Showing posts with label கோ.ரகுபதி. Show all posts
Showing posts with label கோ.ரகுபதி. Show all posts

Tuesday, September 29, 2020

ஆதி-திராவிடர்: சாதியற்ற சமத்துவத்தின் அடையாளம் கோ. ரகுபதி

ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களால் பறையர்களை மட்டுமே சுட்டுவதற்கு தோற்றுவிக்கப்பட்டது என்ற வாதம்  இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.  அச்சொல் உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான பறையர், பள்ளர், சக்கிலி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்ட மக்கள் பிரிவினர் அனைவரையும் சுட்டுவதற்காகவும், தாங்கள்தான் தென்னிந்தியாவின் பண்டைய மக்களென அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுண்மையை முன்வைக்கும் அதேநேரத்தில் ஆதி-திராவிடர் சாதிகளைக் கடந்து சாதியற்ற, சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தும் கருத்தியலாக பரிணமிக்க முயற்சித்திருக்கும் வரலாற்றினையும் நிறுவுகிறது.             

முன்னுரை: சாதிப்படிநிலையை பிரதிபலிக்கும் பெயர்

 இந்திய சாதியச் சமூகத்தில் பெயரில் என்ன இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பினால், பதில் அம்பேத்கரிடமிருந்து கிடைக்கிறது: பெயர்கள் ஒரு முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளன. அவை சமூகப் பொருளாதாரத்தில் மகத்தான பங்கை வகிக்கின்றன.  பெயர்கள் என்பவை அடையாளக்குறிகள்.  ஒவ்வொரு பெயரும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய குறிப்பிட்ட கருத்துக்களையும் எண்ணப்போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.  அது ஒரு ‘லேபிள்’ அடையாளச்சீட்டு. இந்த அடையாளச்சீட்டிலிருந்து அது என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்கிறார்கள் (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467). 

அம்பேத்கரின் இக்கூற்று விளக்குவதாவது: ஒருவரின் அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியின் சமூக, பொருளாதாரப் படிநிலையைப் பிறருக்கு எடுத்துரைக்கும் தனிச்சிறப்பினைப் பெயர்கள் பெற்றிருக்கின்றன. சமூகப்படிநிலையைப் பிரதிபலிக்கும் தன்மையைப் பெயர்கள் பெற்றிருக்கின்ற பொழுது, பெயர் சூட்டுதல் என்னும் நிகழ்ச்சி இந்தியச் சமூகத்தில் தனிநபர்களின் / தனித்த சாதிகளின் சுதந்திர உரிமைக்குட்பட்டதாக இருந்திருக்கிறதா? அல்லது புறக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறதா? ஆம் என்றால் அப்புறக் கட்டுப்பாடு எது? என்ற கேள்விகள் இவ்விடத்தில் தவிர்க்க இயலாததாய் எழுகிறது.  இந்தியாவிலுள்ள சாதிகளின் தொழில், உணவுப்பழக்கம், ஆண், பெண் உறவு என சகலத்திற்கும் கறரான சட்டங்களை வகுத்தளித்திருக்கும் மநு நால்வருணத்திற்குள்ளிருக்கும் ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் வழங்கியிருக்கும் பெயர் என்ற அடையாளச்சீட்டு: பிராம்மணன் பெயர் மேன்மையைக் குறிக்கும் ‘சர்மன்’, க்ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் ‘வர்மன்’, வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் ‘பூபதி’, சூத்திரனுக்கு பணி விடையைக் குறிக்கும் ‘தாசன்’. (திருலோக சீதாராம், 2000:14).  மநுவின் இச்சட்டம், பெயரிடுதல் என்பது மநு என்ற புறக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாயிருந்திருக்கிறது என்பதையே தெளிவுபடுத்துகிறது.       

நால்வருண அமைப்பில் இடம்பெற்றிராத உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்கட்பிரிவினர், இந்த அடையாளச்சீட்டினைச் சூட்டிக் கொள்வதற்கு உரிமை மறுக்கப்பட்து.  சாதிக்கு புறத்தேயுள்ளோர், பறையர், பஞ்சமர், தீண்டத்தகாதோர், ஹரிஜன் போன்ற பெயர்களால் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டோ அல்லது வெறுப்பிற்குள்ளாகியோ அழைக்கப்பட்டனர்.  தீண்டத்தகாதோர் என்ற பெயர் குறித்து அம்பேத்கர் கருதியது (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467): ‘தீண்டப்படாதவர்’ என்ற பெயரானது ஒரு கெட்ட பெயராகும்.  அது அருவருப்பூட்டுகிறது; பயமுறுத்துகிறது; முடைநாற்றம் வீசுகிறது.  ‘தீண்டப் படாதவர்’ என்ற பெயரிலிருந்தே தீண்டப்படாதவர் குறித்து இந்துவின் சமூக அணுகுமுறை தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.  ‘தீண்டப்படாதவர்’ எவ்வளவு தகுதி பெற்றிருந்த போதிலும்கூட, மக்கள் தீண்டத்தகாதவர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகுதிகள் குறித்து ஆராய விரும்புவதில்லை. இதனையொத்த கருத்தொன்று மகாத்மா காந்தியால் பரவலாக்கப்பட்ட ஹரிஜன் என்ற பெயர் மீதும் எழுப்பப்பட்டது.  பெயரில் என்ன இருக்கிறது? என்று தலைப்பிட்டு பெயர் குறிப்பிடப்படாத வாசகர் ஒருவர் மகாத்மா காந்தியிடம் எழுப்பிய கேள்வி: ஹரிஜன் பெயர் எவ்வளவு புனிதமாகயிருந்தாலும் சரி, அது யாரைக் குறிக்கிறதோ அவர்கள் மனத்தில் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அப்பெயரே புகுத்திவிடுகிறதென்று நான் நினைக்கிறேன்.  அவர்கள் எவ்வளவு முன்னேற்றமடைந்தாலும், ஹரிஜன் என்ற பெயராலேயே அழைப்பதாயிருந்தால், அத்தகைய எண்ணத்தை அவர்கள் மனத்திலிருந்து அகற்றவது மிகவும் கடினமாக இருக்கும்.  ஹரிஜன் என்றவுடனேயே, தீண்டாமை, தாழ்த்தப்பட்டயென்பவை தான் பாமர மக்களுக்குப்படும்.  இயற்கையிலேயே இத்தகைய எண்ணத்தைப் புகுத்தாமலும், எடுத்தவுடனேயே தாழ்த்தப்பட்ட நிலையைக் குறிக்காமலும் உள்ள ஒரு பெயரை உபயோகிப்பது நல்லதல்லவா? மற்ற வகுப்பினரையும் தழுவக்கூடிய ஒரு பெயரை உபயோகிப்பது உசிதமல்லவா? (தமிழ் ஹரிஜன், 1946: 5).  

இந்திய சாதி அமைப்பில்  ஒரு தனிநபர் அல்லது சாதியின் படிநிலை, சமூகத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமை, பணி போன்றவைகளைக் கண்டறிய, ஒரு வட்டத்திற்குள் ஒருவர் அல்லது சாதி இணைத்துக் கொள்ளப்படுவதற்கும் அல்லது ஒதுக்கப்படுவதற்கும் பெயர் ஒன்றே போதுமானதாக இருந்து வருகிறது.  உச்சபட்ட தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் காலனிய ஆட்சிக்காலத்தில் தங்களை சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகப் போராடிய போது, பிறரால் வழங்கப்பட்ட பெயர்கள் அவர்களின் சமூக முன்னேற்றத்தில் இடர்ப்பாடுகளையே ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்திருக்கின்றனர். இப்பெயர் மாற்றப்பட்டாலொழிய அவர்களுடைய சமூக அந்தஸ்தில் உயர்வதற்கான சாத்தியப்பாடே இல்லை என்கிறார் அம்பேத்கர் (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் 1997: 468).  மானிடவியல் அறிஞர் ராபர்ட் டெலீஜ்,  சமூக ஒழுங்கில் முன்னேற விரும்பும் ஒரு சாதி தனது இலக்குகளையும் உரிமை கொண்டாடுதலையும் பிரதிபலிக்கும் பெயரைக் கைக்கொள்வது இயல்பானது என்கிறார் (Robert Deliege, 1997:123).  பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதும், புதிய பெயரினைச் சூட்டிக்கொள்வதும் அல்லது இருக்கின்ற பெயரை மாற்றுவதும் ஒரு சமூக இயக்கத்தின் நிகழ்ச்சிநிரலில் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.  

தமிழ்ச்சமூகத்தில் நால்வருணம் இல்லாதிருந்தபோதும் கூட கம்மாளர் (அரசாணை எண். 1802) இடையர் (யாதவ மித்ரன், 1930) போன்ற சாதிகள் தங்கள் சாதியின் பெயரை விஸ்வபிராம்மணன், யாதவ் என்று மாற்றிக்கொண்டனர்.  தீண்டத்தகாதோர், பஞ்சமர், பறையர், சாதிக்கு புறத்தேயுள்ளோர் என அழைக்கப்பட்ட மக்கள், தங்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைக்கெதிராய் காலனிய ஆட்சிக் காலத்தில் திரளான அம்மக்கள் ஆதி-இந்து (Nandini Gooptu, 2006), ஆதி-தம் (Ronki Ram, 2004), ஆதி-திராவிடர் போன்ற பெயர்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.  மண்ணின் மைந்தர்கள், ஆரியருக்கு முற்பட்டோர் என்ற உரிமையைக் கொண்டாட இவர்கள் ஆதி என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினர் (Gail Omvedt, 1991: 18-19; Susan Bayly, 2000: 246).  பெயர் மாற்றத்தில் ஈடுபட்ட முன்னவர்கள் - அவர்கள் திராவிடர்களாகவே இருந்த போதிலும், பார்ப்பனியமயமாக்கலை முன்னெடுத்தனர். ஆனால், பின்னவர்கள் அதற்கு நேரெதிரான திராவிடத்தை கைக்கொண்டனர். 

பிளவுபடுதலுக்கு இரையாக்கப்பட்ட ஆதி-திராவிடர் 

சாதி இந்துக்கள் காலனிய ஆட்சிக்குப் பின்னர், சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக தங்களிடையேயுள்ள உட்சாதிப் பிரிவுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்களை தனித்த பெரும் சாதியாக மாற்றிக்கொள்ளும் சாதி அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், அனைத்துச் சாதி இந்துக்களும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து கொள்கின்றனர்.  இவ்விணைவிற்கான வெளிப்படையான அல்லது ரகசியமான உரையாடல் எப்பொழுதுமே அவர்களிடம் இருந்து வருகிறது.  உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள்மீது காலனிய ஆட்சிக்குப் பின்னர் சாதி இந்துக்களால் நடத்தப்பட்டு வரும் வன்முறைகளே இதற்கு சாட்சி.  ‘ஒன்றிணைதல்’ என்பது சாதி இந்துக்களின் அரசியலாக இருந்துவரும் சூழலில் வெளிப்படையாகவே பகையுணர்வுடன் ‘பிளவுபடுதல்’ தாழ்த்தப்பட்ட மக்களின் சமகால அரசியலாக இருந்து வருகிறது.  ஆதி-திராவிடர் என்ற பெயருக்கெதிராக அருந்ததியர் மற்றும் ம(ப)ள்ளர்  இயக்கங்களின் போராட்டங்கள் பிளவுபடுதல் அரசியலில் முதன்மைப் பாத்திரம் வகித்துவருகின்றனர்.  உண்மையில், ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி சமீப காலமாகவே பிளவுபடுதல் அரசியலின் முதன்மையான இரையாகிப் போனது என்றால் அது மிகையான மதிப்பீடு அல்ல.   

பஞ்சமர், பறையர்  ஆகிய பெயர்களுக்கு மாற்றாக ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சியை அறிவித்திருந்த போதிலும் அது ‘’பறையர்’’ எனப்படும் சாதிக்கு மட்டுமே உரியது; அது எங்களுடையது அல்ல என்று ம(ப)ள்ளர் மற்றும் அருந்ததியர் இயக்கங்கள் போராடி வருகின்றன.  தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம் ‘’அரிஜன்’’ என்ற பெயரையே மீண்டும் அமுல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் 1980களில் வழக்கு தொடர்ந்தது (தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம், திருச்சிராப்பள்ளி, வெளியிட்ட துண்டறிக்கை.  இது வெளியிடப்பட்ட தேதி அச்சிடப்பட்டிருக்கவில்லை).  சுயசாதி அரசியல் வலுப் பெற்றிருக்கும் இக்காலத்தில் அட்டவணைச் சாதியினரை ஆதி-திராவிடர் என்றழைக்க வேண்டுமென்ற அரசாணை (எண். 13/ஆர்டி-அநமு 1/07-1, 07 பிப்ரவரி 2007) தமிழக அரசாங்கத்தால் தற்போது வெளியிடப்பட்டிருப்பது போராட்டத்தை மேலும் தூண்டியிருக்கிறது.  (தினமணி 17 நவம்பர் 2007: 5; தினகரன் 19 நவம்பர் 2007: 4). ‘ஆதி-திராவிடர்’ என்னும் சொல்லாட்சி பறையரை மட்டுமே குறிப்பதற்கு பறையர்களால் முன்மொழியப்பட்டு நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது என்பது அப்பெயரை எதிர்ப்பவர்களின் வாதம்.  Scheduled Caste’ என்ற ஆங்கிலச் சொல்லாட்சியை அட்டவணைச் சாதியினர் என்று மொழிபெயர்ப்பு செய்வதற்குப் பதிலாக ஆதி-திராவிடர் என பெயர் சூட்டியிருப்பது மாற்றப்படவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.  எனவே, இக்கட்டுரை இனிவரும் பகுதியில் விவாதிக்க இருக்கின்ற சிக்கல்கள்: காலனிய ஆட்சியாளர்கள் பஞ்சமர், பறையர் என்ற பெயர்களை எந்த மக்கட்பிரிவினரை சுட்டுவதற்காகக் கையாண்டனர்?  சென்னை மாகாண அவையில் முன்மொழியப்பட்ட ஆதி-திராவிடர் என்னும் பெயர், பறையருக்கு மட்டுமான மாற்றுப்பெயரா? அல்லது பறையரைப்போல் ஒடுக்குமுறைக்குள்ளான அனைத்து மக்கட்பிரிவினரையும் சுட்டுவதற்காக முன்மொழியப் பட்டதா?  ஆதி-திராவிடர் என்னும் சொல்லாட்சி அடையாளப் பெயராக மட்டுமே முன்மொழியப்பட்டதா? அல்லது ஆரியர்களுக்கு (பிராமணர்) முற்பட்டோர், சாதியற்றோர் என வரலாற்றையும், கருத்தியலையும் பிரதிபலிக்கும் நோக்கத்துடனும் அப்பெயர் முன்நிறுத்தப்பட்டதா? 

பஞ்சமர், பறையர் சுட்டுவது யாரை? 

ஆதி-திராவிடர் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி பொது எண்ணமும் பிரதிபலிப்பது: பறையருக்கான  மாற்றுப்பெயரே ஆதி-திராவிடர்.  இக்கருத்தினை உறுதிசெய்வதற்கு காட்டப்பட்டுவரும் ஒரேயொரு ஆதாரமான அரசாணை எண். 817 அறிவிப்பதானது : 1. தென்னிந்தியாவிலுள்ள பண்டைய திராவிட சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படும் சொற்களான ‘பஞ்சமாஅல்லது ‘’பறயா’’ அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக தமிழகத்தில் ஆதி-திராவிடர் என்றும், தெலுங்கு மாவட்டங்களில் ஆதி-ஆந்திரா என்ற சொற்களும் பயன்படுத்தப்பட வேண்டும். (That this Council recommends to the Government that the terms ‘Panchama’ or ‘Paraya’ used to designate the ancient Dravidian community in Southern India should be deleted from  Government records, etc., and the term ‘Adi-dravida’ in the Tamil and ‘Adi-andhra’ in the Telegu districtse substituted instead’) 

2. அரசாங்கத்திற்கு ‘ஆதி-திராவிடர்’,‘ஆதி-ஆந்திரர்’ என்றழைப்பதில் எதிர்ப்பு இல்லை.  ஆனால், பழைய அரசு ஆவணங்களை மறுமதிப்பு செய்ய இயலாது.  பஞ்சமர், பறையர் ஆகிய சொற்களுக்குப் பதில் ஆதி-திராவிடர், ஆதி-ஆந்திரர் மற்றும் திராவிட என்ற பெயர்கள் பயன்படுத்தப்படும்.   

மேற்குறிப்பிடப்பட்ட அரசாணை, ‘தென்னிந்தியாவிலுள்ள பண்டைய திராவிடச் சமூகத்தை’ குறிப்பதற்குப் பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் பயன்படுத்தப் படுவதாகத்தான் கூறுகிறது; மாறாக ‘பறையர்’ என்றழைக்கப்படும் பிரிவினரையோ அல்லது ‘அவர்களை மட்டுமே’ குறிப்பதற்காகவோ அல்ல என்பது தெளிவு.  இருப்பினும்கூட அது பறையரை மட்டுமே குறிக்கப்பயன்படுத்தப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் நிர்வாகத்தேவைக்கு சாதிகளைக் கணக்கெடுத்த பொழுது நால் வருணத்திற்குள்ளே இருந்தோரை குறிப்பிட்ட பெயரில் பதிவு செய்வதில் சிக்கல் எழுந்திருக்கவில்லை.  இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று மநு வரையறை செய்திருப்பது இச்சிக்கலற்ற தன்மைக்குக் காரணம்.  ஆனால், நால்வருணத்திற்கு வெளியே இருந்த மக்கள் பிரிவினரைக் குறிப்பாக உச்சபட்ச தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து வந்த மக்களை என்ன பெயரில் அழைப்பது என்ற சிக்கல் காலனிய ஆட்சியாளர்களின் முன்னெழுந்தது.  அவர்கள் இம்மக்களை ‘’பறையா’’, ‘’சாதிக்கு வெளியேயுள்ளோர்’’ என்றே அழைத்தனர் (Simon Charsley,1996: 5). 1871ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்- பறையா, பள்ளன், சக்லெர் (சக்கிலியர்), தோட்டி போன்றோர் பறையாஸ் (Pariahs) என்பதின் உட்பிரிவு- என்றே ஆங்கிலேயர்கள் கருதியுள்ளனர் (Census of 1871, 1874:170).   1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் பள்ளர் மற்றும் சக்கிலியர் ‘’பறையா’’ என்றே வகைப்படுத்தப்பட்டனர்.  இது தவறு, அவர்கள் பறையரிலிருந்து வேறுபட்ட பிரிவினர் என்றும் அவர்களை தனித்தனியே வகைப்படுத்த வேண்டும் என்றும் உணர்ந்தனர் (F.A. Nicholson,1887). 1891ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் பள்ளர்கள் உட்பிரிவு வாரியாக கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றனர் (Harold A.Stuart,1891:247). ‘பஞ்சமா’ என்ற பெயர் 1893ல் பயன்படுத்தப்பட்டுள்ளது (Simon Charsley, p.5).  இது பறையர், சக்கிலியர், குறவர், வில்லியர் போன்றோரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (Aloysius, 1998: 152). கர்நாடகாவைச் சேர்ந்த ஹோலியர்கள் தங்களுக்குப் பஞ்சமர் என்ற பெயரினை வழங்கியதற்காக சென்னை அரசாங்கத்திற்கு நன்றி செலுத்தியிருப்பது இதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் (Census of India, 1931: 342).  1901, 1911 மற்றும் 1921 கணக்கெடுப்புகளில் பறையன், பள்ளன், சக்கிலியன் என்று தனித்தனியே கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும், பறையா என்ற சொல்லை ‘பறையன்’ என்ற பிரிவினரையும் இதர ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரையும் சுட்டுவதற்குப் பயன்படுத்துவதாக 1930களிலும் அவர்கள் கூறியிருக்கின்றனர் (அரசாணை எண். 4554).  ஆதி-திராவிடா என்ற மாற்றுப்பெயர் அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட  வேண்டுமென்ற அரசாணை அமலுக்கு வந்த பின்னர் 1931ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆதி-திராவிடர், அருந்ததியர், சக்கிலியன், தேவேந்திரகுலத்தான், குடும்பன், மாதாரி, மாதிகா, மாலா, பள்ளன் மற்றும் பறையன் என்ற பெயர்களிலும் அம்மக்கள் பதிவு செய்யப்பட்டிக்கின்றனர் (Census of India 1931, Vol.XIV, Part.II). மேற்காட்டப்பட்ட ஆதாரங்கள் பஞ்சமர், பறையர் ஆகிய சொல்லாட்சிகளைக் காலனிய ஆட்சியாளர்கள் பறையரை மட்டுமின்றித் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான இதர மக்களையும் குறிப்பதற்கு பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை உறுதி செய்கிறது. ஆகவே, ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையருக்கு மட்டுமான மாற்றுப்பெயரல்ல.  இருப்பினும், ஆதி-திராவிடா என்ற பெயர் அமலுக்கு வந்ததற்கான சுருக்கமான போராட்ட வரலாற்றுடனும், அப்பெயரை மையப்படுத்தி நடைபெற்ற விவாதத்தின் ஊடாகவும் அப்பெயர் பறையருக்கு மட்டுமானதா என்பதைக் காண்பது இங்கு அவசியமாயிருக்கிறது. 

ஆதி-திராவிடர்: 30 ஆண்டுப் போராட்டம் 

பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி-திராவிடர் என்று மாற்றம் செய்வதற்கான போராட்டம் 1892-ஆம் ஆண்டு முதலே நடைபெறத் தொடங்கியிருக்கிறது.  பி.வி. சுப்ரமண்யம் பிள்ளை, வி. முகுந்து பிள்ளை, முனுசாமி பிள்ளை, ராஜரத்னம் பிள்ளை, சண்முகம் பிள்ளை, ஒங்காரம், முத்துகிருஷ்ண பிள்ளை, திருப்புகழ் அம்மாள், வேணுகோபால் பிள்ளை, வாசுதேவ பிள்ளை மற்றும் எம்.சி. ராஜா ஆகியோர் மாண்றேகு செம்ஸ்ஃபோர்டை சந்தித்து பெயர் மாற்றக் கோரிக்கையை முன்வைத்தனர்.  ஜனவரி 1922 ஆண்டில் 50,000 பேர் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது.  சென்னை மாகாண அவை உறுப்பினர் வீரையன் கோயம்புத்தூரில் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். மாநாடுகளும் கூட்டங்களும், தஞ்சாவூர், மலபார், திண்டுக்கல், செங்கற்கட்டு, வட மற்றும் தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி, பங்களூர் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டிருப்பது ஆதி-திராவிடா பெயருக்கான போராட்டம் அன்றைய சென்னை மாகாணத்தையும் கடந்து நடந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  இதற்கென பல அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளும் வெளியிடப்பட்டன. சுமார் 30 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் இறுதியாக, அரசாணை 817க்கான தீர்மானம் சென்னை மாகாண அவையில் எம்.சி.ராஜா 20 ஜனவரி 1922 அன்று முன்மொழிந்தார் (MLCD, 20 ஜனவரி 1922: 2047). உண்மையில், ஆதி-திராவிடர் சொல்லாட்சிக்கான போராட்டத்தில் பறையர் என்றழைக்கப்படும் மக்கள் அதிகம் பங்கேற்றிருக்கலாம்.  அவ்வாறென்றால் பறையருக்கு மட்டுமானது தானே ‘ஆதி-திராவிடர்’ என்று வாதிடலாம். இவ்வாதம் ஏற்றுக்கொள்ளப் படுவதை குறுக்கிடும் கேள்வி: ஆதி-திராவிடர் என்ற பெயரினை பறையர்கள் தங்களுக்கு மட்டுமே உரியதென உரிமை கோரினரா?  இச்சிக்கலுக்கான தீர்வுக்கு, சென்னை மாகாண அவையில் ஆதி-திராவிடர் பெயர் மாற்றத்தை முன்வைத்தவர்களின் விவாதத்தைக் காண வேண்டும்.   

ஆதி-திராவிடர்: சாதியற்றோரின் குறியீடு

பெயர் மாற்றத்திற்காக எம்.சி.ராஜா முன்வைத்தக் காரணங்கள்:  நாங்கள் நீண்டகாலமாக பறயாஸ் என்று அழைக்கப் படுகிறோம்.  இப்பெயரின் தோற்றம் என்னவாக இருந்தபோதிலும் இது- மகிழ்ச்சியற்ற, புனிதத்திற்கும் மரியாதைக்கும் எதிரானவற்றையே- வெளிப்படுத்துகிறது.  சுயமரியாதைக்கான எண்ணம் எழுந்த போது நாங்கள் இப்பெயரினை எதிர்த்து ஒரு நல்ல பெயருக்காகப் போராடினோம்.  எங்கள் மீது அக்கறை கொண்ட சில இந்துக்கள் பஞ்சமர் என்ற பெயரினைப் பரிந்துரைத்தபோது பறையருக்குப் பதிலாக அதனை ஏற்றுக்கொண்டோம்.  எங்கள் சுயமரியாதை அதிகரித்தபோது, பஞ்சமர் என்ற பெயரின் ஆபத்தையும் உணர்ந்தோம்.  சாதியை நிராகரிக்கும்- எங்களின் இனத்தையும் தோற்றத்தையும் புவியியல் நிலையையும் தெரிவிக்கும்- ஒரு பெயரே எங்களுக்கு வேண்டும்.  இம்மண்ணின் உண்மையான மைந்தர்கள் நாங்களே. எங்களை நாங்கள் ஒருபோதும் சாதியோடு இணைத்துக்கொண்டதில்லை.  எங்களின் சங்கத்தை சிலர் பறய மகாஜன சபா என்று அழைக்க நினைத்தபோது ‘ஆதி-திராவிட சபா’ என்று அழைக்கவே நாங்கள் தீர்மானித்தோம். ஆதி-திராவிடர்கள் (Adi-Dravidas) அல்லது உண்மையான திராவிடர்கள் (Original Dravidas) என்று அரசாங்கத்தின் அனைத்து ஆவணங்களிலும் பதிவுசெய்து எங்களுடைய சமூகம் மரியாதை பெறுவதற்கு உதவும்; இது எங்களைத் திராவிடர்களான பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இணையாக நிறுத்தும் (மேலது, 2048, 2051).    

எம்.சி.ராஜாவின் உரை, ஆதி-திராவிடர் என்ற பெயர் பறையர்களைச் சுட்டுவதற்கு முன்மொழியப்பட்டதாகவே கொள்வோம்.  சாதியை புறக்கணிப்பவர்களாகத் தங்களை முன்னிறுத்தியிருந்த அவர்கள் ஆதி-திராவிடர் என்ற பெயரைப் பறையர்களுக்கு மட்டுமென்றே சுருக்கிக்கொண்டார்களா? அல்லது தங்களையொத்த ஒடுக்குமுறையை அனுபவித்து வந்த இதர சாதியினருக்கும் விரித்துக் கொண்டனரா?  இவ்விடத்தில் பெயர் மாற்றத்திற்கான விவாதத்தில் பங்கேற்ற எஸ்.சோமசுந்தரம் பிள்ளை முன்வைத்த கருத்துக்கள்  கவனிக்கத்தக்கவை:  ஆதி-திராவிடர் என்ற சொல் தென்னிந்தியாவின் பண்டைய மக்கள் என்ற பொருளைத் தருகிறது.  ‘பறையர்’ என்ற வார்த்தை மரியாதைக்குரிய பொருளைப் பெற்றிருந்தது. ‘பறையர்’ என்பதின் பொருள் அரசனின் ஆணைக்கிணங்க போர் அறிவிப்பு செய்பவன்.  எதிரிகளால் எங்கள் நாடு பிடிக்கப்பட்டபோது நாங்கள் வறுமைக்குள்ளானோம்; பெயரும் திரிபுக்குள்ளாகி மதிப்பற்றதாக்கப்பட்டது. அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் ஆதி-திராவிட மக்கள் பறையர் என்ற பெயர் நீக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.  ஆனால், ஆதி-ஆந்திரர் என்ன பொருளைத் தருகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  சிலர் ஆதி-மலையாளி, ஆதி-கர்நாடகா என்று அழைக்கப் படுவதை விரும்பலாம்.  இவையனைத்தும் திராவிட மொழிகளே (மேலது, பக். 2050). ஆதி-திராவிடர் என்ற அழைக்கிறபொழுது அது தெலுங்கு, மலையாளி, கர்நாடகம் மற்றும் தமிழ் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.  சோமசுந்தரம் பிள்ளையின் உரை இரண்டு முரணற்ற பொருளைத் தருகிறது: 1.பறையர் ஆதி-திராவிடர் என்றழைக்கப்பட வேண்டும். 2. ஆதி-திராவிடரென்றால் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மக்களையும் குறிக்கும்.  இவ்விருவர்களின் உரையும் தரும் தீர்க்கமான பதில்: ஆதி-திராவிடா என்ற பெயர் பிறரால் சூட்டப்படாமல் அம்மக்களாகவே தாங்கள்தான் பண்டைய திராவிடர்கள் என்ற வரலாற்று உணர்வுநிலையோடு தெரிவு செய்து கொண்ட பெயர்.  பறயாவுக்கு அல்லது பறையர்களுக்கு என்று மட்டுமல்லாமல் தங்களைப்போல் ஒடுக்கு முறைக்குள்ளாகும் திராவிட மொழிகளாகிய தெலுங்கு, மலையாளம் மற்றும் கர்நாடகம் பேசும் மக்களுக்கும் அப்பெயர் வேண்டும் என்பதுதான்.  எனவே, ஆதி-திராவிடா என்ற பெயர் பறையர்களுக்கும் மட்டுமல்ல என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.   

இம்முடிவு உதாசீனம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பெயரினை எதிர்ப்பவர்கள் தங்களுடைய சாதிப்பெயர் அந்த அரசாணையில் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை என்று வாதிடலாம்.  எனவே, ஆதி-திராவிடர் பறையருக்கு மட்டுமல்ல என்ற வாதத்தை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரத்தை முன்வைப்போம். ஆர்.வீரையன், சென்னை மாகாண அவை செயலாளருக்கு 29 ஆகஸ்டு 1924 அன்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பறையர், பள்ளர், சக்கிலியர் மற்றும் தொம்பா போன்ற பெயர்கள் பொது ஆவணங்களில் இடம் பெறக் கூடாது; அவற்றிற்குப் பதிலாக ஆதி-திராவிடா மற்றும் ஆதி-ஆந்திரா ஆகிய பெயர்கள் தான் இடம்  பெற வேண்டும் என்பது குறித்துத் தீர்மானம் வரும் சென்னை மாகாண அவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.  இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப் பட்டு ஏற்கனவே அமுல்படுத்தப்பட்ட எண். 817 சட்டம் (பொது) 25 மார்ச் 1922 என்ற அரசு ஆணையோடு இணைத்து அமல்படுத்தப்பட்டது (அரசாணை எண்.3571).  இவ்வாணை, ஆதி-திராவிடா என்ற பெயர் பறையருக்கு மட்டுமல்லாது பள்ளர், சக்கிலியர், மாதிகா மற்றும் தொம்பா போன்ற சாதிகளுக்கும் உரியது என்பதை உறுதி செய்கிறது.  கேரளாவில் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான செருமர்கள் (புலையர்) உட்பட இதர மக்கள் தங்களை ஆதி-திராவிடர் என்று அழைக்கத் தொடங்கினர் என்பதும் இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டும் (Census of India 1931;p.335).  ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு, குறிப்பாக அப்பெயரை பல போராட்டங்களுக்கிடையே அமலுக்கு கொண்டுவந்த பறையர்களுக்கு மட்டுமின்றி, உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களுக்கும் விரித்துக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.   

இச்செயல் ஆதி-திராவிடர், ‘பெயர்’ என்ற தன்மையைக் கடந்து ஒதுக்குமுறைக்குள்ளான மக்களைத் தென்னிந்தியாவின் பண்டைய குடிகள் என்ற வரலாற்றினை உரிமை கொண்டாடியுள்ளது.  திராவிட மொழிக்குடும்பம் என்ற அடையாளத்துக்குள் திரளுவதற்கு முயற்சித்திருக்கிறது.  சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் சாதியற்றோராக விரிந்திருப்பதானது ஆதி-திராவிடர் கருத்தியல் தளத்திற்குள்ளும் சென்றிருக்கிறது என்பது தெளிவு.  எனவே, ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல, அது பறையர்களால் முன்மொழியப்பட்டிருந்த போதிலும்கூட.  இதனை வேறு வார்த்தையிலும் கூறலாம்: ஆதி-திராவிடா என்ற சொல்லாட்சி தங்களுக்கு மட்டுமானது என்று ஒருபோதும் பறையர்கள் உரிமை கொண்டாட இயலாத அதே சமயத்தில், பிறரும் அதனை பறையர்களுக்கு மட்டுமேயானது என வாதிடவும் இயலாது.  காரணம், சமத்துவத்திற்கான ஒரு கருத்தியல் ஒருபோதும் ஒரு சாதிக்கு மட்டுமே உரியதாக இருக்கமுடியாது, அக்கருத்தியல் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும்கூட.    

பறையர், பள்ளர், சக்கிலியர்: இழிபெயர்களுக்கெதிரான போராட்டம்  

தங்களால் இழிபெயர்கள் எனக் கருதப்பட்டவற்றை யார் பயன்படுத்தினாலும் அதனை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.  பறையர் என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்களை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது (Aloysius, 1998: 166).   கட்டுரையில் மேற்குறிப்பிட்ட அரசாணை அமலுக்கு வந்த பின்னர், அரசு ஆவணங்களில் பறையர், பள்ளர், சக்கிலியர், மாதிகா மற்றும் தொம்பா போன்ற பெயர்கள் இடம்பெற்றிருப்பதை எதிர்த்து சென்னை மாகாண அவைக்குள் குரலெழுப்பப்பட்டிருக்கிறது.  சில எடுத்துக்காட்டுக்கள்:

1. நீதிமன்ற அழைப்புக் கட்டளை மற்றும் நீதிமன்ற விசாரணையின்போது பறையன் என்ற பெயர் குறிப்பிடப் படுவதை சென்னை மாகாண அவையில் எதிர்த்தார் வீரையன்.   அவ்வாறு குறிப்பிடுவது தவறென்ற சட்ட உறுப்பினர் (சென்னை மாகாண அவையில் Law Member பதவியில் இருந்தவரை சட்ட உறுப்பினர் என இங்குக் குறிப்பிடப்படுகிறது) அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் (MLCD,Vol.XXIV1925:767-768). 

2. மேட்டுப்பாளையம் ஒன்றிய வாரியம் நாகன் என்பவருக்கு கொடுத்த அறிக்கையொன்றில் ‘சக்கிலியன்’ என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய வீரையன், அச்செயலை எதிர்த்தார்.  இத்தகைய பெயர் பயன்படுத்தக்கூடாது என்று அரசாணை இருந்தபோதும் இன்றும் அப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது; அரசாங்கம் அவ்வாணை அமல்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்குமா என்ற வினவினார்.  உள்ளாட்சித்துறை அமைச்சர் பனகல் அரசர், ‘இதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது.  அரசாங்கம் அத்தகைய பெயர்களைப் பயன்படுத்தாது என்று மட்டுமே கூறியது.  பிறர் அப்பெயர்களை பயன்படுத்தினால் சம்பந்தபட்டவர்களே நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார். ஆர்.வீரையன், ‘உள்ளாட்சி அமைப்பு அச்சிட்ட அறிக்கையில்தான் இவ்வாறு உள்ளது; தனிநபர்கள் அதைப் பயன்படுத்தவில்லை’ என்றார்.  பனகல் அரசர், ‘உள்ளாட்சி அமைப்புகளின் ஆவணங்கள் அரசாங்க ஆவணங்கள் அல்ல’ என்றார்.  ‘உள்ளாட்சி அமைப்புகள் அரசாங்கத்தின் ஒரு அங்கம் இல்லையா’ என்ற கேள்வியை எழுப்பினார் ஆர்.வீரையன்.  இறுதியில், குறிப்பிட்ட சம்பவத்தை கூறினால், ‘அது குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்’ என்றார் பனகல் அரசர்.  வீரையன் மீண்டும் மேட்டுப்பாளையம் சம்பவத்தை குறிப்பிட்டுக் கூறினார் (MLCD, Vol. XXIX, 1926: 590-591) 

3. நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் பறையர் பள்ளர் சக்கிலியர் பயன்படுத்தப்படுவது குறித்து சட்ட உறுப்பினர் பதிலளிக்குமாறு வீரையன் கோரினார்.  குறிப்பிட்ட சம்பவங்களைக் கவனத்திற்கு கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட உறுப்பினர் தெரிவித்தார்  (MLCD, Vol.XXX, 1926:248).  வீரையன் சென்னை மாகாண அவைக்குள் பறையன், பள்ளன், சக்கிலியன் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியதற்கு மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் போதுமானது.  இதிலிருந்து அறிந்துகொள்ள வேண்டியது: தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களின் பிரதிநிதிகளாகச் சென்னை மாகாண அவை உறுப்பினர்களானோர் பறையர், பள்ளர், சக்கிலியர் என்று பிளவுபடுத்தாமல் அனைவரையும் ஆதி-திராவிடர்களாகவே கருதினர் என்பது தெளிவு.  

ஆதி-திராவிடர்: சாதிக்கெதிரான சமத்துவக் கருத்தியல் 

கட்டுரையில் காட்டப்பட்டிருக்கின்ற மேற்கோள்கள் பஞ்சமர், பறையர் ஆகியவற்றிற்கு மாற்றாக ஆதி-திராவிடர் என்ற பெயர், பறையர்களின் போராட்டத்தினால் விளைந்திருப்பினும்கூட, அது பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல; மாறாக உச்சபட்சத் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான பள்ளர், சக்கிலியர் போன்ற சாதிகள் அனைவருக்குமான பெயராகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி தீண்டாமை ஒடுக்குமுறைக்குள்ளான மக்களின் பெயராக மட்டுமின்றி அது -சாதியைப் புறக்கணிப்பவர்கள், சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்துபவர்களின்- பெயராக இருந்திருக்கிறது. மேலும், அப்பெயர் திராவிடர்களின் ஒற்றுமைக்கானதாகவும் ஆரியர்களுக்கு (பார்ப்பனர்கள்) எதிரானதாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  ‘ஜாதிபேதத்துக்கும் ஜாதிக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதவர்களும், எக்காலத்துக்கும் யதார்த்தமும் உறுதியும், தருமசிந்தனையும் குடிகொண்டவர்களாகிய நம்மவர்கள்’ என்ற பறையர்களின் பகிரங்க அறிவிப்பு, ஆதி-திராவிடர் சொல்லாட்சியின் அரசியலுக்கு சாட்சி (திராவிட மகாஜன சங்கம் மற்றும் மெட்ராஸ் பறையா மகாஜன சங்கம் 1916 ஆண்டில் வெளியிட்ட துண்டறிக்கை).   ஆதி-திராவிடாவின் இலக்கு, திராவிடர்களான பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இணையாகத் தாங்கள் வரவேண்டும் என்பதே, மாறாக இந்துமயமாக்கல் (பார்ப்பனீயம்) அல்ல.  இந்த லட்சியத்திற்கு பறையர், பள்ளர், சக்கிலியர் போன்ற மக்களை ஒரு குடையின் ஒருங்கிணைக்கும் முயற்சியே ஆதி-திராவிடர் என்ற கருத்தியல்.  இக்கருத்தியலை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் பறையர் பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவ்வர்க்கம் அப்பெயரை தங்களுக்கு மட்டுமே உரியது என்று உரிமை பாராட்டாதிருந்த போதிலும் கூட, அது பறையர் சாதிக்கான மாற்றுப்பெயர் என்ற பார்வை தவறெனக் கட்டுரையில் மெய்ப்பிக்கட்டிருக்கிறது.  

சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்குமான கருத்தியலின் உருவாக்கத்தில் அல்லது அக்கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை நிறுவுவதற்காகப் போராடும் ஒரு இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் பங்கேற்கின்ற பொழுது, அம்மக்கட் பிரிவினர் அல்லாத பிறர் அக்கருத்தியலை அல்லது அவ்வியக்கத்தை அதில் பங்கேற்றிருக்கின்ற சாதிக்கு அல்லது சாதிகளுக்கு மட்டுமேயானது என்று பார்ப்பதும் அதனை பரப்புவதுமான செயலில் இறங்குவது இந்திய சமூக அமைப்பில் புதிதானதொன்று அல்ல.  இடதுசாரிகள் தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடிய போது அவ்வியக்கத்தில் கூலித்தொழிலாளிகளாகவும் பண்ணையடிமைகளாகவுமிருந்த பறையர், பள்ளர் அதிகமாக இருந்ததால் இடதுசாரி இயக்கம் ‘பறையன் கட்சி’, ‘பள்ளன் கட்சி’ என்றே பிறரால் அடையாளப்படுத்தப்பட்டதனை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும் (Saraswathi Menon, 1979:408). ஆதி-திராவிடர் என்ற கருத்தியலைப் பறையர்களுக்கான பெயர் என்று இன்று அடையாளப்படுத்தப்படுவதற்கும் இடதுசாரி இயக்கம் ‘பறையன் கட்சி’, ‘பள்ளன் கட்சி’ என்று அன்று அடையாளப்படுத்தப்பட்டதற்கும் இடையில் காலம் மட்டும் வேறுபாடே தவிர, பார்வை ஒன்றுதான்.  இந்நிலையை இவ்வாறு கூறலாம்: தமிழக/ இந்திய சாதிய சமூக அமைப்பில் அதனை புறக்கணித்துவிட்டு, சமத்துவத்தை வலியுறுத்தும் முற்போக்கு கருத்தியலை அல்லது இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே என்று அடையாளப்படுத்துவதன் மூலமும் ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பு தொடர்ச்சியாய் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.    

 (கட்டுரையை வாசித்து ஆலோசனை வழங்கிய  பேராசிரியர்கள் ஆ.தனஞ்செயன், சி.லக்ஷ்மணன், ஆய்வு மாணவர் ராமஜெயம் ஆகியோருக்கு நன்றி)     

 1. முதன்மைச் சான்று

 GO. 817, Law (General), 25 March 1922.

GO. 3571, Law (General), 16 December 1924.

GO. 4554, Law (General), 28 October 1930.

GO. 1802, Law (General), 20 April 1931

GO. 1458, Law (General), 11 April 1932. 

MLCD, 20 January 1922

MLCD, Vol. XXIV 1925.

MLCD, Vol. XXIX, 1926.

MLCD, Vol. XXX, 1926.

MLCD, 05 August 1932. 

Census of the Madras Presidency 1871 Vol.1(Madras: 1874)

Census of India 1931 Vol. XIV, Part. I

Census of India 1931, Vol. XIV, Part. II

யாதவமித்ரன் (மே-ஜூன், 1930).

தமிழ் ஹரிஜன் தொகுதி 14 (ஏப்ரல்: 1946). 

தினமணி, 17 நவம்பர் 2007.

தினகரன், 19 நவம்பர் 2007.  

2. இரண்டாம் நிலைச் சான்று

Aloysius, G. Religion as Emancipatory Identity: A Buddhist Movement Among the Tamils Under Colonialism (New Delhi: New Age, 1998). 

Bayly, Susan. Caste, Society and Politics in India (Cambridge: Cambridge University Press, 2000). 

Charsley, Simon. “Untouchable”: What is in a Name?’, The Journal of the Royal Anthropological Institute, Vol. 2, No. 1 (March: 1996). 

Deliege, Robert.  The World of Untouchables: Paraiyars of Tamil Nadu (Delhi: Oxford University Press, 1997). 

Gooptu, Nandini. Swami Acchutanand and the Adi Hindu Movement (New Delhi, Critical quest, 2006). 

Menon, Saraswathi. ‘Historical Development of Thanjavur Kisan Movement: Interplay of Class and Caste Factors’, EPW,  Vol. XIV, Nos. 7 and 8 (1979). 

Nicholson, F.A. Manual of the Coimbatore district in the Presidency of Madras (Madras: Government Press, 1887). 

Omvedt, Gail. ‘The Anti-Caste Movement and the Discourse of Power’, Race and Class, Vol. 33, No. 2 (1991).

 Ram, Ronk. ‘Untouchability, Dalit Consciousness, and the Ad Dharm Movement in Punjab’, Contributions to Indian Sociology, Vol. 38, No. 3 (2004).

 Stuart, Harold A. Census of India 1891 Vol. XIII.

டாக்டர் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் தொகுதி 10 (புது தில்லி: டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், 1997). 

சீதாராம், திருலோக, மனுதர்ம சாஸ்திரம் (சென்னை: அலைகள், 2000).

 

-       புதுவிசை, இதழ் 19, ஜன-மார்ச் 2008


Thursday, March 22, 2018

ஆனந்தம் பண்டிதர்: சித்த வைத்தியரின் சமூக வைத்தியம் - கோ. ரகுபதி

தமிழ்ச் சித்தவைத்திய நிபுணர், அறிஞர், களப் போராளி எனப் பன்முக அடையாளம் கொண்ட பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம் பிள்ளை (இனிவரும் பகுதியில் ஆனந்தம் பண்டிதர் எனக் குறிப்பிடப்படுவார்) தமிழ்ச்சமூக ஆளுமைகளின் வரலாற்றில் எழுதப்படாதவர். எந்தக் கருதுகோளையும் முன்வைத்துக்கொண்டு அவரைத் தேடவில்லை; நான் அவரைக் கண்டுபிடித்தது ஒரு விபத்துதான். முனைவர் பட்டம் பெறுவதற்காக தேவேந்திரர் சாதி இயக்கம் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது ஆதிமருத்துவர் சாதியின் மீதான கவனம் ஒரு கட்டுரையினூடாக ஏற்பட்டது. இதற்கு மேலும் தூபமிட் டது புதுமைப்பித்தன் எழுதிய ‘நாசகார கும்பல்’. இவை முனைவர் பட்ட ஆய்விலிருந்த என் கவனத்தைத் திசைதிருப் பியது. மருத்துவர் சாதி குறித்தத் தரவு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கினேன். அந்தச் சாதியைச் சேர்ந்த ஒரு சித்த வைத்தியர் ஆனந்தம் பண்டிதர் குறித்துக் கூறியதோடு பண்டிதர் நடத்திய மருத்துவன் இதழின் ஒருசில பக்கங்களையும் கொடுத்தார். அதைத் தமிழகத்தில் தனிநபர்கள் பலரிடமும் நூலகங்கள் பலவற்றிலும் தேடினேன்; மிஞ்சியது ஏமாற்றம்தான். என் முனைவர் பட்ட ஆய்வைத் தொடரவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக கிடைத்தத் தரவுகளைக் கொண்டு “ஆதிமருத்துவர்: சவரத்தொழிலாளராக்கப்பட்ட வரலாறு” என்னும் நூலை 2006ஆம் ஆண்டு வெளியிட்டேன்; அதில் ஆனந்தம் பண்டிதர் குறித்து சிறு அறிமுகம் மட்டும் கொடுக்கமுடிந்தது. நூல் வெளியீட்டு விழா முதன்முதலில் பாண்டிச்சேரியில் நிகழ்ந் தது. இவ்வாறு ஒரு நூல் வெளியாயிருக்கிறது என்பதை அறிந்த ஆதிமருத்துவர் சமூகத்தைச் சேர்ந்தவரும் சமூக விடுதலைக் கான அரசியல் செயல்பாட்டில் தன்னை இணைத்துக்கொண் டிருக்கும் அரிமாவளவன், கவிஞர் ஆலா ஆகியோர் அதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். அந்த நிகழ்வில் மருத்துவன் இதழைக்கண்டுபிடித்து அதனைத் தொகுத்துத் தமிழ்ச் சமூகத்திற்கு அளிப்பேன் என்ற என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன். 

அன்றுமுதல் என் தரவு சேகரிப்புப்பட்டியலில் மருத்துவன் இதழும் இணைந்துட்டது. இந்தத் தேடலில் சில வருடங்களுக்குப்பின்னர் ஆனந்தம் பண்டிதரைப் பற்றிய குறிப்புகளும் அவர் திராவிடன் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றும் கிடைத்தது. இருப்பினும், அவை போதுமான தரவுகளல்ல என்பதை உணர்ந்து மருத்துவன் இதழைத் தேடினேன். ஆதி மருத்துவர் புத்தகத்தை மறுபதிப்பு செய்து வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில் தீவிர தேடுதலில் ஈடுபட்டேன்; இருப்பினும் மிஞ்சியது ஏமாற்றமே. மறுபதிப்பும் ஆனந்தம் பண்டிதர் குறித்தச் சித்திரம் முழுமை பெறா மல் வெளிவர வேண்டிய நிலைமை உருவானபோது பெருத்த வருத்தமே என்னை ஆட்கொண்டது; இது மறு பதிப்பு நூல் எழுதுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. எனவே, மீண்டும் தேடிக்கொண்டே இருந்தேன், ஒரு நாள் திடீரென எதிர்பாராதவிதமாக அந்த இதழின் பெரும்பகுதியைக் கண்டெடுத்தேன்; பத்தாண்டுத் தேடுதலில் புதையல் ஒன்றைக் கண்டெடுத்த மகிழ்ச்சி. உடனடியாக அந்த இதழ் முழுவதையும் படிக்கத் தொடங்கினேன், அப்போது ஆனந்தம் பண்டிதர் தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான ஓர் ஆளுமையாகத் தெரிந் தார். தமிழ்ச்சமூக வரலாற்றில் இருக்கின்ற ஒரு பெருத்த இடைவெளியை ஆனந்தம் பண்டிதர் நிரப்ப இருக்கிறார் என்ற ஆனந்தம் பெருக்கெடுத்தது. எனவே, ஏற்கனவே வெளியிட்ட நூலில் ஆனந்தம் பண்டிதர் குறித்து விரி வாக எழுதுவது குறித்து முதலில் சிந்தித்தேன்; ஆனால் அவ்வாறு செய்தால் பண்டிதர் குறித்து முழுமையான சித்திரம் கிடைப்பது கடினம் என்பதால் அவர் குறித்துத் தனியாக ஒரு நூல் வெளியிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இதற்கு அடிப்படைக் காரணம் அவருடைய அறிவுச்செயல்பாடும் களப்போராட்டமும் ஆகும். எனவே, அவரது சிந்தனைகளைத் தொகுத்துத் தமிழ்ச்சமூகத்திற்கு அளிப்பது அவசியம் என்று உணர்ந்ததால் அது நூல் வடிவம் பெற்றுவிட்டது.   

தமிழ்ச் சித்தவைத்திய காவலர் 

ஆனந்தம் பண்டிதர் மருத்துவர் சாதியைச் சேர்ந்த கும்பகோணம் சாமிநாதன்-கமலம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார்; இந்தக் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அரசர் குடும்பங்களுக்கு வைத்தியம் செய்துவந்த னர். வைத்தியர் பரம்பரையில் பிறந்து வளர்ந்த ஆனந்தம் பண்டிதர் தன் சாதியின் பாரம்பரிய குலத்தொழிலான சித்த மருத்துவத்தைக் கைக்கொண்டிருந்ததோடு அதில் நிபுணத்துவமும் பெற்றிருந்தார்; இசை, நாடகம், கூத்து போன்றவற்றில் ஆர்வமிக்க அவர் தமிழ் இலக்கியத்தை யும் மருத்துவநூல்களையும் ஆழ்ந்து படித்தார். தமிழ்ச் சித்த வைத்தியமுறையைப் பாதுகாத்து அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணமும் அவருக்கிருந்தது. ஆனால் அவர் வாழ்ந்த அந்தக்காலத்தில் தமிழ்ச் சித்தவைத்தியம் ஆயுர்வேத, ஆங்கில மருத்துவம் ஆகிய இருமுனைத் தாக்குதலை எதிர்கொண்டது; முன்னது சுவீகரித்துக்கொள்ள எத்த னித்தது; பின்னது அழித்தொழிக்க முற்பட்டது. பிரிட் டிஷ் ஏகாதிபத்தியம் தன் அரசியல் பொருளாதார நலனுக் காக ஆங்கில மருத்துவத்தைப் பரப்பியது; சென்னை மாகாணத்தின் பலபகுதிகளிலும் ஆங்கில மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றை நிறுவத் தொடங் கியது. இதனால் தமிழ்ச் சித்த வைத்தியம் மட்டுமின்றி இந்தியாவில் அப்போதிருந்த பல்வேறு வகையான சுதேச மருத்துவமுறைகள் தாக்குதலுக்குள்ளாயின. எனவே, ஆயுர்வேத வைத்தியர்கள் இந்திய அளவில் ஒரு சங்கத்தை நிறுவி மாநாடு, கண்காட்சி போன்ற வற்றை நடத்தியதோடு அதை ஆங்கில மருத்துவக் கல்லூரியில் முறையாகக் கற்பிப்பதற்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவை வேண்டினர். இவர்கள் இந்தியாவின் சுதேசிய வைத்தியம் என்றால் அது ஆயுர் வேதம், யூனானி ஆகியன மட்டுமே எனக் கூறினர். மேலும் அந்த மருத்துவமுறைகளை நிறுவனமயமாக்கு வதற்கான முயற்சிகளை எடுத்தனர். ஆயுர்வேத வைத்தியத்தை பரப்பும் பணியைச் செய்துகொண்டிருந்த வைத்திய கலாநிதி பத்திரிகை ஆயுர்வேதம், யுனானி ஆகிய சுதேச வைத்தியசாலைகளை அரசாங்கம் அமைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. (வைத்திய கலாநிதி, அக்டோபர் 1914,ப.45.). 

சென்னை சட்டசபையில் ஏ.எஸ்.கிருஷ்ணராவ் நவம்பர் 1914ஆம் ஆண்டு ‘‘ஆயுர்வேத - யூனானி வைத்தியங்களென்னும் சுதேச வைத்திய முறைகளை’’ கவர்ன்மென்டார் ஆதரித்து, அவற்றை அபிவிருத்தி செய்யவேண்டுமென்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். மேலும் அந்தத் தீர்மானம், பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் மருத்துவமனைகள் மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானவையாக இல்லை; மக்களில் படித்தோருக்கு சுதேச வைத்தியத்தின் மீது நம்பிக்கைக்குறைவு ஏற்பட வில்லை. ஆகவே, சுதேச வைத்தியமுறைகளான ஆயுர் வேதம் யுனானி ஆகியவற்றை தேச மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பரவச் செய்ய வேண்டுமென வலியுறுத் தியது. அவர்கள் ஆயுர் வேத, யூனானி மருத்துவ முறைகளை ஆதரிப்பதற்கு சாதியும் ஒரு காரணம். மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை ஆதரித்து நரஸிம்மையர், ‘மேனாட்டு முறையை அனுஸரித்த சாஸ்திரங்களின்படி வைத்தியம் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு இஷ்டமு மில்லை. ஆகவே ஜனங்களுக்கு வைத்திய உதவி வேண் டியளவுக்கு கிடைக்கும்படிச் செய்வதற்கு இது ஒன்று தான் ஏற்ற வழியாகும். அதாவது, ஆயுர்வேத யூனானி வைத்திய சாலைகளையும் பாடசாலைகளையும் ஸ்தாபித்து...’ எனப் பேசினார் (வைத்திய கலாநிதி, நவம்பர் 1914, 63). 

ஆயுர்வேத வைத்தியர்கள் தமிழ்ச்சமூகத்தில் சித்த வைத்தியம் என்ற ஒன்று இருந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. இது இருட்டடிப்பு வேலை மட்டுமல்ல, சுவீகரிக்கும் தந்திரமும்கூட. இதன் அரசியலானது, தமிழ்ச் சித்த வைத்தியம் உட்பட இதர மொழி பேசும் மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் மருத்துவத் தில் இருந்த பன்மைத்தன்மை மீது ஆயுர்வேதமென்ற ஒற்றைத்தன்மையை ஒட்டுவதற்கான முயற்சியே அது. இதில் தமிழ்ச் சித்த வைத்தியம் அழித்தொழிக்கப்படும் அபாயமிருப்பதை அன்று உணர்ந்தவராகத் தென்படுப வர் ஆனந்தம் பண்டிதர் மட்டுமே; எனவே அதைப் பாதுகாப்பதற்காக இரண்டு வடிவங்களில் போராடினார்: 1) களப்போராட்டம் 2). அறிவுச் செயல்பாடு. இந்தப் போராட்டத்தில் ஆனந்தம் பண்டிதரின் முதல் வெளிப் பாடு, பிராமணரல்லாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பி.தியாகராயர் தலைமையில் 1915 டிசம்பர் 23 அன்று அவர் தென் இந்திய மருத்துவர் சங்கத்தை நிறுவியதாகும். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் துணை யுடன் ஆயுர்வேதத்தை நிறுவனமாக்கு வதற்கான முயற் சிக்கப்பட்ட (1914) அடுத்த ஆண்டே (1915) தமிழ்ச் சித்த வைத்தியத்தை பாதுகாப்பதற்கானச் சங்கத்தை ஆனந்தம் பண்டிதர் நிறுவியது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இந்தப் போராட்டத்தில் அவருக்கு துணைநின்றோர் ஆதிமருத்து வர் சாதியினரும் அன்றைக்கு வலுவாக இருந்த பிராமண ரல்லாதோர் இயக்கத்தினரும் ஆவர். ஆயுர்வேத வைத்தி யத்தை நிறுவுவதற்கு முன்னின்றவர்கள் பிராமணர்கள் என்பதால் தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாக்கும் போராட்டம் இயல்பாகவே பிராமண எதிர்ப்புப் போராட்டமாகவும் இருந்ததால் பிராமணரல்லாதோர் இயக்கத் தலைவர்கள் ஆனந்தம் பண்டிதருக்கு ஆதரவு கொடுத்தது வியப்புக்குரியதல்ல. ஆதி மருத்துவர்களின் பாரம்பரிய தொழில் தமிழ்ச் சித்தவைத்தியம் என்பதால் அவர்களும் அந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும், தென் இந்திய மருத் துவர் சங்கம் ஆதிமருத்துவர்களின் சமூக விடுதலையையும் இலக்காகக் கொண்டிருந்ததாலும் அவர்கள் இயல் பாக அதில் அய்க்கிமாயினர். அதாவது, தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதனூடாக அதைக் குலத் தொழிலாகக் கைக்கொண்டிருந்த ஆதிமருத்துவர்களின் விடுதலையையும் ஆனந்தம் பண்டிதர் இணைத்தார். 

காலனிய அரசாங்கம் 1921ஆம் ஆண்டு சென்னையில் வெளியிட்ட மருத்துவர் கோமன் அறிக்கையானது இந்தி யாவிலுள்ள பாரம்பரிய மருத்துவமுறைகள் மீது பாத கத்தை விளைவிப்பதை உணர்ந்த ஆனந்தம் பண்டிதர் சுதேசி மருத்துவமுறைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் சென்னையில் 1923 அக்டோபர் 20,21 ஆகிய நாட்களில் தென் இந்திய மருத்துவர் சங்க மாநாட்டை ஒருங்கி ணைத்ததோடு அதில் தமிழ்ச் சித்த வைத்தியம் குறித்து உரை நிகழ்த்தினார். காலனிய அரசாங்கம் 1924 ஜூலை 01 அன்று ஆயுர்வேதம், யூனானி ஆகிய மருத்துவ முறை களைக் கற்பிப்பிதற்குக் கல்விநிலையம் நிறுவ முனைந்தபோது அந்த வைத்தியமுறைகளோடு சித்த வைத்தியமும் கற்பிக்கப்பட வேண்டுமென்று குரலெ ழுப்பிய ஆனந்தம் பண்டிதர் அதில் வெற்றி கண்டார். தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்கு இத்தகைய களப்போராட்டம் போதுமானதாக இல்லை; அதற்கு அறிவுப்போரட்டமும் அவசியம் என்றுணர்ந் தார் அவர். விளைவு, மருத்துவன் (றிபிசீஷிமிசிமிகிழி) என்ற தமிழ் வைத்திய மாத இதழை 1929ஆம் ஆண்டு சென்னை, 221 தங்கசாலை வீதியை தலைமையிடமாகக் கொண்டு வெளியிட்டார். இது ஓராண்டுகாலம் வெளி யானது. இதில் ஆனந்தம் பண்டிதர் ‘தமிழ் வைத்தியமும் சம்ஸ்கிருத வைத்தியமும்’ என்ற தலைப்பிட்டு தொடர் கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரையில் சித்த வைத்தி யம் சம்ஸ்கிருதத்திலிருந்து உருவானது எனக்கூறி அதைக் கபளீகரம் செய்வதை எதிர்த்து தமிழர்களுக்கென மருத்துவ அறிவுப் பாரம்பரியம் இருப்பதை எடுத்து ரைத்தார்; தமிழ்ச் சித்தவைத்தியம் சுயமாக உருவாகி பிற மருத்துவ முறைகளின் துணையின்றி தனித்துச் செயல்படுகிறது என்ற வாதத்தை முன்வைத்தார்.

தமிழ்ச் சித்த வைத்திய அறிவுப் பாரம்பரியத்தைத் தற்காத்துக் கொள்வதற்கான இந்தப் போராட்டத்தில் ‘தமிழ்ச் சித்த வைத்தியம் தனித்துவமானது என்ற வரலாற்றை ஒப்புக்கொண்ட’ பிராமணர்களின் கருத்துக் களையும் மருத்துவன் இதழில் ஆனந்தம் பண்டிதர் வெளியிட்டார். இந்த அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். சுப்ரமணிய ஐயர், வைத்தியர் டி.கோபாலாச்சாரியார் ஆகியோரின் கட்டுரை, உரை ஆகியன அந்தப் பத்திரிகையில் வெளியாயின. மேலும், அவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்த இராமநாத புரம் அரசர், எட்டயபுரம் அரசர், ஜமீன்தார், நீதிமன்ற நீதிபதிகள், பிராமணர்கள், பிராமணரல்லா உயர்சாதியி னர் போன்றோர் தமிழ்ச் சித்த வைத்தியம் குறித்தும் அதில் ஆனந்தம் பண்டிதரின் நிபுணத்துவம் குறித்தும் எழுதிய கடிதங்களை மருத்துவன் இதழில் ஆனந்தம் பண்டிதர் வெளியிட்டார். இது தற்ப்புகழ்ச்சிக்கான செயல்பாடு அல்ல; அது தமிழ்ச் சித்த வைத்தியத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கின்ற ஓர் அறிவுச் செயல்பாடு. இதன் அடிப்படை நோக்கம் வெகுமக்களிடத்தில் தமிழ்ச் சித்த வைத்தியத்தின் தனித்துவத்துவம், அதன் சிறப்பு போன்றவற்றைப் பரப்புவதனூடாக அதைப் பாதுகாத்தலாகும். அவர் தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதற்குப் போராடிய அதேசமயம் அவர் இந்தியாவின் இதர மருத்துவ முறைகளைப் புறக்கணிக்க வில்லை; தென் இந்திய மருத்துவர் சங்க மாநாட்டை 1923ஆம் ஆண்டு அவர் நடத்தியபோது ஆயுர்வேத மருத்துவர்களே எண்ணிக்கையில் அதிகம் பங்கேற்றனர் என்பது அதற்குச் சாட்சி. அவர் நடத்திய இந்தப் போராட்டத்தின் விளைவாக சித்த மாணவர்களுக்கு பட்டங்கள் அளிக்கும் தேர்வாளர் குழுவில் ஆனந்தம் பண்டிதர் இணைக்கப்பட்டார். சித்த மருத்துவத்தை இதர மருத்துவ முறைகளோடு இணைத்துக் கற்பிக்கப் பட வேண்டுமென்ற போராடி வெற்றிகண்ட பண்டிதர் இறுதியில் சித்த மருத்துவத்துக்கு மட்டுமேயென தனிக்கல்வி நிலையம் நிறுவப்படுவதற்கு வித்திட்டார். குறிப்பாக பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டதில் ஆனந்தம் பண்டிதருடைய பங்கு அளப்பரியது.

ஆதிமருத்துவர்களின் பொருளாதார விடுதலைக்கான ஓர் ஆயுதமாகவும் சித்த வைத்தியத்தைக் கண்டார் ஆனந்தம் பண்டிதர்; இதை ஆதிமருத்துவர்களுக்கான கூட்டுறவுச் சங்கம் மூலம் செயல்படுத்த வேண்டுமெனச் சிந்தித்தார். இது அவர்களுக்கு ஒரு பொருளாதார விடு தலையைத் தருமெனக் கருதினார் அவர். இதனால் சித்த வைத்தியம் மூலம் பொருளீட்டுவதற்கு அவர் திட்ட மிட்டார் என அவர்மீது குற்றம் சுமத்தவும் இயலாது; காரணம், பொருளாதாரம் ஒன்றுதான் அவருக்கான இலக்காக ஒரு போதும்  இருந்திருக்கவில்லை. சென்னை யில் அவர் நடத்திய தமிழ் சித்த வைத்தியசாலையில் இலவசமாகவும் சிகிச்சை அளித்தது, சுயமரியாதை இயக்க  மாநாடுகள் நடக்கிறபோது அங்குத் தன் மருத் துவக்குழுவோடுச் சென்று இலவச மருத்துவம் செய்தது ஆகியன அவர் மருத்துவத்தை பொருளீட்டுவதற்கான தொழிலாக செயல்படுத்தவில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறது. ‘...பணம் சம்பாதிக்கும் நோக்கத்தையே முக்கியமாகக் கருதாமல் சித்த வைத்தியத்தில் தமக்குள்ள அறிவைப் பொதுஜன நன்மைக்கே உரியதாகச் செய்யக் கருதி அவ்வாறே செய்து வருகின்றார்’ என ஆனந்தம் பண்டிதர் குறித்து சென்னை நகராட்சியின் அன்றைய கவுன்சிலர் வி.சக்கரை செட்டியார் குறிப்பிடுகிறார்.  மருத்துவரின் ஆலோசனைக்கு ஒரு பொருளா தார மதிப்பை ஆங்கில மருத்துவமுறை நிர்ணயம் செய்து அதை வசூலிக்கிறது ஆனால், ஆனந்தம் பண்டிதர் எவ்விதப் பொருளாதரமும் பெற்றுக்கொள்ளாமல் மருத்துவ ஆலோசனையை இலவசமாக வழங்கினார். ‘நேரில் வருவதற்கு இயலாத நோயாளர் தமது நோயின் விவரத்தைத் தபாலில் அறிவித்தால் தக்க ஆலோசனை சொல்லப் படும்’ என்று ஆனந்தம் பண்டிதர் மருத்துவன் இதழில் அறிவித்தார்; இது அவர் தன்னுடைய சொந்தச் செலவில் மருத்துவ ஆலோசனை கொடுத்தார் என்பதை உணர்த்துகிறது. 
  
அன்றைய காலகட்டங்களின் ஆவணங்களைக் காணுகிறபோது பல்வேறு நோய்களின்  தாக்குதலுக்குள்ளாகி மகளிரும் குழந்தைகளும் ஆங்கில மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. மேலும் குழந்தை இறப்பும் அதிகம் நிகழ்ந்துள்ளது; பிறந்த குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கினர் ஒரு வருடத்திற்குள் இறந்தனர். எனவே, இவற்றைத் தடுப்பதற்கு மருத்துவ ஆலோசனை மக்களுக்குத் தேவைப்பட்டது. ஆனந்தம் பண்டிதர் மருத்துவன் இதழில் பாலர் பரிபாலனம் என்ற பகுதியில் தாய்-சேய் நலன் குறித்துத் தொடர்க்கட்டுரை எழுதினார். இதர நோய்கள் குறித்துப் பிற வைத்தியர்கள் எழுதியதையும் அந்தப் பத்திரிகையில் வெளியிட்டார். இன்றைய தினசரி பத்திரிகைகள் மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து பெருத்தத் தொகையை விளம்பரமாகப் பெற்றுக் கொண்டு மேம்போக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது போல் அல்லாமல் எந்தவித விளம்பரமும் பெற்றுக்கொள்ளாமல் மிக ஆழமான விரிவான மருத்துவ ஆலோசனை வழங்கினார் ஆனந்தம் பண்டிதர். அதுமட்டுமின்றி எந்த நோய்க்கெல்லாம் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென ஆங்கில மருத்துவம் பரிந்துரை செய்ததோ அந்த நோய்களுக்கெல்லாம் அறுவையின்றியே தமிழ்ச் சித்த  வைத்தியத்தால் குணப்படுத்தினார் ஆனந்தம் பண்டிதர். ஆங்கில மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சைக்கு கூடுதல் பணச்செலவும் சித்த மருத்துவத்திற்கு மிகக் குறைந்த பணச்செலவும் ஆகும் என்பதை விளக்கத் தேவையில்லை. எனவே ஆனந்தம் பண்டிதர் சித்த வைத்தியத்தை பொருளைப் பெருங்குவி யலாக மாற்றுவதற்கான தொழிலாக அல்லாமல் மக்கள் ஆரோக்கியத்திற்கான ஒன்றாகக் கைக்கொண்டிருந்தார் என்பது திண்ணம். இந்தக் காரணத்தால்தான் தந்தை பெரியார், தியாகராய செட்டியார், மறைமலை அடிகள் எனப் பிராமணரல்லாதோர் இயக்கத் தலைவர்கள் மட்டுமின்றி பாஷ்யம் ஐயங்கார், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ். சுப்பிரமணி ஐயர் எனப் பிராமணர் களும் ஆனந்தம் பண்டிதரைப் போற்றி எழுதியுள்ளனர்.

சமூக அரசியல் அறிஞர் 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவில் சில அரசியல் சீர்திருத்தங்களைச் செய்தபோது அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒவ்வொரு சாதியினரும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்குப் போராடினர். அதற்காக அவர்கள் சாதிச்சங்கங்கள் நிறுவுதல், பிரிட் டிஷ் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தல், அதன் ஆதரவை நாடுதல், இழிவேலைகளைச் செய்ய மறுத்தல் எனப் போராட்டங்கள் பல நடத்தினர். இந்தப் போக்கு களிலிருந்து ஆனந்தம் பண்டிதர் சிலவற்றில் ஒன்று பட்டும் சிலவற்றில் வேறுபட்டும் சிலவற்றில் தனித்தும் நின்றார். அன்றைய சாதிய இயக்கங்கள் சில மாகாண அளவிலும் சில இந்திய அளவிலும் உருவாயின. ஆதி மருத்துவர்களுக்கான சாதிச்சங்கத்தை தென் இந்திய அளவில் நிறுவிய ஆனந்தம் பண்டிதர் அவர்களை ஒருங் கிணைப்பதற்காக பெரும் முயற்சி எடுத்தார். இந்திய அளவில் வலைப்பின்னலை ஏற்படுத்துவதற்காக 1921 டிசம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை ஆக்ராவில் நடை பெற்ற மருத்துவ சமூக மாநாட்டில் பங்கேற்றார். தமிழ் ஆதிமருத்துவர் சாதியினர் எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் இடம்பெயர்ந்தனரோ அங்கெல்லாம் சங்கத்தை நிறுவி னார்; 1924ஆம் ஆண்டு ஒரு குழுவாக இலங்கைக்குச் சென்ற அவர் அங்குச் சுற்றுப்பயணம் செய்து மருத்துவ குலச் சங்கத்தை ஏற்படுத்தினார். உண்மையில், ஆனந்தம் பண்டிதர் ஆதிமருத்துவர் சங்கத்தை ஆசிய அளவில் கட்டமைத்தார். இந்தச் சங்கத்தின் மூலம் அவர் “இந்திய அரசியல் மகாசபையாகிய சர். ஜான் சைமன் கமிஷ னுக்கு  தென் இந்திய மருத்துவர் சங்கத்தின் அறிக்கை” யெனச் சமர்ப்பித்தார். அதில் ஆதிமருத்துவர்களின் ஒடுக்கப்படும் நிலைமை, அவர்களை முன்னேற்றுவ தற்குத் தேவையானவை குறித்து எடுத்துரைத்தார். 

பொதுவாக, ‘பாரம்பரிய தொழிலைக்’ கைவிடுதல், பிராமணியமயமாக்கம் எனச் சாதிய அமைப்புகள் கொண்டிருந்த நிலைப்பாட்டுடன் அவர் வேறுபட்டு நின்றார்; தங்களின் பாரம்பரிய தொழிலான சித்த மருத்துவத்தைப் பற்றிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்; அது அதன் செல்வாக்கை மெல்லமெல்ல இழந்து கொண்டிருந்த போதிலும்கூட. அன்றைய காலங்களில் பொருளாதார மேம்பாட்டிற்காக கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்து சாதிகளும் ஈடுபட் டன; ஆனந்தம் பண்டிதரும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவருடைய சிந்தனையின் தனித்துவமானது, அவர் ஆதிமருத்துவர் சாதியின் பொருளாதார மேம்பாட் டிற்காக் கூட்டுறவு சங்கம் மூலம் மூலிகைமரம் வளர்ப்பு, மருந்துத் தயாரிப்பு, ஏற்றுமதி என அதை நிறுவனமாக மாற்றவேண்டுமென்ற தொலைநோக்குத் திட்டத்தை முன்வைத்தாகும்; ஆனால், அந்தத் திட்டம் அந்தச் சமூகத்தால் செயல்படுத்த இயலவில்லை. இருப்பினும், சென்னையில் 1944ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய மருத்துவர்களின் (சித்தா, ஆயுர்வேதம், யுனானி) கூட்டுறவுச் சங்கத்தின் மருந்து உற்பத்தி, விற்பனை என்ற செயல்பாடு ஆனந்தம் பண்டிதரின் சிந்தனையின் விளைவு எனலாம். இந்த கூட்டுறவுச் சங்கத்தின் உருவாக்கத்தில் ஆனந்தம் பண்டிதர் ஆற்றிய பங்கு என்னவென்பதை அறிந்து கொள்ள இயலவில்லை; ஆனால் அதற்கான கருத்தியலை முதன்முதலில் முன்வைத்தவர் ஆனந்தம் பண்டி தர் என்பதை மறுக்க இயலாது. ஆனந்தம் பண்டிதரின் சிந்தனை பாரம்பரிய தொழிலையே சுற்றி இருந்ததால் அவர் நவீன தொழில்களுக்கு எதிரானவர் என்ற முடிவுக்கு வர இயலாது; காரணம், அவர் நவீன தொழில்கள் பலவற்றையும் ஆதிமருத்துவர்கள் கற்க வேண்டுமென வலியுறுத்தினார். அதாவது, ஆனந்தம் பண்டிதர் தொழிலில் ஜனநாயகப்போக்கைக் கடைபிடித்தார். 

சாதி இயக்கங்கள் எவையெல்லாம் இழிதொழில்கள் எனக் கருதினவோ அவற்றை எல்லாம் விட்டொழிப்பதற்காகப் போராடின. ஆதிமருத்துவர் செய்த இழி தொழில்களை மறுப்பதற்கான போராட்டத்தைத் திட்டமிட்ட ஆனந்தம் பண்டிதர் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் சிந்தித்தார். ஆதிக்கச்சாதிகள் வழக்கமாக அரங்கேற்றும் ‘வன்முறை, சமூகப் பொருளாதார விலக்கம்’ ஆகிய எதிர்வினைகளைப் புரிந்துகொண்டு போராட்டக்காரர்களுக்கான மாற்றுத் தொழிலையும் அதைச் செய்யும் இடத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு போராட்டத்தை நடத்தினார். எதிர்வினைகளையும் உணர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாட்டோடு போராட்டத்தைத் திட்டமிட்டு நிகழ்த்தியது அவருடைய தனித்துவம். 

மாப்பிள்ளைச் சவரம், சவச்சவரம் செய்ய மறுத்தல் போராட்டங்கள் 1920களின் தொடக்கத்தில் திருநெல்வேலியில் முகிழ்த்து அது அந்த மாவட்டத்தின் தாமிரபரணி நதிக்கரையின் மேற்குத்திசையில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் தொடங்கி கிழக்குத்திசையில் ஆத்தூர் வரை பரவியபோது அந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு ஆதிமருத்துவர் சமூக ஆடவர்களை இலங்கைக்குச் சென்று அங்கு ஒப்பனைத்தொழில் செய்து பிழைத்துக்கொள்வதற்கு வழிவகுத்தார். ஆனால் ஆதிக்கச்சாதியினரின் உளவியல் வன்மத்தை அவர் எதிர் பார்த்திருக்கவில்லை; அவர்கள் ஆதி மருத்துவர் சாதி பெண்களையும் குழந்தைகளையும் கொடூரமாகத் தாக்கினர். பொதுவாக, பெண்களையும், குழந்தைகளையும் மதித்துப் போற்றுகின்ற நாடென்று தொடர்ந்து கூறிவருது அப்பட்டமான பொய்யென்பதை ஆனந்தம் பண்டிதர் அப்போது உணர்ந்திருக்கலாம். ஒரு நிகழ்வில் அவரும் வன்முறையை எதிர்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரில் 1924 மே 25 அன்று பண்டிதர் ஆதிக்கச்சாதியினரால் தாக்கப் பட்டார், அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகப் பெண் வேடமணிந்து வேறுவழியின்றி அங்கிருந்து வெளியேறினார். தன் சமூக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட பண்டிதர் அதற்கானப் போராட்டத்தை நடத்துகிறபோது தனக்கு மட்டுமென சலுகை தருவதை மறுத்தார். ஆதிமருத்துவர் சமூகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டை தாயுமானவர் கோயிலில் 1923 ஏப்ரல் 01 அன்று அவர்களை அழைத்துக்கொண்டு அந்தக் கோயிலுக்குள் சென்றபோது ஆனந்தம் பண்டிதருக்கு மட்டும் அனுமதி தந்தபோது, ‘இந்துக்களெல்லோரும் ஆலயத்துள் செல்லுங்காலம் வரும்போதன்றி இது போது நான் ஆலயத்துட் செல்லேன்’ எனக் கூறி அதை மறுத்தார். இந்தச் சம்பவங்களெல்லாம் அரச மருத்துவ குடும் பத்தைச் சேர்ந்த ஆனந்தம் பண்டிதருக்குச் சாதியின் கொடூரமுகத்தைக் கற்றுக் கொடுத்திருக்கக்கூடும். அதனால்தான் அவர் அன்று வலுவாக ஒலித்து ஆங்காங்கு செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தத் திருமணம், சாதி ஒழிப்பு ஆகிய கருத்தாக்கங்களோடு ஒத்திசைந்தார்; ஆனால், இது குறித்துத் தனியாகக் கட்டுரை ஏதும் அவர் எழுதவில்லை; இருப்பினும், மருத்துவன் இத ழில் திருமணம் தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி; சாதி மறுப்புத் திருமணம் ஒன்று முடிந்த பின்னர் அவர் விருந்து கொடுத்தது போன்ற அவருடைய செயல்பாடுகள் அவர் சாதி ஒழிப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது தெளிவு.  

சுயமரியாதை இயக்கத்தோடு நட்புறவு கொண்டி ருந்த போதிலும் ஆனந்தம் பண்டிதர் நாத்திகர் அல்லர். அவர் கடவுளர்களை விமர்சிப்பதோடு முரண்பட்டார். குறிப்பாக, சிவலிங்கம் விமர்சிக்கப்படுவதற்கு எதிராக எதிர்வினையாற்றினார். அதேசமயம் மதச் சீர்திருத்தத்தை முன்வைத்த அவர் மத அடையாளங்களுக்கு தன்னு டைய கருத்தை குமரன் பத்திரிகையில் இவ்வாறு பதிவு செய்தார்: ‘‘கடவுளைப்பற்றிய கொள்கையெல்லாம் மக்களுடைய மனத்தில் இருக்க வேண்டுமேயல்லாது அவரவர் மதச்சின்னங்களாக உடைகளிலோ, தலைமயிரிலோ, நெற்றிகளிலிடும் குறிகளிலோ வெளிப்படுத்திக் காட்டிக்கொள்ள வேண்டுவதில்லை. இக்கொள்கையை பரவச்செய்ய வேண்டும். இல்லையேல் நாட்டில் மக்கள் சமாதானமாக ஒற்றுமையோடு வாழ்வ தற்கு வழி ஏற்படாது.’’ மதச்சின்னங்களையே ஏற்காத ஆனந்தம் பண்டிதர் மதங்கள் நிறுவனங்களாக்கப் படுவதையும் ஏற்காதவர் என்று முடிவு செய்யலாம். மொழி குறித்த அவருடைய சிந்தனையும் தனித்துவமா னது. மொழி என்பதைப் புவிப்பரப்பு வரைகோடுக்குள் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் மொழியினூடாகவே அறிவு கட்டமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட ஆனந்தம் பண்டிதர் தமிழ் மொழியைக் கற்பதனூடாகவே சித்த மருத்துவத்தைப் பாதுகாக்க இயலும் என்றுணர்ந்து தன் சாதியினரை தமிழ் மொழியை நன்றாகக் கற்குமாறு அறிவுறுத்தினார்; அதேசமயம் ஆங்கிலத்தையும் பயிலுமாறும் அறிவுறுத்தினார். 

ஆனந்தம் பண்டிதர் பிராமண எதிர்ப்பு மரபின் ஓர் தனித்துவமான தமிழ்ச் சித்த வைத்திய ஆளுமை என்பதைக் குறிப்பிட்டு கூறவேண்டியதுள்ளது. பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான இயக்கத்திற்கு தமிழ்ச் சமூகத் தில் நீண்டநெடிய வரலாறு உண்டு. அந்த மரபின் நவீன கால ஆளுமைகளாக அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், ஆனந்தம் பண்டிதர் ஆகியோரைக் குறிப்பிட லாம். பிராமண, சம்ஸ்கிருத எதிர்ப்பு உச்சத்திலிருந்த அன்றைய காலகட்டத்தில் பறையர் சாதியைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதர் தலித்துகளின் சாதி பேதமற்ற தனித்துவமான தமிழ் பௌத்த அடையாளத்தை முன் வைத்தார். நாடார் சாதியைச் சேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் கர்நாடக இசையை மறுத்து அது தமிழ் இசை என்றார். இந்த வரிசையில் ஆதிமருத்துவர் சாதியைச் சேர்ந்த ஆனந்தம் பண்டிதர் ஆயுர்வேத வைத்தியத்தைப் புறக்கணித்து தமிழ்ச் சித்த வைத்தியத்தை உயர்த்திப் பிடித்தார். பிராமண ஏகாதிபத்தியமானது மொழி, இசை, மருத்துவம் எனத் தமிழ் அறிவுப் பாரம்பரியத்தைக் கபளீகரம் செய்வதற்கு எதிராக மேற்குறிப்பிட்ட பண்டிதர்கள் அறிவுத்தளத்தில் போராடினர். அதாவது பிறரின் உடைமைக்கு தன் பெயரிட்டு தன் உடைமையாக்கிக் கொள்ளும் கபளீகரச் செயல்பாட்டிற்கு எதிராக தங்கள் உடைமையை தற்காத்துக் கொள்வதற்குப் போராடினர். அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், ஆனந்தம் பண்டிதர் ஆகிய மூவரும் இரண்டு புள்ளிகளில் ஒன்றிணைகின்றனர்:

1) இம்மூவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தோர் என்றபோதிலும் தொழிலடிப்படையில் தமிழ்ச் சித்த வைத்தியர்கள்
2) பிராமணிய கபளீகரத்திலிருந்து தமிழர்களின் அறிவுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல். இது அந்த மூவரின் தனித்துவம்கூட. 

சித்த மருத்துவத்தைப் பாதுகாத்தல், தன் சமூக மக்களின் விடுதலை ஆகிய இரண்டு இலக்குகளையும் கைக்கொண்டு பயணித்த பண்டிதர் உ.வே.சாமிநாத அய்யர், ராஜாஜி, பெரியார் போன்றோருடன் நட்புறவு கொண்டிருந்தார். பிராமணரல்லாதோருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த ஆனந்தம் பண்டிதர் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்த போதிலும் அவர்களை வெறுத்து ஒதுக்கவில்லை, அவர் நடத்திய மருத்துவர் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராகவும் டி.பி. சீனிவாச ஐயங்கார், மாநாட்டுத்தலைவராக ஸ்ரீ நாராயண ஐயங்கார் ஆகியோர் செயல்பட்டது அதற்குச் சாட்சி. அவருடைய இந்த நற்பண்பின் காரணமாகவே அவர் சென்னை நகர பரிபாலன சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது தென்னிந்திய மருத்துவர் சங்கம், வியாசர் பாடி ஆதித்திராவிட ஐக்கிய நாணய சங்கம், கணேசபுரம் கல்வி வளர்ச்சி சங்கம், வாலிபர் கால்பந்துக் கூட்டம், சென்னை சிவனடியார் திருக்கூட்டம், ஆரிய சமாஜம் ஆகிய அமைப்புகள் அவருக்கு சென்னையில் வாழ்த்துக் கூட்டம் நடத்தின. 

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சாதிச் சங்கங் கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ‘கைக்கூலிகளாகச்’ செயல் பட்டனர் எனக் காங்கிரஸ் இயக்கம் குற்றம் சுமத்தியது. பொதுவாகவே பிராமணர் சாதிச் சங்கம் முதற்கொண்டு சாதிய சமூகத்தின் அடித்தட்டிலுள்ள சாதிச் சங்கங்கள் வரை பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் போற்றின; ஆனால் தேசப்பற்றை எவ்வாறு அளவிடுவது என்பதுதான் இங்குச் சிக்கல். சுதேச தொழில்களும் அதனை ஆதார மாகக் கொண்டு வாழும் மக்களும் பிறரால் தாக்குதலுக் குள்ளாகும்போது அவற்றைப் பாதுகாப்பது தேசப்பற்று என வரையறுக்கலாம். கைத்தறி மூலம் துணி உற்பத்தி செய்தவர்களின் வாழ்க்கை பிரிட்டிஷ் ஏகாதபத்தியத்தின் எந்திர உற்பத்தி கடுமையாகத் தாக்கியபோது   கதராடை தேசப்பற்றின் அடையாளமாக முன்னிறுத்தப் பட்டது; இதர சுதேசி தொழில்களை காங்கிரஸ் கணக்கில் கொள்ளவில்லை. ஆனால் குறைந்த செலவில் மக்களுக்கு மருத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்ச் சித்த வைத்தியத்தின் மீது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டுமின்றி அதன்மீது தாக்குதல் தொடுத்த ஆயுர்வேத சம்ஸ்கிருத வைத்தியத்தையும் என்னவென்று வரையறுப்பது? தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய ஆனந்தம் பண்டிதரை யார் என அடை யாளப்படுத்துவது? உள்நாட்டுத் தொழில்கள் எவையாக இருப்பினும் அவற்றைப் பாதுகாத்தல் என்பதே தேசப்பற்றின் குறியீடுதான் அந்தவகையில் சித்த வைத்தியத்தைப் பாதுகாத்தலும் தேசப்பற்றின் அடையாளமே. அவ்வாறென்றால் ஆனந்தம் பண்டிதர் ஒரு பச்சையான தேசப்பக்தர். தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த, தியாகராய செட்டியார், பனகல் அரசர் ஆகியோரை நினைவுகூறும்விதமாக புதுமாம்பலம் என்ற வந்த பெயரை தியாகராயநகர், என்றும் அதேபகுதியில் ‘பனகல் பூங்கா’ எனவும் பெயர் சூட்டியவர் பண்டிதர் ஆனந்தம். அதுமட்டுமல்ல, சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் ‘பெரியார் ஈ.வே.ரா.’ என்றழைக்க வேண்டுமென்ற தீர்மானத்தையும் உருவாக்கியவர் ஆனந்தம் பண்டிதரே.

சித்த வைத்தியத்தில் மட்டுமின்றி சமூகப், பொருளாதார, அரசியல் துறைகளிலும் புலமை மிக்க ஆனந்தம் பண்டிதர் 1876 மார்ச் 16 அன்று பிறந்து 1972 ஜூன் 18 அன்று மரித்த போதிலும் அவர் போராடி நிறுவனமயமாக்கியுள்ள தமிழ்ச் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பயின்று ஒருபோதும் அந்தத் தொழிலைச் சாதித் தொழிலாகக் கொண்டிருக்காத சாதியினர் சித்த மருத்துவர்களாகி பொருளீட்டுகின்றனர்; மக்களும் சித்த மருத்துவத்தை நோக்கித் திரும்புகின்றனர் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர். ஆனால் அந்தப் போராட்டத்தில் பெரும்பான்மையாகப் பங்குபெற்ற  அவருடைய ஆதிமருத்துவர் சாதியினர் அவர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை இழந்து நிற்கின்றனர்.

இந்தக் கட்டுரை ஆனந்தம் பண்டிதர் மருத்துவன் இதழ், திராவிடன் பத்திரிகை ஆகியவற்றில் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றி தந்தை பெரியார், மறைமலை அடிகள் போன்றோர் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றை கோ.ரகுபதி தொகுத்து வெளியிடயிருக்கும் நூலின் முன்னுரை.  

புதுவிசை 46