச் சூழல்களில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதற்கொண்டு, இந்துக்கள், இஸ்லாமியர், சீக்கியர் போன்ற மதத்திரட்சிகளும், தமிழ்ச்சூழல்களில், வைகுண்டரின் அய்யாவழி இயக்கம், ஆறுமுக நாவலரின் சைவ மீட்டுருவாக்கம், கால்ட் வெல்லின் திராவிடம் பற்றிய கருத்தாக்கத்திற்குப் பிறகான அச்சு நூல்கள் பதிப்பு இயக்கம், அயோத்திதாச பண்டிதரின் பூர்வபௌத்தம், நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் இயக்கம், பின்னர்  பெரியாரின் நுழைவு, தனித்தமிழ், தமிழிசை இயக்கங்கள், திராவிட அரசியல் கட்சிகள், இன்று பழங்குடிகள் என நீண்ட நெடிய ஓர் அரசியலைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் கண்டு வந்திருக்கிறோம். இவை காலனிய ஆட்சியின் பிரித்தாளும் உத்திகளால் உரு வாக்கப்பட்டவை என்ற ஒரு கருத்து உள்ளது. ஆட்சியாளர்கள் பிரித்தாண்டனர் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. அவர்கள் பிரித்தாள முடியாதபடி நாம் ஒன்றுபட்டு வாழ்ந்துகொண்டிருந்தோம் என்பதும் வரலாற்று ரீதியாகத் தவறான கற்பிதம். இந்துத்துவச் சிந்தனையாளர்கள் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னால், இஸ்லாம் இந்தியாவில் பரவுவதற்கு முன்னர் இந்தியா ஒரு பொற்கால வாழ்வை வாழ்ந்து வந்ததாக எழுதுவதுண்டு. இது போன்ற ஒற்றைப்படையான மதிப் பீடுகளைக் கடந்து இந்திய சமூகத்தை நாம் அணுகிச் செல்லுவதே சரியாக இருக்கும். எனவே ஆட்சியாளர்கள் பிரித்தாளுவதற்கான சமூக அடிப்படைகள் நமது சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த விவாதம், அடையாள இயக்கங்களின் வரலாற்றுரீதியான சமூக அடிப்படைகளை நோக்கி நம்மை இட்டுச் செல்ல வேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் பழஞ்சமூக அமைப்புகளிலிருந்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களும் உட்காலனியக் கூறுகளும் அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப் பட்டன என்றே இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

அடையாள இயக்கங்கள் பலபடித்தானவை என்பது தெளிவு. அவற்றைக் குறைந்தபட்சம் மூன்று வகைப்பட்டவையாகப் பிரித்துக்காட்டலாம்: (1) பழைய சமூகத்தின் நில உடமை மற்றும் மேட்டிமைச்சாதிகளின் மரபுரீதியான அனுகூலங்களைத் தக்கவைப்பதற்காக அடையாள மீட்டுருவாக்கங்களில் ஈடுபட்ட இயக்கங்கள் உண்டு. (2) மேற்கத்திய மதங்கள், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி, சனநாயக உரிமைகள் ஆகியவை பற்றிய அறிமுகத்தால் முன்னெடுக்கப்பட்ட இயக்கங்கள் உண்டு. (3) காலனிய ஆட்சிக்காலத்தில் சமூக அடித்தளங்களில் ஏற்பட்ட அசைவுகளால் உருவான இயக்கங்கள் உண்டு. எனவே எல்லா அடையாள இயக்கங்களையும் ஒரேவித அளவுகோல்களால் மதிப்பிட முடியாது. அடித் தளங்களில் வேர்கொண்ட இயக்கங்கள் குறித்த தனித்த கவனம் நமக்குத் தேவைப்படும். மரபார்ந்த சமூகத்தில் வழக்கிலிருந்த சமூக அநீதிகளுக்கு எதிரான இயக்கங்கள் குறித்த பிரத்தியேக அக்கறை நமக்குத் தேவைப்படுகிறது.

19-20ஆம் நூற்றாண்டுகளின் அடையாள இயக்கங்களில், குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அவை சமயம், இனம், மொழி, சாதி என எந்த வடிவில் தோன்றியிருந்த போதும், அவற்றில் இந்தியச் சமூகம் குறித்த பிரச்சினை (Social Question) ஏராளமாக விவாதிக்கப்பட்டுள்ளது. சமூக அமைப்பு குறித்த ஓர்மை என்று இதனைக் குறிப்பிடலாம். கிறித்தவ மிஷனரிகள் தமது மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவில் சாதி, இந்து மதத்தில் சாதி என்ற பிரச்சினையைப் பெரிதுபடுத்தினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே சாதி அமைப்பு, இந்தியச் சமூக அமைப்பு, பிராமணியம் மற்றும் இந்து மதத்தோடு அதற்குள்ள உறவு போன்ற விஷயங்கள் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன எனலாம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் எந்த ஒரு இயக்கமும் எந்த ஒரு சிந்தனையாளரும் சாதி குறித்த, இந்தியச் சமூக அமைப்பு குறித்த நேரடியான அல்லது மறைமுகமான விவாதத்தைத் தவிர்த்துச் செல்ல முடியவில்லை என்பது குறிப்பாகச் சொல்லப்படவேண்டிய விஷயமாகும்.

அடையாள இயக்கங்கள் ஒவ்வொன்றும் தம் இருப்பை நியாயப்படுத்த தத்தமது வரலாற்றைக் கட்டமைக்கின்றன. தமது வரலாற்றை மட்டுமின்றி, கடந்தகாலத்திய தமது மெய்யியலை, சமயவேர்களைக் கண்டடைகின்றன. வேதங்கள், உபநிடதங்கள், சங்க இலக்கியம், பூர்வ பௌத்தம், வாய்மொழி வரலாறுகள் எனப் பலவகையான ஆதாரங்களைக் கொண்டு தம்மைக் கட்டமைத்துக்கொண்ட அடையாள இயக்கங்களை நாம் அறிவோம். (வர்க்கங்கள் இப்படித் தம்மை வரலாற்றுரீதியாக, மெய்யியல்ரீதியாக கட்ட மைத்துக் கொள்கின்றனவா?) அடையாள இயக்கங்கள் பண்பாட்டு ஞாபகத்திலிருந்து (Cultural Memory) தகவல்களைப் பயன்படுத்துகின்றன. மானுடக்கூட்டங்களின் ஞாபக அடுக்குகளில் வரலாற்றுக் காயங்கள், பண்பாட்டு இழிநிலைகள் ஆகியவை படிந்திருக்கின்றன. பண்பாட்டுப் பெருமிதங்கள், வரலாற்றில் பெற்ற வெற்றிகள் ஆகியவை இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. அடக்கு முறைகளும் அவற்றுக்கு எதிரான போராட்ட அனுபவங்களும் இருக்க வாய்ப்புண்டு. அடையாள இயக்கங்களின் வரலாற்றுக் கட்டமைப்புகளில், இவையெல்லாம் முழுக்க முழுக்க உண்மையாக, புறவயமாக எடுத்துப் பயன்படுத்தப்பட்டன என்று சொல்வதற்கில்லை. சமகால அரசியல் தேவைகளுக்கு ஏற்ப தெரிவுசெய்யப்பட்ட ஞாபகத்தகவல்கள் அடையாள அரசியலாளர்களால் எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடையாள அரசியலாளரின் வரலாற்றுக் கட்டமைப்பு என்பது ஒரு சிக்கலான நிகழ்வுப்போக்கு. இந்நிகழ்வுக்கு நீண்டகால தொடர்விளைவுகள் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. இருப்பியல்ரீதியான உண்மைத் தன்மையையும் வரலாற்றுத்தன்மையையும் (Ontologisation) அவை ஈட்ட முயல்கின்றன என்பது இதன் பொருள். மெய்யியல் அல்லது சமய வேர்களைக் கண்டடையும்போது, அவை உலகு கடந்த மெய்மைத்தன்மையை (Metaphysical, Divine, Revelatory) கட்டியமைக்க முயலுகின்றன என்று பொருள். இது குறிப்பிட்ட ஒரு குழுவின் அடையாளத்தை நிரந்தரப் படுத்தும் பண்புக்கு இட்டுச்செல்கிறது. அடையாள அரசியலே நிரந்தரமான ஒன்று என்ற தருக்கவியலுக்கே இது இட்டுச் சென்றுவிடலாம். அடையாளங்கள், குறிப்பாக அவை இழிவான அடையாளங்களாக இருக்கும்போது, அவற்றை அழிப்பதற்கு இவ்வகை வரலாற்றுக் கட்டுமானங்கள் உதவுமா என்ற கேள்வி எழுகிறது. மேட்டுக்குடிகள் மிகப் பெருமிதமான வரலாற்றுப் புனைவுகளைக் கட்டி எழுப்பும்போது, அவை தத்தமது அடையாளங்களை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ளவே முயலுகின்றன என்றும் பொருளாகிறது.  
           
வரலாறு, மெய்யியல், சமயம் போன்ற அடிப்படைகளைத் தேடி அடையும்போது, ஒவ்வொரு அடையாளமும் தன்னை மறுவரையறை செய்து கொள்ளுகிறது என்பது உண்மை. அதாவது, அடையாளம் தன்னை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைத்துக்கொள்ளாமல், தனது அடையாளம் எது? என்ற தொடர்ந்த தேடலுக்குள் ஈடுபடுத்திக் கொள்கிறது என்று பொருள். திராவிடன், தமிழன், சங்கத்தமிழன், சைவத் தமிழன், பௌத்தத் தமிழன் என்று அடுத்தடுத்த பல வரையறைகளின் ஊடாக (Fluid Signifier) தமிழ் அடையாள அரசியல் நகர்ந்ததை நாம் அறிவோம். இப்படிச் சொல்லும் போது, ஒவ்வொரு அடையாளமும் தன்னை இதுதான் என்று அறுதியிட்டுக் கூறி முடித்துவிடாமல், தன்னைப் பற்றிய தேடலில் ஈடுபட்டு வருகிறது என்பதையும் புரிந்துகொள்கிறோம். அடையாள உருவாக்கத்தின்போது இன்னும் வரையறுக்கப்பட்ட வடிவில் உறுதிப்படாத (திரவ நிலையிலுள்ள) ஓர் அடையாளம் தன்னை விறைப்பாக (திட நிலையில்) ஆக்கிக் கொள்கிறது என்றும் சொல்லலாம். விறைப்பான அடையாளம் எல்லா வேளைகளிலும் சனநாயகபூர்வமானது என்று கூற முடியாது.       

அடையாளங்கள் பொதுவாக ஒற்றை அளவுகோலைக் கொண்டு தம்மை வரையறுப்பதில்லை. (வர்க்கங்கள் தம்மைப் பொருளாதாரரீதியாக ஒற்றைப்படையாக வரையறுத்துக் கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றன.) அரசியல், பண்பாடு, வரலாறு, சமயம், மெய்யியல் எனப் பலவகையான  அச்சுக்களில் அடையாளங்கள் தம்மை வரையறுத்துக் கொள்கின்றன. அல்தூசரின் மிகை நிர்ணயம் (Over Determination) என்ற கருத்தாக்கம் இங்கு நினைவுக்கு வருகிறது. பலவகையான சமூகப் பண்பாட்டுக் காரணிகள் ஒரு நிகழ்வைக் கூட்டாகவும் சிக்கலான முறையிலும் நிர்ணயம் செய்வதை அல்த்தூசர் மிகை நிர்ணயம் அல்லது குவி நிர்ணயம் என்பார். பலவகையான அச்சுக்களில், பல விதமான அளவைகளின் அடிப்படையில் அடையாள இயக் கங்கள் தம்மை வரையறுத்துக்கொள்வதால், வெகுமக்கள் அரசியலில் அவை ஈடுபடுவது எளிதாக்கப்படுகிறது. ஒற்றை அளவைகளைக் கொண்ட இயக்கங்கள் வெகுசனப்பரப்பை முழுவதும் தழுவிநிற்கமுடியாமல் தேங்கிப் போவதுண்டு.
 
அடையாள இயக்கங்கள் கடந்தகாலத்தில் தமது வேர்களைத் தேடுவதால், அவை கடந்த காலத்தை நோக்கியவை, அவை எதிர்காலப்பார்வை அற்றவை என்று சொல்லிவிடமுடியாது. சமூக மாற்றத்தை விரும்பாத மேட்டுக்குடிகள் தமது கடந்தகாலத்தை அதிகம் சிலாகிப்பவர்களாகவும், சமூகமாற்றம் கோரும் அடித்தள இயக்கங்கள் எதிர்காலம் நோக்கியனவாகவும் இருப்பது இயல்பு. அடையாள இயக்கங்கள் கால ஓட்டத்தில் முன்னும் பின்னுமாக நகருகின்றன. அவை மீட்டுருவாக்கம், சமூகமாற்றம் என்ற இரட்டைநிலையைக் கொண்டவையாக உள்ளன. இருப்பினும், நவீனமயமாக்கம் அடையாள இயக்கங்களின் முனைப்பான ஒரு வேலைத்திட்டமாகும். மரபும் நவீனமயமாக்கமும் என்ற இரட்டை நிலையோடு நகரும்போது, அவை ஒரு மாற்றுப்பண்பைக் கொண்ட நவீனமயமாக்கத்தைச் (Alternative Modernity) சென்றடைகின்றன. ஜப்பான், கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகள் தமது பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்கொண்டு நவீனமயமாகியிருப்பதை இங்கு நினைவுக்குக் கொண்டுவருவோம். சீன சோசலிசம்கூட பண்பாட்டு அடையாளத் தன்னுணர்வுடன் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுவார்கள்.

அடையாள அரசியல் பூர்ஷ்வா தாராளவாத அரசியலைப்போல தனிமனிதரை மையப்படுத்துவது கிடையாது. அது பாராளுமன்ற சனநாயக அரசியலின் முறைமையாகிய பிரதிநிதித்துவ அரசியலைப் பின்பற்றுவதும் கிடையாது. அடிப்படையில் அவை தமது அடையாளம் சார்ந்த மக்கள் திரட்சியையும் அவர்களின் நேரடிப் பங்கேற்பையும் கொண்டமைகின்றன.  இந்தியச்சூழல்களில் எந்த ஓர் அடையாளமும் அறுதிப் பெரும்பான்மை கொண்டதாக இல்லாததால், அடையாள இயக்கங்கள் பாராளுமன்ற அரசியல் அனுமதிக்காத போராட்ட முறைகளையும் பின்பற்றுகின்றன. தமது கோரிக்கைகளின் வலுவைப் பெருக்கிக் காட்டுவதற்கு அவை வன்முறையான வழிமுறைகளையும் கையாளுகின்றன. அடித்தள மக்களின் அடையாள இயக்கங்கள் பெரும்பாலும் இடதுசாரி இயக்கங்களின் போராட்ட முறைகளைப் பின்பற்றுகின்றன.
           
இன்று என்ன நடக்கிறது?

அரசியல் பொதுவெளியில் அடையாளங்கள் அதிக இடத்தை ஆக்கிரமித்து வருவதால், அடையாள அரசியலை உள்வாங்க முதலாளிய சக்திகள் முயற்சிக்கின்றன. சோசலிச சக்திகளும் (வர்க்க சக்திகளும்) முயலுகின்றன.

முதலாளிய சக்திகள், அடையாள அரசியலின் சிக்கல்களுக்குத் தாங்கள் பொறுப்பில்லை, பழைய இந்திய சமூக அமைப்பு, இந்துமதம் போன்றவை பொறுப்பாக இருக்கலாம், ஆயின் தாராளவாத முதலாளிய சனநாயகத்தால்தான் அடையாள அரசியலின் முரண்களுக்குத் தீர்வுகளை வழங்க முடியும் என்று கூறிவருகின்றன. எனவே அடையாள அரசியல் சக்திகள் முதலாளிய எதிர்ப்பிலோ, உலகமயமாக்க எதிர்ப்பிலோ பங்கேற்கவேண்டியதில்லை, உண்மையில் முதலாளிய சனநாயகமும் உலகமயமாக்கமும் அடையாள அரசியல் சக்திகளுக்கு அனுசரணையாகத்தான் உள்ளன என்று அவை கூறிவருகின்றன. இதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய அடை யாள அரசியல் சக்திகள் உண்டு என்பது கவனிக்கத்தக்கது.

சோசலிச சக்திகளும் அடையாள அரசியலை கையாள முயற்சிக்கின்றன. இந்திய மண்ணில் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக வர்க்க அரசியலை நடத்திவரும் இடதுசாரிகள் அடையாள அரசியலோடு உரையாடல் நடத்த முன்வந்துள்ளனர். இதற்கு முன்பும் இந்த உரையாடல்கள் பல முரண்பட்ட சூழல்களில் நடக்கத்தான் செய்துள்ளன. வங்காளியர் பண்பாட்டு மனோபாவங்களை இடதுசாரிகள் சுவீகரிக்கத் தெரிந்திருந்தனர். கேரளத்தில் நாராயண குருவை இடதுசாரிகள் வரித்துக்கொண்டதுண்டு. தமிழில் சிங்காரவேலர், ஜீவா, நாவா போன்றோருக்கு பண்பாட்டு அரசியல் குறித்த தீவிர முன்னுணர்வுகள் இருந்தன. இருப்பினும் முன்னெப்போதையும்விட தீர்க்கமாக இப்போது வர்க்கமும் அடையாளமும், இடதுசாரிகளும் அடையாள அரசியலும் போன்ற தலைப்புகள் முக்கியப்பட்டு வருகின்றன. அடையாள அரசியலை வரலாற்றுரீதியாகவும் சமூகரீதியாகவும் புரிந்துகொள்வது எப்படி? அடையாள அரசியலின் பிரச்சினைத்தளத்தை சோசலிச அரசியலோடு இணைப்பது எப்படி? போன்ற விவாதங்களை நடத்த நாம் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறோம். இந்த விவாதங்களை விரிவாக நடத்துவதில் தாமதித்துவிட்டோம் என்ற உணர்வும் நம்மிடம் உள்ளது. முதலாளிய எதிர்ப்பும் உலகமயமாக்க எதிர்ப்பும் கொண்ட சக்திகளாக அடையாள அரசியல் சக்திகளை உருவமைக்கும் கடப்பாடும் இடதுசாரிகளுக்கு உள்ளது. இத்தகைய பின்புலத்தில்தான் வர்க்கமும் அடையாளமும் என்ற பிரச்சினை முக்கியமாகிறது. இதனை எப்படிச் செய்வது?

செய்யவேண்டியது என்ன?

1. அடையாளம், அடையாள அரசியல், அடையாள அரசியல் இயக்கங்கள் என்ற பிரச்சினைகள் இந்திய, தமிழ்ச் சூழல்களில் வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பிரச்சினைகள் என்பது நம்மால் முதலில் அங்கீகரிக்கப்படவேண்டும்.

2. இது, இந்தியச் சமூக அமைப்பு, இந்தியச் சமூக வரலாறு, இன்றைய இந்தியப் புரட்சி ஆகியவற்றின் பிரச்சினை என்பது நம்மால் ஆழமாக அங்கீகரிக்கப்படவேண்டும்.

3. இடதுசாரி இயக்கங்கள் வெகுசன இயக்கங்களாக மாறவேண்டும் என்ற வேலைத் திட்டத்தோடு இணைத்து இப் பிரச்சினை அணுகப்படவேண்டும்.

4. வர்க்கம் என்ற கருத்தாக்கம் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய முதலாளியச் சூழல்களில் உருவான கருத்தாக்கம் என்பதை அங்கீகரித்து, மேற்கல்லாத சமூகங்களின் பிரத்தியேகப் பண்புகளுக்கு ஏற்ப அக்கருத்தாக்கம் நெகிழ்வாகக் கையாளப்படவேண்டும்.

5. வெவ்வேறு அடையாள இயக்கங்களின் தோற்றம், வரலாறு, செயல்பாடுகள், வர்க்க உள்ளடக்கம் ஆகியவை மார்க்சிய நோக்கில் பயிலப்படவேண்டும்.

வர்க்கம் குறித்த மார்க்சின் கருத்துக்கள்

இந்த இடத்தில் மார்க்சியர்களின் வர்க்கம் பற்றிய கருத்தாக்கத்தைச் சிறிது தெளிவுபடுத்தி விட்டு முன்செல்வோம். அடையாள அரசியலார் இந்தியச்சூழல்களிலும் சர்வதேசச் சூழல்களிலும் மார்க்சியத்தின் வர்க்க அணுகுமுறை குறித்து முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளை மனதில் இருத்தி இங்கு பேசமுனைவோம்.

வர்க்கம் என்பது ஒரு பொருளாதாரக் கருத்தாக்கம், அது மக்கட்கூட்டங்களிடையிலான பொருளாதாரச் சுரண்டலை (Exploitation) மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுகிறது, அது சாதிரீதியான, நிற அடிப்படையிலான அல்லது இன அடிப்படையிலான, பாலியல் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் (Oppressions)  கணக்கில் கொள்ளுவது கிடையாது என்பது அடையாள அரசியல் நம்மீது வைக்கும் குற்றச்சாட்டாகும். சுரண்டல் என்பது, பொருளாதாரச் சுரண்டல் என்பது மார்க்சியத்தின் மிக வலுவான ஒரு கருத்தாக்கம். மார்க்சின் “மூலதனம்என்ற மிகப் பிரும்மாண்டமான நூல் அக்கருத்தாக்கத்தைச் சுமந்து நிற்கிறது. பொருளாதாரச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டே சமூக அடக்குமுறைகளை மார்க்சியம் பேசுகிறது என்பதும் பெருமளவில் உண்மைதான். இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, மார்க்ஸ், லெனின் ஆகியோரின் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தைப் பரிசீலிப்போம். 

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல்வரிகள் வர்க்கப்போராட்டம் பற்றியதாக அமைந்துள்ளன. “இதுவரை இருந்து வந்திருக்கிற சமுதாயத்தின் சரித்திரம் எல்லாம் வர்க்கப்போராட்டத்தின் சரித்திரமே. சுதந்திரப்பிரஜையும் அடிமையும், பாட்ரீஷியன் என்ற மேல்குடிமகனும் பிளேபியன் என்ற கீழ்க்குடிமகனும், பிரபுவும் பண்ணையடிமையும், கில்டு மாஸ்டரும் ஜேர்னிமேனும், சுருங்கச்சொன்னால், ஒடுக்குபவனும் ஒடுக்கப்படுபவனும் என்றென்றும் எதிரெதிரே நின்றுகொண்டு, சில சமயங்களில் மறைவாகவும், சில சமயங்களில் பகிரங்கமாகவும் இடையறாத போர் நடத்திவந்தனர்.”

இந்த வரிகள் வரலாறு குறித்த ஒரு புத்தம் புதுப்பார்வையை முன்வைக்கின்றன. வரலாற்றின் இயக்குசக்தியாக வர்க்கப்போராட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன என்பதைத் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய வரலாற்றின் பல்வேறு சமூக அமைப்புகளில் (அடிமைச் சமூகத்தில், நில உடமையில்) எந்தெந்த வர்க்கங்கள் எதிரெதிராக நின்று போரிட்டிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கிறது. சுதந்திரப்பிரஜை- அடிமை, பாட்ரீஷியன் - பிளெபியன், பிரபு - பண்ணையடிமை, கில்டு மாஸ்டர் - ஜேர்னிமேன் என்ற எட்டு வகைப்பட்ட, நான்கு ஜோடி வர்க்கங்களை சொல்லியபிறகு, மார்க்ஸ், “சுருங்கச்சொன்னால், ஒடுக்குபவனும் ஒடுக்கப் படுபவனும்என்று எடுத்துச்சொல்லுகிறார். இங்கு “சுரண்டுபவனும் சுரண்டப்படுபவனும்என்ற சொற்களை மார்க்ஸ் பயன்படுத்தவில்லை. மார்க்சியம் ஒரு பொருளாதார நிர்ணயவாதம், வர்க்கம் என்பது பொருளாதாரச் சுரண்டலை முன்வைக்கும் கருத்தாக்கம் என்றெல்லாம் சொல்லுபவர்கள் இந்த வரிகளைக் கவனிக்க வேண்டும். மார்க்சின் மேற்குறித்த வரிகளில் பொருளாதாரம் நேரடியாகப் பேசப்படவில்லை. ஒடுக்குமுறைதான் பேசப்பட்டிருக்கிறது.

மார்க்ஸ் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தை அவரது எழுத்துக்களில் ஏராளமாகப் பேசியிருக்கிறார் என்பது உண்மை. பொருளாதாரச் சுரண்டலை மையப்படுத்திய கருத்தாக்கமாக அவர் அதனைப் பெருமளவில் பயன்படுத்தியுள்ளார் என்பதும் உண்மை. ஆயின் அக்கருத்தாக்கத்தைத் தனியான ஒரு பிரச்சினையாகத் தலைப்பிட்டு பேசியிருக்கிறாரா? என்று ஒரு கேள்வியை முன்வைத்தால் அக்கேள்விக்குப் பதில் சொல்லுவது கடினம். மூலதனம் நூலில் 3வது பாகத்தில் கடைசி அத்தியாயம் “வர்க்கங்கள்எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் “வர்க்கங்கள்என்ற கருத்தாக்கத்தை மார்க்ஸ் அவருக்கே உரிய துல்லியத்துடன் வரையறுக்க விழைந்திருக்கவேண்டும். ஆயின் இந்த அத்தியாயம் இரண்டே பக்கங்களில் முடிந்துபோகிறது. அந்த இரண்டு பக்கங்களும்கூட மூலதனம் நூலில் அவர் பேசிவந்த முதலாளியச் சமூகத்தின் வர்க்கங்கள் குறித்தவையாக உள்ளனவே தவிர வர்க்கம் என்ற கருத்தாக்கத்தை எல்லாச் சமூக அமைப்புகளுக்கும் பொருந்தும் வகையில் கோட்பாட்டு ரீதியாக வரையறுப்பனவாக இல்லை. அங்கு அவர் முதலாளியத்தின் மூன்று வர்க்கங்கள் பற்றிச் சொல்லுகிறார். மூலதனத்திற்கும் உற்பத்திச்சாதனங்களுக்கும் சொந்தக்காரனான முதலாளி, நிலத்தை மூலதனமாகவும் உற்பத்திச்சாதனமாகவும் கொண்ட நிலஉடமையாளன், உழைப்புச்சக்தியை விற்றுப் பிழைக்கும் நிலையிலிலுள்ள பாட்டாளி என்ற மூவரைப் பற்றி மார்க்ஸ் அங்கே பேசத் தொடங்குகிறார். லாபம் (உபரி மதிப்பு), நில வாடகை, கூலி ஆகிய மூன்று ஆதாரங்களைக் கொண்ட மூன்று வர்க்கங்களைப் பற்றி அங்கு மார்க்ஸ் உரையாடத் தொடங்குகிறார். அந்த உரையாடலும் தொடரவில்லை.

முதலாளியத்திற்கு முந்திய சமூக அமைப்புகளையும் உள்ளடக்கிய வர்க்கம் என்ற ஒரு கருத்தாக்கத்தை மார்க்ஸ் எந்த இடத்திலும் வரையறுத்து வழங்கியதாகத் தெரியவில்லை. ஆயின் முதலாளியத்திற்கு முந்திய சமூகங்களில் வர்க்கம் என்ற ஒன்று அதன் தூய்மையான பொருளாதார அர்த்தத்தில் காணப்படுவது இல்லை என்று மார்க்ஸ் பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். கம்யூனிஸ்ட் அறிக்கையிலேயே மார்க்ஸ் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். “சரித்திரத்தின் ஆரம்பகால சகாப்தங்களில், அனேகமாக எங்குமே சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைக் கொண்ட சிக்கலான ஏற்பாட்டைக் காணுகிறோம்; சமூக அந்தஸ்தில் பல படிகளைக் காண்கிறோம். பழங்காலத்து ரோமாபுரியில், பாட்ரீஷியன்கள், நைட்டுகள், பிளேபியன்கள், அடிமைகள் ஆகியோரைக் காண்கிறோம். மத்தியகாலத்தில், நிலப்பிரபுக் களையும், மானியக்காரர்களையும், கில்டு மாஸ்டர்களையும், ஜேர்னிமேன்களையும், புதிதாக வேலை பயில்பவர்களையும், பண்ணையடிமைகளையும் காண்கிறோம். மேலும், அனேகமாக, இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றுக்கொன்று கீழ்ப்பட்ட உட்பிரிவுகளையும் காணலாம்.” (கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் ஏங்கெல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1969, ப.42). இங்கு மக்கள் பிரிவினர் வர்க்கங்கள் என்ற சொல்லால் குறிக்கப்பட்டாலும், அவை சிக்கலான ஏற்பாட்டைக் கொண்டிருந்தன, அந்தஸ்து படி நிலைகள் கொண்டவையாக இருந்தன என்றும் மார்க்ஸ் எழுதிச் செல்கிறார். முதலாளியத்தை விட அதற்கு முந்திய சமூகங்களில் பொருளாதார அளவுகோல் கறாராக வேலை செய்வதில்லை என்பதை மார்க்ஸ் இங்கு உணர்ந்து எழுதுகிறார் என்று புரிந்துகொள்கிறோம்.
  
மார்க்ஸ் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தைவிட வர்க்கப் போராட்டம் என்ற விடயத்தில் அதிகக் கவனம் செலுத்துகிறார். ஜெர்மானிய இயங்கியலில் ஆழமான புலமை கொண்ட மார்க்ஸ், கருத்துக்களின் இயங்கியலிலிருந்து சமூக இயங்கியலுக்கு வந்து சேர்ந்தார். சமூக இயங்கியலில் எதிரெதிரான வர்க்கங்களின் முரண், போராட்டம் என்ற கோட்பாட்டைக் கொண்டே அவர் சிந்தித்தார். எனவே வர்க்கங்கள் என்ற கருத்தாக்கத்தைவிட வர்க்கங்களுக்கிடையிலான போராட்ட உறவுகளுக்கே அவர் முன்னுரிமை வழங்கினார். வர்க்க உறவுகள் என்ற அமைப்பியல் பண்பு வர்க்கங்களை நிர்ணயிக்கின்றன என்ற கோட்பாட்டுநிலை அவரில் தொழில்படுவதாகவும் பல அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர். முரண்பட்ட வர்க்க உறவுகள் என்று பார்க்கும்போது அங்கு பொருளாதாரச்சுரண்டல் மட்டுமே சம்பந்தப்படுகிறது எனக்கொள்ளுவது மிக எளிமைப்படுத்தப்பட்ட சித்திரம் ஆகும். முரண்பட்ட உறவுகளின் ஊடாக எல்லா வித அடக்குமுறைக்கூறுகளும்தான் தொழில்படும்.    

வர்க்கம் குறித்த லெனினின் வரையறை:

(புரட்சிக்குப் பிறகு) 1919ல் எழுதப்பட்ட, லெனினது மாபெரும் தொடக்கம் (Great Beginning) என்ற கட்டுரையில் வர்க்கம் என்றால் என்ன என்பதற்கான வரையறை உள்ளது. “வர்க்கங்கள் என்பவை வரலாற்றுவழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் அவை வகிக்கும் இடத்தாலும், உற்பத்திச்சாதனங்களுடன் அவற்றுக்குள்ள உறவாலும் (மிகப்பெரும்பாலும் இது சட்டத்தால் நிலைநிறுத்தப்பட்டு வரையறுக்கப் பட்டிருக்கிறது), உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச்செல்வத்தில் அவற்றின் செயலாட்சிக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களாலும், இந்தப் பங்கை அவை சுவாதீனமாக்கிக் கொள்ளும் முறையினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதிகளாகும் (வி.இ.லெனின், தேர்வுநூல்கள், தொகுதி 12, முன்னேற்றப் பதிப்பகம், 1982, 312-313). இது வர்க்கம் என்ற கருத்தாக்கம் குறித்த முழுமையான ஒரு வரையறையாகும். லெனின் இங்கு முன்னிலைப்படுத்தும் கூறுகளை வரிசைப்படுத்திக் கொள்வோம். வர்க்கம் என்பதை நிர்ணயிக்கும் கூறுகள் எவை? 

1. வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் (மக்கள் பகுதிகள்) வகிக்கும் இடம்
2. உற்பத்திச் சாதனங்களுடன் உள்ள உறவு - சட்டத்தால் நிலைநிறுத்தப்படுபவை
3. உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றின் பாத்திரம்
4. சமூகச்செல்வத்தில் அவை பெறும் பங்கின் பரிமாணங்கள்
5. அந்தப் பங்கை சுவாதீனமாக்கிக் கொள்ளும் முறை  
6. இவை அனைத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதிகள்

உற்பத்திச் சாதனங்களுடனான உறவு என்ற ஒற்றை அளவுகோலையே மார்க்சியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறுவோர் லெனினின் இந்த வரையறையை உற்றுக் கவனிக்க வேண்டும். முதல்வரியில் “வகிக்கும் இடம்என்று சொல்லப்படுவது பொதுவானதுதான். இருப்பினும் இந்த வரியில் “வரலாற்றுவழியில் நிர்ணயிக்கப்பட்டஎன்று சொல்லப்படுவதை உற்றுக் கவனித்தாக வேண்டும். சமூகப் பொருளுற்பத்தி அமைப்பும் அதில் மக்கள் கூட்டங்கள் வகிக்கும் இடமும் ஒவ்வொரு நாட்டிலும் அந்தத்த நாட்டின் பிரத்தியேக வரலாற்றுப் பண்புகளுக்கேற்ப அமைகின்றன என்பது குறிப்பான ஒரு விடயமாகும்.

இரண்டாவது வரியில், உற்பத்திச் சாதனங்களுடன் உள்ள உறவு என்பது மிகக் குறிப்பாகப் பொருளாதார உறவை எடுத்துச் சொல்லுகிறது. ஆயின் அந்த உறவுகள் சட்டத்தால் நிலைநிறுத்தப்படுகின்றன எனச் சொல்லப்படுவதைக் கவனிக்க வேண்டும். அடிப்படையான பொருளாதார உறவுகளும் மேற்கட்டுமானக்கூறுகளான அரசியலாலும் சட்டத்தாலும் நிலைநிறுத்தப்படுகின்றன எனச் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
மூன்றாவது வரி, உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரம் எனச் சொல்லுகிறது. உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பு, முதல்வரியில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, ஒவ்வொருநாட்டிலும் அந்தந்த நாட்டின் வரலாற்று வளர்ச்சிப்போக்கில் நிறுவப் படுகிறது என்றும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பு என்ற சொற்கள் இந்தியா போன்ற நாட்டில் சாதி அமைப்பை நினைவுக்குக் கொண்டுவருவதைத் தவிர்க்க முடியவில்லை. அம்பேத்கர் சாதி அமைப்பைப் பற்றிப் பேசும்போது, சமூகரீதியாக (அதாவது சாதிரீதியாக, பிறப்பு அடிப்படையில்) நிர்ணயிக்கப்பட்ட பொருளாதாரமே  (Social Economics) இந்த நாட்டில் நிலவி வந்திருக்கிறது என்பார். அம்பேத்கர் பெரும்பாலும் அவர் எழுத்துக்களில் சமூகஒழுங்கு (Social Order) என்ற சொற்களையே பயன்படுத்துவார். லெனினின் “சமூக ஒழுங்கமைப்புஎன்ற சொல்லாக்கம் இந்திய விஷயங்களைப் பேசுவதற்கு உதவலாம். உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பு என்ற சொற்களை சமூக வேலைப் பிரிவினை (Social Division of Labour) என்று கொண்டால், மீண்டும் அம்பேத்கர் சொல்லும் சமூக வேலையாட்களின் பிரிவினை (Social Division of Labourers), அதாவது சமூக ஒழுங்கமைப்பு இங்கு பிறப்பின் அடிப்படையில் நிர்ணயமாகிறது என்ற கருத்து கணக்கில் கொள்ளப்படவேண்டும்.  

நான்காவது வரியிலும் ஐந்தாவது வரியிலும், சமூகச் செல்வத்தில் குறிப்பிட்ட ஒரு வர்க்கம் பெறும் பங்கு, அதனை அவ்வர்க்கம் தன்னகப்படுத்தும் முறை ஆகியவை சொல்லப்படு கின்றன. மார்க்சியர்கள் உற்பத்திமுறையைப் பற்றி மட்டுமே பேசுவார்கள், சமூகச்செல்வம் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. சமூகச்செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதைப் பற்றியது சமூகநீதி என்ற கோட்பாடு என்று அவர்கள் கூறுவார்கள். அது உண்மையல்ல என்பதை இந்த வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. சமூகச்செல்வம் என்ற சொல்லே கவனத்திற்குரியது. சமூகச் செல்வம் பகிர்ந்தளிக்கப்படுவதில் சாதி அமைப்பு சில நிரந்தர ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தது என்பதில்தான் இந்தச் சமூகத்தின் பிரத்தியேகப்பண்புகள் அடையாளப் படுகின்றன. சமூகச் செல்வம் மறுபகிர்வு செய்யப்பட வேண்டும் என்ற செய்தியை உள்ளடக்கியதாகவே லெனினின் வர்க்கம் குறித்த வரையறை அமைந்திருப்பதைக் காண்கிறோம். 

மார்க்சின் ஆசிய உற்பத்திமுறை என்ற கருத்தாக்கம்

ஐரோப்பாவை முன்வைத்துக்கூட, முதலாளியத்திற்கு முந்திய சமூகங்களில் கறாரான பொருளாதார வர்க்கங்கள் பற்றிப் பேசமுடியாது என  மார்க்ஸ் குறிப்பிட்டதை மேலே குறிப் பிட்டோம். இப்போது நாம் இந்தியாவிற்கு வருவோம். இந்தியாவைப் பொறுத்தமட்டில், இங்கிருந்த சமூக அமைப்பு மேலும் சிக்கலானதாக இருந்தது என மார்க்ஸ் உணர்ந்து எழுதியுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், மார்க்ஸ் இரண்டுவித மான சிக்கல்களை உணர்ந்து சொல்லியிருக்கிறார். ஒன்று, இந்தியச் சமூக வரலாறு அடிமை முறை, நில உடமை முறை என்று ஐரோப்பா குறித்து சொல்லியிருப்பதைப்போல நேர் கோட்டு வடிவில் அமையவில்லை. 18ஆம் நூற்றாண்டு வரை இங்கிருந்த சமூக அமைப்பை மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை என்ற பெயரால் அடையாளப்படுத்தியுள்ளார். புராதன இனக்குழு அமைப்பு, அடிமை முறை, நில உடமை முறை ஆகிய மூன்றுக்கும் பதிலாக, அவை மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றாகச் செம்மிப்போய்க் கிடந்த ஒரு சமூக அமைப்பை மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை என்ற சொல்லாக்கத்தால் குறித்துள்ளார். இது முதல் சிக்கல். (ஆசிய உற்பத்திமுறை குறித்து எனது நூலான “தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல்நூலைப் பார்க்கவும். என்சிபிஎச், 2012 வெளியீடு). இரண்டாவதாக, 17-18ம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்குள் நுழைந்த காலனியாதிக்கம் தூய முதலாளியம் அல்ல. அது நவீன முதலாளியத்தின் அடிமைமுறை. எனவே, அடிமைத்தனம் கொண்ட காலனிய முதலாளியம் இங்கிருந்த மரபுரீதியான ஆசிய உற்பத்திமுறை என்ற வகையிலான சமூகஅமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை விட, அதனைச் சிதைத்தது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இது இந்தியா குறித்த, இன்னும் விரிந்த அர்த்தத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா என்ற மூன்று தென்கண்டங்களின் வரலாறு குறித்த இரண்டாவது சிக்கல்.

இனி இந்த இரண்டு சிக்கல்களையும் சிறிது விரிவாகக் காண்போம். ஆசிய உற்பத்தி முறை என்றால் என்ன? அதன் பண்புகள் என்ன? அவை குறித்து மார்க்ஸ் என்ன கூறுகிறார்?

18ஆம் நூற்றாண்டுவரை இங்கு தனிஉடமை வேர் கொள்ளவில்லை என்கிறார் மார்க்ஸ். புராதன இனக்குழு வரலாறு தொட்டு இங்கு குழுமச் சமூக உறவுகளே நிலவின என்கிறார் மார்க்ஸ். அப்படியானால் இங்கு வர்க்கச் சமூகமே தோன்றவில்லை என்று மார்க்ஸ் சொல்லுகிறாரா? அப்படியல்ல. இனக்குழுக்கள் இங்கு அடியோடு அழியாத நிலையில், அடிமைச்சமூக உறவுகளும், நிலஉடமை உறவுகளும் அவற்றினுள் ஊடுபாய்ந்து வித்தியாசமான ஒரு சமூக அமைப்பை உண்டுபண்ணியுள்ளன என்று மார்க்ஸ் சொல்லுகிறார். இனக்குழுக்களே படிநிலை வரிசையில் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உகந்தவகையில் இங்கு அடுக்கப்பட்டன என்று மார்க்ஸ் சொல்லுகிறார் எனலாம்.

தனிமனிதனை விட இனக்குழு முக்கியப்படும் ஓர் ஏற்பாடு இங்கு தொழில்பட்டது என்பது மார்க்சின் விளக்கம். 1857-59 பொருளாதாரக் கையெழுத்துப் பிரதிகள் என்ற பகுதியில் மார்க்ஸ் இதனைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “இங்கு முழுமை என்பது அதன் உட்பகுதிகளால் உருவான ஒன்றல்ல - முழுமையே இங்குச் சுதந்திரமான அமைப்பாகச் செயல் படுகிறது.. ஒரு குழுமத்தில் இடம்பெறும் உறுப்பினர்களின் உள்ளீடான ஒற்றுமை பிறப்பு (அல்லது பரம்பரை), மொழி, பொதுவான கடந்தகாலம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் வழி வடிவம் பெறுகிறது. (their intrinsic unity is embodied in descent, language, common past and history etc)” (Marx Engels, Pre-Capitalist Economic Formations, Progress, Moscow, 1979, P.94). வர்க்கம் குறித்த விவாதங்களில் தொடங்கிய நாம் அடையாள அரசியலுக்கு வந்து சேரும் இடம் இதுவே. 

ஆசிய உற்பத்தி முறை அல்லது ஆசிய கம்யூன்கள் என்பவை “உள்ளீடான ஒரு திடத்தன்மையுடன் (Internal Solidity)” நிலவி வந்திருக்கின்றன என்று மார்க்ஸ் மூலதனம் நூலின் மூன்றாவது பகுதியில் குறிப்பிடுகிறார். எத்தனை ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், அடிப்படையில் எந்தவித மாற்றமுமில்லாத “தயாராக வரைந்து வைக்கப்பட்டுள்ள வரைபடத் திட்டமாகஇது தொழில்பட்டு வந்திருக்கிறது என்கிறார் மார்க்ஸ் (மூலதனம், முதல் பாகம், NCBH, 1998, 484). ஆசியக் குழுமச் சமூகத்தில் தனிமனிதனைவிட அக்குழுமம் முதன்மையானது. குழுமத்தின் முன்னுரிமை அரசனின் ஆளுகை உரிமையாகவோ, தெய்வமாகவோ (a higher Unity that is satisfying and comforting) குறிக்கப்படலாம் (Marx's Grundrisse, p.485). “இவ்வகைச் சமுதாயங்களில், எந்தவொரு தனிநபரும் தனது குலம் அல்லது சமுதாயத்தின் தொப்புள்கொடியிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதில்லை (ஒரு தேனீயைப்போல)” (மூலதனம், முதல்பாகம்,453). அம்பேத்கர் சொல்லும் அகமண முறையைக் கணக்கில் கொண்டால் இது வெறும் புராதன உறவு அல்ல, ஒவ்வொரு திருமணத்தின்போதும் தினசரி புதுப்பித்துக் கொள்ளப்படும் உறவு. திருமண உறவுகள் என்பவை பொருள்வகை உறவுகள் என்று ஏங்கெல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு நூலின் முன்னுரையில் குறிப்பிடுவார்.       
           
சனநாயகப் புரட்சி என்ற மார்க்சியக் கருத்தாக்கம்

அடையாள அரசியலை மார்க்சியர்கள் எவ்வாறு எதிர்கொள்வது? என்ற கேள்விக்கு அது சனநாயகப்புரட்சியின் பிரச்சினை என்றொரு பதில் மார்க்சியரிடையில் நிலவுகிறது. இது நியாயமான பதிலாகவே தென்படுகிறது. ஆயின், சனநாயகப்புரட்சியின் பிரச்சினைகளைச் சோசலிசப்புரட்சியுடன் ஒப்பிட்டு அவற்றை இரண்டாந்தரமான பிரச்சினைகளாக ஓர் அலட்சியப்பார்வையுடன் அணுகும் போக்கு நம்மிடம் உள்ளது. நாம் ஒரு வெகுசன இயக்கமாக மாறுவதற்குத் தடையாக இந்த மனோபாவம் செயல்படுகிறது எனலாம்.

லெனின், சனநாயகப்புரட்சியின் பிரச்சினைகள் உடனடியானவை, நேரடியானவை (Immediate), சனநாயகப் புரட்சியின் பிரச்சினைகளை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து (Mediated) அமைவது சோசலிசப்புரட்சியின் வளர்ச்சிப்போக்கு என்று கூறுகிறார். “சனநாயகத்திற்கான போராட்டம் சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பாட்டாளி வர்க்கத்தைத் திசைதிருப்பிவிடுமென்றோ, அதனைப் பின்னுக்குத் தள்ளிவிடுமென்றோ, மூடி மறைத்துவிடுமென்றோ (overshadow) கருதுவது ஒரு தீவிரவாதத்  தவறாகும் (radical mistake). மாறாக சனநாயத்திற்கான போராட்டம் முழுமையானதாக, தொடர்ச்சியானதாக, புரட்சிகரமானதாக (all-round, consistent, revolutionary) அமைய வேண்டும்என்று லெனின் சோசலிசப்புரட்சியும் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையும் என்ற கட்டுரையில் (1916) குறிப்பிடுகிறார்.

அதே ஆண்டில் எழுதிய மார்க்சியம் பற்றிய கேலிச்சித்திரமும் ஏகாதிபத்தியப் பொருளாதார வாதமும் என்ற கட்டுரையில் (1916) லெனின், சனநாயகப்புரட்சியை அலட்சியப் படுத்துபவர்களுக்கு மார்க்சியம் பற்றிய அறிவே இல்லை (No Knowledge of Marxism)  என்று கோபப்படுகிறார். சனநாயகம் வர்க்க ஒடுக்குமுறையை ஒழிக்காது என்பதை மார்க்சியர்கள் நன்கு அறிவார்கள். (பின் ஏன் சனநாயகத்திற்காகப் போராடவேண்டும்?) “சனநாயகம் வர்க்க மோதலை அதிகபட்சம் நேரடியானதாக, விரிவானதாக, வெளிப்படையானதாக, தெளிவானதாக (more direct, wider, more open and pronounced)  மாற்றுகிறது. அதுதான் நமக்குத் தேவை. அவை வெறுமனே சனநாயக உரிமைகள் குறித்த பிரச்சினை அல்ல, முதலாளிய அமைப்பே அடிப்படையான பிரச்சினை என்று மக்கள் புரிந்துகொள்ளுவார்கள்என்று லெனின் எழுதுகிறார்.
           
லெனின் மேலும் சொல்லுகிறார்: சனநாயகப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது முதலாளிகளின் கைகளில், எதிர்ப்புரட்சி சக்திகளின் கைகளில் அவற்றை ஒப்படைப்பதற்குச் சமமாகும் என்கிறார். சனநாயகப் பிரச்சினைகளை கம்யூனிஸ்டுகள் (முதலாளிய மற்றும் சிறுமுதலாளியக் கட்சிகளைப் போல) சீர்திருத்த வடிவில் முன்வைக்காமல் அவற்றை இன்னும் தீவிரமான புரட்சிகரமான வடிவில் முன்வைப்பதன் மூலமாகவே அவற்றைச் சரியாகக் கையாளமுடியும் என்று லெனின் கூறுகிறார். சனநாயகப் பிரச்சினைகளை பிற கட்சிகளை விட தீவிர புரட்சிகர வடிவில் (radically founded, in a revolutionary manner) நமக்கு முன்வைக்கத் தெரியவில்லை எனில் நாம் வெளிறிப்போன புரட்சிக்காரர்கள் (Poor Revolutionaries)  என்பது பொருளாகும் என்கிறார்.
              
சனநாயகப்புரட்சியின் பிரச்சினைகளை “புரட்சிகர வடிவில்முன்வைப்பது என்பது லெனின் முன்வைக்கும் திட்டம். நம்மைத்தவிர மற்ற கட்சிகளை முதலாளிக்கட்சிகள், இன்னும் பல, சிறுமுதலாளியக் கட்சிகள் என்று நாம் வரையறை செய்கிறோம். அவை சனநாயகப் பிரச்சினைகளை அவரவர் வர்க்க நலனுக்கு ஏற்ப, குறுகிய வடிவில், தேர்தல் அரசியலுக்கு ஏற்ப, தாராளவாத சீர்திருத்த வடிவில் முன்வைக்கின்றன என்பதெல்லாம் உண்மை. எனவேதான், சனநாயகப் பிரச்சினைகளை கம்யூனிஸ்ட்கள் புரட்சிகர வடிவில் முன்வைக்க வேண்டும் என்று லெனின் கூறுகிறார். ஆயின் நமது சூழல்களில், பலவேளைகளில் முதலாளிய சிறு முதலாளியக் கட்சிகள் சனநாயகப் பிரச்சினைகளை முன்வைக்க, நாம் தாமதமாக அப்பிரச்சினைகளுக்கு வந்து சேர்வதுபோல் உள்ளது. ஆட்சியிலிருக்கும் கட்சிகளைப் பெருமுதலாளியக் கட்சிகள் எனக் கொண்டால், சனநாயகப் பிரச்சினைகளைக் கையிலெடுப்போரை சிறுமுதலாளியக் கட்சிகள் எனக் கொண்டால், பலவேளைகளில் அவை இரண்டுக்குமிடையில், தாமதமாக வந்துநின்று, சமரசம் பேசுவோர்களாக, சமூக நல்லிணக்கம் பேசுவோர்களாக நாம் ஆகிவிடுகிறோம். இது நிச்சயமாக லெனின் சொல்லிய “புரட்சிகர வடிவம்அல்ல. எனவே சனநாயகப் பிரச்சினைகளை சிறுமுதலாளியக் கட்சிகள் கையிலெடுக்க முடியாத வகையில் அவற்றை முந்திச் சென்று கைப்பற்றிக் கையாளுவோராக நாம் பரிணமிக்கவேண்டும். அவற்றைப் புரட்சிகரமான வடிவில் வரையறுக்கத் தெரிந்தவர்களாகவும் முன்வைக்கத் தெரிந்தோராகவும் கையாளுவோராகவும் நாம் உருவாக வேண்டும். சனநாயகப் புரட்சி என்ற கருத்தாக்கம் மார்க்சிய சிந்தனையில் வரையறுக்கப் பட்டிருப்பதே, அந்தந்த நாடுகளின் பிரத்தியட்சமான சமூக அமைப்புகளில் எழத்தக்க சனநாயகப் பிரச்சினைகளை நாம் முன்னுணர வேண்டும் என்பதற்காகவே. சனநாயகப் பிரச்சினைகளை நாம் முன்னுணர்ந்து கையாளும் முறைமையைக் கொண்டு முதலாளிய மற்றும் சிறுமுதலாளியக் கட்சிகளின் சனநாயக விரோத மற்றும் குறுங்குழும அரசியல்களின் சாயம் வெளுக்க வேண்டும்.

இந்தியா போன்ற ஒரு பழைய சமூகத்தில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர அசைவுகளின்றித் தேங்கிக்கிடந்த சமூகத்தில், சனநாயகப்புரட்சியின் செயல்பாடுகள் மிக வன்முறையாக நிகழ்த்தப்படவேண்டி வரலாம். எடுத்துக்காட்டாக, சாதி ஒழிப்பு என்ற இலக்கு சோசலிசம் என்ற இலக்கைவிட கடுமையானதாகக்கூட அமையலாம்.  இதற்குப்பொருள் வன்முறையை நாம் தூண்டிவிடப் போகிறோம் என்பதல்ல, இங்குள்ள சாதி மேலாக்கம் சாதி ஒழிப்பு என்ற இலக்கை மிகத் தீவிரமாக எதிர்த்தே தீரும். எனில் கம்யூனிஸ்டுகள் அதனை எதிர்கொண்டே தீரவேண்டும். இந்திய சனநாயகப் புரட்சி சாதாரணமானதாக இருக்கப் போவதில்லை.

முடிவுரை
           
உலகமயமாக்கச் சூழல்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள் உள்ளிட்ட கிராமப்புறப் பாட்டாளிகள், தேசிய இனங்கள், சமயச் சிறுபான்மையினர், கடற்கரை மற்றும் மலைவாழ் பழங்குடிகள், பெண்கள் எனப் பலவகைப்பட்ட மானுடக்கூட்டங்களின் சனநாயக உரிமைகள் மிகக் கொடூரமாகப் பறிக்கப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் இம்மக்களின் வாழ்வுரிமைகளுக்கான பிரச்சினைகளைக் முந்திச் சென்று கையிலெடுக்கத் தயங்கினால், அவர்கள் தன்னிச்சையான, தம்மளவிலான இயக்கங்களைக் கட்டமைப்பார்கள். போராட்டங்களை வடிவமைப்பார்கள். இம்மாதிரியான நிலைமைகளை இன்று இந்தியாவில், தமிழ்ச்சூழல்களில் முன்னெப்போதுமில்லாத அளவில் மிக அதிகமாகச் சந்திக்கிறோம். சனநாயகப்புரட்சி பற்றி நம்மிடையிலான கூடுதலான வெளிப்படையான விவாதங்களும் நடைமுறை அரசியலுமே இச்சூழல்களில் நமக்குத் தேவைப்படுகின்றன.             

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் முகாமில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

புதுவிசை  இதழ் 38,  மே 2013

No comments:

Post a Comment