Sunday, March 25, 2018

ஒடுக்கப்பட்டோர் இலக்கியமும் மனித இலக்கியமே... பாகுராவ் பாகுல் தமிழில் : தி.சு. சதாசிவம்


துன்ப-துயரங்களின் தோற்றுவாய்: மனித சமுதாயத்தில் சொத்துடமை தோன்றிய நாளிலிருந்தே ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களால் பல்வேறு கருத்தாக்கங்களும் கோட்பாடுகளும் அவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை சுரண்டல்தன்மை கொண்ட அதிகாரம், துயரம், நோவு - நலிவு, அடிமைத்தனம், பொருளற்ற சமயச் சடங்குகள் மற்றும் சொர்க்கம்-நரகம் என்னும் கற்பனைக் கருத்துக்களை நியாயப்படுத்தின. இத்துடன் குடியாட்சி பற்றிய பழைய கருத்துக்கள் மறைந்து, சமூக, பண்பாட்டு அமைப்புகள் சுரண்டல் தன்மை கொண்ட அரசுகளின் முழுமையான ஆளுகைக்கு உள்ளாக்கப்பட்டன....

ஒரு பொருள் - விரிந்த தொலைநோக்கு: முழுமையான முடியாட்சியின் தோற்றமும் குடியரசுகளின் வீழ்ச்சியும், பகவான் புத்தரின் “தம்மா” உருவாக்கத்தோடு ஒரே காலத்து நிகழ்வுகளாக அமைந்தன. இம்மாபெரும் கருணையுள்ளம் கொண்ட முற்றுமறிந்த ஞானி, செல்வக்குவிப்பு, செல்வத்தையும் - அதிகாரத்தையும் அடைவதற்கான பயங்கரப் போராட்டங்களின் விளைவான பெரும்போர்கள், அதன்பின்னான வன்முறைகள், வளர்ந்து கொண்டே வரும் சமத்துவ மின்மை, துயரம், நோவு-நலிவு, அடிமைநிலையை கூர்மையாக உற்றுணர்ந்தார். “தம்மா” கருத்தாக்கச் சக்கரத்தைச் சுழற்றி துயரங்களுக்கெல்லாம் தோற்று வாய் எதுவெனக் காட்டினார். துயரங்களே இல்லாமலாக்குவதற்கான வழிகளை பகுத்தறிந்தார்; சுரண்டல் தன்மை கொண்ட கோட்பாடுகளையும் சமூக அமைப்பையும் அவற்றால் உண்டாகும் நடைமுறைகளையும் வன்மையாகக் கண்டித்தார். இருப்பினும் முற்றான்மை கொண்ட முடியாட்சியும் சுரண்டல் அரசும் நொருங்கிப் போய்விடவில்லை. அல்லது செல்வமும் அதிகாரமும் ஒரே இடத்தில் குவிவதும் தடுக்கப்பட்டு விடவில்லை. அடிமைத்தளை கழன்று மக்கள் விடுதலை பெற்றுவிடவில்லை. செல்வமும் அதிகாரமும் சமூகத்தின் உடமையாக்கப்பட்டு பரவலாக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் நிலை பெறவில்லை. மேலும் மேலும் பல போர்கள் நடைபெற்றன. அடிமைகளின் எண்ணிக்கை பெருகிற்று.

யாரெல்லாம் அதிக அதிகாரத்தையும், செல்வத்தையும் போர்க் கருவிகளையும் கையில் வைத்திருந்தார்களோ அவர்களே மேலும் பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளின் சொந்தக்காரர்களாயினர். நாடுகளே முழுமையாகவும் அடிமைகளாயின. ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே தடுத்து நிறுத்த முடியாத நிலைக்குப் போயிற்று. நிலவி வந்த சமூக மற்றும் அறிவுநிலை முறைமைகள் “வருணம்” மற்றும் வகுப்பு வேறுபாடுகளை வளர்த்து வளப்படுத்திக் காத்த தத்துவங்களால் மேலும் ஆழமாக்கப்பட்டன. சமூக ஒருங்கிணைப்பு என்னும் முழுப் பின்னலே ஏற்றத்தாழ்வு என்னும் தீயால் கொளுத்தப்பட்டு சீர்குலைந்தது. பகவான் புத்தரின் ‘சங்க’த்தில் மட்டுமே ஒரு மக்களாட்சி சமூகத்தைக் கண்டெடுக்க முடியும். அங்கேதான் ஆறுகள் கடலை நோக்கிப் பாய்வதைப் போல வெவ்வேறு சாதிகள் மற்றும் வகுப்புகள் சார்ந்த மக்களும் ஒன்றிணைய முன்வருவர். சமூக மக்களாட்சி வடிவத்தில் சமத்துவமும் அமைதியும் நிறைந்த ஒரு மகிழ்வான வாழ்வை வாழ்வார்கள்.

சுரண்டல் தன்மை கொண்ட அரசமைப்பின் இயல்பு: சுரண்டல் தன்மையுள்ள அரசு ஒரு தனித்த தன்மையைக் கொண்டது. அதன் சுரண்டல் இயல்பை மேலும் வளர்த்தெடுப்பதற்கு உதவும் தத்துவங்களையும் நிறுவனங்களையும் மட்டுமே அது வாழவும் வளரவும் விடும்; அவ்வரசுக்கு ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் மிகவும் தேவை. எனவே அது அவைகளைக் காத்து, பெருக்கச் செய்யும். அதற்கேற்றவாறு எண்ணங்களையும் பண்பாட்டையும் வடிவமைக்கும். மறுபுறம், ஏற்றத்தாழ்வையும், தீண்டாமையையும் எதிர்க்கும் ஆக்கவகையிலான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஒன்று முழுமையாக அழித்து விடும் அல்லது அடக்கு முறைக்கு உள்ளாக்கி மாசுபடுத்திவிடும்.

கடவுள் மறுப்பு கொள்கையும் நாத்திகமும் தனது வகுப்பு நலன்களைக் காக்கத் தவறிவிடும், எதிராகவே செயல்படும் என்பதை ஆளும் அதிகார வகுப்பு உணர்கிறது. இக்கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டால் “எல்லாம் வல்ல இறைவன், அவனது புனிதத்தன்மை” என்னும் கருத்தாக்கத்தை அவைகள் தாமாகவே மறைந்துபோக செய்துவிடும். அத்துடன் அந்த புனிதத் தன்மையைப் பகரான்மைப்படுத்தும் (Represent) மத வகையிலான தண்டிக்கும் அதிகார அமைப்பையும் கூட அவை மறைந்து போகச் செய்துவிடும். தாழ்ந்தவர் உயர்ந்தவர்க்கிடையில் மதத்தால் இடப்பட்டு இறையருள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் புனித எல்லைகள் இல்லாமலாக்கப்பட்டுவிடும். கடவுளால் உண்டாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஏற்றத் தாழ்வுகள் சடுதியில் மறைந்துபோகும். அத்தகைய சூழ்நிலைகளில் எந்த ஒருவராலும் வெறும் தகுதி மற்றும் சாதனை, திறமைகளின் அடிப்படையில் உயர்வது இயலக்கூடியதாக இருக்கும். இவையாவுமே வல்லாண்மை அரசுக்கு சாவுமணி அடிப்பவைகளாகும். மறுபுறம், கடவுள் மறுப்பு மற்றும் நாத்திகக் கோட்பாடுகளே குடியாண்மை அரசுக்கு உயிர்நாடியாகும். உண்மையில் அக்கோட்பாடுகள் அதன் உடனுறைபவையாகும்.

ஏற்றத்தாழ்வின் மீது அமைக்கப்பட்ட சுரண்டல் தன்மை கொண்ட அரசாகவோ அல்லது சமூகத்தை இயல்பாக மாற்றியமைத்துவிடும் ஒன்றாகவோ பௌத்தவியல் இருக்க முடியாது. அவ்வரசின் தன்மையான சமத்துவமின்மையை - அது தன்னெழுச்சியாக எதிர்ப்பதால், முற்றான்மை முடியாட்சி அரசு தன்னையே விவுபடுத்திய போதெல்லாம் அதை எதிர்த்து பௌத்தவியம் ஒரு வழிகாட்டும் ஆற்றலாக மாற முடிந்தது. எப்படியாயினும் அது ஒரு இலக்காக மட்டுமே செயல்பட முடியும். தனிப்பட்ட சில மனிதர்கள், அல்லது சிறு குழுக்கள் அதை ஒரு வழிகாட்டும் ஒளியாக கொண்டனர்; அதனால் கவரப்பட்டனர். படிப்படியாக அவர்கள் “சங்கத்தில்” சேர்ந்தனர். புத்தபிட்சுக்கள்- ஒடுக்கப்பட்ட, ஒடுங்கிப்போன, ஆளும் - என எல்லா வகுப்புகளிலிருந்தும் வந்தவர்களாவர். பௌத்த சங்கத்தில் அவர்கள் ஒரு சாதியற்ற, வகுப்புகளற்ற சமூகத்தின் மகிழ்வான வாழ்க்கையை நுகர்ந்தனர். மக்கள்திரள் நலனில் அக்கறைகொண்டு அதற்கான பணிகளில் பங்கேற்றனர். சங்கம் பாலைவனத்தில் ஒரு சோலையாக விளங்கியது. அன்று முழு சமூகமுமே சுரண்டல் தன்மையுள்ள அரசுக்கு ஆதரவாக இருந்தது. இதனாலேயே ஒரு சமூக ஒழுங்கமைவும் உயர்வுநிலையும் கொண்ட சமூக அடிப்படையை அமைப்பதற்கு பௌத்த கோட்பாடுகளை சுரண்டல் தன்மையுள்ள அரசால் அனுமதிக்க முடியவில்லை. ஆகையினால் பௌத்தவியம் இதற்கு எதிராக எல்லா மட்டங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் போராடி வருகின்றது. சுரண்டல் தன்மை கொண்ட ஆளுகை தன் உச்ச நிலையை எட்டியதோடு, ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் சமூக பண்பாட்டு கட்டுமானத்திற்குள் மிக ஆழமாக ஊடுருவிவிட்டன.

ஜாதகக் கதைகளின் கதைத் தலைவனான போதிசத்வன், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து வரவே முடியாத அளவுக்கு அந்த அழிவு ஊடுருவல் ஆழமாக அமைந்துவிட்டது. கதைத் தலைவர்களில் பலர் பார்ப்பனர்கள், சத்தியர்கள், வைசியர்களே. ஏன் பறவைகளும் விலங்குகளும் கூட இருக்கின்றன. ஆனால் ஒப்புநோக்கில் வெகு சிலரே ஒடுக்கப்பட்ட வகுப்புகளிலிருந்து வந்தவர்கள். காரணம் ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கும் போதிய வாய்ப்பு நலங்கள் இல்லாமையேயாகும். அதாவது, தீண்டாமைக் கருத்தாக்கம் வேறுபல கருத்தாக்கங்களோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதும் எல்லா சட்டதிட்டங்களும் ஆட்சியதிகாரங்களும்- ஆளும் அமைப்புகளும் இதை ஒரு இயற்கையான பண்பமைவாக இயல்பான நிகழ்வாக ஏற்றுக் கொண்டிருப்பதும் தான்.

சொத்துடமை : வருணமும் சாதியும்: பிறப்பின் அடிப்படையிலேயே வருணமும் சாதியும் தீர்மானிக்கப் பட்டன. செல்வம், அதிகாரம், உயர்ந்த ‘சமூக அந்தஸ்து’ மீதான முழுமையான பிடிப்பை தன்னிடமே தக்கவைத்துக் கொள்வதை உறுதிப் படுத்திக்கொள்ள ஆளும் வகுப்பு விரும்பியதே இதற்குக் காரணம். மேலும், ஒடுக்கப்பட்டோர் மீது திணிக்கப்பட்ட துயரம், தொல்லைகள், அடிமைநிலை சமூகத்தின் மற்ற பகுதியினருக்கும் மாற்றப்பட்டுவிடக் கூடாது என்று அவர்கள் விரும்பியதும் மற்றொரு காரணமாகும். முற் பிறவியில் புரிந்த (கர்மங்களுக்கு) நல்வினை தீவினைக்கு ஏற்பவும் தெய்வத்தின் அருளுக்கும் நீதிக்கும் ஏற்பவுமே இப்பிறவியில் பிறப்புக்கள் ஏற்படுகின்றன என்னும் நம்பிக்கைகள் வலிந்து உருவாக்கப் பட்டது அந்நிலையில் தவிர்க்க முடியாததாகும். இது உறுதியாகவும் மாற்ற முடியாத வகையிலும் ஒரு தனிநபரைக் குறிப்பிட்ட ஒரு வருணம் மற்றும் ஒரு குறிப்பிட்ட சாதியில் பொருத்தி வைத்தது.

இது உண்மையில் சொத்துடமை அமைப்பை நியாயப் படுத்துவதற்காக - மிகுந்த அறிவுத்திறனுடனும் மாபெரும் சூழ்ச்சித் தன்மையுடனும் அடையப்பெற்ற ஒரு சாணக்கியத்தனமான (மாக்யவல்லிய) துரோகத்தனமான அரசியல் தந்திர நடவடிக்கையாகும். இதன் விளைவாக, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டு அச்ச மேற்படுத்தும் அளவிற்கு சமூகம் பிளவுண்டுபோனது. தமது வகுப்பு நலன்களைக் காத்துக் கொள்வதற்காக இத்தகைய சிதைவுகள் ஆளும் வகுப்புகளுக்குத் தேவையாயிற்று. அடிப்படையான முதன்மைப் பிரிவு என்பது தெய்வத்தின் பகராண்மையராக (பிரதிநிதிகளாக) தங்களையே கற்பித்துக் கொண்டு செல்வம், வாழ்க்கை வளம், அதிகாரம், கடவுளுக்கு நெருக்கமாக இருத்தல் ஆகியவற்றை பிறப்பாலேயே உரிமையாக பெற்றிருந்த மக்கள் ஒருபுறம்; கடவுளாலும் மதங்களாலும் பழிக்கப்பட்டதாகக் கூறி, துயரம்-துன்பங்கள், அடிமைத்தனம் மற்றும் தீண்டாமை மட்டுமேயான வாழ்க்கைக்கு நிலையாகத் தள்ளப்பட்ட மக்கள் மறுபுறம். தெய்வீக சாபம், பழிப்புக்கு ஆளாதல், கோபத்தால் வஞ்சந்தீர்க்கப்படல் மற்றும் கடவுளின் ஆணை, இச்சை போன்றவைகளின் பேரால் இரண்டாவதாக கூறப்பட்ட மக்களுக்கு விடுதலை, வீடுபேறு, கதிமோட்சம், மீட்பு ஆகியவற்றின் எந்த நிலையும் மறுக்கப்பட்டன. அதன் விளைவாக அவர்கள் முழுமையாகவும் சமூக உற்பத்தியின் செயல்பாட்டிலிருந்தும் ஒதுக்கப்பட்டுவிட்டனர். சமூக உற்பத்தி சாதனங்களிலும் அவற்றின் உடைமையாளர்களுக்கிடையிலும் மாற்றம் நிகழ்வதென்பது வகுப்புக் கட்டுமானத்தில் மாற்றங்கள் நிகழந்து அதன் பலனாக சமூக முன்னேற்றத்தில் கொண்டு விடுவதாகும். ஆனால் சமூக உற்பத்திச் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் இல்லாததால், வகுப்புக் கட்டுமானத்தில் நிகழ வேண்டிய இம் மாற்றங்கள் கூட ஏற்படாமல் போயின.

தெய்வீகத்தின் தோற்றுவாய்: பாவ-புண்ணிய நடவடிக்கைகள், முன்வினைக் கர்மங்கள், மறுபிறப்பு, ஊழ்வினைக் (விதி) கோட்பாடு, வீடுபேறு (மோட்சம்) போன்ற கவைக்குதவாத எண்ணங்கள், தெய்வீகத் தன்மை கொண்டவர்களாகவும் சமய ஆசான்களாகவும், மடாதிபதிகளாகவும், அவதாரங்களாகவும், தங்களைத் தாங்களே மேல்நிலைக்கு உயர்த்திக் கொண்டவர்களால் பரப்பப்பட்டு புனிதத்தன்மை அளிக்கப்பட்டன. அநீதி, அடக்குமுறை, துயரம், துன்பங்களை உண்டாக்கிய ஒடுக்கும் வகுப்பும் சுரண்டல் தன்மை கொண்ட சமூகக் கட்டுமானமும் வேண்டுமென்றே தெரிந்தே மறைக்கப்பட்டு அவைகளின் சுயநலக் கருத்துக்களைப் பரப்புவதற்காக நம்பிக்கைகளில் மட்டுமே இருப்பதும் உண்மையில் புலனுக்கெட்டாததும் உருவமற்றதுமான கடவுள் கருத்து முன் வைக்கப்பட்டது. இப்படியாக, ஒடுக்கப் பட்டோர் உண்மையான ஒடுக்கு முறையாளர்களை என்றுமே வெளிப்படையாக காண முடியாமல் இருப்பதன் விளைவாக சுரண்டலுக்கு எதிராக ஒடுக்கப் பட்டோர் (தலித்துக்கள்) அனைவரும் கூட்டாக எழுச்சி பெற்று எதிர்க்குரல் எழுப்பிப் போராடியதற்கு தடயங்கள் ஏதும் இல்லை. இச்சமூக அமைப்பு அது வடிவமைக்கப்பட்டுள்ள வகையில் ஒடுக்கப்பட்டோர் தங்களின் பரிதாபகரமான அவலமான நிலையை உணர்ந்து கொள்வதற்கும் கூட எப்போதும் அனுமதித்ததேயில்லை. இந்திய வாழ்க்கை முறை உண்மையில் கூட்டுச் செயல்பாட்டை எப்போதும் ஏற்பதே இல்லை, கண்டித்தே வந்துள்ளது. மோட்சம் என்னும் வீடு பேற்றை-பரமநிலை எய்துதல், ஆன்ம விடுதலை பெறல், முக்தியடைதல் என்றெல்லாம் விளக்கப்படும் ஒன்றை தனி மனிதராகத்தான் முயன்று அடைய வேண்டும் என்ற கோட்பாட்டை அது முன் வைக்கின்றது.

ஒடுக்கு முறையாளர்களின் கருத்துப்பரப்பல் பின்வரும் வடிவத்தைக் கொண்டது: எல்லா துன்பங்களுமே மனித உடலில்தான் தோன்றுகின்றன; மனித உடம்பு இல்லையென்றால் துன்பம் என்பதும் இல்லை. தொல்லைகளும் தீவினைகளும் இல்லை. துன்பங்களும் தீவினைகளும் இறப்போடு முடிவடைகின்றன. எனவே வாழ்வது என்பதே துன்பங்கள் நிறைந்தது தான்; வாழ்க்கை, ஆசை மற்றும் காமத்தால் விளையும் செயல்களில் ஈடுபடச் செய்கிறது. ஆகையினால், வாழ்வையே நாம் துறக்க வேண்டும். இத்தகைய கருத்துப்பரப்பல் (கூட்டுணர்வுநிலை மற்றும் கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றிலிருந்து எழும்) சமூக உணர்வுநிலை, தோழமை உணர்வு, சினம், எதிர்ப்புத் தன்மை ஆகியவற்றை தாமாகவே மழுங்கடிக்கின்றது. சாதாரண மனிதன், தன் நிலையையும் நோவு நலிவுகளையும் உணர்வதற்கும், நடைமுறை மெய்மையை புரிந்து கொள்வதற்கும், தான்படும் துன்பத் துயரங்களுக்கெல்லாம் யார் காரணம் என்று பார்ப்பதற்குமான ஆற்றலை இழக்கும்படி இந்துமத நிலவுடமை எல்லா மட்டங்களிலும் செயலாற்றி கவனமாகப் பார்த்துக் கொள்கிறது. இத்துடன், இராணுவம், காவல் துறை, சிறைச்சாலை, மற்றும் சமய நூல்களை ஏற்படுத்தி இவற்றுக்கெல்லாம் ஒரு மேலான புனிதத் தன்மையையும் வழங்கியுள்ளது.

இதன்மூலம் வரலாற்றுக் காலகட்டத்தில் ஆளும் வகுப்பானது அறிவு சார்ந்ததும் சமூக நீதியானதுமான அமைப்பை எதிர்க்கின்ற ஒரு சில கருத்துக்களை வாழவும் வளரவிடவும் விட்டிருக்க முடியும் என்பதை உய்த்துணர முடிகிறது. இறை மறுப்பியல், நாத்திகம், பகுத்தறிவுவாதம் மற்றும் முற்போக்கான போக்குகள் வளர்வதற்கு அரசு அனுமதித்தபோது பௌத்தவியம் செழித்தோங்கியது. ஆனால் சுரண்டல்தன்மை கொண்ட அரசு, அது தனக்கு உடன்பாடாக இல்லை என்று கண்டபோது, இராணுவத் துணை கொண்டோ அல்லது வேறு வழிகளிலோ அதை அழித்தது. எனவே, தவறு ஒரு குறிப்பிட்ட சாதியால் என்பதைவிட இந்து நிலவுடமை அமைப்பால்தான் என்பதே சரியாயிருக்கும். முழு சமூக அமைப்பும் முடியாட்சியின் மீது நிறுவப்பட்டது. காலமும்கூட அதற்கு ஓர் உயர்வைத் தந்து தூயதன்மை, புனிதத்தன்மை, கடவுள்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அல்லது அவதாரங்களாக காட்சிதரும் கருத்தாக்கங்களை வளர்த்தெடுத்தது. இக்காலகட்டத்தில்தான் வருவதுரைக்கும் எல்லா திருநாவுரையர்களின் (தீர்க்கதரிசிகள்) - ஞானிகளின் -மதங்களின் முதல் வருகை / தோற்றம் அமைந்தன என்பதை நாம் காண்கிறோம்.

போர் விரும்பும் மாதர்கள்: இந்துத்துவத்தால் புனிதத் தன்மையும் தெய்வத்தன்மையும் ஏற்றிக் கூறப்பட்ட வீரநாயகர்கள் எல்லோருமே உண்மையில் அதிகாரத்திற்காக போர் புரிந்தவர்களே. அவர்களின் போர்களும் அவர்களைப்பற்றி கூறப்பட்ட கதைகளும் புராணக்கதைகளாக மறை நூல்களாக புனிதமாக்கப் பட்டன. மேலும் அநேக இந்துமத விழாக்களும்கூட உண்மையில் அத்தகைய போர்களை கொண்டாடு பவைகளே. இப்போர்களில் வென்றடக்கப்பட்ட அரசர்கள் அரக்கர்களாக்கப்பட்டனர், வென்றவர்கள் புகழாரம் சூட்டப்பெற்று தெய்வங்களாயினர். பொறாமை, காழ்ப்பு, இகழ்ச்சி, வெறுப்பு, பகைமை மற்றும் பழிவாங்கும் தன்மை போன்ற வன்முறையின் அடிப்படைத் தன்மைகள் ஒரு பண்பாட்டு முக்கியத்துவத்தோடு போற்றி வளர்க்கப்பட்டன. இந்துத்துவ மதிப்பீட்டுக் கட்டுமானத்தில் (இந்து பண்பாட்டு அமைப்பில்) போர் என்பது முதன்மை நிலையில் இருப்பதையே இப்போக்குகள் தெளிவாகக் சுட்டிக் காட்டுகின்றன. அதிகாரமும் ஆட்சியும் மற்றொரு வருணத்திற்கு-மற்றொரு குழுவிற்கு மாற்றப்பட்ட போது, அங்கு சமரசத்தன்மை கொண்ட புதிய கருத்தாக்கங்கள் எழுந்தன. இப்போக்குகளாவது தொடர்ந்திருந்தால் சீதையையும் சூர்ப்பனகையையும் அவமானப்படுத்தியவனும், காண்டவவனத்தை எத்தவனுமான நாயகன் (ராமன்) புராணப் புத்தகங்களிலும் கோயில்களிலும் இடம் பெற்றிருக்கமாட்டான். அவன் ஒரு புராணப்புனைவு (தொன்மக்கனவு) முன்மாதியாக கொண்டாடப்பட்டிருக்கமாட்டான். ஆனால், அதிகாரமும் ஆட்சியும் தொடர்ந்து பார்ப்பனர் மற்றும் சத்தியர் கைகளிலேயே இருந்துவிட்டன.

விளைவாக, அவர்களது ஆட்சியின் நிலைபேற்றிற்கு துணைபுரிந்தோரெல்லாம் அவர்கள் வீரமாந்தர்களாகவும், கடவுள்களாகவும் போற்றிப் புகழப்பட்டனர். இந்த ஆளும் வருணங்களின் விருப்பங்களுக்கு ஏற்பவே சமூக அமைப்பும் கட்டப்பட்டது /உருமாற்றப்பட்டது. விளைவாக, புராணப் புனைவியல் (தொன்மவியல்) மற்றும் பண்பாட்டு உணர்வுநிலை அவர்களின் கருத்தாக்கங்களுக்கு ஏற்பவே அமைந்தன. இலக்கியமும் அவர்களின் இசைவுகளுக்கேற்பவே உருவாக்கப் பட்டன. அவமதிப்பு. காழ்ப்பு, செருக்கு, இறுமாப்பு போன்ற ஏற்றத்தாழ்வின் உள்விளைவுகள் கொண்டாடப்படும் தன்மைகளாகத் தொடர்ந்தன. அதே வேளையில் அன்பு, கருணை, தோழமை மற்றும் சமத்துவம் ஆகிய நற்பண்புகள்-இலக்கியத்திலும் சமூகத்திலும் புறக்கணிக்கப்பட்டன.

கிருஸ்து- மாறுபட்ட முன்மாதிரிகள்: ஏசுகிருஸ்து கடவுளின் இருப்பையும் அவரது வானுலக அரசாங்கத்தையும் முன்னுரைத்தார். தன்னையே பிதாவின் நெருங்கிய பிரியமுள்ள குமாரனாக கருதினார். முதலும் அசலுமான பாவத்தை ஆதாமும் ஏவாளும் செய்ததால் அவர்கள் விண்ணுலகின் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். உடலுறவு பாவமானதாக நம்பப்பட்டது. மாறாக, நீங்கள் ஏசுவை பின்பற்றினால் அதாவது நீங்கள் அன்பு, கருணை, தொண்டு, தோழமை (சகோதரத்துவம்) சமத்துவம், தன்மறுப்பு (தியாகம்) பொறுமை போன்ற நற்பண்புகளைக் கைக்கொண்டால் கடவுள் உங்கள்மீது கருணையைப் பொழிவார் என்றும் நம்பப்பட்டது. கடவுளின் அன்பை மனம் வருந்துதல் (பாவமன்னிப்பு), தொழுதல் மூலமாகவும் கூட அடைய முடியும். இக்கோட்பாடுகளே கிருத்துவ சமுதாயப் பண்பாடு மற்றும் இலக்கியங்களின் அடிநாதமாக இருக்கின்றன. இம்மதிப்பீடுகளால் உள்ளவர்-இல்லாதவர், ஏழை-பணக்காரரிடையே பிரிவினை இருந்த போதிலும் மக்கட்திரளில் மிகவும் தீவிரமான துன்பத் துயரங்களாலும் தீவினையாலும் பாதிக்கப்பட்டோருக்கும் கூட கிருத்துவ சமூகத்திலும் இலக்கியத்திலும் ஒரு இடமுள்ளது. மாறாக, சாதிகளிலேயே மிகத் தாழ்ந்த சாதியினரும் சாதியக் கட்டமைப்பிற்கு வெளியேயே வைக்கப்பட்டோருமான சூத்திரர்களும், ஆதி சூத்திரர்களும் இந்துக்களின் மத ரீதியான மற்றும் மதச்சார்பற்ற இலக்கியங்களில் எந்த இடத்தையும் பெற முடியவே இல்லை.

இந்துத்துவத்தின் கடவுள்களும் புராணங்களும் உண்மையில் ஒடுக்கப்பட்டவர்களை, நலிந்த மக்களை எதிரிகளாக நடத்தி அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துப் பரப்பலில் ஈடுபடுவதுதான் இதற்குக் காரணம். இப்போது கடவுளும் அவரது புராண நூல்களுமே, வெறுப்பு, இகழ்ச்சி, தூற்றல், செருக்கைப் பரப்புவதில் ஈடுபடும்போது சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் சமூகத்திலும் இலக்கியத்திலும் இடம் பெறுவதை நாம் எதிர்பார்க்க முடியுமா? இக்காரணத்தால் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம், பகுத்தறிவுத் தன்மை மற்றும் அண்மைக்கால கருத்துக்களான குடியான்மை, சமூகவுடமை போன்ற மதிப்பீடுகள் இந்துக்களின் சமூகத்திலும் இலக்கியத்திலும் புனைவு மயக்க (தொன்ம) சிறப்பான்மைகளைப் பெறவில்லை. இந்துத்துவத்தில் அவைகளுக்கான வேர்கள் இல்லை, தகுதி வாய்ந்த அடிப்படை இல்லை. திருத்தொண்டர்களின் இலக்கியமும்கூட அவர்களுக்கு உரிய இடத்தை தர தவறி விட்டது. அதற்கு மாறாக அவற்றிலும் இனவெறி வல்லாண்மை (ஆட்சிவெறி & பாசிசம்) வக்கத்த போக்கு ஆகியவையே பெரும்பாலானவற்றில் இடம் பெற்றுள்ளன.

வடமொழி (சமஸ்கிருத) இலக்கியம்: வடமொழியின் மத இலக்கிய, செவ்வியல் இலக்கிய நாயகர்கள் ஆளும் பகுதியினரையும் இந்துத்துவத்தின் மதிப்பீட்டுக் கட்டமைப்பிற்கு பங்களிப்பு செய்த பகுதியினரையுமே சேர்ந்தவர்களாவர். இந்த நாயகர்களுக்கு தெய்வீகத் தன்மை அளித்து கோவில்களில் வைக்கப்பட்டதை முன்பே பார்த்தோம். இலக்கியங்களில் அவர்களின் வாழ்க்கை மட்டுமே கருப்பொருளாயின. மத, ஆட்சி- அதிகாரங்களால் பழிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டோரில் யாரும் தெய்வீக, நாயகப் பெருமையை, ஏன் துணைநாயகன் இடத்தையும் கூட பெறவில்லை. வட மொழியின் மதரீதியானவையும், வெறும் கற்பனைவாத இலக்கியங்களும் மத நிறுவனங்களுக்கும் ஆளும் அமைப்புகளுக்குமே ஊழியம் செய்ய உறுதி பூண்டிருப்பதே இதன் தெளிவான பொருளாகும். மேல் வருணங்களைச் சார்ந்த அரசர்களையும், பேரரசர்களையும் புகழ்ந்தும் கடவுளரைப் போற்றியுமே அது பெருமளவில் செழித்தது. பார்ப்பனர், சத்தியர் தவிர மற்றெந்த வருணமும் வடமொழி இலக்கியத்தில் தோன்றியதேயில்லை.

விதிவிலக்காக ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுக்கள் இருக்கலாம். செல்வம், அதிகாரம், கல்வி மூன்றுமே ஆளுமை செலுத்தி வந்த அந்த இரு வருணங்களின் முற்றுடைமையாக (ஏகபோகமாக) இருந்தன. அதன் விளைவாக வடமொழி இலக்கியம் ஸ்மிருதி அல்லது மறை நூல்களின் வரையறையை மீற முடிந்ததில்லை. அதுவே அவ்விலக்கியத்தை சலிப்பூட்டும் ஒன்றாக மாற்றிற்று. வருணாசிரம அமைப்பிற்கும் அதற்கு அடி நாதமாய் அமைந்துள்ள அறிவார்ந்த கட்டமைப்பிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வடமொழி இலக்கியம் ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியத்திற்கான புனைவியல் (தொன்ம) அடிப்படையையும் முழுமையான மரபு வழிகளையும் படைத்தளிக்காது.

திருத்தொண்டர்களின் இலக்கியம்: பிறகு இசுலாமிய ஊடுருவல் இந்தியாவை குலுக்கியது. இசுலாமிய அதிகாரத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்து அரசுகளின் அழிவு தொடங்கிய காலகட்டத்தில் திருத் தொண்டர்களின் இலக்கியம் தோன்றியது. அதன் முகாமையான செயல்பாடாக நொறுங்கிக் கொண்டிருந்த இந்து அரசைத் தாங்கி நிறுத்துவதும் பெருகிவளரும் இசுலாத்தை தடுத்து நிறுத்துவது மாகவே இருந்தது. விளைவாக, வருணாசிரம அமைப்பின் அடிநாதமாக இருந்த கருத்தியலை பரப்புவதில் மட்டுமே அது வெற்றி கண்டது.

அரசுகள் நிலைகுலைந்து குழப்பம் மிகுந்திருந்த அக்காலகட்டத்தில் இந்துத் திருத்தொண்டர்கள் குறைந்து கொண்டும் இசுலாமிய திருத்தொண்டர்கள் கூடிக் கொண்டும் வந்த காலக்கட்டத்தில் - (சமூகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து) சூத்திரர், ஆதிசூத்திரர் மற்றும் பெண்களிடமிருந்து சிந்தனையாளர்கள் தோன்றத் துவங்கினர். இசுலாமிய தாக்குதலின் கீழ் இந்து ஒடுக்குமுறை அதிகாரம் நொறுங்காமல் போயிருந்தால் இவ்வகுப்புக்களிலிருந்து கலைஞர்கள், அறிவார்ந்தவர்கள், சிந்தனையாளர்கள் தோன்றிய அற்புதங்களை நாம் கண்டிருக்க முடியாது. இந்து ஒடுக்குமுறை எந்திரம் கலகலத்துப்போனதன் காரணமாகவே சிறிதே காலமாயினும் சமூகம் படைப்பாக்கம் கொண்டதாக மாறிற்று.

பிறகு முசுலிம் அரசு நிலைபெற்றது. இந்து அரசர்களும் ஆளுவோரும் முசுலிம் ஆட்சியின் கீழ் ஒரு அடிமைத்தனமான நிலைமையை ஏற்றுக் கொண்டோ அல்லது தனியரசுகளாக நின்றோ வாழ்ந்தனர். இந்நிலை, ஒடுக்குமுறை வருணாசிரம அமைப்பு மீண்டும் தலை தூக்கவே உதவியது. முசுலிம் ஆட்சியாளர்கள் தங்களின் ஒடுக்குமுறை செயல்பாடுகளுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருப்பதைக் கண்டதால் இந்து சமூக கட்டமைப்பையே நிலை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்தனர். ஆங்கிலேயர் வந்த போது சமூகத்தின் படைப்பாக்கத்திறன் முழுவதுமே நசிந்து போயிருந்தது. உண்மையில் திருத்தொண்டர்களின் இலக்கியம் இந்த மாறிவரும் காலகட்டத்தைச் சேர்ந்ததுதான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் போர்க்கால பின்னிலையை எதிர்த்துத்தான் அது எழுதப் பட்டது. இவ்வகைக் காலத்தில் வேறு எப்படிப்பட்ட இலக்கிய வகையை நாம் எதிர்பார்க்க முடியும்?

(போர்க்காலத்தில் இயற்றப்பட்ட) இத் “திருத்தொண்டர்” இலக்கியம் ( அதாவது இந்து திருத்தொண்டர்களின் ) வருணாசிரம அமைப்பு அதன் அறிவுசார்ந்த நிலை, இலக்கியக் கோட்பாடுகளுக்கு முழுவதுமாக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருந்தது. வடமொழி இலக்கியம் உருவாக்கி வைத்திருந்த கட்டுத்திட்டங்கள்-அதன் கருத்தாக்கம், தெரிவியல் (Theory), நாயகர்கள், ஒடுக்கு முறையை வளர்க்கும் கோட்பாடுகள் - எல்லாமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு திருத்தொண்டர் இலக்கியமும் அவற்றை முழுமையாக வெளிப்படுத்தியது. விளைவாக சுரண்டல் தன்மை கொண்ட வருணாசிரம அமைப்பு மேலும் வலுவாக்கப்பட்டது. இந்தியாவிலிருந்த இசுலாமிய சமூகமும் கூட சாதிய அமைப்பையும் அதன் அடிநாதமான மதிப்பீட்டுக் கட்டமைப்பையும் உள்வாங்கிக் கொண்டது. (திருத்தொண்டர்கள் வெளிப்படுத்திய) பக்தி அல்லது ஒப்படைப்பு உணர்வால் சமூக சமத்துவத்தின் செய்தியை பரப்ப முடியவில்லை. அவர்களின் மாறுபட்ட நடுநிலை முயற்சிகள் சமூக முன்மாதிரிகளாகவோ, புனைவுக் (தொன்மக்) கோட்பாடுகளாகவோ உருமாறத் தவறி விட்டன. ‘பக்திமார்க்கம்’ என்னும் வழிபாட்டுப்பாதை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் சாதிய அமைப்புமுறைக் கருத்தியலை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்ட பல்வேறு வழிபாட்டு பிவுகள் தொடர்ந்து நிலைக்கவே செய்தன. விதி அல்லது ஊழ் வினையில் நம்பிக்கை, முன்வினைப்பயன், மறுபிறவிச் சித்தாந்தங்கள் தொடர்ந்து பற்றிப் படர்ந்தன. அதே போன்று ‘கடவுள் எப்படி படைத்தானோ அப்படியே இருத்தல்’ நடவடிக்கையும் பரப்பப்பட்டது. அத்தகைய தொரு அறிவு மற்றும் சமூக அமைப்பே இந்து நிலவுடமை அரசுக்கு தேவையாக இருந்தது, எனவே அந்நிலை தொடர்ந்து நீடித்தது.

ஆங்கிலேயர்களினதும் அறிவியலினதும் வருகை: ஆங்கிலேயர்கள் இந்து-முசுலீம் திருத்தொண்டர்களைத் தோற்கடித்து இந்தியாவைக் கைப்பற்றினர். அவர்கள் கூடவே புதிய அறிவும் அறிவியலும், புதிய எந்திரங்கள், தொழில் நுட்பங்கள், புதிய தொழில்களும் வணிகமும் வந்தன. உற்பத்திக்கான சமூக மாற்றம் மேற்கொள்ளத் துவங்கியது. அத்துடன் பழைய கட்டமைப்பும் நொறுங்கி விழத் தொடங்கியது. ஒரு புதிய அறிவார்ந்த அமைப்பு வேர் கொள்வதற்கான போதிய வாய்ப்பும் வசதியும் உருவாயின. மேற்கத்திய அறிவுநிலையின் (ஞானத்தின்) புதிய விழிப்புணர்வு உள்ளங்களை ஒளிப்பெறச் செய்தன. விளைவாக, சுய-திறனாயவுத் சிந்தனைகள் உருவாக முடிந்தது. இச்சுய திறனாய்வுப்போக்கு, கற்பனைத் திறன் வாய்ந்த இலக்கிய ஆய்வுடன் இணைந்து புதிய இலக்கிய வெளிப்பாட்டிற்கு வழி வகுத்தது. முதன் முதலாக இலக்கியம் வெறும் உளநிலை சார்ந்த, அறிவு நிலை மீறிய அகநிலை சார்ந்த, அல்லது மதரீதியானவைகளுக்கும் அப்பால் சமூக கருப்பொருட்களை வெளிப்படுத்துவதற்கு முயன்றது.

கடந்த காலங்களில் உயர் வருணங்கள் மதத்தால் அவைகளுக்கு அருளப் பெற்ற உயர்நிலையினால் சமூக வாழ்வின் முன்னிலையில் இருந்தபடி பொருளியல், மத, அரசியல் அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தனர். இப்போது தங்களின் சொந்த குடும்பச்சிக்கலையே மையக்கருத்தாக வைத்து அதே வருணத்தார் சமூக இயக்கங்களின் தலைவர்களாயினர். அதே நபர்கள் கவிகளாகவும்-எழுத்தாளர்களாகவும் வெளிப்படத் தொடங்கினர். தங்களது சொந்த குடும்பச் சிக்கல்களையே வெளிப் படையாக முன்வைத்து விவாதிக்கவும் தொடங்கினர். ஆனால் இந்த விவாதங்களிலும் கூட இந்துத்துவத்தை திறனாய்வுடன் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயினர். அத்தகைய திறனாய்வு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோன்றியது. இத்திறனாய்வுடன் கூடிய அலசல்கள் சீர்திருத்தங்களை கோரின. உளஆய்வுடன் கூடிய முன்னேற்றம் என்னும் கண்ணோட்டத்திலிருந்து இத்தகைய நடவடிக்கைகள் சரியான திசையில் மேற்கொள்ளப்பட்டன.

பெண்கள்: நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் இலக்கியத்தின் கருப்பொருளாயினர். பல்வேறு வடிவங்களில் அவர்கள் இலக்கியங்களில் தோன்றத் தொடங்கினர்: ஒரு குழந்தைக் கைம்பெண்ணாக, குழந்தை மணப்பெண்ணாக, திருமணமான (அவளது கொண்டான் வீட்டான் கருணையில் வாழும்) பெண்ணாக இன்னும் இதுபோன்ற இந்துக் கூட்டுக் குடும்பத்தால் கசக்கிப் பிழியப்பட்ட பல்வேறு பெண்களின் வடிவங்களில். புதிய அறிவியலும் தொழில் நுட்பங்களும், தொழில்கள் மற்றும் வாணிகத்தின் புதிய வடிவங்களும் புதிய இலக்கியம் மற்றும் அறிவு சார்ந்த கருத்துக்களும் உண்மையில் பெண்களின் வாழ்வை படம்பிடித்து காட்டும் துணிவான முயற்சியில் இறங்க மிகுந்த ஊக்கமளித்தன.

சூத்திரர்கள் யார்?: பெண்களைப் போன்றே அதுவரை புறக்கணிக்கப் பட்டு வந்த சூத்திரர்கள் மற்றும் ஆதி சூத்திரர்களைப் படைத்துக் காட்டுவதில் இப்போது எந்த இடரும் இல்லை. மேலும் ஒரு வலுவான பெரும் பேரரசு முழுமூச்சுடன் குடியாட்சி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வந்தது. அரசு மட்டுமல்ல, சமூக சீர்திருத்த இயக்கங்களும் கூட இவற்றை ஆதரித்தன. இராமாயண கால சம்புகனைப் போலல்லாமல், புதிய ஆட்சியாளர்கள் இந்த எழுத்தாளர்களுக்கு எதிராக பார்ப்பனர்களால் தொடுக்கப்பட்ட விஷமத்தனமான குற்றச்சாட்டுகளை (முறையீடு) கேட்டு, தங்களின் எழுத்துக்களில் பெண்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியதற்காக அந்த எழுத்தாளர்களைத் தண்டிக்கத் தயாராக இல்லை. உண்மையில் எழுத்தாளர்களின் சார்பாகவே சட்டம் நின்றது. மேலும் பார்ப்பனர்கள் இதற்குள்ளாக புதிய தொழில்களையும் புதிய பதவிகளையும் மேற் கொண்டிருந்தனர். விளைவாக அந்த வகுப்பே சற்று பிளவுண்டிருந்தது. வரலாற்றிலேயே முதன்முறையாக, சீர்திருத்தக்காரர்கள், பழைய பஞ்சாங்கங்கள் (சனாதனவாதிகள்) என்று பார்ப்பனர்களில் இருபிவினர் தோன்றி முரண்பட்டு நின்றனர்.

பெண்களைப் போலவே சூத்திரர்களுக்கும் இலக்கியத்தில் இடம் பிடிப்பது கடினமான ஒன்றாகத் தோன்றவில்லை. மேலும் சூத்திரர், ஆதி சூத்திரர் போன்று அதே ஒத்த நிலைமையிலிருந்த மிகவும் எளிய ஏழை மக்களின் வாழ்வை அன்றைய ஆங்கிலப் புதினங்கள் படம் பிடித்துக் காட்டியிருந்தன. இப்படியெல்லாம் ஒரு சுமூகமான சூழ்நிலைமை இருந்தும் கூட ஏன் சூத்திரர்களுக்கும் ஆதி சூத்திரர்களுக்கும் இலக்கியத்தில் உரிய இடம் மறுக்கப்பட்டது? இது எழுத்தாளர்கள் அழகியல் பார்வை அல்லது கலை கலைக்காகவே என்னும் கருத்தாக்கத்திற்கு அடிமைப்பட்டு அதில் தீவிரமாக இருந்ததினாலா? அவர்கள் புதிய அறிவு விளக்கம் (ஞானம்) பெற விரும்பாததினாலா? அல்லது துன்ப-துயரங்கள், வாழ்க்கைத் தொல்லைகள் அடிமைத்தனம், ஒடுக்கப் பட்டோரின் நோவு-நலிவுகள் இந்த எழுத்தாளர்களின் சொற்திறமைக்கும் எழுத்தாற்றலுக்கும் மீறி வெகு தூரம் தள்ளி இருந்ததாலா?

எழுத்தாளர்கள் திறமையில் குறைந்தவர்கள் என்று கூற முடியாது. அவர்களுமே சமூக சீர்திருத்தத்தையும் அறிவொளிவியக்கத்தையும் விரும்பினர். ஆனால் சூத்திரர்களையும் ஆதி சூத்திரர்களையும் கவனிக்கத் தவறிவிட்டனர். அவர்களின் சொந்த பண்பாட்டு நிலையாக்கமும், உளப்பாங்கும் புராணப் புனைவுமே (தொன்மம்) ஒடுக்கப்பட்டோரை தங்களின் எழுத்துக்களில் படம் பிடித்துக் காட்ட விடாமல் அவர்களைத் தடுத்த உண்மைத் தடைகளாகும்.

முன்மாதிரி சீர்மைகள்(Classics - செவ்வியல்கள்): ஆங்கில எழுத்தாளர்கள் ஏழை எளியவர்களைப் பற்றி உணர்வுபூர்வமாக அறிந்திருந்தனர். காரணம் ஏசு கிருத்துவானவர் அம்மக்களைப் பற்றி அவ்வாறே கண்டறிந்திருந்தார். கடவுளின் திருக்குமாரனாக இருந்தபோதிலும் கூட, ஏழை எளியோரை புனிதமற்றவர்களாகவோ வெறுக்கத்தக்கவர்களாகவோ அவர் நடத்தவில்லை. பாவ புண்ணிய கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் பிறப்பு அல்லது சாதியின் அடிப்படையில் அதற்கான தகுதி அல்லது பழி பாவம் சுமத்தல் என்பதை அவர் முன்வைத்ததில்லை. அவர் தன் இருகைகளையும் விரித்து அன்பையும் கருணையையும் ஏழை எளியோர் மீது பொழிந்தார். இதனாலேயே கிருத்துவமும், அதன் நிறுவனங்களும், அச்சமூகமும் அதன் அறிவார்ந்தவர்களும் எழுத்தாளர்களும் ஏழை எளியோரை தங்களின் உற்றார் உறவினராக பாவிக்கின்றனர். கிருத்துதான் இம்முன்மாதியான சீர்மைகளை, இலக்கியத்திற்கு இத்தொன்ம மதிப்பீடுகளை (புனைவு இலக்குகளை) அளித்தார். ஆகையினால் அன்பு, கருணை, எதிர்ப்புச் சினம் ஆகியவற்றை அடிமையாகக் கொண்டு எழுந்த புரட்சிகர இயக்கங்களும் கூட ஏசுகிருத்துவிலிருந்து அகத்தூண்டுதல் பெற முடிந்தது.

மூடத்தனம்: சூத்திரர், ஆதிசூத்திரர் பற்றி இந்து எழுத்தாளர்களால் உற்றுணர முடியாமல் போனதற்கு காரணம் கடவுள்தன்மை கொடுக்கப்பட்ட இந்து நாயகர்களும் தெய்வீகப் படைப்புக்களாகக் கருதப்படும் புனித புராணநூல்களும் ஏழை எளியோரைப் பற்றி என்றுமே கவலை கொள்ளாமல் இருந்ததே. கணக்கற்ற அவதாரங்களும் திருத்தொண்டர்களும் இருந்தபோதிலும் அவர்கள் அனைவருமே சூத்திரர் ஆதிசூத்திரர் பெண்களின் நோவு நலிவுகளை காணத் தவறிவிட்டனர். கடவுள்கள், திருத்தொண்டர்கள், மதங்கள் அனைத்துமே ஏழை எளிய மக்கள் மீது வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் போது, இந்துக்களால் ஏற்படுத்திக்கொண்ட மதிப்பீட்டு கட்டமைப்பு-புராணப்புனைவு (தொன்ம) ஆகியவைகளில் சூத்திரர்கள் என்ன இடத்தைப் பெறமுடியும்? அன்பு, கருணை, தோழமைக்கு இந்து வருணாசிரம அமைப்பில் என்றுமே எந்த இடமும் இருந்ததில்லை.

விளைவாக, சூத்திரர் ஆதிசூத்திரர்களுக்கு இந்து சமூகத்திலும் இலக்கியத்திலும் இடமிருந்ததில்லை. ஆகையால் அவர்களை மேல்நிலைக்குக் கொண்டுவர யாரும் எண்ணியதுமில்லை. அவர்களிடையில் இருக்க யாரும் முயன்றதில்லை அல்லது ஒரு போராட்டத்திற்காக அவர்களை யாரும் எழுச்சிபெற வைத்தது மில்லை. ஒரு போராட்டத்திற்காக அவர்களை தயார்படுத்துதல் என்பது விதி (ஊழ்வினைக்) கோட்பாடு, மறுபிறவி, சுரண்டல் ஆகியவற்றைப் போற்றி வளர்த்த சமூக அமைப்பையும் அதன் அறிவார்ந்த நிலையையும் அழித்தொழிப்பது என்பதாகும். எனவே அது இயலாத ஒன்றே. எனவே எல்லோருமே வருணாசிரம அமைப்பின் தேவைகளில் தோன்றிய புனைவு மயக்க மதிப்பீடுகள் மற்றும் கோட்பாடுகளை போற்றி வளர்க்கவும் பரப்பவுமே செய்தனர்.

பௌத்தவியம் இருந்திருந்தால்: மக்களின் மனப் பாங்கை ஆளுமை கொள்ளும் ஒரு வடிவமைக்கும் ஆற்றலாக பௌத்தவியம் தொடர்ந்து நீடித்திருந்தால் இந்திய மரபில் அன்பும், கருணையும், முதன்மைப் பெற்றிருக்கும். கிருத்துவ நிறுவனங்களைப் போலவே ஏழை எளியவர்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணற்ற பள்ளிகள் அனாதை இல்லங்கள், மருத்துவ மனைகள், மற்றும் சமய நிறுவனங்களை கொண்டிருந்திருப்போம். அவற்றின் மூலமாக சமூகத்தில் பல்வேறு மனிதநேய சீர்மைகள் தோன்றியிருந்திருக்கும். மேலும் கடவுள் மறுப்புக்கொள்கை, நாத்திகம், பகுத்தறிவுக் கோட்பாடு, முற்போக்கான நடவடிக்கைகள் ஆகியவை அறிவியல் மற்றும் சமூக உற்பத்திச் சாதனங்களின் தொடர்ந்த வளர்ச்சிக்கு வழி வகுத்திருக்கும். உற்பத்திச் சாதனங்கள் மட்டும் வளர்ச்சி பெற்றபோது சமூகக் கட்டமைப்பு மாற்றம் கொண்டது, அச்சாதனங்களின் உடைமை நிலை மாறும்போது அது புரட்சிகரமான நிலைமையை மேற்கொள்கிறது. இவைகள் வெறும் சமூக மாற்றங்கள் அல்ல. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் தளங்களில் மாற்றங்களை கொண்டுவரும் புதிய ஆய்வுகளுக்கு அவைகள் செயலூக்கிகளாகவும், தூண்டுதல்களாகவும் விளங்குகின்றன.

இந்திய மருத்துவம், வேதியியல், இலக்கணம், சட்டம், மெய்யியல், மற்றும் கலை ஆகிய துறைகளில் ஒரு மாபெரும் பங்களிப்பை பௌத்தவியம் செய்திருக்கின்றது. பௌத்தவியம் செயலாற்றல் கொண்டது, முற்போக்கானது, புரட்சித்தன்மை கொண்டது. மற்றும் கடவுள் மறுப்பானது. ஆத்திகம் (கடவுள் ஏற்புக் கோட்பாடு), இறையியல் கோட்பாடுகளைப் போன்று, இது ஒரு சலனமற்ற அசையா பரம்பொருளின் முழு முதல் பிம்பமாக இருக்க முடியாது. புத்தரின் மெய்யியல் அதன் அடிப்படைக் கோட்பாடுகளின் துணைக் கொண்டு சமூகத்தை குடியாண்மைக்குக் கொண்டு சென்றிருக்க முடியும். மக்களது உள்ளுணர்வின் ஒரு பகுதியாக வடிவம் கொள்ள குடியாண்மையைக் கொண்டு செல்லும்போது (பதப்படுத்தும் போது) பொருளாதார ஏற்றத்தாழ்வும், செல்வந்தர்களின் கையிலேயே அதிகாரம் இருந்தாலும், நிலைத்திருந்தாலும் கூட எளிய மனிதன் தீண்டத்தகாதவனாகவும் புறக்கணிக்கப்பட்டவனாகவும் வெறுக்கத்தக்கவனாகவும் தொடர்ந்திருக்க முடியாது. சாதாரண மனிதப் பிறவியாக எண்ணிப் பார்ப்பதற்குரியவனாக சிந்திக்கக் கூடியவனாக இருந்திருக்க முடியும். இதுதான் பௌத்தவியத்திற்குள் நடைபெற்று வந்தது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் ‘தெர்’ மற்றும் தெரிகதாக்களில் உரிய இடத்தை பெற்றிருந்ததற்கு இதுவே காரணம்.

புராண புனைவு (தொன்ம) மதிப்பீடுகள் உள்ளுணர்வையும் கலை இலக்கியத்தையும் நகல் படுத்தி நவீன இலக்கியம் தோற்றம் கொள்ள தொடங்கியபோது ஆளும் அதிகாரத்தின் உட்சாரம் மாறியது. புதிய அரசு அதிகாரம் மற்றும் புதிய உற்பத்தி சாதனங்களின் காரணமாக பிறந்த புதிய அறிவின் துணைக்கொண்டு பாவ-புண்ணிய செயல்பாடுகள் கர்மவினை புனிதத்தன்மை ஆன்மா, பிறப்பின் உள்நோக்கை விளக்க புதிய மெய்யியலுக்கு தற்போது திறன் வந்துள்ளது. தீண்டாமை எப்படி சுரண்டலுக்கும் பகைமைக்கும் வெறுப்புக்கும் காரணமாகயிருந்தது என்பதை அது இப்போது தெளிவு படுத்தி காட்டமுடியும். ‘மகாத்மா பூலே’ உண்மையில் அத்தகைய உண்மை வெளிப்பாடுகளின் செல்வத்தையே நமக்களித்தார். இக்கருத்து மற்றும் பணியின் துணை கொண்டு, குடியாண்மை, சமூக சீர்திருத்தத்தின் கருத்தாழத்தை, சிந்தனையாளர் வகுப்பு பெற்றிருக்க முடியும். ஆயினும் அது நடைபெறாமலேயே போயிற்று. காரணம் இந்திய சிந்தனையாளர் வகுப்பு எப்போதுமே நிலை பெற்றிருந்த எண்ணத்திற்கும் முறைமைக்குமே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தது தான்.

நமது சிந்தனையாளர்கள் உண்மையில் நடப்பிலுள்ள சமூக அமைப்பின் உற்பத்திப் பண்டங்கள் மற்றும் அதன் பிம்பங்களேயன்றி வேறல்ல. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் முன்வைத்த கேள்விகளில் ஒன்று மிகத் தெளிவாக நமது சிந்தனையாளர் வகுப்பின் அடித்தளத்தை ஆணிவேரை நமக்கு வெளிப்படுத்துகின்றது. அவர் கேட்டார்: அத்தகைய தொரு அறிவு களஞ்சியமான நீண்ட பாரம்பயம் -ஞானத்தின் மரவுவழி இருந்தும் கூட ஒரு ஒற்றை வால்டேயரையும் கூட இந்த பார்ப்பனர்களால் உற்பத்தி செய்யமுடியாமல் போனது ஏன்? எப்படி? ஒரு வால்டேயர் ஆவதற்கு ஒடுக்குமுறை மதம் மற்றும் அரசியல் சார்ந்த அதிகாரத்துவத்திற்கு எதிராக ஒருவன் துணிந்து நிற்கவேண்டும். இந்தியப் பார்ப்பனர்களாலும் கற்றறிந்த சிந்தனையாளர் வகுப்பாலும் அத்துணிவைப் பெறமுடியாது. அப்படி எதிர்த்து நிற்கமுடியாது. காரணம் தங்களின் சொந்த நலனுக்காக மதம், அரசியல் அதிகாரம், மற்றும் சுரண்டலை போற்றி வளர்க்கும் இம்முழு சமூக அமைப்பை அவர்களே உருவாக்கி வைத்திருப்பதுதான். அதே வருணத்தை சார்ந்த எழுத்தாளர்களாகயிருப்பதால் அவர்களின் எழுத்தும்கூட “மனுஸ்மிருதி”யால் வகுக்கப்பட்ட எல்லைகளுக்கு உள்ளாகவேதான் இருக்கும் என்பதும் வெளிப்படையானது.

தேசிய விழிப்புணர்வு: தேசிய விழிப்புணர்வு ஏற்பட்ட போது, சாதிகளின் எழுச்சிகள் ஏற்பட்டு அதுவே இந்து வருணாசிரம அமைப்பிற்கு அறை கூவலாக நின்றது. பார்ப்பனர்கள் திறனாய்விற்கும் தூற்றுதலுக்கும் இலக்காவது தவிர்க்க முடியாததாயிற்று. ஆனால் உள்ளபடி பார்க்கப்போனால் பார்ப்பனர்களும் சத்தியர்களும் சேர்ந்தே ஒரு நியாயமற்ற அமைப்பை உருவாக்கி தொடர்ந்ததில் சமமான பொறுப்பாளர்களாக இருந்தனர். பார்ப்பனர்கள் மத அதிகாரத்தை வைத்திருந்தபோது, சத்தியர்கள் அரசியல் அதிகாரத்தை வைத்திருந்தனர். பல்வேறு சாதிகளிலிருந்தும் உருவெடுத்துவந்த இயக்கங்களுக்கு கற்றறிந்த சிந்தனையாளர் வகுப்பு உண்மையில் தலைமை தாங்கி வழி நடத்தியிருக்க வேண்டும். சிதறிக்கிடந்த இயக்கங்களுக்கு ஒரு குடியாண்மை தோற்றத்தை கொடுத்து பொருளியல், அரசியல் உள்ளுணர்வின் அடிப்படையில் தேசிய விடுதலைக்கான ஒரு பெரும்புரட்சிகர இயக்கமாக அதை அவர்கள் தான் மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அச்சிந்தனையாளர் வகுப்போ, (அதாவது இந்திய தேசியத் தலைமை) தேசிய விடுதலை இயக்கத்தையே பிளந்துவிட்டது. அவர்கள் எழுச்சிப் பெற்று வந்த விழிப்புணர்வையே, எதிர்த்துப் போடும் இரு குழுக்களாகப் பிளந்து விட்டனர்.

ஒன்று அரசியல் இயக்கம் மற்றது சமூக இயக்கம். மேலும் சமூக இயக்கங்களைக் கட்டியவர்களையும் வேளாண்மை மற்றும் தொழில்கள் மீது புதிய கருத்துக்களை உருவாக்கியவயர்களையும் ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாகவும், காட்டிக் கொடுப்பவர்களாகவும் குற்றம் சுமத்தினர். தேசிய இயக்கமே வரலாற்று - புராண இயக்கமாகவும் முன்னோரை வழிபடும் வடிவமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. உண்மையில் பழங்கால போர்களையும் அவற்றின் நாயகர்களையும் வழிபடுவதற்கு எந்த காரணமும் இல்லை. கடந்த காலத்தில் சாமானிய ஆணோ அல்லது பெண்ணோ அடிமையாகவே இருந்தனர். எனவே அந்த கடந்த காலத்தைப்பற்றி சாதாரண மனிதனுக்கு பெருமைப்பட ஏதுமில்லை. உண்மையில் அவன் மிக கொடுமையாக ஒடுக்கப்பட்டான். ஒரு கொத்தடிமையாக சுரண்டப்பட்டும், நசுக்கப்பட்டும், உள்நாட்டு போர்களிலும், சூறையாடும் கொள்ளைக் காரர்களின் தொல்லைகளாலும் அழிக்கப்பட்டான். புதிய காலம் வந்த பிறகுதான் தனது சொந்த அடையாளத்தையே அவன் போராடிப் பெற்றான். அறிவியலின் காரணமாகவும் உற்பத்திச் செயல்பாட்டில் அவன் கொண்டிருந்த பங்கினாலும் அவனது இருப்பு மற்றும் சமூகநிலை தீர்மானகரமானதாகவும் இன்றிய மையாததாகவும் ஆயிற்று. குடியாண்மைக் கருத்திய லும் பரந்துபட்ட மக்களின் எண்ணிக்கை வலுவும் சேர்ந்து போராட்டத் தன்மையையும் தலைமையையும் அவன் மீது சுமத்தின.

கடந்த காலத்தில் உயர் சாதி வருணங்கள் மற்றும் இனங்கள் என்று சொல்லப்பட்டவையே பெருமை கொண்டதாகயிருந்தன. ஆனால் இயந்திரயுகமும் அதன் அறிவியலும் தொழில்நுட்பமும், அதிகார சமன்மையை முழுவதுமாக மாற்றிவிட்டன. மேல்நிலையோர் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஏற்றத் தாழ்வைப் போற்றி வளர்த்து சமூகம் குடியாண்மையாவதை விரும்பாதவர்கள் வரலாறு புராண கதைகள், கடந்து போன காலம் ஆகியவற்றை புகழவும், மேன்மைப்படுத்தவும் துவங்கினர். காரணம் அந்த புராணக் காலத்திலும் வரலாற்றுயுகங்களிலும் அவர்கள் மாபெரும் வெற்றியாளர்களாகவும், தலைவர்களாகவும் இருந்தனர். இதே காரணத்தால் தான் இந்திய கற்றறிந்தார் வகுப்பும் இன்று பின்நோக்கிச் சென்று கடந்த காலத்தை வழிபடுகின்றனர். சூத்திரர்கள் ஆதி சூத்திரர்களின் அடிமைநிலை, துன்ப துயரங்களைப் பேசிய- வருணாசிரம அமைப்பைக் கண்டித்து, சமூக, பொருளியல், அரசியல் மறுகட்டமைப்பு கோரிய- பூலே, ஆகார்கர், கோகலே, ராணடே, போன்றோர் எதிரிகளாக அறிவிக்கப்பட்டு எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டனர். கற்றறிந்த வகுப்பு வெற்றி பெற்றது. இந்திய விடுதலைப் போராட்டத்தையே ஒரு சமநிலையற்ற சண்டையாக மாற்றி மற்ற இயக்கங்களையும் இரண்டாம் நிலைக்கு தரம் தாழ்த்தி விட்டனர்.

ஐரோப்பாவில் இதற்கு எதிர்மாறாக நடைபெற்றது. அங்கு புதிய சிந்தனை, புதிய ஆய்வு, புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புதிய உற்பத்தி சாதனங்கள் போன்றவற்றை நிறுவுவதற்காக ஒடுக்குமுறை மத அரசியல் அதிகார மையத்தை எதிர்த்து மக்கள் போராடினர். அவர்கள் மரணத்தையும், மரண தண்டனையும் தழுவி ஏற்றனர், மக்கள் திரள் இயக்கங்களும் மக்கள்திரளின் வாழ்க்கையும் அவர்களின் ஈகத்தால் (தியாகத்தால்) முன்னேறின. ஏன் இந்த வேறுபாடு? பிறப்பு, மதத்தால் மேல்நிலையை வழங்கிய ஒரு சாதி அமைப்பின் அடிப்படையில், தானே உயர்ந்ததாகவும் சிறப்புமைகள் கொண்டதாகவும் ஐரோப்பிய கற்றறிந்தோர் வகுப்பு காட்டிக் கொள்ளவில்லை. அரசியல் அதிகாரம், சமூக மேல்நிலை அல்லது செல்வம் ஆகிய எதைப் பெறுவதிலும் அவர்களுக்கு எந்தச் சிறப்பு சலுகையும் அவர்களின் மதத்தால் அளிக்கப்படவில்லை. அவர்களின் சொந்தத் திறமையின், சாதனைகளின் அடிப்படையில் அவர்கள் உயர் நிலை பெறமுடியும். அதற்கு மாறாக இந்தியக் கற்றறிந்தோர் வகுப்பு கடந்த காலத்தையே விரும்பினர். காரணம் அவர்களின் முன்னோர்களுக்கு ஒரு நாயகனின்-ஒரு கடவுள் அல்லது ஒரு மிகப் பெரும் கடவுளின் அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்ததுதான்.

எந்திரயுகம் அதன் அறிவியல், தொழில் நுட்பம் காரணமாக தற்கால நிலைமையில் அக்கடந்தகால அந்தஸ்தின் உண்மையான மதிப்பீட்டை வெளிப்படுத்தி உழைப்பாளிகளுக்குத் தனிச்சலுகை தருகின்றது. ஆனால் இந்திய மேல்மட்ட சிந்தனையாளர் தற்காலத்தை அதன் புரட்சிகரமான ஆற்றல் வளத்தோடு ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

இங்குள்ள அறிவார்ந்தவர்கள் புதிய அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் அதன் உற்பத்தி சாதனங்களுடன் விரும்புகின்றனர். காரணம் இவைகள் அதிகாரத்தையும் வலிமையையும் அடைய அவர்களுக்கு உதவுகின்றன. ஆனால் அதன் புரட்சிகரமான ஆற்றல் வளத்தை மட்டும் சொந்தம் கொண்டாட விரும்புவதில்லை. அவர்கள் சமூக உடமையை ஏற்றுக் கொள்வதில்லை. மீண்டும் வருணாசிரம அமைப்பை மேற்கொள்ளவே விரும்புகின்றனர். சீர்திருத்தம் பற்றிக் கவலைக்கொள்வதில்லை. ஒருசிலரை மட்டும் மேல் நிலைக்குக் கொண்டு வருவதற்காக வேதகாலத்து அதிகார அமைப்பையே திணிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. வகுப்பு, சாதி, மற்றும் வருணங்களின் வேறுபாட்டை தனிசிறப்புகளை அழித்து சமத்துவத்தை நிறுவக்கூடிய ஒரு முழுபுரட்சி போன்ற எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இதனாலேயே இவ்வறிவார்ந்தவர்கள் முழு புரட்சிகளாக வளர்வதற்கு நம்பிக்கையூட்டும் சமூக குடியாண்மைக் கான போராட்டங்களைத் தடுத்தனர். விடுதலைப் போராட்டத்திலிருந்து அப்போராட்டங்களை அவர்கள் தனிமைப்படுத்தி பழமைவாதத்தின் துணை கொண்டு தங்களின் சொந்த வகுப்பு மற்றும் சாதி நலன்களுக்காக இந்திய விடுதலைப் போராட்டத்தையே வெற்றிகரமாக திசை திருப்பிவிட்டனர்.

நாட்டு விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட நவீன இந்திய இலக்கியம் அச்சமூக சூழ்நிலையின் அத்தகைய போக்கின் உற்பத்திப் பொருளாகும்.

நாட்டு விடுதலைப் போராட்டம், சமூக - அரசியல் - பொருளியல் மற்றும் பண்பாட்டு சீர்திருத்தங்களுக்கான போராட்டமாக வளர்வது தடுக்கப்பட்ட போது டாக்டர் அம்பேத்கர் சமூக புரட்சி மற்றும் குடியாண்மைக்கான தனது இயக்கத்தை துவக்கினர். அது வாழ்க்கையின் இன்றியமையாத வெளிப்பாடாகவே இருந்தது. கடந்த கால சமூகப் போராட்டங்கள் நேரிட்டதைப்போன்ற எதிர் வினையையே இந்த இயக்கமும் சந்திக்க நேர்ந்தது. அவற்றைப் போலவே இதுவும் கூட ஒரு நாடு தழுவிய இயக்கமாக மாறிவிடாமல் இருப்பதற்காக பொது நீரோட்டத்திலிருந்து இதையும் தனிமைப் படுத்தும் முயற்சி நடைபெற்றது. பாபா சாகேப்பிற்கு இது தெரியும். இருந்தும் போராட்டத்தை துவக்கினார். தானே உண்மையாக பட்டறிந்து துன்பதுயரங்களை உணர்ந்திருந்ததால் போராட்டத்தை துவக்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அவரே ஒரு பெரும் ஊழித்தீயாக மாறினார். ஆழமான பவுணர்வும் அடங்காச் சீற்றமும் இணைந்த போது ஒரு புரட்சி பிறந்தது. ஒரு புதிய யுகம் துவங்கியது.

பாபாசாகேப் பேசத் துவங்கினார்; தனது போராட்டத்தைத் துவக்கினார். பல ‘பரமநிலை’கள் அழிந்தன. ஏழை, எளிய ஒடுக்கப்பட்டோர் நல் வாய்ப்பற்ற மக்கள் அதற்கு முன்பு அழுதேயிராத, போராடியேயிராத நலிந்த மக்கள் தங்கள் தலை மீதிருந்த நசுக்கும் சுமைகளைத் தூக்கியெறிந்து போராட்டத்தில் சேர்ந்து “எங்கே எதிரி?” என்று கூவினர். எதி உண்மையில் இந்தியத்தன்மை முழுமையிலும் ஊடுருவி நீக்கமற நிறைந்திருந்திருந்தான். மரபுகளிலும், வழி முறைகளிலும் கட்டுமானத்திலும், அமைப்பிலும், நூல்களிலும், உள்ளங்களிலும், சொற்களிலுமாக மறைந்திருந்தான். மறுபுறத்தில் நண்பர்களோ, தேசிய இயக்கத்தில் தோற்கடிக்கப்பட்டுக் கிடந்தனர்.

சமூகவுடைமையர்களும், பொதுவுடைமையர்களும், தேசிய இயக்கத்தை தொழிலாளர் மையம் கொண்டதாக ஆக்க முயன்றனர். வெற்றிபெறாமல் போயினர். இயக்கம் முழுமையாக நிலவுடைமை மற்றும் முதலாளித்துவ சக்திகளின் கட்டுபாட்டிற்குள் இருந்தது. மனேவேந்திரநாத் போன்ற பெரும் புள்ளிகள் அடங்கிய புரட்சியாளர்கள் வீதியோரம் வீழ்த்தப்பட்டனர். இக்கட்டத்தில்தான் முதல் முறையாக சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் இந்திய இலக்கியத்தில் நாயகர் துணை நாயகர் ‘அந்தஸ்தைப்’ பெற்றனர். எப்படியாயினும் அவர்கள் அம்பேத்கர் வழிச் சிந்தனைகளை வெளிப்படுத்தவில்லை. அவர்களால் முடிந்திருக்காது. காரணம் நாட்டுப்பற்று இயக்கம் வருணாசிரம அமைப்பை ஒதுக்கியிருக்கவில்லை. சாதிய அமைப்பு முழு சமூகத்தின் வாழ்க்கையை எங்கும் ஊருடுவியிருந்தது. சிந்தனையாளர் வகுப்போ மதத்திற்கு கட்டுப்பட்டிருந்தது. முதலாளி வகுப்பு புரட்சியை வழிநடத்த முடியாது. காரணம் அது நிலவுடமை மேட்டுக் குடியினருடன் உறவு கொண்டு கைகோர்த்து நின்றிருந்தது.

அறிவார்ந்தவர்கள் முதலாளித்துவ வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்கள் புனைவுநிலைச் (தொன்ம மதிப்பீடுகள்) சிந்தனை மற்றும் உளப்பாங்கு ஆகியவை இருக்கும் அமைப்பிற்கே துணைபோகக் கூடியவர்களாக இருந்தனர். வருணமும் சாதியும் ஒரு தனித்தன்மையான குணாம்சம்தைக் கொண்டிருந்தன. வறுமைமிக்க ஏழைகளிடமும் சரி மாபெரும் செல்வந்தர்களிடமும் சரி வகுப்பு உணர்வை அவை வளரவிடாமல் தடுத்து வைத்தன. அதேபோன்று ஊழ்வினை கோட்பாடு போன்ற இந்துமத தத்துவார்த்த கருத்தாக்கங்களும் கூட வகுப்பு உணர்வை தளர செய்தே வந்தன. ஆகையால் அறிவியல் கண்ணோட்டத்துடன் பகுத்தறிவுப் போக்கைக் கொண்டிருந்த கலகக்காரனான அம்பேத்கரிய நாயகனோடு ஒத்துப் போவதை இந்து எழுத்தாளர்கள் கடினமானதாக உணர்ந்தனர். மறுபக்கம் கர்ணன், ஏகலைவன் போன்ற நாயகர்கள் அவர்கள் உள்வாங்கியிருந்த பண்பாடு மற்றும் புனைவு நிலை (தொன்ம) மதிப்பீட்டு கட்டுமானத்துடன் முரண்படாமல் ஒத்து நின்றனர்.

கர்ணன், ஏகலைவன், போன்ற நாயகர்கள் உண்மையில் வருணாசிரம அமைப்பிற்கு இசைவான போக்கையே கொண்டிருந்தனர். அவர்கள் துணிவுமிக்கவர்கள்தான்; ஆனால் அந்த அமைப்பில் அவர்களுக்குரிய இடம் மறுக்கப்பட்டிருந்ததால் துன்பத் துயரங்கள் கொண்டதாக மட்டுமே அவர்கள் வாழ்க்கையைப் பார்த்தனர். மதத்தால் அவர்கள் மறுக்கப்பட்டிருந்ததால் இந்த நாயகர்கள் விதியின் கைகளில் விளையாட்டு பொம்மைகளாயினர்... இத்தகைய நாயகர்கள் ஏராளமான துன்பத் துயரங்களை, உயர்ந்த நாடகத்தை, முரண்பாட்டின் ஆழ அகலத்தை, ஆழமான அழகியல் இன்பத்தை வழங்குவர். அவர்கள் மிகசுலபமாக ஒரு ஊழ்வினைக் கோட்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவார்கள். இது வகுப்பு சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப சதி செய்துகொண்டு போவதற்காக மதத்திற்குள் புகலிடம் தேடுவதைத் தவிர வேறில்லை. இத்தகைய நாயகன் படிப்பவரை வாழ்க்கை என்பதே துன்பத் துயரத்தை தவிர வேறில்லை என்று நம்ப வைக்க தொடர்ந்து முயற்சிப்பான். படிப்பவரும் நம்பத் துவங்கிவிடுவார். இத்தகைய நாயகனின் படப்பிடிப்பு தனது சொந்த பட்டறிவையே மீண்டும் உணர்ந்து இன்ப மடையும் வாய்ப்பை படிப்பவர்க்குத் தருகின்றது. அத்தகைய கலைப்படைப்பு இந்து புனைவுநிலை (தொன்ம) மதிப்பீடுகளையும் உள்ளுணர்வையுமே வெளிப்படுத்துகிறது. அதன் தோற்றம் எவ்வளவுதான் நவீனமாக இருந்தபோதும் மேற்குறிப்பிட்ட முன்மாதிகளை ஒத்துப்போகும் இலக்கியம் பிற்போக்கானது.

இந்து மதிப்பீட்டுக் கட்டமைப்பை உள்வாங்கிக் கொண்ட எழுத்தாளர்கள் பூலே, அம்பேத்கரின் தத்துவக் கோட்பாடுகளிலிருந்து பெறப்படும் சிந்தனைகள், கதை, கருத்துகள், நாயகர்கள், ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். அத்தகைய ஒரு வாழ்க்கை வடிவத்தை வெளிப்படுத்தும் திறன் அவர்களுக்கு இல்லை. மார்க்சிய எழுத்தாளர்களும் கூட இந்து புனைவுகளை (தொன்ம) மதிப்பீடுகள் மற்றும் உள்ளுணர்வுகளோடு ஒத்துபோகும் நாயகர்களுக்கே முதலிடம் தருகின்றனர். பூலே அம்பேத்கர் கோட்பாடுகளின் அடிப்படையில் மாதிரியாக்கப்பட்ட நாயகன், உண்மையில் சாதி மதம் மற்றும் அவைகளின் மீது சார்ந்திருக்கும் பொருளியல் சமூக அமைப்புகளை ஒதுக்கித்தள்ளி தன்னிச்சையாகவே குடியாண்மை சமூகவுடைமையை ஏற்றுக்கொள்கிறான். ஏற்றத் தாழ்வை கடுமையாக எதிர்ப்பவனாக இருப்பதால் அவன் ஏற்றத்தாழ்வின் மீது அமைந்த ஒரு சமூக அமைப்பிலிருந்து பிறப்பிக்கப்படும் தெய்வீக பிறவிகள், அவதாரங்கள் அதிமனிதபிறவிகள் போன்ற கருத்தாக்கங்களை எதிர்த்து போடுகிறான்.

பூலே, அம்பேத்கர் தத்துவங்கள் இயல்பாகவே இக் குடியாண்மைச் சமூகவுடைமை என்ற தொலை நோக்கிற்கு இட்டுச் செல்கின்றன. மேலே விவரிக்கப்பட்ட வகையான நாயகன் மார்க்சிய எழுத்தாளர்களை கவர்ந்தாலும் அத்தகைய ஒரு நாயகனை விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் முழுமையாக புரிந்து கொள்ள தவறிவிட்டனர் என்பதுதான் உண்மை. இதற்குக் காரணம் இந்த எழுத்தாளர்கள் சாதி அமைப்பிற்கு துணை போய்விட்டார்கள் என்பதினால் அல்ல. அவர்கள் பெற்ற மதிப்பீட்டு கட்டமைப்பும் வகுப்பு வரையறைகளும் எவ்வளவு ஆழமான அகழியை உருவாக்கியுள்ளன என்பதையே அது வெளிக்காட்டுகின்றது. இக்காரண விளக்கமே முற்போக்காளர்களாகவும் சமூக அக்கறையுள்ளவர்களாகவும் இருந்த எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் பற்றி ஏன் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள் என்பதை தெளிவாக்குகின்றது. இந்திய சமூக சீர்திருத்தத்தின் வரலாறு விடுதலை போராட்ட வரலாற்றை விடவும் மிகப்பெரியதாகும். விடுதலை என்னவோ வந்தது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான சமூக பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன. நாடு குடியாண்மையை ஏற்றுக் கொண்டது.

தீண்டாமையை அரசியல் அமைப்பு சட்டப்படி நீக்கியுள்ளது. அதனால் ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான மதம் மற்றும் சமூக கட்டமைப்பை செல்லாததாக்கி உள்ளது. எனினும் இந்துத்துவத்தை அரசியல் அமைப்பு ஆற்றல் இழக்க செய்துள்ளது என்னும் உண்மை ஒருபுறம் இருந்த போதிலும் தீண்டாமையும் ஏற்றத்தாழ்வும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதுவே எல்லாம் அல்ல. இன்று இந்தியாவில் குடியாண்மையும் வருணாசிரமும் கூடியே வாழ்கின்றன. அதே போன்றுதான் பீம்ஸ்மிருதியும் (டாக்டர் அம்பேத்கரின் கருத்தியலும்) மனுஸ்மிருதியும் சேர்ந்தே நிலவுகின்றன. இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு வாழ்வியல் முறையை வாழ்ந்து வருகின்றது. ஒன்று இருபதாம் நூற்றாண்டினது மற்றொன்று இடைக்காலத்தைச் சேர்ந்தது. அது இருவேறு வாழ்க்கை வடிவங்களாக இரண்டு சமூக முறமைகளாக பிளவுண்டு கிடக்கின்றது.

ஏன் இந்நாடும், மக்களும் தங்களையே இப்பிளவு களுக்கிடையில் வைத்திருக்க வேண்டும்? சாதிப் பிரிவினைகளோடு குடியாண்மை எப்படிச் சேர்ந்து வாழ முடியும்? அவைகள் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதால் அப்படி வாழ முடியாது. வருணாசிரம அமைப்பிற்கும் இடம் தரும் குடியாண்மை ஆற்றல் மிக்கதாக இருக்க முடியாது. ஆனால் இந்தியாவில் அது சேர்ந்து இருக்கிறதென்றால்- அது இந்தியக் குடியாண்மை வெறும் வடிவத்தில் மட்டுமே இருக்கின்றது-உள்ளடக்கத்தில் அது முதலாளித்துவக் குடியாண்மையாகவே உள்ளது என்பதே பொருள். முதலாளித்துவக் குடியாண்மைதான் பொருளியல், மதம் மற்றும் இனம் சார்ந்த ஏற்றத்தாழ்வுக்கு இடம் தரும்; தீண்டாமையும் சாதியமும் பரந்துபட்ட மக்களின் வாழ்வை அழித்துக் கொண்டுள்ளது என்னும் உண்மையை கண்டும் அது மன உறுத்தலே கொள்ளாது.

முதலாளித்துவக் குடியாண்மை சட்டங்களை இயற்றுமே தவிர நடைமுறைப்படுத்த நாள் கடத்திக் கொண்டே போகும். அது தீண்டாமையால் எந்த பாதிப்பையும் அடையாது. தனி மனித ஆளுமையின் அழிவிற்கும் ஆளாகாது. மேலும், இந்திய முதலாளித்துவம் எந்தவொரு சமூகத் தேவையினாலோ வளர்ச்சியினாலோ தோன்றியதல்ல, அல்லது உற்பத்திச் சாதனங்களின் உடமைக்கான போராட்டத்தின் வந்ததுமல்ல அல்லது புதிய அறிவியல், தொழில் நுட்பங்களுக்காக போராடிய எந்த வரலாற்று போலிருந்தும் விளைந்ததுமல்ல. மாறாக செல்வத்தையும் அதிகாரத்தையும் முற்றுடைமையாக்கிக் கொள்ள மதத்தால் சிறப்பான சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்பட்டிருந்த வகுப்பு வாரிசுரிமையால் பெற்ற செல்வத்தைக் கொண்டு இயந்திரங்களை வாங்கியும், தொழிற்சாலைகளைக் கட்டி பெருக்கியும் லாபம் பெற முடிந்தது. எந்திரயுகத்தில் இவ்வகுப்பு அக்காலகட்டத்தின் தேவைக்கேற்ப தன்னெழுச்சியாக எந்தத் தலைமையையும் வழங்கவில்லை. பாட்டாளிய வகுப்பு, சாதி மற்றும் மதம் என்னும் பிரிவுகளால் பிளவுண்டு கிடக்கும்போது ஒரு வகுப்புப் போரைத் தொடுத்து, ஒரு வகுப்புகளற்ற சமுதாயத்தை அமைப்பது கடினமே. இக்காரணத்தால் மதத்தால் பிளவுண்ட ஒரு சமூகம் முதலாளித்துவத்திற்குத் தேவைப்படுகின்றது.

நாட்டு விடுதலைக்கு பிறகு முதலாளித்துவம் குறிப்பிடும்படியான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சிறிய சண்டைகளில் வெற்றி பெறும் அளவிற்கு தனது அதிகாரத்தையும் வளர்த்துக் கொண்டுள்ளது. ஆனால் அதே வேதத்தில் சமூக ஏற்றத்தாழ்வு மறைந்து போகவில்லை. முரணாக வறுமையும் சொத்துடைமையும் எதிரெதிர் எல்லைக்கே சென்றுள்ளன. முதலாளித்துவத்தின் மூலமாக ஏற்படும் பொருளாதார வளர்ச்சி சமூகப் பிரச்சினைகளைக் கட்டாயம் தீர்க்கும் என்ற நிலையில்லை. அதற்குமாறாக முதலாளித்துவ வளர்ச்சியானது வரலாறு நெடுக நாம் கண்டதைப்போல் போர், நாடுகளை காலனியமயமாக்கல், பாசிச ஒடுக்கு முறைக்கு வழிவகுக்கின்றது. இம்முதலாளித்துவம் தான் மனித இனத்தின் மீதும் அதன் வாழ்க்கையின் மீதும் எண்ணற்ற போர்களைத் திணித்தது. நாடுகளை காலனிகளாக மாற்றுவதற்கும் சந்தைகளைப் பிடிப்பதற்கும் போர்களை தொடுத்தது. அதன் கருத்தியலுக்கு எதிராக எழுந்த மெய்யியல்களையும் இயக்கங்களையும் ஒடுக்க போர்களை நடத்தியது.

இவ்வாறு இலாப நோக்குடன் மட்டுமே கூடிய பொருளாதார வளர்ச்சி உறுதியாக சமூகப் பிரச்சினைகளை தீர்க்கவே செய்யாது. என்றாலும் சமூக இயக்கங்களும் கூட தாங்களாகவே தீண்டாமையின் சிக்கல்களைத் தீர்த்து வைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் தனது சொந்த சமூகக் கண்ணோட்டங்களை வெளிப்படுத்தும்போதே பின் வரும் பிரச்சினைகள் குறித்தும் கூட விவாதிக்கின்றது: பொருளியல், அரசியல் இயல்பு எப்படியிருக்க வேண்டும்? அதிகாரத்துவம் எவ்வாறு அமைய வேண்டும்? இப்பிரச்சினைகளையும் அவற்றிற்கு அடித்தளமாக இருக்கும் தத்துவார்த்த சிக்கல்களையும் கூட அது விவாதிக்கின்றது. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றது. காரணம் அவைகள் ஒடுக்கப் பட்டோரின் வாழ்வோடு நேரிடையாக தொடர்பு கொண்டுள்ளன.

அத்தகையதொரு விரிவான அனைத்தும் சார்ந்த கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை இலக்கியம் ஏன் மேற்கொள்ள வேண்டும்? உண்மையாகவே ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்திற்கு அது மிகவும் தேவைப்படுகிறது. சமூக அக்கறை கொண்டவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் எழுத்தாளர்களுக்கு, ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கையை பகராண்மைப்படுத்துவதாக கூறிக்கொள்வோருக்கு அத்தகையதொரு பரந்த கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு அது மிகவும் தேவைப்படுகின்றது.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் மாபெரும் புனைவு மயக்க ஆதாரமாக விளங்குகின்றார். அவரே முன்மாதிரி. அவரே புனைவு நிலைக்கு வரையறை. ஒடுக்கப்பட்டோர் தன்மானத்திற்கான கருத்துருவம். அவரே அதன் அதி உன்னத தொன்மப் படிவம். இந்த எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் அழமாக சிந்தனைத் தெளிவைத் தந்தவர் அவரே. அவைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடுத்தவர் அவரே. இந்திய குடியாண்மைக்கான ஒரு முன்மாதிரியை நிறுவுவதற்காக, கடவுள் மறுப்பு, நாத்திகத்தின் மெய்யியலான ஆற்றல் வளமும் மனித நேய கண்ணோட்டமும் கொண்ட மெய்யியலான பௌத்தவியத்தை மறு சீரமைப்பு செய்தார். நிலம், வணிகம், தொழிலை தேசியமயமாக்கவும் அவர் வாதாடினார். வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளின் மீதும் தன் கருத்துக்களை முன்வைத்து அவற்றிற்கு ஆதரவாக போராட்டங்களையும் தொடுத்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் திரளின் சிக்கல்கள்/பிரச்சினைகள் தாம் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் சிக்கல்களும் கூட.. இவ்விலக்கியம் பொதுமக்களோடு ஒடுக்கப்பட்ட (தலித்) மக்கள்திரளோடு தன்னையே இணைத்துக் கொண்டுள்ளது. அதனால், அது நிறுவனமாக்கப்பட்டு விட்டவைகளை எதிர்க்கின்றது. அதன் தொடர்ச்சியாக அது இடதுசாரித்தன்மை கொண்டதாகின்றது. இவ்வாறாக அது இந்தியாவின் எதிர்காலத்தையே வடிவமைக்கும் வல்லமை வாய்ந்தது.

எதிர்ப்பு நிலையும் ஏற்பு நிலையும்: வருணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவம் இந்தியாவின் பெரிய மதம். பௌத்தவியம் நிலைபெற்றிருந்த போதும், இந்துத்துவமே இந்திய சமூகத்தின் மீதும் அதன் பண்பாட்டின் மீதும் அதாவது மக்கள் திரளின் உளப்பாங்கின் மீது மிகவும் முகாமையான/முழுமையான ஆளுமையைச் செலுத்தி வருகின்றது. இந்தியாவின் ஒரு பெரிய பெரும்பான்மை மக்கள்தொகை இந்துமதத்தைப் பின்பற்றி வருகின்றது.

வேதம், உபநிஷத்துக்கள் மற்றும் பல்வேறு மதம் சார்ந்த, பகுதி மதம்சார்ந்த புராணவியல் நூல்களிலிருந்து பல கருத்தாக்கங்கள் உண்மையாக, மெய்மைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்நூல்களில் வரும் கடவுள்களும் அரக்கர்களும் பெரும்பாலான இந்தியர்களால் முறையே வழிபடவும் வெறுக்கப் படவும் செய்கின்றனர். இந்துக்களே இந்தியாவின் பெரும்பான்மையோர். ஆகையினால் அரசு ஏந்திரம், பொருளியல் மற்றும் பண்பாட்டு அமைப்புக்கள் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. இந்திய முசுலிம்கள் தங்களின் தனி அடையாளங்களைக் காத்துவந்த போதிலும் அவர்களின் மனப்போக்கு என்னவோ இந்துநிலை சார்ந்ததே. மேலும் எல்லாம் வல்ல இறைக்கோட்பாடு, ஆன்மா, சொர்க்கம், நரகம், பாவ புண்ணிய நடவடிக்கைகள் ஆகிய அனைத்துமே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே உண்மையில் இவ்வகையில் இந்தியாவில் உள்ள மற்ற மதங்களும், இந்துத்துவத்திற்கு உறவுநிலை கொண்டவைகளாகவே உள்ளன. இந்துக்களும் இந்து அல்லாதவர்களும் ஒரே வகையான உளப்பாங்கையே கொண்டுள்ளனர். அதன் விளைவாகவே, அவர்களின் இலக்கியமும் கூட ஒரே வகையானதே, இந்துக்கள் உளப்பாங்கு புனைவுநிலை மதிப்பீட்டு கட்டமைப்பு ஆகியவை மற்றவர்களின் இலக்கியத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட குடியாண்மை சமூகவுடமை நவீன காலகட்டத்தின் தத்துவமாகும். இந்திய உளப்பாங்கு மற்றும் புனைவுநிலை மதிப்பீட்டு கட்டமைப்பில் இந்த மெய்யியலின் வேர்கள் கால்கொண்டிருந்ததில்லை. திருத்தொண்டர்களின் இலக்கியமும் முன் மாதிரி வடிவங்களில் எந்த பொருத்தமான மாற்று நிலைபாடுகளையும் கூட கொடுத்ததில்லை. மறுபுறத்திலோ ஃபாசிசவெறி, வருணங்களின் ஆதிக்கம், தனிமனித வழிபாடு, செருக்கு, பழி சுமத்தல், காழ்ப்புணர்வு, வெறுப்புணர்வு - ஆகிய அனைத்தும் இலக்கிய மற்றும் அறிவார்ந்தவர் ஆதரவு பெற்றிருக்கின்றன.

குடியாண்மை சமூகவுடமை, புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் புரட்சிகரமான தற்காலம் ஆகியவை ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் உட்சாரத்தை உருவாக்குகின்றன. எனவே அது கடந்தகால மரபுகளைச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒடுக்கப் பட்டோர் இலக்கியத்தின் மரபுவழியும் புனைவுநிலை (தொன்ம) மதிப்பீட்டு ஆக்கமும் புரட்சிகர உலக இலக்கியத்தில் கண்டெடுக்கப்பட வேண்டும். சாதாரண எளிய மனிதனை கதைமாந்தனாக்கும் இலக்கியமே சமூகவுடமையை முன்வைக்கும் இலக்கியமே ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்திற்கு முன் மாதிரியாகும்.

ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம்: ஒரு மனிதப்பிறவி பிறப்பிலேயே ஒடுக்கப்பட்ட (தலித்) புறக்கணிக்கப்பட்ட தீண்டத்தகாத பிறவி இல்லை. இந்த அமைப்புதான் அவனை அந்நிலைக்குத் தாழ்த்துகின்றது. அமைப்பு மாறும்போது மனிதப்பிறவியும் தனது மனித உட்சாரத்தை திரும்பப் பெறுகின்றது. ஆகையால், மனிதப்பிறவியை படம் பிடித்துக்காட்டும் இலக்கியம் உண்மையில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியமே இல்லை. இதை உணர்ந்த பிறகும் கூட ஒரு பெரும்பான்மை இலக்கியப்போக்கு எல்லா சீயத்தன்மையோடும் தன்னை ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் என்று அழைத்துக் கொள்கிறது. சாதியால் வழி நடத்தப்படும் சமூகமும் அதன் இலக்கியமும், ஒடுக்கப்பட்டவனை (தலித்) இழிவானவன், புறக்கணிக்கத்தக்கவன், குற்றம் புரிபவன், கீழானவன், கடந்த பிறவியில் செய்த தீவினைகளின் காரணமாக பலியானவன் என்றே பார்க்கின்றன. அவன் இப்பிறவியில் துயரத்தையே கொள்பவன், ஏழை, மானமில்லாதவன், வரலாறு இல்லாதவன், கோயில்களிலோ, புனித நூல்களிலோ மதிப்பையும் மரியாதையையும் பெறமுடியும் என்ற நம்பிக்கையை என்றுமே கொண்டிருந்திராத முன்னோர்களைக் கொண்டவன் என்றே பார்க்கப் படுகிறான்.

இது உண்மையில் இந்திய சமூகம் முழுமைக்குமான துன்பதுயரம், நோவு-நலிவு, அடிமைத்தனம், மரியாதைக்குறைவு, புறக்கணிப்பு, இழிவாகும். ஆனால் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் மட்டுமே அந்தச் சுமையை தன் தலையில் சுமந்து கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் ஒடுக்கப்பட்டோர் தன்மையை (அதாவது, சமூக நிலையை) ஏற்றுக் கொண்டுள்ளது, புத்தர் மக்களின் துன்பத்துயரங்களை ஏற்றுக்கொண்டதைப்போல அல்லது அனேக புரட்சியாளர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளானோரின் நிலையை ஏற்றுக் கொண்டதைப் போல. பகற்கனவும், நிறுவனமாக்கப்பட்ட சமூக அமைப்பும் அதற்குச் சொந்தமான எல்லாவற்றையும் பற்றிய படப்பிடிப்பும் (அத்துடன் அதிகாரமும் இணைக்கப்பட்டிருப்பதால்) அழகானதாகவே தோற்றம் அளிக்கலாம். ஆனால் இந்த நிறுவனமாக்கப்பட்ட சமூக அமைப்புதான் பெண்களையும் சூத்திரர்களையும் அடிமையாக்கி அவர்களைத் தீண்டத்தகாத நிலைக்குத் தள்ளி வைத்திருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. கூடாது. டாக்டர் அம்பேத்கர் சமூகப்புரட்சியின் உட்சாரமாகவே இருந்தார். ஒடுக்கப்பட்டோரின் இலக்குக்கு மாதிரியாக விளங்கினார்.

அவர்களின் தொன்ம (புனைவு நிலை) மதிப்பீட்டு கட்டமைப்பிற்கு கருத்துருவமானார். மகர் என்னும் கீழ்சாதியினராக இருக்கின்றார் என்பதால் மட்டுமே ஒடுக்கப்பட்டோருக்கு அவர் தலைவராகி விடவில்லை. அவர்கள் படும் துன்பதுயரங்களை, தீண்டாமைத் தொல்லையை, சாதியப் பாகுபாடுகளைக் களைவதற்காகவே அவர் அவர்களின் தலைவரானார். பிறப்பு, சாதி, வருணம், வகுப்பு ஆகியவற்றைக் கொண்டு பாகுபாடுகளை வலிமை கொள்ளச் செய்யும் முற்பிறவியின் பாவபுண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையிலான கருத்தியலுக்கு மதிப்பளிக்காத காரணத்தால் அவர் ஒரு ‘ஒடுக்கப்பட்டவராக’ (தலித்தாக) மாறிவிடவில்லை. அவர் ஒரு மாபெரும் புரட்சிகரப் போராளி. ஒரு மாபெரும் கற்றறிந்த மேதை, இருந்தும் அவர் தன்னையே தீண்டத்தகாத ‘தலித்’ (ஒடுக்கப்பட்டவன்) என்று அழைத்துக்கொண்டார்.

இதே காரணத்திற்காகத்தான் இன்றைய மற்றும் நாளைய எழுத்தாளர்கள் மாபெரும் உலக இலக்கியங்களின் மரபில் வைத்து எண்ணப்படும் தகுதியுள்ள படைப்புகளை ஆக்கும் எழுத்தாளர்கள் தங்களை ஒடுக்கப்பட்ட (தலித்) எழுத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். இதுவரை அங்கீகரிக்கப் பட்ட இந்திய இலக்கியம் இந்து இலக்கியம். ஆனால் புதிய அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக் கொள்வதற்கான புரட்சிகரமான ஆற்றலை பெற்று ஒரு முழுமையான மாற்றத்தைக் கொண்டுவரப்போவது ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியமே. ‘தலித்’ (ஒடுக்கப்பட்டோர்) என்பது முழுப்புரட்சிக்கான புதியப் பெயர்: அது புரட்சியின் அவதாரம்.

புதுவிசை, ஏப்ரல் - ஜுன் 2006

Friday, March 23, 2018

அர்ஜூன் டாங்ளே அவர்களுடன் நேர்காணல் - புதியமாதவி

மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க ஆளுமை அர்ஜூன் டாங்ளே. 1945 ல் மும்பையில் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி. நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய தலித் சிறுத்தைகள் (தலித் பேந்தர் ) அமைப்பின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர். தற்போது பாரதீய குடியரசுக் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர். இவரது நூல்கள்:

1. Chhavani Halte Ahe- போர்க்குற்றத்தின் பயணம் -கவிதைகள் ( 1978 ல் மாநில அரசின் விருதினைப் பெற்றது )

2. Hi Bandhavarchi Manse - ஏ... உறவுகளே... – சிறுகதைகள்

3. Dalit Sahitya, Ek Abhyas- தலித் சமூகத்திற்கு ஒரு பாடம் , விமர்சனம்

4. Dalit vidroha- - தலித்துகளின் எதிரி, இலக்கியம் மற்றும் அரசியல்சார் கட்டுரைத் தொகுப்பு

அர்ஜூன் டாங்ளே, தனது ஆக்கங்களை வெளியிட்டுக் கொள்வதை விடவும், தலித் இலக்கியத்தை உலகளாவிய வாசிப்புக்குகொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனாலேயே அவர், மராத்திய தலித் ஆக்கங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தொகுப்புகளாக பதிப்பித்து வருகிறார். டாங்ளே மொழிபெயர்த்து, தொகுப்பாசிரியராயிருந்து வெளியிட்ட நூல்கள்:

1. A Corpse In The Well : (translations From Modern Marathi Dalit Autobiographies) 1992
2. No Entry For The New Sun: Translations From Modern Marathi Dalit Poetry
3. Homeless In My Land: Translations From Modern Marathi Dalit Short Stories
4. Poisoned Bread: Translations From Modern Marathi Dalit Literature

மும்பையில் வசிக்கும் தோழர் புதியமாதவி அவர்கள், புதுவிசைக்காக திரு அர்ஜுன் டாங்ளே அவர்களைச் சந்தித்து உரையாடியதிலிருந்து இந்நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது.
I

உங்கள் எழுத்துகள் எங்கள் தமிழுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவை. குறிப்பாக தலித் இலக்கிய வட்டாரத்தில் உங்களை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. நாங்கள் அறியாத உங்கள் இளமைக் காலம் பற்றி அறியவிரும்புகிறோம்.

அர்ஜூன் டாங்ளே: நம்ம தாராவி அருகிலிருக்கும் மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில்தான் நாங்கள் குடியிருந்தோம். என் அப்பாகாட்டன் மில்லில் வேலை செய்தார். 15.6.1945 ல் நான் பிறந்தேன். நாங்கள் 6 பேர் அண்ணன் தம்பிகள். தாராவி சால்களில் எனக்குநண்பர்கள் உண்டு. மும்பை துறை முகத்தில் வேலை செய்துகொண்டே நான் மர்ஸி தயாநந்த் கல்லூரியில் முதுகலை படித்தேன்.காலையில் கல்லூரி. 11 மணிக்கு மேல் வேலை. இதற்கிடையில் கவிதை, கதை என்று எழுத ஆரம்பித்தேன். என் தாய்வழி மாமாசங்கர் நாராயண் பவார் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தான் மும்பையில் பாபாசாகிப் அம்பேத்கரின்போராட்டங்களும் இயக்கமும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு இயக்கங்களின் தாக்கங்களுடன் தான் என் இளமைக்காலம்.

ஆனால் பொதுவுடமை இயக்கமும் அம்பேத்கரிய இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானதாகத்தானே நிறுத்தப்படுகிறது? இரண்டுக்குமிடையே உள்ளது பகைமுரணா ? நட்பு முரணா?

இரு இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரணியில் நிற்பதாகச் சொல்லப்படும் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடில்லை. 1936ல்பாபாசாகிப் அம்பேத்கர் உழைப்பாளர் விடுதலை இயக்கத்தை (Independence labour party) ஆரம் பித்தபோது அந்த இயக்கத்தின் அடையாளமாக இருந்தது சிவப்புக்கொடிதான். மட்டுமல்ல,1938 வாக்கில் நிலமற்ற கூலிவிவசாயப் பெருமக்களை ஒன்றிணைத்து அவர் நடத்திய பேரணியிலும், கருப்புச் சட்டத்தை (Black act) எதிர்த்து நடந்த போராட்டங்களிலும் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட் தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளை, அங்காடிகளை அதன் உரிமையாளர்கள் எவ்விதமான முன்னறிவிப்போ காரணமோ இன்றி இழுத்து மூடுவதை அங்கீகரித்த சட்டம்தான் கருப்புச்சட்டம். அதை எதிர்த்து நடந்த போராட்டங்களில் டாங்கே, விவேஷ்கர், ஜம்னாதாஸ் போன்ற தோழர்களும் பிரிட்டிஷ் பிரட்லியும் கலந்துகொண்ட வரலாற்றை அறிந்தவர் எவரும் இரண்டு இயக்கங்களும் எதிரணியில் நிற்பதாகக் கருதுவதில்லை.

இந்தியச் சமூகச்சூழலில் சாதிப்படிநிலை ஒழியாமல் சமத்து வம் சாத்தியமில்லை என்ற கருத்தை உள்வாங்கிக்கொள்ளகம்யூனிஸ்டுகள் சற்று காலம் எடுத்துக்கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பல்வேறு இக்கட்டானகாலக்கட்டங்களில் இரு இயக்கங்களும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. 1957ல் மும்பை மாநகரை மொழிவழி மாகாணப்பிரிவின் அடிப்படையில் மராத்திய மாநிலத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் "ஒன்றுபட்ட மராட்டியம்" (united maharashtra) அமைப் பில் குடியரசுக் கட்சியும் அங்கம் வகித்திருந்தது. 17 சட்டசபை உறுப்பினர்களும் 7 நாடாளு மன்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். பிரகாஷ் அம்பேத்கருடன் இணைந்து நாங்கள் ஆரம்பித்த 'பகுஜன் தலித் சமித்சமிக்தி' நிலவுரிமைக்காக நிறைய போராட்டங்களை நடத்தியது. 2009ல் இங்கு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3வது அணியின் பெயர் RLDF - Republican left democratic front. அம்பேத்கரிசம் Vs கம்யூனிசம் என்று அடிக்கடி நடக்கும் வாதங்கள் இரண்டு கருத்துருவாக்கங்களை எதிரணியில் நிறுத்தாமல் இணைகோட்டில் நிறுத்தும் வாதங்களாகவே கருதுகிறேன். சொற்பமான சிலர் வரலாறு அறியாமல் இரண்டையும் எதிரணிகளாக கருதி வாதிடுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சி.பி.எம் தோழர்கள் இன்று அம்பேத்கரின் கருத்துகளை அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவதை நானறிவேன். அவர்கள் நடத்தும் இயக்கம் சார்ந்த இதழ்களில்கூட அம்பேத்கரின் புகைப்படம் அட்டைப் படமாக வர ஆரம்பித்துவிட்டது. பத்திரிகையாளர் மதுஷேட்டே போன்றவர்கள் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் புத்தகத்தையும் அம்பேத்கர் எழுதிய anihalation of caste புத்தகத்தையும் இவ்விரு இயக்கத்தாரும் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இரு இயக்கங்கள் சார்ந்த போராட்டக் களப்பணி இன்று நீர்த்துப் போயிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் தந்தையார் காட்டன் மில்லில் வேலை பார்த்ததை நீங்கள் சொன்னதும் இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. இந்த மில் தொழில்வளர்ச்சி மும்பையில் ஏற்பட்டதால் மராத்திய தலித்துகளின் வாழ்க்கையில் மிகப்பெரியமாற்றம் ஏற்பட்டது என்று சொல்லலாமா?

உண்மைதான். கிராமங்களில் நிலமற்றவர்கள் நாங்கள். பண்ணையார்களுக்கு அடிமைகள். எங்கள் உழைப்புக்கு கூலி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. ஆனால் இந்த தொழில் வளர்ச்சி இந்த பண்ணை அடிமைகளுக்கு தொழிலாளர் என்ற புதியமுகத்தைக் கொடுத்தது. எங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைத்தது. உரிமைகளைக் கேட்பது தவறல்ல என்ற அடிப்படை உணர்வை ரொம்பவும் சாதாரண எழுதப் படிக்கத் தெரியாத அனைவரும் புரிந்து கொண்டோம். எங்கள் தலைமுறையின் கல்விக்கு இந்தத்தொழில் வளர்ச்சி உதவி யது. மட்டுமல்ல. 60களில் நாராயண் சுர்வேயின் கவிதைகள்- தொழிலாளர் பிரச்னைகளை முன்வைத்துவெளிவந்தன. பாபுராவ் பாகுல் சிறுகதைத் தொகுப்பு - 'நான் என் சாதியை மறைத்தபோது' - 'jevha mi jaat chorli hoti' வெளிவந்தது. அந்தப்பத்து சிறுகதைகளையும் பத்துதடவை - மின்சாரம் தாக்கியது - ten electric shocks -என்று சொன்னார்கள்.

இந்த மில்களில் அப்போது நிலவிய தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தொழிற்சங்கங்களின் அணுகுமுறை என்னவாக இருந்தது?

அன்றைக்கு காட்டன்மில்களில் சாதியப்பாகுபாடு இருக்கத்தான் செய்தது. மில் தொழிலாளர்களின் யூனியன்களிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. அன்றைக்கு யூனியன் ஆபிஸ்களில் கயிறு/ரிப்பன் அல்லது நூல்களால் கோர்க்கப்பட்டிருக்கும் கோப்புகள் அல்லது காகிதங்களை பல்நுனியால் கடித்து அவிழ்ப்பார்கள். அப்படி பல்லால் கடிக்கும் குறிப்பிட்டஅந்த வேலைக்கு தலித்துகளை யூனியன் ஆபிஸ்களில் நியமிப்பதில்லை. தலித் எச்சில் பட்ட காகிதத்தைத் தொடுவது யூனியன் தலைவர்களைத் தீட்டுப்படுத்திவிடும் என்பதுதானே காரணமாக இருக்கக் கூடும்! இன்றும்கூட களப்பணியாளர்களிடம் சாதியம் காப்பாற்றப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மேதாபட்கரின் போராட்டங்களில் பங்கேற்றபோது கண்கூடாகக் கண்டேன். களப்பணியிலும் சாலைப் போராட்டங்களிலும் கலந்து நின்றவர்கள் சாப்பிடும்போது தனித்தனியாகப் பிரிந்து நின்றார்கள். தமிழ்நாட்டில் கூட இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங்களில் இருப்பதாக வாசித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும். மேதாபட்கரிடம் இதுபற்றி கேட்டபோது 'this is not my problem' என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.

போராட்டக்களத்திலேயே சாதியம் இருக்கிறது தீண்டாமை நிலவுகிறது என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது? தலித்துகளுக்காக குரல் கொடுக்கிறார்கள் என்பதைவிட தலித்துகளுக்கு உதவி செய்வதை தொண்டு மனப்பான்மையுடன் - ஒரு charity அமைப்பு போல -நடந்துகொள்வதாகவே கருதுகிறேன். காங்கிரசாகட்டும் காந்தியாகட்டும் இன்றைய மேதாபட்கராகட்டும் இந்த விசயத்தில் ஒரேமாதிரியான மனப்பான்மையுடன்தான் இருந்தார்கள் / இருக்கிறார்கள்.

கல்வி நகரமயம் தொழில்மயம் போன்றவற்றால் சாதி ஒழிந்துவிடும் என்று சில அறிவுஜீவிகள் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அன்றுபோல கண்டால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதெல்லாம் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் ஜனநெரிசலில் மிதிபட்டு விட்டது. இதை மட்டும் ஒரு மாற்றமாக கருதலாமே தவிர சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. லோக்கல் டிரெயினில் அருகருகே உட்கார்ந்து இன்று எல்லோரும் பயணம் செய்தாலும் பயணம் செய்கிற ஒவ்வொருவரின் அடிமனசிலும் சாதி வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. கிராமத்தில் பண்ணையாருக்கு அடிமையாக வாழ்ந்த தலித், நகரவாழ்வில் குடிசைப்பகுதியில்வாழ்ந்தா லும் தினமும் சாலையோரத்தில் குப்பைகளை/ தாள்களை/ ப்ளாஸ்டிக்குகளைப் பொறுக்கிக்கொண்டு ஜீவனம் செய்தாலும் அவன் இங்கே எந்தப் பண்ணையாருக்கும் அடிமையில்லை! மேலும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்புகள் இருப்பதால் தலித்துகள் மற்றவர்களுடன் சேர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொண்டு வேலை வாய்ப்புகளை வசப்படுத்திக் கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ரிசர்வேஷன் காரணமாக இவன் இந்த வேலைக்கு வர முடிந்தது என்று சொல்லும் காரணங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

அடிமட்ட நிலையில் தலித்துகளுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் அதிகம் என்பது உண்மைதான் எனினும் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் சாதியம் தன் முகத்தையும் வேஷத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதனால்தான் கிராமத்தை நோக்கிப் பயணம் செய்ய காந்தி போன்றவர்கள் சொன்ன போது பாபாசாகிப் கிராமத்தை விட்டு நகரத்தைநோக்கிய வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தினார். இப்படியாக வெளிப்படையாக சாதியம் மும்பை மாதிரி மாநகரத்தில்தெரிவதில்லை என்பதாலேயே சாதியம் இல்லை, தீண்டாமை இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக அமையும். இங்கே இன்றும் திருமணவீட்டிலும் இழவுவீட்டிலும் சாதி அதற்கான முகம் மாறாமல் அப்படியே வாழ்ந்துகொண்டிருப்பதை நாமறிவோம். நம்முடைய குடியிருப்புகளில் கூட தலித்துகளில் பலர் தன் தலித்திய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஏன் வாழ்கிறார்கள்? நகர வாழ்க்கையில் சாதி இல்லை என்றால் அப்படி மறைத்துக்கொண்டு வாழவேண்டிய அவசியம் என்ன?

காட்கோபரில் (மும்பை புறநகர் பகுதி ) அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதும் அப்போது நடந்தப் போராட்டங்களையும் நினைத்துப் பாருங்கள். மேதாபட்கரின் பேரணிகளில் களப் போராட்டத் தளத்தில் நிலவும் சாதியம் குறித்து சொன்னதையும் யோசித்துப் பாருங்கள். எனவே சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. இதைவிடுத்து இன்றைக்கு கிராமப்புறங்களில் சாதிச்சண்டைகள் தீவிரமாகி இருக்கின்றன. தலித்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு ஆதிக்கச்சாதியினரை எரிச்சலூட்டுகிறது. பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில் மிக அதிகமாக சாதிக்கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் அவரது நோக்கங்களைப் பழுதற உள்வாங்கி செயல்படுகின்றனவா?

பார்லிமெண்டெரி டெமாக்ரசியில் அமைப்புரீதியாக அம்பேத்கரின் கருத்துகளை முன்னிறுத்தி அனைத்திந்திய அளவில் செயல்படும் ஓரமைப்பு தலித்துகளுக்கு இல்லை என்பதாலும் இருக்கிற தலித்திய அமைப்புகள் மாநில அளவில் மட்டுமே இருப்பதாலும் பெரும்பாலும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் தளத்தில் நிற்பதாலும் அம்பேத்கரின் கருத்துருவாக்கங்களை இந்த இயக்கங்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதாக எண்ணுகிறேன். ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவி இருப்பதும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டு அந்தந்த மாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் அமைப்புகள் போராட்டங்கள் இயக்கங்களுக்கும் அப்பாற்பட்டு நடந்த ஒரு மிகப்பெரிய புரட்சியாகவே நினைக்கிறேன்.

50, 60 வருடங்களுக்கு முன் 1924 வாக்கில் காலில் செருப்பு போட அனுமதி மறுக்கப்பட்டவன் காலடியில் விரைந்து ஓடும் காரின்ஆக்ஸிலேட்டர் வந்துவிட்டதை மிகப்பெரிய மாற்றமாகவே நினைக்கிறேன். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்தது அம்பேத்கரின் ஜடியாலஜி தான். அமைப்புரீதியாக அம்பேத்கரின் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, கம்யூனிச இயக்கங்கள் எந்தளவுக்கு மார்க்சியத்தை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன? காந்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரசு எங்கே இருக்கிறது?

அம்பேத்கரின்  சிந்தனை செயலூக்கத்துடன் நின்று செயலாற்றிய காலம் என்று எதை மதிப்பீடு செய்கிறீர்கள்?

1957 முதல் 1965 வரை அரசியல் களத்தில் செயலூக்கத்துடன் இருந்த காலம். நிலமற்றவர்களுக்கு வாழ்வாதாரமாக நிலம் வேண்டிநடந்தப் போராட்டத்தில் சற்றொப்ப 3,87,000 பேர் சிறை சென்றார்கள். அரசு அம்பேத்கரிஸ்டுகளின் போராட்டங்களைக் கண்டு அச்சப்பட்டது. அக்காலத்தில்தான் உ.பி.யில் ரிபப்ளிகன் பார்ட்டியைச் சார்ந்த 3 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1972முதல் 1975வரை மராட்டியத்தில் தலித் பேந்தர்களின் காலம். அப்போது தலித் அல்லாத ஒத்த சிந்தனையாளர்களும் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினார்கள். கலை இலக்கியத்தளத்தில் அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா முழுமையும் இந்த அலை கலை இலக்கியத் தளத்தில் தொடர்வதைத்தான் மிகவும் பெருமையும்மகிழ்ச்சியும் தரும் விசயமாக கருதுகிறேன்.

இந்தியக்குடியரசுக் கட்சி இருக்கும்போது 9.7.1972ல் நீங்கள் தனியாக தலித் சிறுத்தைகள் அமைப்பை ஏற்படுத்த என்ன காரணம்?

அமெரிக்காவின் கறுப்பின விடுதலையும் கறுப்பு இலக்கியமும் என்போன்ற இளைஞர்களுக்கு அதுபோன்ற ஓர் அமைப்பை உருவாக்கி நிறைய சாதிக்கவேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தி இருந்த காலக்கட்டம். கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டும் இந்தச் சமூகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது என்பதையும் உணர்ந்தோம். அப்போதுதான் நான்,என்னுடன் நாம்தேவ்தசல், ஜே.வி பவார் சேர்ந்து தலித் சிறுத்தைகள் அமைப்பை ஆரம்பித்தோம். குடியரசுக் கட்சியின் ஒரு மந்தமான செயல்பாடு எங்கள் வேகத்திற்கு அன்று ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவும் ஒரு காரணம்.

அவ்வளவு வேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் அமைப்பு ஆரம்பித்த வேகத்திலேயே 1978ல் முடிந்துபோனது ஏன்? உங்கள் அமைப்பில் அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது? அதைத் தவிர்த்திருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா?

ரொம்ப பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. சின்ன கருத்தியல் முரண்பாடுகள்தான் காரணம். மூன்று விதமான குரல்கள் ஒலித்தன. ஒன்று மார்க்சியவாதிகள். எல்லாமே அதற்குள் அடக்கம் என்று நினைப்பவர்கள். அடுத்து தீவிர - கலப்படம் விரும்பாத தூய அம்பேத்கரிஸ்ட். நமக்கு அம்பேத்கர் மட்டும் போதும் என்றார்கள், மூன்றாவது புத்திஸ்ட். பதவி, அதிகாரம் இருக்கும் இடத்தில்தான் விட்டுக்கொடுத்தலும் சமரசமும் தேவைப்படுகிறது. எங்கள் அமைப்புகளில் அப்படி எதுவுமில்லை. எனவே சமரசத்திற்கு யாரும் தயாரில்லை. இதேநிலை கம்யூனிச, சோசலிஷ, நக்சல் அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தவர்களை உதாரணம் சொல்வதன் மூலம் நான் எங்களை நியாயப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இப்போது நினைப்பதுண்டுதான்.. நீங்கள் கேட்பது மாதிரி "தவிர்த்திருக்கலாமோ" என்று. எப்படியோ அது கடந்த காலம். இப்போதும்கூட தலித் பிரச்சனைகளில் நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகிறோம். அடிக்கடி என்னைச் சந்திக்கும் பலர் தலித் சிறுத்தைகள் அமைப்பின் அவசியத்தை இன்றும் என்னிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

உங்கள் வேகத்துக்கு இந்தியக் குடியரசுக் கட்சி ஈடுகொடுக்காது என்று சொன்ன நீங்கள் இன்று அதில்தானே இருக்கிறீர்கள்!

ஆமாம். மராத்திய மாநிலத்தில் வளர்ந்து வரும் சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், மராத்திய நவ நிர்மான் சேனா, பி.ஜேபி என்று மதம்சார்ந்த அரசியல் சூழலில் ஒரு செக்குலார் அமைப்புக்கான தேவை இன்று அதிகம். அந்த வகையில் நாங்கள் இந்திய குடியரசுக்கட்சியில் சேர்ந்து எங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

குடியரசுக் கட்சியின் ஒருபிரிவு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

RPI இணைந்து நிற்கவில்லை. Rashtriya republican party சிவசேனாவுடன் சேர்ந்து நின்றது. இவர்கள் எப்போதுமே சிவசேனாவுக்கு ஜால்ரா அடிப்பவர்கள்தான். இது ஒரு பலகீனமான அமைப்பு. ஒரு சில இடங்களில் RPIலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காகப் பிரிந்த சிலர் சிவசேனையுடன் இணைந்திருக்கலாம்.

இந்த நாட்டில் 1/5 ஆக இருக்கின்ற தலித்துகள் இயற்கை வளங்களில், பொதுச்சொத்தில், பொருளாதர வணிகச் செயல்பாடுகளில் கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் உரிய பங்கை அடைவதற்குப் போராடாமல் பிறரோடு சேர்ந்து சில்லறை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக தலைகளைக் காட்டி பங்கு வாங்கிக்கொள்வதாக தலித் இயக்கங்கள் வலுகுன்றிப் போயிருப்பதை எப்படி விளங்கிக்கொள்வது?

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆட்சிதான் கைமாறியது. மக்களாட்சி, அரசியல் சட்ட உரிமை என்றெல்லாம் வந்த பிறகும் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித்மக்களில் படித்த நடுத்தர வர்க்கத்தினர் போராட்டங்களைக் கைவிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள அடிப்படைக் கொள்கைகளை மறந்துவிட்டு அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய தலித்திய அரசியலமைப்பு/ அல்லது மாநில தலித் இயக்கங்களை ஒட்டுமொத்த இந்திய அளவில் ஒன்றணைக்கும் ஓரமைப்பின் தேவையை உணர வேண்டும். அப்படி ஓர் அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றால் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல நமக்கான உரிய பங்கை நாமடைவது சாத்தியப்படக்கூடும். அதுவரை அவர்கள் தூக்கி எறியும் எலும்புத் துண்டுகளுக்காக காத்திருக்கும் தெருநாய்களாகத்தான் நாமிருப்போம். இந்தப் பூர்ஷ்வா அரசு தன் குடிமக்களை வாழவைப்பதும் இல்லை. சாகவிடுவதும் இல்லை, இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கும் வாழ்க்கை. இந்த அரசு வீடு இல்லாதவனுக்கு தண்ணீர்க்குழாயும் மின்சாரமும் வழங்கும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழலில் அம்பேத்கரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் அகிலஇந்திய அமைப்பின் தேவையை நாம் உணர வேண்டும்.

இப்போதைய சூழலில் ஒரு தலித் இயக்கம் அகில இந்திய மட்டத்தில் துவக்கப்படுவதாக இருந்தால் அல்லது இருக்கிற இயக்கம் தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதென்றால் அதன் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டிய தலையாய அம்சங்கள் என்று எவற்றைச் சுட்டிக்காட்டுவீர்கள்?

அந்தந்த மாநிலத்தின் தலித் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி அனைத்திந்திய அமைப்புக்கான தேவைபற்றி பேசவேண்டிய காலக் கட்டமிது. அப்படி ஓரமைப்பு நிறுவப் பட்டால் மட்டுமே அரசியல் தளத்தில் அதிகாரப்பகிர்வும் உரிமைகளைப் பெறுவதும் சாத்தியப் படும். அந்த அமைப்பில் ஒத்தக்கருத்துள்ள தலித்தல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். பாபாசாகிப்கூட சாதியடிப்படையில் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இயக்கங்களை முழுமனதுடன் வரவேற்கவில்லை.

தலித் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பகுஜன் மாயாவதி சர்வஜன் மாயாவதி ஆனதை விமர்சனம் செய்கிறீர்களே, ஏன்?

பகுஜன் சர்வஜன் ஆனதால் பகுஜனுக்கும் சரி சர்வஜனுக்கும் சரி.. என்ன கிடைத்தது? அதனால்தான் சொல்கிறேன் மீண்டும் சொல்கிறேன் ஒத்தக்கருத்துள்ள தலித் அல்லாதவர்களையும் இணைத்துக் கொண்டு என்று. "ஒத்தக் கருத்துள்ள' (like minded ) என்ற சொல்லை அடிக்கோடிட்டு வாசிக்கவும். தலித்தல்லாதவர்களை இணைத்துக்கொள்ளும் போது ஒத்தக்கருத்துள்ளவர்களாக இருக்க வேண்டியது அடிப்படை விசயம். இல்லை என்றால் நம் தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்!

தலித் மக்கள் சக்தி வலுவான அதிகாரமாக இந்திய அரசியலில் வளர்ச்சி அடையாமைக்கு என்ன காரணம்?

தலித் நேஷனல் பார்ட்டி கிடையாது. எல்லோரும் ஏற்றுக்கொண்ட தலித் தலைமை அம்பேத்கருக்குப் பின் நம்மிடம் இல்லை. பாபாசாகிப் அவர்களுக்கு தேசியஅளவில் தலித் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாக்டர் லோகியா, ஆச்சார்ய அதர்லே, சமாஜ்வாடி எஸ்.என். ஜோஷி ஆகியோருக்கு பாபாசாகிப் கடிதம் எழுதினார். ஆக்கப்பூர்வமாக அதைச் செய்வதற்குள் அவர் இறந்து விட்டார். தலித் அமைப்புகளின் மாநிலத்தலைவர்கள் உள்ளூரைத் தாண்டி வரத் தயாராகவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட மாநில வாரியாக தங்கள் கூட்டணிகளை மாற்றிக்கொண்டாலும் மத்திய அளவில் ஒன்றாக நிற்கின்றன. குறைந்தபட்ச அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து மாநில தலித் அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு இன்றைய தேவை. அப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஏற்படாதவரை தலித் சக்திகளை அரசியல் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள்.

தலித்துகளுக்குள் நிலவும் சாதிப்படிநிலைகள், உட்சாதிப்பூசல்கள், இட ஒதுக்கீடுக்குள் உள்ஒதுக்கீடு- பற்றி எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?

சாதிப்படிநிலைகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. தலித்துகளில் இரண்டுவகை. ஒருசாரார் இந்து தலித்துகள். ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் இதில் அடங்குவர். ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் அம்பேத்கரை இந்து தலித்துகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை! மகர்கள்தான் ரிசர்வேசனை அனுபவித்து முன்னேறி இருக்கிறார்கள். மாத், மதங் என்று இங்கேயும் உட்சாதி இட ஒதுக்கீடு குரல்கள் கேட்கின்றன. உள் ஒதுக்கீடுகளில் உள்ள சில நியாயங்களை இந்துத்துவவாதிகள் திசைதிருப்பி ஆதாயம் தேடிக் கொள்வதை அனைத்து தலித் உட்சாதிப்பிரிவினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சேமநல அரசாக இந்திய அரசு முழுமை பெறுவதற்குள் உலகமயமாதலில் கால்வைத்து விட்டது. இன்று அரசானது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் ஓர் ஏஜென்சியாக மாறிவிட்டது. எனவே ஒடுக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறை செலுத்த வேண்டும் என்பது பேச்சளவிலும் கூட கைவிடப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு நடைமுறையில் முடக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தொழில் வணிகம் போன்றவற்றில் தலித்துகளுக்கு வாய்ப்பு குறைவு. மிகுந்த சவால்களுடன் கூடிய இந்த நிகழ்காலத்தை தலித்துகள் எவ்வாறு கடப்பது?

இந்திய அரசு உலகமயமாதலில் நுழைந்தது சரியா தவறா என்று பேசுவது இனி அர்த்தமில்லாதது. வெகுதூரம் வந்தாகிவிட்டது. உலகமயமாதலில் இருந்து இனி நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வெளிவருவது சாத்தியமில்லை. 

அமெரிக்காவிலிருந்து அறிவியலையும் அணு ஆயுதத்தையும் ஹை டெக்னாலஜியையும் இறக்குமதி செய்திருக்கும் நாம் அமெரிக்க அரசின் சில மனித உரிமைக் கொள்கைகளையும் தனியார் நிறுவனங்களிலும் கறுப்பர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முன்னுரிமையையும் சேர்த்தே இறக்குமதி செய்திருந்தால் நல்லது. 

ஆனால் உலகமயமாதல் என்றால் அமெரிக்காவுக்கு அடிமையாதல் என்பதல்ல. அந்தப் புரிதல் நமக்கு வேண்டும். உலகமயமாதல் என்றால் நம் இயற்கை வளங்களை அடுத்தவன் கொள்ளை அடிக்க விட்டுவிட்டு நிற்பதல்ல. மக்கள் சக்தியை ஒன்று திரட்டினால் நம்மால் சில அழிவுகளிலிருந்து காத்துக்கொள்ள முடியும். மராட்டியத்தில் விடியோகோனின் சிறப்பு பொருளாதார மண்டலத்தை மக்கள் சாலையில் இறங்கி தடுத்து நிறுத்திவிட்டார்கள். இவை எல்லாம் நம்பிக்கை தரும் செய்திகள். எனினும் இன்றைக்கு தலித்துகளிடம் போராட்டக்குணம் நீர்த்துப்போய்விட்டதோ என்ற அச்சம் எனக்குண்டு. எங்கள் போராட்டங்களைக் கண்டு அரசும் ஆட்சியாளர்களும் அச்சப்பட்ட காலம் ஒன்றுண்டு. அன்றைக்கெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் சாலையில் இறங்கி நின்று போராடிய பொதுமக்கள் இன்றில்லை. தலித்துகளின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம் சார்ந்தவர்கள் இன்றைக்கு குடிசைவாழ் தலித்துகளுக்காக போராட சாலையில் இறங்கத் தயாராக இல்லை. போராட்டக்குணம் குறைந்துவிட்டது. இன்றைய சூழலில் மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலமே நம்மை நோக்கியிருக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும். ஆனால் அதுவே காணாமல் போய்க் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் கவலை தருகிறது.

தலித் பெண்களின் தனித்துவமான பிரச்சனைகள் என்று எவற்றை அடையாளப்படுத்துவீர்கள்? தலித் இயக்கங்கள் அவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளனவா?

போராட்டகளத்தில் நிற்கும் ஒவ்வொரு தலித் ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண்களும் அதே போராட்டகளத்தில் நிற்கும் தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண்களும் அடிப்படையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். தலித் போராடினால் அவனை அடக்க அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகளை வன்கொடுமை செய்கிறார்கள். அன்று முதல் இன்றுவரை தொடரும் கதை இது. தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டுப் பெண்களுக்கு அடிப்படையில் இந்தப் பிரச்சனை அதிகமாக இருப்பதில்லை. பெண்ணியம் பேசும்போதும் தலித் பெண்களின் பிரச்சனைகளை தனித்துவப்படுத்தி இன்று தலித் பெண்கள் முன்வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்கங்கள் இவற்றை என்றைக்குமே புறக்கணித்ததில்லை.

ஆனால் தலித்திய இயக்கங்களில் பெயர் சொல்லும்படியாக பெண்கள் இல்லையே? ஏன்? நீங்கள் ஆரம்பித்திருந்த தலித்பேந்தர் அமைப்பிலும் பெண்கள் நிர்வாகத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே?

பெண்கள் நிர்வாகத்தில் முன்வரவில்லை. தலைமைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. தலித் பேந்தரிலும் தலைமைக்கு வரவில்லை என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் சாலையில் இறங்கிப் போராட்டமா, பேரணியா.. பெரும்பான்மையான பெண்கள் அக்காலக் கட்டங்களில் கலந்துகொண்டார்கள். இன்று நிலைமை ஓரளவு மாறி வருகிறது. தலைமைக்கு வரவும் நிர்வாகப்பொறுப்புகளை ஏற்கவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள்.

இங்கு சிலைகளை வைத்து நடக்கும் அரசியல் அறிந்ததுதான். இதுவரை அரசாங்கங்களும் கட்சிகளும் வைத்துள்ள பெரும்பாலான சிலைகள் தலித்தல்லாதவர்களுடையதே. ஊடகங்களில் வெளியாகும் அரசுத்துறை விளம்பரங்களில் ஆளுயரத்திற்கு நின்று புன்னகைப்பதும் இவர்களே. விபத்தில் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு 12,000 சிலைகளை ஆந்திரா முழுக்க வைக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரசாங்கமோ, கட்சிகளோ அவை செலவழிக்கிற தொகை பொதுமக்களுடையதுதான். ஆனால் இதையெல்லாம் விரயமென்று பேசாத பொதுநல விரும்பிகள், நீதிமன்றங்கள் எல்லாம் மாயாவதியின் சிலைவைப்பு முயற்சிக்கு இப்படி கொந்தளிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரொம்ப சிம்பிள். அவர் ரெட்டி, இவர் மாயாவதி. மாயாவதி ரெட்டியாக இருந்திருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். உ.பி.யில் தலித்துகளுக்கும் பிற சிறுபான்மை மக்களுக்கும் செய்யவேண்டிய உருப்படியான காரியங்கள் நிறைய இருக்கிறது. மாயாவதி தன் அதிகாரத்தையும் ஆற்றலையும் காட்டவும் நிலைநிறுத்தவும் களங்கள் பல உ.பி.யில் இருக்கின்றன. எனவே இந்த சிலை விவகாரத்தில் எல்லாம் தன் நேரத்தையும்ஆற்றலையும் வீணடிக்கக் கூடாது. தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய எதிர்காலத் திட்டங்களில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

மாயாவதியின் அரசியல் வெற்றி தலித் சமூகத்தின் வெற்றியா?

இல்லை. மாயாவதியின் அரசியல் வெற்றிகளை நாமும் ஊடகங்களுடன் சேர்ந்து பாராட்டலாம். ஆனால் ஊடகங்கள் சொல்வதுபோல அவர் தலித்துகளின் அடையாளம் அல்ல. இந்த வெற்றியை அடைய அவர் கொடுத்திருக்கும் விலை என்ன ? அவரை ஆதரிக்கும் புனே டி.எஸ். குல்கர்னி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மாயாவதி தேர்தலில் நிறுத்திய நாசிக் 'மகந்த' ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். இந்த மாதிரி விலையைக் கொடுத்து மாயாவதி தலித் சமுதாயத்திற்கு என்ன செய்துவிடப்போகிறார்? அண்மையில் தாதர் சிவாஜி பார்க் கூட்டத்திற்கு வந்தவர் அங்கிருக்கும் அம்பேத்கரின் சைதன்ய பூமிக்குக்கூட போகவில்லை! she lost her dalit idealogy.

சைதன்யபூமி கிட்டத்தட்ட ஒரு வழிபாட்டுத்தலம் போலதானே இருக்கிறது? செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது, பூ வாங்கி அர்ச்சனை செய்வது இத்யாதி காட்சிகளைப் பார்க்கிறோமே.. அம்பேத்கரை நாம் கடவுள் ஆக்கிவிட்டோமோ?

சைதன்யபூமிக்கு வருகிறவர்களுக்கும் திருப்பதிக்கு போய் வருகிறவர்களுக்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். எதையும் வேண்டி கேட்டு, கேட்டது கிடைத்துவிட்டால் அதற்குக் கைமாறாக எதையாவது செய்து தன்னையும் தன் கடவுளையும் ஏமாற்றிக் கொள்ளும் கூட்டமல்ல சைதன்யபூமிக்கு வருபவர்கள். அன்பை, மரியாதையை தங்களுக்குத் தெரிந்தவகையில் வெளிக் காட்டும் மக்கள். தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவனுக்கு தங்கள் நன்றியை மட்டும் காட்டவரும் மக்கள். மும்பையில் பிறந்து வளரும் நம் வீட்டு பிள்ளைகள் சாதியம் தெரியாதவர்களாக ஏன் சாதியற்றவர்களாக இருக்கிறார்கள். சாதியற்றவர்கள் என்று சொல்வதில் பெருமைதான் எனினும் சாதிப் படிநிலை மாறாத இச்சமூக அமைப்பில் அவர்களுக்கான இடம்..

இன்று நம்மைப் போன்ற பலர் குடும்பத்தில் இப்பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கன் சிலிக்கன் வேலியில் டாலராக சம்பாதிக்கும் அவாள் வீட்டுக்குழந்தைகள் தங்கள் மேனிலையைக் காப்பாற்றிக்கொள்ள டாலர் டாலராக விஷவ இந்து பரிஷத் மாதிரி அமைப்புகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நம் தலித்துகளிடம் தான் நவ தலித் பிராமணர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். நம் குடியிருப்பில் எத்தனை தலித்துகள் இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? உங்களையும் என்னையும் போல அவர்கள் தம்மை தலித் என்று சொல்லிக் கொள்வதில்லை. தங்கள் அறிவு, பணம், பதவி இந்த சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பயன்பட வேண்டும் என்ற சமூக விழுமியத்தை நாம் நம் குடும்பங்களின் தனிமனித விழுமியமாகக் கடைபிடிக்க வேண்டும்.

II

இந்து மதத்தின் பிடியிலிருந்து தம்மக்களை விடுவிப்பது என்ற அம்பேத்கரின் அடிப்படை நிலைப்பாட்டை பல தலித்இயக்கங்கள் கைவிட்டுவிட்டது எதனால்? இந்துமதம் அவற்றையும் உட்செரித்துக் கொண்டதா?

மிகவும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயம் இது. பாபாசாகிப் one man one vote என்று அரசியல் சட்டத்தின் மூலம் சமஉரிமை கொடுத்த பிறகுதான் பவுத்தம் தழுவினார். அப்படியானால் அரசியல் சட்டம் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை தம் மக்களுக்கு கொடுக்க முடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மராட்டியத்தில் தலித்துகள் மகர், சம்பார், மாத் என்று மூன்று பெரும்பிரிவுக்குள் அடங்குவர். இதில் மகர் பிரிவினர் முதலில் அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சமூகத்தளத்தில் சம உரிமைப் போராட்டக்களத்தில் முன்நின்றார்கள். அதனால்தான் காங்கிரசு இயக்கம்கூட மகர் அல்லாத ஜெகஜீவன்ராம் அவர்களை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவதற்காகவே வளரவிட்டது. இந்தப் பிரிவுகளில் ஒருசாரார் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டினார்கள். இன்றும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டுதான் சிவசேனை, பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் "இந்து தலித்துகள்" என்ற முத்திரையுடன் நம் மக்களைப் பிளவுபடுத்தி இருக்கிறார்கள். அம்பேத்கர்கூட அரசியல் களத்தில் அவருடன் எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்த தகுதியில்லாத வேட்பாளருடன் போட்டியிட்டு மும்பையில் தோல்வி அடைந்திருக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் தலித் அரசியல் இயக்கங்களையும் பவுத்தத்தையும் இணைத்து பார்க்கும் யதார்த்தத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை யோசித்துப் பாருங்கள்.

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நானே சட்டசபை தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம். என் தொகுதியில் இருக்கும் அனைத்து வாக்காளர்களையும் சந்திக்கும்போது அதில் சிலர் கணபதி கோவிலுக்கு அழைத்து அர்ச்சனை செய்யலாம். சிலர் மசூதிக்கு அழைக்கலாம். அவர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்கலாம்... இதை எல்லாம் எவ்விதமான தடைகளுமின்றி இந்துமத வேட்பாளரால் செய்ய முடிகிறது. இதையே நான் செய்தால் அது கேள்விக்குறி ஆவது தவறு. இன்னொரு முக்கிய விசயத்தையும் கவனிக்கத் தவறி விட்டோம். நீங்கள் (புதியமாதவி) படித்தவர், தொலைக்காட்சி பார்க்கவும் நேரமில்லாமல் வாசிப்பு, கருத்தரங்கு, இலக்கியம் என்று உங்கள் நேரத்தைக் கழிக்க முடிகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கதி? அவர்களுக்கான வடிகால்? எனக்குத் தெரிந்து பவுத்தம் தழுவிய நன்கு படித்த குடும்பங்கள்கூட வெளியில் பவுத்தம் சார்ந்தும் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்களில் ஒரு இந்துவாகவும் இருக்கிறார்கள். கண்பதி உற்சவங்கள், தசரா கொண்டாட்டத்தின் ஆடல் பாடல்கள், தயிர்ப்பானை உடைக்கும் கோவிந்தா கோவிந்தா விளையாட்டு... இப்படியான கொண்டாட்டங்களை தன்னுள் வைத்திருப்பதால் சாதாரண மனிதனுக்கு, கொண்டாட்டங்களுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருக்கும் வெகுமக்களுக்கு இந்துமதத்தில் இம்மாதிரியான வடிகால்கள் இருக்கின்றன.

பவுத்தத்தில் புத்தபூர்ணிமா, அம்பேத்கர் ஜெயந்தி தவிர்த்து கொண்டாட எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை கொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவே விரும்புகிறான். அந்த உளவியலை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டதால் மட்டுமே இந்துமதம் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் மக்களைக் கவர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

பவுத்தம் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை. பவுத்தத்தில் புத்தபகவானிடம் நீங்கள் வரமெல்லாம் கேட்கும் வாய்ப்புகளே இல்லை! தனிமனிதன் கடவுளை நம்புவதும் கும்பிடுவதும் பேரம் பேசுவதும் எனக்கு நீ இதைக் கொடு நான் உனக்கு இந்தப் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் கேட்பதும் பவுத்தத்தில் சாத்தியமே இல்லை. தனிமனிதனை, அவனது சிந்தனைகளையும் மீறிய சில உளவியல் தாக்கங்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. இந்த இடத்தில்தான் வெகுஜனமும் அவர்களின் உளவியலும் பவுத்தம் போன்ற அறிவியல் சார்ந்த பகுத்தறிவு வாழ்வியலுக்கே சவாலாக அமைந்துவிடுகிறது. இதில் பார்த்தீர்கள் என்றால் இன்னொரு வேடிக்கை. என்னவோ விவரம் தெரியாத நம்வீட்டு பெண்களோ முதியவர்களோ மட்டும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அறிவியலில் கரைகண்ட இன்றைய நம் இளைய தலைமுறையும் பவுத்தத்தைப் புரிந்துகொண்டும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று ஒத்துக்கொண்டும் தசரா கொண்டாட்டத்தில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.. அம்மாதிரியான கொண்டாட்டங்கள் அவர்களுக்கும் பெரிதும் தேவைப்படுகிறது..

ஒருகாலத்தில் தலித்துகள் கும்பிட்ட சிறுதெய்வங்கள் காணாமல் போய்விட்டன. அவர்களைப் போலவே இருந்த அவர்களின் கோரமுக தெய்வங்களை அவர்கள் மறந்து பலகாலம் ஆகிவிட்டது. அலங்காரங்களுடன் கூடிய பெருந்தெய்வ வழிபாட்டுக்கு வந்து விட்டார்கள். உங்களுக்குத் தெரியுமா.. பத்துப்பதினைந்து வருடத்திற்கு முன் மும்பையில் சித்தி விநாயகர் கோவில் குறித்து யாருக்கும் தெரியாது. இன்று பாருங்கள் அந்தக் கோவிலுக்கு வந்திருக்கிற மவுசை!  (நான்: ஆமாம்.. அசோக்சவான்கூட முதலமைச்சரானவுடன் சித்தி விநாயகர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்திருக்கிறாரே.. பார்த்தீர்களா..?)

ஒரு மதமும் அது சார்ந்த கருத்துருவாக்கமும் பொதுமக்களிடம் பரவ அரசு எந்திரங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. சக்கரவர்த்தி அசோகர் பவுத்தம் தழுவிய பின் இந்திய மண்ணில் பெரும்பகுதி அவர் அரசாட்சியில் இருந்ததால் பவுத்தம் வேகமாகப் பரவியது.என்னதான் செக்குலர் பேசினாலும் இந்திய அரசும், ஊடகங்களும் இந்துத்துவா சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இம்மாதிரியான புறம் சார்ந்த காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பல சமயங்களில் இதனால் தான் நான் அடிக்கடி சொல்வதுண்டு, இயக்க அரசியலையும் தனிமனித மத நம்பிக்கைகளையும் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் அகம்சார்ந்தும் அரசியல் புறம் சார்ந்தும் சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை இன்னொன்று ஆட்சி செய்யவோ அடக்கி ஆளவோ முயற்சிக்கும் போது கலவரங்கள் நடக்கின்றன.

எனில் அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் தோல்வி அடைந்து விட்டதா?

இல்லை. அது அன்றைய தேவை. இன்று பவுத்தம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு/ மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய தேவைவந்திருக்கிறது.

பவுத்தம் தழுவிய தலித்துகளை இன்றும் neo buddist என்று தனித்து தான் அடையாளப்படுத்துகிறார்கள். எனவேமதமாற்றம் தீர்வாக இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட சூழலில் தலித்துகள் எல்லா மத அடையாளங்களையும் துறக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதா?

எல்லா மத அடையாளங்களையும் துறப்பது என்ற தீர்வு என்றைக்குமே வெகுஜனத்திற்கான தீர்வாக இருக்கவே முடியாது. எனவேதான் தலித்துகள் அனைவரையும் நாத்திகராக்காமல் பாபாசாகிப் அறிவியலும் பகுத்தறிவும் சார்ந்த வாழ்வியல் தத்துவங்களைப் போதித்த பவுத்தம் தழுவினார்.

நீங்கள் பவுத்தம் ஏற்றபின் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் கண்டீர்கள்? உங்களை நியோ புத்திஸ்ட் என்றுதானே அழைக்கிறார்கள்?

50 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களை, நம்பிக்கையை, சுயமரியாதையை, உத்வேகத்தை ஆற்றலை எங்களுக்கு பவுத்தன் என்ற அடையாளம் கொடுத்திருக்கிறது. உலக வரலாற்றில் இந்த மாதிரி ஒன்றை உங்களால் சொல்ல முடியாது. அதனாலேயே எல்லா கொடுமைகளும் முடிவு பெற்றுவிட்டது என்று நாங்கள் நினைத்து எங்களை ஏமாற்றிக்கொள்ளவில்லை. பவுத்தம் ஏற்ற கயர்லாஞ்சி பய்யாலால் கதை உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக அவர்களுக்காகப் போராடும் உத்வேகத்தை அறிவாற்றலை எங்களுக்கு பவுத்தம் கொடுத்திருக்கிறது.

சாதியொழிப்பு சாத்தியம்தானா? அல்லது அதை ஒரு தொலைதூர லட்சியமாக வைத்துக் கொண்டு சாத ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதில் தலித்துகளின் ஆற்றல் கழியுமா?

புத்தர் காலத்திற்கு முன்பே சாதி அமைப்பும் தீண்டாமையும் சமூகத்தில் வந்துவிட்டது. 2500 ஆண்டுகால ஒரு சமூக அமைப்பை மாற்றுவதும் மக்கள் அடிமனதில் ஊறிப்போன சாதிய வேர்களை அறுப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. இது ஒரு தொடர்போராட்டம்தான். சரி, நீங்கள் கேட்பது போல இப்படியான தொடர் போராட்டங்களில் நம் ஆற்றல் கழியுமா என்றால் இல்லை. இந்தப்போராட்டங்கள் தான் நம் மக்களைத் தூக்கிப்பிடித்து தாங்கி நிற்கும் தூண்கள். இவை சரிந்துவிட்டால் ஏறிய உயரத்தைவிட வேகமாக அதல பாதாளத்தில் மீண்டும் நாம் தள்ளப்படுவோம். மொரிஷியஸ் தீவுக்குப் போனவர்கள் இன்று தங்கள் மூதாதையரின் சாதிஅடையாளத்தைத் தேடி அலைவதாக வாசித்திருக்கிறேன். இந்துமதம் இருக்கும்வரை இந்தியாவில் சாதியும் இருக்கும்.

III

தலித் இலக்கியம் புழக்கத்திலிருந்த மையநீரோட்டத்தில் இணைந்து விட்டதா? அல்லது தனித்துவத்தோடு வளர்நிலையை எட்டியிருக்கிறதா?

தலித் இலக்கியம் மைய நீரோட்டத்தில் இணைந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் தலித் இலக்கியம்இலக்கியத்தின் ஒருவகை. மராட்டிய இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் அதில் தலித் இலக்கியம் என்பது மராட்டிய இலக்கியத்தின் ஒருவகை. மற்ற இலக்கியங்களில் ஏற்பட்டிருக்கும் இசம், உத்தி மாற்றங்கள் தலித் இலக்கியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

தலித் இலக்கியம் வடிவத்திலும் பேசுபொருளிலும் அடைந்துள்ள மாற்றங்கள் என்று எவற்றை அவதானிக்கிறீர்கள்?

மராத்தி இலக்கியத்தை உலகத்தரம் வாய்ந்த இலக்கியமாக்கியதில் தலித் படைப்பாளர்களின் பங்கு மகத்தானது. ஆரம்பகாலங்களில் எடு துப்பாக்கியை, வெடிக்கட்டும் தோட்டா, குண்டுமழை, ரத்தம், காயம் என்று எழுதிக் கொண்டிருந்தோம். இன்றுஅப்படி எழுதுவதில்லை. இலக்கியத்தின் அனைத்து உத்திகளையும் தலித் இலக்கியம் தனக்குள் வாங்கி செரித்து நிற்கிறது. மத்தியவர்க்கம், உயர்தர மத்திய வர்க்கம், கூட்டுக்குடும்பச் சிதைவு, உலகமயம் என்று பல்வேறு தடங்களில் கிளை பரப்பி நிற்கிறது. பெண்கவிஞர்களின் பங்களிப்பு பெருமை சேர்த்துள்ளது. சத்யா பவார், ஊர்மிளா பவார் எழுத்துகளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம். இன்னொரு பெரிய மாற்றம் அன்று எழுதியவர்கள் இயக்கம் சார்ந்த களப்பணியாளர்கள். இன்று அப்படியில்லை.

தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?

தலித் இயக்கம் தலித் இலக்கியம் என்பது ஓர் உணர்வு, சமூக மாற்றத்தை விரும்பும் ஓரியக்கம். இதற்குள் பௌத்த இலக்கியமும் இடம் பெறலாமே தவிர தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக அடையாளப்படுத்தமுடியாது.

தலித் படைப்புகள் ஒரே சாயலில் - ஸ்டீரியோ டைப்- ஆக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறதே?

ஆரம்பகாலங்களில் இப்படி எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். இன்றைக்கு மகர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு மராத்தாக்களும் தங்கள் யதார்த்த வாழ்க்கையை எழுதத் துணிந்தார்கள் என்பதுதான் உண்மை. புதிய சொல்லாக்கங்களை, பழைய சொற்களுக்குப் புதுப்புது அர்த்தங்களை எங்கள் படைப்புகள் தான் மராத்திய மொழிக்கு கொடுத்திருக்கிறது. இன்றைக்கு மராத்திய அரசு தலித் இலக்கிய சொல்லாடல்களுக்கு தனி அகராதியே கொண்டுவரப் போகிறது என்றால்.. அந்தளவுக்கு இந்த மொழியை நாங்கள் வசப்படுத்தியிருக்கிறோம்!

நாராயண் சுர்வேயின் கவிதைகள் ஃபக்தா சிறுபத்திரிகையில் வெளிவந்தன. சிறுபத்திரிகைகளின் பங்களிப்பையும் மராத்திய இலக்கியத்தில் ரொம்பவும் முக்கியமானதாகச் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

உண்மைதான் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு அதிகம். நான்கு நண்பர்கள் சேர்ந்தால் உடனே ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிப்பது, சிலகாலம் வரும் பிறகு நின்று போவது எல்லாம் நடந்தது. கோபங் கொண்ட இளம் தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்ட சிறு பத்திரிகைகள் நாளடைவில் தனிநபர் ஆதிக்கத்துக்குட்பட்டன. அதனால் அந்த இயக்கம் தோற்றுப்போனது என்று வைத்துக் கொண்டாலும் சதீஸ் கலேஸ்கர், துளசிபரப், ராஜா தலே என்று பல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியதில் அதன் பங்கு மகத்தானது.

மூன்றுவகையான தலித் எழுத்தாளர்களை இன்று காணலாம். ஒன்று: கல்லூரி பேராசிரியர்கள். இரண்டாவது வொயிட் காலர் ஆபீஸ் மக்கள். மூன்றாவது தொழிலாளர்கள். சில சமயங்களில் எனக்கு அச்சம் ஏற்படுவதுண்டு. தலித் இலக்கியம் ரொம்பவும் (academic level) அகடெமிக் இலக்கியமாகிக் கொண்டிருக்கிறதோ என்று. தலித் இலக்கியம் தலித் இயக்கம் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின் விருப்பம்.

தொடக்கத்திலிருந்த படைப்பு உத்வேகம் இப்போதும் உங்களிடம் இருக்கிறதா? தங்களின் சமீபத்திய படைப்பு முயற்சிகள் எவை?

நான் 1967களிலேயே இயக்கம் சார்ந்து செயல்படவும் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். 67களில் ரிபப்ளிகன் ஐக்கிய பார்ட்டியுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். என்ன அன்றுபோல உத்வேகத்துடன் ஓடிய ஓட்டம் இன்று களப்பணியில் சற்று குறைந்திருக்கலாமே தவிர எழுத்துப்பணி எப்போதும் போல தொடர்கிறது. அண்மையில் என் கட்டுரைகளின் தொகுப்பு நூல் (neh abivithi - blue underline) வெளிவந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் தலித் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான செயலூக்கம் கொண்ட ஒரு கூட்டமைப்பின் தேவையை உணர்கிறீர்களா? அதற்கான முன் முயற்சிகளைத் தங்களைப் போன்றவர்கள் ஈடுபடுவது தானே வலு சேர்ப்பதாக இருக்கும்?

பலமுறை இதைப்பற்றி நாம் பேசி இருக்கிறோம். ஒருமுறை தமிழகத்தில் பிரிந்துகிடக்கும் தலித்திய இயக்கங்களை ஒன்றிணைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட நாம் பேசியிருக்கிறோம். நான் பேசுவது மட்டுமல்ல .. உங்களைப் போன்றவர்களும் முன்வர வேண்டும்.

மராத்தியில் தன்வரலாற்று இலக்கியவகை ரொம்பவும் பிரசித்தமானது. உங்களுடைய சுயசரிதையை எப்போது எதிர்பார்க்கலாம்?
 
(சிரித்துக்கொண்டே..) என் சுயசரிதம் என்பது நானும் என் குடும்பமும் என் எழுத்துகளும் மட்டுமல்ல. என் வாழ்க்கை ஓர் இயக்கம் சார்ந்தது. எங்கள் இயக்கம் குறித்தும், என் தோழர்கள் குறித்தும் நிறைய உண்மைகளை எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதாமல் இருந்தால் அது சுயசரிதையாக இருக்கவும் முடியாது. என்ன.. அதனால்.. புனைவுகளின் ஊடாகப் பயணித்து ஒரு நாவல் எழுதலாம் என்ற எண்ணமிருக்கிறது.

***
(புதுவிசை, அக்டோபர் 2009)