Tuesday, November 9, 2021

குறவர் பழங்குடி : போராட்டத்தில் அலைவுறும் வாழ்வு - மணிகோ.பன்னீர்செல்வம்

 பண்டைய தமிழ்த்திணைப் பாவகைபாட்டிற்குரிய குறிஞ்சிநில மக்களான குறவர்  பழங்குடிகள் (kuravar Tribe) பிற சமூக உழைக்கும் மக்கள் படும் பொதுவான சிக்கல்களையும் சந்திக்கின்றனர். தங்களுக்கேயுரிய தனித்துவமான சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர்.  இச்சிக்கலுக்கு எதிராக நீண்டகாலம் போராடியும் வருகின்றனர். குறவர் பழங்குடிகளின் தனித்துவமான சிக்கலைப் பகுத்து, அதை விவாதித்து அவர்கள் போராடிவரும் நிலை குறித்த இக்கட்டுரை புதுவிசை 40ஆவது இதழில் வெளியானது. 

கட்டுரையாளர் மணிகோ.பன்னீர்செல்வம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவிப்பேராசிரியராக பணியாற்றுபவர்.  


அ.பழங்குடி / இந்து- குறவன் (SC) சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக மேற்கொள்ளப்பட்டது. இதில் பல குறைபாடுகள் இருப்பதை விமரிசனம் செய்யலாம். இருந்தபோதிலும் பிற்காலத்தில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் பட்டியலைத் தயாரிப்பதற்கு விடுதலைப் பெற்ற இந்திய அரசுக்கு இதுதான் உதவியாக இருந்தது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியல் 1950இல் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு இன்றுவரையிலும் கூட பல சாதிகள் பட்டியலில் சேர்த்தும் சில சாதிகளை நீக்கியும் அவ்வப்போது அரசு பட்டியலை மாற்றி வந்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர் (SC)  மற்றும் பழங்குடியினர் (ST) பட்டியலில் பல்வேறுதரப்பினர் தங்களை சேர்க்க வேண்டுமென்ற குரல் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் ஒரு சாதியை சேர்க்கவோ, நீக்கவோ மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரமுண்டு. மாநில அரசுகள் பரிந்துரை மட்டும் செய்யலாம். தமிழக அரசு, சில இனங்களைப் பழங்குடிபட்டியலில் சேர்க்க வேண்டுமென்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகி யும் கிடப்பிலுள்ளது. இத்தகைய பிரச்சனையில் மத்திய அரசு மிகுந்த அலட்சியத்துடன் பொறுப்பற்ற முறையிலும் நடந்துகொள்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். 

இச்சூழலின் பின்னணியில் குறவர் பழங்குடிகளும் சாதிச்சான்றிதழ் சிக்கலை எதிர்கொள்கின்றனர். குறவர் பழங்குடி சான்றிதழ் கேட்டால், ‘எந்த மலையில் நீங்கள் வாழ்கிறீர்கள்?’ என்று கேட்டும், சில பகுதிகளில் குறவன் தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ்கூட கிடைக்காமல் அலைக்கழிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறவர் சமூகமானது 27 பிரிவினராகப் பகுக்கப்பட்டு அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மலைக்குறவன் என்றால் பழங்குடியினர் (ST) என்றும் குறவன் என்றால் தாழ்த்தப் பட்டோர் (SC) என்றும் குறவர் என்றால் கண்காணிக்கப்பட்ட சீர்மரபினர் என்றும் தமிழகத்தின் அனைத்து பட்டியல்களிலும் வைக்கப்பட்டுள்ளது தான் குறவன் உள்ளிட்ட பிரிவினர் சந்திக்கும் சிக்கலில் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. 

இதற்கெதிராக குறவர்பழங்குடி இயக்கத்தவர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். குறவர் பழங்குடிகளைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டுமென்ற ஒரு தவறான பரிந்துரையை 1989ஆம் ஆண்டு தமிழக அரசு அனுப்பியது. இப் பரிந்துரைகள் 2002ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட் டது. இந்த பரிந்துரைகள் மானிடவியல் துறை வல்லுநர்களின் ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு தமிழக அரசால் அனுப்பபடவில்லை. எனவே, மேற்படி இனமக்களின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் சம்பந்தமாக ஆய்வினை மேற்கொண்டு  அதன் அடிப்படையில் பரிந்துரைக்கு அறிவுறுத்தியது மத்திய அரசு. 

இதற்கு மத்திய அரசு எடுத்துக்கொண்ட காலம் 25ஆண்டுகள் என்பதை கவனத்தில் கொண்டால் மத்திய அரசின் அலட்சியத்தையும் மாநில அரசின் பொறுப்பற்ற தன்மையையும் புரிந்து கொள்ளமுடியும். மத்திய அரசின் அறிவுரையை ஏற்று, ஊட்டியிலுள்ள தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திடம் ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை தமிழக அரசு 2002இல் ஒப்படைத்தது. அவ்வமைப்பு 2004ஆம் ஆண்டு ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. பெறப்பட்ட இந்த ஆய்வறிக்கையை அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. பலமுறை வற்புறத்திய பிறகும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டிய போதும் ஏதும் நடக்கவில்லை. 

உடனே, 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ‘தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்’உள்ளிட்ட பழங்குடி மக்களின் அமைப்புகள் திமுக தலைவர் கருணாநிதியிடம் மேற்படி கோரிக்கையை கவனத்திற்கு கொண்டு சென்றன. முதல்வர் பொறுப்பேற்ற 2006 ஜூலை மாதம் 13ம் தேதி முதல்வரை (கருணாநிதி) சந்தித்து வற்புறுத்தின. 14.08.2006 அன்று குறுமன்ஸ் இன உட்பிரிவைத் தவிர மற்ற இனத்தவரை பரிந்துரை செய்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பியது. 21.11.2006 அன்று டில்லி வரை சென்று கண்காணித்தபோதுதான் மேற்படி பரிந்துரைகள் பழங்குடியினர் நலத்துறைக்குப் பதிலாக சமூகநீதி- அதிகாரமளித்தல் துறைக்கு தவறாக அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து 07.12.2006 அன்று முறையாக மத்திய அரசின் பழங் குடியினர் நலத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

மலைவாழ் மக்கள் சங்கத்தார் 11.05.2007 அன்று பெல்லார்மின் எம்.பி.யுடன் சென்று இந்தியப் பதிவாளரையும், பழங்குடியினர் நலத்துறை செயலாரையும் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் என்.வரதராஜனும் முதல்வரைச் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்திய பிறகு குறவன் மற்றும் 27 பிரிவினரை பழங்குடி பட்டியலில் சேர்க்க 23.10.2008 அன்று பரிந்துரைக்கப்பட்டது. இவ்விடத்து ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு பல தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. முதலில் இந்திய பதிவாளர் தனது ஒப்புதலைத் தரவேண்டும். அடுத்து பழங்குடியினர் தேசிய ஆணையம் ஒப்புதல் அளிக்கவேண்டும். அதற்கடுத்து பழங் குடியினர் நலத்துறை அங்கீகரிக்க வேண்டும். பிறகு மத்திய அமைச்சரவை, இறுதியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் என ஏறி இறங்கவேண்டும் என்பதே அந்தத் தடைகள். 

2009 ஆகஸ்ட் 4ஆம் தேதி மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் காந்திலால் புரியா, பழங்குடியினர் தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் மோரிஸ் குஜோர், இந்தியப் பதிவாளரின் நேர்முக உதவியாளர் டாக்டர் சந்திர மவுலி ஆகியோரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநிலத் துணைத்தலைவர் ராசப்பன் குறுமன்ஸ் பழங்குடிமக்கள் சங்க பொதுச்செயலாளர் வீரபத்ரன், துணைப் பொதுச்செயலாளர் வீரபத்ர சேகர், தமிழ்நாடு குறவன் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஏ.வி.சண்முகம், வேலூர் மாவட்ட தலைவர் ஜி.பெருமாள், பழங்குடி மக்கள் மறுமலர்ச்சி சங்கத்தின் தலைவர் தணிகாசலம் ஆகியோர் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. விஜயராகவன் உடன் வந்து உதவினார்.  (பழங்குடிப் பட்டியல்: இன்னும் எத்தனை தடைகள்? பி.சண்முகம், தீக்கதிர், 13.8.2009, மதுரை) 

ஆனாலும் நீண்டகாலமாக ‘குறவர்’ இனத்தவர்க்கு பழங்குடி மக்கள் என்னும் அங்கீகாரம் நிலுவையிலேயே உள்ளது. மார்க்சிஸ்டு கட்சி, மலை வாழ்மக்கள் சங்கம், தமிழ்நாடு குறவர் பழங்குடிமக்கள் சங்கம் போன்ற பல அமைப்புகள் குறவர் பழங்குடிகளை, பழங்குடிப்பட்டியலில் சேர்க்க எவ்வளவோ முயன்ற போதும் அது நிறைவேறவில்லை. இச்சூழ்நிலையில் ‘தமிழ்நாடு’ குறவரின் அமைப்புகளின் கூட்டுக்குழு முதல்வர்க்கு மனுவொன்றை அளித்துள்ளது. இக்கூட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக திரு.காவடி எம்.சுந்தரராஜன், செயலராகத் திரு.குடந்தை முருகேசன் ஆகியோர் செயல்படுகின்றனர். இக்குழு சில பரிந்துரைகளை அளித்துள்ள நிலையில் தொடர்ந்து குறவரின் போராட்டத்தில் புதிய கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது. அக்கண்ணோட்டம் பின்வருமாறு:

1. மலைவாழ் பழங்குடியான குறவர், சித்தனார் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும் (வ.எண்:36) மலைக்குறவன் பழங்குடிப்பட்டியலிலும் (வ.எண்:23) தமிழறியா ஆங்கிலேயர் செய்தொழில், வசிப்பிடத்தைக் கொண்ட பேச்சுவழக்காய் ‘கொறவர்’ என்று 27 அழைப்புப் பெயரில் தனித்தனிச் சாதியாய் மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் பட்டியலிலும் மிகையாகச் சேர்க்கப்பட்டுள்ளது (வ.எண்:1, 2, 8, 10, 13, 16, 18,  19, 23, 25, 30, 31, 33, 35, 37, 44, 50, 51, 52, 56, 59, 60, 62, 63, 66, 67) குறவர் இனமாகும். இதனால், பல்வேறு இடங்களில் குறவன் மக்கள் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் சான்றிதழ் பெறமுடியவில்லை. 

2. குறவரினத்தில் இருக்கும் இதே குழப்பம் பறையர் சமூகத்தைச் சுட்டுவதற்கும் இருந்தது. பறையர் அழைப்புப் பெயரான ‘வெங்கனூர் ஆதிதிராவிடர்’, ‘வேப்பூர் பறையர்’ என்பதே அது. இப்பறையர் என்பார் DNC பட்டியலில் இருந்து பின்னர் நீக்கப்பட்டனர், ஆதிதிராவிடர் (SC) எனச் சான்றிதழும் வழங்கப்பட்டது. (அரசாணை எண்: 866, 29.3.1985) சமூக நலத்துறையும் ஆணை பிறப்பித்தது. 

3. வெங்கனூர் பறையர், வேப்பூர் பறையர் இரண்டு அழைப்புப்பெயரும் ஆதிதிராவிடர். பறையர் அன்றி வேறு சாதியல்ல. அவற்றை சீர்மரபினர் பட்டியலில் இருந்து நீக்கப் பரிந்துரைத்த அதே காலத்தில்தான் 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு இரண்டாம் பிற்படுத்தப்பட்ட ஆணையம் (அம்பாசங்கர்  ஆணையம்) குறவரின் 27 வகை அழைப்பு பெயரையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள குறவனின் இணைப்பெயர் தாம் என்னும் சீர்மரபினர் பட்டியலிலுள்ள 27வகை ‘கொறவர்’ பெயர்களையும் நீக்கவும் பரிந்துரை செய்தது. 

4. அம்பாசங்கர் ஆணையத்தின் மீது முடிவெடுத்து பறையர் அழைப்புப்பெயரை நீக்கிய தமிழக அரசு, அதற்கான சமூக நலத்துறை அ.எ:1564 நாள்: 30.07.85ஐ வெளியிட்டது. ஆனால் குறவர் இனத்தின் 27 அழைப்புப்பெயர்களை அம்பா சங்கர் ஆணையை ஏற்காமல் ‘கு’றவன், ‘கொ’றவன் இரண்டும் ஒன்றே என்பதற்கு மைய அரசுடன் கலந்தாய்வு செய்து, அரசியல் சட்டத்திருத்தம் தேவைப்படுவதால் குறவரின் 27 பெயர்களும் சீர்மரபினர் பட்டியலில் இருக்கட்டும் என வைத்துவிட்டது.

5. 2002 ஆம்ஆண்டு, ஊட்டி பழங்குடி ஆய்வுமையம் SC, DNC பட்டியலிலுள்ளவர்களை கொறவர் எனும் ஒரே பெயரில் இணைத்து பழங்குடிப் பட்டியலில்  (ST) சேர்க்க பரிந்துரைக்க, மாநில அரசும் அதனை ஏற்று நடுவண் அரசிற்கு அனுப்பிவைத்தது. ‘கொறவர்கள்’  (koravars) என்ற தலைப்பிலிருக்கும் அத்தனை அழைப்புப்பெயர்களையும் ‘கொறவர்’என இணைக்க வேண்டும் என்றால் முதலில் ‘கொறவர்’ என்ற பெயருக்குச் சாதகமாக DNC பட்டியலில் இருந்து நீக்கினால்தான் அது இயலும். எனவே,  தமிழ்நாட்டு அரசு தனக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி முதலில் அழைப்புப்பெயர்களை DNC ட்டியலிலிருந்து நீக்கிய பிறகே மைய அரசிற்கு பரிந்துரைத்திருக்க வேண்டும். 

6. பரிந்துரையில், அனைத்துப்பெயர்களையும் கொறவர் என்ற ஒரே பெயரில் இணைத்து ST ஆக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக, 27 வகை பெயர்களையுமே ST பட்டியலுக்குக்  கொண்டு போக வேண்டுமென்று குறிப்பிட்டுவிட்டது (Letter No.25410/ADW 10/2004-1, dt.14.08.2006 of ADI DRAVIDAR AND TRIBAL WELFARE DEPT.) முக்கிய தவறாகும். 

7. இதன் விளைவாக 26க்கு மேற்பட்ட பெயர்களை ST பட்டியலுக்குக் கொண்டு செல்ல முடியாத நடைமுறைச் சிக்கலை சுட்டிக்காட்டி இந்திய தலைமைப் பதிவாளர்  (RGI) அலுவலகம் அத்தனை (27) அழைப்புப்பெயர்களும் தனித்தனிச் சாதிகளே என்று முடிவு எடுத்து கோப்பினை மனு விளக்கம் கோரி தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டது. 

எனவே, ST தகுதி பெறுவதற்கு பெரும் தடையாக இருப்பது DNC பட்டியலிலும் இடம் பெற்றுள்ள 27 அழைப்புப் பெயர்களே ஆகும். அதனால் அம்பாசங்கர் ஆணைய பரிந்துரைப்படி தமிழ்நாடு அரசு முதல்கட்டமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி  STபட்டியலிலுள்ள ‘குறவன்’, ‘சித்தனார்’ என்கின்ற பெயர்களுக்கு சாதகமாக DNC பட்டியலிலுள்ள 27 அழைப்பு பெயர்களை நீக்கி  STக்கான பரிந்துரையை மைய அரசுக்கு அனுப்பினால் குறவன், சித்தனார் எனும் ஒரே சாதியை  STஆக்குவதற்கு 27 பெயர்களையும் இணைத்து  STபட்டியலுக்கு கொண்டு சென்றால் மட்டுமே முழு சாத்தியமுள்ளது என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்ற நிலையில் பழங்குடிச் சான்றிதழ் சிக்கல் தொடர்கதையாக உள்ளது. 

ஆ. திருட்டு -  கொள்ளை என பொய்வழக்கு - லாக்கப் சித்தரவதை: 

குறவரின மக்கள் சந்திக்கும் மிக முக்கிய சிக்கல் இது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குறவன் மற்றும் கள்ளர், மறவர் ஆகிய இனங்கள் ‘குற்றப் பரம்பரையினர்’எனும் கொடியச்சட்டத்தில் வைத்து குற்றவாளியாக்கி கொடுமை புரிந்ததை நாமறிவோம். இதற்கெதிராக கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோரும், பசும்பொன் முத்துராமலிங்கம் போன்றோரும் போராடி CT Act எனும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்கினர். 1952இல் இது நீக்கப்பட்டபோதிலும் குறவன் இன மக்கள் மீதான தாக்குதல் மட்டும் தொடர்கிறது. குறவனின மக்கள் மட்டுமே குற்றம் செய்திட பிறந்தவர்கள் போலவும், படித்து பட்டம்  பெற்று சுயமரியாதையுடன் வாழ மறுப்பவர்கள் போலவும் திட்டமிட்டு தமிழக காவல்துறை இன்றளவும் தொடர்ச்சியாகப் பொய்வழக்குப் போட்டு சீரழித்து வருகிறது. எந்தப் பகுதியில் திருட்டுக் குற்றங்கள் நடந்தாலும் உடனே அந்தப்பகுதியில் வாழும் குறவனினத்தைச் சார்ந்தவர்களைப் பிடித்துவைத்து, அடித்து சித்ரவதை செய்தல்- செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ள வைப்பது - பொய்வழக்கு போடுவது -  அடித்துக் கொன்றுவிடுவது - என்று காவல்துறை செயல்படுகிறது. இதனால், குறவனின மக்கள் அன்றாடம் அஞ்சிஅஞ்சி வாழ் கின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். ‘குறிஞ்சி நில மைந்தர்கள்’ என்று பெருமையோடு சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட வேட்டைச்சமூகம், காவல்துறையின் பொய்வழக்கு வேட்டைக்கு இரையாகி வருகின்றது. எனவே ‘குறவன்’ என்று வெளியில் தெரிந்தாலே கேவலம் என்று கருதி தமது இனத்தையே மறைத்து வாழ்ந்துவருகின்றனர். 

ஒருமுறை திருட்டு வழக்கில் காவல்துறையிடம் சிக்கிவிட்டால் அக்குடும்பம் மண்ணுக்குப் போகிறவரை தப்பமுடிவதில்லை. குறவர் மீதான தாக்குதல்களான அடிப்பது, காயப்படுத்துவது, வீடு புகுந்து அங்கு இருக்கும் குறைந்த பட்ச பொருட்களை தூக்குவது, உற்றார் உறவினர் மீதும் வழக்குபோடுவது. சிக்கிக் கொண்டவனின் குடும்பப் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது, எல்லையற்ற கொடுமைகள், பொய்வழக்குகள், கொட்டடி சித்ரவதை என கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள கொடுமைகள் ஏராளம். அவற்றின் பட்டியல் பின்வருமாறு: 

1. 30.11.1997இல் வேலூர் மாவட்டம் பொன்னை கிராமத்தைச் சார்ந்த 5 குறவன் இன மக்கள் திருவள்ளுவர் மாவட்ட போலீசாரால் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு மனைவி மக்களுக்கும் தெரியாமல் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்தரவதை செய்யப்பட்டனர். செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்து, தாம் திருடிவைத்திருந்த நகைகளை அந்த ஊர் பெரிய மனிதர்களிடம் கொடுத்ததாக சொல்லச் சொல்லி நகை, பல லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்தனர்.  11 பொய்வழக்குகள் போட்டு சிறையில் தள்ளினர். இதில் அனைத்து வழக்குகளும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. (ஏ.வி.சண்முகம், குறிஞ்சி நில மைந்தர்களின் குமுறல், தீக்கதிர், 3.2.2011, சென்னை) 

2. விருத்தாச்சலம் முதனை கிராமத்து ஆர்.ராஜாக்கண் ணுவை 19.03.93 அன்று நகைத்திருட்டு வழக்கில் தொடர்புபடுத்தி விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்துவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில், கொலை செய்த சப் இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் 2பேருக்கு 31.05.2004ல் விருத்தாச்சலம் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டுக்குப் பின் உயர் நீதிமன்றமும் அத்தீர்ப்பை உறுதி செய்து தற்போது குற்றவாளிகள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். (மேலது) 

3. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நயினார்குப்பம் குளத்துமேட்டைச் சார்ந்த என்.நாராயணன் (அகவை 25) திருட்டு வழக்குகளில் சம்பந்தப்படுத்தி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு 1.06.2004இல் இறந்து போனார். (மேலது) 

4. அன்றைய தருமபுரி மாவட்டம் எலச்சூர் கிராமத்தில் வாழும் கோவிந்தசாமியின் மகன் ஆனந்தன் என்பவரை தேடுகிறோம் என்ற பெயரில் ஆனந்தனுடைய தகப்பனார், மனைவி, தம்பி, தம்பி மனைவி மணிமேகலை, உறவினர் விஜயா ஆகிய அனைவரையும் கைது செய்த வாணியம்பாடி காவல்நிலையத்தினர் அடித்து, உதைத்து, உலக்கையில் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்தனர். பெண்களை மானபங்கப்படுத்தி மங்கை, மணிமேகலை ஆகிய இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததை கேள்விப்பட்ட சி.பி.எம். தலைவர்கள் தலையிட்டதும், ‘பிக்பாக்கெட்’ அடித்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.( பிரண்ட் லைன், சூன் 6, 2002) 

5.விழுப்புரம் மாவட்ட பரிந்தல் கிராமத்தைச் சார்ந்த ரவி என்ற வாலிபரை 16.08.2010 அன்று இரவு கைது செய்தனர். 18.08.2010 அன்று நடுவீரப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்தரவதை செய்து கொன்றனர். ஆனால் விசாரணைக்கு அழைத்துவரும்போது தப்பி ஓடியதாகவும், விரட்டும்போது மரத்தில் மோதி இறந்துவிட்டதாகவும் போலீசார் கூறினர். போச்சம்பள்ளி, தேனி, சமயபுரம், டால்மியாபுரம், உப்பிலியாபுரம், ஒட்டன்சத்திரம், இராமநாதபுரம், கமுதி, திருச்சி கண்டோன்ட்மெண்ட், திருப்பூர் டீ1 காவல்நிலையம், பரமக்குடி நகர காவல்நிலையம், கோவை மதுக்கரை, திருப்பூர் நல்லூர், ஊத்தங்கரை, நல்லவன்பட்டி, பள்ளிப்பாளையம் கரூர் குளித்தலை, திண்டுக்கல் நிலக்கோட்டை என பல பகுதிகளில் இன்றுவரை குறவரினத்தின் மீதான பொய்வழக்குகள், லாக்கப் சித்ரவதைகள் தொடர்கின்றன. (தலித் முரசு, அக்-2010, புதிய கோடாங்கி, ஏப்-2012) 

‘இந்திய அசமைப்புச் சட்டம் மனிதஉரிமைகள் பற்றிய 15ஆவது பிரிவில் மதம், இனம், சாதி, பால், பிறந்த இடம் இவற்றில் ஏதாவதொன்றின் காரணமாக மட்டுமே அரசு குடிமக்களில் எவரையும் ஓரவஞ்சனை செய்யாது’என்கிறது. ஆனால், இந்த  நாட்டில் வாழ்கின்ற பல்வேறு சாதிப்பிரிவி னரில் ஒரு சாதிப்பிரிவினரான தொல்பழங்குடி மக்களான குறவன் இனத்தை மட்டும் அவன் ‘குறவனாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்திற்காக’ குற்றச்செயல் புரிபவன்களாகச் சித்தரிப்பது, பொய் வழக்குப் போடுவது அவனது நியாயங் களை நிராகரிப்பது, உரிமைகளை மறுப்பது என அரசும், அதிகாரிகளும், காவல்துறையும் வஞ்சித்து வருவது தொடர் வதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இம்மக்களிடையே போராட்டக்குரல்  மெல்ல வலுத்தும் வருகிறது. 

இ. குறவரின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு: மாறுதல்கள்

பொதுவாக குறவர்கள் தங்களது பொருளாதார ஒழுகலாறுகளாக கூடை முடைதல் எனும் கைவினைக்கலையின் மூலமாகவும், இறைச்சிக்காக பன்றி வளர்த்தல் போன்ற தொழில்கள் மூலமாகவும், குறிசொல்லுதல் என்கிற மரபார்ந்த சடங்கியல்சார் தொழில் மூலமாகவும் தங்களது பொருளாதார தேவைகளை நிறைவு செய்துகொள்கிறார்கள் என்று இதுவரை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இன்றைய சூழலில் குறவர்கள் தங்களது பொருளாதார வாழ்வில் பல்வேறு தொழில்களை கைகொண்டு வருகிறார்கள். 

மேற்கண்ட பின்புலத்தில்தான் குறவர் இன மக்கள் குறித்த பொதுவான தொழில்சார் அடையாளங்கள் இன்று உள்ளது. இந்த விவரங்கள் பலகட்டங்களில் ஆய்வுகளாக கிடைக்கப் பெற்றிருக்கிறது என்றாலும் நகரம் சார்ந்து தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அல்லது நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்த குறவர் பழங்குடி மக்கள் தங்களது பொருளாதார நலன் சார்ந்த நிலைகளில் மேற்கொள்ளும் முனைப்புகள் குறித்து தெளிவான முழுமையான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிக்கட்டத்தில் உள்ள நகரங்களிலும் வாழ்ந்துவரும் குறவர் பழங்குடி மக்கள் குறித்த ஆய்வு தேவையாக உள்ளது.

இதில் ஒருபகுதியாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தங்களது குடியிருப்புகளை அமைத்துக்கொண்ட குறவர் பழங்குடி மக்களைத்தேடி நமது களப்பயணம் அமைந்தது. குறிப்பாக கோயம்பேடு அருகில் சின்மயா நகர் பகுதியில் உள்ள குலசேகரபுரம், வில்லிவாக்கம், பெரம்பூர், தாம்பரம், ஆவடி, திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் குறவர் பழங்குடி மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விலிருந்து நாம் அவர்களது கல்வி பொருளாதார, வேலைவாய்ப்பு நிலைகள் குறித்து தெளிவான புரிதலுக்கு வர முடியும். 

கல்வி 

கல்வியறிவு சார்ந்த புள்ளிவிவரங்களில் அடிப்படைக் கல்வி என்பதற்கான வரையறை 8ஆம் வகுப்புக்கு குறைவாக படித்தவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். 8 முதல் 10 வரை, 12 ஆம்  வகுப்புவரை, பட்டப்படிப்பு வரை, பட்ட மேற்படிப்பு வரை என்று மேலும் வகைப்படுத்திக் கொண்டோம். இந்த ஆய்வின் வரையறைகளோடு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,615 நபர்களை இந்த ஆய்விற்காக எடுத்துக்கொண்டதில் பொதுவாக கல்வியறிவு பெற்றவர்கள் என்று பார்க்கிறபோது 950 பேர்களாக உள்ள னர். 480 பேர் அடிப்படைக் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். அதாவது 58 சதவித நபர்கள் அடிப்படைக் கல்வி மற்றும் பட்டப்படிப்பு வரை படித்தவர்களாக உள்ளனர். குறிப்பாக சுட்டுவதெனில் 10ஆம் வகுப்புவரை 230 நபர்கள், 12ஆம் வகுப்புவரை 70 நபர்கள், பட்டயபடிப்பு  55 நபர்கள்,  பட்டப்படிப்பு 115 நபர்கள் என படித்துள்ளனர். மீதமுள்ள 665 நபர்கள் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர். 

வேலைவாய்ப்பு

ஆய்வுக்குட்படுத்திய 500 குடும்பங்களின் 1615 உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு குறித்து தகவல் திரட்டியதில் சராசரியாக 700 நபர்கள் முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும், மீதமுள்ள 915 நபர்கள் முறைசாரா வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். முறைப்படுத்தப்பட்ட வேலை என்கிற வகையில் அரசுப்பணிகளில் 80 நபர்களும், தனியார் நிறுவனங்களில் 105 நபர்களும், சுயதொழில் மேற்கொள்பவர்கள் 500 நபர்களும், இதர வீட்டு உதவிப்பணிகள் 15 நபர்களும் செய்கின்றனர். அரசு வேலைகளை பொறுத்தவரை பெரும்பான்மையானவர்கள் சென்னை குடிநீர் வாரியத்தில் கடைநிலை பணியாளர்களாகவும், சென்னை மாநகராட்சி துப்புரவுத் தொழில் மற்றும் பேருந்து ஓட்டுநர்களாகவும் பணியாற்றுகின்றனர். தனியார் துறை வேலை என்று பார்க்கிறபோது டேட்டா என்ட்ரி (தகவல் உள்ளீடு) பணிகளிலும், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களிலும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும், பணியாற்றுகின்றனர். தவிர முறைசாரா தொழில்களாக ஓட்டுநர், ஆட்டோ  ஓட்டுநர், தலைச்சுமை வியாபாரம் செய்வது, மீன்பாடி வண்டி ஓட்டுவது, மீன் வியாபாரம் என வகைப்படுத்த முடிகிறது. ஆட்டோ ஓட்டுபவர்களிடம்  முக்கியமான விஷயமாக கவனித்தது, அதில் 12 நபர்கள் சொந்த ஆட்டோவை வைத்து தொழில் செய்துகொண்டிருக்கின்றனர். 

பொருளாதாரம்

பொருளாதார நிலைமைகளை பொறுத்தவரை அவர்களது தொழிலை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது. இந்த வகையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 500 குடும்பங்களின் நிலைமைகளை இப்படி வகைப்படுத்தலாம். ரூ.5000த்துக்கும் குறைவான மாதவருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கை 255 ஆகவும், 5000 ரூபாயிலிருந்து 8000 ரூபாய்வரை வருமானம் கொண்டவர்கள் 135 குடும்பங்களாகவும், ரூபாய் 8000த்திற்கும் அதிகமாக வருமானம் கொண்டவர்கள் 110 குடும்பங்களாகவும் உள்ளனர். 

மேற்குறிப்பிட்ட ஆய்வுகளிலிருந்து குறவர் பழங்குடி சமூக நிலைமைகள் குறித்தும், அவர்களது சமூக பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் பொதுவாக புரிந்துகொள்ள முடிகிறது. நகரமய வாழ்க்கைச்சூழலில் குறவர் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார அடையாளங்கள் மாற்றம் பெற்று வருகிறது. குறிப்பாக  நகர்மய கலாச்சாரக் கூறுகளோடு ஒன்றிணைவது, ஆங்கிலவழிக் கல்வி, தொழில்நுட்ப மற்றும் ஊடகம் சார்ந்த கல்விகளுக்கு சமீபகாலங்களாக  முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனனர். இதன் தொடர்ச்சியாக தங்களது மரபு அடையாளங்களை தொலைப்பதும் அல்லது மறைப்பது போன்றவற்றுக்கும் முற்படுகின்றனர். அதேசமயத்தில் தங்களது சமூகச்சடங்கு சார்ந்த விஷயங்களில் மட்டும் தங்களது சாதிப்பண்பாட்டை தக்கவைத்துக்கொள்ளும் போக்கும் உள்ளது.  

நமது ஆய்வு நகர்புறங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் குறவர் பழங்குடி மக்களைக் குறித்துதான் என்றாலும், இவர்கள்  சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் கிடையாது. அலைகுடி சமூகத்தின் ஓர் அடையாளக்கூறாக இருக்கும் இடம்விட்டு இடம் பெயர்வது என்கிற ஒரு பண்பாட்டு நடவடிக்கையிலிருந்தும் இதை அணுகலாம். 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு  இடம் பெயர்ந்துள்ள அவர்களில் கணிசமானவர்கள் திருவண்ணாமலை சார்ந்த பகுதியிலிருந்து குடியேறிவர்கள். கடந்தகாலங்களில் வேளாண்  பொருளாதாரத்தில்  ஏற்பட்ட தாக்குதல்கள் காரணமாக அதைச் சார்ந்த சார்புக்குடிகளாகவும் இருந்த குறவர் பழங்குடிகளும் இடம் பெயர நேர்ந்துள்ளது. 

குறவர் பழங்குடி இயக்கங்களும் போராட்டங்களும் 

மேற்கண்ட ஆய்வுப்பொருளை மையமாக கொண்டு குறவர் சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றன. பொதுவாக குறவரினச் சங்கங்கள் 1940களின் நடுப்பகுதியிலிருந்து செயல்படத் தொடங்கியதாக அறிய முடிகிறது. அரசியல் போராட்டம், இனச்சீர்திருத்தம் என்னும் இரண்டு கோணத்தில் இம்மக்களின் போராட்டங்கள் அமைந்து வந்துள்ளன. அடிப்படை வசதிகளுக்கென (உணவு, உடை, உறைவிடம்) போராடியதைவிட தங்களை மலையினமாக அடையாளப்படுத்திக்கொள்ள போராடிய போராட்டமே அதிகமாக இருந்துள்ளது. இதற்கு குறவரினத்தின் அனைத்துச் சங்கங்களும் போராடின. சான்றாக, 1.தமிழ்நாடு குறவர் மகா சனசங்கம் (1945) 2.தஞ்சை மாவட்ட மலைக்குறவன் மகாசன சங்கம், 3. குறவன் முன்னேற்றச் சங்கம் 4. தமிழ்நாடு குறவன் சமுதாய நலச்சங்கங்களின் கூட்டமைப்புச் சங்கம் 5.மதுரை மாவட்ட குறவன் சமுதாய நலச்சங்கம் 6.குறவர் பழங்குடி மக்கள் சங்கம் (2000) போன்ற இயக்கங்களைச் சுட்டலாம். 

மேலும் குறவர் சங்கங்கள் சமய மரபின் தொடர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள பழனி உள்ளிட்ட அறுபடை வீடுகளான முருகன் கோயில்கள் தங்களுக்கே பாத்தியப்பட்டது எனவும் அறங்காவலர் பணியைத் தங்களுக்கே வழங்க வேண்டுமெனவும் அரசின் முன் கோரிக்கை வைத்துப் போராடின. பழனி குறவர் மடத்தை மீட்க குறவர் முன்னேற்றக் கழகம் நிதியும் திரட்டியது. குறவர் சங்கங்கள் தங்களின் மலையினம் சார்ந்த பல்வேறு அடையாளங்களை முன் வைத்து கடந்தகாலங்களில் போராடி வந்திருக்கின்றன. இதில் முதன்மையானது சாதிச்சான்றிதழ், சமய மீட்பு, குறவர் மக்கள் மீது போடுகின்ற பொய் வழக்குகளுக்கு எதிரான போராட்டம் (விடுதலைச்சிறுத்தைகளோடு இணைந்து தமிழ்நாடு  குறவர் பழங்குடி மக்கள் சங்கப் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து குறவன் முன்னேற்ற சங்கப் போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் குறவர் பழங்குடி விடுதலை முன்னணியும் இணைந்து நடத்திய மாநாடு) என தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. ஆனாலும் குறவர் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது. 

கல்வியுரிமை, அதிகாரப்பங்கீடு சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க குறவர் சங்கங்கள் போராடவேண்டிய தேவையை அவ்வளவாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. குறவர் இனம் தாழ்த்தப்பட்ட சமூகமா? பழங்குடியா? என்னும் அடையாளச்சான்றைப் பெறுவதில் பலவிதப் பார்வையும் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. 

No comments:

Post a Comment