Friday, August 25, 2017

குடிமக்கள் மீது ஓர் உளவியல் போர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது - புதுவிசை 48வது இதழ்

நாட்டின் வளங்களையும் உழைப்பையும் சேமிப்பையும் களவாடிக் கொழுப்பதற்கென, இதுகாறும் தான் உருவாக்கி வைத்துள்ள ஏற்பாடுகள் யாவும் காலாவதியாகிவிட்டதாக ஆளும் வர்க்கம் கருதுகிறது. எனவே அது நடப்பிலுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம், அரசியல் சாசனம், சட்ட திட்டங்கள், மரபுகள், மதிப்பீடுகள் என அனைத்தையும் தனது சுரண்டல் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக மாற்றியமைப்பதில் மும்முரமாகியிருக்கிறது. இதன் பொருட்டு அரசு இயந்திரமும் அரசாங்கமும் அப்பட்டமாக தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டுமென அது விரும்புகிறது. இந்த இழிமுயற்சியோடு லகுவில் பொருந்துவதாக சங் பரிவாரத்தை அடையாளம் கண்டுள்ள ஆளும் வர்க்கம் அதனிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்ததற்குரிய பலன்களை அதீதமாய் ஈட்டி வருகிறது.

சங் பரிவாரம், தனது அரசியல் கட்சியின் மூலம் எழுப் பிய ‘வளர்ச்சிஎன்ற முழக்கம் அதன் மெய்யான பொருளில் ஆளும் வர்க்கத்தின் லாப வளர்ச்சியையும் சுரண்டல் வேகத்தையுமே குறிக்கிறது. தனது இந்துத்துவச் சேனைகளின் பலத்தில் மத, சாதிய மோதல்களை நடத்தி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் சங் பரிவாரம், அந்தப் பதற்றம் என்னும் திரையின் மறைப்பில் மட்டுமீறிய கடனுதவி, கடன் தள்ளுபடி, மானியங்கள், வரிச்சலுகை, அரசுத்துறைகளை சல்லிசான விலையில் கொடுப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களை முடக்குவது என அரசதிகாரத்தை முழுமையாக திருப்பிவிட்டு இந்தியப் பெருநிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மடைமாற்றுகிறது. அதே வேளையில் போதிய சிகிச்சைக்கு வழியின்றி மருத்துவமனையிலேயே பச்சிளங் குழந்தைகளையும் சாகக் கொடுக்கிறது. வெகுமக்களுக்கு பிணங்களையும் கார்பரேட்டுகளுக்கு வளங்களையும் பகிர்ந்தளிக்கிறது சங் பரிவாரம்.  

மக்களுக்காக அரசு என்றில்லாது அரசுக்காக மக்கள் என்றாக்கும் சங் பரிவார ஆட்சி, ஒவ்வொருவரது அன்றாட தனிப்பட்ட வாழ்விலும் நேரடியாக தலையிட்டு கண்காணிக்கவும் ஒடுக்கவும் சட்டப்பூர்வமான வழிகளை பயன்படுத்துகிறது. தன்னோடு இணங்கிப்போகாத - மாறுபட்ட அரசியல் / பண்பாட்டு பின்புலம் உள்ளவர்களை தாக்கவும் அழிக்கவும் சிறுமைப்படுத்தவும் அவர்களது நிலைப்பாடுகளை குலைத்துப்போடவும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்யவும் பாசிஸ்ட்டுகளும் நாஜிகளும் கையாண்ட மனிதத்தன்மையற்ற அத்தனை வழிகளையும், கருஞ்சட்டை- பழுப்புச் சட்டைப் படைக்கு இணையான சட்ட விரோத காவி அமைப்புகளையும் சங் பரிவாரம் கைக்கொண்டுள்ளது. மனித சமூகத்தின் ஆழ்மனங்களில் நொதித்துக்கிடக்கும் கீழ்மைகளின் திரண்ட வடிவமாக உள்ள சங் பரிவாரம் அவற்றை வெளிப்படுத்துவதற்கும் பரவலாக்குவதற்கும் தேவையான ஒத்தாசைகளை ஆளும் வர்க்கத்திடமிருந்தும் அதன் ஊடகங்களிடமிருந்தும் எளிதாக பெற்றுக் கொள்கிறது.

அச்சத்தையும் பீதியையும் கிளப்பி மக்களின் யோசிப்பு முறையிலும் செயல்பாட்டிலும் மதிப்பீட்டிலும் குறுக்கீடு செய்து தம்மைத்தாமே முனைமழுக்கிக் கொள்கிறவர்களாகவும், சுய தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்கிறவர்களாகவும் மாற்றிக் கொள்ளும்படியாக குடிமக்கள் மீது ஓர் உளவியல் போரை சங் பரிவார ஆட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அறிவிக்கப்படாத ஓர் அவசரநிலை காலத்துக்குள் நாட்டைத் தள்ளிக் கொண்டிருக்கிற அது, குடிமக்களுக்கு தமது உடைமைகள் மீது மட்டுமன்றி உடல் மீதும் கூட முழு உரிமை இல்லை என்றதன் மூலம் அவர்களது உயிர் வாழும் உரிமையினையே கேள்விக்குள்ளாக்கி வந்தது. இந்நிலையில்,  தன்னைப் பற்றிய ரகசியங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான சுதந்திரம் அரசியல் சாசனத்தின் படி தனிநபரின் அடிப்படை உரிமைகளில் ஒன்று  என்கிற தீர்ப்பினை வழங்கியதன் மூலம் எதேச்சதிகார சங் பரிவார ஆட்சியின் செவுளில் அறைந்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

***
ஐஐடி, மருத்துவக் கல்லூரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், ஆண்டுக்கு 100 பில்லியன் அளவுக்கு பணம் புழங்கும் தொழிலாக உருவெடுத்து வருவதால் அதில் முதலீடு செய்தால் லாபம் கொழிக்குமென அசோசெம் போன்ற முதலாளிகள் சங்கம் கும்மாளம் போட்டு வந்த நிலையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியிருப் பது தற்செயலானதல்ல. தமிழக மக்கள் தமது வருங்கால தலைமுறைக்கென சுயமாக உருவாக்கிக்கொண்ட மருத்துவக் கல்லூரிகளையும் சமூக நீதியையும் நீட் ஏற்பின் மூலம் சங் பரிவார ஒன்றிய அரசிடம் பறிகொடுத்திருக்கிறது மாநில அரசு. வெவ்வேறு பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்களை ஒரேவகையான தகுதி நுழைவுத் தேர்வை எழுத வைப்பதே இயற்கை நீதிக்கு எதிரானது என்கிற நியாயத்தை உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்திப் பெறுவதில் தமிழக ஆட்சியாளர்கள் தவறியுள்ளனர். நீட்டை எதிர்த்த போராட்டம் சம்பிரதாயமானதாக அல்லாமல் சமூக நீதியை, மாநில உரிமையை, மாணவர்களின் எதிர்காலத்தை மீட்டெடுப்பதற்கானதாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

***
புதுவிசையை 50வது இதழுக்குப் பின் இணைய இதழாக கொண்டுவர உத்தேசம். சந்தாக்களை திரட்டுவதில் எங்களது குறைமுனைப்பாலும், விற்பனைத்தொகையை பெறுவதிலுள்ள இடர்ப்பாடுகளினாலும் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையினால் இந்த முடிவு. இந்நிலையில் திருச்சி BHEL தொழிலக வாசகர்கள் ‘மிகுதிநேரப் பணி செய்தாவது எம்மாலான நிதியுதவியைச் செய்கிறோம், புதுவிசையை அச்சு வடிவிலேயே தொடருங்கள்என்று பத்தாயிரம் ரூபாயை முதல் தவணை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். நிதிநிலை சீரடையுமாயின் தோழர்களின் நன்னோக்கையும் விருப்பத்தையும் புதுவிசை நிறைவேற்றும்.

- ஆசிரியர் குழு, புதுவிசை

செப்டம்பர் முதல்வாரத்தில் கிடைக்கும்.
பிரதிகளுக்கு: ந.பெரியசாமி - 9487646819

No comments:

Post a Comment