Wednesday, November 30, 2016

கியூப மக்கள் வென்று வருவார்கள்- ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ்


கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் 7ஆவது பேராயத்தின் முடிவில்  19.04.2016 அன்று கியூபப் புரட்சியின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ வழங்கிய கருத்துகள். இதுதான் அவர் ஆற்றிய கடைசி உரை.  தோழர். காஸ்ட்ரோ அவர்களுக்கான அஞ்சலியாக  
இவ்வுரை வரவிருக்கும் புதுவிசை 47வது இதழில் இடம்பெற்றுபெற்றுள்ளது.
தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை
நன்றி: MRZine, 26.04.2106 
            தோழர்களே, நெருக்கடிக் காலங்களில்  எந்த மக்களையும் வழிநடத்திச் செல்ல, அதிமானுட முயற்சி தேவைப்படும். அவர்களின்றி  மாற்றங்கள் ஏற்படுவது சாத்தியமில்லை. புரட்சிகர மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட, அவர்களால் அதிகாரம் வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை  ஒன்று சேர்த்துள்ள இதுபோன்ற கூட்டம், அந்தப் பிரதிநிதிகளின் வாழ்க்கையில்  அவர்களுக்கு  கிடைத்த மாபெரும் கௌரவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அந்த கௌரவத்துடன், புரட்சியாளராக இருக்கும் சிறப்புத் தகுதியும் சேர்ந்துகொள்கிறது. இந்த சிறப்புத்தகுதி நமது உணர்விலிருந்து விளைந்ததாகும்.

நான் சோசலிஸ்டாக அல்லது மேலும் தெளிவாகச் சொல்வதென்றால், கம்யூனிஸ்டாக ஆனது ஏன்? சோசலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் என்னும் கருத்துருவாக்கத்தை வெளிப்படுத்துகிற இந்தச் சொல், உழைப்பு, திறமை, மானுட ஆற்றல் ஆகியவற்றால் வழங்கப்படும் பொருண்மைச் செல்வம் அனைத்தையும் ஏழைகளும் பொருளில்லாதவர்களும் இழந்த நாளிலிருந்தே அவர்களைச் சுரண்டிவரும் சிறப்புரிமை பெற்றவர்களால் மிகவும் திரிக்கப்பட்டுள்ளது, அவதூறு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டக நிலையில், காலங்காலமாக,  எல்லையே இல்லாமல் மனிதன் எத்தனை காலம் வாழ்ந்திருப்பான்? இதற்கான விளக்கம் உங்களுக்குத் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால், நமது பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு விளக்கம் தேவைப்படக்கூடும்.

நான் அறிவிலியோ, தீவிரவாதியோ, கண்மூடித்தனமாகச் செயல்படுவனோ அல்லன், பொருளாதாரத்தைப் பயின்றதன் காரணமாக தானாகவே எனது கருத்துநிலையை உருவாக்கிக்கொண்டவனும் அல்லன் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே எளிய சொற்களில் பேசுகிறேன்.

சட்டமும் அரசியல் அறிவியலும் கற்கும் மாணவனாக நான் இருந்தபோது - அப்போது சட்டப் படிப்புக்குத்தான் மேலதிக முக்கியத்துவம் இருந்தது- அவற்றை கற்பிப்பவர் யாரும் எனக்கு இருக்கவில்லை. அப்போது இருபது வயதே ஆகியிருந்த எனக்கு விளையாட்டுகளிலும் மலை ஏறுவதிலும் விருப்பம் இருந்தது உண்மைதான். மார்க்ஸியம்-லெனினியம் ஆகியவற்றை கற்பதற்கு ஆசிரியர் யாரும் இல்லாத அந்த சமயத்தில், நான் வெறும் கோட்பாட்டாளனாகவே இருந்தேன் என்றாலும் சோவியத் யூனியன் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தேன். புரட்சி நடந்து எழுபதாண்டுகளுக்குப் பிறகு லெனினின் பணி உடைக்கப்பட்டது. எத்தகைய வரலாற்றுப் படிப்பினை இது! காலனியத்துக்கும் அதன் பிரிக்கமுடியாத துணைவனான ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான போராட்டத்தின் மகத்தான கட்டத்தைக் குறிக்கும் இன்னொரு மகோன்னதமான சோசலிசப் புரட்சிக்கான வேறோர் எடுத்துக்காட்டை மானுடகுலம் பெறும் வகையில் ரஷியப் புரட்சியைப் போன்றதோர் நிகழ்வு ஏற்படுவதற்கு இன்னும் எழுபதாண்டுகள் தேவைப்படாது என்று தயக்கமில்லாமல்  சொல்ல முடியும்.

ஆயினும், இன்று புவிக்கோளத்திற்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரும் ஆபத்து, நவீன ஆயுதங்களின் அழிவாற்றலிருந்து வரக்கூடும். அந்த அழிவாற்ற லால் புவிக்கோளத்தின் அமைதியைச் சீர்குலைத்து, புவிப்பரப்பின் மேல் மானுட வாழ்வு இருப்பதைச் சாத்தியமற்றதாக்கச் செய்ய முடியும்.

டைனோசார்கள் மறைந்ததுபோல, மனித இனமும் மறைந்துவிடும். ஒருவேளை,  அறிவாற்றலுள்ள புதிய உயிர் ராசிகள் தோன்றுவதற்கான காலமும் வரலாம். அல்லது அறிவியலாளர்கள் பலர் புரிந்துகொண்டது போல, சூரிய மண்டலத்திலுள்ள அனைத்து கோள்களும் அவற்றின் துணைக்கோள்களும் உருகிப்போகுமளவுக்கு சூரிய வெப்பம் அதிகரிக்கலாம்.

அந்த அறிவியலாளர்கள் பலரின் கோட்பாடுகள் - நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அவை தெரியாமலிருக்கலாம் - உண்மையாக இருக்குமேயானால் - செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள மனிதன் இன்னும் கூடுதலாகக் கற்று மெய்நிலைமைக்கு தன்னைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும். மானுடகுலம் இன்னும் நீண்டகாலம் உயிர் பிழைத்திருக்குமானால், எதிர்கால சந்ததியினர்  நாம் அறிந்துள்ளதைவிட அதிகம் அறிந்திருப்பர். ஆனால் முதலில் அவர்கள் மிகப்பெரும் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியிருக்கும். தங்களுக்குத் தேவைப்படும் குடிநீர், இயற்கை மூலவளங்கள் ஆகியவற்றின் அளவுகளுக்குள்ள வரம்புகளுடன் தவிர்க்கமுடியாதபடி முரண்படுகின்ற யதார்த்த நிலைமைகளை எதிர்கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பது எப்படி என்பதுதான் இந்தப் பிரச்சினை.

உங்களில் சிலரோ,  பலரோ இந்தப் பேச்சில் அரசியல் எங்கே இருக்கிறது என்று  நினைக்கக்கூடும்.  வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன் என்பதை நம்புங்கள். ஆனால்  இங்கும், இந்த மிதமான சொற்களிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. மானுட குலத்தவராகிய நம்மில் பலர், இந்த யதார்த்த நிலைமைகளின் மீது ஆழ்ந்த அக்கறை செலுத்தி, விலக்கப்பட்ட கனிகளை உண்ட ஆதாம், ஏவாள் காலத்தில் நடந்ததையே தொடர்ந்து செய்யாமல் இருப்பார்கள் என்று நம்புவோமாக. தங்களிடம் தொழில்நுட்பமோ, மழையோ, நீர்த் தேக்கங்களோ ஏதுமில்லாத, மணல்களால் மூடப்பட்டுள் ளவற்றைத் தவிர வேறு எந்த நீரூற்றும் இனி இல்லாம லுள்ள ஆப்பிரிக்க மக்களுக்கு நாம் எப்படி உணவளிக்கப் போகின்றோம்? பருவநிலைப் பாதுகாப்பு பற்றிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள அரசாங்கங்கள் அனைத்தும் என்ன சொல்லப்போகின்றன என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

நாம் இந்தப் பிரச்சினைகளில் இடைவிடாது கவனம் குவிக்க வேண்டும்.  இந்தப் பிரச்சினைகளின்  அடிப்படை அம்சங்களுக்கு அப்பால் அவற்றை விரிவாக எடுத்துரைக்க நான் விரும்பவில்லை.

எனக்கு விரைவில் 90 வயதாகிவிடும். இப்படிப்பட்ட எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. அது ஒருபோதும் எந்த முயற்சியின் விளைவாக இருந்ததில்லை. அது வெறும் தற்செயல் நிகழ்வு. நானும் விரைவில் மற்ற எவரையும் போல் ஆகிவிடுவேன்.

நமது முறை வரும், நம் எல்லோருக்கும். ஆனால், இந்தப் புவிக்கோளத்தில் கியூபக் கம்யூனிஸ்டுகளின் கருத்து எஞ்சியிருக்கும் - இந்தக் கோளத்தில் நாம் உற்சாகத்துடனும் கண்ணியத்துடனும் வேலை செய்தால் மானுட குலத்துக்குத் தேவையான பொருள்வகை, பண்பாட்டுச்  செல்வங்களை நம்மால் உற்பத்தி செய்யமுடியும்,  அதனைப் பெறுவதற்காக நாம் உறுதிதளராமால் போராட வேண்டும் என்பதற்குச் சான்றாக.  கியூப மக்கள் வென்று வருவார்கள் என்ற செய்தியை இலத்தின் அமெரிக்காவிலும் உலகிலும் உள்ள சகோதரர்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த அறையில் நான் பேசுவது இது கடைசி தடவைகளில் ஒன்றாக இருக்கக்கூடும். தேர்ந்தெடுக்கப்படுவதற்காக இந்தப் பேராயத்தில் எந்த வேட்பாளர்களின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவோ அவற்றை ஆதரித்து வாக்களித்துள்ளேன். எனக்கு அழைப்பு விடுத்து எனது பேச்சைக் கேட்கும் கௌரவத்தை அளித்த உங்களுக்கு நன்றி. இந்த மகத்தான முயற்சிக்காக தோழர்களாகிய உங்கள் அனைவரையும்,  முதலாவதாக தோழர் ரவுல் காஸ்ட்ரோவையும் பாராட்டுகிறேன்.

நாம்  தொடர்ந்து அணிவகுத்துச் செல்வோம்,  நாம் எதைச் செம்மைப்படுத்த வேண்டுமோ அதைச் செம்மைப்படுத்துவோம், மிக முழுமையான விசுவாசத்துடனும்  ஒன்றுபட்ட சக்தியுடனும் - மார்ட்டி, மேஸியோ, கோமெஸ்* ஆகியோரைப் போல, தடுத்து நிறுத்தப்பட முடியாத அணிவகுப்பில்.
***
*19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் கியூபாவின் விடுதலைக்காகப் போராடியவர்கள் :ஹோஸெ மார்ட்டி (1853-1895); ஹோஸெ மாஸியோ (1845-1896); யுவான் கோமெஸ் (1854- 1933)

புதுவிசை 47வது இதழின் காலங்கம்

னிதகுலம் இதுவரை கண்டிராத கொடுங்கோன்மை ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. சமூகத்தை சங் பரிவாரம் மற்றும் கார்ப்பரேட்டுகள் என்கிற இரட்டை எஜமானர்களின் நிகழ்ச்சிநிரலுக்குள் அடைப்பதற்காக அவர் அரசதிகாரம் முழுவதையும் பயன்படுத்தி வருகிறார். நாட்டின் மாண்புடை அமைப்புகளை சீர்குலைத்து சிறுமைப்படுத்தும் அவரது தான்தோன்றித் தனமான செயல்பாடுகள் கிண்டலுக்கும் கேலிக்குமுரியதாக வெளித்தெரிந்தாலும், அவை கோடானுகோடி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் நேரடியாக தலையிட்டு தீராத்துயரில் ஆழ்த்தி வருகின்றன. வரலாற்றுப்போக்கில் உருவாகிவந்த தமது சொந்த வாழ்முறையைக் கைக்கொண்டிருக்கும் குடிமக்களை அதன் பொருட்டே குற்றவாளிகளாக அறிவித்து தண்டிப்பதற்கு இயன்ற வழிகளிலெல்லாம் அவரது கெடுமுயற்சி தொடர்கிறது. பண மதிப்பிழப்பு அடாவடி கூட உணவு, உடை, வழிபாடு, மதம், கல்வி, கருத்து வெளிப்பாடு என அனைத்துவகையான உரிமைகளையும் பறிப்பதற்கான அவரது முயற்சிகளின் தொடர்ச்சிதான்.

பண மதிப்பிழப்பு அடாவடிக்குச் சொல்லப்பட்ட காரணங்கள் யாவும் பொய்யென அம்பலமாகிவிட்டது. கறுப்பை கமிஷனுக்கு வெள்ளையாக்கும் புதுத்தொழில் கனஜோராக நடக்கிறது. கைப்பொருளை தொலைத்தாற்போன்ற துக்கத்துடன் வங்கிகளின் முன்னே நாட்கணக்கில் காத்திருக்கும் மக்களை மோடியின் நிழற்படையினரும் அதிகாரி களும் மிகுந்த ஆணவத்தோடு பரிகாசம் செய்கின்றனர். மாற்றிமாற்றி பிறப்பிக்கும் குழப்படியான உத்தரவுகளால் ஒரு நிச்சயமற்றத்தன்மையை ஏற்படுத்தி மக்களை நிரந்தரப்பதற்றத்திற்குள் ஆழ்த்தி ஆத்திரமூட்டுகிறார்கள். தெருவுக்கு இழுத்தெறியப்பட்டதால் நிலைகுலைந்துப் போய் கொந்தளித்துக்கொண்டிருக்கும் மக்களிடமிருந்து தாங்கள் வெகுவேகமாக தனிமைப்பட்டு வருவதை மறைக்க போலியான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு தம்மைத்தாமே மெச்சிக்கொள்கிறார்கள்.  

எதிர்க்கட்சிகள், பா.ஜ.க.வை நிராகரித்துள்ள 69% வாக்காளர்களின் பிரதிநிதிகள். அவை எழுப்பும் மக்கள்சார் பிரச்சினைகளை செவிமடுக்காது மமதையோடு சுற்றுகிற பிரதமரை கண்டிக்காமல், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வீணாவதாகவும் வரிப்பணம் விரயமாவதாகவும் சில ஊடகங்கள் பசப்புகின்றன. அமைதியாக நடக்கும் கூட்டங்களில் மக்கள்விரோத சட்டங்கள்தான் நிறைவேற்றப் படுமெனில் அந்த நாடாளுமன்றம் நடந்தென்ன ஆகப்போகிறது? பிரதமரின் இந்த துல்லியத்தாக்குதலால் சாகடிக்கப்பட்ட எண்பதுக்கும் மேற்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கவும்கூட மனமற்ற அந்த கூட்டத்தொடர் அப்படியொன்றும் நாட்டுமக்களுக்கு நலம் பயக்கும் முடிவுகளை எடுத்து விடப் போவதில்லை. ஆட்சியாளர்களின் அட்டூழியங்களுக்குப் பதிலடி கொடுக்க அடுத்த தேர்தல்வரை மக்கள் காத்திருப்பார்களெனச் சொல்ல முடியாது. ஏனெனில் நாட்டில் கலவரம் வெடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னதை மக்கள் கவனத்தில் வைத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.

-ஆசிரியர் குழு



கியூப மக்கள் வென்று வருவார்கள்
- ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ் தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

செம்பதாகையின் ஒரு துளி ரத்தம் 
லெனின், டிராட்ஸ்கி, ஸ்டாலின், புகாரின் 
- ப.கு.ராஜன்

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்
நந்திதா ஹக்ஸர்-  தமிழில்: செ.நடேசன்

இந்தியத் தொழிற்சங்க - இடதுசாரி  இயக்கங்களின்  முன்னுள்ள  சவால் 
- இக்பால்

நேர்காணல் :  அருந்ததி ராய் 
எழுத்து, போராட்டம் மற்றும் சீருடல் பயிற்சி...?
- ஐஸ்வர்யா சுப்ரமணியம்  - தமிழில்: ராஜ்தேவ்

சிறுகதை : ரயில் பிரயாணம் - லி.ரா.

ப்ரமூதியா ஆனந்த தூர் : தீவுச்சிறையும் விடுதலை இலக்கியமும்
எஸ்.வி. ராஜதுரை


பிரதிகளுக்கு : ந.பெரியசாமி 9487646819



Friday, November 4, 2016

யோகா: வரலாறும் பிரச்சாரமும் - ஜெயகாந்தன் மஞ்சாலுமூடு

னிதகுலத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படுத்துகின்ற ஒற்றை மூலிகையாக யோகாவை கடந்த ஜூன் மாதம் எல்லா பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் கொண்டாடின. ஜூன் 21-ஐ உலக யோகா தினமாக 135 நாடுகள் “ஆசன” விழாவாய் கோலாகலமாய் கொண்டாடியதாக செய்திகள் வெளிவந்தன. பிரபலங்களும் திரை நட்சத்திரங்களும் ஆட்சியாளர்களும் தங்களுக்கு மலிவான விளம்பரமும் மத்திய அரசின் ஆசியும் பெற இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினார்கள். அறிவு படைத்தோரும் அறிவற்றவர்களும் ஒரு மாயவலையத்திற்குள் மாட்டியவர்களைப்போல் அதன் பின்னால் சென் றனர். 135 நாடுகளில் நடத்தப்பட்டதனால்(!) யோகா அறிவியல்பூர்வமான ஒன்றாகப் பிரச்சாரத் தம்பட்டங்கள் பரப்பப்படுகின்றன. உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் போதைப் பொருள் பழக்கம் உள்ளதினால் அதுவும் சரியான ஒன்றே என்று வாதிட மேற்கூறிய கருத்து உதவலாம். அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாத பல்வேறு சிகிச்சை முறைகளை வளர்ப்பதற்கு மத்திய அரசு கோடிக்கணக்கான தொகை செலவிட்டு செயல்படுத்துகின்ற ஆயுஷ் துறையின் கீழ் யோகாவையும் உட்படுத்தியிருக்கிறது. சோதிடமும் இத்துறையின் கீழ்தான் இயங்குகிறது!  

சாதி மத அரசியல் பேதமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக யோகா இன்று மாறிக்கொண்டிருக்கிறது. சூரியநமஸ்காரம் தவிர்த்த யோகாவை வரவேற்பதில் பிரச்சினை ஏதுமில்லையென சில முஸ்லீம் அமைப்புகளும் கூறிவிட்டன. பாதிரிமார்கள் யோகாவை கற்பதிலும் கற்பிப்பதிலும் கிறிஸ்தவ விரோதமாக ஒன்றுமில்லையென அதன் மதத்தலைமை அனுமதியளித்துள் ளது. இந்திய மாநிலங்கள் அனைத்தும் யோகாவை அரசு விழாவாக கொண்டாடியபோது பீகார் மாநில அரசு மட்டும் அதை அரசு விழாவாக  நடத்தமாட்டோம் என முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வித்திட்டத்தின் கீழ் யோகா பயிற்சியளிப்பது தொடர்பாக ஆலோசனைகள் வலுப்பெறுகிறது. பல வருடங்களாக பள்ளிகளில் நடைபெற்றுவந்த உடற்பயிற்சி கல்வி இப்போது இல்லை, அதற்கான உடற்பயிற்சி ஆசிரியர்களையும் சமீப காலமாக நியமிப்பதில்லை. யோகாவில் பட்டம் பெறுபவர்களுக்கு யோகா ஆசிரியர்களாக பள்ளிகளில் நியமனம் பெற வாய்ப்புகள் உருவாகின்றன. இலட்சக்கணக்கான ஆசிரியர்களை இப்படி நியமனம் செய்து சங்பரிவாரத்தின் ஒரு முக்கிய நிகழ்ச்சிநிரல் அரசுத்திட்டமாக வெகுவிரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அபாயத்தை கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது.

ஊடக கவனம் கிடைக்கிற, அனைவராலும் வரவேற்கப்படுகிற யோகாவைப் பற்றியும் அதன் வரலாறு மற்றும் நிகழ்காலத் தேவை குறித்தும் அறிவியல்பூர்வமான ஒரு அலசல் தேவைப்படுகிறது. அந்த அலசலின் ஒரு எளிய துவக்கமாக இக்கட்டுரை அமைந்தால் மகிழ்ச்சியே. இன்று கொண்டாடப்படுகிற யோகாவும் பழங்கால இந்தியாவின் நூல்களில் விளக்கப்படுகிற அல்லது பழக்கத்தில் இருந்த யோகாவும் ஏதேது கோணங்களில் ஒற்றுமைப்படுகிறது அல்லது வேற்றுமைப்படுகிறது என்று ஆராய்வது இதற்கு உதவியாக அமையும்.

யோகாவின் பழமை

மூன்று தலைகளோடு பத்மாசனத்தில் இருக்கிற ஒரு யோகியின் கற்சிற்பம் மொகஞ்சதாரோ-ஹரப்பா அகழ் வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்றது. இது சிவனின் சிற்பம் என்ற கருத்தும் உள்ளது. எனவே ஆரியர் வருகைக்கு முன்னரே யோகா இந்தியாவில் பிரச்சாரத்தில் இருந்தது என்று வாதிடுவோரும் உள்ளனர். ஒரு சில உபநிடதங்களிலும், புத்த-சமண இலக்கியங்களிலும் யோகாவை விளக்கும் கருத்துக்கள் உள்ளன. ஸ்வேதசொதரோ உபநிடதம் யோகாவைப்பற்றி பல்வேறு அத்தியாயங்களில் விளக்கமாக கூறியிருக்கிறது. தலையும் கழுத்தும் மார்பும் நேராகப் பிடித்து உடல் அசையாமல் மனதையும் புலன் களையும் இதயத்தோடு ஒருங்கிணைத்தால் பண்டிதரான ஒருவர் பிரம்மம் எனும் தோணியேறி பயத்தின் எல்லா ஆறுகளையும் தாண்டலாம் என ஸ்வேதசொதரோ உபநிடதமும், ஐம்புலன்களும் மனமும் செயல்படாமல் இருப்பதும், புத்தி அசைவற்று இருப்பதுமான ஒரு பிரத் யேக நிலைதான் யோகா என்றும் புலன்களை ஸ்திரத்தன்மையோடு கட்டுப்படுத்த முடிகிற ஒருவருக்கு புத்தியின் ஊசலாட்டங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும் கடோ உபநிடம் கூறுகிறது.

உபநிடதங்களிலும் புத்த-சமண இலக்கியங்களிலும் முக்கியமாக சாங்கிய தரிசனத்திலும் விளக்கப்பட்டிருந்த யோகா தத்துவங்களை ஒன்றுதிரட்டி ஒரு தனி தத்துவமாக உருவாக்கியவர் பதஞ்சலி எனும் முனிவராகும். “சமாதி, சாதன,விபூதி, கைவல்யம்” என்று நான்கு பகுதிகளில் 195 ஸுக்தங்களாக ஒரு சிறந்த கட்டமைப்புள்ள தரிசனமாக யோகாவை பதஞ்சலி உருவாக்கினார். மிகச் சரியானதொரு விளக்கத்தை யோகாவிற்கு பதஞ்சலி இவ்வாறு அளிக்கிறார்  “ யோகா சித்தவிருத்தி நிரோதா:” ஒருவருக்கு பல்வேறு உணர்ச்சிகள் உள்ளன, அவற்றின் வெளிப்பாடுகளே காம குரோத மோக போட்டி மனப்பான்மைகள். இவற்றிலிருந்து வெற்றி அல்லது விடுதலை கிடைத்தால் மட்டுமே அவருக்கு இயற்கையோ டான தொடர்பைப் பற்றிய தவறான ஞானம் அற்று “கைவல்யம்” அடையமுடியும். சித்த விருத்திகளிலிருந்து விடுதலை கிடைக்கவேண்டுமென்றால் ஸ்திரத்தன்மையற்ற மனதை மையப்படுத்தி நிலைபெறுவதற்கான பயிற்சிகள் தேவைப்படுகின்றன. “கைவல்யம்” அடைவதே யோகாவின் நோக்கம். இதை அடைய புருஷன் இயற்கையிலிருந்து வேறுபட்டவன் என்ற சரியான ஞானம் ஏற்படவேண்டும். புருஷன் அழிந்தாலோ கைவல்யம் அடைந்தாலோ இயற்கையானது மற்ற புருஷர்களுக்காக நிலைநிற்குமென்று யோகசூத்திரம் கூறுகிறது. அதாவது “சித்த விருத்தி நிரோதா” வழியாக கைவல்யம் அடைவதே யோகாவின் நோக்கமென்று யோகாவின் புராதனத் தத்துவம் கூறுகிறது.

அஷ்டாங்க மார்க்கம்

“யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரண, தியானம், சமாதி” எனும் எட்டுப்படிகள் யோகா பயிற்சியில் உள்ளன. எட்டுப்படிகளும் சரியான செய்முறைகளால் “பரமானந்தம்” எனும் முழுமையை அடையலாமென்று யோகா விளக்குகிறது. இந்த எட்டுப் படிகளில் ஒன்று மற்றொன்றிலிருந்து உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. ஆனால் இன்று ஆசன யோகா மட்டுமே கொண்டாடப்படுகிறது. அதுவும் யோக சூத்திரம் விளக்கும் படியாகவுமில்லை. எட்டுப்படிகளில் முதல் இரண்டு படிகள் ஒழுக்கமான வாழ்க்கை சம்பந்தப் பட்டதாகும். “அஹிம்சை, சத்யம், பிரமச்சரியம், அபரிக்கிரகம்” என்னும் ஐந்து விரதங்களாகும் யமம். இரண்டாம் படியில் அக-புற தூய்மை, தவம், மகிழ்ச்சி, சுயஞானம், ஈஸ்வர தியானம் ஆகியவை இடம் பெறுகின்றன. சுகமான அசைவற்ற இருப்பை (உட்காருதல்) ஆசனம் எனப்படுகிறது. உடலை அசைவற்ற நிலையில் சுகாசனத்தில் நெஞ்சையும் தலையையும் நிமிர்த்தி வைத்து நாலாம் படியான பிராணாயாமம் செய்யவேண்டியது. கட்டுப்படுத்தலுக்கு உள்ளாக்கிய மூச்சு இழுத்தலும் மூச்சு விடுதலும் தான் பிராணாயாமம். புறச்செயல்களிளிருந்து புலன்களை விலக்கி மனதை ஒருமுகப்படுத்துவதே பிரத் தியாகாரம். மனதை உடலின் புறமோ அகமோ உள்ள ஒரு பிரத்தியேகப் புள்ளியில் மையப்படுத்தி நிலைபெறச் செய்வது தாரண. இவ்வழிகளாக மனதின் ஒருமுகப் படுத்திய நிலையை எட்டுவது தியானம். தியான வழியாக உடலும் மனதும் ஒன்றோடொன்று இணைந்து இரண்டும் ஒன்றாக மாறுகின்ற ஒரு உன்னத வாழ்நிலையை சமாதியென்று கூறுகிறது. முற்றும் துறந்து புருஷன் பரபிரஹ்மத்திற்கு இணையாக தூய்மை பெறுவதே கைவல்யம். வாழ்க்கையிலிருந்து பரிபூரணவிடுதலை பெறுவதே பரமானந்தம் அதுவே கைவல்யம்.

இன்று யோகா சாமியார்கள் அனைவரும் ஆடம்பர வாழ்க்கையின் உயர் படிநிலைகளை எட்டியவர்களும் கோடீஸ்வரர்களும் ஆவர். அதுவே அவர்களுக்கு கைவல்யம். ஆசன யோகாவும் பிராணாயாமாவும் ஆகும். பாபா ராம்தேவின் விற்பனைச்சரக்குகள். ஸ்காட்லாந்தில் அவருக்கு ஒரு தீவே சொந்தமாக உள்ளது என்பது ஊரே அறிந்த செய்தி. யோகாவின் தந்தையான பதஞ்சலியின் பெயரைப் பயன்படுத்தி விற்பனை செய்கிற வியாபாரியாகவும் யோகாவின் உயர்ந்தபடியான ‘சமாதி அல்லது கைவல்யம்” அடைந்தவராக(!) ராம்தேவ் திகழ்கிறார் என்பதிலிருந்தே நாம் சிலவற்றை ஊகித்துக்கொள்ள முடியும். டபுள்ஸ்ரீ ரவிசங்கர் சுதர்சன கிரியா என்று பெயரிடப்பட்ட பிராணயாமத்தை விற்பனை செய்கிறார். உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடிகள் விலை மதிக்கிற சொத்து இவருக்குண்டு. இவர்கள் மட்டுமன்றி யோகா சாமியார்கள் அனைவருமே சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் கோடிஸ்வரர்களும் ஆவார்கள்.

                           II
இன்று பிரச்சாரம் செய்யப்படுகின்ற ஒரு யோகாசன முறையும் பதஞ்சலி முனிவரின் யோகா சூத்திரங்களைப் பின்பற்றப்படுவதில்லை. 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு துவங்கப்பட்டதும் 15-16ஆம் நூற்றாண்டுகளில் வலிமையடைந்ததுமான ‘ஹடயோகத்தின்’ தத்துவார்த்த மிச்சசொச்சங்களும் நவீன உடற்பயிற்சி முறைகளும் சேர்ந்த கலவையே இன்றைய யோகா. இது புராதன இந்தியா அளித்த கொடையுமல்ல, நமது பாரம்பரிய சொத்துமல்ல, உலகிற்கு நாம் அளித்த விலை மதிக்க முடியாத அறிவுமல்ல.

ஹடயோகா

ஹடயோக பிரதிபிகையும் சிவசம்கிதையும் ஹட யோகாவை விளக்குகிற பழமையான நூல்கள். பதஞ்சலியின் தத்துவத்தோடு ஹடயோகத்திற்கு தொடர்பில்லை. பின்னாட்களில் வியாக்கியானம் செய்து செய்து தொடர்புபடுத்தினர். 1896ல் எழுதப்பட்ட விவேகானந்தரின் ராஜயோகம் ஹடயோகத்தைப் புறக்கணிக்கிறது. சரியான தியானத்திற்கு உதவக்கூடிய அளவிற்கு சரிவர உட்காருதல் என்ற முக்கியத்துவம் மட்டுமே ஆசனத் திற்கு விவேகானந்தர் அளித்துள்ளார். யோகதரிசனத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும் விவேகானந்தரின் இராஜ யோகம் எனும் நூல். 70 வருடங்களுக்குப் பிறகு பி.கே. எஸ்.அய்யங்கார் இயற்றிய “Light on Yoga” என்கிற நூல் யோகாவின் மறைநூல் என்றறியப்படுகிறது.  ஹட யோகம் மட்டுமல்லாது யோகதரிசனத்தில் ஏற்பட்ட எல்லா பரிணாமங்களையும் விளக்குகின்ற விதமாக இந் நூல் அமைந்துள்ளது. புதிய ஆசனங்கள் உருவாகியதும் யோகாவைப் பற்றிய புதிய நூல்கள் எழுதப்பட்டதும் இந்த நூலை அடிப்படையாக கொண்டேயாகும்.

ஒருவருக்கு முதுமை பாதிக்காத நிலையை உருவாக்கு வதே ஹடயோகாவின் இலட்சியம். பாலியல் சம்பந்த மான பூடகத்தன்மையுடைய செய்முறைகள் (erotico mystical practice) என்று ஹடயோகத்தை அழைக்கப்படுவதுண்டு. இயற்கை நியதிகளையும் விதிகளையும் மீறி வாழ்வதற்கான வழிமுறைகள் இதில் உள்ளடங்கியிருக்கிறது. “ஜரா-நர-மிருத்யுவை” ஜெயிப்பதாகும் அது. அதற் காக நாலுவிதமான முறைகள் உண்டு. “கிரியைகள், ஆசனங்கள், முத்திரைகள், பிராணாயாமம்”. இவற்றில் “கிரியைகள்” ஆறுவிதமுள்ளன. அவைகளை ஷட்கர்மங்கள் என்று அழைக்கப்படுகிறது. அவைகள் தவுதி, வஸ்தி, நேதி, திறாடக, நவுளி, கபாலபாட்டி. 

தவுதி என்பது வயிற்றை சுத்தப்படுத்துவதற்கு, சுத்தமான துணியைச் சுருட்டி விழுங்கியப் பிறகு ஓர் ஓரத்தைப் பிடித்து திரும்ப இழுத்து எடுப்பது. நேதி என்பது ஒரு நூலினை மூக்கின் ஒரு துவாரம் வழியாக உள்ளே நுழைத்து இன்னொரு துவாரம் வழியாக இழுத்து எடுப்பது அல்லது தண்ணீரைப் பயன்படுத்தி இந்த மாதிரி செய்வது. நீர் எனிமா மூலம் வயிறைச் சுத்தம் செய்வது வஸ்தி. ஒரு பிரத்யேகப் புள்ளியில் கண்பார்வையை மையப்படுத்தி கண்களை தண்ணீர்மயமாக்கி சுத்தம் செய்தல் திறாடக. நவுளி என்பது வயிறை  எக்கி ஒட்டிப் பிடிக்கவைத்து மஸாஜ் செய்வது. கபாலபாட்டியானது வயிறை உள்ளாலே எக்கிஎக்கி மூச்சுக் கட்டுப்பாடு செய்வதாகும். கபாலபாட்டி தினமும் செய்தால் உடலில் ஒரு தனி ஆற்றல் உருவாகுமென்றும் அது இயற்கையான அணுக்கதிர் வீச்சு (natural radiation) என்றும் புற்று நோய் ஒழிய இது சிறந்த மருந்தென்றும் ஏழைகளான புற்றுநோயாளிகளுக்கு கபாலபாட்டியானது ஒரு வர தானமென்றும் ராம்தேவ் பிரச்சாரம் செய்கிறார். உடல் கூறு அறிவியல் பற்றிய அறியாமையால் பண்டைய ஹடயோகிகள் இதுபோன்ற முட்டாள்தனங்களை செய்தனர். ஆனால் இன்று வியாக்கியானங்கள் மூலம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக யோகாவை பிரச்சாரம் செய்வதைத்தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

ஆசனங்கள்

சிவ சம்ஹிதா 84 ஆசனங்கள் பற்றி கூறினாலும் சித்தா சனா, பரமாசனா, உக்கிராசனா, ஸ்வச்திகாசனா ஆகிய 4 ஆசனங்களை மட்டுமே செய்முறைப்படுத்த வலியுறுத்துகிறது. ஸ்வச்திகாசனா, கோமுகாசனா, வீராசனா, கூர்மா சனா, குக்குடாசனா, உதனகூர்மாசனா, தனுராசனா, மத்சி யாசனா, பச்சிமதானா சனா, மயூராசனா, சவாசனா, பத்மாசனா, சிம்மாசனா, பத்திராசனா ஆகிய ஆசனங்கள் பற்றி மட்டுமே கூறுகிறது ஹடயோக பிரதீபிகை. இன்று பிரச்சாரம் செய்யப்படும் பல ஆசனங்களை இந்நூல்களில் பார்க்க முடியாது. ஆசனங்களை முக்கிய இடத்திற்கு கொண்டுவந்த B.K.S. ஐயங்காரின் நூலில் 200 ஆசனங்களும் அதற்கான 592 படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 

முத்திரைகள்

மகாமுத்ரா, மகாபந்தா, மகாவேதா, கேஜரி, உட்யான பந்தா, மூலபந்தா, ஜலாந்தரபந்தா, விபரீதகரணி, வஜ் ரோலி, சக்திசாலனம் ஆகியவை. ஹடயோக பிரதீபிகையும் சிவசம்ஹிதையும் இந்த முத்திரைகளை ஒரே முக்கியத்துவத்தோடு விளக்குகின்றன. மரணம் மற்றும் முதுமையை வெல்வதற்கு இவற்றைச் செய்யவேண்டும் எனக் கூறுகின்றன. 

ஸ்தூல பிரபஞ்சமும் சூட்சும பிரபஞ்சமும் மனித உடலில் உள்ளன, ஆறும் கடலும் மலையும் சூரியனும் சந்திரனும் உடலில் உள்ளடங்கியிருக்கின்றன. பல்வேறு ரேதஸுக்களால் உருவான சந்திரன் சொர்க்கத்தின் ஒரு துளி அமிர்தமாகும். அமிர்து பொழிப்பது சந்திரனாகும். பனியும் மழையும் பெய்கிறதும் சந்திரனிலிருந்தாகும். சந்திரனிலிருந்து பொழிகிற அமிர்த ரசம் செடிகொடிகள் வழியாக மனிதனை அடைகிறது. சூரிய சந்திரன்கள் அமிர்தத்தைக் கைப்பற்ற நடத்துகின்ற பலபரீட்சையே பூமியில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறதென்று ஹடயோகிகள் நம்புகின்றனர். சூரியனுக்கு ஆதிக்கம் கிடைக்கிற காலமும் சந்திரனுக்கு ஆதிக்கம் கிடைக்கிற காலமும் உள்ளன. சந்திரன் அமிர்தத்தைச் சேமிக்கிறது, சூரியன் அதை அருந்தி வற்றச் செய்கிறது. சூரியனுக்கு ஆதிக்கம் வருகிற காலத்தில் நீர்த்தடங்கள் வற்றி வறள்கின்றன. அதுபோலவே மனிதனும். இதுதான் மரணத்தின் காலம்- உத்தராயன காலம். தட்சிணாயன காலம் என்பது சந்திரனுக்கு ஆதிக்கம் வருகின்ற காலம். அதாவது பசுமையின் காலம். பிரபஞ்சத்தின் இந்தக் கட்ட மைப்பு தான் மனிதனிலும் இருப்பதாக ஹடயோகிகள் அறிவியல் சமைக்கிறார்கள். சந்திரன் தலையிலிருந்து அமிர்து பொழிந்து கொண்டேயிருக்கிறது, சூரியன் அடிவயிற்றிலிருந்து அதை அருந்தி முடிக்கிறது. சந்திரன் பொழிகிற அமிர்தத்தை சூரியன் அருந்தி முடிப்பதனால் உடலில் நரையும் முதுமையும் ஏற்படுகின்றன. எனவே சந்திரன் பொழிகிற அமிர்தை சூரியன் அருந்தாமலிருக்க வேண்டுமானால் சூரியனை ஏமாற்றும் வகையிலான  விபரீதகரணி முத்திரையைச் செய்ய வேண்டும். கழுத்தை மடக்கி தரையில் குத்தி காலை மேல்நோக்கி நிறுத்தும் போது சந்திரன் பொழியும் அமிர்தம் தலையிலிருந்து கீழ்நோக்கி வந்து சூரியனுக்கு கிடைக்கும் வாய்ப்பு தடுக்கப்படும் விதமாக ரொம்பவும் புத்திசாலித்தனமாக வகுக்கப்பட்ட முத்திரையாம் இது. 

இந்த விபரீதகரணி முத்திரையின் நவீன பதிப்பாகும் சீர்ஷாசனம். தொடர்ந்து ஆறுமாதம் விபரீதகரணி செய்து வந்தால் ஜரா நரைகள் மாறும் என்றும் ஒரு நாளில்  இரண்டு மணி நேரம் தொடர்ந்து செய்துவந்தால் மரணத்தை வெல்லலாம் என்றும் ஐயங்கார் முதல் பழங்கால நூல்கள் வரை கூறுகின்றன. இந்தளவுக்கு முட்டாள் தனமான சித்தாந்தத்தை மறைத்துப் பிடிப்பதற்கு இன்று இதைச் செய்தால் ஜீரணசக்தி, மலச்சிக்கல், மூலம், பவுத் திரம், மாதவிடாய் பிரச்சினைகள், கருப்பை நோய்கள், மலட்டுத்தனம், பார்வைக்கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி என்று பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆசனங்களின் அரசனாக சீர்ஷாசனத்தை கொண்டாடுவதோடு தொய்வு ஏற்படுகின்ற மூளைக்கு டானிக்காகும் என்றும் இதன் மூலம் மூளையை நோக்கி ரத்தஓட்டம் அதிகரிக்கும் என்றும் போதிக்கிறார்கள். 

நமது மூளைக்குத் தேவையான ரத்தம் முறையாக கிடைக்கும் விதமாகத்தான் நமது உடற்கூறு பரிணாமம் வழி அமையப்பெற்றுள்ளது. மூளையின் அமைப்பு சம்பந்தமான அறியாமை பெரிய இன்னல்களை உருவாக்கும். மூளையை நோக்கிய ரத்தஓட்டம் கூடினாலோ குறைந்தாலோ பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தும். மிருதுவான உயிரணுக்களால் அமையப் பெற்றுள்ள மூளை இதன்மூலம் இற்றுப்போகவோ இறுக்கமேற் பட்டு நாசமடையவோ வாய்ப்பு அதிகமுள்ளது. கண்களில் திரவ அழுத்தம் அதிகரித்தால் Glukoma நோய் வருவதற்கு காரணமாகிவிடும்.

வஜ்ரோளி முத்திரை 

சந்திரனில் இருந்து பொழிகின்ற அமிர்தரசம் இரச தாது, இரத்த தாது, அஸ்தி தாது, மஜ்ஜ தாது, வேத தாது, சுக்ல தாது என்று ஆறு தாதுக்களாக பரிணமிக்கிறது. இதன் ஒவ்வொரு கட்டமும் உருவாகிவர ஐந்து நாட்களாகும், முப்பது நாட்களில் ரேதஸ் உருவாகிறது. இவ்விதம் உருவாகின்ற ரேதஸை பாதுகாப்பதே ஹடயோகியின் கடமை. அதற்கான இன்னொரு வழியே வஜ்ரோளி முத்திரை. ஆண் பெண்ணுடலில் செலுத்துகின்ற ரேதஸை திருப்பி எடுக்கிற செய்முறைதான் வஜ்ரோளி முத்திரை. அதற்காக கடுமையான பயிற்சிகளை ஹடயோகிகள் செய்யவேண்டியுள்ளது. ரேதஸ் சந்திரனுக்கு ஈடானதும் மாதவிடாய் ரத்தம் சூரியனுக்கு ஈடானதுமாகும். இரண் டும் யோகியின் உடலில் இணைக்கப்பட வேண்டும்.

சக்தி சாலன முத்திரை

குண்டலினியை உணர்த்துவதற்கான செய்முறை. ரேதஸை அமிர்தமாக்கி மாற்றுவது குண்டலினியாகும். மூலாதாரத்திலிருக்கிற குண்டலினியை படிப்படியாக மேல்நோக்கி உயர்த்தி சிரத்தில் சேர்க்கும்போது ரேதஸ் அமிர்தமாக மாறுகிறது. அது கீழ்நோக்கி பரவும்பொழுது உடல் முழுவதும் அமரத்துவத்தை எட்டுகிறது. வயிற் றின் கீழ்ப்பகுதியில் பாம்பை போன்று சுருண்டு தூங்குகின்ற குண்டலினியை உணர்த்துவதற்கு பத்மாசனத்தில் இருந்து பாதங்களை பயன்படுத்தி அழுத்தித் தொடுதல் வழியாகவும் வஸ்திரிகா பிராணாயாமம் வழியாகவும் இந்த முத்திரை செய்யப்படுகிறது.

கேஜரி முத்திரை

கீழ்த்தாடையிலிருந்து நாக்கின் தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து நாக்கின் வெளித்தள்ளுதலை நீட்டிக்கிற செயல். கண்ணிமைகளின் மத்தி வரை வளைத்துக் கொண்டுவருமளவிற்கு நாக்கை நீட்ட வேண்டும். சந்திரன் பொழிகின்ற அமிர்தத்தை நேரடியாக யோகி அருந்துவதற்காகத்தான் இது செய்யப்படுகிறது. செடி கொடிகளின் வழியாக கிடைப்பதில் ஏற்படும் சேதாரத்தை இது போக்குகிறது. நாக்கின் தொடுப்பு அறுந்தால் நாக்கு பின்னோக்கிச் சென்று சுவாசக்குழாய் அடைந்து மரணம் ஏற்பட வாய்ப்புள்ள இச்செயலை இன்று எந்த யோகியும் செய்ய முன்வரமாட்டார்கள் என நம்பலாம்!. 

பிராணாயாமம்

நாடிகளைச் சுத்தம் செய்வதற்கான செய்முறை. இடா, பிங்களா என்ற இரண்டு நாடிகள் வழியாக மூச்சு இழுத்தலும் விடுதலும் நடைபெறுகிறது என்று ஹடயோகிகள் விவரிக்கிறார்கள். இரண்டு நாடிகளும் ஒன்றோடொன்று பிணைந்து இடது நாடி வலது மூக்கின் துவாரத்திலும் வலது நாடி இடது மூக்கின் துவாரத்திலும் திறக்கிறது. இந்த நாடிகளின் மத்தியின் ஊடே சுஷ்முனா கடந்து செல்கிறது. இதன் நீளம் மலத்துவாரம் வரை நீள்கிறது.  சுஷ்முனாவில் ஆறு சக்கிரங்கள் கீழிருந்து மேலாக அமைந்துள்ளன. இந்த நாடிகளில் படிந்திருக்கிற அழுக்குகளை சுத்தப்படுத்துவதே பிராணாயாமத்தின் நோக்கம். வலது மூக்கை இடதுகை விரல்களால் அடைத்து இடது துவாரம் வழியாகவும் அதேபோல் திருப்பியும் மூச்சு இழுத்தலும் விடுதலும் செய்தலே இந்த முறை. உடலின் மூச்சு இழுத்தல் விடுதல் சம்பந்தமான கற்பனைகளும் உடலியல் சம்பந்தமான அறியாமைகளும் முட்டாள் தனமான சித்தாந்தங்களை உருவாக்கிட வழிவகுத்தது. பரிசுத்தி என்ற ஜோடனைக்காக உருவாக்கப்பட்ட இம் முறைகள் இன்று புதிய விளக்கங்களோடு உலா வருகின்றன. இரத்த அழுத்தம், இதயகுழாய் கோளாறுகள், மூட்டுவலி, சைனஸைடிஸ், பராலிசிஸ், ஆஸ்துமா, ஒவ்வாமை முதலியவற்றுக்கான சர்வரோக நிவாரணியாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சுதர்சன கிரியா பிராணாயாமம் அதி வளியோட்டத்திற்கு  (Hyper Ventilation) காரணமாகிறது. உடலின் கரியமில வாயுவின் நிலையை குலையச்செய்து இரத்த அணுக்க ளின் தேவையற்ற சுருங்கி-விரிவடைதல் மூலம் உடலின் பல்வேறு கோளாறுகளுக்கு காரணமாகிறது. உடற்கூறியல் தொடர்பாக ஒரு ஆரம்பக்கல்வி மாணவனுக்குண் டான புரிதல்கூட இல்லாமல் மூடநம்பிக்கையானதும் கற்பனைகளில் மூழ்கியிருப்பதும் அறிவியலுக்குப் பொருத்தமற்றதுமான நம்பிக்கைகளும் விளக்கங்களும் தான் எல்லா யோகா முத்திரைகளிலும் ஆசனங்களிலும் அடங்கியிருக்கின்றன. ஒரு சிலது மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜரா நரைகள் பாதிக்காமல், முதுமை ஏற்படாமல் அனேகாயிரம் வருடங்கள் வாழ்வதற்கான மோகமும் அதற்கான செயல்திட்டங்களும் விளக்குகிற கற்பனாவாத சித்தாந்தங்களே யோகா தரிசனங்கள். இதுபோன்ற மோகமும் கற்பனையும் உலகம் முழுவதுமுள்ள பண்டைக்கால மனிதகுலத்திடம் இருந்தது என்பது வரலாற்று உண்மையே.

                              III

15 முதல் 18-ஆம் நூற்றாண்டுவரை ஹடயோகிக் குழுக்கள் இந்தியாவில் வலிமையாக இருந்தன. வணிகத்தின் போக்கை மட்டுமல்ல அரசரைக்கூட கட்டுக்குள் வைக்கும் வலிமையை இவர்கள் பெற்றிருந்தனர். கிழக்கிந்திய கம்பனியின் வருகை இவர்களின் வலிமையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஹடயோகிகள் யோகாவை ஒரு மேடை நிகழ்ச்சியாக மாற்றி வருவாயை ஏற்படுத்திக்கொண்டார்கள். உடலின் மெய் வழக்கங்களை காசாக மாற்றுவதற்கு சர்க்கஸ் முறைகளையும் யோகாவோடு இணைத்துக்கொண்டனர். தனிமையாகவும் மறைவாகவும் பிரத்யேகமான சூழலிலும் செய்யவேண்டியதென்று போதிக்கப் பட்டவை மேடைநிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டன.

இன்றைய யோகா

19 நூற்றாண்டின் மத்தியகால அளவில் உடலழகு மேம்படுத்தலில் ஒரு புதிய கலாச்சாரம் ஐரோப்பாவில் வளரத் துவங்கியது. ஜிம்னாஸ்டிக்ஸ், தற்காப்புக்கலைகள் முதலியவை பெரிய அளவில் பிரபலமடைந்தன. காலனியாதிக்க இந்தியாவில், உடல்வலிமையற்றவர்களே இந்தியர்கள் என்ற பிரச்சாரம் மேலோங்கி நின்றது. நவீன உடலழகுக்கலையின் தந்தையெனவும் ஐரோப்பாவின் நாயகன் எனவும் பிரபலமடைந்த யூஜின் சாண்டோ இந்தியாவிற்கு வந்து தனது பயிற்சித்திட்டத்தை சந்தைப்படுத்தினார். தனது பயிற்சித் திட்டத்தை பின்பற்றினால் இந்தியர்கள் ஐரோப்பியர்களைப் போல உடலழகையும் வலிமையையும் பெறலாமென்றும் அதுவே விடுதலைக்கான சிறந்த மார்க்கமென்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. காலனியாதிக்க இந்தியாவில் இந்தக் கருத்து பல்வேறு குழுக்களிடையேயும் தனிநபர்களிடையேயும் பெரும் பிரச்சாரம் பெறவும் தாக்கம் ஏற்படுத்தவும் செய்தது. சாண்டோவால் கவரப்பட்டவரும் அவரது மானசிக சிஷ்யனுமாகிய அன்றைய ஒரு சிற்றரசாகிய அவுத்-தின் மன்னன் பிரடிநிதிபந்த், கருவிகளின் உதவி தேவைப் படாமல் செய்யப்படுகிற ஒரு உடற்பயிற்சி முறையை உருவாக்கினார். அதுவே சூரிய நமஸ்காரம். 20-ஆம் நூற்றாண்டின் ஒரு படைப்பாகிய சூரிய நமஸ்காரத்தின் மேல், பழமையானது என்று ஒரு போலிப்பெருமை  வர்ணம் பூசுப்பட்டதை தவிர வேறொன்றுமில்லை.

சாண்டோவால் உத்வேகமடைந்த ஜெ.சி.குணே (குவல்யானந்தா) இந்தியாவிற்கே உரித்தான ஒரு உடல்வலிமை திறம்படுத்துதல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென விரும்பினார். இதற்காக  ஐரோப்பாவில் அன்று பிரபலமடைந்திருந்த ஸ்வீடிஷ் உடற்பயிற்சி முறையான Ling முறையையும் இந்தியாவின் சில யோகாசன முறைகளையும் ஒன்றுபடுத்தி ஒரு கலவையாக மனம் மற்றும் உடல்வலிமையை வலுவாக்குகிற ஒரு உடற்பயிற்சி முறையை வடஇந்தியாவில் பிரச்சாரம் செய்தார். இதற்காக 1921ல் அவர் பம்பாயில் “கைவல்யதாமா” என்று பெரிய அளவிலான பயிற்சிமையம் ஒன்றை துவக் கினார். ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத்தலைவர்கள் இந்த மையத்தை பார்வையிட்டதனால் இது மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இதே காலகட்டத்தில் தென் இந்தியாவில் கே.வி.அய்யர், டி.கிருஷ்ணமாச்சாரி போன்றோர் ஹடயோகாவையும் சாண்டோ பயிற்சி முறைகளையும் கலந்து புதுவிதமான ஆசனங்களைக் உருவாக்கி அவற்றுக்கு சம்ஸ்கிருத பெயர்களையும் சூட்டி பிரச்சாரம் செய்துவந்தனர். 1947 வரையிலும் டி.கிருஷ்ணமாச்சாரிக்கு மைசூர் அரண் மனையிலிருந்து யோகா பிரச்சாரத்திற்காக நிதி அளிக்கப்பட்டு வந்தது, அப்படி அது ஓர் அரசுத்திட்டமாகவே செயல்பட்டு வந்தது. சுதந்திர இந்தியாவில் அரசுத்திட்ட மாக அல்லாமல் மாறிய யோகாவை மறுபடியும் அரசுத் திட்டமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தற்பொழுது மிக நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது.

புராதன இந்தியாவில் மோட்சம் அடைவதற்காக (கைவல்யம்) துவங்கப்பட்ட யோகா பிறகு அமரத்துவம் பெறுவதற்கான ஒன்றாகவும், சிற்றின்பம் அளிக்கக்கூடிய தாந்திரிக முறையாகவும், 18ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு மேடை நிகழ்ச்சிகளான சர்க்கஸ் முறைகளாகவும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து உடலழகு / ஜிம்னாஸ்டிக் /சர்க்கஸ் முறைகளாகவும், 20ஆம் நூற்றாண்டில் உடற்பயிற்சியாகவும், இன்று மருத்துவமுறையாகவும் மாறி உள்ளது. பணம் ஈட்டுவதற்கான வழிகளில் மருத்துவத்துறை முதன்மையான இடத்தை எட்டியிருக்கிறது. இன்று அனைத்துமே சிகிச்சைமுறைகளாக சந்தைப்படுத்தப்படுகிறது. மியூசிக்தெரபி, அரோமாதெரபி, சைக்கோ-ரிலிஜியஸ் தெரபி, தியானசிகிச்சை என்பது போல் தற்பொழுது யோகா தெரபியும். 

புராதன இந்தியாவின் விசித்திரமான கற்பனைகளை நவீன அறிவியலோடு ஒத்துப் போவதற்கு பொருத்தமான காரணங்கள் இருப்பதாக நிறுவுவது என்ற  பிடிவாதம் தான் ஜே.சி.குணே போன்றவர்களுக்கு இருந்தது. இன்றைய யோகாவை ஒரு உடற்பயிற்சியாகக் கூட ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதன் பல பயிற்சிகளும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதும் தேவையற்றதுமாகும். யோகா சாமியார்களின் இது குறித்தான விளக்கங்களெல்லாம் உள்ளீடற்றவைகளும் அறிவியலுக்குப் பொருந்தாததுமாகும். யோகாவின் பின்னுள்ள சில மனோவியல் பயிற்சிகள் பலபேருக்கு ஒரு போதைச் சுக மனநிலையை அளிக்கிறது. போதைப் பொருள்களும் இதைத்தான் அளிக்கின்றன. இரண்டுமே கேடு விளைவிப்பதுகளே.

உதவிய நூல்கள் :
பாரதிய தர்சனம் - கெ.தாமோதரன்
இந்தியயுடே ஆத்மாவு- கெ.தாமோதரன்
வாழும் கலை - அருணன்
ஓஷோ தர்சனம் - ஜெயிம்ஸ்
ஓஷோ விமர்சனம் - இடமருகு
Dr.C. நாராயணன்- ஆய்வு உரைகள்.



நேர்காணல்: மீரா நந்தா

                          
Science in Saffron (காவியில் அறிவியல்) என்கிற நூலை அண்மையில் வெளியிட்டுள்ள மீரா நந்தாவை  மதமும் அறிவி யலும் குறித்த ஆய்வாளரான ஸ்டீஃபனோ பிக்லியார்டி (Stefano Bigliardi) இத்தாலிய பகுத்தறிவு இதழான `லாய்டோ’வுக்காக (L’Ateo)   நேர்காணல் செய்தார். மீராவும் ஸ்டீஃபனோவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்நேர்காணலின் ஆங்கில  மொழியாக்கத்தை (Butterflies and Wheels (2016 Jan 29)  இதழ் வெளியிட்டிருந்தது. 


தமிழில்: கவின் மலர்
 ஸ்டீ: உங்கள் கல்வி மற்றும் தொழில் குறித்து எந்தெந்த விஷயங்கள் குறிப்பிடப்படவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்களை நான் நாத்திகவாதி என்பேன். அதை சற்றே விரித்து, உங்கள் நாத்திகத்தின் வேர்களையும் காரணங்களையும் குறித்துப் பேசலாமா?

மீரா: என் அறிவுசார்/தொழில்சார் பாதையும் என் “நம்பிக்கை” பாதையும் பின்னிப் பிணைந்தவை. ஒன்றோடொன்று தாக்கம் செலுத்துபவை.

மரபுக்கும் புதிய சிந்தனைகளுக்குமிடையே அல்லாடிய படியும், ஒரு பெண்ணாக என் சொந்தத்திறனின் மெல்லிய பிரதிபலிப்புக்கும் ஆணாதிக்கத்திற்குமிடையே ஊசலாடிய படியும் நான் வளர்ந்தேன். நாட்டின் விடுதலைக்காக பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய படியே என் தந்தை தன் இளமைக்காலத்தைக் கழித்தார். ஆழமான தேசியவாதத்திற்கும் தேசியவாத மனோநிலை தரும் ‘அவர்களா நாங்களா’ என்கிற குறுகிய எண்ணங்களுக்கெதிரான கலகத்துக்குமிடையில் சிக்கியிருந்தேன், இறுதியாக ஆனால் பெரும்பாலும், நம்பிக்கைக்கும் ஐயங்களுக்கும் இடையேயான போராட்டத்திலேதான் என் நாட்கள் கழிந்தன.

வட இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்து இந்த முரண்பாடுகளுடன்தான் வளர்ந்தேன். இந்தியாவின் திட்ட மிட்டு நிர்மாணிக்கப்பட்ட முதல் நகரம் அதுவே. தேசத்தின் புதிய பிறப்பின் அடையாளமாக அந்நகரம் நிர்மாணிக்கப்பட்டது. ஜவஹர்லால் நேருவின் கற்பனையிலும், பிரான்ஸின் புகழ்பெற்ற நகர் நிர்மாண நிபுணரான  லெ கார்புசியரின் வடிவமைப்பிலும் உருவாக்கப்பட்டது சண்டிகர் நகரம். உள்கட்டமைப்பிலும் தோற்றத்திலும் நகரம் நவீனமாக உருவானது. ஆனால் அந்த இடத்திற்கும் மக்களுக்குமான இயல்பான தொடர்பே உருவாகவில்லை. என் பெற்றோர் உட்பட அங்கு வசித்த பலரும் நாட்டுப் பிரிவினையின் ரத்தக்களறியில் அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள்.

மரபான பழக்கவழக்கங்கள் மற்றும் இந்துமதக் கோட்பாடுகளிலும் அமிழ்ந்த ஒரு சூழலில் தான் வளர்ந்தேன். குடும்பத்தின் வழிபாட்டுத்தலங்களில், அருகிலுள்ள இந்து மற்றும் சீக்கியக் கோயில்களில் நடக்கும் பிரார்த்தனைகளில் பங்குகொள்வதும், ராமாயண, பகவத் கீதை பாராயணங்களும் வாழ்வின் பகுதிகளாகிவிட்டன. என் கடவுளர்களை நான் மிகத் தீவிரமாக உள்வாங்கினேன். பிரார்த்தனைகளிலும், பிற சடங்குகளிலும் நான் முன்னால் நிற்பேன்.

சந்தேகத்தின் விதைகளை விதைத்து, அதன் விளைவாக முற்றிலுமாக மத நம்பிக்கைகளை இழக்கச் செய்தது நான் கற்ற அறிவியல் (நுண்ணுயிரியல்). மூலக்கூறு உயிரிய லும் (Molecular biology)  உயிர்வேதியியலும் (Biochemistry) எனக்கு அறிமுகமானது தான் திருப்புமுனையாக அமைந்தது. அதிலும் டிஎன்ஏ-வின் இரட்டை நூலேணி   வடிவம் குறித்து வாசிக்கும்போது என் மூளைக்குள் தீப்பற்றியது. வாழ்வின் அறியப்படாத ரகசிய கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் எனக்குத் தெரியுமென்று  நான் உணர்ந்தேன். புராணங்களின் கடவுள்கள் மற்றும் பெண் கடவுளர்களைவிட அவ்விடைகள் மிகுந்த நம்பகத்தன்மையுள்ளவை என்றும் தோன்றியது. அதிலிருந்து நான் வழிபடவே இல்லை.

அறிவியலில் மிகத் தீவிரமாகி, பிஎச்.டி ஆய்வு செய்ய முடிவெடுத்தேன். இந்தியாவின் மேல்தட்டு நிறுவனமான புதுதில்லி ஐஐடியில் பிஎச்.டி ஆய்வை முடித்தேன். ஆனால் ஆராய்ச்சியின் குறைவான தரம், அதிகாரமிக்க, ஏறத்தாழ நிலப்பிரபுத்துவமான முறையில் இயங்கும் பரிசோதனைச்சாலைகள், அவற்றுக்கும் வெளியுலகிற்கும் எத்தொடர்புமில்லாத தன்மை இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் (1983ல் நான் உயிரி தொழில் நுட்பத்தில் என் முதல் பிஎச்.டியை முடித்திருந்தேன்) உள்நாட்டில் வளர்ந்திருந்த காந்தியம் உட்பட பல் வேறு தத்துவங்களைக் கற்ற முக்கியமான அறிவுஜீவிகளாலும், writings of Critical Theory (Horkheimer and Adorno) மற்றும் அறிவியலின் புரட்சிகர தத்துவாதி பால் ஃப்யெராபெண்ட் உட்பட அறிவியலுக்கு எதிரான பலரின் மேற்குலக கருத்துக்களாலும் நவீன அறிவியல் கடும் தாக்குதலுக்குள்ளானது. அத்துடன் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டவரான தாமஸ் குன் மற்றும் ‘அறுபதுகளின்’ பெண்ணிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு இலக்கியங்களும் இப்பட்டியலில் உண்டு. (ஐரோப்பிய மையத்துவம் மற்றும் இந்தியாவின் நவீனத்துவம் போன்றவற்றின் மீது பின்நவீனத்துவ மற்றும் பின்காலனிய விமர்சனங்கள் வரத்தொடங்கியிருந்த நேரம் அது).

நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்கிறேன். நான் அறிவியலில் மேற்கொண்டு தொடரப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். ஒரு பெரிய நாளிதழிலில் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்) அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்கிற முடிவை பிஎச்.டி முடித்தவுடன் கைவிட்டேன். பின் அமெரிக்காவிற்குச் சென்று முதலில் வரலாறும் பின் அறிவியலின் தத்துவமும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் (ப்ளூமிங்டன்) பயின்றேன். அதன்பிறகு நியூயார்க்கில் உள்ள ரென்ஸெலேர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் இன்னொரு பிஎச்.டி முடித்தேன். 

என் இரண்டாவது கல்விப்புலப்பாதையை அறிவியலை ஆதரிப்பதற்காகவே அர்ப்பணித்தேன். அதுவே எனக்கு தனிப்பட்ட வகையில் விழிப்புணர்வையும் அறிவையும் வழங்கியது. இந்தியப் பண்பாட்டு வாழ்முறைகளில் புதிய ஞானத்தையும் மதச் சார்பின்மையையும் கொண்டுவரும் திட்டத்தில் தீவிரமாக வேண்டுமென தீர்மானித்தேன்.

என் பணிசார்ந்து நான் ஒரு வட்டப்பாதையை தேர்ந்தெடுத்திருந்தாலும், மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு ஐயங்கள் கொண்டு இயற்கைத்துவத்திற்கு ‘மாறிய’ அப் பயணத்திற்கு உண்மையாக இருந்திருக்கிறேன். அந்த மாற்றம் பல பத்தாண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேச்சரங்கம் ஒன்றில்தான் நிகழ்ந்தது.

ஸ்டீ: பல வடிவங்களில் “மாற்றுச்சிந்தனைகளை” விதைக்கும் நாடு என்றே தோற்றம் தரப் படுவதும் கூறப்படுவதும், மேலும் “ஒருவரின் உண்மையான சுயத்தைக்” கண்டடைவதற்கு இந்தியாவில் வழியுள்ளதெனவும் உங்கள் தாய்நாட்டைப் பற்றி இத்தாலியில் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த வழக்கமான இந்தியாவின் பிம்பத்தைத் தாண்டியும் ஒரு சிலர் அறிந்துள்ளனர். எடுத்துக்காட்டாக அதன் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியையும் அதன் விளைவான சிக்கல்களையும் அறிந்தவர்களாக உள்ளனர். இந்தியாவை மீரா நந்தாவின் சொற்களில் அறிந்து கொள்ளலாமா?

மீரா: இந்தியா பல முரண்பாடுகளின் நிலம். வெளியாட்களுக்கு தோற்றமளிப்பதைப் போல, ஆன்மிகத்தால் நிரம்பிய “மாற்றுச் சிந்தனை” மரபுகள் வழியாகவே ஒரு சாதாரண ஆணோ பெண்ணோ இந்தியாவைப் புரிந்துகொள்கின்றனர். ஆனால் இந்தியா, தான் தோற்றமளிப்பதைப்போல அத்தனை அன்பானதும் “ஆன்மிகமானது”மாக எப்போதும் இருப்பதில்லை.

சூழலை நான் எப்படி விவரிப்பேன்? உண்மை நிலவரங்களுக்காக ஒரு தேசிய நாளிதழின் தலையங்கத்தை துணைக்கழைக்கிறேன் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டிச 28, 2015)

  • ·ஷாம்லியில் ஓர் இளம்பெண் காணாமல் போகிறார். ஷாம்லி வட இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு சிறிய நகரம். இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக அப்பெண் இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டிருக்கிறார் என இந்து மதத்தைச் சேர்ந்த மூத்தோர் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் கோயில் பூசாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து வலதுசாரி அரசியல் கட்சியான பாஜகவின் தலைவர்களும் அக்கூட்டத்தில் பேசுகின்றனர். ( சில நாட்கள் கழித்து, அந்தப் பெண், தான் காதலித்த இஸ்லாமிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு டில்லியில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது). ‘லவ் ஜிகாத்’ என்றழைக்கப்படும் சதித்திட்டம் மூலமாக, இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை காதலித்து அவர்களை தங்கள் மதத்திற்கு மாற்றிவிடுவார்கள் என்கிற இந்துத்துவவாதிகளின் ஒழுக்கம் சார்ந்த கலாச்சார பீதிதான் ஷாம்லி விஷயத்தில் நாம் பார்ப்பது. 

  •  கிழக்கத்திய மாநிலமான ஒடிஷாவில் ஒரு சூனியக்காரர், வயிற்றுவலிக்கான சிகிச்சை என்கிற பெயரில் 17 நாட்களேயான பச்சிளம் குழந்தையை சூடான இரும்பு ஆணிகள் கொண்டு பச்சை குத்தியிருக்கிறார். இத்தகைய “சிகிச்சை” முறைகள் வெறும் மூட நம்பிக்கைகளால் மட்டுமல்ல, மருத்துவ வசதிகளின் கடும் பற்றாக்குறை இருப்பதன் காரணமாகவும் தான் பின்பற்றப்படுகின்றன. இந்த சூனியக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகும்பொழுது, சூனிய முறைகளில் கைதேர்ந்த பெண்கள் வேட்டையாடப்படப்பட்டு கொலை செய்யப்படுவது இந்தியாவின் பல பகுதிகளில் நடக்கிறது.           
  • சீக்கிய நம்பிக்கைகளின் “பாதுகாவலராகவும் பிரச்சாரகராகவும்” வடக்கில் உள்ள மாநிலமான பஞ்சாபில், ஆளும் அரசியல் கட்சியே தன்னை பிரகடனப்படுத்தியது. மதத்திலிருந்து அப்பாற்பட்டு அரசு இயங்கவேண்டும் என்கிற கருத்தையேகூட மாநில முதலமைச்சர் எள்ளிநகையாடினார். 
  • · இதனிடையே இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது:  இந்தியப் பிரதமர் “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டத்தை அறிவித்தார். நிதியமைச்சரோ இந்தியாவின் வணிகம் மிகவும் முன்னேறியுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சிவிகிதம் 7 முதல் 7.5 சதவிகிதம் இருக்குமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 
ஸ்டீ: அரசியல்ரீதியாகப் பார்த்தால், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. உண்மையில் அது மதச்சார்பற்ற ஜனநாயகமாக இருக்கிறதா?

மீரா: ஆம். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுதான். நியாயமான சுதந்திரமான தேர்தல் முறை மூலம் எங்கள் ஆட்சியாளர்களை நாங்களே தேர்ந்தெடுக்கிறோம் என்ற வழிமுறையானது பெருமைக்குரிய ஒன்றுதான். இதைவிட, ஏழைகளிலும் ஏழைகளாக, விளிம்புநிலையிலுள்ளவர்கள் அனைவரும் இந்த ஜனநாயக வழிமுறையில் கவனமாக உற்சாகமாக பங்கு பெறுகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம். ஆனால் மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் தேர்தல் ஜனநாயக முறையில் அடிமட்டத்திலுள்ளோர் பங்கு கொள்வதில்லை. இந்தியாவிலோ மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைவிட ஏழைகள் மிகப்பெருமளவில் வாக்களிக்கிறார்கள்.

மதச்சார்பின்மை என்பது முற்றிலும் வேறு கதை. அமையவிருந்த புதிய நாட்டின் அரசுக்கு இருக்கவேண்டிய தன்மையை வரையறை செய்யும் “மதச் சார்பற்ற” என்கிற சொல்லை இந்திய அரசியல் சாசனம் தொடக்கத்தில் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, “சோஷலிச மற்றும் மதச்சார்பற்ற” என்கிற சொற்களை அரசியல் அமைப்பின் முன்னுரையில் சேர்க்கச் செய்தார். இப்போதைய பாஜக தலைமையிலான அரசு இந்த சேர்க்கையை நீக்கிவிட்டு அரசியல் சாசனம் முன்பிருந்த நிலைக்குத் திரும்ப வேண்டுமெனத் திட்டமிடுகிறது.

சேர்ப்பது, நீக்குவது என்பது ஒருபுறமிருந்தாலும், அரசியல் சாசனம் தன்னளவில் மதச்சார்பற்றதே. சாதி, வர்க்கம் பாலினம், மதம் என்கிற அத்தனை அடையாளங்களையும் கடந்த குடியுரிமையை அது வழங்குகிறது. மத நம்பிக்கை எதுவாக இருந்தாலும் (இல்லாமலேயே இருந்தாலும்) குடிமக்களுக்கு சம உரிமையும் சுதந்திரமும் உண்டு.

ஆனால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பாரம்பரிய மதச்சார்பின்மை போல இந்திய மதச்சார்பின் மையை புரிந்துகொள்ள முடியாது. அரசுக்கும், மத நிறு வனங்களுக்கும் இடையே சுவரோ அல்லது வேலியோ கூட இல்லை. மத நம்பிக்கைகளிலிருந்து வெளியேற வேண்டுமென இந்திய மதச்சார்பின்மை அரசை கோரு வதில்லை. மாறாக அனைத்து மதங்களின் உரிமைகளும் சமமாகப் போற்றப்படவேண்டும் என்கிற அளவிலேயே உள்ளது. இந்து மரபில் உள்ள “சகிப்புத்தன்மை”யை மீண்டும் நினைவுபடுத்தியும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மையையும் வைத்து இவ்வகை மதச் சார்பின்மை நியாயப்படுத்தப்படுகிறது. 

இந்திய வகை மதச்சார்பின்மையில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. ஏட்டில் உள்ளபடி அரசு அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் அது அத்தனை எளிதாக இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளிலும் மக்கள்தொகையிலும் இந்துக்களே பெரும்பான்மையினர். எனவே அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ மதமாக இந்து மதமே உள்ளது. அரசின் சின்னங்கள், சடங்குகள், மரபுகள் அனைத்தும் இந்துமதத்திலிருந்தே உருவாக்கப்படுகின்றன. புனித வழிபாட்டுத்தலங்கள், புனித யாத்திரை செல்லுமிடங்களுக்கான சுற்றுலாவை ஆதரிப்பதன் மூலம் அவற்றின் பொருளாதாரம் வலுப்படுகிறது. சிறுபான்மையினரின் கல்வி மற்றும் சமூக நிறுவனங்களுக்கு உதவி மறுக்கப் படாத, அவர்களின் உள்விவகாரங்களில் அரசு தலையிடாத சுயேச்சைமுறை நடைமுறையில் இருக்கிறது என்றாலும், அளிக்கவேண்டிய நிதியுதவிகள் எல்லாம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்கே செல்கின்றன.

இதைவிட, பொதுவெளிகளில்- மருத்தவமனைகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை எல்லாம் இந்துச் சின்னங்களாலும் குறியீடுகளாலும் நிரம்பியுள்ளன. முக்கிய நிகழ்வுகளின்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட இந்து மதச்சடங்குகளை பின்பற்றுகின்றன. இந்தியாவில் மத அடையாளங்கள் இல்லாத பொது இடத்தைக் காண்பது அரிது.

ஸ்டீ: (இந்தியாவில்) அரசியலில் மதம் இப்படி தலையிடுவதால், கல்விக்கொள்கைகளில் அதன் விளைவுகள் என்னவாக இருக்கின்றன?

மீரா: தேசியவாத ஆதிக்கத்திற்கு கல்வி ஒரு பாதையாகிவிட்டது என்பதே எனக்கு மிக முக்கிய பிரச்சனையாகத் தெரிகிறது. இந்திய வரலாறு - குறிப்பாக இந்திய அறிவியலின் வரலாறு  இந்தியாவின் சிறப்பு மற்றும் ஒற்றுமை குறித்த கட்டுக்கதைகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவே பயன்படுத்தப்படுகிறது. (இதுதான் உண்மையில் என்னை Science in Saffron எழுதத் தூண்டியது. சாதனைகளை நேரடியாகவும், அறிவியலில் இந்திய பங்களிப்புகளை உலகளாவிய ஒப்பீடுகளுடனும் தர விரும்பினேன்).

இந்து தேசியவாதக் கட்சி ஒன்று (பாஜக) ஆட்சியில் இருக்கையில், கல்விக்கு இந்து சாயம் பூசும் வேலைகள் அதிகரித்துவிட்டன. பள்ளியின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையைக் கொண்டுவர ஏற்கனவே சில மாநில அரசுகள் திட்டமிட்டிருக்கின்றன. யோகா ஏற்கனவே பல பள்ளிகளில் அன்றாட வகுப்புகளில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. கல்விக்கொள்கையை மாற்றி எழுதத் திட்டங்கள் உள்ளன. இந்துமயமான ஒரு பாடத்திட்டம் வந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கிறது.  நாட்டின் உயர்ந்த பதவியில் நரேந்திர மோடி இருக்கையில், இந்துமயமான கல்விக்கான வேலைகள் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் பல மாநிலங்களில் இத்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. வெண்டி டோனிகரின் “The HIndus”  நூலை கூழாக்கும் முடிவை எடுக்க பெங்குயின் பதிப்பத்துக்கு அழுத்தம் தந்த தினாநாத் பத்ரா தான் இந்தப் பெரியளவிலான கல்வி “சீர்திருத்த” இயக்கத்திற்குப் பொறுப்பு. பதிப்பகங்களையும் மற்ற ஊடகங்களையும் அச்சுறுத்துவதும், சுய தணிக்கை செய்யப் பணிப்பதும் சகஜமாகிவிட்டன.

இந்து உரிமைகளைக் கொண்டு கல்வி நிறுவனங்களை சத்தமில்லாமல் கைப்பற்றுவது சில நாட்களாக நடந்து வருகிறது. முதல்முறை பாஜக ஆட்சிக்கு வந்ததன் பலனாக (1998-2004) பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாயின ( “பொதுத்துறை - தனியார் கூட்டு” என்று இதற்கு நாகரிகமாக பெயர் வைக்கப்பட்டது). ஜோசியராகவோ, சாமியாராகவோ மூச்சுப்பயிற்சி வழங்குகிறவராகவோ  ஆகவேண்டுமெனில் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து தொழில்முறை பட்டம் பெற்றுவிடலாம். மேல்தட்டு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட சுய பிரக்ஞை ஆய்வுகள் ( Consciousness studies) என்கிற பெயரில் பட்ட வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. அவை வேறொன்றுமில்லை. வேதாந்தங்களை கற்றுத் தருவதுதான். பிரபலமான குருக்கள், ஆசிரமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ணா போன்ற பக்தி மடங்கள் இவையெல்லாம் இந்த “கல்வித்” திட்டங்களை முன்னெடுக்கின்றன. அரசியல்வாதிகளில், அரசு அதிகாரிகளில், ஏன் பேராசிரியர்களில் கூட பலர் இந்தக் குருமார்களைப் பின்பற்றுபவர்களாக இருப்பதால், யாருடைய புருவமும் உயராமல் எந்தக் கேள்வியுமில்லாமல் கல்வித்துறைக்குள் இந்து மதத்தை நுழைப்பது ஓசையின்றி நடக்கிறது. 

இவை எல்லாவற்றையும் விட பாஜக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஆய்வுப் பேரவைகளிலும் (குறிப்பாக வரலாற்றாய்வு) இந்து தேசிய ஆதரவாளர்களை நுழைக்கின்றன. மார்க்சிய, மதச்சார்பற்ற வரலாற்றாளர்களை “தேசவிரோதிகள்” என்று வெளிப்படையாக இந்திய வரலாற்று ஆய்வுப் பேரவை அறிவிக்குமளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவின் பெருமைமிகு சமூக அறிவியல் மற்றும் மனிதமேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமான நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை இந்துமயமாக்கும் திட்டமிருக்கிறது. 

ஸ்டீ: இந்தியாவில் நாத்திகம் என்பது எந்த வடிவத்தில் இருக்கிறது? யார் அதன் வழிகாட்டிகள்? எப்படி நாத்திகம் செயல்படுகிறது? நாத்திகவாதிகளுக்கு ஆபத்துகள் உள்ளனவா?

மீரா: The God Market என்கிற என் அண்மைய நூலில் ஆவணப்படுத்தியுள்ளதைப் போல, இந்தியா பெருமளவில் மதம்சார்ந்த நாடாகவே உள்ளது. ஆய்வு முடிவுகளின்படி 96 சதவிகிதமானவர்கள் மத நம்பிக்கையுள்ளவர்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில் ‘உங்கள் மதம் என்ன?’ என்கிற கேள்விக்கு நீங்கள் ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை’ என்று பதிலளித்தால் நீங்கள் இந்து மக்கள்தொகையில் சேர்க்கப்படுவீர்கள். அந்தளவிற்கு மதம் சார்ந்த பாரபட்சம் உள்ளது. தன்னை இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ, சீக்கியராகவோ, பௌத்தராகவோ, ஜெயினராகவோ அறிவித்துக்கொள்ளாத ஒருவர் இங்கு இந்து என்றே புரிந்துகொள்ளப்படுவார்.

இந்தியாவில் நாத்திகம் இருக்கிறது. கண்கட்டு வித்தைகளையும் மூடநம்பிக்கைகளையும் மிக வெளிப்படையாகவும் ஆக்ரோஷமாகவும்  எதிர்த்துப் போராடும் பகுத்தறிவுக் குழுக்கள் பல இந்தியாவில் உண்டு. இணையத்திலும் பகுத்தறிவுக் கருத்துகள் மிகப் பரவலாக உண்டு. ஆனால் பொதுவில் அதன் இருப்பு மிகக் குறைவே.

நாத்திகம் எந்தளவுக்கு இருந்தாலும் அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியே இருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில், இந்து மூடநம்பிக்கைகளையும் இந்து மதத்தின் கட்டுக்கதைகளையும் குறித்து கேள்வி எழுப்பிய முன்னணி அறிவுஜீவிகளில் மூன்று பேர் படுகொலை செய்யப் பட்டனர். இந்துமதக் கண்ணோட்டத்தையும் பழக்க வழக்கங்களையும் கேள்வி கேட்டதால், நூல் எரிப்புகள், திரைப்படத் தடைகள் போன்றவை அதிகரித்துவிட்டன.

பல்கலைக்கழக வளாகங்களிலும் பொதுவெளியிலும் எழும் மதச்சார்பற்ற குரல்களை ஒடுக்கவும் அச்சுறுத்தவும் அரசு தன் இந்துத்துவ சார்புள்ள மாணவர் அமைப்பை பயன்படுத்தும் ஆபத்தான போக்கு பரவலாகியுள்ளது. இந்த வார்த்தைகளை நான் பேசுகையில்கூட, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிரச்சனை கொழுந்து விட்டெரிகிறது. தலித் (முன்பு தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த) மாணவர் ஒருவர் உயர் அதிகார மட்டத்திலிருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். பல்கலைக்கழகத்திலிருக்கும் இந்துத்வ சார்பு மாணவர் அமைப்பொன்றின் பொய்ப்புகாரை வைத்து  இடைநீக்கம் செய்தது நிர்வாகம். மேல்தட்டு நிறுவனங்களான ஐஐடி போன்றவற்றில்கூட மதச்சார்பற்ற, பகுத்தறிவுக் குரல்கள் (பெரும்பாலும் தலித்துகளால் எழுப்பப்படுபவை) நசுக்கப்படுகின்றன. வெகு சாதாரணமாக அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக ஆகிவிட்ட, அரசே முன்னின்று செய்யும் இந்த அச்சுறுத்தல் ஒருவித பயச்சூழலையும் சுய தணிக்கையையும் உருவாக்குகின்றது.

ஸ்டீ: உங்கள் நூல்களில் நீங்கள் “காவிமயமான அறிவியலை” விவரிக்கிறீர்கள், விமர்சிக்கிறீர்கள். அது வெறும் பின்நவீனத்துவ வழக்காறுதானா? அல்லது உண்மையாகவும் உறுதியாகவும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பாதகங்கள் இதனால் ஏற்படுமா? எப்படி?.

மீரா: காவியமயமான அறிவியல் எனும்போது, இரு விஷயங்கள் உள்ளன. முதலில், ஆன்மா என்பதன் இருப்பை இறுதியான உண்மையாகக் கூறி அதை மரணத் துக்குப் பிந்தைய வாழ்வு, மறுபிறப்பு போன்றவற்றோடு தொடர்புப்படுத்தும் மரபான இந்து நம்பிக்கைகளுக்குள் இருக்கும் முரண்பாடுகளின் சுவடுகளை நவீன அறிவியல் தலையீடு செய்து அழித்திருக்கிறது. இரண்டாவது, நவீன அறிவியல் கோட்பாடுகளான கோபர்நிக்கஸின் சூரிய மையம், பரிணாம வளர்ச்சி அல்லது குவாண்டம் இயற்பியல் போன்ற கோட்பாடுகளை பழங்கால இந்து அறிவியலுக்கான விளக்கம் என திரித்துச் சொல்வது.

காவிமயமான அறிவியலில் பின்நவீனத்துவம் என்று ஒன்று இல்லை. பின்நவீனத்துவம் மற்றும் அதன் இணைப்பான ஞானத்திற்கெதிரான கோட்பாடுகள் அனைத்துமே,  நவீன அறிவியலுக்கும் மற்ற “மாற்று” சிந்தனை முறைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை மறுப்பதன் மூலம் இந்துமயமாதலுக்கு உதவவே செய்கின்றன. தவிரவும், அறிவியல் குறித்த பின் நவீனத்துவ, பின்காலனிய சிந்தனைகள் யாவும் அறிவியல் என்பது  ஒரு மேற்கத்திய மற்றும் காலனிய கட்டமைப்பு என்றே நம்புகிறது. காலனிய நாடுகளின் மூலம் மேற்கு உலகம் உள்ளே நுழைந்ததனால்தான் அறிவியலின் தரவுகள் யாவும் உண்மையாகவும் உலகளாவிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் ஆகின என்கிற கருத்தையே அவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. உலகளாவிய பார்வையின்றி குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் பாவனையில் பேசும் இந்து தேசியவாதிகளின் மொழியிலேயே பேசுவதாக இக்கருத்துக்களும் அமைந்துவிடுகின்றன.

ஸ்டீ: அறிவியலும் மதமும் சீராக சமரசம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?

மீரா: இல்லை. ஸ்டீவன் வெயின்பெர்கின் அண்மை நூலான "To Explain the World" நூலை மேற்கோள் காட்டி நவீன அறிவியல் குறித்துச் சொல்கிறேன். நவீன அறிவியலின் கண்டுபிடிப்பு என்பது “கணக்கு சூத்திரப்படியும் சோதனைமுறையிலும் மதிப்பீடு செய்யப் பட்ட, தொடர்பில்லாத கொள்கைகள் மூலம் பெருமளவிலான வெவ்வேறு முறைகளை விளக்க முற்படுவது”.

நோக்கங்களுடனான எந்தக் கொள்கைக்கும் இதில் இடமில்லை அல்லது உணர்வுக்கும் இடமில்லை. அது அகம் சார்ந்த கடவுளானாலும் சரி எங்கும் வியாபித்துள்ள சாத்தானாக இருந்தாலும் சரி. கடவுளோ சாத்தானோ ஒரு கவிதையின் உருவகத்தில் இருக்கலாம், அதுவும் ஒரு மனோதத்துவ உதவி போல அவர்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே. அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.

நான் சொல்லவருவது என்னவென்றால், இயற்கை எப்படி இயங்குகிறது என்பதை விளக்குகையில் அதில் கடவுளுக்கும் அல்லது ஆன்மா தொடர்புடைய கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை: இயல்பான உலகம் நவீன அறிவியலிடம் சரணடைய வேண்டி இருக்கிறது. உலகை விளக்க கடவுளைக் கொண்டுவந்தால், சான்றுகளோடுதான் எதையும் விளக்கவேண்டுமென்கிற அறிவியல் சட்டதிட்டங்களுக்கும் இயல்பான உலகளாவிய பார்வைக்கும் பணிந்துபோக வேண்டும். ஆப்ரஹாமிய மதங்கள் என்று அழைக்கப்படும் யூதமதம், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களைப் போலல்லாமல், இந்து இறையியல் பொருளிலிருந்து தெய்வீகத்தைப் பிரித்துப் பார்ப்பதில்லை: பொருள் உலகை உடைத்துக்கொண்டே போனால் அணுக்கள் இருக்கும்- அதாவது பொருள் என்பது படிப்படியாக கட்டமைக்கப்பட்டது. அத்துடன் தூய உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றின் விளைவான இரண்டாம்நிலை நிகழ்வும்கூட. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்துமதம் ஆன்மிகத்தையும் பொருளையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகப் பார்க்கவில்லை. அதுபோலவே மதம் மற்றும் அறிவியல் தொடர்பான விஷயங்களையும் தொடர்புபடுத்தியே பார்க்கிறது. ஸ்டீபன் ஜே கோல்டின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ஆன்மீகம், அறிவியல் ஆகியவற்றை வெவ்வேறு- ஒன்று மற்றொன்றின்மீது படியாத படிக்கு இருக்கவேண்டிய- கற்பிக்கும் களங்களாக இந்து மதம் அடையாளப்படுத்துவதில்லை. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சவாலே இவற்றுக்குத் தொடர்பில்லை என நிறுவுவதே- “ஆன்மிக அறிவியல்” என்கிற பொய்யான, இல்லாத அறிவியல் வகையை உடைப்பது தான். தயக்கமே இல்லாமல் நிஜ அறிவியலின் சிறந்த சான்றுகளோடு “ஆன்மிக அறிவியலை” சோதனைக்குட்படுத்திப் பார்த்தால் மட்டுமே இது சாத்தியம். அதனால்தான் சுவாமி விவேகானந்தாவின் எழுத்துக்களையும் பிரம்மஞானிகளின் எழுத்துக்களையும் விலக்கிவைக்க வேண்டுமென்பதை தலையாயப் பணியாய் செய்துவருகிறேன். ஏனெனில் அவர்கள்தான் முதன்முதலாக,  இந்தியாவில், பொருள் குறித்த ஆய்வில் ஆன்மிக பரிமாணத்திற்கு “அறிவியல்பூர்வமான” நியாயங்களை வழங்கியவர்கள். 

ஸ்டீ: அறிவியல் கல்வியை (அல்லது பொதுவாக கல்வியை) இந்தியாவில் எப்படி சீர்திருத்த வேண்டும் என நினைக்கிறீர்கள்? எந்த நாட்டையாவது இதில் முன்மாதிரியாக வைத்திருக்கிறீர்களா?

மீரா: இது மிகவும் பெரிய விஷயம். என்னால் இதற்கு பதிலளிக்க இயலுமெனத் தோன்றவில்லை.

உலகளாவிய தரமான கல்வி என்று வருகையில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எல்லா இடங்களிலும் பொதுப்பள்ளிகள் வந்தால் அது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வழிசெய்யும்.

ஸ்டீ: இந்தியாவில் பெண்களும் (அறிவியல்) கல்வியும் - சிக்கல்கள் என்ன? சாத்தியமான தீர்வுகள்?

மீரா: அறிவியல் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் பெண்களை சட்டரீதியாகத் தடுப்பது எதுவுமில்லை. அமெரிக்காவில் இருக்கும் தங்கள் சகோதரிகளைவிட பெண்களுக்கு இங்கு அதிகமாகவே கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, பேறுகால விடுப்பு என்று வரும்போதும், அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் ஊதியத்துடனேயே அவ்விடுப்பு கிடைக்கிறது. 

பெண்கள் பாதை வகுத்திருக்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் பணியாற்றுகிறேன். அங்கே உள்நுழையும் பொழுதாவது பாலின சமத்துவம் இருக்கிறது. சக ஆண்களைவிட பெண்கள் துறைரீதியான படிப்பில் வல்லவர்களாக உள்ளனர்.

ஆனால் எல்லா நாடுகளிலும் உள்ளது போல இந்தியாவிலும் தொழில்ரீதியாக முன்னேறிச் செல்கையில் பெண்களின் எண்ணிக்கை குறைவே. அறிவியல் துறையில் பணியைத் தொடரமுடியாத பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

வீட்டில் குழந்தைகளையும் முதியவர்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு  என்கிற பெயரில் கூடுதல் சுமைகளை பெண்கள்மீது சுமத்துவது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆண்களும் பொறுப்புகளை உணர்ந்து நியாயமான முறையில் பணிகளில் பங்கெடுத்துக் கொள்ளாவிட்டால், பெண்களுக்கு அது பாதகமாகவே முடியும்.

- புது விசை - இதழ் 46 / ஜீலை 2016


Saturday, July 30, 2016

விக்டர் ஹாரா: மக்களுக்காக இசைத்த கிதார் - எஸ்.வி.ராஜதுரை



பேட்ரிஷியோ குஸ்மன் (Patrico Guzman), உலகப் புகழ்பெற்ற ஆவணத் திரைப்பட இயக்குநர்; தென்னமெரிக்க நாடான சிலியில் 1970 முதல் 1973வரை ஸால்வடோர் அஜென்டெவின் (Salvador Allende) தலைமையில் இருந்த சோசலிச அரசாங்கத்தை அந்த நாட்டு முதலாளி வர்க்கமும், இராணுவத்திலிருந்த பிற்போக்குத் தளபதிகளும் சிஐஏ-வின் உதவியுடன் தகர்த்தெறிந்து இராணுவத் தளபதி பினோஷெவின்  (Augusto Pinochet) மூர்க்கத்தனமான பாசிச ஆட்சியை நிறுவியதை மூன்று பாகங்கள் கொண்ட ‘சிலியின் சண்டை’ (Battle of Chile) என்னும் ஆவணப்படத்தில் எடுத்துக்காட்டுகிறார். அஜென்டெவைப் பற்றியும் சிலியில் பாசிச ஆட்சியாளர்கள் இழைத்த கொடுமைகளைப் பற்றியும் வேறு சில ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார்.

இவற்றில் மிக அற்புதமானதாக நமக்குப் படுவது,  ‘வெளிச்சத்திற்கான ஏக்கம்’ (Nostalgia for the Light).  இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை எடுத்துரைப்பவரும்  (narrator)  அவர்தாம். தென்னமெரிக்க நாடுகளில் மிக நீண்டகாலம் நாடாளுமன்றக்  குடியரசு ஆட்சிமுறை இருந்த நாடு சிலி. தாமிரம், நைட்ரேட் போன்ற கனிமவளங்கள் உள்ள அந்த நாடு, ஸ்பானியர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு பிரிட்டிஷ் மூலதனத்திற்குப் பெரும் ஈவுத்தொகைகளை வழங்கக்கூடியதாக இருந்தது; பின்னர் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல் களங்களிலொன்றாகியது. எனினும், அந்த  நாடு  உலகின் கவனத்தைப் பெருமளவில்  ஈர்த்ததில்லை. இந்தத்  திரைப்படத்தில் குஸ்மன் தமது இளமைக் காலத்தைப் பற்றிக் கூறுகிறார்:  “குடியரசுத் தலைவர்கள் பாதுகாப்பு வீரர்களின் துணையில்லாமல் தெருக்களில் நடந்து சென்றார்கள். அந்த நாட்டில்  நிகழ்காலம் மட்டுமே இருந்தது. ஒருநாள் இந்த அமைதியான வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஒரு புரட்சிகர அலை எங்களை உலகின் மையத்திற்கு அடித்துச் சென்றது. இந்த உன்னதமான முயற்சியின் பகுதியாக இருக்கும் நற்பேறு எனக்கிருந்தது. அந்த முயற்சி எங்களை தூக்கத்திலிருந்து எழுப்பியது. நம்பிக்கையின் நேரம் எனது ஆன்மாவில்  நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டு விட்டது.”

வன்முறைப் புரட்சி ஏதுமின்றி, முற்றிலும் அமைதியான  ஜனநாயக வழியில் தேர்தல் மூலம் வெற்றி பெற்று சோசலிச அரசாங்கத்தை அஜெண்டே அமைத்ததைத்தான் குஸ்மன் இவ்வாறு கூறுகிறார்.  இளம் வயதிலிருந்தே விண்ணாய்வியலில் (astrology) ஆர்வம் கொண்டிருந்த குஸ்மனுக்கு, சோசலிச அரசாங்கம்  இருந்த  நாள்களில் ஜெர்மனி முதலிய நாடுகளிலிருந்து  விண்ணாய்வியல் ஆராய்ச்சியாளர்களும் அறிவியலாளர்களும் சிலிக்கு வரத் தொடங்கியது பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. உலகில் ஈரப்பதம் முற்றிலுமில்லாத  ஒரே ஒரு பாலைவனமான அடகானா (Atacana), சிலியில்தான் உள்ளது. மிகப்பெரும் தொலைநோக்கிகளை (giant telescopes) நிறுவி, அவற்றின் வழியாக விண் வெளியிலுள்ள கோளங்களையும் நட்சத்திரங்களையும் பார்ப்பதற்கும் அவற்றின் இயக்கத்தையும் செயல்பாடு களையும் தெரிந்துகொள்வதற்கும் உகந்த இடம் அந்தப் பாலைவனப் பகுதிதான்.


இந்தத் திரைப்படத்தில் குஸ்மன் நமக்கு அறிமுகப்படுத்தும் விண்ணாய்வு அறிவியலாளர் காஸ்பர் கலாஸ் (Gasper Galaz) நமது புவிக்கோளும் மனித ராசிகளும் தோன்றியது எவ்வாறு என்பதையும், நமது பூர்வாங்கம் என்ன என்பதையும் அறிந்துகொள்ள கடந்தகாலத்தைப் பார்க்கும் முறைகளிலொன்றே விண்ணாய்வியல் என்றும், நிகழ்காலத்தில் நாம் இப்போது பார்க்கும் சூரிய ஒளியும் நட்சத்திர ஒளியும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே  அந்தந்த இடங்களிலிருந்து  புறப்பட்டவையாக இருப்பதால் நாம் இந்தக் கணத்தில் ஒரு வகையில் கடந்தகாலத்தில்தான் வாழ்கிறோம் என்றும் கூறுகிறார், அறிவியல் பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது,  ஆனால் கிடைக்கும் விடைகளைவிட புதிதாகத் தோன்றும் கேள்விகளே அதிகம் என்றும் கூறுகிறார். இந்தத் திரைப்படம் அறிமுகப்படுத்தும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் லாடாரோ நுனெஸ் (Lautaro Nunez), விண்ணாய்வாளர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆகிய இருவருமே, நிகழ்காலத்தில் கிடைக்கும் மிக சொற்பமான ‘எச்சங்களை’ வைத்துக்கொண்டுதான் கடந்தகாலத்தை மீளமைப்புச் செய்ய வேண்டியுள்ளது என்று கூறுகிறார்.

பினோஷாவின் பாசிச ஆட்சியின் கீழ் நடந்த கொடூரமான மனித உரிமை மீறல்கள், கொலைகள் முதலியனவற்றில் பெரும்பாலானவை சுவடுகளே இல்லாமல் செய்யப் பட்டிருந்தன. அந்த ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சிலியில் ஜனநாயக ஆட்சி திரும்பி வந்த பிறகு, பல்லாயிரக்கணக்கான மக்கள், ‘காணாமல் போன’தாகவோ, கொலை செய்யப் பட்டதாகவோ சொல்லப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் தேடிக் கண்டுபிடிக்கவோ, குறைந்தபட்சம் அவர்களது எச்சங்களையாவது கண்டறியவோ முயன்றனர். பாசிஸ்டுகளால் கைது செய்யப்பட்டவர்களில் ஆயிரக் கணக்கானோர் அடகானோ பாலைவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். அந்தக் கொடிய பாலைவனத்தில் சிதறிக்கிடக்கும்  மனித எச்சங்களில் தமது உற்றார் உறவினர்களின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் தேடித் திரியும் பெண்களைக் காட்டுகிறது குஸ்மனின் திரைப்படம்.

அடகானா பாலைவனத்தில் இருந்த எலும்புகளையும் மண்டையோடுகளையும் கொண்டு பாசிசத்திற்குப் பலியானவர்களின் அடையாளங்களை நிறுவியவர்கள்  ‘பாக்கியசாலிகள்’ என்றால், சிலியின் தலைநகரம் ஸாண்டியாகோவிலேயே கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை முழுமையாகவோ, சிதைவுற்ற நிலையிலோ பார்க்கவும் அவற்றை  மீட்டுக் கொணர்ந்து உரிய மரியாதையுடன் புதைக்கும் வாய்ப்புப் பெற்றவர்களோ  ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்’.

அப்படி ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்க’ளிலொருவர்தாம் ஜோன் ஹாரா (Joan Jara) தமது கணவரைக் கொலை  செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், ஆணை பிறப்பித்தவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து, சட்டத்தின் முன்நிறுத்தி, நீதியை நிலைநாட்ட ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் போராடி வருகின்றவர். இருபதாம் நூற்றண்டு தோற்றுவித்த இலத்தின் அமெரிக்க இசைக்கலைஞர்களில், மிகப் புரட்சிகரமானவராக, இடதுசாரி செயல்வீரராக, களப்பணியாளாராக வாழ்ந்து மடிந்த விக்டர் ஹாராவின் (Victor Ludio Jara Martinez) துணைவியார்தாம் அவர்.

1932 செப்டமர் 23இல் சிலியிலுள்ள லோன்குவென் என்னும் நகரத்துக்கு அருகிலுள்ள பெருந்தோட்டமொன்றில்  கூலித்தொழிலாளர்களாக, சொற்ப வருமானத்தோடு வாழ்ந்துவந்த பெற்றோர்களுக்குப் பிறந்த விக்டர், தமது ஆறாம் வயதிலிருந்தே தமது அண்ணனோடு சேர்ந்து விறகு பொறுக்குதல், விறகுக்காக சிறு மரங்களை வெட்டுதல், வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பன்றிகளுக்காகப் புல் சேகரித்தல் போன்ற உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டார். அவரது குடிகாரத் தந்தை தமது மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டுவார்; நையப் புடைப்பார். அந்த அம்மையார், விக்டரின் தாயார் அமந்தா, காட்டில் மூலிகைகளைச் சேகரித்து வந்து விற்பது வழக்கம்.  வீட்டுச்செலவுக்கு அதுவும் போதாததாக இருந்ததால், அவர்களது வீட்டின் ஓர் அறை வாடகைக்கு விடப்பட்டது. அதை வாடகைக்கு எடுத்திருந்த பள்ளி ஆசிரியரொருவர் கிதார் வாசிப்பதுண்டு. அவரிடமிருந்துதான் கிதார் இசையின் தொடக்கப்பாடங்கள் விக்டருக்குக் கிடைத்தன. அவரது தாயாரும் கிதார் இசைத்துக்கொண்டு  நாட்டார் பாடல்கள் பாடுவதுண்டு. தமது இளமைக்கால நினைவுகளில் மிகவும் பசுமையாக இருப்பவை  தாயார் பாடிய பாடல்கள்தாம் என்று விக்டர் சொல்வதுண்டு.

அந்தக் குடும்பத்தை வறுமை பிடுங்கித் தின்று கொண்டிருந்த போதிலும் தமது குழந்தைகள் எப்படியேனும் கல்வியறிவு பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அமந்தா, குடிகாரக் கணவரை விட்டொழித்துவிட்டுக் குழந்தைகளுடன் ஸான்டியாகோ நகருக்கு வந்து, சிறிய உணவு விடுதியொன்றில் வேலை செய்யத் தொடங்கினார். வறியவர்களும் போக்கிரிகளும் நிறைந்த தெருவொன்றில் அவர்கள் வாழ்ந்தபோதிலும், அங்கிருந்த இரைச்சலையும் சண்டை சச்சரவுகளையும் பொருட்படுத்தாமல் விக்டரும் அவரது அண்ணன் லாலோவும் கத்தோலிக்கப் பள்ளியொன்றில் சேர்ந்து ஒழுங்காகப் படித்துவந்தனர். அண்டைப் பகுதியிலிருந்த ஒருவர், கிதார் இசைப்பதில் விக்டருக்கு இருந்த ஆர்வம், சொந்தமாக புதிய மெட்டுகள் அமைப்பதில் அவர் வெளிப்படுத்திய திறன் ஆகியவற்றைக் கண்டு வியந்து  கிதார் இசையை முறைப்படி கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.


நாள் முழுக்க  வெவ்வேறு வேலைகளைச் செய்து வந்த அமந்தா, விக்டரின் பதினைந்தாவது வயதில் இறந்துவிட்டார். ஏதிலியாக்கப்பட்ட விக்டருக்கு உதவி செய்ய முன்வந்த கத்தோலிக்கப் பாதிரியாரொருவர், அவரை இறையியல் பள்ளியில் சேர்த்துவிட்டார். “மானுடப்பரிவு இல்லாமல் போன நிலையை  ஈடு செய்யக்கூடியதாக உள்ள வேறுவகையான, மேலும் ஆழமான அன்பு கிடைக்கக்கூடும்” என்னும் நம்பிக்கையைத் தாம் அப்போது இழக்கவில்லை என்று அவர் பின்னாளில் ஜோனிடம் கூறியிருக்கிறார். அந்த இறையியல் பள்ளியில் இசைக்குப் பஞ்சமிருக்கவில்லை. விக்டர் அதனை இரசித்தார். அங்கு பாடவும் செய்தார். பாதிரியாவதற்குப் பயிற்றுவிக்கப்படும் மாணவர்களிடம் பாலிச்சை தோன்றுமானால், அதற்காக அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்கவேண்டும். அந்த ஆசையைத் தணிப்பதற்காகக் கடுங்குளிர் காலத்திலும் குளிர்நீரில் குளிக்கவேண்டும். பிரம்மச்சரியம் பூணுவதையோ, பாதிரிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதிலோ சிறிதும் விருப்பம் கொண்டிராத விக்டர், அந்தப் பள்ளி ஆசிரியர்களின் ஒப்புதலுடன்  அங்கிருந்து வெளியேறினார். பத்து நாட்களுக்குப் பிறகு சிலியின் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு மிகச் சிறப்பாகப் பணியாற்றி முதல்நிலை சார்ஜென்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டார். தலைமை தாங்கும் ஆற்றலும் இராணுவ அதிகாரியாவதற்கான தகுதியும் பெற்றவர் என்னும் பாராட்டுகளைப் பெற்றார்.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த தம்மைப் போன்றோர் இராணுவத்தின் ஓர் அங்கமாக  இருக்கையில், அது எவ்வாறு அவர்களது உலகக் கண்ணோட்டத்தை, சக மனிதர்கள் பற்றிய பார்வையை மாற்றியமைக்கிறது என்பதைத் தாம் கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் கொடுத்த நேர்காணலொன்றில் கூறினார்: “தொழில்முறையிலான படைவீரன், சீருடை அணிந்தவன் என்பதாலும், படைப்பிரிவிலுள்ள மற்றவர்களை விடக் கூடுதலான அதிகாரம் கொண்டிருப்பவன் என்பதாலும்,  தனது சொந்த வர்க்கத்தின் உணர்வை இழந்துவிடுகிறான். ஆணையிடுவதற்குப் பழகிப்போன அவன், தன்னை வேறொரு நிலையில் வைத்துக்கொண்டு, வாழ்க்கையை வேறொரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கின்றான். அவன் தன்னை மற்றவர்களுக்கு மேலானவன் என்று கருதுகிறான். தலைமுடியை மழித்துக்கொண்ட படைவீரனாக இருந்த நான், ஓர் அதிகாரியின் பூட்ஸுகளுக்குப் பாலிஷ் போட வேண்டியிருந்ததையும் அவரது வீட்டைத் துப்புரவு செய்ய வேண்டியிருந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன். அது இயல்பானதொன்றுதான் என்று அப்போது நினைத்தேன்...உண்மையில் அப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய அழைக்கப்படுவது எனக்குக் கிடைத்த சிறப்புரிமை என்றும் கருதினேன். காரணம், மிகுந்த கட்டுப்பாடு உள்ள, கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யக்கூடியவன் என்ற நம்பிக்கையை நான் பெற்றிருந்ததுதான். ஆனால், வெகுளித்தனம் ஏதுமின்றி அதை இப்போது மீண்டும் பார்க்கையில், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்கிறேன், அதாவது படைவீரனின் அடிமைத்தனத்தையும் அதிகாரியின் மேம்பட்ட நிலையையும் வடிவமைக்கக்கூடிய ஒன்று  அது என்று இப்போது அறிந்துகொள்கிறேன்”.

இராணுவத்தில் பணியாற்றுவதற்கான காலம் முடிந்ததும் வெளியே வந்த அவர் சிறிதுகாலம் எவ்விதக் குறிக்கோளுமின்றி அலைந்து கொண்டிருந்தார். நண்பர்களின் வீடுகளில் தங்கி மருத்துவமனையொன்றில் பணியாளாக வேலை செய்துகொண்டிருந்தார். பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரமொன்றைப் படித்த அவர், சிலி பல்கலைக்கழகத்தில் இருந்த ஓர் இசைக் குழுவில் சேர்வதற்கு விண்ணப்பித்தார். குரல்வளத்தைக் கண்டறிவதற்கு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றிபெற்ற அவர், 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஐரோப்பிய செவ்வியல் இசைப்படைப்பாளி கார்ல் ஓர்ஃப் (Carl Orff)  படைத்த இசை நாடகமொன்றில்  கத்தோலிக்கத் துறவியாக நடித்தும் பாடியும் பாராட்டுப் பெற்றார். அந்த இசைக் குழுவைச் சேர்ந்த பலரது நட்பைப் பெற்று, அவர்களுடன் சேர்ந்து, சிலியின் வடபகுதிக்குப் பயணம் சென்று நாட்டார் இசையைக் கற்கத் தொடங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடைகள் கிட்டத்தட்ட அனைத்தும் அவர் சேர்ந்திருந்த இசைக்குழுவிலிருந்த   நல்ல நண்பர் ஒருவர் தந்த ஆடைகள் தாம். சிலி பல்கலைக்கழகத்தின் நாடகக்குழுவில் சேர்வதற்கு விண்ணப்பிக்குமாறு ஹாராவை ஊக்குவித்தவரும் அந்த நண்பர்தாம்.

நாடகக்குழுவில் சேர்ப்பதற்கான தகுதித்தேர்வின் போது, ஹாராவால் வசனங்களை சரியாக ஒப்பிக்க முடியவில்லை என்றாலும் அவரது அங்க அசைவுகள் தேர்வுக்குழுவினரை ஈர்த்ததால், நாடகத்துறைப் படிப்பிற்குச் சேர்க்கப்பட்டு உதவித்தொகையும் வழங்கப்பட்டார். பல் வேறு நாடகங்களில் நடித்த அவர், மெல்லமெல்ல சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நாடகங்க ளில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். அப்போது அவர்  நடித்த  நாடகங்களிலொன்று, சமுதாயத்தின் அடித்தட்டு மக்களைப் பற்றி மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘அதலபாதாளங்கள்’ (Lower Depths). பின்னர் அவரே பல நாடகங்களை இயக்கி மேடையேற்றத் தொடங்கினார்.

1950களின் இறுதியில் ஹாரா, தமது வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்திய இரு பெண்களைச் சந்திந்தார். ஒருவர் ஜோன் டேர்னர் பன்ஸ்டர் (Joan Turner Bunster). இங்கிலாந்தைச் சேர்ந்த வரும் நடனக் கலைஞருமான ஜோன், சிலி நாட்டைச் சேர்ந்த பாலெ நடனக்கலைஞரொருவரைத் திருமணம் செய்து கொண்டு, ஸான்டியாகோவில் நடன ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ளச் சென்ற ஹாரா காட்டிய மரியாதையைத் திருப்பிச் செலுத்தும் முகமாக, ஹாரா இயக்கிய நாடகமொன்றைப் பார்க்கச் சென்ற ஜோன் பின்னர் எழுதினார்: “அதுதான் சிலியில் நான் பார்த்த முதல் நேர்மையான நாடகம். அவரது நாடகம் வெளிப்படுத்திய யதார்த்தம் சிலியின் யதார்த்தம்தான். வெளியிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட யதார்த்தம் அல்ல”. ஹாராவைச் சந்தித்தப் பிறகு தமக்குள் ஏற்பட்ட மாற்றத்தை ஜோன் பதிவு செய்துள் ளார்: “நான் விக்டரைச் சந்தித்த போது, மிகவும் சிறிய உலகத்தில், அதாவது நாட்டிய உலகத்தில், அடைபட்டுக் கிடந்தேன். அவர்தாம் என்னை அதிலிருந்து உலகத்திற்குக் கொண்டு சென்றார். என்னை விஷயங்களைத் தொடவும், பார்க்கவும், உணரவும் வைத்தவர் அவர்தாம். அப்போதுதான் சிலியைப் பற்றி முதன்முதலாகப் புரிந்துகொண்டேன்”. இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக வளர்ச்சியடைய, ஜோன் தமது முதல் கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்று ஹாராவை மணம் புரிந்துகொண்டார். முதல் கணவருக்குப் பிறந்த மேன்யுவெலா, ஹாராவுக்குப் பிறந்த அமந்தா (ஹாராவின் தாயாரின்  பெயரும் இதுதான்) ஆகிய இரு பெண் குழந்தைகளும் ஜோன்- விக்டர் ஹாரா இணையருடனேயே வாழ்ந்தனர்.

தமது மகள் அமந்தாவுக்கு இளம் வயதிலேயே குணப்படுத்த முடியாத நீரிழிவு  நோய் கண்டுவிட்டதை அறிந்த ஹாரா, அந்த அதிர்ச்சியை மிக எளிதாகக் கடந்து வந்தார் -‘அமந்தா, உன்னை நினைக்கிறேன்’ (Te Recuerdo Amanda)1 என்னும் பாடலை இயற்றியதன் மூலம். அந்தப் பாடலை அவர் தமது மகளுக்கு அர்ப்பணித்த போதிலும், அது அந்தச் சிறுமியைப் பற்றிய பாடலோ, நீரிழிவு  நோய் பற்றியதோ அல்ல. மாறாக, தொழிலாளி வர்க்கப் பெண்களின் உருவகமாக ஹாரா பயன்படுத்திய அமந்தா என்னும் பெண்ணைப் பற்றிய பாட்டு:
 

அமந்தாவை நினைக்கின்றேன்
ஈரமான தெரு
மேன்யுவெல் வேலை செய்து வந்த
 தொழிற்சாலைக்கு ஓடிக்கொண்டிருக்கிறாள்
விரிந்த புன்னகை, தலைமுடியில் மழை நீர்
எதுவும் உனக்கு ஒரு பொருட்டல்ல
ஏனெனில் விரைவில் அவனுடன் சேர்ந்துவிடுவாய்
உனக்குக் கிடைத்துள்ளன ஐந்து நிமிடங்கள்
வாழ்க்கை முழுவதுமே அந்த ஐந்து நிமிடங்களில்.

வேலைக்குத் திரும்பிச் செல்ல அழைக்கும் சங்கொலி
நீ நடந்து கொண்டிருக்கிறாய்
எல்லாவற்றையும் மேலும் ஒளிமிக்கதாய்ச் செய்துகொண்டு
அந்த ஐந்து நிமிடங்கள் உன்னை மலர வைக்கின்றன
ஐந்து நிமிடங்களுக்கும் கூடுதலான நேரத்தை
அமந்தாவுடன் கழிப்பதற்காக
மேன்யுவெல் மலைகளுக்குத் திரும்பிச் செல்கிறான்
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக
மற்றவர்களுடன் சேர்ந்து போரிட.
ஐந்து நிமிடங்களுக்குப் பின் கொல்லப்பட்டான்
வேலைக்குத் திரும்பிச் செல்ல அழைக்கும் சங்கொலி
பலர் திரும்பி வரவில்லை, மேன்யுவெலும்தான்.

ஹாராவின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு பெண்மணி தென்னமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற பாடகரான வயலெட்டா பர்ரா (Violeta Parra). தென்னமெரிக்காவின், குறிப்பாக சிலியின், மரபான நாட்டார் இசை வடிவங்களில்  நவீன பாடல் களை இணைத்து இசையமைக்கும் மரபை உண்டாக்கியவர்களின் முன்னோடியான வயலெட்டாவின் இசை நிகழ்ச்சியை சாண்டியாகோ நகர உணவு விடுதியொன் றில் 1957இல் முதன்முதலாகக் கேட்கும் வாய்ப்புப் பெற்றார் ஹாரா. நவீனகால சிலி மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுடன் நாட்டார் இசை மரபை இணைத்து சிலியின் பல்வேறு இடங்களில் இசை மையங்களை உருவாக்கிய வயலெட்டிடமிருந்து உள் உந்துதல் பெற்ற ஹாரா, சிலியின் நாட்டார் இசை மரபை ஆழமாகக் கற்கத் தொடங்கியதுடன் ‘குன்குமென்’ என்னும் நாட்டார் இசைக் குழுவில் இணைந்தார்.

வயலெட்டா பர்ரா அறிவொளிமிக்க, கற்றறிந்தவர்களும் இசையில் நாட்டம் கொண்டிருந்தவர்களுமடங்கிய  ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். அவர் எழுதி, மெட்ட மைத்துப் பாடிய பல பாடல்கள் இன்றும் தென், வட அமெரிக்காவில் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகள் முதலியவற்றிலும் பல்வேறு பாடகர்களால் பாடப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகச் சிறப் பானதாகக் கருதப்படுவது ‘வாழ்க்கையே உனக்கு நன்றி’ என்னும் பாடல்2 :


எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி
அது எனக்கு இரண்டு ஒளிக்கதிர்களைத் தந்தது
அவை திறக்கையில் கறுப்பு எது, வெள்ளை எது எனத்
 துல்லியமாக அடையாளங் காண முடியும்
மேலே கவிந்துள்ள வான்வெளியின்
நட்சத்திர மண்டலத்தையும்
மக்கள் திரளினரிடையே
நான் காதலிக்கும் அவரையும்.

எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி.
எனக்கு அது ஒரு காதைக் கொடுத்துள்ளது
அந்தக் காது தனது அகலம் முழுவதையும் விரித்து
இரவும் பகலும் சில்வண்டுகளையும்
பாடும் பறவைகளையும்,
 சம்மட்டிகளையும் விசையாழிகளையும்
செங்கல்களையும் புயல்களையும் பதிவு செய்கின்றது
கூடவே எனது நேசத்துக்குரியவரின்
மென்மையான குரலையும்.

எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி
எனக்கு அது ஒலிகளையும்
அகரவரிசைகளையும் தந்துள்ளது
அவற்றைக் கொண்டு நான் சிந்தித்து அறிவிக்கிறேன்:
‘அம்மா’, ‘ நண்பர்’, ‘சகோதரர்’ என்னும் சொற்களை
ஒளிரும் வெளிச்சத்தையும்
காதல் வெளிப்படும் ஆன்மாவின் மார்க்கத்தையும்.

எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி
களைத்துப்போன எனது கால்களுடன்
 நடப்பதற்கான ஆற்றலை அது தந்தது.
அவற்றைக் கொண்டு நகரங்களுக்கும் குட்டைகளுக்கும்
 பள்ளத்தாக்குகளுக்கும் பாலவனங்களுக்கும்
 மலைகளுக்கும் சமவெளிகளுக்கும்
உங்கள் வீட்டுக்கும் உங்கள் தெருவுக்கும்
உங்கள் முற்றத்துக்கும்
ஊடாகச் சென்றுள்ளேன்.
எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி
அது எனக்கு ஓர் இதயத்தைத் தந்தது
அந்த இதயம் என் உடலை அதிர்வுறச்  செய்கின்றது
மானுட மூளையின் விளைபொருளை நான் பார்க்கையில்,
தீயதிலிருந்து  மிகவும் விலகியுள்ள நல்லதை நான் பார்க்கையில்,
உனது கண்களின் தெளிவுக்குள் நான் பார்க்கையில்...

எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி
அது எனக்கு சிரிப்பைத் தந்தது
அது எனக்கு  ஏங்கித் தவிக்கும் வேட்கையைத் தந்தது
அவற்றைக் கொண்டு
மகிழ்ச்சியையும் வேதனையையும் வேறுபடுத்துகிறேன்-
இவைதாம் எனது பாட்டுகளை
 உங்கள் பாட்டையும்- அதுவும் அதே பாட்டுதான்
ஒவ்வொருவரின் பாட்டையும் - அது எனது  பாட்டேதான்
கட்டுவதற்கான இரண்டு பொருள்கள்.


பாப்லோ நெரூடா போன்ற முற்போக்குக் கலைஞர்களுடன் தொடர்புகொண்டிருந்த வயலெட்டா தாம் அமைத்த இசை மையங்கள், சிலியின் நாட்டார் இசை மரபை வளர்ப்பதற்கும் அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பதற்குமான களங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இரயில் எஞ்சின் ஓட்டுநராகப் பணிபுரிந்த லூயி ஸெரெஸேடா என்பவரைத் திருமணம் செய்து  கொண்ட அவருக்கு இஸபெல், ஏஞ்செல் என இரு குழந்தைகள். அவரது கணவர் போராட்டக் குணமிக்க கம்யூனிஸ்ட். வயலெட்டாவுமே சிலியின் கம்யூனிஸ்ட் கட்சியுடன்  தொடர்புகொண்டிருந்தார். 1944ஆம் ஆண்டு நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரை ஆதரித்து வேலை செய்தார். அவருடைய பிள்ளைகளான ஏஞ்செல், இஸபெல் இருவருமே வயலெட்டின் இசைச் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நின்று அவற்றைச் செழுமைப்படுத்தினர். வயலெட்டாவின் புகழ் ஐரோப்பாவுக்கும் பரவியது. அங்கும் அவரது பாடல்கள் பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டுகளாக வெளிவந்தன. 1959இல் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்க வேண்டியிருந்த அவர், ஓவியக்கலையிலும் பின்னல் வேலைகள் செய்வதிலும் தமது திறமையை வெளிப்படுத்தினார். ஆனால், அவர் புகழின் உச்சியில் இருந்தபோதுதான், என்ன காரணத்தினாலோ  கைத்துப்பாக்கியால்  தலையில் குண்டைப் பாய்ச்சித் தற்கொலை செய்துகொண்டார்.

வயலெட்டா பர்ரா இறந்தது ஒரு பிப்ரவரி 5இல். அதை  நினைவுகூர்ந்து, ‘நாள்களின் குழந்தைகள்: மானுட  வரலாற்றின் நாள்காட்டி’ (Children of the Days: A Calendar of Human History ) என்னும் புத்தகத்தில் எடுவர்டோ கலியனோ  ‘இரண்டு குரல்களில்’ என்னும் தலைப்பில் எழுதுகிறார்:


அவர்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தனர்,
 கிதாரும் வயலெட்டா பர்ராவும்
 ஒருவர்  அழைத்தால் மற்றொருவர் வருவார்
கிதாரும் அவரும் ஒன்றாகச் சிரித்தனர், ஒன்றாக அழுதனர்,
ஒன்றாகச் சிந்தனையில் ஆழ்ந்தனர்,
ஒன்றாக நம்பிக்கை வைத்தனர்
கிதாரின் நெஞ்சில் ஒரு துளை இருந்தது.
அவருடைய உடலிலும்தான்
1967இல் இந்த நாளில், கிதார் அழைத்தார்,
வயலெட்டா வரவில்லை
அப்போதும், அதன் பிறகு ஒருபோதும்.

சிலி, ஆர்ஜென்டினா, பெரு போன்ற தென்னமெரிக்க நாடுகளில் ‘புதிய இசை' (nueva cancion) என்னும் போக்கு உருவாவதில் வயலெட்டுடன் சேர்ந்து முக்கியப் பாத்திரம் வகித்தவர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த அடாஹுவால்பா யுபான்குய்  (Atahulpa Yupanqui) என்னும் இசைக்கலைஞர். உலகப் புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெரூடாவுக்கும் இதில் பங்கிருந்தது. இலத்தின் அமெரிக்க ‘புதிய இசை'யின் சிறப்பியல்புகளிலொன்று, அந்தக் கண்டத்தின்- குறிப்பாக ஆண்டெஸ் மலைப்பகுதி களைச் சேர்ந்த மக்களின் - இசை பாணிகளையும் இசைக் கருவிகளையும் பயன்படுத்திக் கொண்டதாகும். அந்தக் கருவிகளில் முக்கியமானவை (1) சராங்கோ (charango);  சிறு கிதார் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த நரம்பிசைக் கருவி; முன்பு அது தென்னமெரிக்காவில் காணப்படும் சிறு விலங்கான ஆர்மிடெல்லோவின் ஓடு களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வந்தது. இப்போது பலவகையான மரங்கள், சுரைக்காயைப் போன்ற கால பாஷ் என்னும் காயின் குடுக்கைகள் முதலியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. சராங்காவோவும் பாஸ்  கிதாரும் (கீழ் ஸ்தாயி கிதார்) சேர்ந்து இசைக்கும் இசை அற்புதமானது: (2) பொதுவாக ‘பான் பைப்' என்று அறி யப்படும் ஸாம்போனா (Zampona). அது, துளையிடப்பட்ட பல நாணல் குச்சிகளை ஒன்றாகக் கட்டி வைத்திருப்பது போன்ற தோற்றம் கொண்டது; (3) கினா (quena) என்னும் புல்லாங்குழல் வகை; (4) பாலொ டி ல்லூவியா (Palo de Ilavia) என்று சொல்லப்படும் மழைக்குச்சி (Rain Stick). இது ஒருவகைக் கள்ளிச்செடியின் குச்சிக்குள் சிறுசிறு கற்களைப் போட்டு அந்தக் குச்சியின் இரு முனைகளையும் அடைத்துவிட்டு உருவாக்கப்படுவது (ஒரு வகை கிலுகிலுப்பை); (5) உன்யாஸ் (Unas).  ஆட்டுக் குளம்புகளைக் காயவைத்து அவற்றைத் துணியிலோ, தோல் வாரிலோ வைத்துத் தைத்து உருவாக்கப்படுவது; (6) போம்போ (Bomboo). இது கீழ் ஸ்தாயியில் இசைக் கப்படும் தோலிசைக் கருவி. இதைத் தூக்கி வைத்துக் கொண்டோ, உட்கார்ந்துகொண்டோ இசைக்கலாம்.

 இந்த நாட்டாரிசைக் கருவிகளுடன் ஐரோப்பிய நவீனக் கருவிகளும் ‘புதிய ‘இசை' குழுவினரால் பயன்படுத்தப் பட்டன.  நாளாவட்டத்தில் ‘புதிய இசை'ப் போக்கு, பெரு நாட்டின் நகர்ப்புற கறுப்பின மக்களின் இசை, வட அமெரிக்க நாட்டார் இசை, ராக், ஜாஸ், கருங் கடற்கரைத் தீவுகளின் இசை மரபு, ஆப்பிரிக்க இசை, ஏன் ஐரோப்பிய செவ்வியல் இசை ஆகியவற்றின் தாக்கத்தையும் பெற்றது.

இலத்தின் அமெரிக்காவில் ‘புதிய இசை' போக்கினைப் பின்பற்றிய தனிப்பட்ட இசைக் கலைஞர்கள், இசைக் குழுவினர் பெரும்பாலோர் சமூக உணர்வையும் அரசியல் உணர்வையும் கொண்டிருந்தனர். கியூபாவின் ஸில் வியோ ரோட்ரிகெஸ், பிரேஸிலின் கில்பர்ட்டொ கில், சிலியின் விக்டர் ஹாரா ஆகியோர் கிராமப்புற, நகர்ப்புற உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியன பற்றியும் நம்பிக்கை தரும் எதிர்காலம் பற்றியும் பாடல்களை எழுதினர். இத்தகைய பாடல்களை மிகுந்த உணர்ச்சியோடும் அர்த்தச் செறிவோடும் பாடிய வர்களிலொருவர் ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த மெர்ஸெடெஸ் ஸோஸா (Mercedes Sosa:1935-2009)

 
‘கறுப்புப் பெண்' என்றும் ‘குரலற்றவர்களின் குரல்' என் றும் அழைக்கப்பட்ட ஸோஸா, பிரெஞ்சுக்காரரொருவருக்கும் குவெய்சோ என்னும் பழங்குடியைச் சேர்ந்த அமெரிந்தியருக்கும் பிறந்த பெண்மணி. வானொலி நிலையமொன்று ஏற்பாடு செய்திருந்த பாட்டுப்போட்டியில் 15ஆம் வயதில் முதல் பரிசைப் பெற்ற ஸோஸா,  அன்று முதல் பாடுவதையே தமது வாழ்க்கைச் செயலாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். ஸோஸாவின் உணர்ச்சிகரமான சமூக, அரசியல் உணர்வும் குரல்வளமும் இன்னிசையும் இந்தப் பாடல்களைப் பொருள் செறிவுமிக்கவையாக்கின என்று இசை விமர்சகர்கள் கூறுகின்றனர். ‘உறங்கு உறங்கு என் குட்டிக் கறுப்புச் செல்லமே’ (
Duerme Negrito) என்னும் தாலாட்டுப் பாடல் அவர் பாடிய பாடல்களில் அற்புதமானது. வெனிசூலா- கொலம்பியா நாட்டெல்லையில் பாமர உழைக்கும் மக்கள் பாடிவந்த இந்தத் தாலாட்டுப் பாடலைப் பதிவு செய்து அதற்கு அருமையான இசை அமைத்தவர் அடாஹுவால்பா யுபான்குய் என்றால், அதை உலகெங்கும் பிரபல்யப்படுத்தியவர்கள் விக்டர் ஹாரா, மெர்ஸெடெஸ் ஸோஸா, டேனியல் விலியெட்டி (Daniel Viglietti) ஆகியோர். அண்டை வீடொன்றிலோ தனது குழந்தையை விட்டுவிட்டு மிகத் தொலைவிலுள்ள ஓரிடத்தில் கூலி ஏதும் பெறாமல் கடினமாக  உழைக்கச் செல்கின்ற ஒரு ஏழைத்தாயின் கதையைக் கூறுகிறது இந்தத் தாலாட்டுப் பாட்டு. அண்டை வீட்டுப் பெண்மணி, அந்தக் குழந்தையை உறங்கச் செய்வதற்காகப் பாடுவதுபோல அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாலாட்டுப் பாட்டை மனம் கசிந்துருகும் வகையில் பாடியுள்ளார் ஸோஸா. ‘Negrito’ என்பதற்கான நேரடியான பொருள் ‘கறுப்புப் பையன்’ என்றாலும், அதற்கு இங்கே ‘கறுப்புச் செல்லமே’ என்று அர்த்தப்படுத்திக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்தத் தாலாட்டுப் பாடலின் தமிழாக்கம்3:

உறங்கு உறங்கு குட்டிக் கறுப்புச் செல்லமே
உன் அம்மா வயலில்,
குட்டிக் கறுப்புச் செல்லமே
உறங்கு உறங்கு மொபிலா
குட்டிக் கறுப்புச் செல்லமே
உனது  அம்மா  வயலில், மொபிலா
அவள் உனக்குக் கௌதாரி கொண்டு வரப் போகிறாள்
அவள் உனக்கு  நல்ல பழம் கொண்டு வரப் போகிறாள்
அவள் உனக்குப் பன்றிக்கறி கொண்டுவரப் போகிறாள்
குட்டிக் கறுப்புச் செல்லம் உறங்காவிட்டால்

வெள்ளைப் பிசாசு வந்துவிடும்
உஷ்; அவன் உன் குட்டிக்காலைத் தின்றுவிடுவான்
சகசபும்பா, சகசபும்பா,அகாபும்பா, சகசபும்பா
உறங்கு, உறங்கு குட்டிக் கறுப்புச் செல்லமே
உனது அம்மா வயலில்,
குட்டிக் கறுப்புச் செல்லமே.
.
கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாள்
(ஆமாம், உழைத்துக் கொண்டிருக்கிறாள்)
உழைத்துக் கொண்டிருக்கிறாள்,
கூலி இல்லாமல் (ஆமாம், உழைத்துக் கொண்டிருக்கிறாள்)
உழைத்துக் கொண்டிருக்கிறாள்
இருமிக் கொண்டிருக்கிறாள்
(ஆமாம், உழைத்துக் கொண்டிருக்கிறாள்)
குட்டிக் கறுப்புச் செல்லத்திற்காக,
இந்தக் குட்டிக்காக
குட்டிக் கறுப்புச் செல்லத்திற்காக
ஆமாம், உழைத்துக் கொண்டிருக்கிறாள்.

இங்கு வெள்ளையர்கள் ‘பிசாசாக உருவகப்படுத்துவது கவனிக்கத்தக்கது. ‘சகசபும்பா, சகசபும்பா, அகாபும்பா, சகசபும்பா’ - இவை தமிழ்த் தாலாட்டுப் பாட்டுகளில் உள்ள ‘ஆராரோ, ஆரீரரோ’ என்பன போன்றவை. மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலிலும் தனது குழந்தைகளைத் திருப்திப்படுத்தும் ஒரு தாயின் ஆற்றலை மாய வித்தைகளுடன் ஒப்பிடும் ‘எனது தாயின் கரங்கள்' என்னும் பாடலையும் ஸோஸா பாடியுள்ளார்.  இவற்றை, ஸ்பானிய மொழி கற்காத நம்மைப் போன்றவர்களும் கேட்டு இரசிக்க முடியும்.

ஃபிடல் காஸ்ட்ரோ, செ குவாரா போன்ற இலத்தின் அமெரிக்கப் புரட்சியாளர்களைப் போற்றும் பாடல்களை ஸோஸா இசையமைத்துப் பாடியுள்ளார்.

நாட்டார் மரபில் ஹாரா இசையமைத்துப் பாடிய, கிராமப்புறங்களில் உழவர்களிடையே பிரபல்யம் பெற்றிருந்த பாடல்  ‘தளைகளை அறுப்போம்’ ( A disalamrar)4:

இந்த நிலம் நமது நிலம்
அதிகமாக வைத்திருப்போரின் நிலம் அல்ல
என்பதை  நீங்கள் ஒருபோதும்
சிந்தித்திருக்கவில்லையா என்று
இங்கு கூடியிருப்போர்களிடம் கேட்கிறேன்
இது  நமது நிலம்,
அதிகம் வைத்திருப்போரின் நிலம் அல்ல
இந்த நிலத்தைப் பற்றி
ஒருபோதும்  நீங்கள் சிந்தித்திருக்கவில்லையென்றால்
 நான் கூறுவேன்
 கைகள் நம்முடையவை
எனவே அவை கொடுத்தவைதான் நமது நிலமும்
தளைகளை அறுப்போம்,
தளைகளை அறுப்போம்
 இது  நமது நிலம்,
உங்கள் நிலம்,
அவரது நிலம்
பெட்ரோவின் நிலம்,
 மரியாவின் நிலம்,
யுவானின் நிலம்,
யோஸெவின் நிலம்.
எனது பாடல் ,
அதைக் கேட்க விரும்பாத எவனுக்கோ
 தொல்லை கொடுக்கிறது என்றால்
 அவன் ஓர் அமெரிக்கன்
 அவனொரு நிலவுடைமையாளன்
என்று உறுதியாகச் சொல்வேன் உங்களிடம்
தளைகளை அறுப்போம்,
தளைகளை அறுப்போம்
இது  நமது நிலம், உங்கள் நிலம்
அவரது நிலம்,
பெட்ரோவின் நிலம்,
 மரியாவின் நிலம்,
யுவானின் நிலம்,
யோஸெவின் நிலம்.


விக்டர் ஹாராவின் கற்பனை வளத்துக்குச் சான்றாக இருப்பது மெக்ஸியப் புரட்சியாளர் ஃபிரான்ஸிஸ்கோ விஜா ( Fransico Villa - பாஞ்ச்சோ விஜா  என்று பரவலாக அறியப் பட்டவர்) பற்றிய அவரது பாடல். இது விஜாவின் இராணுவத்தில் இருந்த ஒரு படைவீரன் பாடுவது போல அமைக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராகவும் மெக்ஸியக் குடியரசுத் தலைவராக இருந்த  பெர்ஃபோரியோ டயஸின்  கொடுங் கோலோட்சிக்கு எதிராகவும் போராடிய புரட்சிகர தளபதிகளிலொருவர் விஜா, டயஸுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர் ஃபிரான்ஸிஸ்கோ மாடெரோ. அவருக்கு ஆதரவாக நின்ற படைகளின் தள பதிகளில் இருவர் விஜாவும் ஹுவார்ட்டோ என்பவரும். ஆனால் தொடக்கம் முதற்கொண்டே ஹுவார்ட்டோவுக்கு விஜாமீது பொறாமை உணர்வு இருந்தது, அதற்குக் காரணம், விஜா பெரும் பண்ணை உடைமையாளர் களைக் கொள்ளையடித்தும் இரயில் கொள்ளைகளில் ஈடுபட்டும் இராபின் ஹுட் போல ஏழை மக்களுக்குச் செல்வத்தைப் பகிர்ந்தளித்து புகழ் பெற்றிருந்ததுதான். பெர்ஃபோரியா டயஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து குடியரசுத்தலைவர் பதவிக்கு வந்த ஃபிரான்ஸிஸ்கோ மாடெரோவைக் கொலை செய்துவிட்டு அரசியல் சட்டத்துக்கு விரோதமாக அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட ஹுவார்ட்டோ, இராணுவத்தின் ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் மீறியதாக விஜா மீது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தி, அவருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால்,  இராணுவத் தளபதி ஒருவர் காட்டிய கருணையின் காரணமாக, சுட்டுக்கொல்லப்படுவதற்குப் பதிலாக சிறையில் அடைக்கப்பட்டார் விஜா. சிறைவாசத்தின் போதுதான் விஜா எழுத்தறிவு பெற்றதுடன், அரசியல், வரலாறு முதலியவற்றை  ஆழமாகப் படித்தார். சிறையிலிருந்து தப்பி, அமெரிக்கப் பகுதியொன்றுக்குச் சென்ற அவர், மீண்டும் புரட்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

அரசியல் சட்டத்திற்கு விரோதமாகக் குடியரசுத் தலைவர் பதவியைக் கைப்பற்றிய ஹுவெர்ட்டோவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அரசியல் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் ஆகியோருடன் (இவர்களிலொருவர்தாம் மெக்ஸிகோவின் புகழ்பெற்ற புரட்சியாளர் எமிலியானோ ஜபாட்டா) சேர்ந்துகொண்டார். விஜாவின் படைகள் ஒரு திசையிலிருந்தும் ஜபாட்டாவின் படைகள் இன்னொரு திசையிலிருந்தும் முன்னேறி மெக்ஸிகோ நகரைக் கைப்பற்றின. குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் இருவரும் நுழைந்தனர். குடியரசுத்தலைவரின் இருக்கையில் அமர்ந்து ஜபாட்டாவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் விஜா. ஆனால் அந்தப் பதவியைக் கைப்பற்றும் விருப்பம் அவருக்கு இருக்கவில்லை. தற்காலிகக் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்ற ஜபாட்டா தமக்குக் கீழ் பணியாற்றி வந்த ஒருவன் செய்த துரோகத்தின் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒரு கட்டத்தில் விஜாவுக்கு உதவி செய்வதாகக் கூறிய அமெரிக்க அரசாங்கம், முதல் உலகப் போருக்குப் பிறகு தனது வாக்குறுதியைக் கைவிட்டது. ஹுவெர்ட்டாவுக்கு எதிராக நின்ற இராணுவத்தளபதி கரான்ஸா என்ப வரை ஆதரித்தார் விஜா அதற்குக் காரணம், ஹுவெர்ட் டாவை ஒப்பிடுகையில் கரான்ஸா தீமை குறைந்தவர் என்று அவர் கருதியதுதான். ஆனால்,  கரான்ஸாவுக்கோ தொடக்கம் முதற்கொண்டே விஜாவைத் தனிமைப்படுத்தும் நோக்கம் இருந்தது. விஜாவின் படைகள், கரான்ஸா வின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆனால், கரான் ஸாவோ பின்னர்  அவரது சக இராணுவத் தளபதிகளில் ஒருவராக இருந்த ஆல்வாரோ ஓப்ரிகான் என்பவரின் ஆதரவளார்களால் கொல்லப்பட்டார். தமக்கு சவாலாக இருந்த கரான்ஸா கொல்லப்பட்டவுடன் ஹுவெர்ட்டோவுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார் விஜா. அந்த சமாதான ஒப்பந்தத்திற்கு ஈடாக, விஜாவுக்கு  பெரும் பண்ணையொன்று பரிசாகத் தரப்பட்டது. அவருக்கு விசுவாசமாக இருந்த 200 படைவீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பராமரித்து வந்தது அந்தப் பண்ணை. இதற்கிடையே ஓப்ரிகான், மெக்ஸி கோவின் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அரசியலில் இருந்து விஜா ஓய்வுபெற்றுவிட்ட போதிலும், அவர் தமக்கு எப்போதும் எதிரியாக இருப்பார் என்னும் உணர்வு ஓப்ரிகானுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இருந்ததால் அவரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது.  எப்போதும் எச்சரிக்கையாக இருந்துவந்த விஜா 1923ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதியன்று பர்ரால் என்னும் நகருக்குச் சென்றபோது, அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவர்  மெக்ஸிகோவின் சிஹிஹுவாஹுவா மாநிலத்தைச் சேர்ந்த பர்ராஸா என்னும் அரசியல்வாதி. விஜா கொல்லப்பட்டதை அடுத்து எழுந்த மக்கள் கிளர்ச்சிகளின் காரணமாக கைது செய்யப்பட்ட அவருக்கு,  நீதிமன்றம் 20 ஆண்டுச் சிறைத்தண்டனை வழங்கியது.  ஆனால், சிஹிஹுவாஹுவா  மாநில ஆளுநர்  அந்தத் தண்டனையை மூன்று மாதமாகக் குறைத்தார்.  பின்னாளில் பர்ராஸா மெக்ஸிகோ இராணுவத்தில் கேனலாகவும் (Colonel) ஆக்கப்பட்டார். விஜா இன்றும் மெக்ஸிய மக்களால் மிகப்பெரும் வீரராகவும் தேசப்பற்றாளராகவும் கொண்டாடப்படுகின்றார். அவரது நினைவைப் போற்றி சிலியின் நாட்டார் வழக்கில் ஹாரா எழுதிய பாடல்:

குடியரசுத் தலைவரின் இருக்கையில்
அமர்ந்து பார்த்தாரெனினும்
அந்த அரியணை மீது
ஒருபோதும் பொறாமை கொண்டிராத
அழியாப் புகழுடைய அந்த மனிதர்
ஃபிரான்ஸிஸ்கோ விஜாவின்
 படைவீரனாக இருந்தேன்.
இப்போது ஆற்றுக்கு அப்பால்
 வெகுதொலைவில் வாழ்கிறேன்
அழியாப் புகழுடைய அந்த நாள்களை
 நினைவில் கொண்டு
அய் அய் அய்!

இப்போது ஆற்றுக்கு அப்பால்
 வெகுதொலைவில் வாழ்கிறேன்
நெடுந்தொலைவிலுள்ள பர்ராலுக்குச்
 சென்ற விஜாவை நினைவில் கொண்டு
அவரது மெய்க்காப்பாளர்களில்
நானும் ஒருவன்
நாளாவட்டத்தில் மேஜராகப்
பதவி உயர்வு பெற்றவன்
எங்களது நாட்டையும்
அதன் கௌரவத்தையும்
பாதுகாக்கும் போராட்டத்தில்
நாங்கள் முடமாக்கப்பட்டோம்
படையெடுப்பாளரை எதிர்த்து
நாங்கள் சண்டை புரிந்த
அந்தக் கடந்தகால நாள்களை
 நினைத்துப் பார்க்கிறேன்
அய் அய் அய்!

இன்று நான் கடந்தகாலத்தை
அந்த ‘மெய்காப்பாளர்களை’
நான் மேஜராக இருந்த நாள்களை
நினைத்துப் பார்க்கிறேன்
எத்தனையோ தூரம் நான் சவாரி செய்த குதிரையை
யிம்மெனெஸ் நகரில் மரணம் வீழ்த்தியது
என் மீது குறிவைக்கப்பட்ட தோட்டா
அதன் உடலைத் துளைத்துச் செல்ல
மரண வேதனையில் வலியால் துடித்தது
தன் உயிரைக் கொடுத்தது நாட்டுக்காக
அய் அய் அய்!

அது இறந்தபோது  எப்படியெல்லாம்
அழுது புலம்பினேன்
பாஞ்சோ விஜா, எனது நினைவிலும் இதயத்திலும்
செதுக்கப்பட்ட உங்களை ஏந்திச் செல்கிறேன்
ஆல்வெரோ ஓப்ரிகானின் படைகளால் சிலவேளை
நான் வெல்லப்பட்ட போதிலும்
புரட்சியின் இறுதிவரை விசுவாசமிக்க படைவீரனாக இருந்துள்ளேன் எப்போதும்.
அய் அய் அய்!
பீரங்கிகளுக்கு அடியில் எத்தனையோ சண்டை புரிந்த
விசுவாசமிக்க படைவீரனாகவே எப்போதும்.

1960களிலும் 1970களிலும் அமெரிக்க சிஐஏ, அமெரிக்க இராணுவம் ஆகியவற்றின் உதவியுடன் இலத்தின் அமெரிக்க நாடுகளில் நிறுவப்பட்ட சர்வாதிகார, இராணுவ அரசாங்கங்கள் ‘புதிய இசை'க் குழுவினரையும் ஒடுக்கின. பிரேஸிலின் ஜில்பர்டோ கில், அந்த நாட்டில் இராணுவ அரசாங்கத்தை விமர்சித்ததற்காக விசாரணை யின்றி சிறையில் ஒன்பது மாதங்கள் அடைக்கப்பட்டுப் பின்னர் அந்த நாட்டைவிட்டு வலுக்கட்டாயமாக வெளி யேற்றப்பட்டார். சிலியைச் சேர்ந்த இண்டி-இயிமானி (Inti-Illimaani)  என்னும் இசைக்குழுவினர் ஸல்வடோர் அஜென்டேவின் ஆட்சி தூக்கியெறியப்பட்ட சமயத்தில் ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டிருந்ததால் தப்பித்தனர். நீண்டகாலம் அவர்கள் பிரான்ஸிலேயே அரசியல் அகதிகளாக வாழ்ந்தனர். 1976இல் ஆர்ஜென்டினாவில் இராணுவப்புரட்சி நடந்த பின், ஸோஸா பல்வேறு வகையான தொல்லைகளுக்காளானார். அவரது பாடல்களும் இசை நிகழ்ச்சிகளும் தணிக்கைக்குட்படுத்தப்பட்டன. அவர் உலகப்புகழ் பெற்றிருந்த காரணத்தால், ஆட்சியா ளர்களின் சித்திரவதையிலிருந்து தப்பினார். ஆயினும் 1979இல் லா ப்ளாட்டா என்னுமிடத்தில் அவர் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இராணுவத்தினர் அவரை சோதனை போட்டு, அவரையும் அங்கு இசை கேட்க வந்திருந்த 200 பேரையும் கைது செய்தனர். உலகம் முழுவதிலுமிருந்து வந்த கண்டனங்களின் காரணமாக விடுதலை செய்யப்பட்ட அவர், தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஐரோப்பாவுக்குச் சென்றார். இராணுவ ஆட்சிகளின் காலம் முடிந்த பின் 1980களில் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த ‘புதிய இசை' இயக்கத்தினர் தத்தம் நாடுகளுக்குத் திரும்பி வந்தனர். கில்பர்ட் கில், பிரேஸிலில் லூலா தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார்.

ஆர்ஜென்டினாவின் நீண்டகால இராணுவ ஆட்சிக்குப் பிறகு ஜனநாயக முறை திரும்பி வந்தது. நாடு திரும்பிய ஸோஸா, நவ-தாராளவாதப் பொருளாதாரத்தின் கொடு மைகளைக் கணிசமான அளவில் தணித்த அரசாங்கங்களை - அவை புரட்சிகரமான அரசாங்கங்கள் அல்ல என்ற போதிலும் - ஆதரித்தார். புரட்சிகரச் சூழல் ஏதும் நிலவாததைக் கருத்தில்கொண்ட அவர் கூறினார்: “முன்பு,  நமது கனவுகள் மேலும் தீவிரமானவையாக, பரிபூரணமானவையாக இருந்தன. இப்போதோ நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதைத்தான் செய்ய முடியும்”.

அவரது வாழ்நாளிலேயே, அவரது பாடல்கள் அடங்கிய 70 ஆல்பங்கள் வெளிவந்தன. நாடு திரும்பிய பிறகு, அவ்வப்போது அவர் கடும் நோய்வாய்ப்பட்டு வந்த தால், இசை நிகழ்ச்சிகளை நடத்துவது அடிக்கடி தடைப்பட்டது. இருப்பினும் தம்மால் முடிந்தபோதெல்லாம் பல்வேறு நாடுகளுக்கு இசைப்பயணம் மேற்கொண்டு எண்ணற்ற பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி, ஷகிரா, லூஸியானோ பாவரோட்டி போன்ற பாடகர்களுடன் இணைந்தும் பல நிகழ்ச்சிகளை நடத்தினார். 2009இல் சிறுநீரகக் கோளாறும் இதயக் கோளாறும் ஏற்பட்டு அக்டோபர் 4இல் காலமானார். ஸ்பானிய மொழி அறியாதவர்களும்கூட கேட்டு இரசிக்கக்கூடிய ஸோஸாவின் பாட்டுகள் ஒன்றிரண்டை இங்கு பரிந்துரை செய்ய முடியும்: மேலே குறிப்பிட்ட  (ஸோஸா பாடிய) இரு பாடல்கள்; வயலெட் பர்ராவின் ‘Gracias a la Vida' (வாழ்க்கையே உனக்கு நன்றி). இவற்றை ‘யூ ட்யூப்'பிலிருந்து எளிதாகப் பெறலாம்.

வயலெட் பர்ரா சிலியிலும் ‘புதிய இசை' இயக்கத்தைத் தொடங்கி வைத்திருந்தார். 1950களின் இடைப்பகுதியில் சிறிதுகாலம் குன்குமென் என்னும் இசைக்குழுவில் பணியாற்றி வந்த விக்டர் ஹாரா, நாட்டார் இசையில் தேர்ச்சி பெற்ற பின், ஸாண்டியாகோவிலிருந்ததும் வயலெட்டின் மகன் ஏஞ்சலால் நடத்தப்பட்டு வந்ததுமான இசை மையத்தில் பாடத் தொடங்கினார். 1966இல் அவரது பாடல்களின் முதல் ஆல்பம் வெளிவந்தது. அதிலிருந்த ஒரு பாட்டு, வலதுசாரிப் பழைமைவாதிகளுக்கு ஆத்திர மூட்டியது. ‘லா பீட்டா' என்னும் அந்தப் பாட்டு, மரபான நகைச்சுவைப் பாட்டுதான். மதப்பற்று நிறைந்த ஒரு கத்தோலிக்கப் பெண்மணிக்கு அவள் வழக்கமாகச் செல்லும் தேவாலயத்திலுள்ள பாதிரியார் மீது கொள்ளை ஆசை. ஆனால், பாவ மன்னிப்புக் கேட்க அவரிடம்தான் போகிறாள்- இதுதான் அந்தப் பாட்டு சொல்லும் விஷயம். அந்தப் பாட்டு வானொலி நிலையங்களில் தடை செய்யப்பட்டது. இசைத்தட்டுகளை விற்பனை செய்யும் கடைகளில் அந்த ஆல்பம் விற்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வு, அந்த நாட்டின் இளம் மக்களிடையேயும் முற்போக்குவாதிகளிடையேயும் ஹாராவின் பெயரைப் பிரபலமாக்கியது. வலதுசாரிப் பழைமைவாதிகள் ஹாரா மீது குறிவைக்கத் தொடங்கிய தற்கு இந்தப் பாட்டு மட்டும் காரணமல்ல; அவர் ஸால்வடோர் அஜெண்டேவின் தலைமையில் இருந்த இடதுசாரி அரசியலுடன் மேன்மேலும் தம்மை அடையாளப்படுத்திக்  கொண்டு வந்ததும்தான்.  1960களின் தொடக்கத்தில் சோவியத் யூனியனுக்குச் சென்று வந்த ஹாரா, பின்னர் சிலியின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவரது புகழ் ஓங்கத் தொடங்கியதற்கு, பாட்டுகள் எழுதுவதில் அவருக்கு இருந்த திறமை மட்டுமல்ல; அந்தப் பாட்டுகளுக்கு இடதுசாரி உள்ளடக்கத்தைக் கொடுத்து வந்ததும்தான். வலதுசாரிகளுடன் அவருக்கு ஏற்பட்ட முதல் அரசியல் மோதலுக்குக் காரணமாக இருந்தது, ‘போர்ட்டோ மோன்ட் பற்றிய கேள்விகள்' என்னும் பாடலாகும். போர்ட்டோ மோன்ட் என்னுமிடத்தில் வீடற்றவர்கள் நடத்தியப் போராட்டத்தைக் கலைப்பதற்காக, அவர்கள் மீது தாக்குதல் தொடுக்குமாறு அந்த நகரின் உயர் அரசாங்க அதிகாரி காவல்துறையினருக்கு ஆணை பிறப்பிக்க, காவல் துறையினரோ போராட்டக்காரர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கினர்.  அந்த அதிகாரி சிலநாட்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டிருந்தார்.  இவையனைத்துக்கும் அந்த அதிகாரியே காரணம் என்று அவர் மீது  நேரடித்தாக்குதல் தொடுப்பதாக அமைந்திருந்தது ஹாராவின் பாட்டு. இதன் காரணமாக ஒருநாள் வலதுசாரிகள் ஹாராவை கடுமையாக அடித்து உதைத்தனர்.

வயலெட் பர்ராவின் இசை மையத்தில் அவர் பாடிய மற்றொரு புகழ்பெற்ற பாட்டு, அவரும் அவரது துணைவியார் ஜோனும் தென் சிலியிலுள்ள மாபுசெ என்னும் பகுதியில் சந்தித்த ‘ஏஞ்செலிட்டா ஹ்யூனிமான்' என்னும் தொழிலாளியைப் பற்றிய பாட்டாகும். 1969இல் தனி யொரு இசைத்தட்டாக வெளிவந்த அந்தப் பாட்டு, கம்பளங்கள் நெய்யும் அந்தப் பெண் தொழிலாளியை ஓர் உருவகமாகக் கொண்டு சிலி நாட்டின் ‘படைப்பாற்றல் மிக்க அனாமதேயக் கரங்களை'ப் போற்றுகின்றது. மேற்கத்திய இசையின் D-F-G-A-C நோட்டுகளில் (ரி-ம-ப-த-ஸ என்னும் ஸ்வர வரிசையில்) அமைக்கப்பட்ட இந்த இசைவடிவம் தென்னமெரிக்காவின் ஆண்டெஸ் மலைப் பகுதிகளுக்கே உரியது என்று இசை வல்லுநர்கள் கூறு கின்றனர். இந்த நாட்டார் இசை பாணி ‘குவெகா' (Cueca) என்றழைக்கப்படுகின்றது. கிதாரை மைய இசைக்கருவியாகக் கொண்ட இந்த இசைபாணியில் தென்னமெரிக்க நாட்டார் இசைக் கருவிகளான கினா, ஸாம்போனா, சராங்கோ ஆகிய நரம்புக்கருவிகளும் கயோன் (Cajon)  எனச் சொல்லப்படும் தோல் கருவியும் பயன்படுத்தப் படுகின்றன.


1969இல் ஸான்டியாகோவிலுள்ள சிலி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புதிய இசை' விழாவில், ‘உழைப்பாளிக்கான ஒரு பிரார்த்தனை' (Plegaria A Un Labrador) என்னும் பாடல் முதல் பரிசைப் பெற்றது. அந்தப் பாடலை இயற்றி, மெட்டமைத்துப் பாடியவர் ஹாரா. சிலியின் பண்பாட்டு மரபுகளை உயர்த்திப் பிடிப் பதற்காக ஏராளமான இசைக்கலைஞர்கள் கலந்து கொண்ட அந்த விழா இடதுசாரிக் கோலம் கொண்டிருந்தது. அந்தப் பரிசைப் பெற்ற பிறகு ஹாரா,  அஜெண்டெ மற்றும் மக்கள் ஒற்றுமை அணியின் (Unidad Popular) பண்பாட்டுத் தூதராக இலத்தின் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு மார்க்ஸிய இடதுசாரி உணர்வை வெளிப் படுத்தும் பாடல்களை இசைத்துத் தொழிலாளர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டினார்.

அவருடைய இன்னொரு புகழ்பெற்ற அரசியல் பாட்டு, 1970 இல் சிலியின் குடியரசுத் தலைவர் தேர்தலில் ‘மக்கள் ஒற்றுமை' இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட ஸால்வடோர் அஜெண்டேவை ஆதரித்து எழுதப்பட்டு நாடெங்கிலும் பரவலாகப் பாடப்பட்ட ‘வெற்றி பெறுவோம்'  (Venceremos)  என்னும் பாட்டு ஆகும்.

ஸால்வடோர் அஜெண்டெ மருத்துவப்படிப்புப் படித்தவர். ஆனால் சோசலிசக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவர், மருத்துவத்தொழிலை நாடாமல் அரசியல் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவில்லை. மாறாக, சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். 1952, 1954, 1958ஆம் ஆண்டுகளில் சிலியில் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால், 1958 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவருக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் முன்பைவிடக் குறுகியதாக இருந்ததை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று கருதினர். எனவே அடுத்தத் தேர்தலில் (1964ஆம் ஆண்டுத் தேர்தல்) இடதுசாரி அணிகளின் கைகளுக்கு வெற்றி போய்ச் சேர்ந்துவிடுவதை எப்படியேனும் தடுத்து நிறுத்திவிடவேண்டும் என்பதற்காக, அமெரிக்காவிலிருந்த ஜான் கென்னடி அரசாங்கம் 1961ல் தேர்தல் குழுவொன்றை அமைத்தது. அதில் அமெரிக்க வெளியுறவுத்துறை, வெள்ளை மாளிகை, சிஐஏ ஆகியவற்றைச் சேர்ந்த உயரதிகாரிகள் உறுப்பியம் வகித்தனர். இதற்கு இணையான இன்னொரு குழுவும் சிலியின் தலைநகர் ஸாண்டியாகொவில் உருவாக்கப்பட்டது. அதில் உறுப்பியம் வகித்தவர்கள் அமெரிக்கத் தூதரக உயரதிகாரிகள், சிஐஏ உளவாளிகள் ஆகியோர். அந்த இரு குழுக்களும் சிலியில் இருந்த வலதுசாரிப் பிற்போக்கு அரசியல் கட்சிகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு, அந்தக் கட்சிகளுக்குத் தேவையான அனைத்துவகைப் பொருளாதார, பிரசார உதவிகளைச் செய்தன. கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகள், நகர்ப்புறங்களிலுள்ள தொழிற்சங்கக் கூட்டமைப்புகள், மாணவர்கள்,  வெகுமக்கள் ஊடகங்கள் ஆகியவற்றில் கம்யூனிஸ்ட்-விரோதக் குழுக்களை உருவாக்கி,  பின்னர் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எடுவர்டோ ஃப்ரெய் (Eduardo Frei) என்பவரை வலதுசாரிச் சக்திகளின் பொது வேட்பாளராகத் தேர்தல் களத்தில் இறக்கின. 1964ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலும் நடந்தது. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லிண்டன் ஜான்ஸன், குடியரசுக் கட்சி வேட்பாளர்  பார்ரி கோல்ட்வாட்டர் ஆகியோர் இருவர் சார்பாகவும் செலவிடப்பட்டதைவிடக் கூடுதலான பணத்தை (20 மில்லியன் அமெரிக்க டாலர்) மேற்சொன்ன குழுக்கள் அஜெண்டெவுக்கு எதிரான பிரசாரத்துக்குச் செலவிட்டன. பிற்போக்குச்சக்திகள் எதிர்பார்த்ததை விடக் கூடுதலான வாக்குகளை (56%) ஃப்ரெய் பெற்றார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் (செனட்) சிஐஏ சமர்ப்பித்த அறிக்கை,  முன்னுவமை காணாத வகையில் அந்தக் கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரசார இயக்கம் வெற்றிகரமாக அமைந்ததாகக் கூறியது. பெண் வாக்காளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்த பிரசாரத்தில், ஸால்வடோர் அஜெண்டெ பதவிக்கு வந்தால், மரபான, பெண்களுக்கே உரிய விழுமியங்க ளும் குடும்பங்களின் அறவொழுக்கங்களும் அழிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. பொருள்வகையில் பெண்களைக் கவர்ந்திழுக்கும் திட்டங்களும் ஃப்ரெய்யின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சிலியின் வலதுசாரிப் பிற்போக்காளர்களுக்கும் பீதி ஏற்படுத்தும் தேர்தல் அறிக்கையை முன்வைத்து அஜெண்டெ தேர்தல் களத்தில் இறங்கியிருந்தார். அவ்வறிக்கை கூறியது; நாட்டின் செல்வம் மறுபங்கீடு செய்யப்படும் (அன்று சிலியின் மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினர் நாட்டின் செல்வத்தில் 45 விழுக்காட்டைத் தம் கையில் வைத்திருந்தனர்); தாமிரச் சுரங்கங்களில் தொடங்கி நாட்டின் முதன்மையான தொழில்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும்; விரிவான விவசாயச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்; சோசலிச, கம்யூனிச நாடுகளுடனான உறவுகள் மேம்படுத்தப்படும். அதேவேளை  அஜெண்டெ தமது கொள்கை சோவியத் யூனியனிலிருந்து சுயேச்சையான தாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார்.

ஆக, இத்தகைய திட்டங்களைக் கொண்டிருந்த அஜெண்டெ ஆட்சிக்கு வந்தால் தமது புவிசார்-அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் பாதிக்கப்படும் என்று அமெரிக்காவும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களும் அஞ்சியதில் வியப்பில்லை.
 

ஆனால், அஜெண்டெவின் செல்வாக்குத் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருந்தது. 1970 ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ‘மக்கள் ஒற்றுமை’யின் (இதில் அஜெண்டெவின் சோசலிஸ்ட் கட்சி, சிலி கம்யூனிஸ்ட் கட்சி முதலியன இருந்தன) வேட்பாளராக அஜெண்டெ நிறுத்தப்பட்டார். 1970 ஜூன்2இல்  நடந்த அமெரிக்கா வின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் முதன்மை ஆலோ சகராக இருந்த ஹென்றி கிஸ்ஸிஞ்சர் கூறினார்: “ஒரு நாடு தனது மக்களின் பொறுப்பின்மை காரணமாக கம்யூனிஸ்ட் நாடாக மாறுவதை நாம் ஏன் ஏதும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?”. ஒரு நாடு என்று அவர் குறிப்பிட்டது சிலியை. ‘பொறுப்பற்றவர்கள்’ என்று  அவர் வர்ணித்தது சிலி நாட்டு மக்களை!

‘மக்கள் ஒற்றுமை’ அணிக்குள் பிளவு ஏற்படுத்துவதற்காக, அஜெண்டெவின் வெற்றி ஸ்டாலினிஸ ஒடுக்கு முறையைக் கொண்டுவரும் என்னும் பிரசாரத்தை சிஐஏ முடுக்கிவிட்டது. முந்தைய தேர்தலில் செய்ததைப் போலவே அது இலட்சக்கணக்கான அமெரிக்க டாலர் களை அஜெண்டெவிற்கு எதிரான பிரசாரத்திற்குச் செலவிட்டது. அப்படியிருந்தும் 1970ஆம் ஆண்டு செப்டம்பர் 11இல் நடந்த தேர்தலில் மற்ற இரு வேட்பாளர்களை ஒப்பிடுகையில் அஜெண்டெ பெற்ற வாக்குகள் அதிகம்.  எனினும், அந்த நாட்டின் அரசியல் சட்டத்தின்படி, 50 விழுக்காட்டிற்கும் குறைவாக வாக்காளர்களின் வாக்கு களைப் பெற்றவர்களில் ஒருவரைக் குடியரசுத் தலைவ ராக்குவதற்கு  நாடாளுமன்றம் ஒப்புதல் தரவேண்டும். அஜெண்டெ பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வலதுசாரியான யோர்ஹெ அலெஸ்ஸாண்ட்ரிக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைவிடச் சற்றுக் கூடுதலானது தான். எனினும், ஏழு வார காலம் அமெரிக்கா, அஜெண்டெவைப் பதவி ஏற்க விடவில்லை. 1970 செப்டம்பர் 15இல் அமெ ரிக்கக் குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்ஸன், ஹென்றி கிஸ்ஸிஞ்சர், சிஐஏவின் தலைவர் ரிச்சர்ட் ஹெல்ம்ஸ் ஆகியோர் கூடி விவாதித்தனர். சிலியின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருந்தது. அலெஸ்ஸாண்ட்ரிக்கு வாக்களிக்குமாறு செய்ய சிலி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கையூட்டுக் கொடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆலோசனை கைவிடப்பட்டு, சிலியில் இராணுவப்புரட்சி நடத்தவும், நாடாளுமன்றத்தின் முடிவுகள் அஜெண்டெவுக்கு சாதகமாக இருந்தால் அதை அந்த இராணுவப்புரட்சியின் மூலம் இரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. தேவைப்பட்டால் அஜெண் டெவைக் கொலை செய்யவும் முடிவு செய்யப்பட்டது!

சிஐஏ, சிலி இராணுவத்திலிருந்த உயரதிகாரிகள் சிலருடன் தொடர்பு கொண்டு, அவர்களைக் கொண்டு ஒரு இராணுவப்புரட்சி செய்யத் திட்டமிட்டு அவர்களில் சிலரையும் தம் கைக்குள் போட்டுக்கொண்டனர் அமெரிக்க ஆட்சியாளர்கள். ஆனால் அவர்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தவர் சிலியின் இராணுவத் தலைமைத் தளபதியான ஷ்னெய்டர். அவர் அந்த  நாட்டு இராணுவம் கடைபிடித்து வந்த மரபுப்படி, இராணுவம் அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்கி டையே சிஐஏ, தன்னுடன் ஒத்துழைக்க முன்வந்த இராணுவச் சக்திகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி வந்தது. 1970 அக்டோபர் 22 அன்று ஷ்னெய்டரை அவரது   அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் கடத்திச் செல்வதற்கான முயற்சி நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார். ஆனால் ஜனநாயக ஆட்சிமுறையைக் கவிழ்க்கும் இராணுவப் புரட்சியைச் செய்யும் சிஐஏவின் நோக்கம் நிறைவேறவில்லை. ஷ்னெய்டரின் மரணம், அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற இராணுவ மரபை வலுப்படுத்தியதால், இரு நாட்களுக்குப் பிறகு, அஜெண்டெ குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சிலி நாடாளுமன்றம் ஒப்புதல் தந்தது. 1970 நவம்பர் 3 அன்று பதவியேற்றார் அஜெண்டெ.

ஆனால் அதன் பிறகுதான் தொடங்கியது வர்க்கப் போராட்டம். குறைவளர்ச்சியிலிருந்தும் ஏகாதிபத்திய நாடுகளையும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களையும் சிலியின் பொருளாதாரம் சார்ந்திருக்கும் நிலையிலிருந்தும் அந்த நாட்டை மீட்பதற்கான திட்டங்களைத் தீட்டினார் அஜெண்டெ. தொழிற்சாலைகள் பலவற்றைத் தொழிலாளர்களே  நிர்வகிக்கின்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.  நீண்ட நெடுங்காலமாக சத்தூட்டக் குறைவினால் குழந்தைகள் அவதியுற்று வந்த நாடுகளிலொன்று சிலி. அந்த நிலையைப் போக்குவதற்காக, பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றுக்கும் அது எட்டு மாதங்கள் பூர்த்தி செய்யும்வரை ஒவ்வொரு நாளும் அரை லிட்டர் பால் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் அஜெண்டெ. ஆனால், சிஐஏ நிறுவனத்தின் தலைவர் வில்லியம் கோல்பியோ வேறொரு திட்டத்தை வகுத்திருந்தார். அதாவது, அஜெண்டெவின் அரசாங்கத்துக்குள்ள பெருமையை அகற்றி அதைத் தூக்கியெறியும் வகையில் அதன் பொருளதாரத்தைச் சீர்குலைக்கும் நுட்பமான அனைத்து முயற்சிகளையும் செய்வது.

அஜெண்டெ  குடியரசுத்தலைவராகப் பதவியேற்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தந்தவுடனேயே, சிலியில் அமெரிக்கத் தூதராக இருந்த எட்வர்ட் கெல்லி, “அஜெண்டெவின் ஆட்சியில் கீழுள்ள சிலிக்கு ஒரு ஆணியோ, ஒரு மரையோகூடச் செல்லக்கூடாது” என்று கூறினார். அச்சமயம் சிலியின் பொருளாதாரம் அமெரிக்காவையே பெரிதும் சார்ந்திருந்ததால் அதனைப் பலகீனப் படுத்துவது அமெரிக்காவுக்கு எளிதானதாக இருந்தது. அடுத்த மூன்றாண்டுகளில் அமெரிக்கா தந்துவந்த அனைத்து பொருளாதார உதவிகளும் அமெரிக்க ஏற்று மதி-இறக்குமதி வங்கி போன்றவை சிலிக்கு வழங்கி வந்த கடன்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. 1971-73 ஆம் ஆண்டுகளில் உலக வங்கி சிலிக்கு எந்தக் கடனும் வழங்க மறுத்தது. சிலியில் தனியார் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் பாதுகாக்கப்படும் என்னும் உத்திர வாதத்தை அமெரிக்க அரசாங்கம் தர மறுத்ததுடன் சிலியில் பொருளாதரத்தை நசுக்குமாறு அமெரிக்கத் தொழில், வர்த்தக நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டன. தாமிரச் சுரங்கங்களும், பெட்ரோலிய, உருக்கு, மின்சாரத் தொழில்களும் நாட்டுடையாக்கப்பட்டு விட்டாலும், அந்தத் தொழில்களில் பயன்படுத்தப்பட்டு வந்த யந்திரங்கள், உதிரிபாகங்கள் ஆகியவை பழுதடைந்தால் அவற்றை வாங்கமுடியாமல் செய்துவிட்டது அமெரிக்கா. அவற்றுக்கு முன்கூட்டியே பணம் தருவதற்குச் சிலி முன்வந்தபோதிலும் அவற்றை விற்க மறுத்துவிட்டன அமெரிக்க நிறுவனங்கள். விரைவாக சரிந்துவரும் சிலியின் பொருளாதாரம் அலைஅலையான வன்முறைப் போராட்டங்களைத் தூண்டிவிட்டு இறுதியில் இராணுவப் புரட்சிக்கு வழிகோலும் என்பது அஜெண்டெவின் ஆட்சியைத் தூக்கியெறிய விரும்புகிறவர்களுக்கான யதார்த்தப்பூர்வமான நம்பிக்கை தருகின்றது என்று ஐஐட்டி என்னும் பன்னாட்டு நிறுவனம் தயாரித்த அறிக்கையொன்று கூறியது.

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையின் காரணமாக சிலி நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களுக்கு- உணவுப்பொருள்களிலிருந்து சிகரெட், தொலைக்காட்சி, கார் முதலியவற்றுக்கான உதிரிபாகங்கள் வரை - பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலை மையை இன்னும் மோசமாக்குவதற்காக நாட்டின் பல் வேறு துறைகளில், பல்வேறு இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடப்பதற்கு அமெரிக்க நிதி உதவி செய்தது. 1972 அக்டோபரில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள், டிரக்குகள் ஆகியவற்றின் உரிமை யாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, மக்களின் அன்றாட, இன்றியமையாத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருள்களின் விநியோ கமும் விற்பனையும் மிகப் பெருமளவில் பாதிக்கப்பட் டன. தொடர்ந்து பல்வேறு வணிகர்களும், தொழிலதிபர் களும் தமது நிறுவனங்களை இழுத்து மூடினர். அரசாங்க அதிகாரிகள் பலர் பதவி விலகி அரசு  நிர்வாகம் ஒழுங்காகக் செயல்பட முடியாதபடி செய்தனர். மாணவர் அமைப்புகள், மருத்துவர் சங்கங்கள், வழக்குரைஞர் அமைப்புகள் ஆகியவற்றிலும் சிஐஏ ஊடுருவியது. 

அஜெண்டெவின் அரசாங்கம், கருத்துச் சுதந்திரத்திற்கோ, பத்திரிகை சுதந்திரத்திற்கோ எந்தத் தடையையும் விதிக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட வலதுசாரிப் பிற்போக்கு ஊடகங்கள் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல் பற்றிய செய்திகளை ஊதிப் பெருக்கி வெளியிட்டன. உள்நாட்டுப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக்கூட சில பத்திரிகைகள் எழுதின. அஜெண்டெ அரசாங்கத்தின் சோசலிச நடவடிக்கைகளால் எந்தப் பயனும் இல்லை, அவை நாட்டை அழிவுப் பாதைக்கே இட்டுச்செல்லும் என்னும் கருத்து மக்களிடையே வலுப்பெறச் செய்யத்தான் இந்த முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. அஜெண்டெவின் சோசலிச முயற்சிகளுக்கு வலதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்றமும் நீதித்துறையும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தன.

அரசாங்கத்திற்கு எதிரான வேலை நிறுத்தங்களையும் இராணுவத்திலிருந்து வந்த எதிர்ப்புகளையும் சமாளிப்பதற்காக, அஜெண்டெவின் அரசாங்கம் சிலியின் இராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த ப்ராட்ஸ் என்பவரைத் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டது. ஆனால்,  இந்த நியமனம் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் ஏற்பட்ட நிலையற்ற சமாதான மாகவே அமைந்தது.

சர்வதேச உணர்வு மிகுந்த ஹாரா, ஸ்பெயினில் தளபதி ஃப்ராங்கோவின் பாசிசம் ஏற்படுத்திய பயங்கரமான சூழலை மிக நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார். ஓர் உழவராகப் பிறந்து, கவிஞராக மலர்ந்து ஃப்ராங்கோவின் பாசிசச் சிறையில் மரணமடைந்த மிகுயெல் ஹெர்னாண் டெஸின் கவிதைப் புத்தகங்களையும் விவிலியப் பிரதி ஒன்றையும் தமது படுக்கைக்கு அருகிலிருந்த மேஜையில் எப்போதும் வைத்திருந்த ஹாரா, ஹெர்னாண்டெஸின் கவிதையொன்றுக்கு இசையமைத்து அதை இண்டி-இயிமானி குழுவினருடன் பாடுவதற்கான ஒத்திகையை மும்முரமாகச் செய்து கொண்டிருந்தார். ஸ்பெயினில் ஜனநாயகச் சக்திகளைத் துடைத்தெறிய எதிர்ப்புரட்சியில் ஈடுபட்ட பாசிஸ்டுகள், அதை மக்களின் சுதந்திரத்திற்காக நடத்துவதாகக் கூறிக்கொண்டார்கள். அதைக் கருத்தில் கொண்டு ஹெர்னாண்டெஸ் கவிதையொன்றை எழுதினார் 5:

சுதந்திரத்தைப் பற்றிப் பேசுபவர்கள்
நமது உழைக்கும் மக்களின் இரத்தத்தைக் கொண்டு
எனது நாட்டை மீண்டும் கறைபடியச் செய்கின்றனர்
ஆனால் அவர்களது கைகளிலோ
குற்றத்தின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நமது குழந்தைகளைத்
தாய்மார்களிடமிருந்து பிரித்து
கிறிஸ்து சுமந்த சிலுவையைப்
புதிதாகக் கட்டமைக்க விரும்புகிறார்கள்.

கடந்த  நூற்றாண்டுகளிலிருந்து தாம் சுவீகரித்த இகழை
அவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள்
ஆனால் கொலைகாரர்களின் அடையாளத்தை
அவர்களது முகங்களிலிருந்து துடைத்துவிட முடியாது
ஆயிரமாயிரம் பேர் ஏற்கெனவே தங்கள் இரத்தத்தைத்
தியாகம் செய்துள்ளனர்
ஆறாய்ப் பெருகியோடும் அந்த இரத்தம்
ரொட்டித்துண்டுகளைப் பெருகச் செய்துள்ளது.

இப்போது நான் எனது குழந்தையோடும் சகோதரனோடும்
நாமெல்லோரும் நாள்தோறும் கட்டிக்கொண்டிருக்கும்
புதிய உலகத்தில் வாழ விரும்புகிறோம்.
துன்பத்தின் எஜமானர்களே
உங்கள் அச்சுறுத்தல் என்னை மிரளச் செய்யவில்லை
நம்பிக்கை நட்சத்திரம் எப்போதும் எங்களுடையதுதான்.
மக்கள் என்னும் காற்று என்னை அழைக்கின்றது
மக்கள் என்னும் காற்று என்னைச் சுமக்கின்றது
அது எனது இதயத்தை நாலாபுறமும் தூவுகின்றது
எனது தொண்டையினூடாக செய்தி பரப்புகிறது
ஆகவே மரணம் என்னைத் தூக்கிச் செல்லும் வரை
 கவிஞனின் குரல் கேட்கப்படும்
மக்களின் சாலை வழியாக
இப்போதும் எப்போதும்

சிலி அரசாங்கத்தின் தூதராக வெளிநாடுகளில் பணியாற்றி வந்த கவிஞர் பாப்லோ நெரூடா தாயகம் திரும்பி வந்து நெக்ரா என்னும் தீவில் கடற்கரையோரமுள்ள வீட்டில் வசித்து வந்தார். அவர் தாயகம் திரும்பிய போது ஸாண்டியாகோவில் அவருக்கு மக்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து வரவேற்பளித்தபோது அவர் நிகழ்த்திய உரையிலும் பின்னர் மே 26அன்று அவரது வீட்டிலிருந்து தேசிய தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்ட உரையிலும் ஸ்பெயினில் 1930களில் நடந்த உள்நாட்டுப் போரில் பாசிஸ்டுகள் வெற்றியடைந்ததையும் அதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் துன்பங்கள் அனுபவித்ததையும் எடுத்துக் காட்டி, சிலியில் ஓர் உள்நாட்டுப் போர் ஏற்படுமானால் அது அந்த நாட்டு மக்களுக்குப் பேரழிவை உண்டாக்குமாதலால்  மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும், அத்தகைய பேரழிவைத் தடுப்பதற்கு சிலியின் கலைஞர்கள் தம்மால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்று விக்டர் ஹாரா, இன்ட்டி-இயிமானி இசைக்குழுக் கலைஞர்கள் முதலியோர் பாசிச எதிர்ப்பு பிரசார கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கினர். ஸ்பெயினில் பாசிசம் ஆட்சிக்கு வந்தது பற்றிய தொடர் நிகழ்ச்சிகளை தேசியத் தொலைக்காட்சி நிறுவ னத்தின் சார்பாக வழங்கிய ஹாரா, ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் நெருடாவின் கவிதையொன்றைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.


வலதுசாரிப் பிற்போக்காளர்களும் அவர்களை ஆதரித்து  வந்த ஊடகங்களும் தொடர்ந்து எதிர்ப்புரட்சி பிரசாரங்களைச் செய்துவந்தன. மக்களைப் பீதியில் ஆழ்த்துவதற்காக ஸாண்டியாகோ நகரெங்கும் ‘ஜகார்த்தா திரும்பிவரப் போகின்றது’  (1965இல் இந்தோனீஷியாவில் நடந்த இராணுவப்புரட்சி பல இலட்சக்கணக்கான கம்யூனிஸ்டு களையும் அவர்களது ஆதரவாளர்களையும் கொன்று குவித்தது. இதைத்தான் ‘ ஜகார்த்தா’ என்ற குறியீட்டின் மூலம் மக்களுக்குச் சொல்ல விரும்பினர் எதிர்ப்புரட்சி யாளர்கள். இந்தோனீஷியாவின் தலைநகரம் ஜகார்த்தா) என்ற வாசகங்கள் சுவர்களில் எழுதப்பட்டிருந்தன.

இந்த வலதுசாரிப் பிற்போக்குப் பிரசாரம், பல இடதுசாரிகளைக் காவுகொண்டது. அவர்களிலொருவர் ரொபெர்ட்டொ அஹுமடா என்ற கட்டடத் தொழிலாளி. இடதுசாரிக் கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்காக  வலதுசாரிச் சக்திகளின் குடியிருப்புகளின் வழியாக நடந்து வந்துகொண்டிருந்த ரொபெர்ட்டொ அஹுமாடா அந்தக் குடியிருப்புகளின் மாடிகளிலொன்றிலிருந்து சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்.

அந்தத் தொழிலாளியும் அவரது குடும்பத்தினரும் ஹாராவுக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். ரொபெர்ட்டோவின் மரணம் ஹாராவை மிகவும் உலுக்கியது. அவரது நினைவைப் போற்றும் வகையில் அவர் தமது ஒரு பாடலை இயற்றினார் ஹாரா. ரொபெர்ட்டோ தமது  மனைவியுடன் பேசுவது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது அந்தப் பாடல். ‘எனது வேலைக்குப் போகும் வழியில்' (Cuando  voy al trabjo)6 என்னும் பாடல், ரொபொர்ட்டாவைப் பற்றிய பாடல் மட்டுமல்ல; தொழிலாளி வர்க்கத்தின் மீது ஹாராவுக்கி ருந்த அளவற்ற பற்றையும் பாசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய பாடலும்தான்:

எனது வேலைக்குப் போகும் வழியில்
உன்னை நினைக்கின்றேன்.
நகரத்தின் தெருக்களினூடே
உன்னை நினைக்கின்றேன்.
புகை படிந்த ஜன்னல்களுக்கு ஊடாகத் தெரியும்
 முகங்களைப் பார்க்கையில்-
அவர்கள் யார், எங்கு செல்கிறார்கள்
என்பது எனக்குத் தெரியாது  -
என் வாழ்க்கையின்,
எதிர்காலத்தின் தோழியே உன்னையும்
கசப்பான நேரங்களையும்
உயிரோடு இருப்பதன் மகிழ்ச்சியையும்
நினைக்கின்றேன்
ஒரு கதையின் தொடக்கத்தை,
அதன் முடிவை அறியாமல்
படைத்துக் கொண்டு.
நாள் வேலை முடிந்து
 மாலைநேரம் நாம் கட்டிய கட்டடங்களின் மீது
 தனது நிழல்களை விரித்து வருகையில்
நண்பர்களிடையே விவாதித்துக்கொண்டும்
இந்த நேரத்தையும் எதிர்காலத்தையும் பற்றிய விஷயங்களை
அலசிக் கொண்டும் வேலையிலிருந்து திரும்பி வருகையில்
என் அன்பே, எனது வாழ்க்கையின்,
எதிர்காலத்தின் தோழியே
உன்னை நினைக்கின்றேன்.

நான் வீட்டுக்கு வருகையில் நீ அங்கு இருக்கிறாய்
நாம் இருவரும்  சேர்ந்து நமது கனவுகளை நெய்கின்றோம்
கதையின் தொடக்கத்தை, அதன் முடிவை அறியாமல்
படைத்துக் கொண்டு.

சிஐஏவின் அனைத்துவகை உதவிகளோடு, சிலியில் எதிர்ப்புரட்சியை நடத்துவதற்கான முயற்சிகளை வலதுசாரி பாசிஸ்டுகள் மும்முரமாகச் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு முதலில் பலியானவர்  அஜெண்டெ வின் ஆதரவாளரும் கடற்படைத் தளபதிகளிலொருவரு மான கமாண்டெர் ஆர்டுரோ அராயா. அஜெண்டேவுக்கும் கடற்படையில் நாட்டுக்கு விசுவாசமாக இருந்தவர் களுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தி வந்தவர் அவர், தமது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த போது எதிர்ப்புரட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த கட்டமாக, இராணுவத்தின் தலைமைத் தளபதியும் அஜெண்டெவின் அரசாங்க அமைச்சருமான தளபதி ப்ராட்ஸ் மீது குறிவைத்தனர் பாசிஸ்டுகள். முற்போக்குக் கருத்துகளைக் கொண்டிருந்தவரும் நாட்டுப் பற்றாளருமான அவர்தாம் அவர்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தவர். அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக அற்பத்தனமான வழிமுறைகள் கையாளப்பட்டன. ஒருநாள் ப்ராட்ஸ் தமது அலுவலகத்திற்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையொன்றில் சென்று கொண்டிருக்கும்போது, மேட்டுக்குடியைச் சேர்ந்த சிலர் இரண்டு வாகனங்களில் வந்து வேண்டுமென்றே அவர் பயணம் செய்த காரை வழிமறித்தனர். தொடர்ந்து அவர்கள் இப்படிச் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ராட்ஸ், தமது காரை வழிமறித்த அந்த வாகனமொன்றிலிருந்த காரோட்டியை எச்சரிக்கும் விதமாக தமது கைத்துப்பாக்கியை எடுத்துக் காட்டினார். அந்தக் காரோட்டி, தமது காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தபோதுதான், அது ஆண்களைப் போலத் தலைமுடியைக் குட்டையாகக் கத்திரித்துக் கொண்டிருந்த ஒரு மேட்டுக்குடிப்பெண் என்பது அவருக்குத் தெரியவந்தது.  ஆனால், அந்தப் பெண்மணி போட்ட சத்தத்தைக் கேட்டு அங்கு திரண்ட ஆண்களும் பெண்களும் உண்மை விஷயத்தைத் தெரிந்துகொள்ளாமலேயே,  நிராயுதபாணி யான ஒரு பெண்ணை மிரட்டிய கேவலமான காரியத்தைச் செய்துவிட்டதாக ப்ராட்ஸைத் திட்டியதுடன், அவரைத் தாக்கவும் முற்பட்டனர். அந்த நிகழ்ச்சியை பூதாகரமாக்கின ஊடகங்கள். ஏராளமான இராணுவத் தளபதிகள், உயரதிகாரிகள்  ஆகியோரின் மனைவிமார்கள், ப்ராட்ஸின் வீட்டுக்கு  எதிரே திரண்டு  சகிக்கமுடியாத அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் அவர்மீது தொடுத்தனர். ‘மார்க்ஸியத்திலிருந்து நாட்டைக் காப்பதற்கு எந்தக் குறுக்கீட்டையும் செய்யாத ஒரு கோழை’ என்று அவரை வசைபாடினர். அவமான உணர்ச்சியின் காரணமாக, ப்ராட்ஸ் அஜெண்டெவைச் சந்தித்துப் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டார். அதைத் திரும்பப் பெறுமாறு அஜெண்டெ எவ்வளவோ கேட்டுக்கொண்ட போதிலும் ப்ராட்ஸ் தமது முடிவில் உறுதியாக இருந்துவிட்டார்.

இராணுவத்திலிருந்த உயரதிகாரிகள் பெரும்பாலோர் வலதுசாரிகளாக இருந்ததால் சிஐஏவின் செல்லப் பிள்ளைகளிலொருவரான தளபதி பினோஷெ, இராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். அஜெண்டெவுக்கு எதிரான இராணுவப்புரட்சிக்கான ஒத்திகைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விக்டர் ஹாரா, தமது குடும்பத்தினருடன் நெக்ரா தீவுக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் இயற்றிய பாடலுக்கு ‘ நெக்ரா தீவின் பாடல்’ எனப் பெயரிட விரும்பினார். பாசிஸ்டுகளின் எதிர்ப்புரட்சி முயற்சிகளை நன்கு அறிந்திருந்த அவர், தமது சாவைப் பற்றியும் முன்னுணர்ந்து கொண்டாரோ என்னவோ. அதனால்தான் அவரது கொள்கைப் பிரகடனமாக அமைந்திருந்தது. 1973 செப்டம்பர் 3இல் அவர் இயற்றிய, பின்னாளில் ‘கொள்கை அறிக்கை’ (Manifesto) எனப் பெயரிடப்பட்ட  அந்தப் பாடல் 7:

பாடுவது எனக்குப் பிரியமானது என்பதாலோ
எனக்குக் குரல் வளம் இருப்பதாலோ
 நான் பாடுவதில்லை.
எனது கிதாரிடம் உணர்ச்சியும் அறிவும் இருப்பதால்
பாடுகிறேன்.
மண்ணின் இதயமும் புறாவின் சிறகுகளும்
கொண்டது எனது கிதார்
மகிழ்ச்சியையும் துயரத்தையும்
ஆசீர்வதிக்கும் புனித நீர் அது.
வயெலெட் 8 கூறுவது போல
 எனது பாடலுக்குக் குறிக்கோள் உண்டு
 கடினமாக உழைக்கும் கிதார்
வசந்தத்தின் நறுமணம் கமழும் கிதார்.

எனது கிதார் செல்வந்தர்களுக்கானது அல்ல, இல்லை
நிச்சயமாக  இல்லை
எனது பாடல் நட்சத்திரங்களை அடைவதற்காக
நாம் கட்டிக் கொண்டிருக்கும் ஏணி.
ஏனெனில், ஒரு பாடல் பொருள்கொள்வது
 தனது பாடலை உளப்பூர்வமாகப் பாடிக்கொண்டே
மரிக்கின்ற ஒருவனின் நாளங்களில் 
அது துடிக்கும்போதுதான்.

எனது பாடல் நொடியில் தோன்றி மறையும்
 பாராட்டுக்கானது அல்ல
வெளிநாட்டுப் புகழைப் பெறுவதற்கானதுமல்ல
அது இந்தக் குறுகிய நாட்டுக்கானது
புவியின் அடியாழங்களுக்கேயானது
அங்கேதான் எல்லாமே
 ஓய்வு கொள்ள வந்து சேருகின்றன
அங்கேதான் எல்லாமே தொடங்குகின்றன
தீரமிக்கதாய் இருந்த பாடல்
அங்கேதான்
என்றென்றும் புதிய பாடலாகவே இருக்கும்.

நெக்ரா தீவிலிருந்து ஸாண்டியாகோவுக்கு ஹாராவும் அவர்கள் குடும்பத்தினரும் திரும்பிவரும் வழியில் பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாயினர். மயிரிழையில் தப்பித்த அவர்கள் வீடு வந்து சேர்வதற்கு முன்னரே இராணுவப்புரட்சி உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. 1973 செப்டம்பர் 11இல் பினோஷெவின் எதிர்ப்புரட்சி இராணுவப்படைகள் அஜெண்டெவின் மாளிகையைச் சூழ்ந்துகொண்டன. அவற்றுக்குப் பின்புலமாக கடலில் வலம் வந்து கொண்டிருந்தன அமெரிக்கப் போர்க்கப்பல்கள். ஆனால், பாசிஸ்டுகளிடம் சரணடைய மறுத்துவிட்டார் அஜெண்டெ. அவர் தம் நாட்டு மக்களிடம் ஆற்றிய கடைசி வானொலி உரையில் கூறினார்:  “உங்களிடம் நான் பேசுவதற்கான கடைசி வாய்ப்பு இதுவாகத்தான் இருக்கும்... நான் பதவி விலகமாட்டேன்.  மக்கள் என் மீது வைத்துள்ள விசுவாசத்திற்கு ஈடாக எனது உயிரைத் தருவேன்... உங்களிடம் சொல்கின்றேன்:  ஆயிரமாயிரம் சிலி மக்களின் மனச்சாட்சியில் நாம் விதைத்துள்ள விதைகளை முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிட முடியாது என்பது நிச்சயம்... சமூக மாற்றம் என்னும் நிகழ்வுப் போக்கை எந்தக் குற்றச்செயலாலும் பலவந்தத்தாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. வரலாறு நமக்கே சொந்தம். ஏனெனில் அதை உருவாக்குபவர்கள் மக்கள்”.

அஜெண்டெவின்  வானொலி உரையைத் தமது வீட்டிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஹாராவின் உள்ளம் கொதித்தது. பாசிசத்தை முறியடிக்கத் தம்மால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வதற்குத் தயாராக இருந்த அவருக்குத் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. உடனே அவர் வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்போது அஜெண்டெவின் மாளிகைமீது பாசிசத் துருப்புகள் குண்டுமாரி பொழிந்துகொண்டிருந்தன. ஸாண்டியாகோ நகரம் முழுவதும் குழப்பத்தில் சிக்கியிருந்தது. இடதுசாரிகளும் அவர்களது இருப்பிடங்களும் அலுவலகங்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். ஹாராவும் அவரது தோழர்கள் பலரும் அவர் பணியாற்றி வந்த சிலி பல்கலைக்கழகக் கட்டடத்திற்குள் தஞ்சம் புகுந்தனர்.


அவர் எங்கு சென்றார், அவருக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதை அறியாமல் அவரது மனைவி ஜோனும் பெண் மக்களும் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தனர். வெளியுலகத் தொடர்புகள் முழுவதும் துண்டிக்கப்பட்டிருந் தன. அண்டைப்பகுதிகளில் பகைமை கக்கும் வலதுசாரிப் பிற்போக்காளர்களின் குடியிருப்புகளே மிகுந்திருந்தன. இடதுசாரிக் கலைக்குழுக்களைச் சேர்ந்த சிலர் மட்டுமே ஹாராவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், நாள்தோறும் கைது செய்யப்படும், கொலை செய்யப்படும் இடதுசாரிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டேயிருந்தது.

இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, ஸாண்டியாகோவிலுள்ள ஒரு மைதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹாராவும் அவரது தோழர்களும் பின்னர் இன்னொரு மைதானத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு இராணுவத்தினரின்  கைதிகளாக இருந்தவர்கள் ஐயாயிரம் பேர். அவர் களில் முக்கியமானவர்களைப் பொறுக்கியெடுத்து சித்திரவதை செய்து கொல்லத் தொடங்கினர் இராணுவத்தினர். கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஹாரா. ‘நீதான் அந்தப் பொறுக்கிப் பாடகனா?’ என்று கேட்டான் ஓர் இராணுவ அதிகாரி. பின்னர் ஹாராவின் கை கால் எலும்புகள் முறிக்கப்பட்டன. கடைசியில் அவரது நெற்றியையும் உடலின் பிற பகுதிகளையும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன.

அவரது உடல் அந்த மைதானத்துக்கு அருகிலுள்ள ஒரு தெருவில் வேறு பல உடல்களோடு சேர்த்துத் தூக்கியெறியப்பட்டிருந்தது. அதை அடையாளம் கண்டு கொண்ட ஹாரவின் ஆதரவாளர் ஒருவர் -சவக்கிடங்கில் வேலை பார்த்து வந்தவர்-  அடையாளம் தெரியாதவர்க ளின் உடல்களோடு சேர்த்து அதை இராணுவத்தினர் பொது சவக்குழியில் புதைத்துவிடுவார்கள் என்றஞ்சி - அதை எடுத்து அந்த சவக்கிடங்குக்குள் வைத்துவிட்டு நேராக ஹாராவின் வீட்டுக்கே சென்று, அந்த செய்தியை ஜோனிடம் தெரிவித்தார். சவக்கிடங்குக்கு விரைந்து சென்ற ஜோன், அங்கு இருந்தது ஹாராவின் உடல்தான் என்பதை அடையாளம் கண்டு கொண்டார். உடல் முழு வதிலும் சித்திரவதைக் காயங்கள். குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் ஹாராவின் உடலை அடக்கம் செய்வதற்கு இராணுவம் அனுமதி கொடுத்துவிட்டது. ஹாராவின் மரணம் பற்றிய செய்தியை அன்று ஒரேயொரு நாளிதழ் மட்டும் குட்டிச் செய்தியாக வெளியிட்டது.

ஹாரா கொல்லப்படுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு, அவர் சிறை வைக்கப்பட்டிருந்த மைதானத்தில் கிடைத்த துண்டுத்தாளொன்றில் தமது கடைசிப்பாடலை எழுதியிருந்தார். தம்மைக் கொலை செய்யப்படுவதற்கு இராணுவத்தினர் எந்த நேரத்திலும் வருவார்கள் என்பதால் அந்தக் காகிதத்துண்டைத் தமது தோழரொருவரிடம் கொடுத்திருந்தார். அந்தத் தோழர் அதைத் தமது காலணியோடு அணியும் ஸாக்ஸில் மறைத்து வைத்திருந்தார். ஆனால், அவரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படும்போது அந்தக் காகிதம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இதற்கிடையில் அந்தக் கவிதை அவரது தோழர்கள் சிலரால் பிரதியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தது. இரகசியமாகக் கடத்தி வரப்பட்ட அந்தப் அந்த பிரதிகளிலொன்று சிலியின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் போய்ச் சேர்ந்தது. அதில் சிறு திருத்தங்கள் செய்து வெளியிட்டது அந்தக் கட்சி.

பினோஷேவின் இராணுவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு, ஜனநாயக ஆட்சிமுறை அந்த நாட்டிற்குத் திரும்பி வந்த பிறகு,  எந்த மைதானத்தில் ஹாரா சித்திரவதை செய்யப் பட்டுக் கொலை செய்யப்பட்டாரோ அந்த மைதானத்திற்கு ‘விகடர் ஹாரா ஸ்டேடியம்’ எனப் பெயர் சூட்டப் பட்டது. சிலியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களிலொன்றாகக் கருதப்படும் அந்த மைதானத்திற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். ஹாராவின் நினைவைப் போற்றும் வகையில் உலகெங்குமுள்ள புகழ்பெற்ற பாடகர்களும் இசைக் கலைஞர்களும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளனர்.

சிலியில் ஜனநாயக ஆட்சிமுறை திரும்பிய பிறகு, பினோஷேவின் இராணுவ ஆட்சியில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகளின் போது விக்டர் ஹாராவைக் கொலை செய்தவர்கள் யார் என்பது தெரிய வந்தது. எனினும், கொலைகாரர்களைத் தண்டிக்க ஜோன் நடத்திவரும் சட்டரீதியான போராட்டம் இன்றும் தொடர்கிறது.  எனினும் 1973இல் நடந்த பாசிச எதிர்ப்புரட்சி கட்டவிழ்த்துவிட்ட பயங்கரத்தை இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் எடுத்துக் கூறும் எச்சரிக்கைப் பலகையாக அமைந்து விட்டது ஹாரா எழுதிய அந்தக் கடைசிக் கவிதை-பாடல்:

நாம் ஐயாயிரம் பேர் இங்கிருக்கின்றோம்
நகரத்தின் இந்தச் சிறு பகுதியில்
ஐயாயிரம் பேர்
நகரங்களிலும் நாடு முழுவதிலும்
நாம் எத்தனை பேர் இருக்கின்றோம்?
இங்கு நாம், விதைகளை விதைக்கின்ற,
 தொழிற்சாலைகளை இயக்குகின்ற
பத்தாயிரம் கைகள்.
பசிக்கும்,குளிருக்கும், பீதிக்கும், வலிக்கும்
தார்மீக நிர்பந்தத்திற்கும், அச்சத்திற்கும்,
 புத்தி பேதலிப்புக்குமுள்ளான மனிதர்கள்தாம் எத்தனை?
 நட்சத்திர மண்டலத்திற்குள் மறைந்தவர்கள் போல
 நம்மில் அறுவர் தொலைந்து போயினர்.
ஒருவர் மரணமடைந்தார்,
இன்னொருவர் அடித்துக் கொல்லப்பட்டார் -
ஒரு மானுடப் பிறவியை  இப்படி அடித்துக் கொல்வது
சாத்தியம் என்று நான் ஒரு போதும்   நம்பியதில்லை.
மற்ற நால்வரும் தமக்கேற்பட்ட  அச்சத்திற்கு
முடிவு கட்ட விரும்பினர்.
 ஒருவர் சூன்யத்திற்குள்  குதித்தார்
மற்றொருவர் சுவரின் மீது தமது தலையை  மோதி
சாவைத் தழுவினார்.
ஆனால் அவர்கள் அனைவரின் கண்களிலுமே
நிலைகுத்தியிருந்தது  மரணத்தின் பார்வை
பாசிசத்தின் முகம் தட்டியெழுப்பியுள்ள பீதிதான் என்னே!
எதைப் பற்றியும் கடுகளவும்கூடப் பொருட்படுத்தாது 
பிசிறின்றி வெட்டும் கத்தியைப் போலத்
 துல்லியமாக அவர்கள்
தங்கள் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை
இரத்தம் பதக்கத்திற்கு ஈடானது.
படுகொலை  செய்வது வீரச்செயலுக்கு ஈடானது.
கடவுளே, நீங்கள் படைத்த உலகம் இதுதானா?
உங்களது ஏழு நாள் அற்புதங்கள், உழைப்பு ஆகியவற்றின் விளைபொருள் இதுதானா?
இந்த நான்குச்சுவர்களுக்குள், வெறும் எண்ணைத் தவிர வேறொன்றுமில்லை
இம்மியளவும் வளராத,
மெல்ல மெல்ல சாவை மட்டுமே விரும்புகிற எண்.
ஆனால் எனது மனச்சான்று திடீரென
 என்னைத் தட்டி எழுப்புகின்றது
இங்கு வீசும் அலைக்கு  இதயத்துடிப்பு இல்லை என்பதை
இயந்திரங்களின் நாடித்துடிப்பு மட்டுமே உள்ளது என்பதை
பிரசவம் பார்க்கும் செவிலியர்கள் போல
 இன்முகங் காட்டும்9
இராணுவம் இருப்பதைக் காண்கின்றேன்.
மெக்ஸிகோவும் கியூபாவும் உலகமும்
இந்த அக்கிரமத்திற்கு எதிராக
உரத்த குரல் எழுப்பட்டும்.

எதையும் உற்பத்தி செய்யாத பத்தாயிரம் கைகள் நாம்
நமது தாயகத்தில் நாம் எத்தனை பேர் இருக்கின்றோம்?
நமது தோழர் குடியரசுத் தலைவரின் இரத்தம்
 குண்டுகளையும் இயந்திரத் துப்பாக்கிகளையும்விட
அதிகமான வலுவோடு தாக்கத் தொடங்கும்.
 அதைப் போலவே  மீண்டும் நமது முஷ்டியும்.

பாடுவது என்பது எத்தனை கடினம்
பயங்கரத்தை நான் பாடியே ஆக வேண்டும் என்ற போதும்
நான் வாழும் வாழ்க்கையாக பயங்கரம்
நான் மரணித்துக் கொண்டிருக்கும் பயங்கரம்
இத்தனைக்கும் மத்தியில்,
மௌனமும் கூக்குரலும் எனது பாடலை முடிக்கும்
எல்லையற்ற இந்தப் பல தருணங்களில்
 நான் என்னைக் காண்பது எவ்வளவு கடினம்
 நான் காண்பது நான் என்றுமே காணாதவை
நான் உணர்ந்தவை, உணர்பவை
தக்க தருணத்தைப் பிறப்பிக்கும்.

***
மேற்கோள்கள்:

1.  இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு: Joan Hara,  An  Unfinished Song: Life of Victor Hara, Jonathan Cape, New York, 1997 


2. இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு: Tracy Charles, Violeta Parra & the concept of cultural discourse, tracycharles.blogspot.com/2007/01/violeta-parra-concept-of-cultural.htm
3. இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு: Duerme Negrito, Wikipedia. 

4. இந்தப் பாடலும் ஃபிரான்ஸிஸ்கோ விஜா பற்றிய பாடலும்  ஆங்கில மொழியாக்கத்துடன் யு ட்யூபில் கிடைக்கின்றன.
https://youtu.be/BfEHz5gBWHY;  https://youtu.be/3koGm4F14WE


5. இந்தக் கவிதையின் ஆங்கில மொழியாக்கத்திற்கு:
Joan Hara,  An  Unfinished Song: Life of Victor Hara, Jonathan Cape, New York, 1997.
 
6. இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கதிற்கு: மேற் சொன்ன நூல்
 
7. ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட இந்தப் பாடலுக்குக்குப் பல்வேறு ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளன. இந்தக் கட்டுரையாசிரியர் கண்ணில்பட்ட முதல் ஆங்கில மொழியாக்கம்,
Lanka Guardian என்னும் ஆங்கில ஏட்டில் ஏட்டில் (Vol 1, No.10,September 15, 1979) வெளியிடப்பட்டது. அந்த ஆங்கில மொழியாக்கத்தின் தமிழாக்கம்  ‘மண்ணும் சொல்லும்: மூன்றாம் உலகக் கவிதைகள்' என்னும் தொகுப்பில் (அன்னம் (பி) லிமி டெட், சிவகங்கை, 1991; அடையாளம், புத்தா நத்தம், 2006)  இடம் பெற்றுள்ளது. இன்னொரு ஆங்கில மொழியாக்கம், இணையதளமொன்றிலிருந்து பெறப்பட்டது. அதன் தமிழாக்கம் ‘செம்மலர்' ஏப்ரல் இதழில் வெளிவந்த ‘பொய்களின் மீது கட்டப்பட்டுள்ள பாசிசத்துக்கு எதிராக...' என்னும் கட்டுரையில் உள்ளது. இந்தக் கட்டுரையிலுள்ள தமிழாக்கம், ஜோன் ஹாரா எழுதியுள்ள மேற்சொன்ன நூலிலுள்ளது.  இந்த நூலிலுள்ள கடைசி மூன்று அத்தியாயங்களை ww.historyisaweapon.com/defcon1/jaraunfinsong.html என்னும் இணணயதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹாராவின் துணைவியாரும் ஸ்பானிய மொழி நன்கு அறிந்தவரு மான ஜோனின் ஆங்கில மொழியாக்கம்தான் சரியான மொழியாக்கம் என்று கருத வேண்டும்.

8. வயலெட்டா பர்ரா

9
Violenc is the midwife of democracy in Chile என்று வலதுசாரிப் பிற்போக்காளர்கள் கூறிவந்ததால், அதை இங்கு முரண்நகையாக விக்டர் ஹாரா பயன்படுத்துகிறார் என்று ஊகிக்க இடமுண்டு.

தரவுகள்:
1.   Amy Cunninfham, Victor Jara-The Martyred Musician of Nueva Cancion Chilena, soundsandcolours.com/.../chile/victor-jara-the-martyred-musician-of-nue (accessed on 20th December 2014)
2.       Joan Hara, An Unfinished Song: The Life of Victor Jara, Jonathan Cape, New York, 1997
3.       Violeta Parra, Wikipedia (accessed on 14th January 2014)
4.       1973  Chilean coup d’etat, Wikipedia ( accessed on 31st January 2015)
5.       Tracy Charles, Violeta Parra &the concept of cultural discourse, tracycharles.blogspot.com/2007/01/violeta-parra-concept-of-cultural.html (accessed on 14th January 2014)
6.       Mercedes Sosa Obituary, The Guardian, London, 5th October 2009 (accessed on 11th October 2009)
7.       D.Lencho, Mercedes Sosa, 1935-2009, WSWS.org, 10th October 2009 (accessed on 11th October 2009)
8.     Duerme Negrito, Wikipedia
9.       Eduardo Galeano,  The Children of the Days,A Calender of Human History, Nation Books, New York, 2013
 
புதுவிசை 44வது இதழ்