Saturday, April 18, 2020

மாவோ - மலேரியா - மருந்து: 2015ஆம் ஆண்டு நோபல் பரிசு சொல்லும் பாடம் என்ன? முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்



சோதனை செய்து தெளியாது பழமையே சிறந்தது என பொத்தாம் பொதுவாக தலையில் வைத்து கொண்டாடவும் கூடாது அதேசமயம் காலங்காலமாக உழைக்கும் மக்கள் அனுபவத்தில் சேகரித்த கருத்துகளில் மாயம்-மந்திரம் காத்து-கருப்பு போன்ற கற்பிதக் கருத்துகளை புறந்தள்ளி அறிவியல் பார்வையில் அலசி பயனுள்ளவற்றை தேடி எடுக்கவேண்டும் என்பது பாரம்பரிய சீன மருத்துவத்தை குறித்து மாவோவின் கொள்கையாக இருந்தது. 


"ப்ராஜெக்ட் 523” என்ற பெயரோடு சீனாவில் ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வும் அதை தொடர்ந்து  சியிங்ஹோசு (அல்லது குயிங்ஹாவ் - Qinghaosu) எனும் சீன மருத்துவ மூலிகையிலிருந்து மலேரியாவிற்கு இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஆர்டிமிஸினின் (artemisinin) வேதிமருந்து பிரித்து எடுக்கப்பட்ட கண்டுபிடிப்பு சுவையான கதை. கடந்த இரண்டு பத்தாண்டுகளில் பலகோடி மனித உயிர்களை மலேரியா சாவிலிருந்து காப்பாற்றிய இந்தக் கண்டுபிடிப்புக்கு  2015ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அளித்திருப்பது உள்ளபடியே பொருத்தமானதுதான்.

உலகை குலுக்கிப்போட்டு மலேரியா மருத்துவத்திற்கு அடிவேராக விளங்கப் போகிறது என இந்த உயிரிமருத்துவ ஆய்வில் இறங்கிய சமயத்தில் சீன ஆய்வாளர்கள் ஆருடம் கண்டிருக்க முடியாது. குறிப்பாக மலேரியா சாவு கூடுதலாக உள்ள ஆப்பிரிக்க, தென்கிழக்காசிய பகுதிகளில் இந்த வேதிமருந்து "அருமருந்தாக" அமையப் போகிறது என இந்த ஆண்டு நோபல் பரிசை வென்ற யூயூ டு (Youyou Tu) மற்றும் அவரது கூட்டாளிகள் கனவிலும் கருதியிருக்க மாட்டார்கள்தான். 1980களுக்குப் பிறகு பல லட்சம் நோயாளிகளை, குறிப்பாக மூன்றாம் உலகைச் சார்ந்த குழந்தைகள் ஆர்டிமிஸினின் மருந்தால் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கிறது. ஆர்டிமிஸினின் வேதிப்பொருளிலிருந்து வடிவமைக்கப் பட்ட ஆர்ட்டிமீதர் (artemether)), ஆர்ட்டிசுனேட் (artesunate) கார்டேம் (coartem) முதலிய மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) "அத்தியாவசிய மருந்துப் பட்டியலில்" (List of Essential Medicines) இடம் பெற்றுள்ளன. “ஆர்ட்டிமிசினின் சீனப் பரம்பரை மருத்துவத்திலிருந்து உலக மக்கள் பெற்ற கொடை" என நோபல் பரிசு பெற்ற யூயூ டு பெருமிதம் பொங்க கூறியுள்ளார்.

ப்ராஜெக்ட் 523

1967இல் தெற்காசியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த வீரியமிக்க வியத்நாம் போரில் தான் இந்த கண்டுபிடிப்பின் கதை துவங்குகிறது. வியட்நாமில் அமெரிக்கப் படைகள் ஆக்கிரமிப்பு செய்து விடுதலைப்படைகள் மீது பெரும் சேதம் விளைவித்துக் கொண்டிருந்த காலகட்டம். அமெரிக்கப் போர்விமானங்களின் தாக்குதலிருந்து தப்ப வியட்நாமியப் படைகள் காடுகளில் ஒளிந்து போர் நடத்திக்கொண்டிருந்தனர். அவலம் என்ன என்றால் அமரிக்கப்படைகள் ஏற்படுத்திய சேதத்தைவிட காட்டுப்பகுதியில் பரவியிருந்த கொசுக்களின் கடிதான் வியட்நாமிய விடுதலை வீர்களுக்கு பெரும் சிக்கலாக இருந்தது. கொசுக்கடியில் மலேரியா ஏற்பட்டு போரிட முடியாமல் முடங்கிய வியட்நாமிய வீரர்கள் அதிகம்.

குளோரோகுவின் (chloroquine)  சல்பாடாக்ஸின் (sulfadoxine) பிரிமீத்தமீன் (pyrimethamine) முதலிய பல மலேரியா எதிர்ப்பு மருந்துவகைகள் அன்று இருந்தன என்றாலும் இவை எல்லாம் வீரியமிழந்து போயிருந்தன. மருந்து எதிர்ப்புத்தன்மை (drug resistance) வளர்ந்து குறிப்பாக குளோரோகுவினுக்கு படியாத பிளாஸ்மோடியம் பால்சிப்பாரம் (Plasmodium falciparum)  மலேரியா நோய் ஒட்டுண்ணி பரிணமித்து இருந்தது. இந்த குறிப்பிட்ட இனப்பிரிவு (strain)  பி.பால்சிப்பாரம் தாக்கிய நோயாளிகள் பலரும் தவிர கடுமையான நோய்க்கு ஆளாகி சிலர் மடியவும் செய்தனர்.

"அமெரிக்க ஏகாதிபத்தியப் படைகளை நிச்சயம் வென்றுவிடுவோம், அச்சமில்லை. ஆனால் இந்த கொசுத்தொல்லைதான் தங்க முடியவில்லை" என வியட்நாமிய தலைவர் ஹோசிமின் நொந்துகொள்ளும் அளவுக்கு கொசுவால் ஏற்படும் மலேரியா வியட்நா மியப் படைகளுக்கு சேதம் விளைவித்தது. போர்க்களத்தை சென்று சேரும்போது மூன்றில் இரு வியட்நாமிய வீர்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். நோய்வாய்ப் பட்ட வியட்நாமிய வீரர்கள் போரில் பங்கேற்க இயலவில்லை. மலேரியாவால் வியட் நாமியப் படைகள் பெரும் சவாலை சந்தித்துக்கொண்டிருந்தன. வியட்நாமிய விடு தலைப் படையின் முக்கிய எதிரி வலுவான ஆயுதங்களை கொண்ட அமெரிக்கப் படைகள் அல்ல, மெய்யாலும் சிறு கொசுதான். இந்தச் சூழலில்தான் மலேரியா நோய்க்கு மேலும் வீரியமான முறிவு மருந்து வேண்டும் என்பது சவால் என்று உணர்ந்த ஹோசிமின் நேச நாடான சீனாவின் அதிபர் மாவோவின் உதவியை நாடினார் .

தமது நாட்டிலும் பல பகுதிகளில் மலேரியா கோரத்தாண்டவம் ஆடுவதைக் கண்ட சீனத்தலைவர் மாவோ  ஹோசிமினின் கருத்தை ஏற்று மலேரியாவிற்கு வீரியமிக்க  புதிய மருந்து கண்டுபிடிக்க முடிவு செய்தார். 1967இல் சீனப் பிரதமர் சு என்லாய் (Zhou Enlai) தலைமையில் மே23 அன்று மருத்துவ நிபுணர்கள் குழு கூடி இந்தப் பிரச்னை குறித்து விவாதித்தனர். இதன் தொடர்ச்சியாக சுமார் அறுபது ஆய்வு நிறுவனங்களிலிருந்து சுமார் 500 விஞ்ஞானிகள் ஒருங்கிணைக்கப்பட்டனர். கூட்டம் நடந்த மாதம் தேதியை குறிக்கும்படியாக “523 திட்டம்" (Project 523) என்ற பெயரில் பெய்ஜிங்கில் இந்த ஆய்வுத்திட்டம் துவக்கப்பட்டது. இளம் தாவர-வேதியியல் அறிஞர்களையும், மருந்தியல் அறிஞர்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஆய்வுக்குழுவாக இது அமைந்தது. உடனடி இலக்கு என்ற வகையில் இந்த ஆய்வுக்குழு மலேரியாவிற்கு எதிராக போர்க்களத்தில் உடனடியாக பயன்படுத்தக்கூடிய மருந்துகளை உருவாக்கவேண்டும் எனவும், நீண்டகால இலக்காக வேதிச் சேர்ம முறை (synthetic chemicals) மற்றும் சீனப் பாரம்பரிய மருத்துவ ஆய்விலிருந்தும் மேலும் வீரியமிக்க மருந்தை இனங்கண்டு பெறுவது எனவும் இலக்கு வைக்கப்பட்டது.

டு யூயூ (Tu Youyou)

ப்ராஜெக்ட் 523 இணை இயக்குனராக இருந்த சாங் ஜியன் பாஃங் (Zhang Jianfang)  பின்னாளில் எழுதிய வரலாற்று குறிப்புதான் யூயூவின் பங்களிப்பையும் இந்த திட்டத்தின் பெருமைமிக்க வரலாற்றையும் தெரிவிக்கும் ஆவணம். இந்தத் திட்டம் துவங்கிய காலகட்டத்தில் சீனாவில் கலாச்சாரப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. துவக்கக் கட்டத்தில் கலாச்சாரப் புரட்சி, பழமைச் சிந்தனை மற்றும் பாரம்பரிய அடக்குமுறைக்கு எதிராக இயங்கினாலும், மாவோவின் மறைவுக்குப் பிறகு "நால்வர் குழு"  தலைமையில் எல்லாவித அறிஞர்களையும் "முதலாளித்துவ" சிந்தனையாளர்கள் என முத்திரை குத்தி சீரழிவான போக்கிற்குச் சென்றது. அந்த காலகட்டத்தில் தனிநபர் பங்களிப்பு என்பதை ஏற்காமல் எல்லாம் "கூட்டு தான்" என முரட்டுத்தனமாக வாதம் செய்த காலகட்டம். எனவே எந்த ஆய்வும் யார்யார் செய்தது என வெளிப்படுத்தப்படாமல் இருந்தது. எனவே உள்ளபடியே ப்ராஜெக்ட் 523இல் யார் யார் என்ன செய்தார்கள் என்பது பின்னாளில்தான் வெளிவந்தது. ப்ராஜெக்ட் 523இல் பணியாற்றிய ஒரு குழு ஏற்கனவே இருந்த வேதிமருந்துகளில் சிறு மாற்றம் செய்து அதனை மேலும் வீரியமிக்கதாக ஆக்கமுடியுமா எனத் தேட, வைக்கோல் போரில் ஊசியை தேடிய கதையாக வேறொரு குழு சுமார் 40,000 வேதிப்பொருள்களை உற்றுநோக்கி அவற்றில்  ஏதாவது மலேரியா மருந்தாக பயன்படுமா என ஆராய்ந்தனர். கொசு கடித்தால் தானே மலேரியா நோய் ஏற்படும். எனவே வேறு ஒரு குழு கொசுக்கடியிலிருந்து தப்ப ஆற்றல்மிக்க கொசுவிரட்டிகளை தயார் செய்ய ஆராய்ந்துகொண்டிருந்தது.

மாவோவின் "நவீன மருத்துவ வெளிச்சத்தில் சீன மருத்துவம்” (Modern medicine looks at Traditional Chinese medicine) எனும் கொள்கைக்கேற்ப வேறொரு குழு சீன மருத்துவத்தில் ஏதாவது மலேரியாவிற்கு மருந்து கிடைக்குமா எனத் தேடலில்  ஈடுபட்டுவந்தனர். இந்தக் குழுவில் வந்து சேர்ந்தார் முப்பத்தியேழு வயதான டாக்டர் டு யூயூ (Youyou Tu).

சீனாவின் நிங்போ (Ningbo)  பகுதியில் 1930 டிசம்பர் 30இல் பிறந்த டு யூயூ முதலில் பெய்ஜிங் மருத்துவக் கல்லூரியில் 1955 ஆம் ஆண்டுகளில் நவீன மருத்துவம் படித்தார். அதன் பின்னர் அன்றய சீன விதிமுறைகளின்படி இரண்டரை வருடம் சீன மருத்துவத்திலும் பயிற்சி பெற்றார். கல்வி கற்று முடித்தப்பின் "சீன மருத்துவ அகாடமியில் (Academy of Chinese Medicine)  பணியில் சேர்ந்தார். நவீன மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்து வத்தில் பயிற்சி பெற யூயூ ப்ராஜெக்ட் 523க்கு மிகவும் பயனாக இருப்பார் என்று அவரை அந்த துறைக்கு பணிமாற்றம் செய்தனர். இவ்வாறு தான் யூயூ 1967இல் ப்ராஜெக்ட் 523க்கு வந்து சேர்ந்தார்.

ரோனல்ட் ரோஸ்

மலேரியா என்பது உள்ளபடியே போர்த்துக்கீசிய வார்த்தையாகும். கொசு, கிருமி முதலியன குறித்து அறிந்திராத காலகட்டத்தில் மாசு நிரம்பிய மலக்காற்று (mal air) தான் விட்டுவிட்டு குளிர் சுரம் தரும் நோயை ஏற்படுத்துகிறது என கருதினர். அதன் காரணமாக இந்த நோய்க்கு "மலேரியா" என்ற பெயர் ஏற்பட்டது.

இந்தியாவில் பிறந்துவளர்ந்த ரோனல்ட் ரோஸ் என்பவர் தான், ஹைதராபாத் மற்றும் கல்கத்தாவில் தான் நடத்திய ஆய்வின் தொடர்ச்சியாக 1897 மலேரியா நோயின் மெய்த்தன்மையை கண்டுபிடித்தார். மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய் என்பது இவரின் ஆய்வில் துலங்கியது. இதன் தொடர்ச்சியாக அவருக்கு 1902ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உலகின் மிக முக்கியமான ஒட்டுண்ணி நோய் மலேரியா ஆகும். சஹாரா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான ஆப்பிரிக்கப் பகுதிகளிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மெக்ஸிகோ, ஹைதி, மத்திய, தென், அமெரிக்காவிலும், பாபுவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி 2013-ல் 19 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியாவால் பாதிக்கப் பட்டார்கள். மலேரியா நோய் தாக்கி அந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 5,84,000 பேர் மடிந்தார்கள் என புள்ளிவிபரம் கூறுகிறது. மடிந்தவர்களில் 80சதவீதம் பேர் ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் என்பதுதான் துயரம்; அவலம்.

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் நூறு நாடுகளில் மலேரியா அதிகம் பரவும் ஆபத்து இருக்கிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை மலேரியாவினால் இறந்து போகிறது. குழந்தைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் இந்த நோய் தாக்கினால் அவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

ப்ளாஸ்மோடியா என்ற ஒற்றைச்செல் மலேரியா கிருமி பொதுவே அனாபிளஸ் என்ற ஒருவகை பெண் கொசுவில் ஒட்டுண்ணியாக வாழும். அந்தக் கொசு ஒருவரை கடிக்கும்போது அதன் உமிழ்நீர் வழியாக மனிதனின் உடலில் இரத்தத்தில் கலக்கிறது. இந்தக் கிருமிகள் இரத்தத்தின் வழியாக கல்லீரலுக்குச் செல்லும். இக்கிருமிகள் ஒரு வாரம்வரை கல்லீரலில் தங்கி, கோடிக்கணக்கில் பெருகும். கல்லீரலில் முதிர்த்தன்மையடைந்து அங்கிருந்து ரத்தத்தில் கலக்கும். குருதியில் உள்ள இரத்த சிவப்பணுக்களில் தங்கி வளர்ந்து, இனவிருத்தி அடையும் போதுதான் ரத்தச்சிவப்பணுக்க்கள் சிதைந்துவிடுகின்றன. ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைய குறைய நோய் முற்றுகிறது.

இவ்வாறு கல்லீரலில் கிருமிகள் பல்கிப்பெருகி ரத்தத்தில் கலக்கும் நிலையில் தான் நோயாளியிடம் நோய்க்கான அறிகுறிகள் தென்படும். மலேரியா கிருமிகள் இருக்கும் கொசு, ஒருவரை கடிக்கும்போது அவர் மலேரியாவால் பாதிக்கப்படுவார். மற்ற கொசுக்கள் இவரைக் கடிக்கும்போது அந்த கொசுக்களுக்கும் மலேரியா கிருமிகள் கடத்தப்படுகிறது. இந்த கொசுக்கள் மற்றவர்களை கடிக்கும்போது அவர்களுக்கும் மலேரியா பரவுகிறது.

கொசு கடிப்புக்கும், மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே பொதுவாக 7-முதல் 21 நாட்கள் இடைவெளி இருக்கும். ஒரு சிவப்பு அணு வெடிக்கும்போது அது கிருமிகளை வெளியிடுகிறது. இந்தக் கிருமிகள் மேலும் பல சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. ஒவ்வொரு தடவை சிவப்பு அணுக்கள் வெடிக்கும்போதும் மலேரியாவுக்கான அறிகுறிகள் தெரியவருகின்றன. காய்ச்சல், குளிர் ஜூரம், தலைவலி, உடல் வலி, வாந்தி, குமட்டல், வியர்த்து கொட்டுவது போன்றவை இதன் அறிகுறிகள். நோய் தாக்கிய கிருமியின் வகையைப் பொறுத்தும், எத்தனை நாள் இந்த நோய் இருக்கிறது என்பதைப் பொறுத்தும் அதன் அறிகுறிகள் தெரியவரலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் விட்டுவிட்டு தெரியவரலாம்.

மனிதனைத் தாக்கும் மலேரியா ஒட்டுண்ணிகளில் நான்கு வகைகள் உள்ளன. பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும், பி.விவாக்ஸ், பி.ஒவேல் மற்றும் பி.மலேரியா) ஆகிய இந்த நான்கில் பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும் உண்டாக்கும் தொற்றுநோய் மிக வேகமாகப் பரவி உயிருக்கே ஊறு விளைவிக்கும். ஃபால்ஸ்பரும் மலேரியாவால் பீடிக்கப்படும் நோயாளிகளில் நூற்றுக்கு ஒருவர் அல்லது இருவர் மரணமடைகின்றனர். மலேரியாவுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாவிட்டால் பல ஆபத்துகள் வரும். சிலருக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு வந்து உயிரிழப்பும் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்குச் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ‘கறுப்புத் தண்ணீர் காய்ச்சல்' (Black Water Fever) வரும். இந்த நோயின் போது சிறுநீரில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்பு உண்டு.

தேடல் வேட்டை

மலேரியா நோயின் முக்கிய அறிகுறிகளான விட்டு விட்டு ஜுரம் வருதல் முதலிய உள்ளங்கை நெல்லிக்கனி போல தேடத் தெளிவாக இருந்ததால் முற்காலத்தில் மலேரியா கிருமி குறித்து எந்தவித அறிவுமின்றி இருந்தனர் என்றாலும் இந்த நோய் குறித்த அறிமுகம் இருந்தது. இந்தியா உட்பட பல்வேறு பண்பாடுகளில் மலேரியாவின் சிறப்பு அறிகுறி- விட்டுவிட்டு ஜுரம் வருதலை- கொண்டு அதற்கென மருந்துகள் தேடி கண்டு பரிந்துரை செய்திருந்தனர். குறிப்பாக மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும் நாட்டு மருந்துகள் பல பண்பாடுகளிலும் உண்டு. இவ்வாறுதான் பல மூலிகைகள் கஷாயங்கள் முதலியன சீன மருத்துவத்திலும் மலேரியாவிற்கு பரிகாரமாக பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சீன மருத்துவத்தை பயன்படுத்தி தேடல் வேட்டையில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் பலரும் பரிந்துரைக்கப்பட்ட வெவ்வேறு மூலிகைகளின் பயன்பாட்டை ஆராய்ந்து வந்தனர். யூயூ இதுபோன்ற ஒரு குழுவில் தலைவராக இணைக்கப்பட்டார்.

சீன மருத்துவக்குறிப்புக்களை எங்கே தேடுவது? எங்கெல்லாம் மலேரியா பரவிய பகுதியோ அங்கெல்லாம் அதற்கான கைமருந்து, மூலிகை மருந்து முதலியன உருவாகியிருக்கும் அல்லவா? எனவே தேடுதலை வெறும் பண்டைய புத்தகம் அல்லது மருத்துவக் குறிப்புகளில் மட்டும் தேடாது வெகுஜன மக்களிடம் வெகுவாக புழக்கத்திலிருந்த பட்டறிவான கைமருந்துகளையும் ஆய்வுக்கு சேகரித்தனர். எனவே ஆய்வாளர்கள் மலேரியா பரவிய களத்துக்குச் சென்றனர். மேலும் ஆய்வாளர்கள் அனைவருக்கும் மலேரியாவின் கொடுமை அவலம் நேரடி அனுபவம் வேண்டும் என்பதால் அனைவரும் மலேரியா தாக்குதல் இருந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். யூயூவும் மிகுதியாக மலேரியா காய்ச்சல் பீடித்த பிரதேசமான ஹைனான் (Hainan) பகுதிக்கு அனுப்பப்பட்டார். மூன்றே மூன்று வயதான தனது மகளை பெய்ஜிங்கில் குழந்தைகள் காப்பகத்தில் தனியே விட்டுவிட்டு கண்காணா இடத்துக்கு பெய்ஜிங்கிலிருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஹைனான் பகுதிக்குச் சென்றது குறித்து பின்னாளில் நினைவுகூர்ந்த யூயூ அந்த அனுபவம் எப்படி தமக்கு மன உறுதியை அளித்தது என்கிறார். மலேரியா பீடித்த அந்தப் பகுதியில் ஒருசில நாட்களிலேயே இளம் சிறுவர் சிறுமியர் மட்டுமல்ல கைக்குழந்தைகளும் மடிந்து போகும் அவலத்தைக் கண்டு மனம் வெதும்பினார். அந்தக் காட்சிகள் தமது நெஞ்சத்தை விட்டு என்றும் அகலவில்லை என்று கூறிய யூயூ தாம் எப்படியாகிலும் மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பை மனஉறுதியை அந்த அனுபவம் ஏற்படுத்தியது என்றார்.

அவரும் அவரது கூட்டாளிகளும் ஹைனான் பிரதேசத்தில் புழங்கிய மருத்துவக்குறிப்புக்களை சேகரித்தனர். தொன்மை மருத்துவக்குறிப்பு நூல்கள், கிராமப்புறத்தில் உள்ள நாட்டார் மருத்துவர்கள் மற்றும் வெகுஜனங்களிடம் மலேரியா அறிகுறிக்கு எந்தெந்த மூலிகைகளை பயன்படுத்துகின்றனர் என்ற தகவலை சேகரித்தார்கள். இந்த உரையாடல்களிலிருந்து அவர் ஜுரத்துக்காக சுமார்  2,000 மூலிகை மருந்து செய்முறைக் குறிப்புகளை திரட்டினார். இதில் சில மந்தரித்து தாயத்து கட்டுவது போன்ற புனைவுகளாக இருந்தன. ஆயினும் சுமார் 640 மருத்துவக்குறிப்புகள் மலேரியா ஜுர அறிகுறிகளுக்கு பொருந்தி அமைந்தன. இவற்றை கவனமாக பரிசீலனை செய்து மிளகு உட்பட 808 மூலிகைகள் இனம் காணப்பட்டன. இறுதியில் கவனமாக தேடி தேர்வுசெய்து சுமார் 380 மூலிகைகளின் வடிசாறு எடுக்கப்பட்டது. இந்த வடிசாறுகளிலிருந்து பல்வேறு மூலக்கூறுகள் பிரித்து எடுக்கப்பட்டன. வடிசாறுகளில் பிரித்து எடுக்கப்பட்ட பல்வேறு  மூலக்கூறுகள் மலேரியா நோய் கிருமி பரவிய பரிசோதனைக் கூட எலி மீது பிரயோகித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் ஒன்பது மூலிகைகள் மலேரியா மருந்தாக பிரகாசமாக தென்பட்டன. இதில் ஒன்று குறித்துதான் ஆராய்ந்து வந்தார் யூயூ.

யூயூ ஆராய்ந்த அந்த மூலிகைதான் சியிங்ஹோசு. மலேரியா நோய்க்கு முறிவாக சியிங்ஹோவிலிருந்து தயாரிக்கப்பட்ட வடிசாறு இந்த சோதனைகளில் வெளிப்பட்டது. இந்த குறிப்பிட்ட வடிசாறு செலுத்தப்பட்ட நோய்வயப்பட்ட எலியின் ரத்தத்தில் மலேரியா கிருமிகள் வெகுவாக குறைந்தன. சில ஆய்வுகளில் சுமார் 68% மலேரியா கிருமி வளர்ச்சி தடைப்பட்டதை கண்டனர். கண்டோம் மாமருந்தை என யூயூடுவும் அவரது ஆய்வுக் கூட்டாளிகளும் மகிழ்வுற்றனர்.

சீனாவில் பரவாலக புதரில் விளையும் அர்டிமீசியா அன்னுவா (Artemisia annua) எனும் தாவரத்தின் வடிசாறிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுதான் அது. சியிங்ஹோசு (qinghao) என சீனமொழியில் அறியப் பட்ட இந்த மூலிகைத்தாவரம் ஜுரத்தை குணப்படுத்தும் என்ற செய்தி கி.மு.168வை சார்ந்த ஒரு நூலில் காணப் படுகிறது. "52 வகையான நோய்களுக்கும் மருத்துவக் குறிப்புகள் (The recipes for 52 kinds of diseases)” என்ற அந்த நூலில் மலேரியா நோயின் சிறப்பு அறிகுறியான விட்டுவிட்டு வரும் ஜுரம் போன்ற நோய்க்கு இந்த மூலிகையின் சாறு மருந்தாக பரிந்துரை செய்யப் பட்டிருந்தது. 1798ல் பதிவு செய்யப்பட்ட வேறொரு நூலில் இந்தத் தாவரத்தின் பயன் குறித்து விரிவான குறிப்பு உள்ளது. விட்டு விட்டு ஏற்படும் ஜுரத்தை கட்டுப்படுத்த இந்த மூலிகையின் வடிசாறை பயன்படுத்த வேண்டும் என பாரம்பரிய மருத்துவ நூல்கள் கூறின. மலேரியா ஜுரமும் விட்டு விட்டுதான் வரும். இந்தப் பின்னணியில் எல்லோரும் மலேரியா நோய்க்கான அடுத்த தலைமுறை மருந்தை தரவல்ல மூலிகையை கண்டுவிட்டோம் என மகிழ்ச்சி அடைந்தனர்.

மருத்துவக் குறிப்புகளில் உள்ள இந்தத் தாவரம் எது என குழம்பியபோது ஹைனன் பிரதேசத்து நாட்டார் மருத்துவர்கள் 1950களில் ஹைனன் பிரதேசத்தில் பெரும் வீச்சில் மலேரியா நோய் கொள்ளைநோய் போல பரவியபோது இந்த மூலிகையின் தேனீர் எல்லோருக்கும் தரப்பட்டு மருந்தாக பரவலாக பயன்பட்ட வரலாற்று தகவலும் கிடைத்தது. உள்ளூர் மக்கள் அன்று தமக்கு எந்த தாவரத்தின் சாறு தரப்பட்டது என யூயூவிற்கு அடையாளம் காட்டினர். சீனமொழியில் சியிங்ஹோசு என்று அறியப்பட்ட அர்டிமீசியா அன்னுவா (Artemisia annua L.) எனும் தாவரம்தான் அது.

சுமார் ஐநூறு வகை தாவரங்களை தன்னுள் கொண்ட அர்டிமீசியா குடும்பத்தைச் சார்ந்தது இந்தத் தாவரம். மஞ்சள் நிறத்தில் பூக்கள் கொண்ட கூர்முனை போல கதிர் இலை அமைப்பை  கொண்ட தாவரம் அது. சீனா போன்ற நாடுகளில் தெருவோரம் இயல்பாக வளரும் புதர்ச்செடி. 70லிருந்து 200 செ.மீ வரை உயரமாக வளரும் இத்தாவரம் ஆண்டுப்பயிர் ஆகும். இன்று சீன, வியட்நாம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோட்டங்களில் விளைவிக்கப் படுகிறது. இதன் பதப்படுத்தப்பட்ட இலை ஏற்றுமதி செய்யப்பட்டு பல இடங்களில் மருந்து உற்பத்தி நடைபெறுகிறது.

கதையில் திருப்பம்

ஆனால் பெரும் அதிர்ச்சியாக வேறு விஞ்ஞானிகள் இந்த வடிசாறை  மேல் ஆய்வுகள் செய்த போது மருந்தின் வீரியம் மங்கியது. ஏற்கனவே பார்த்தது போல மலேரியா கிருமி வளர்ச்சி தடைபடவில்லை. சோதனைச்சாலையில் எலிகளில் வெறும் 12% முதல் 40% மலேரியா கிருமி ஒடுக்கம் தென்பட்டது. எதிர்பார்த்தை விட மிகமிக குறைவு. வியந்தனர் விஞ்ஞானிகள். குழம்பினார் யூயூ.

மூலிகையிலிருந்து எடுக்கப்பட்ட வடிசாற்றில் வீரிய செயற்கூறு (active ingredient)  அடர்த்தி போதிய அளவு இன்மையால்தான் நோய்கிருமி ஒடுக்கம் போதிய அளவு ஏற்படவில்லை என உணர்ந்தார் யூயூ. ஏன் வடிசாற்றில் வீரிய செயற்கூறு அடர்த்தி குறைந்துபோகிறது? வியந்தார் யூயூ. மறுபடி பண்டைய மருத்துவக்குறிப்புகளை கவனமாக படித்தார். அதில் ரஷ்ய குறிப்பு என தனியாக ஒன்று இருந்தது. தீவிரமான ஜுரம் ஏற்பட்டு அவசர சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் மூலிகையை அரைக்காமல், நீரில் இட்டு கொதிக்கவைத்து சாறு பிழியாமல் வெறுமனே ஒரு கீற்றை நீரில் ஊறவிட்டு அதனை அப்படியே அருந்தவேண்டும் எனக் குறிப்பு இருந்தது.

யூயூ உட்பட ஆய்வு விஞ்ஞானிகள் உள்ளபடியே மூலிகையை நீரில் கொதிக்கவைத்துதான் வடிசாறை பிரித்தெடுத்து வந்தனர். நீரின் கொதிவெப்பத்தில் இந்த மூலிகையில் உள்ள மெய்யான மருந்துச் செயற்கூறு சிதைந்துவிடுகிறது என உணர்ந்துகொண்டார் யூ யூ. வெறும் 35°Cயில் கொதிநிலை உடைய ஈத்தர் கொண்டு மூலிகையின் முக்கிய வேதிப்பொருளை (வீரிய செயற்கூறு) கரைத்து பிரித்தெடுத்தார். இதன் வீரியம் எதிர்பார்த்ததை போல அமைந்தது. ஆயினும் இன்னமும் சிக்கல் இருந்தது. இந்த மருந்து சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. இதனை ஆராய்ந்த யூயூ வீரிய செயற்கூறு வேதிக்கலவையிலிருந்து அமிலத் தன்மையுள்ள சில பொருள்களை நீக்கம் செய்ய எஞ்சிய வீரிய செயற்கூறு பக்கவிளைவு இன்றி பலன் தந்தது.

"வடிசாறு எண் 191” என்று பெயரிடப்பட்ட இந்த நடு நிலை வேதிக்கரைசல் பிளாஸ்மோடியம் பெர்க்ஹி (Plas modium berghei) கிருமியை சோதனைச்சாலை எலிகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் அகற்றிவிடுகிறது என்பதை ஆய்வுகள் மூலம் 1971இல் யூயூ நிறுவினார். இதனை நோய்வாய்ப்பட்ட எலி மற்றும் குரங்கு போன்ற விலங்குகளில் சோதனை செய்தார் யூயூ. அனைவருக்கும் வியப்பு. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட சாறு கொடுக்கப்பட்ட நோய் எலி குரங்கு முதலியவற்றில் நூறு சதவிகிதம் நோய்க்கிருமி அகன்றது. இரண்டே நாளில் இவை மலேரியாவிலிருந்து குணமடைந்தன. மார்ச் 8, 1972 அன்று நடந்த ப்ராஜெக்ட் 523 திட்டக் கூட்டத்தில் யூயூ பெருமையுடன் தமது வெற்றியை விளக்கி ஆய்வு முடிவுகளை கூறினார்.

எலி குரங்கில் சரி, மனிதனில் வேலை செய்யுமா? மனிதனுக்கு தீங்கு விளைவிக்குமா? அந்த ஆய்வுக்குழுவின் தலைவராக இருந்த யூயூயும் அவரது இரண்டு உதவியாளர்களும் தாமே தமது உடம்பில் சோதனை செய்துகொள்ள முன்வந்தனர். அந்த வேதி மூலக்கூறு எந்த பாதிப்பும் தரவில்லை. பின்னர் சுமார் 2000 மலேரியா நோயாளிகளிடையே சோதனை செய்தனர். வெறும் 30 மணிநேரத்தில் அவர்களின் ஜுரம் போனது மட்டுமல்ல ரத்தத்தில் மலேரியா கிருமி முற்றிலும் அழிந்தது. இறுதியில் இந்த ஆய்வு 1977இல் உறுதி செய்யப்பட்டு வெளியுலகத்திற்கு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1976லிருந்து 1978வரை இதன் வேதிவடிவம் ஆராய்ச்சி செய்யப்பட்டு 1979ல் மருந்து உற்பத்தி துவங்கியது. ப்ராஜெக்ட் 523ன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அளிக்கப்பட்ட சீன அரசின் பதக்கத்தை அந்த ஆய்வுக்குழுவின் சார்பில்  1978இல் யூயூ பெற்றுக்கொண்டார்.

1980களில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் மேலும் நுணுக்கமான ஆய்வுகள் செய்யப்பட்டு இன்று ஆர்டிமிஸினின் (artemisinin) என்று அறியப்படும் இந்த வேதிப் பொருளைக் கொண்டு மலேரியா மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.  இன்று ஆண்டுதோறும் பல கோடி நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுகிறது.

மேஜிக் மூலக்கூறு


யூயூவின் ஆய்வுகளைத் தொடர்ந்து அந்த மூலிகையின் செயற்கூறின் வேதித்தன்மையை ஆராய்ச்சி செய்தனர். உள்ளபடியே ஆர்டிமிஸினின் ( artemisinin a) மற்றும் டை-ஹைட்ரோ ஆர்டிமிஸினின் dihydro artemi sinin b) எனும் வேதிப்பொருள்கள்தான் அது எனவும் அதன் வேதிஅமைப்பும் அதன்பின் இனம் காணப்பட்டது. இந்த தூய வேதிப்பொருள் மிகுவீரியமாக மலேரியா கிருமியைத் தாக்கிச் செயல்பட்டது. அதன்பின் அர்டேமிதேர் (artemether c) அர்தேசுனேத் (artesunate d) அர்டேமிசொன் (artemisone e) அர்தீத்தர் (artelinicacid g) அர்டேலினிக் அமிலம் (endoperoxide bridge) முதலிய வழித்தோன்றல் மருந்து வேதிப் பொருள்களையும் சீன மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவே அர்டேமிசினின் என்று அழைக்கப்படும் இந்த வேதிப்பொருள்களில் எண்டோ பெராக்ஸ்சைடு பாலம் (endoperoxide bridge) எனும் சிறப்பு வேதி அமைப்பு உள்ளது. இந்த சிறப்பு வேதி அமைப்பு உள்ள வேதிப்பொருள்கள் மட்டுமே மலேரியா எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன.

ஏனைய மருந்துகளைவிட இது இரண்டு மடங்கு வேகவேகமாக சுரத்தை குறைக்கிறது. ரத்தத்தில் இருக்கும் மலேரியா கிருமியை ஆயிரம் மடங்கு வீரியத்துடன் நாசம் செய்கிறது. எனினும் அர்டேமிசினின் மூலக்கூறு வெகுநேரம் உடலில் தங்குவதில்லை. எனவே அங்கொன்று இங்கொன்று எனத் தப்பிப்பிழைத்த மலேரியா கிருமி மறுபடி தலைதூக்கும் வாய்ப்பிருக்கிறது. அர்டேமிசினின் எளிதில் நீரிலோ எண்ணை பொருள்களிலோ கரையாது. உடலில் இந்த மூலக்கூறு வெகுநேரம் தங்காது. உடல் வெகுவிரைவில் இந்த மூலக்கூறை வேகமாக வெளியேற்றிவிடும். வெறும்  2லிருந்து 5 மணி நேரம்தான் இதன் அரை வாழ்நாள். வேறு மலேரியா மருந்துகளின் அரை வாழ்நாள் சிலநாட்கள் ஆகும். எனவே அர்டேமிசினின் வீரியம்மிக்கது என்றாலும் அதன் தாக்குதலில் தப்பிப் பிழைக்கும் ஒருசில மலேரியா கிருமிகளினால் ஆபத்து மறுபடி வரும் வாய்ப்பு இருக்கும். எனவே உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் ACT எனும் புதுவகை கலவை மருந்து தற்போது தயார் செய்யப் படுகிறது. இதில் முக்கிய பங்கு அர்டேமிசினின் தான், இதனுடன் சிறிதளவு நீண்டகாலம் தங்கி மலேரியாவிற்கு எதிராக செயல்படும் வேறொரு மருந்துப் பொருளையும் கலந்து தருவார்கள். வீரியமாக செயல்பட்டு சட்டென்று மலேரியா நோயை விரைவாக அர்டேமிசினின் குணப்படுத்தும். கலவையில் உள்ள ஏனைய மருந்துகள் சில நாட்கள் உடலில் தங்கி மிச்சம் மீதம் எஞ்சும் மலேரியா கிருமிகளை மொத்தமாக துடைத்து எடுத்துவிடும். 

வெளிச்சத்திற்கு வந்தது

சீனா 1980களில் ஆர்டிமிஸினின் கண்டுபிடிப்பை நடத்தியிருந்தாலும் அந்த மருந்து வெளியுலகத்துக்கு வரவில்லை. சீனா மற்றும் அதன் நேச அண்டை நாடுகளான வியட்நாம், கம்போடியா போன்ற பகுதியில் மட்டுமே வெகுகாலம் பயனில் இருந்தது.

இதற்கிடையில் அமெரிக்காவும் மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆயிரம் செயற்கை வேதி மூலக்கூறுகளை வைத்து சோதனை செய்து தோல்வி அடைந்திருந்தது. வியட்நாம் போரில் அமெரிக்க ராணுவவீரர்களும் மலேரியா வியாதியில் அவதியுற்றனர். எனவே அமெரிக்காவும் மருந்து கண்டுபிடிப்பில் இறங்கியது. அமெரிக்க வால்டேர் ரீட் ஆர்மி ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் இறுதியில் மேப்லோகுயின் (mefloquine) என்ற வீரியம்மிக்க வேதிப்பொருள் ஏற்கனவே இருந்த குளோரோகுயின் வேதிப் பொருளிலிருந்து வடிவமாற்றம் செய்து உருவாக்கப்பட்டது. இந்த மருந்தின் கெடுதல் விளைவிக்கக்கூடிய பக்கவிளைவுகள் காரணமாக பரவலாக பயன்படுத்த முடியாமல் போனது. அச்சம் தரும் கனவுகள், மனப்பிரமை போன்ற பல சிக்கல்களை இந்த மருந்து தூண்டியது. பாதுகாப்பான ஆனால் வீரியம்மிக்க மலேரியா மருந்து தேவையை உலகம் உணர்ந்து கொண்டது.

1979இல் தான் அமெரிக்க மலேரியா ஆய்வாளர் டாக்டர் கெய்த் ஆர்னோல்ட் (Dr. Keith Arnold) சீனக் கண்டுபிடிப்பு குறித்து கேள்விப்பட்டார். வியட்நாம் கம்போடியா முதலிய பகுதிகளுக்குச் சென்ற மேற்கத்திய பத்திரிகையாளர்கள் மலேரியாவிற்கு புதிய சீன மருந்து பயன்படுத்தப்படுவதையும் அதன் வீரியத்தையும் வியந்து கூறினார். ஆயினும் அன்று சீன ஆய்வு குறித்து மேற்குலகில் அவநம்பிக்கைதான் மேலோங்கி இருந்தது. மேலும் சீன மருத்துவத்தை பயன்படுத்துவது என்கிற மாவோவின் கருத்தை எள்ளலோடுதான் மேற்குலகு கண்டுகொண்டிருந்தது. இப்போதுதான் விடுதலையடைந்த ஒரு மூன்றாம் உலக நாடு நம்மை விட செம்மையாக உயர் அறிவியலில் துலங்கிவிடமுடியுமா என இறுமாந்திருந்த டாக்டர் அர்னோல்ட் அவநம்பிக்கையோடுதான் சீனா மலேரியா மருந்தை சோதனை செய்து பார்க்க முடிவு செய்தார்.

தம்மிடம் வந்த மலேரியா நோயாளிகளை இரண்டு பிரிவாக பிரித்து ஒரு குழு நோயாளிகளுக்கு ஆர்டிமிசினின் மற்றொரு குழுவிற்கு மேப்லோகுயின் செலுத்தி சோதனை செய்யப்பட்டபோது ஆர்டிமிசினின் மருந்தின் பலம் உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்பட்டது. மருத்துவ உலகம் வியப்பில் ஆழ்ந்தது. இதனைத் தொடர்ந்து வீரியம்மிக்க மலேரியா மருந்தை தேடிக்கொண்டிருந்த உலக சுகாதார நிறுவனம் ப்ராஜெக்ட் 523 குறித்து தகவல்களை திரட்டியது. மேலும் அக்டோபர்  1981இல் பீஜிங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அறிவியல் மாநாட்டில் யூயூ தமது ஆய்வு குறித்து கட்டுரை வாசித் தார். இதன் தொடர்ச்சியாக லான்செட் (Lancet) எனும் முன்னணி மருத்துவ ஆய்வு இதழ் சீன ஆய்வாளர்களின் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த கட்டுரைகள் சிறப்புப் பரிசினை பெற்றன.

ஆர்டிமிசினின் மருந்தின் மருத்துவக்குணம் வெள்ளிடை மலையாக தெளிவாக இருப்பினும் உலக நாடுகள் பயன் பெறுவதில் ஒரு சிக்கல் இருந்தது. உலக சுகாதார நிறுவனம் 2000 ஆண்டில் இந்த மருந்தை பரிந்துரை செய்து ஏற்றுக்கொள்வது வரை பரவலாக இந்த மருந்து சீனா தவிர வெளியுலகில் கிடைக்கவில்லை. எந்தவொரு பெரும் மருந்து உற்பத்தியாளரும் இந்த மருந்தை உற்பத்தி செய்ய முன்வராததே காரணம்.

உலகில் உள்ள மொத்த ஒட்டுண்ணி நோயில் மூன்றாம் இடத்தில் இருக்கும் மலேரியாவிற்கு வீரியமான மருந்தான ஆர்டிமிசினின்-ஐ உற்பத்தி செய்ய முன்வராதது ஏன்? இன்று மருத்துவம் என்பது வணிகமயமாக்கப்பட்டு லாபம்தான் முக்கிய குறிக்கோள் என்று ஆகியுள்ள நிலை தான் அடிப்படையில் காரணம்.
தொன்மைக்கருத்து என்பதாலோ பழைய மருத்துவக்குறிப்பில் உள்ளது என்பதாலோ குறிப்பிட்ட மருந்துக் குறிப்பு ஏற்கப்படவில்லை. பழமை என்பதால் ஒதுக்கப்படவும் இல்லை. நவீன மருத்துவ ஆய்வுமுறைகளை பயன்படுத்தி இவை சோதனை செய்யப்பட்டன. அறிவியலுக்கு பொருந்தி பயனுக்கு வந்தவை மட்டும் சீன மருத்துவம் என ஏற்கப்பட்டது.  சீன மருத்துவத்தின் நவீனமயமாக்கம்தான் மாவோ கண்ட பாதை.
 தீவிர கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் அடிப்படையில் 1970களில் சீனா தனி ஒரு ஆய்வாளரை முன்னிறுத்துவதை தடை செய்திருந்தது என்பது மட்டுமல்ல எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் அறிவுச்சொத்துரிமை கொண்டாடுவதையும் தடை செய்திருந்தது. எல்லா கண்டுபிடிப்புகளும் பொதுஉடைமை என்ற கொள்கையை கடைபிடித்து வந்தது.

வெளியுலகில் முதலாளித்துவ பொருளாதரத்தில் இது சிக்கலை ஏற்படுத்தியது.  ஏதாவது முன்னணி மருந்துக் கம்பெனி இந்த மருந்தை உற்பத்தி செய்தால், அறிவுச் சொத்துரிமை இல்லை என்பதால், வேறு எந்த கம்பெனியும் போட்டியாக தயாரிக்க முடியும். எனவே தமக்கு லாபம் வருவது உறுதியில்லை என்பதால் எந்தவொரு மருந்துக் கம்பெனியும் ஆர்டிமிசினை தயாரிக்க முன்வரவில்லை. ஆப்ரிக்கா ஆசியா முதலிய பகுதிகளில் மலேரியா ஒழிப்புத் திட்டத்துக்கு ஆர்டிமிசினின்-னை பயன்படுத்துவது என உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்து அதற்கான ஆர்டரை தர முன்வந்த பிறகுதான் சில கம்பெனிகள் இந்த மருந்தை உற்பத்தி செய்யத் துவங்கின.

ப்ராஜெக்ட் 523 சொல்லும் பாடம்

தொல் மருத்துவக் குறிப்புகளை பக்கம்பக்கமாக புரட்டிபுரட்டி, மரபு மருத்துவக் குறிப்புக்களை சேகரித்து இன்று நோபல் பரிசினை பெற்று இருக்கிற ஆர்டிமிசினின் கண்டுபிடிப்பு மறுபடியும் மருந்து கண்டுபிடிப்பில் மரபின் பங்கினை குறித்த விவாதத்தை சூடுபிடிக்கச் செய்யும். சீன மருத்துவத்தினை பயன்படுத்தி ஆர்டிமிசினின் மட்டுமல்ல வேறு பல கண்டுபிடிப்புகளையும் சீன விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். 

நவீன சீனாவின் முதுபெரும் எழுத்தாளர் லு சூன் (Lu Xun) பாரம்பரிய சீன மருத்துவத்தை வெகுவாக சாடி எழுதியுள்ளார். தமது தந்தை கடும் நோயால் பீடிக்கப் பட்டு அல்லல்படும் போது சீன பாரம்பரிய மருத்துவர்கள் "புலிப்பால்" கொண்டு வா என்று சொல்லாததுதான் குறை. எல்லாவிதமான மூடநம்பிக்கைகளை அள்ளி வீசினர். பிற்காலத்தில் நவீன மருத்துவம் பயின்ற லு சூன் "என்னுடைய இன்றைய அறிவினை வைத்து பார்க்கும்போது அவர்கள்  (அவரது தந்தையை குணப்படுத்த வந்த சீன மரபு மருத்துவர்கள்)  தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றுக்கரர்கள் தான்" என்று சாடினார். மாவோ சீன மரபு மருத்துவத்தின் யின்-யான் போன்ற நகைப்புக்குரிய கருத்துக்களை கடுமையாக விமர்சனம் செய்து மரபு மருத்துவர்களை "பாம்பு எண்ணையை விற்கும் போலிகள்" எனவும் "சர்க்கஸ் கோமாளிகள்" என்றும் எள்ளி நகையாடினார்.

1949ல் சீனா விடுதலை அடைந்தபோது பொது மருத்துவ நிலை வெகு அவலமாக இருந்தது. அத்தியாவசியமான மருந்துகளுக்கு கூட பெரும் தட்டுப்பாடு. பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வெகுசொற்பம். ஆனால் காலனிய ஆதிக்கம் மற்றும் உள்ளநாட்டுப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் எங்கும் நோயும் உடல்நலக்குறைவும் பரவி இருந்தது. "மனிதர்கள் மற்றும் விவசாய விலங்குகளின் இறப்பு விகிதம் மிக கூடுதலாக இருக்கிறது. பேய் ஓட்டுதல் போன்ற முறைகளைத்தான் பெரும்பாலான மக்கள் நாடிவரும் நிலை இருகிறது. நவீன மருத்துவர்கள் தொகை தற்போது வெகு சொற்பம். எனவே பெரும்பாலான மக்கள், குறிப்பாக விவசாய மக்கள் சீன மருதுவத்தைத்தான் நம்பவேண்டிய நிலைஎன்று உள்ள நிலையை வலியுறுத்திய மாவோ “சீன மருத்துவம் ஒரு செல்வக்களஞ்சியம்என்றார். மருத்துவ ஆய்வாளர்கள் சீன மருத்துவக் குறிப்புக்களை தீவிரமாக தேடி ஆராய்ந்து முன்னேற்றம் காண செய்ய வேண்டும்" என்றார்.

காத்து கருப்பு தீண்டி நோய் வந்துள்ளது என கருதுவது போல பண்டைய சீன போலி தத்துவமே யின்-யான் ஆகும். எதிர்மறை ஆற்றல்களாக கருதப்படும் யின், யான் தான் உயிர் உறுப்புகள் வழியாக உயிராற்றலாக ஓடுகிறது எனவும் இவற்றின் சமநிலைக் குலைவே நோய் எனவும் கருதுகிறது. ஆமை மயிர், ஆகாயத்தில் மலரும் தாமரை போல இவை இல்கருத்து ஆகும். எனவே இது போன்ற பழமை பத்தாம்பசலி கருத்துக்களை மாவோ கடுமையாக சாடினார். அதே சமயத்தில் நாட்டுப்புற மருத்துவம் என்பதில் பட்டறிவு சார்ந்து பல்லாண்டுகளாக மனித அனுபவத்தின் பயனில் சில மெய்கள் பொதிந்து கிடக்கலாம் எனவும் மாவோ கருதினார். மார்க்சிச தத்துவப் பார்வையில் நவீன அறிவியலின் தோற்றுவாய் மானுட உழைப்பே எனக் கருதுகிறது. இதன் அடிப்படையில் நவீன ஆய்வுக்கருவிகள் உருவாகாத முற்காலத்தில் அனுபவத்தின் வாயிலாக மனிதன் துவக்க அறிவியலை (proto science) உருவாக்குகிறான் எனவும், காலப்போக்கில், ஏற்ற சமூகமாற்றத்துக்கு பிறகு பழமைவாத சிந்தனைக்கு தலைவணங்கும் தேவை அகன்று, இயற்கையை மேலும் நுணுக்கமாக ஆராயும் கருவிகள் உருவாகி அனுபவத்தை தாண்டிய மேலும் மெய்நோக்கி நகரும் நவீன அறிவியல் உருவாகிறது எனவும் மார்க்ஸிசம் கருதுகிறது. வெறும் அனுபவத்தை மட்டும் கைக்கொண்டால் நாம் சூரியன் கிழக்கே உதிக்கிறது எனக் கூறி செல்லவேண்டி வரும். அனுபவத்துக்கும் அப்பால் சென்று அறிவியல் நுட்பமாக ஆராயும்போதுதான் பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்வதால் தான் பகல் இரவு ஏற்படுகிறது என விளங்கும். ஆயினும் எல்லா அனுபவ அறிவும் முற்றிலும் தவறாக இருக்கும் என்பதில்லை. இதன் அடிப்படையில்தான் சீன மருத்துவத்தில் அங்கே இங்கே "முத்துக்கள்" பொதிந்திருக்க வாய்ப்பு உண்டு என மாவோ கருதினார்.   

சோதனை செய்து தெளியாது பழமையே சிறந்தது என பொத்தாம்பொதுவாக தலையில் வைத்து கொண்டாடவும் கூடாது அதேசமயம் காலங்காலமாக உழைக்கும் மக்கள் அனுபவத்தில் சேகரித்த கருத்துகளில் மாயம்-மந்திரம், காத்து-கருப்பு போன்ற கற்பிதக் கருத்துகளை புறம்தள்ளி அறிவியல் பார்வையில் அலசி பயனுள்ளவற்றை தேடி எடுக்க வேண்டும் என்பது பாரம்பரிய சீன மருத்துவத்தைக் குறித்து மாவோவின் கொள்கையாக இருந்தது.

இதன் தொடர்ச்சியாக சீன பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தியும் இருந்தார் மாவோ. இந்த ஆய்வு நிறுவனத்தில் கிராமம் கிராமாக சென்று மக்கள் பயன்படுத்தும் கைமருந்து பழக்கவழக்கங்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. பழம்பெருமை பேசி ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த "தூய" சீன மருத்துவத்தைத் தேடிச் செல்வதல்ல மாவோ வகுத்த பாதை. தொன்மைக்கருத்து என்பதாலோ பழைய மருத்துவக்குறிப்பில் உள்ளது என்பதாலோ குறிப்பிட்ட மருந்துக்குறிப்பு ஏற்கப்படவில்லை. பழமை என்பதால் ஒதுக்கப்படவுமில்லை. நவீன மருத்துவ ஆய்வுமுறைகளை பயன்படுத்தி இவை சோதனை செய்யப்பட்டன. அறிவியலுக்குப் பொருந்தி பயனுக்கு வந்தவை மட்டும் சீன மருத்துவம் என ஏற்கப்பட்டது.

சீன மருத்துவத்தின் நவீனமயமாக்கம் தான் மாவோ கண்ட பாதை. "மரபு" சீன மருத்துவம் எனக்கூட இதை அடையாளப்படுத்தவில்லை. "சீன மருத்துவம்" என்று தான் அடையாளப் படுத்தினார். "மரபு" அல்ல முக்கிய பிரமாணம்; அறிவியல் வழியில் சீர்தூக்கிப் பார்ப்பது தான் என்பதே மாவோ காலத்துப் பார்வையாக விளங்கியது. நவீனமயமாக்கத்தின் பகுதியாக நவீன உடலியல் மருத்துவம் முதலியவற்றோடு முற்றிலும் முரண்படும் யின்-யாங் போன்ற பண்டைய சீன மருத்துவக் கொள்கைகள் சீன மருத்துவத்தில் ஒதுக்கப்பட்டன. சோதிடம் அல்லது மூக்கு நீளம் அல்லது தலையின் வடிவை வைத்து ஒருவரின் மருத்துவக்குணத்தை வகை செய்வது போன்ற அறிவுக்கு ஒவ்வாத நடைமுறைகள் சீன மருத்துவத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டன.

இதன்தொடர்ச்சியாக 1956இல் பீஜிங் செங்க்டு ஷாங்காய் போன்ற  நகர்களில் சீன மருத்துவக்கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன. சீன மருத்துவக்குறிப்புகளில் அறிவியல் பூர்வமானதை மட்டும் எடுத்து மீதமுள்ள கற்பிதங்கள் நீக்கி களையப்பட்ட புதிய மருத்துவ நூல்கள் எழுதப்பட்டன. சீன மருத்துவமுறைகள் தரப்படுத்தப்பட்டன. கிருமியியல், உடலியல், உடற்கூற்றியல் போன்ற நவீன மருத்துவப் பட்டங்களை சீன மருத்துவக்கல்வியில் படிக்க வேண்டும். இவ்வாறு சீன மருத்துவம் நவீனப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நவீன மருத்துவம் படிக்கும் மாணவமாணவியரும் சீன மருத்துவத்தில் அறிமுக வகுப்புகளை படிக்க வேண்டும் என்ற முறையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. அதேபோல சீன மருத்துவம் படிக்கும் மாணவமாணவியருக்கும் நவீன மருத்துவம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ஒருங்கிணைந்த மருத்துவப்பார்வையை வலியுறுத்தியது. யூயூடுவும் இப்படிப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனத்தில் படித்து வந்தவர்தான். நவீன மருத்துவம் படிக்கத்தான் அவர் பீஜிங் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தாலும் இரண்டரை ஆண்டுகள் அவரும் சீன மருத்துவத்தை மாவோவின் ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற கொள்கையால் படிக்க வேண்டிவந்தது.

இந்திய மருத்துவம்

இன்று இந்திய மரபு மருத்துவத்தின் நிலை என்ன?  வெகுஜன பத்திரிகைகளில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவை குறித்து வெகுவாக கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. எனினும் பகுத்தறிவாளர் நரேந்திர நாயக் அவர்கள் விவரிக்கும் ஒரு சர்வேபடி புறநோயாளிகளில் வெறும் 0.5% சதவிகிதம் நோயாளிகள் மட்டுமே இந்திய மருத்துவ முறைகளை நாடுகின்றனர். உள்நோயாளிகள் என்று பார்த்தல் மேலும் சொற்பம்தான். சமீபத்தில் NSSO சர்வேயும் நகர்புறத்தில் நடுத்தர உயர்குடி மக்கள்தான் அதிகம் மாற்று மருத்துவத்தை நாடுகின்றனர் என்றும், பொதுவே தீராத நோய்களுக்குதான் நாடி வருகின்றனர் என்கிறது. அதாவது பரவலாக மரபு இந்திய மருத்துவம் உள்ளபடியே நோயாளிகளுக்கு நோய்க்கு சிகிச்சை அளிக்கும்படியான நிலையில் இன்று இல்லை என்கிறது இந்த சர்வே. ஆயுர்வேதம் போன்ற மருத்துவமுறைகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வினோத அனுபவமாகவும் நடுத்தர மக்களுக்கு உடல் அசதி போன்ற "அவதி"களுக்கும் "மூட்டு வலி" போன்ற தீர வியாதிகளுக்கும்  "மசாஜ்" செய்வதும் எனச் சுருங்கி உள்ளது கண்கூடு.

எனினும் பாரம்பரிய மருத்துவம் ‘குறளி வித்தை மட்டுமே என ஒரே போடாக போடுவதும் சரியான புரிதலாக இருக்காது. யூயூ கண்டுபிடிப்பு முதல் பற்பல கண்டுபிடிப்புகள் மரபு மருத்துவக்குறிப்புகளை வைத்து நடத்தப்பட்டுள்ளன. எனவே இந்திய மருத்துவத்தை முற்றிலும் ஒதுக்கித்தள்ளுவதும் அறிவியல் பார்வையாக இருக்காது.

அகத்தியர் "அருளிய" சித்த மருத்துவம் அல்லது வேதத்திலிருந்து பிறந்த ஆயுர்"வேதம்" என்று இந்திய மருத்துவங்களை மாயமந்திரமாக பார்க்கும் போக்குதான் பரவலாக உள்ளது. மத்திய அரசின் ‘ஆயுஷ்துறைக்குக் கீழ் இயங்கும் சித்த, ஆயுர்வேத, யுனானி ஆய்வு நிறுவங்களின் போக்கு அவ்வளவு சீர்மிக்கதாக இருப்பாதாக தெரியவில்லை. மருந்துகளுக்கான தர நிர்ணயம், மருந்துத் தயாரிப்பின் தர மேம்பாடு, மருந்துகளின் தரக்கட்டுப்பாடு என்று தான் கவனம் காட்டுகிறதே தவிர மரபு மூலிகைகளின் செயற்கூறு (active ingredient) இனம் கண்டு மருத்துவத்தை மேம்படுத்துவது என்பது குறைவாகவே இருக்கிறது. மேலும் பண்டைய மருத்துவ நூல்கள் மற்றும் குறிப்புக்களை "வேதவாக்காக" கொண்டு "ஆகம" பிரமாணத்தை முன்னிறுத்தி வாதங்கள் செய்யும் வேடிக்கையும் நிலவுகிறது.

எடுத்துக்காட்டாக  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியில் டீன் ஆக இருக்கும் எஸ்.சுவாமிநாதன், "ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்" எனும் தன் தொடரில் கூறுவதை பாருங்கள். "ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது என்றும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது" என்றும் வாதிடும் அவர் "இந்த இந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் இந்த இந்த பலன் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறதுஎன்று தனது வாதத்துக்கு ஜோதிடத் தினை துணையாய் கொள்கிறார். மேலும் "சனியின் இயல்பு மந்தகதி. உடலிலுள்ள அசதி, சோர்வு, சோம்பல் முதலிய தமோ குணங்களுக்கு அவர் அதிபன். அவருடைய சக்தி மிகுந்திருக்கக் கூடிய சனிக்கிழமைகளில் உடலில் ஓய்வு தானே ஏற்படும். சுறுசுறுப்பும், விஸ்தரிப்பும் வேண்டிய சுபகாரியங்களை அவனது தினத்திலே வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஓய்வு பெற்றுச் செய்யவேண்டிய காரியங்களே அவனது தினத்திற்கு ஏற்றதாக அமைகின்றன. ஆகவே சனிக்கிழமையில் எண்ணெய்க் குளியல் ஏற்றதாகிறது.” இது ஆணுக்கு. அதாவது ஆணுக்கு ஓய்வு வேண்டுமாம். தினமும் அடுப்படியிலும் வயல்வெளிகளிலும் அலுவலங்களிலும் வேலை செய்யும் பெண்களுக்கு ஓய்வு தேவையில்லை. அவர்கள் தமது "பெண்மையை" தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்கிறார் இவர். “ஆணினம் எண்ணெய்க் குளியலால் உணர்ச்சிக் கொந்தளிப்பு தணிந்து தசைகளின் முறுக்குத் தளர்ந்து ஓய்வுபெறுவது போல, பெண்ணினம் எண்ணெய்க் குளியல் தன் பெண்மையை வளர்த்துக் கொள்கிறது.” எனும் அவர், செவ்வாய் தான் பெண்களுக்கு உகந்தது என்கிறார். பிதற்றல் என்பதல்லாமல் என்னவென்று கூறுவது? ஜோதிடப்புரட்டு தான் இதில் மேலோங்கி உள்ளது அல்லவா?

இந்திய விஞ்ஞானி சுனில்குமார் ஷர்மா (SunilKumar Verma)  என்பார் யூயூ டுவின் கண்டுபிடிப்புக்கு முன்பே இந்திய மரபு ஆர்டிமிஸினின் மருந்து குறித்து அறிவு கொண்டிருந்தது என்று கூறி ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளார். 1918இல் கிர்த்திகார் மற்றும் பாசு என்போர் (KIRTIKAR and BAS) எழுதிய இந்திய மருத்துவ தாவரங்கள் (INDIAN MEDICINAL PLANTS) என்ற நூலில் காஷ்மீர் முதல் குமவன் வரை பரவியிருந்த ஒருவகை அர்டீமிசியா மரிடிமா (Artemisia maritima) எனும் தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட வடிசாறு காய்ச்சலை குணப்படுத்தும் என்றும் அந்த தாவரத்திலிருந்து அர்டிமிசின் (Artemisin) பிரித்து எடுப்பது குறித்தும் தகவல் உள்ளது என்றும் கூறி, யூயூ க்கு முன்பே இந்தியாவில் புழங்கிய மருந்துதான் இது என்கிறார் அவர். இந்த தாவரத்தை அஜவையன் என்று வடமொழியில் அழைப்பார்கள் என்றும் இந்த தாவரத்தை இட்டு கொதிக்கவைத்த நீர் காய்ச்சலுக்கு உகந்த மருந்து என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்றும் கூறி எல்லாம் அந்தகாலத்திலேயே இருந்தது என்று கூறும் போக்கினை திரு ஷர்மா அவர்கள் முன்வைக்கிறார்கள். முதலாவதாக சீன மருத்துவம் கண்டுபிடித்து தனித்து பிரித்து எடுத்தது ஆர்டிமிஸினின் (artemisinin), அர்டிமிசின் (Artemisin) அல்ல! சல்பேட் மற்றும் சல்பைடு இரண்டும் வெவ்வேறு வேதிப்பொருள்கள் என்பதுபோல ஆர்டிமிஸினின் (C15 H22 O5 ) மற்றும் அர்டிமிசின் ( C15 HI8 O4) இரண்டும் வெவ்வேறு மூலக்கூறுகள்.  இரண்டின் வேதிவினை வெவ்வேறானது. இரண்டாவதாக நோபல் பரிசு மரபு மருத்துவத்துக்கு அல்ல. மரபு மருத்துவ துணை கொண்டு சரியான மூலிகையைத் தேடி அதில் இருக்கும் செயற்கூறு வேதிப் பொருளை பிரித்தெடுத்து தனிமைப்படுத்தி நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றிகண்டு புதிய வீரியமிக்க மருந்தை தயார் செய்தததற்குத் தான் நோபல் பரிசு தரப்பட்டுள்ளது. மூன்றாவதாக அர்டீமிசியா மரிடிமாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் ஆர்டிமிஸினின் இல்லை. எனவே இந்த சர்ச்சை போலியானது.
"சீனாவுக்குக் கிடைத்த மருத்துவ நோபெல் பரிசு சொல்வது என்ன" என்ற தலைப்பில் அரவிந்தன் நீலகண்டன் தனது தினமணி கட்டுரையில் "ஒவ்வொரு முறையும், இந்தியப் பாரம்பரிய மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி, ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும்போது உடனடியாக முத்திரை குத்தப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு பெரிய அறிவுக்களஞ்சியம் முன்னெடுக்கப்படாமல் அழிவை நோக்கிக் கொண்டுசெல்லப்படுகிறது" என ஆதங்கப் படுகிறார். சில விஞ்ஞானிகள் முன்வைக்கும் 'ஆயுர் ஜினோமிக்ஸ்என்ற புதிய பார்வை குறித்து பல மருத்துவ விஞ்ஞானிகள் கடுமையான விமர்சனப்பார்வை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, "காரவன்" இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை ஆதாரமாக கொண்டு “இடதுசாரி" நோக்கர்கள் இந்திய பாரம்பரிய அறிவியலை முன்னெடுக்க முனைபவர்களை எதிர்மறை உணர்வுடன் அணுகுகிறார்கள் என்றும் "இடதுசாரிகள் ஆக்கிரமித்து நிற்கும் நம் ஊடகங்களிலோ, இவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் மறுப்பு, சந்தேகம், இயன்றவரை எதிர்மறை சித்தரிப்பு" எனக் கூறுகிறார். மேலும் "யூயூடு தம் கண்டுபிடிப்புகளை வெளியுலகுக்குக் கொண்டு செல்ல காத்திருந்த காலகட்டத்தைவிட, இடதுசாரி ஆக்கிரமிப்பு நிறைந்த இந்திய உலகில், இந்தியப் பாரம்பரியம் சார்ந்த அறிவியல் எல்லாவித எதிர்மறை சித்தரிப்புகளையும் தாண்டித்தான் தன்னை உலகுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது ”எனவும் வருத்தம் தெரிவிக்கிறார். 

திருவிளையாடல் படத்தில் தருமிக்கும் நக்கீரருக்கும் இடையே நடக்கும் வசனம்தான் இங்கு நினைவுக்கு வருகிறது. எழுத்தாளரே உமது எழுத்தில் பிழை உள்ளது என்றும் இந்தக் கவிதைக்கு விளக்கத்தை சொல்லிய பிறகு பரிசை பெற்றுச் செல்லுமாறும் நக்கீரன் கூற தருமி "பிழை இருந்தாலென்ன? எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்தபடி பரிசை குறைத்துக் கொள்ளுங்கள்" என்றும் "போங்கப்பா அரசருக்கே விளங்கிவிட்டது இடையில் நீர் என்ன?” என்றும் தருமி கூறுவதுபோல தான் அரவிந்தன் நீலகண்டனின் வாதம் உள்ளது.

ஐன்ஸ்டைன் தன்னுடைய சிறப்பு சார்பியல் தத்துவம் குறித்த ஆய்வுக்கட்டுரையை பிரசுரிக்க பல அறிவியல் ஆய்விதழ்களுக்கு அனுப்பியபோது பலரும் அந்த கட்டுரையை ஏற்க மறுத்தனர். கடைசியில் ரோண்ட்கன் (Röntgen) தான் ஆசிரியராக இருக்கும் அறிவியல் இதழில் பிரசுரித்தபோது ஆசிரியர் குறிப்பில் ஐன்ஸ்டைனின் கட்டுரையை தம்மால் ஏற்க முடியவில்லை என்று கண்டன குறிப்போடுதான் பிரசுரம் செய்தார். இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பல அறிவியல் கருத்துகள் முதலில் அறிவியல் உலகம் விமர்சனத்தோடும் சந்தேகக்கண் கொண்டும்தான் பார்த்துள்ளது என்பதே வரலாறு.

மார்க்ஸிச தத்துவப்பார்வை, நவீன அறிவியலின் தோற்றுவாய் மானுட உழைப்பே என கருதுகிறது. இதன் அடிப்படையில் நவீன ஆய்வுக்கருவிகள் உருவாகாத முற்காலத்தில் அனுபவத்தின் வாயிலாக மனிதன் துவக்க அறிவியலை உருவாக்குகிறான் எனவும், காலப்போக்கில், ஏற்ற சமூக மாற்றத்துக்கு பிறகு பழமைவாத சிந்தனைக்கு தலைவணங்கும் தேவை அகன்று, இயற்கையை மேலும் நுணுக்கமாக ஆராயும் கருவிகள் உருவாகி அனுபவத்தை தாண்டிய மேலும் மெய் நோக்கி நகரும் நவீன அறிவியல் உருவாகிறது எனவும் மார்க்ஸிசம் கருதுகிறது.

அப்படிதான் பார்க்கவேண்டும் என்பதுதான் அறிவியலின் தர்மம். எல்லா கருத்துகளும் முன்மொழிவுகளும் தீவிர விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுதான் அறிவியலின் முக்கிய தன்மைகளில் ஒன்று. அறிவியல்பார்வை ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தேகங்களை எழுப்புவது (organised scepticism) என்பர். இவ்வாறு "நக்கீர"ப் பார்வையோடு அறிவியல் செயல்படுவதாலேயே பிழை  நீக்கி மெய் துலங்குகிறது. பல குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக்கூடாது எனபது நீதி சாஸ்திரம். அதேபோல பல மெய்களை நாம் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம், ஆனால் பிழையான ஒன்றை மெய் என்று சாதிக்கக்கூடாது என்பது அறிவியலின் நியதி. எனவே  தயவுதாட்சண்யம் அற்ற விமர்சனமே அறிவியலின் வெற்றிக்கு முக்கிய காரணம். பண்டைய இந்திய கருத்தை விலை செய்கிறார்கள் என்பதாலேயே "கொஞ்சம் குறைத்து" எல்லாம் விமர்சனம் செய்ய முடியாது. உள்ளபடியே நீலகண்டன் முதலியோரின் பார்வையும் பரிந்துரைகளும் தாம் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் முதலியவற்றிலிருந்து அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியை தடுத்து வெறும் போலி பெருமையை மட்டும் முன்னிறுத்தும் போக்காக அமைந்துவிடுகிறது.

இந்தியப் பாரம்பரியத்திலிருந்து சிலவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்கிற அனைவரும் "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்" மட்டும் பேசுபவர்களல்லர்; மூடநம்பிக்கைகளில் முழ்கியவர்களுமல்ல. "நாடிப்பிடிப்புடன் நவீன அறிவியலைப் பயன்படுத்தி, சித்த மருத்துவத்தை உள்வாங்க வேண்டும்எனக் கூறும் சித்த மருத்துவர் கு.சிவராமன் "நவீன அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்த்து, சித்தமருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும்" என்கிறார். மேலும் "பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் விடை கிடைக்காது" எனக் கூறி "ஒரு மருந்து பழமையானது என்பதாலோ, நம்முடைய மரபு என்பதாலோ கொண்டாடாமல், Reverse pharmacology  முறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் தவறென்று தெரியவரும் எந்த மருந்தையும் விலக்கி வைக்கவும்" தயாராக இருக்கவேண்டும் என்கிறார்.  ஆனால் இவரைபோன்று "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" என்று உரக்கக்கூறி, அறிவியல் பார்வையை முன்னிறுத்த வேண்டும் என்ற அவா கொண்ட மரபு மருத்துவ அறிஞர்கள் விதிவிலக்கு தான் என்றே தோன்றுகிறது.

இந்திய மருத்துவத்தை நவீனப்படுத்துவது என்ற பார்வை இல்லாமல், பழம்பெருமை பேசுவதில் காலத்தை நாம் கழிக்கும்வரை ஆயுர்வேதம், சித்த மருத்துவம் முதலியவை  சுற்றுலாத்தலங்களில் "மசாஜ்" சென்டராகவும் வசதி படைத்தவர்கள் தம்மை "வித்தியாசமாக" காண்பித்து கொள்ள கைக்கொள்ளும் (fad) வறட்டுப் பகட்டாகவும் மட்டுமே துலங்கும்.

- முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்,
முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், புதுடெல்லி

புதுவிசை, இதழ் 45, 2016 பிப்ரவரி



No comments:

Post a Comment