Wednesday, July 13, 2016

புதுவிசை 46வது இதழின் காலங்கம்


டைமையிலும் உற்பத்தியிலும் உற்பத்தி செய்யப்பட்டவற்றை தமக்குள் பகிர்ந்து கொள்வதிலும் இந்தியச் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வையும் சுரண்டலையும் கட்டிக்காக்கும் சட்டப்பூர்வமான அடியாட்படையே இங்குள்ள அரசமைப்பு. “பொத்தாம் பொதுவானது” என  ஜிகினா பூசி திரிந்தாலும் சுரண்டும் வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றவே அது கடமைப்பட்டுள்ளது. அது பேசும் அறம் முறம் நீதி சட்டம் ஒழுங்கு நாட்டுப்பற்று என்பவையெல்லாம் சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்கு உட்பட்டவையே.  நாடாளுமன்றம் சட்டமன்றம் நீதிமன்றம் ராணுவம் காவல்துறை சிறைகள் வங்கிகள் கல்விக்கூடங்கள் மதங்கள் கட்சிகள்  ஊடகங்கள் ஆகியவையும் தமக்குரிய வேலைப் பிரிவினையை திறம்பட நிறைவேற்றி சுரண்டும் வர்க்கத்திற்கே சேவை செய்யும் கேவலம் அன்றாடம் அம்பலமாகி வருகிறது.

ஊரும் உலகும் பார்த்திருக்க யாராலும் பகிரங்கமாக திருட முடியுமா? முடியும் என்கிறார்கள் இந்தியாவின் பெருவணிகக் குழுமங்களின் முதலாளிகள். ஆமாம், அவர்கள் எவ்வித தடங்கலுமின்றி சட்டப்பூர்வமாக இந்த நாட்டின் வளங்களையும் நிதியாதாரங்களையும் மக்களது சேமிப்பையும் போட்டிப் போட்டுக்கொண்டு திருடுகிறார்கள். அவர்கள் கன்னக்கோல் வைக்கவும்  களவெடுக்கவும் களவெடுப்பதை பதுக்கவும் தேவையான உதவிகளை இந்த நாட்டின் அரசாங்கமே செய்கிறது. மக்களது குமுறல், கட்சிகளின் கண்டனங்கள், நாட்டுநலனில் அக்கறையுள்ளோரது அறிவுரைகள் என்று எதையும் பொருட்படுத்தாமல் இந்தத் திருட்டுக்கூட்டத்திற்கு காவலிருக்கிறது அரசாங்கம். நாட்டு மக்களையும் இந்த முதலாளிகள் தமது அடிமைகளாகப் பங்கிட்டுக் கொண்டதாக அறிவிக்கும் நிலைமை வெகுசீக்கிரத்தில் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

***
இரவு 11 மணிக்கு மேல் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி குடிமக்களின் நடமாட்டச் சுதந்திரத்தைப் பறித்துவந்தன மத்திய மாநில அரசுகள். ஆனால் இப்போதோ  10 பேருக்கு மேல் பணியாற்றும் பெருங்கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள் போன்றவை 24மணி நேரமும் செயல்படுவதே பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவருகின்றன. முதலீட்டாளர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுப்பதன்றி சாமானிய மக்களின் நலன் என்று இதில் எதுவும் இல்லை.


பொருளாதாரத்தளத்தில் நடக்கும் கொள்ளைகள், சமூக நலன்சார் திட்டங்களை ஒழித்துக் கட்டும் அரசின் பொறுப்பின்மை, அன்றாடம் கீழிறங்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம், மதப்பெரும்பான்மை வாதத்தின் பெயரால் சிறுபான்மையினர்மீது ஏவப்படும் தாக்குதல், பார்ப்பனீயத்தை சகல மக்கள் மீதும் திணிக்கும் பண்பாட்டு மேலாதிக்கம், தலித்துகள் மற்றும் பெண்கள் மீது நாளும் பொழுதும் பெருகிவரும் வன்கொடுமைகள் என்று எல்லாப் பக்கமிருந்தும் சூழும் பிரச்னைகளால் நிலைகுலைந்து கொண்டிருக்கிறது சமூகம். சமூக வாழ்வின் எந்தவொரு தளத்தில் எழும் பிரச்னைக்கும் தீர்வு கண்டிடும் உள்ளக வலுவை ஒருபோதும் பெற்றிட முடியாமல் இந்திய ஆளும் வர்க்கம் தத்தளித்துக்கொண்டிருப்பதன் அவலமான வெளிப்பாடே இப்பிரச்சினைகள். சமூகத்திற்கு தலைமைதாங்கும் யோக்கியதாம்சத்தை இவ்வாறு முற்றிலும் இழந்து நிற்கும் ஆளும் வர்க்கமானது மக்கள் மீதான கண்காணிப்பையும் ஒடுக்குமுறையையும் கடுமையாக்குவதன் மூலம் தனது ஆயுளை நீட்டித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆயினும் சொந்த வாழ்வனுபவம் நெட்டித்தள்ளும் போது மக்கள் எது கண்டும் அஞ்சாது போராடத் துணிவார்கள் என்பதை பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போராட் டம் மறுபடியும் நிரூபித்தது. தமக்கு தலைவர்களென யாருமில்லை என அவர்கள் சொன்னாலும், வருங்கால வைப்பு நிதி தொடர்பான புதிய சட்டம் தங்களுக்கு எதிரானது, அது முறியடிக்கப்பட வேண்டும் என்று விழிப்படைந்த தொழிலாளர்களின் கூட்டு மனசாட்சிதான் அந்தப் போராட்டத்திற்கு  தலைமையேற்று நடத்தி அரசைப்  பின்வாங்கச் செய்திருக்கிறது. ஆளும் வர்க்கம் ஏற்படுத்தும் நெருக்கடியானது, வர்க்கப் போராட்டத்திற்கான களத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான தேவையை அதிகரித்திருக்கிறது.

***
தனது பதின்ம வயதிலிருந்து கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய, தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கத்தை உலகக்கண்  கொண்டு பார்த்து எழுதியும் பேசியும் இயங்கி வருகிற உயிர்க்களஞ்சியம் தோழர். எஸ்.வி. ராஜதுரை. அவரது வரலாறு என்பது ஆளும் வர்க்கத்தை எதிர்த்த செயற்பாடுகளின் வரலாறாகத்தான் விரியும் என்பதை ஆட்சியாளர்கள் சரியாகவே புரிந்துவைத்துள்ளனர். எனவேதான் அவர்கள், அவரைப் பற்றிய ஆவணப் படத் திரையிடலை தடுத்து அவரது களச்செயல்பாடுகள்  மீதும் கருத்தியல் செல்வாக்கின் மீதும் தமக்குள்ள அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தவிரவும் தம்மை விமர்சிப்பதற்கான வாய்ப்புகளையும் குடிமக்களுக்கு வழங்கிவிடுமளவுக்கு ஆட்சியாளர்கள் எப்போது ஜனநாயகவாதிகளாக இருந்திருக்கிறார்கள்?

- ஆசிரியர் குழு, புதுவிசை

1 comment:

  1. வாழ்த்துக்கள். - கிருஷ்.ராமதாஸ், துபாய் [பெரம்பலூர்].

    ReplyDelete