Wednesday, August 23, 2017

இந்தியத் தொழிற்சங்க - இடதுசாரி இயக்கங்களின் முன்னுள்ள சவால் - இக்பால்

1
காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி முதல்முறையாக பிரதமர் பொறுப்பேற்ற 1985-87 காலக்கட்டத்தில்தான் பொதுத்துறையின் முக்கியத்துவத்தை பின்னுக்குத்தள்ளி  தனியார் முதலாளிகளை மேலும் கொழுக்க வைப்பதற்கான திட்டங்களை அரசின் திட்டமாகவே ஆக்கிடும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 1986 செப்டம்பர் மாதத்தில் இந்தியத் தொழிற்துறையை மறுசீரமைப்பதற்கான (Reforms) விரிவான செயற்திட்டத்தை வரையுமாறு திட்டக்குழுவை அவர் பணித்தார், ஒரு விரிவான திட்டமும் வரையப்பட்டது.

1989-90 காலக்கட்டத்தில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி கூட்டணி அமைச்சரவை பொறுப்பில் இருந்தது. அதன்பின் 1991 மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 232 இடங்களில் வென்றது. மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படும் முன் நடந்த முதற் கட்டத் தேர்தலில் 319 இடங்களில் 130 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் இரண்டாம்கட்டத் தேர்தலில்  202 இடங்களில் 102 இடங்களை அதாவது சரிபாதி இடங்களை வென்றது அனுதாப அலையின் காரணமாகவே என்பது தெரிந்த செய்தி. அப்போதும்கூட பெரும்பான்மை கிட்டவில்லை. அன்றைய சூழலில் மதவெறி ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல் ஆட்சியமைப்பதை தடுக்கும் ஒற்றை நோக்குடன் இடதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு ஆட்சியில் பங்குபெறாமல் ஆதரவளித்தனர், நரசிம்மராவ் பிரதமர் ஆனார்.

ரிசர்வ் வங்கி, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அரசு அதிகாரியான மன்மோஹன் சிங் நிதியமைச்சர் ஆக்கப்பட்டார். அன்றைய நிலையில் இந்தியப்பொருளாதாரம் மிகமிக மோசமான நிலையில் இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் To the brink and back என்ற நூலில் சொல்கின்றார். அன்றைய மத்திய அமைச்சரவைச் செயலாளரான நரேஷ் சந்திரா ‘பிரதமர் முன்னுள்ள உடனடி சவால்கள்அடங்கிய எட்டுப்பக்க ரகசியக்குறிப்பை நரசிம்மராவிடம் அளித்தபோது ‘நமது பொருளாதாரம் இத்தனை மோசமான நிலையில் உள்ளதா?’ என்று அவர் கேட்டதாகவும், நரேஷ் சந்திரா ‘இல்லை, உண்மையில் மிகமிக மோசமாக உள்ளதுஎன்று சொன்னதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகின்றார். இத்தேசம் அப்படி யானதொரு மிகப்பெரும் ஆபத்தான சிக்கலில் இருந்தது உண்மைதான் எனில் ஒருசில வருடங்கள் மட்டுமே ஆட்சியிலிருந்த (காங்கிரஸ் அல்லாத)  மொரார்ஜி தேசா யின் ஜனதா ஆட்சி, அதன்பின் வி.பி.சிங், சந்திரசேகர் போன்ற அரசுகளைத் தவிர 1947க்குப் பின் இத்தேசத்தை தொடர்ந்து ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கட்சியின் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகள் மட்டுமே காரணமாக இருக்கமுடியும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் வசதியாக மறைத்து விடுகிறார்கள். விசித்திரம் என்னவெனில் அப்பெரும் சிக்கலில் இருந்து தேசத்தை மீட்பதாகச் சொல்லிக்கொண்டு சர்வதேச-இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இத்தேசத்தை மேலும் அகலமாகத் திறந்துவிடும் எல்.பி.ஜி. எனப்படும் தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம் ஆகிய மூன்று கோட்பாடுகளைத்தான் தறிகெட்டு ஓடும் வாகனத்தின் வேகத்தில் நடைமுறைப்படுத்தினார்கள்.

இதன்பின் இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்றை 1991க்கு முன், பின் என பகுத்தெழுதத்தக்க வகையில் பெரும் சீரழிவை இத்தேசம் சந்தித்தது. அதுகாறும் இந்தியப்பெரு முதலாளிகளுடன் மல்லுக்கட்டிக் கொண் டிருந்த இந்திய இடதுசாரி அரசியலும் தொழிற்சங்க இயக்கமும் சர்வதேசக் கார்ப்பரேட்டுகளோடும் தெருவில் இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த தேவ கவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகிய காங்கிரஸ் அல்லாத அரசுகளின் காலத்தில் சொல்லும்படியாகவும், 2000க்குப் பிறகு அமைந்த காங்கிரஸ் அரசின் காலத்தில் ஓரளவும் எல்.பி.ஜி.யின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. இவை தவிர்த்த 1990க்குப் பின்னான காலத்தில் தனியார்மயம் மிக வேகமாக நடைமுறைக்கு வந்தது. கார்ப்ப ரேட்டுக்களின் சொர்க்க பூமியாக இந்தியா மிக வேகமாக மாறியது. இக்காலக்கட்டத்தில்தான் உலக கோடீசுவரர்கள் பட்டியலில் பல இந்தியர்களும் சேர்ந்தார்கள். இதே காலகட்டத்தில்தான் மூடப்பட்ட ஆலைகளின் பட்டியலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பட்டி யலும் மிக நீளமானது. விவசாய நிலங்கள் பெரு முத லாளிகளின் நலன் பொருட்டும் நாற்கர அறுகரச் சாலைகளின் பொருட்டும் பிடுங்கப்பட்டதும் விவசாயிகள் கிராமப்புறங்களை விட்டகன்று நகர்ப்புறங்களில் தாம் இதுவரை செய்திடாத கட்டுமானத் தொழிலிலும் ஓட்டல்களிலும் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களிலும் அத்தக்கூலி வேலைகளுக்காகத் துரத்தப்பட்டதும் இக்காலத்தில் தான். காங்கிரஸ் தொடங்கிவைத்த அழிவை சங் பரிவாரின் அடிப்பொடியான நரேந்திரமோடி மிக வேகமாக முன்னெடுத்துச் செல்வதை தேசம் இப்போது பார்க்கின்றது. மோடியின் வாயிலிருந்து அலங்கார வார்த்தைகள் அவ்வப்போது அணிவகுத்து வருகின்றன. செய்தித்தாட் களில் முழுப்பக்க விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. கார்ப்பரேட்டுகளே என் நண்பன் என்று சொல் வதற்கு நரேந்திரமோடி எப்போதும் கூச்சப்பட்டதில்லை.  அதானியின், அம்பானியின் துணையின்றி பயணம் எதையும் மேற்கொண்டதுமில்லை. இரும்பு, சுரங்கம், தோல், கம்ப்யூட்டர், பங்குச்சந்தை, பிட்சா, பர்கர், வறுத்த கோழிக்கறி என பல தொழில்களைச் செய்வதுபோல் ஊடகங்களையும் கார்ப்பரேட் அதிபர்கள் விலைக்கு வாங்கி ஒரு தொழிலாக நடத்துகின்றார்கள். நாம் பார்க் கின்ற ‘நடுநிலை' டி.வி.க்களும் நாளேடுகளும் இந்த கார்ப்பரேட் அதிபர்கள் நடத்துபவைதான். இந்த ஊடகங்கள்தான் 2014இல் நரேந்திர மோடியையும் 2016இல் ஜெயலலிதாவையும் நாற்காலியிலே உட்காரவைத்தன.

இப்பூவுலகின் சாமானியர் எவராயினும் அவர் உண்ணும் ஒரு கவள உணவாகினும் அருந்தும் ஒரு குவளை நீராகிலும் அதற்குப் பின்னால் எவனோ எவளோ எத்தனை பேரோ தம் உயிரைத் தத்தம் செய்து பெற்ற உரிமை என்பது சமூக வரலாறு. இவ்வுரிமைகளின் பொருட்டு தம் இன்னுயிரை சிறைக்கொட்டடிகளிலும் இருள் கவிந்த தனிமைச்சிறைகளிலும் தூக்குக்கயிறுகளிலும் நீத்தவர்களின் இரத்தம் சிந்தியவர்களின் வரலாறுகள் தேசங்களின் செயற்கையான எல்லைகளைத் தாண்டி ரத்த நாளங்கள் போல் நீள்கின்றன. இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுகாறும் அனுபவித்துவரும் உரிமைகளுக்கும் இவ்வாறான நெடிய வரலாறு உள்ளது. இவ்வாறு போராடியும் உயிர்நீத்தும் பெறப்பட்ட உரிமைகளை 1990களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தாமல் வெறும் அரசாணைகள் மூலம் வெட் டியோ சுருக்கியோ முற்றாக நீக்கியோ சின்னாபின்னப் படுத்தும் மக்கள் விரோத நடவடிக்கையில் காங்கிரசும் பாஜகவும் போட்டிபோடுகின்றன. தொழிற்சங்கச் சட்டம், தொழிற்தாவா சட்டம், தொழிற் சாலைகள் சட்டம் என ரத்தம் சிந்தியும் உயிர்த்தியாகம் செய்தும் வென்றெடுக்கப்பட்ட சட்டங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டு அர்த்தம் இழக்கவைக்கப்படுகின்றன. அமைப்பு ரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின்-விவசாயிகளின் சக்தி மிகப்பெரும் அரசியல் பவுதீக சக்தி என்பதை நன்கு உணர்ந்துள்ள கார்ப்பரேட்டுகள் +அரசாங்கக் கூட்டணி, தொழிற்சாலைகளை மூடுவது, தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, காலியிடங்களை நிரப்பாமல் விடுவது, உற்பத்தியைக் குறைப்பது, நிரந்தரத் தொழிலாளர்களின் இடத்தில் காண்ட்ராக்ட் தொழிலாளிகள் என்னும் புதிய வகை அடிமை முறையைப் புகுத்துகின்றது. தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியோ சுருக்கியோ அவற்றை முனை மழுங்கச் செய்கிறது.

2
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ‘தொழிலாளர் வருங்கால வைப்பு  நிதியை (EPF)  எந்தத் தொழிலாளியும் எடுத்துப் பயன்படுத்த முடியாது' என்று இன்றைய பி.ஜே.பி.யின் மோடி அரசு புதிய ஆணையை வெளியிட்டது. வைப்பு நிதி என்பது ஒரு தொழிலாளி தன் அடிப்படை ‘ஊதியத்தில் 12 விழுக்காட்டைத் தனது சேமிப்பில் சேர்ப்பது. இதே அளவு சமமான தொகையை முதலாளியும் தனது பங்காக தொழிலாளியின் சேமிப்பில் சேர்க்கவேண்டும். ஒரு தொழிலாளி இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையின்றி இருப்பார் எனில் அவர் தனது வைப்பு நிதி சேமிப்பிலிருந்து ‘மொத்தப் பணத்தையும் திரும்பப் பெற முடியும். 2016 பிப்ரவரி 10 அன்று தொழிலாளர் அமைச்சகம் (நல அமைச்சகம் என்றும் சொல்கிறார்கள்) வெளியிட்ட ஆணையின்படி, தொழிலாளி ஒருவர் தனது மொத்த சேமிப்பிலிருந்து தனது பங்காக தான் செலுத்திய சேமிப்பை மட்டுமே திரும்பப் பெற முடியும், முதலாளி அளித்த பங்கை 58 வயது முடிந்த பின்னரே திரும்பப் பெறமுடியும். இன்னொரு கொடுமை என்ன வெனில் தொழிலாளியின் பங்கான 12%ல் 3.67% மட்டுமே வைப்பு நிதிக்குப் போகின்றது, மீதி 8.33%  ஓய்வூதிய நிதியில் தான் சேர்க்கப்படும், எனவே மொத்தமுள்ள 24%ல் 3.67 விழுக்காட்டை மட்டுமே திரும்பப் பெறமுடியுமாம். மாதம் 7000 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் பல லட்சம் தொழிலாளிகளுக்கு இது மிகமிகச் சொற்பமான தொகை என்பதைச் சொல்லவும் வேண்டாம். சி.ஐ.டி.யூ. வின் அகில இந்தியத் தலைவரான ஏ.கே.பத்மனாபன், “இந்த அறிவிப்பை வெளியிடும் முன் தொழிலாளர்கள் தம் விருப்பத்தைத் தெரிவிக்க, அதாவது  ‘சேமிப்பைத் திரும்பப் பெறுவதா சேமிப்பில் தொடர்ந்து வைத்துக் கொள்வதாஎன்று தேர்வு செய்யும் உரிமையை அவர் களுக்கே விடவேண்டும் என்று நாங்கள் அரசை வற்புறுத் தினோம். அரசுத்தரப்பு இதை நிராகரித்தது'' என்று சொல்கின்றார். பிராவிடன்ட் நிதிக்கான மத்திய அறங் காவலர் வாரியத்தில் இவர் உறுப்பினராகவும் உள்ளார்.

இதுவே மிகப்பெரும் பாதகம் என்றால் இதனைவிடவும் பாதகமான, மோசடியான ஒரு திட்டத்தை மோடி அரசு இதற்குமுன் முன்வைத்தது: அதாவது வைப்பு நிதியைத் திரும்பப்பெறும் போது அதற்கான பணத்திற்கு வருமான வரியை விதிக்க அரசு திட்டமிட்டது. புரிகின்றதா? தொழிலாளர்கள் தாங்கள் சேமித்த பணத்தையே தமக்கான ‘வருமானமாகக் கருத வேண்டுமாம். பலத்த கண்டனங்களுக்குப் பிறகே இந்த மோசடித் திட்டத்தை மோடி அரசு கைவிட்டது.

58 வயதில்தான் திரும்பப் பெறமுடியும் என்ற மோடி அரசின் ஆணைக்கு நாடெங்கிலும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. ஏனெனில் தொழிலாளர் வைப்புநிதிக்கு நேரடி யாகத் தொடர்புள்ளவர்கள் மாதம் 7000- 8000 ரூபாய் வருமானமுள்ள கோடிக்கணக்கான மக்களே. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தைப் பரிசீலிக்க நியமிக்கப் பட்ட ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு அதிகாரிகளின் உயர்ந்தபட்ச மாத அடிப்படை ஊதியத்தை 2,10,000 ரூபாய் எனப் பரிந்துரைத்துள்ள நிலையில் (பிற அலவன்சுகள் தனி) மாத ஊதியம் மொத்தமாக பத்தாயிரம் கூடப் பெறாத பலகோடித் தொழிலாளர்கள் கொதிப்படைந்தார்கள்.

இந்தியாவெங்கிலும் அணிதிரட்டப்படாத அல்லது தொழிற்சங்கங்களில் இணையமுடியாத அல்லது தொழிற் சங்கங்களால் திரட்டப்படமுடியாத தொழிலாளர்கள் பல லட்சம் அல்லது சில கோடிகள் இருக்கின்றார்கள் எனில் அது ஆயத்த ஆடைத் தயாரிப்புத் தொழில்தான். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization) அறிக்கையின்படி, “ஆயத்த ஆடைத் தொழில்தான் நகர்ப்புற இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாக உள்ளது, தேசிய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 20 வருடங்களுக்கு முன் முறைசாராத் தொழில் என்ற நிலையில் இருந்தது மாறி தொழிற்சாலை சார்ந்த தொழிலாக அது மாறியுள்ளது.'' முக்கியமாக இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத் தில் பெருமளவு வருவாய் ஈட்டும் தொழில்களில் இது முக்கியமானது. குறிப்பாக பெங்களூர், திருப்பூர், சென்னை, டெல்லி நகரங்களில் மட்டும் பத்துலட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர புறநகர்கள், சிறுநகரங்கள், கிராமங்கள், வீடுகள் என மேலும் பல லட்சம்  தொழிலாளர்கள் உள்ளனர்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பிரபல பிராண்டுகளாக அறியப்பட்ட ஆனால் இந்தியக்கடைகளில் விற்கப்படும் உள்ளாடைகள், சட்டைகள், பாண்ட்டுகள், அரை, முக்கால் டிரவுசர்கள் என அனைத்தும் இவர் களைப் போன்ற பல லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவின் நகரங்களில் தைப்பவையே, உள்நாட்டில் அந்நிய பிராண்டு லேபிள் ஒட்டப்பட்டு விற்கப்படுவதோடு, பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இத்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம்?

உதாரணமாக பெங்களூரின் பிராண்டிக்ஸ் இந்தியா என்னும் கம்பெனி உள்ளாடைகள் தயாரித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. 19,000 தொழிலாளர்கள் பணி செய்கின்றார்கள், வருட நிதிச் சுழற்சி ரூபாய் 1500 கோடி. ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் பெங்களூரின் மிகப்பெரும் ஆயத்த ஆடைக்கம்பெனி, 45 இடங்களில்  மொத்தம் 75,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள். கோகுல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ்க்கு 16 தொழிற்சாலைகள், 12,000 தொழிலாளர்கள், பெங்களூரில் மட்டும் 5,000 தொழிலாளர்கள். டெக்ஸ்போர்ட் ஓவர்சீஸிற்கு 13 தொழிற்சாலைகள், 12,000 தொழிலாளர்கள். கோகுல்தாஸ் இமேஜஸ்க்கு 13 தொழிற்சாலைகள், 2,000 தொழிலாளர்கள். வால்மார்ட், போலோ, நைக் உள்ளிட்ட பல பிரபல பிராண்டுகளைத் தைப்பவர்கள் இந்தியத் தொழிலாளர்களே. இதே பிராண்டிக்ஸ் இந்தியா கம்பெனி, விசாகப்பட்டினத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 19,000 தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளது. இத்தொழிலில் பெங்களூரில் மட்டுமே சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளார்கள்.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள இத் தொழிற்சாலைகளுக்கு அதாவது முதலாளிகளுக்கு கற்பனைக்கெட்டாத சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வாரிக் கொட்டுகின்றன. உதாரணமாக, ஆந்திர அரசு பிராண்டிக்ஸ் கம்பெனிக்கு அரசுநிலத்தை ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்திற்கு வெறும் ஓராயிரம் ரூபாய்க்கு மட்டுமே குத்தகைக்குவிட்டுள்ளது.

85 விழுக்காட்டிற்கும் அதிகம் பெண்கள் பணிபுரியும் இத்தொழிலில் நிலவும் மிக மோசமான பணிக்கலாச்சாரம், பாதுகாப்பின்மை, அடிமைத்தனம், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தையும் ஏமாற்றுதல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையை மறுத்தல், அனைத்திற்கும் மேல் பாலியல் தொந்தரவு ஆகிய அனைத்துக் கொடுமைகளும் இத்தொழிலாளர்களை எப்போதும் கொதிநிலை யிலேயே வைத்துள்ளன. 10 மணிநேரம் வரை வேலை. பீஸ்ரேட் முறையில் ஒரு மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பீஸ்களின் எண்ணிக்கையை இருமடங்கு, மும் மடங்கு என உயர்த்துவது (அதே கூலிக்கு), கழிப்பறை கள் உபயோகிப்பதைக்கூட ஒருநாளைக்கு இத்தனை முறைதான், அதுவும் இத்தனை நிமிடங்கள்தான் எனக் கண்காணிப்பது, உடல் நலக்குறைவால் எதிர்பாராது விடுப்பெடுக்க நேர்ந்தால் மீண்டும் தொழிற்சாலைக்குள் நுழையவிடாமல் தடுத்து புதிய நிபந்தனைகளை விதிக்கும் தந்திரம், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது, சிறு தவறுகளுக்கும் முகத்தில் துணிகளை விட்டெறிவது, ஆண்களே மேலதிகாரிகளாக, கண்காணிப்பாளர்களாக இருப்பதால் அவர்களால் தரப்படும் கண்ணுக்குத் தெரியாத நுட்பமான பாலியல் வன்முறைகள், பிரசவத்திற்குப் பிறகு அரசு விதிகள் தந்துள்ள பிரசவகால ஊதியத்துடன் கூடிய விடுப்பை மறுப்பது, பிரசவிக்கும் பெண்களை வேலையிலிருந்து நீக்குவது, குழந்தைகள் காப்பகம் இருந்தாலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கமறுப்பது (அதாவது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதால் உற்பத்தி பாதிக்கப்படுமாம்) எனத் தொடரும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை.

அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளுக்கு ரூ.287 (ஊதியத்துடன் கூடிய விடுப்பு நாட்கள் உட்பட) 26 நாட்களுக்கு எனில், ரூ.7462ரூபாய் தரப்பட வேண்டும். ஆனால் 7000 மட்டுமே தரப்படும். ரூ.7462 தரப்பட்டதாகக் கணக்கில் காட்டப்படும். இதுவன்றி இலக்கை எட்டாத தொழிலாளி கூடுதலாக 2 மணி நேரம் வேலை செய்யவேண்டும், ஆனால் ஓவர்டைம் ஊதியம் தரப்படாது. இ.எஸ்.ஐ, வைப்புநிதி, கேன்டீன், பஸ் வசதி எனப் பலவகைகளிலும் பிடித்தம் செய்யப்பட்ட பின் இந்த 7000 ரூபாயும்கூடக் கையில் வராது பிராண் டிக்ஸ் தொழிலாளர்கள் பெங்களூரைச் சுற்றியுள்ள சுமார் 200 கிராமங்களிலிருந்து கம்பெனியில் பேருந்துகளில் ஏற்றப்பட்டு வருகின்றார்கள்.  காலை 6 மணிக்கு தொழிற் சாலையில் இருக்க அதிகாலை 4 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட வேண்டும். மாலையும் வீட்டை அடைய 8மணி ஆகலாம். ஆக குழந்தைகளின் கல்வி, உடல்நலன், தனது உடல்நலன், அன்றாடக் குடும்ப விசயங்கள், சமூகத் தொடர்புகள் அத்தனையும் இரண்டாம்பட்சத்துக்கும் பின்னே எங்கோ போய்விடுகின்றன.

இதற்கு முன் இத்தொழிலில் விடுதிகள் இருக்காது. இப்போது விடுதிகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து மட்டு மின்றி வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், ஒரிசா போன்றவற்றில் இருந்தும் இத்தொழிலில் இப்போது பெங்களூரில் பார்க்க முடிகின்றது. தந்திரமாக ஏற்கனவே பலபெயர்களில் பிடிக்கப்படும் ஊதியத்தில் விடுதி வாடகையையும் நிர்வாகங்கள் பிடித்துவிடுகின்றன.

முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, ஒடுக்கப்பட்ட ஷெட்யூல்டு சாதி மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் இருந்தும், சிறுபான்மைச் சமூகங்களான இஸ்லாமியர்களும் இத்தொழிலில் பெரும்பான்மையினர், அதிலும் பெண்கள், இவர்களின் சில நூறு ரூபாய்கள் மாத ஊதியத்தை நம்பியே இக் குடும்பத்தினர் வாழ்கின்றார்கள், இப்பெண்களின் கணவர்கள் தினக்கூலி வேலைக்குச் செல்வார்கள் அல்லது வேலைக்குச் செல்லமாட்டார்கள். சென்றாலும் அவ்வருவாயை மதுவைக் குடித்துத் தீர்த்துவிடுவார்கள்.

இத்தகைய பல்வேறு அழுத்தங்களும் பிரச்சனைகளும் ஒரு பெண்மணியை ஒரு தொழிற்சாலையில் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு வேலை செய்ய அனுமதித்தால் அதுவே பெரிய சாதனையாகும். ஐந்து வருடங்கள் பணி செய்தால் கிராஜுட்டி எனப்படும் பணிக்கொடையை வழங்கவேண்டியிருக்கும் என்பதால் ஐந்து வருடங்கள் முடியும் முன்பே பல்வேறு நெருக்கடிகள் தரப்படும். தொழிலாளர்கள் தாமாகவே வேலையைவிட்டு நின்று விட வேண்டும் என்பதே கொடூரமான நோக்கம். ஐந்து வருடங்களுக்கு மேல் பணிபுரிவோரின் வருகைப்பதிவு செய்யப்படாது, ‘பஞ்சிங்' முறை மறுக்கப்படும். இத்தனை கொடுமைகளையும் சகிக்காமல் வேலையை விட்டுச்சென்றால், ஆனால் மீண்டும் அதே தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தால் அவர் புதிய தொழிலாளியாகி விடுவார். எனவே புதிய பிராவிடன்ட் நிதிக்கணக்குத் தொடங்கப்படும்.

தொழிற்சங்கங்கள் வெளியிடக்கூடிய துண்டறிக்கைகளைக் கையில் வைத்திருந்தால் அதுபோதும் வேலையை விட்டு நீக்குவதற்கு. அப்படியிருக்க ஒரு தொழிற்சங்கம் தொடங்க அல்லது ஒரு தொழிற்சங்கத்தில் இணைய முனைவோரின் நிலை பற்றிக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும் பெங்களூரைப் பொருத்தவரை 1990களில் ஆயத்த ஆடைத்தொழிலில் சி.ஐ.டி.யூ பெருவாரியான சங்கங்களைக் கொண்டிருந்ததாகவும் வலிமையான போராட்டங்களை நடத்திய தொழிற்சங்கமாக இருந்ததாகவும் அறியமுடிகின்றது. ஆனால் 1990களின் தொடக்கத்தில் மத்திய காங்கிரஸ் அரசால் புகுத்தப்பட்ட தனியார் மய- தாராளமயக் கொள்கைகளின் விளைவாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதும் தொழிலாளர்கள் மிரட்டப்பட்டதும் பழிவாங்கப்பட்டதும் இத்தொழிலில் தொழிற்சங்க இயக்கத்தின் தேய்மானத்துக்குக் காரணமானவை.

3
இந்நிலையில்தான் தமது சொற்ப சேமிப்பான வைப்பு நிதிச் சேமிப்பிலும் பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி அரசு கொடூரமாகக் கைவைப்பது கண்டு யாதொரு அமைப்பும் கட்சியும் தொழிற்சங்கமும் அறைகூவல் விடுக்காமலேயே ஏப்ரல் 18,2016அன்று பெங்களூரின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கோபாவேசம் கொண்டவர்களாக வீதிகளிலும் நெடுஞ்சாலைகளிலும் திரண்டார்கள். மிகச்சில ஆண்களும் பங்குபெற்றார்கள். இது வரலாற்றில் தனியாகக் குறிப்பிடவேண்டிய ஒரு போராட்ட நிகழ்வாகும்.

பெங்களூர் போராட்டத்துக்கு முன்பாகவே விசாகப்பட்டினத்தில் அச்சுதபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் இந்தியா கம்பெனியின் 19000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். கம்பெனி வாயில் முன்பு தர்ணா செய்து உட்கார்ந்தார்கள். கம்ப்யூட்டர்மீது பெரும் நம்பிக்கை என்பதை விடவும் பக்தியோடிருப்பவரும் ஆளுயர லத்திகளைக் கண்டுபிடித்து போலீசுகளின் கையில் கொடுத்து விவசாயிகளின், தொழிலாளர்களின் பல போராட்டங்களின் மீது ஏவி பெரும் ரத்தக்களறியை ஏற்படுத்திய வரலாற்றுக்குச் சொந்தக்காரரும் மோடியோடு சேர்ந்தே ஸ்மார்ட் சிட்டி கனவைக் காணும் நவீனருமான சந்திரபாபு நாயுடு இப் போராட்டத்தைக் கண்டு சகித்துக்கொள்ளாதவராக, மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு உயர், நடுத்தர, கீழ் அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள், சுய உதவிக்குழுக்கள், தனது கட்சிக்காரர்கள் என அனைவ ரையும் களத்தில் இறக்கி தொழிலாளர்களை மிரட்டினார், போராட்டத்தை ஒடுக்க முனைந்தார். கர்நாடக காங்கிரஸ் அரசும் இதேபோன்ற நடவடிக்கையில்தான் இறங்கியது. பெங்களூரில் காங்கிரஸ் அரசின் போலிஸ் மோசமான போராட்ட ஒடுக்குமுறையில் இறங்கியது. தொழிலாளர்களின் போராட்டங்களை தொடக்க நிலை யிலேயே கிள்ளி எறிவதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், தெலுங்குதேசம் என அனைவரும் ஒரே அணியில் நின்றார்கள்.  பெங்களூரில் போராடிய தொழிலாளர்களுடன் கலந்துவிட்ட சமூக விரோதிகள் பேருந்துகளை எரித்தது திட்டமிட்ட வகையில் போராட்டத்தைச் சீர் குலைப்பதற்கே. இதனால் போலீஸ் தடியடி நடத்தியது. அரசும் அடக்குமுறைக் கருவியான போலீசும் பெருமுதலாளிகளின் நலனுக்காவே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமானது.

பெங்களூரில் ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் தொழிற்சாலை யில் இத்தன்னெழுச்சியான போராட்டம் முதலில் வெடித்தது. தொழிலாளர்கள் வெளியே வந்து மைசூர் சாலையில் மறியல் செய்தார்கள். 80கி.மீ தொலைவில் பொம்மனஹள்ளியில் ஷாஹியின் மற்றொரு தொழிற்சாலையின் தொழிலாளர்களும் வெளியேற செய்தி காட்டுத்தீயெனப் பரவியது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலைகளிலும் வீதிகளிலும் திரண்டார்கள். போலீசோடு சேர்ந்துகொண்டு தனியார் செக்யூரிட்டி ஆட்களும் தொழிலாளர்களை லத்தி கொண்டு தாக்கினார்கள். சில நூறு பேர்களை போலீஸ் கைது செய்தாலும் மறுநாளும் போராட்டம் தீவிரம் அடைந்தது. குறிப்பிடத்தக்க விசயமாக நிரந்தரத் தொழிலாளர்களுடன் காண்ட்ராக்ட் தொழிலாளர்களும் இப் போராட்டத்தில் இணைந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கர்நாடகா மாநிலச்செயலாளர் மீனாட்சிசுந்தரம், “இக்கோபாவேசப் போராட்டம் யாராலும் அறைகூவல் விடுக்கப்பட்ட ஒன்றல்ல, தன்னெ ழுச்சியானது'' என்கின்றார். பெங்களூரில் எந்த ஒரு தொழிலிலும் கடந்த 10 ஆண்டுகளில் இப்படியான சக்தி யான ஆவேசமானதொரு போராட்டம் நடந்ததில்லை என்றும் கூறுகின்றார். தாராளமயம்-தனியார் மயத்தின் பின்னணியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உரு வாக்கப்பட்டபின் ஆயத்த ஆடைத்தொழிலாளர்களை மட்டுமல்ல, எந்தத்தொழிலிலும் எந்தத் தொழிலாளியையும் தொழிற்சங்கத்தில் இணைப்பதோ முடியாத விசயமாகிப் போனதால் தொழிற்சங்க இயக்கம் தேய்ந்து சிதைந்ததை சி.ஐ.டி.யூ உள்ளிட்ட பல தொழிற்சங்கத் தலைவர்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார்கள்.

4
உழைக்கும் பெண்கள் மிகப்பெரிய அளவில் வீதிகளில் திரண்டு, எந்தவொரு அணி திரட்டப்பட்ட தொழிற்சங்கத்தின் அல்லது அமைப்பின் பின்னால் இல்லாமல் இரண்டுநாட்கன் போலீஸ் அடக்குமுறையையும் தனி யார் ரவுடிகளையும் எதிர்கொண்டு போராடியது 1990 களுக்குப்பின் இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்.

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல் இரும்புத்தொழில், கார் உற்பத்தி, கத்தரிக்காய் தக்காளி விவசாயம், சூப்பர் மார்க்கெட் சங்கிலி, மால்நடத்துவது, மது தயாரிப்பது போல் ஊடகங்களை நடத்துவதையும் கார்ப்பரேட்டுகள் ஒரு தொழிலாக்கி விட்டதால் பெங்களூர் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை இடதுசாரி ஏடுகள் மட்டுமே வெளியிட்டுத் தமது கடமையைச் செய்தன. பெருமுதலாளிகளின் ஊடகங்கள் சில பேருந்துகள் எரிக்கப்பட்டதை மட்டுமே செய்தியாக்கியதன் மூலம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை, குறிப்பாக மோடி அரசின் மோசடித்தனமான அரசாணையின் கொடூரத்திற்கு எதிரானதே இப்போராட் டம் என்பதை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தன. போராட்டத்தின் இரண்டாவது நாள் வைப்புநிதி தொடர்பான தனது கொடுமையான ஆணையை மோடி அரசு சத்தமின்றி திரும்பப் பெற்றுக்கொண்டது. சாமான்ய மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாகவே மோடி அரசு தனது அரசாணையை திரும்பப் பெற வேண்டியிருந்தது என்பதை பெருமுதலாளிகளின் ஊடகங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதால் இதனையும் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.  தனது எஜமானரான இந்துத்துவா மோடிக்கு சாமானிய உழைக்கும் பெண்கள் கொடுத்த மிகப்பெரும் அடியை வெளியுலகுக்குக் கொண்டு செல்ல கார்ப்பரேட் ஊடகங்கள் ஒன்றும் அத்தனை அறிவீனமானவையல்ல.
5
இதே போன்றதொரு போராட்டம், பெண்களே முக்கியப் பாத்திரம் ஏற்ற ஒரு போராட்டம் கடந்த 2015 செப்டம்பர் மாதம் கேரளாவில் நடந்தது. அதுவும் கார்ப்பரேட் ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டது. ஆனால் இப்போராட்டம் குறித்து எதிர்மறையான- அதாவது தொழிற்சங்க இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும்  குறிப்பாக இடதுசாரி அரசியலை கேள்விக்குள்ளாக்கும் திரிக்கப்பட்ட செய்திகளை கேரளாவின் ஊடகங்கள் திட்டமிட்டு கேரளமக்கள் மத்தியில் பரப்பியதில்  ஓரளவு வெற்றி பெற்றன என்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

மூணாறில் உள்ள கண்ணன் தேவன் மலைத்தோட்டத் தொழிலாளர்களின் மகத்தான போராட்டம் அது. அதா வது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட் டம். தேவிகுளம் தாலுகாவில் உள்ள இத்தோட்டம் 1,36,600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தியப் பெருமுதலாளியான டாடாவுக்குச் சொந்தமானது. 2005ம் ஆண்டு டாடா டீ (இப்போது டாடா க்ளோபல் பிவரேஜஸ், உலகின் இரண்டாவது பெரிய தேயிலைக் கம்பனி) தனது மூணாறு தோட்டங்களை தொழிலாளர்களுக்கு ‘விற்பதாக' அறிவித்தது. அதாவது நிர்வாகத்தில தொழிலாளர்களும் 'பங்கு'பெறும் திட்டமாம்.  பெருமுதலாளியான டாடா அவ்வளவு நல்லவரா? புதிய கம்பெனியில் 13,000 தொழிலாளர்கள் 'குட்டி' பங்குதாரர்களாக ஆனார்கள். ஆனால் கம்பெனியில் 28.52 சதவீதப்பங்குகள் இப்போதும் டாடாக்கள் வசமே உள்ளன. இதன்றி 87.95 சதவீதப் பங்குகள் இப்போதும் டாடாநல அறக்குழுவுக்கும் கண்ணன் தேவன் மலைத் தோட்டக் கம்பெனிக்கும் சொந்தமாகவே உள்ளன. உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் ஒரு பங்கை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் உரிமையும்  டாடாக்கள் கையில் வைத்துள்ளனர். இதன்றி உள்ளூர் சந்தைகளில் தேயிலையின் விலையை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்களாக டாடாக்கள் இருக்கிறார்கள்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் 70 விழுக்காட் டினர் பெண்களே. கொழுந்து கிள்ளுவது என்பது வெறுமனே கிள்ளுவதல்ல. லாவகம் வேண்டும். இதில் பெண்கள் பாரம்பரியமாகவே தேர்ந்தவர்கள் என்பதால் பறிக்கும் வேலை பெண்களுக்கும், களையெடுப்பது, மருந்து தெளிப்பது, உரம் வைப்பது போன்ற வேலைகள் ஆண்களுக்கும் ஆனவை. இத்தொழிலாளர்களில் கேரளத்தைச் சேர்ந்தவர்களைக் காண்பது அரிது. அனைவரும் தமிழர்களே. அதிகம் ஷெட்யூல்டு சாதி மக்களே. இவர்களது உறவுகள் இப்போதும் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றார்கள்.

தொழிலாளர் சட்டப்படி அவர்கள் ஒரு நாளைக்கு 20 கிலோ தேயிலை பறித்தால் போதுமானது. ஆனால் 12 மணிநேரத்திற்கும் அதிகமான வேலை வாங்கப்படும். 60 கிலோ, 100 கிலோ வரையும் பறிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். மூன்று மாதங்களுக்கு 75 கிலோ அரிசி (ஒரு குடும்பத்துக்கு) தரப்படும், இதற்காக ஊதியத்தில் மாதம் ரூ.750 பிடிக்கப்படும். இது கிட்டத்தட்ட சந்தை விலைக்கு ஈடாகும். ரேஷன் விலையைவிட மிக அதிக மாகும். பிரிட்டிஷ் காலத்திய அடிமைகளை அடைக்கும் கொடும் கொட்டகைகளே  இவர்களுக்கு டாடா என்னும் பெருமுதலாளி கொடுத்துள்ள வீடுகளாம். ஆண், பெண், தாய், தகப்பன், குழந்தைகள் என அனைவரும் இதில் தான் படுத்துறங்க வேண்டும். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளாலும் தடை செய்யப்பட்டுள்ள புற்றுநோய் உருவாக்க வல்ல அஸ்பெடாஸ் ஓடுகள்தாம் இங்கே வீட்டு ஓடுகளாம்.

கங்காணி ஒருவரின் வாக்கு முறைப்படி ஓய்வு என்பது இல்லாத ஒன்று, தேநீர் அருந்தும்போதுகூட ஒரு கையில் டம்ளரும் மறுகையில் இலை பறிப்பதும் தொடரும். தமது வேலைநிமித்தம் தொடர்ச்சியான குனிவதால் பல பெண்கள் கருப்பை பாதிக்கப் பட்டு கருப்பையையே இழந்திருக்கின்றார்கள்; தொடர்ச்சியான பூச்சிக்கொல்லிகளோடு ஆன புழக்கத்தால் ஆண்கள் விஷத்தாக்குதல் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். மழைக் காலங்களில் இப் பூச்சிக்கொல்லி நீரோடு கலந்து சமவெளியில் உள்ள ஊர்களின் குடிநீரை உபயோகிப்பதற்குத் தகுதியற்றதாக ஆக்குகின்றது. ஏறத்தாழ 60% பங்குகள் தொழிலாளர்களுக்கு எனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் கம்பனியின் கட்டுப்பாடு டாடாவிடமே உள்ளது. தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக இருவர் இயக்குநர் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வது சும்மா பெயருக்கே, உண்மையில் அங்கு நடப்பது எதுவும் அவர்களுக்குப் புரியாது. கூட்டத்தில் தேநீர் அருந்திவிட்டு வருவார்கள்.

மே 2011இல் செய்து கொள்ளப்பட்ட ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் 31, 2014 உடன் முடிவுற்றது. அதிலிருந்து தொழி லாளர்கள் தொடர்ச்சியாக ஊதிய மாற்றம் கோரி வருகின் றார்கள். எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தோட்டத் தொழிலாளர் கமிட்டியில தொழிற்சங்கங்கள், தேயிலை முதலாளிகள், அரசுத் தரப்பு என முத்தரப்பும்  உள்ளன. 10ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்தார்கள். 2013-2014க்கு 19% போனஸ் வழங்கிய கண்ணன் தேவன் தோட்ட நிர்வாகம் 2014-15க்கு ஒருதலைப்பட்சமாக 10%  போனஸ் அறிவித்தது. 2014-2015 காலத்தில் நல்ல லாபம் ஈட்டியிருக்கின்ற முதலாளியின் அறிவிப்பு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே கண்ணன்தேவன் தொழிலாளர்கள் ‘மெதுவாக வேலை செய்வதுஎன்ற  போராட்டத்தை நடத்தத் தொடங்கினார்கள். இதனை எதிர்கொள்ள ‘லாக் அவுட்' செய்வோம் என டாடா நிர் வாகம் அச்சுறுத்தியது. லாக்அவுட் என்பது பிரச்சி னையை திசைதிருப்பும் என்பதால் சி.ஐ.டி.யூ  தலையிட்டு மெதுவாகச் செய்யும் போராட்டத்தைக் கைவிடச் செய்தது. ஏற்கனவே 2015 செப்டம்பர் 2  அகில இந்திய வேலைநிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தார்கள். மறுநாள் 3ம் தேதி தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஊதிய உயர்வு, போனஸ் பிரச்னைக்காக வேலைநிறுத்தம் தொடங்கினார்கள். 2015 செப்டம்பர் 5 அன்று கண்ணன்தேவன் அலுவலகம் முன்பு சுமார்  50 பெண்கள் திரண்டு வேலைநிறுத்தத்தை அறிவித்தார்கள். சற்றுநேரத்தில் செய்தி பரவி மலையகம் எங்கிலுமுள்ள  பெண் தொழிலாளிகள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். வேலைநிறுத்தம் தொடங்கிய மூன்று நாட்கள் கழித்தே கேரள ஊடகங்கள் இதுகுறித்த செய்திகளை வெளியிட்டன. எப்படிப்பட்ட செய்திகள்? கேரளாவின் தொழிற்சங்க இயக்கங்களை தேயிலைத்தோட்டத் தொழிலாளிகள் புறக்கணித்துவிட்டதாகவும் புதிய அத்தி யாயம் எழுதப்பட்டு விட்டதாகவும் ‘மலையாள மனோரமாஏடு கும்மாளம் போட்டது. கேரளா பின்தங்கிப் போகக் காரணமே  இதுபோன்ற வேலைநிறுத்தங்களும் தர்ணாக்களுமே என்று கொட்டை எழுத்தில் பிரச்சாரம் செய்கின்ற மலையாள மனோராமா, கண்ணன் தேவன் போராட்டத்தைத் தனது போராட்டம் போல் சித்தரித்தது. உண்மையில் 2015 செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம் கேரளாவில் முழுஅளவு வெற்றிபெற்றதை மலையாள மனோரமா  விரும்பவில்லை. ஏனெனில் கேரளாவில் அது முழுஅளவு கடையடைப்பாக மாறி யது. தென்னை நார், தலைச்சுமை, முந்திரி, கைநெசவு, பீடி, கட்டுமானம், மோட்டார், லாட்டரி, அங்கன்வாடி - தொழிலாளர்களும், கேரள அரசுப் போக்குவரத்துத் துறை, ஃபாக்ட் உரத்தொழிற்சாலை ஊழியர்கள், கொச்சி துறைமுகத் தொழிலாளர்கள் எனச் சமூகத்தின் அனைத்துப்பிரிவினரும் அன்றிருந்த மாநில காங்கிரஸ் அரசுக்கும் மத்தியில் இருந்த பாஜக அரசுக்கும் எதிரான போராட்டங்களை மாநிலம் தழுவிய அளவில் நடத்திய போதெல்லாம் அதுபற்றி கண்டுகொள்ளாத அல்லது இதுபோன்ற போராட்டங்கள் மாநில வளர்ச்சியைப் பாதிப்பதாக மட்டுமே விஷத்தைக் கொட்டிய மலையாள மனோரமா உள்ளிட்ட ஏடுகள் மூணாறு தோட்டத் தொழிலாளர்  போராட்டத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதன் நோக்கம் அது தன்னெழுச்சியாக வெடித்ததுதான். உண்மையில் இப்போராட்டம் திடீரென வெடிக்கவில்லை; நீண்டகால காரணங்கள் உள்நெருப்பாக  இல்லாமல் எந்த ஒரு போராட்டமும் குறிப்பாக வேலை நிறுத்தம் போன்ற பெரும் போராட்டங்கள் திடீரென ஒரு காரணமுமின்றி வெடிப்பதில்லை. தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளை முதலாளிகள் + அரசாங்கம் என்ற கூட்டணி திட்டமிட்டு இழுத்தடிப்பது தொழிலாளர்களைச் சோர்வடையச் செய்யும் தந்திரம் மட்டுமின்றி தொழிற்சங்கத்தின்பால் தொழிலாளர்கள் கொண்டுள்ள நடவடிக்கைகளை சிதறடிக்கச் செய்வதும் தொழிற்சங்க இயக்கத்தை மழுங்கடித்து தேய்மானம் அடையச் செய்வதுமே ஆகும். இத்தகைய முதலாளித்துவ அரசியலுக்குத் துணைபோவதே கார்ப்பரேட் ஊடகங்களின் திட்டமிட்ட பணியாக குறிப்பாக 1990களுக்குப் பிறகு பார்க்கின்றோம். தொழிற்சங்க இயக்கத்தை என்பதைவிடவும் இடதுசாரி அரசியலைச்சார்ந்த தொழிற்சங்க இயக்கத்தைக் கொச்சைப்படுத்தவதும் பின்னுக்குத் தள்ளுவதும்  ‘மெய்ன்ஸ்ட்ரீம் மீடியா' என்று சொல்லப்படும் கார்ப் பரேட் மீடியாக்களின் திட்டமிட்ட அஜெண்டாவாக மாறியுள்ளது.

பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் விசயத்திலும் மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் விசயத்திலும் நடந்தது இதுவே. கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இளமரம் கரீம், “மூணாறு தோட்டத்தொழிலாளர் பிரச்னையில் தொடக்கம் முதலே சி.ஐ.டி.யூ தலையிட்டுவந்தது, எர்ணாகுளத்திலும் திருவனந்த புரத்திலும் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு சி.ஐ.டி.யூ தலைவர்கள் களத்திற்கு நேரடியாகச் சென்ற போது தொழிலாளர்கள் அவர்களை வரவேற்றார்கள். வி.எஸ்.அச்சுதானந்தன் போராட்டம் முடியும் வரை அவர்களுடன்தான் இருந்தார்என்று சொல்கின்றார்.

6
முன்னரே சுட்டப்பட்ட ஜெய்ராம் “To the Brink and Back” என்கிற தனது நூலில் கூறுகின்றார்: “பு.பொ. கொள்கைகளின் நேர்மறை அம்சங்களெனில் நுகர் பொருட்கள் இப்போது மக்களுக்கு எளிதில் கிடைக்கின் றன; ஒரு தொலைபேசிக்காக ஒரு கேஸ் இணைப்புக்காக ரயில் டிக்கெட்டுக்காக நீண்டநேரம்  காத்திருக்க வேண்டி யதில்லை. ஆனால் எதிர்மறையாக மக்களிடையே சமத்துவமின்மை அதிகரித்துள்ளது, கல்வி- பொது சுகா தாரம் ஆகியவை சீரழிந்துள்ளன. கல்விநிலையங்களின் எண்ணிக்கையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது உண்மைதான், ஆனால் கல்வியின் தரம் தாழ்ந் துள்ளது. சுகாதாரத்துறையில் தனியார் பங்களிப்பு அதிகரித்துள்ளது உண்மைதான், ஆனால் அரசின் பொது சுகாதார அமைப்பு (அதாவது சாமான்யக் குடிமக்களுக்கான மருத்துவம் பெறும் உரிமை) சீரழிந்துள்ளது. உதாரணமாக ஹைதராபாத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ளன, உண்மைதான். ஆனால் அங்கிருந்து ஓர் அரை மணிநேரம் பயணம் செய்தால் அரசுத்தொடக்க நிலை மருத்துவமனையில் டாக்டர்கள், நோயாளிகளின் எண்ணிக்கையைவிடவும் பெருச்சாளிகள், எலிகள், பூனைகள், சிலந்திவலைகளைத்தான் நீங்கள் பார்க்க முடியும். காங்கிரஸ்கட்சிக்காரான ஜெய்ராம் ரமேஷ் இந்தளவுக்காவது உண்மையைப் பேசினாரே என்று நாம் மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்.

பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் வீதிப் போராட்டமாகட்டும், மூணாறு போராட்டமாகட்டும் பல்வேறு விசயங்கள் தெளிவாகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை, 1990களுக்கு முன்பிருந்த ‘அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள்' என்ற வகையினர் அரசுக்கு ஆபத்தான அணியினர் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட கொள்கை, எனவே எந்தெந்த வகையில் எல்லாம் தொழிலாளர்களை ஒன்றுசேரவிடாமல் தடுக்க முடியுமோ, ஏற்கனவே அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் அணிகளைச் சிதைக்க முடியுமோ அதற்கான அத்தனை தந்திரங்களையும் செய்கின்றது. கட்டுரையில் தொடக்கத்தில் சொன்னபடி, வீதிகளிலும் சிறைகளிலும் ரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற, பல விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் சட்ட வடிவாக்கப்பட்டுப் பெறப்பட்ட பல உரிமைகளை, யாரோவொரு அரசு அதிகாரியின் ஒற்றைக்கையெழுத்திட்ட அரசு ஆணைகள் மூலம்  (Executive Orders) அதிரடியாக நீக்குவதில் காங் கிரஸ் பாஜக இரண்டும் ஒருமித்த கூட்டாளிகளாகவே  நீடிக்கின்றன, இவ்விசயத்தில் இவ்விரண்டு கட்சிகளிடம் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியாது. இதற்கு மாநிலக்கட்சிகளான தெலுங்குதேசம், திமுக, அதிமுக, பாமக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துணைபோவதற்கு தயங்குவதில்லை.

ஏற்கனவே அணிதிரட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் இயங்கக்கூடிய அரசுத்துறை, அரசுத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைப்பளுவைக் குறைப்பது, அதாவது இவ்வேலைகளை தனியார் தொழிற்சாலைகளுக்கு மாற்றுவது அல்லது இத்தொழில்களின் இறுதி உற்பத்திப்பொருட்களை வெளிநாட்டிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்துகொள்வது, இதன் விளைவாக செயற்கையான உற்பத்திக்குறைவு மற்றும் செயற்கையான வேலைப்பளுவின்மையைக் காரணம்காட்டித் தொடர்ந்து ஆட்குறைப்புச் செய்வது, இறுதியில் அத்தொழிற்சாலைகளை மூடிவிடுவது. இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் பாரத் அலுமினியம் கம்பெனி, ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ், பெங்க ளூரில் இருந்த இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்.எம்.டி.யின் பல யூனிட்கள், தமிழக அரசின் சிறந்த கனரகத்தொழில் பொதுத்துறை நிறுவனமான சதர்ன் ஸ்ட்ரச்சுரல் லிமிடெட் ஆகியவை.

நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒருபுறம், கணிணிமயம், தானியங்கி மயம் என்ற பெயரில் பல பத்துப்பேர்கள் செய்த வேலையை ஒரு சில தொழிலாளிகளை மட்டுமே வைத்துக்கொண்டு தொழிலை நடத்துவது மறுபுறம், இத்தகைய தொழிற்கலாச்சாரப் பின்னணியில்தான் உலக கோடீசுவரர்கள் வரிசையில் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியாவில் பல தொழிலதிபர்களும் இடம் பெற்றள்ளார்கள் என்பதைத் தொழிற்சங்க இயக்கம் கவனிக்காமல் இல்லைதான்.

சமீபத்திய உதாரணமாக சேலத்தில் உள்ள மத்திய அரசின் உருக்காலைத் தொழிற்சாலையை தனியாருக்கு விற்று விட மோடி அரசு தீவிரமாக முயன்று வருகின்றது. 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் 181 கோடி ரூபாய் மூலதனத்தில் 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உருக்காலை தொழி லாளர்களின் உழைப்பால் இன்றைக்கு 3000 கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்ந்துள்ளது. ஆலை இருக்கும் இடமான 2,500 ஏக்கர், வெற்றிடமான 1,500 ஏக்கர், ஏற்காட்டில் 10 ஏக்கர், குடியிருப்பு, பொது மருத்துவமனை, பொது நூலகம், பொதுக்கல்விச்சாலை ஆகியனவும் காலியிடத் தில் உள்ள தேக்கு, சந்தன மரங்கள் ஆகிய  சொத்துக்களை யும் சேர்த்துக் கணக்கிட்டால் இன்றைய மதிப்பில் 15,000 கோடிக்கும் அதிகம் என ஆலையின் தொழிற்சங்கத்தினர் கூறுகின்றார்கள். ஆலை நட்டத்தில் இயங்குவதாக பொய்க்கணக்கு காட்டுவதன் மூலம் அடிமாட்டு விலைக்கு மோடிக்கு பிரியமான ஒரு முதலாளிக்கு இந்த ஆலையை அதன் சொத்துக்கள் எல்லாவற்றுடனும் விற்கமுடியும், அத்தோடு அங்கே இயங்கிவரும் தொழிற் சங்க இயக்கத்தையும் ஒழித்துவிட முடியும்.  

இந்த வரிசையில் கேந்திரமான பல பாதுகாப்புத் துறைத் தொழிற்சாலைகளும் காத்திருக்கின்றன. பாதுகாப்புத் துறையில் அம்பானியின் ரிலையன்ஸ், டாடா, அதானி, லார்சன் அண்ட் டப்ரோ போன்ற பெருமுதலாளிகளையும் சர்வதேச பெருமுதலாளிகளையும் அனுமதிப்பதென மோடி அரசு கொள்கை முடிவு எடுத்துவிட்டது.  இதன் மூலம் அரசின் தொழிற்சாலைகளை மூடிவிடுவது, அங்கே ஏற்கனவே இயங்கிவரும் தொழிற்சங்க இயக் கத்தை அழிப்பது என இரண்டு நோக்கங்களை அரசால் நிறைவேற்ற முடியும்.  ஒரு சில லட்சங்கள் கொடுத்து செட்டில்மெண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தம் தொழிலையும் மாதாந்திர வருமானத்தையும் இழப்ப தோடு இத்தொழிற்சாலைகளில் இயங்கிவந்த உயிரோட்டமான தொழிற்சங்க இயக்கமும் சாகடிக்கப்படுகின்றது என்பதுதான் மையமான விசயம். ஆட்குறைப்பு, ஆலை மூடல் என்பது வெறும் ஊதியம், வைப்பு நிதி, ஓய்வூதி யம் போன்ற பணப்பலன் சார்ந்த விசயம் மட்டுமே அல்ல. அணிதிரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கம் எந்த ஒரு நாட்டின் பாட்டாளிவர்க்க அரசியல் இயக்கத்துக்கும் அடிப்படையான ஒன்று என்பதை இந்திய-சர்வதேச முதலாளித்துவம் நன்றாகவே புரிந்துவைத்துள்ளது. அத்தகைய அணிதிரட்டப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தையும் தொழிலாளி வர்க்கத்தையும் அழிப்பதில் சர்வதேச-இந்திய முதலா ளித்துவம் கடந்த இருபதாண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

தாராளமய, தனியார்மய அடிப்படையிலான புதிய பொருளாதாரக் கொள்கை யில் அரசுசார்ந்த தொழில்களில் மேற்படி தேய்மானம் எனில் தவிர்க்க இயலாத வகையில் அதன் இயற்கையான தொடர்ச்சியாக இணையாக முறைசாராத அணிதிரட்டப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கை பல கோடிகளாக இந்த 25 ஆண்டுகளில் வளர்ந்து விட்டது கண்கூடு. உதாரணமாக முன்னர் குறிப்பிட்ட சேலம் உருக்காலையில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,200; ஒப்பந்த தொழிலாளர்கள் அதாவது நிரந்தரமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 850. பொதுத்துறையான நெய்வேலி சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளரின் எண்ணிக்கை ஏறத்தாழ 10,000. மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையான BSNLஇல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். முறையாக நிறுவப்பட்ட அரசு-அரசுசார் நிறுவனங்கள் மூடப்பட்டபின், தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு இருக்கின்ற தொழிலாளர் சட்டங்களை, உரிமைகளை மதிக்கும் என்பதற்கு பெங்களூரும் மூணாறும் நல்ல உதாரணங்கள். தனியார் தொழிற்சாலைகளில் ஏன் தொழிற்சங்க இயக்கம் கடந்த 25 வருடங்களில் தோல்வியடைந்துள்ளது என்பதற்கான காரணங்கள் இந்த இரண்டு உதாரணங்களிலும் மலிந்து கிடக்கின்றன. புதிய வகை ‘காண்ட்ராக்ட் தொழில்முறை'யை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. அரசு நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கைக்கு இணையாக அல்லது அதிகமாக காண்ட்ராக்ட் ஊழியர் எண்ணிக்கை இருக்கிறது. இது எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும். ஒருவகையில் நிரந்தரத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையே இது. இணையாக ஒப்பந்தத் தொழிலாளர்களையும் தொடர்ந்து ஒரு அச்சுறுத்தலின் கீழ் வைத்திருக்கும் தந்திரமும் அடங்கியுள்ளது. ஆக நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் ஏற்கனவே இத்தொழில்களில் இயங்கிவரும் அணிதிரட்டப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தைத் தேய்மானத்துக்கு இட்டுச்செல்வது. இணையாக நிரந்தரமற்ற காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் எவ்வகையிலும் ஒரு தொழிற்சங்க இயக்கத்தின் கீழ் திரண்டுவிடாமல் இருப்பதை உத்தரவாதம் செய்வது எனப் புதிய பொருளாதாரக் கொள்கை இரண்டு மாங்காய்களை அடிக்கின்றது.

இத்தனை அழுத்தங்கள் அடக்குமுறைகளையும் மீறிப் போராட்டங்கள் வெடிக்கும்போது ஹரியானாவில் மாருதி சுசுகி தொழிற்சாலையில் நிகழ்ந்ததைப்போல் அரசு, தனது அடக்குமுறைக்கருவியான போலிசை ஏவி ரத்தக்களறியை உருவாக்கி அடக்குகின்றது. மாருதி சுசுகி யின் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் சிறைகளில் இப்போதும் அடைக்கப்பட்டுள்ளார்கள். சாலையில் டிராபிக் சிக்கலில் சிக்கிக்கொண்டதால் எரிச்சலுற்ற நீதிபதிகள் தாமாகவே முன்வந்து ‘பொதுநலன்கருதி வழக்குகளைத் தொடர்ந்துகொள்வதைப் பார்க்கின்ற இந்திய சமூகத் தால், மாருதி சுசுகி தொழிலாளர்கள்பால் நீதிமன்றங்கள் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்கின்றன என்பதையும் தெளிவாகவே பார்க்க முடிகின்றது.

ஹரியானாவில் ஹீரோ ஹோண்டா தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுபயங்கரமான போலீஸ் அடக்குமுறையும், சில வருடங்களுக்கு முன் ஆந்திரா வில் தெருவில் இறங்கிப் போராடிய விவசாயிகள் மீது ஆள் உயர லத்திகளைக் கொண்டு தாக்கி மண்டைகளை உடைத்த தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு வின் போலீஸ் அடக்குமுறையும் திட்டமிட்டவை, போராட எத்தனிக்கின்ற தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அச்சுறுத்துபவை.

இதற்குச் சமமாக தொழிலாளர்களின் போராட்ட உணர்வை, தொழிற்சங்கக் கோபாவேச உணர்வை மட்டுப்படுத்தவும் முழுங்கடிக்கவும் அரசு நடத்தை விதிகளைக் காரணம் காட்டி மிரட்டுவது, தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு பணிபுரியும் ஊழியர்களை பழிவாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளோடு,  பல்வேறு திசை திருப்பல் வேலைகளையும் அரசு நிர்வாகம் செய்வதற்கு தயங்குவதில்லை. அரசு ஊழியர்களுக்கு அரசு நிர்வாகமே யோகா நிபுணர்கள்,  மனவள நிபுணர்கள், ஆற்றல் வல்லுநர்கள் போன்ற பல பெயர்களில்  ஆர்.எஸ்.எஸ் சாமியார்களைக் கொண்டு பயிற்சி நடத்துகின்றது. ‘சைவ' உணவின் அருமைபெருமைகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ‘மனஅமைதிஅதாவது போராட்ட உணர்வுகளோ அநீதி கண்டு ஆவேசப்படும் உணர்வுகளோ அற்ற ‘கொந்தளிப்பற்ற அமைதியான சாத்வீக மனநிலைகொண்ட ப்ராய்லர் கோழிகளாக அரசு ஊழியர்களை திட்டமிட்டு மாற்றும் வேலை சமீபகாலங்களில் தீவிரமாக நடக்கின்றது. அரசு ஊழியர்களின் பொழுதுபோக்கு மன்றங்கள் மனமகிழ் மன்றங்கள் ஆகியன இத்திட்டமிட்ட  பிரச்சாரத்துக்குத் துணை போகின்றன. விஞ்ஞானம், மருத்துவம் என்ற பெயரில் தெருவோர காயகல்ப லேகிய ரேஞ்சுக்கு யோகா விற்பனை முடுக்கிவிடப்படுகின்றது.

மதச்சாற்பற்ற' இந்திய நாட்டின் ராணுவம், சங் பரிவார சாமியாரான ரவிசங்கரின் யமுனை நதிப்பிரச்சாரக் கூட்டத்துக்கு  எடுபிடி வேலை செய்ய ஏவப்பட்டது. வாழும் கலை என்ற பெயரில் யமுனை நதியின் பல்லுயிர்ப் பெருக்கமும் சுற்றுச்சூழலும் சாகடிக்கப் பட்டது. பாரத் மாதாவின் மிலிட்டரி அதிகாரிகளும் மிலிட்டரி லாரிகளும் சீருடைகளை அணிந்து சங் பரிவார சாமியாருக்கு விசுவாசமான சங்பரிவார் ஊழியர்களாக மாறி களத்தில் இறங்கி வேலை செய்ததை ஏதோ தேசபக்தியின் முக்கிய அம்சமாக மீடியாக்கள் செய்தியாக்கின எனில், ஒருங்கிணைக்கப்பட்ட- அணிதிரட்டப்பட்ட மத்திய தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கூட இந்த இந்துத்துவா அரசியல் பிரச்சாரத்தை எதிர்த்து பெரிய அளவில் எதிர்ப்புக்குரல் ஏதும் எழுப்பவில்லை என்பதை எப்படி பொருள்கொள்வது? அரசு அலுவலகங்கள் ஆர்.எஸ்.எஸ்சின் மடமாக மாற்றப்படுவதை தொழிற்சங்கங்கள் இப்போதும் உணர்ந்ததாக தெரியவில்லை.  இது அணா பைசா விவகாரம் அல்ல, தத்துவம் சார்ந்த பிரச்னை என்பதைத் தொழிற்சங்கங்கள் உணர்ந்த தாகத் தெரியவில்லை. தொழிற்சங்க இயக்கத்தின் தேய்மானத்தின் ஒருபகுதி காரணமாக அரசின் இந்த போராட்ட மழுங்கடிப்புத் திட்டம் இருப்பதை தொழிற்சங்கங்கள் உணரவேண்டிய கட்டத்தில்தான் இப்போதும் நிலைமை உள்ளது. இந்துத்துவா அரசியல்+ கார்ப்பரேட் முதலாளிகள்+அரசு எந்திரம் என்ற கூட்டணி இங்கே வெற்றி பெற்றுள்ளது.

தொழிற்சங்க இயக்கமும் அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் என்ற கோடிக்கால் பூதமும் ஒன்றிணையும் போது அது அடிப்படையான சமூக பொருளாதாரக் கேள்விகளை எழுப்புகின்ற அடிப்படை சமூக மாற்றத்திற்கு இட்டுச்செல்கின்ற பவுதீகச் சக்தியாக மாறும் என்பதை முதலாளித்துவம் நன்கு உணர்ந்துள்ளது.

பெங்களூரும் மூணாறும் ஒருவிசயத்தை தெளிவாக உணர்த்துகின்றன. எத்தகைய அழுத்தமான சிக்கலான புறச்சூழலிலும் தொழிலாளர்களின் நியாயமான அறச்சீற்றமும் கொடுமை கண்டு பொங்கும் நியாயமான கோபாவேச உணர்வும் மங்கிப் போவதில்லை.


முதலாளித்துவம் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான எல்லாவிதமான தந்திரங்களையும் எல்லாக்காலத்திலும் செய்துகொண்டேதான் இருக்கின்றது. எல்லாவிதமான புதிய புதிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் தொழிலாளர்களின் அறச்சீற்றத்தையும் நியாயத்துக்கான கோபாவேச உணர்வையும் எவ்வாறு ஒரு பவுதீக சக்தியாக மாற்றுவது என்பதற்கான வழிமுறைகளை, குறிப்பாக 1990 களுக்குப் பிறகான சூழலில், கண்டறிய வேண்டியது இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் இடதுசாரி இயக்கங்களின் கடமையாக இருக்கின்றது.

- புதுவிசை 47வது இதழ் ( டிசம்பர் 2016 ) 

Wednesday, November 30, 2016

கியூப மக்கள் வென்று வருவார்கள்- ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ்


கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் 7ஆவது பேராயத்தின் முடிவில்  19.04.2016 அன்று கியூபப் புரட்சியின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ வழங்கிய கருத்துகள். இதுதான் அவர் ஆற்றிய கடைசி உரை.  தோழர். காஸ்ட்ரோ அவர்களுக்கான அஞ்சலியாக  
இவ்வுரை வரவிருக்கும் புதுவிசை 47வது இதழில் இடம்பெற்றுபெற்றுள்ளது.
தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை
நன்றி: MRZine, 26.04.2106 
            தோழர்களே, நெருக்கடிக் காலங்களில்  எந்த மக்களையும் வழிநடத்திச் செல்ல, அதிமானுட முயற்சி தேவைப்படும். அவர்களின்றி  மாற்றங்கள் ஏற்படுவது சாத்தியமில்லை. புரட்சிகர மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட, அவர்களால் அதிகாரம் வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை  ஒன்று சேர்த்துள்ள இதுபோன்ற கூட்டம், அந்தப் பிரதிநிதிகளின் வாழ்க்கையில்  அவர்களுக்கு  கிடைத்த மாபெரும் கௌரவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அந்த கௌரவத்துடன், புரட்சியாளராக இருக்கும் சிறப்புத் தகுதியும் சேர்ந்துகொள்கிறது. இந்த சிறப்புத்தகுதி நமது உணர்விலிருந்து விளைந்ததாகும்.

நான் சோசலிஸ்டாக அல்லது மேலும் தெளிவாகச் சொல்வதென்றால், கம்யூனிஸ்டாக ஆனது ஏன்? சோசலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் என்னும் கருத்துருவாக்கத்தை வெளிப்படுத்துகிற இந்தச் சொல், உழைப்பு, திறமை, மானுட ஆற்றல் ஆகியவற்றால் வழங்கப்படும் பொருண்மைச் செல்வம் அனைத்தையும் ஏழைகளும் பொருளில்லாதவர்களும் இழந்த நாளிலிருந்தே அவர்களைச் சுரண்டிவரும் சிறப்புரிமை பெற்றவர்களால் மிகவும் திரிக்கப்பட்டுள்ளது, அவதூறு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டக நிலையில், காலங்காலமாக,  எல்லையே இல்லாமல் மனிதன் எத்தனை காலம் வாழ்ந்திருப்பான்? இதற்கான விளக்கம் உங்களுக்குத் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால், நமது பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு விளக்கம் தேவைப்படக்கூடும்.

நான் அறிவிலியோ, தீவிரவாதியோ, கண்மூடித்தனமாகச் செயல்படுவனோ அல்லன், பொருளாதாரத்தைப் பயின்றதன் காரணமாக தானாகவே எனது கருத்துநிலையை உருவாக்கிக்கொண்டவனும் அல்லன் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே எளிய சொற்களில் பேசுகிறேன்.

சட்டமும் அரசியல் அறிவியலும் கற்கும் மாணவனாக நான் இருந்தபோது - அப்போது சட்டப் படிப்புக்குத்தான் மேலதிக முக்கியத்துவம் இருந்தது- அவற்றை கற்பிப்பவர் யாரும் எனக்கு இருக்கவில்லை. அப்போது இருபது வயதே ஆகியிருந்த எனக்கு விளையாட்டுகளிலும் மலை ஏறுவதிலும் விருப்பம் இருந்தது உண்மைதான். மார்க்ஸியம்-லெனினியம் ஆகியவற்றை கற்பதற்கு ஆசிரியர் யாரும் இல்லாத அந்த சமயத்தில், நான் வெறும் கோட்பாட்டாளனாகவே இருந்தேன் என்றாலும் சோவியத் யூனியன் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தேன். புரட்சி நடந்து எழுபதாண்டுகளுக்குப் பிறகு லெனினின் பணி உடைக்கப்பட்டது. எத்தகைய வரலாற்றுப் படிப்பினை இது! காலனியத்துக்கும் அதன் பிரிக்கமுடியாத துணைவனான ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான போராட்டத்தின் மகத்தான கட்டத்தைக் குறிக்கும் இன்னொரு மகோன்னதமான சோசலிசப் புரட்சிக்கான வேறோர் எடுத்துக்காட்டை மானுடகுலம் பெறும் வகையில் ரஷியப் புரட்சியைப் போன்றதோர் நிகழ்வு ஏற்படுவதற்கு இன்னும் எழுபதாண்டுகள் தேவைப்படாது என்று தயக்கமில்லாமல்  சொல்ல முடியும்.

ஆயினும், இன்று புவிக்கோளத்திற்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரும் ஆபத்து, நவீன ஆயுதங்களின் அழிவாற்றலிருந்து வரக்கூடும். அந்த அழிவாற்ற லால் புவிக்கோளத்தின் அமைதியைச் சீர்குலைத்து, புவிப்பரப்பின் மேல் மானுட வாழ்வு இருப்பதைச் சாத்தியமற்றதாக்கச் செய்ய முடியும்.

டைனோசார்கள் மறைந்ததுபோல, மனித இனமும் மறைந்துவிடும். ஒருவேளை,  அறிவாற்றலுள்ள புதிய உயிர் ராசிகள் தோன்றுவதற்கான காலமும் வரலாம். அல்லது அறிவியலாளர்கள் பலர் புரிந்துகொண்டது போல, சூரிய மண்டலத்திலுள்ள அனைத்து கோள்களும் அவற்றின் துணைக்கோள்களும் உருகிப்போகுமளவுக்கு சூரிய வெப்பம் அதிகரிக்கலாம்.

அந்த அறிவியலாளர்கள் பலரின் கோட்பாடுகள் - நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அவை தெரியாமலிருக்கலாம் - உண்மையாக இருக்குமேயானால் - செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள மனிதன் இன்னும் கூடுதலாகக் கற்று மெய்நிலைமைக்கு தன்னைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும். மானுடகுலம் இன்னும் நீண்டகாலம் உயிர் பிழைத்திருக்குமானால், எதிர்கால சந்ததியினர்  நாம் அறிந்துள்ளதைவிட அதிகம் அறிந்திருப்பர். ஆனால் முதலில் அவர்கள் மிகப்பெரும் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியிருக்கும். தங்களுக்குத் தேவைப்படும் குடிநீர், இயற்கை மூலவளங்கள் ஆகியவற்றின் அளவுகளுக்குள்ள வரம்புகளுடன் தவிர்க்கமுடியாதபடி முரண்படுகின்ற யதார்த்த நிலைமைகளை எதிர்கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பது எப்படி என்பதுதான் இந்தப் பிரச்சினை.

உங்களில் சிலரோ,  பலரோ இந்தப் பேச்சில் அரசியல் எங்கே இருக்கிறது என்று  நினைக்கக்கூடும்.  வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன் என்பதை நம்புங்கள். ஆனால்  இங்கும், இந்த மிதமான சொற்களிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. மானுட குலத்தவராகிய நம்மில் பலர், இந்த யதார்த்த நிலைமைகளின் மீது ஆழ்ந்த அக்கறை செலுத்தி, விலக்கப்பட்ட கனிகளை உண்ட ஆதாம், ஏவாள் காலத்தில் நடந்ததையே தொடர்ந்து செய்யாமல் இருப்பார்கள் என்று நம்புவோமாக. தங்களிடம் தொழில்நுட்பமோ, மழையோ, நீர்த் தேக்கங்களோ ஏதுமில்லாத, மணல்களால் மூடப்பட்டுள் ளவற்றைத் தவிர வேறு எந்த நீரூற்றும் இனி இல்லாம லுள்ள ஆப்பிரிக்க மக்களுக்கு நாம் எப்படி உணவளிக்கப் போகின்றோம்? பருவநிலைப் பாதுகாப்பு பற்றிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள அரசாங்கங்கள் அனைத்தும் என்ன சொல்லப்போகின்றன என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

நாம் இந்தப் பிரச்சினைகளில் இடைவிடாது கவனம் குவிக்க வேண்டும்.  இந்தப் பிரச்சினைகளின்  அடிப்படை அம்சங்களுக்கு அப்பால் அவற்றை விரிவாக எடுத்துரைக்க நான் விரும்பவில்லை.

எனக்கு விரைவில் 90 வயதாகிவிடும். இப்படிப்பட்ட எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. அது ஒருபோதும் எந்த முயற்சியின் விளைவாக இருந்ததில்லை. அது வெறும் தற்செயல் நிகழ்வு. நானும் விரைவில் மற்ற எவரையும் போல் ஆகிவிடுவேன்.

நமது முறை வரும், நம் எல்லோருக்கும். ஆனால், இந்தப் புவிக்கோளத்தில் கியூபக் கம்யூனிஸ்டுகளின் கருத்து எஞ்சியிருக்கும் - இந்தக் கோளத்தில் நாம் உற்சாகத்துடனும் கண்ணியத்துடனும் வேலை செய்தால் மானுட குலத்துக்குத் தேவையான பொருள்வகை, பண்பாட்டுச்  செல்வங்களை நம்மால் உற்பத்தி செய்யமுடியும்,  அதனைப் பெறுவதற்காக நாம் உறுதிதளராமால் போராட வேண்டும் என்பதற்குச் சான்றாக.  கியூப மக்கள் வென்று வருவார்கள் என்ற செய்தியை இலத்தின் அமெரிக்காவிலும் உலகிலும் உள்ள சகோதரர்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த அறையில் நான் பேசுவது இது கடைசி தடவைகளில் ஒன்றாக இருக்கக்கூடும். தேர்ந்தெடுக்கப்படுவதற்காக இந்தப் பேராயத்தில் எந்த வேட்பாளர்களின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவோ அவற்றை ஆதரித்து வாக்களித்துள்ளேன். எனக்கு அழைப்பு விடுத்து எனது பேச்சைக் கேட்கும் கௌரவத்தை அளித்த உங்களுக்கு நன்றி. இந்த மகத்தான முயற்சிக்காக தோழர்களாகிய உங்கள் அனைவரையும்,  முதலாவதாக தோழர் ரவுல் காஸ்ட்ரோவையும் பாராட்டுகிறேன்.

நாம்  தொடர்ந்து அணிவகுத்துச் செல்வோம்,  நாம் எதைச் செம்மைப்படுத்த வேண்டுமோ அதைச் செம்மைப்படுத்துவோம், மிக முழுமையான விசுவாசத்துடனும்  ஒன்றுபட்ட சக்தியுடனும் - மார்ட்டி, மேஸியோ, கோமெஸ்* ஆகியோரைப் போல, தடுத்து நிறுத்தப்பட முடியாத அணிவகுப்பில்.
***
*19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் கியூபாவின் விடுதலைக்காகப் போராடியவர்கள் :ஹோஸெ மார்ட்டி (1853-1895); ஹோஸெ மாஸியோ (1845-1896); யுவான் கோமெஸ் (1854- 1933)

புதுவிசை 47வது இதழின் காலங்கம்

னிதகுலம் இதுவரை கண்டிராத கொடுங்கோன்மை ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. சமூகத்தை சங் பரிவாரம் மற்றும் கார்ப்பரேட்டுகள் என்கிற இரட்டை எஜமானர்களின் நிகழ்ச்சிநிரலுக்குள் அடைப்பதற்காக அவர் அரசதிகாரம் முழுவதையும் பயன்படுத்தி வருகிறார். நாட்டின் மாண்புடை அமைப்புகளை சீர்குலைத்து சிறுமைப்படுத்தும் அவரது தான்தோன்றித் தனமான செயல்பாடுகள் கிண்டலுக்கும் கேலிக்குமுரியதாக வெளித்தெரிந்தாலும், அவை கோடானுகோடி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் நேரடியாக தலையிட்டு தீராத்துயரில் ஆழ்த்தி வருகின்றன. வரலாற்றுப்போக்கில் உருவாகிவந்த தமது சொந்த வாழ்முறையைக் கைக்கொண்டிருக்கும் குடிமக்களை அதன் பொருட்டே குற்றவாளிகளாக அறிவித்து தண்டிப்பதற்கு இயன்ற வழிகளிலெல்லாம் அவரது கெடுமுயற்சி தொடர்கிறது. பண மதிப்பிழப்பு அடாவடி கூட உணவு, உடை, வழிபாடு, மதம், கல்வி, கருத்து வெளிப்பாடு என அனைத்துவகையான உரிமைகளையும் பறிப்பதற்கான அவரது முயற்சிகளின் தொடர்ச்சிதான்.

பண மதிப்பிழப்பு அடாவடிக்குச் சொல்லப்பட்ட காரணங்கள் யாவும் பொய்யென அம்பலமாகிவிட்டது. கறுப்பை கமிஷனுக்கு வெள்ளையாக்கும் புதுத்தொழில் கனஜோராக நடக்கிறது. கைப்பொருளை தொலைத்தாற்போன்ற துக்கத்துடன் வங்கிகளின் முன்னே நாட்கணக்கில் காத்திருக்கும் மக்களை மோடியின் நிழற்படையினரும் அதிகாரி களும் மிகுந்த ஆணவத்தோடு பரிகாசம் செய்கின்றனர். மாற்றிமாற்றி பிறப்பிக்கும் குழப்படியான உத்தரவுகளால் ஒரு நிச்சயமற்றத்தன்மையை ஏற்படுத்தி மக்களை நிரந்தரப்பதற்றத்திற்குள் ஆழ்த்தி ஆத்திரமூட்டுகிறார்கள். தெருவுக்கு இழுத்தெறியப்பட்டதால் நிலைகுலைந்துப் போய் கொந்தளித்துக்கொண்டிருக்கும் மக்களிடமிருந்து தாங்கள் வெகுவேகமாக தனிமைப்பட்டு வருவதை மறைக்க போலியான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு தம்மைத்தாமே மெச்சிக்கொள்கிறார்கள்.  

எதிர்க்கட்சிகள், பா.ஜ.க.வை நிராகரித்துள்ள 69% வாக்காளர்களின் பிரதிநிதிகள். அவை எழுப்பும் மக்கள்சார் பிரச்சினைகளை செவிமடுக்காது மமதையோடு சுற்றுகிற பிரதமரை கண்டிக்காமல், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வீணாவதாகவும் வரிப்பணம் விரயமாவதாகவும் சில ஊடகங்கள் பசப்புகின்றன. அமைதியாக நடக்கும் கூட்டங்களில் மக்கள்விரோத சட்டங்கள்தான் நிறைவேற்றப் படுமெனில் அந்த நாடாளுமன்றம் நடந்தென்ன ஆகப்போகிறது? பிரதமரின் இந்த துல்லியத்தாக்குதலால் சாகடிக்கப்பட்ட எண்பதுக்கும் மேற்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கவும்கூட மனமற்ற அந்த கூட்டத்தொடர் அப்படியொன்றும் நாட்டுமக்களுக்கு நலம் பயக்கும் முடிவுகளை எடுத்து விடப் போவதில்லை. ஆட்சியாளர்களின் அட்டூழியங்களுக்குப் பதிலடி கொடுக்க அடுத்த தேர்தல்வரை மக்கள் காத்திருப்பார்களெனச் சொல்ல முடியாது. ஏனெனில் நாட்டில் கலவரம் வெடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னதை மக்கள் கவனத்தில் வைத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.

-ஆசிரியர் குழு



கியூப மக்கள் வென்று வருவார்கள்
- ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ் தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

செம்பதாகையின் ஒரு துளி ரத்தம் 
லெனின், டிராட்ஸ்கி, ஸ்டாலின், புகாரின் 
- ப.கு.ராஜன்

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்
நந்திதா ஹக்ஸர்-  தமிழில்: செ.நடேசன்

இந்தியத் தொழிற்சங்க - இடதுசாரி  இயக்கங்களின்  முன்னுள்ள  சவால் 
- இக்பால்

நேர்காணல் :  அருந்ததி ராய் 
எழுத்து, போராட்டம் மற்றும் சீருடல் பயிற்சி...?
- ஐஸ்வர்யா சுப்ரமணியம்  - தமிழில்: ராஜ்தேவ்

சிறுகதை : ரயில் பிரயாணம் - லி.ரா.

ப்ரமூதியா ஆனந்த தூர் : தீவுச்சிறையும் விடுதலை இலக்கியமும்
எஸ்.வி. ராஜதுரை


பிரதிகளுக்கு : ந.பெரியசாமி 9487646819



Friday, November 4, 2016

யோகா: வரலாறும் பிரச்சாரமும் - ஜெயகாந்தன் மஞ்சாலுமூடு

னிதகுலத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படுத்துகின்ற ஒற்றை மூலிகையாக யோகாவை கடந்த ஜூன் மாதம் எல்லா பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் கொண்டாடின. ஜூன் 21-ஐ உலக யோகா தினமாக 135 நாடுகள் “ஆசன” விழாவாய் கோலாகலமாய் கொண்டாடியதாக செய்திகள் வெளிவந்தன. பிரபலங்களும் திரை நட்சத்திரங்களும் ஆட்சியாளர்களும் தங்களுக்கு மலிவான விளம்பரமும் மத்திய அரசின் ஆசியும் பெற இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினார்கள். அறிவு படைத்தோரும் அறிவற்றவர்களும் ஒரு மாயவலையத்திற்குள் மாட்டியவர்களைப்போல் அதன் பின்னால் சென் றனர். 135 நாடுகளில் நடத்தப்பட்டதனால்(!) யோகா அறிவியல்பூர்வமான ஒன்றாகப் பிரச்சாரத் தம்பட்டங்கள் பரப்பப்படுகின்றன. உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் போதைப் பொருள் பழக்கம் உள்ளதினால் அதுவும் சரியான ஒன்றே என்று வாதிட மேற்கூறிய கருத்து உதவலாம். அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாத பல்வேறு சிகிச்சை முறைகளை வளர்ப்பதற்கு மத்திய அரசு கோடிக்கணக்கான தொகை செலவிட்டு செயல்படுத்துகின்ற ஆயுஷ் துறையின் கீழ் யோகாவையும் உட்படுத்தியிருக்கிறது. சோதிடமும் இத்துறையின் கீழ்தான் இயங்குகிறது!  

சாதி மத அரசியல் பேதமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக யோகா இன்று மாறிக்கொண்டிருக்கிறது. சூரியநமஸ்காரம் தவிர்த்த யோகாவை வரவேற்பதில் பிரச்சினை ஏதுமில்லையென சில முஸ்லீம் அமைப்புகளும் கூறிவிட்டன. பாதிரிமார்கள் யோகாவை கற்பதிலும் கற்பிப்பதிலும் கிறிஸ்தவ விரோதமாக ஒன்றுமில்லையென அதன் மதத்தலைமை அனுமதியளித்துள் ளது. இந்திய மாநிலங்கள் அனைத்தும் யோகாவை அரசு விழாவாக கொண்டாடியபோது பீகார் மாநில அரசு மட்டும் அதை அரசு விழாவாக  நடத்தமாட்டோம் என முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வித்திட்டத்தின் கீழ் யோகா பயிற்சியளிப்பது தொடர்பாக ஆலோசனைகள் வலுப்பெறுகிறது. பல வருடங்களாக பள்ளிகளில் நடைபெற்றுவந்த உடற்பயிற்சி கல்வி இப்போது இல்லை, அதற்கான உடற்பயிற்சி ஆசிரியர்களையும் சமீப காலமாக நியமிப்பதில்லை. யோகாவில் பட்டம் பெறுபவர்களுக்கு யோகா ஆசிரியர்களாக பள்ளிகளில் நியமனம் பெற வாய்ப்புகள் உருவாகின்றன. இலட்சக்கணக்கான ஆசிரியர்களை இப்படி நியமனம் செய்து சங்பரிவாரத்தின் ஒரு முக்கிய நிகழ்ச்சிநிரல் அரசுத்திட்டமாக வெகுவிரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அபாயத்தை கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது.

ஊடக கவனம் கிடைக்கிற, அனைவராலும் வரவேற்கப்படுகிற யோகாவைப் பற்றியும் அதன் வரலாறு மற்றும் நிகழ்காலத் தேவை குறித்தும் அறிவியல்பூர்வமான ஒரு அலசல் தேவைப்படுகிறது. அந்த அலசலின் ஒரு எளிய துவக்கமாக இக்கட்டுரை அமைந்தால் மகிழ்ச்சியே. இன்று கொண்டாடப்படுகிற யோகாவும் பழங்கால இந்தியாவின் நூல்களில் விளக்கப்படுகிற அல்லது பழக்கத்தில் இருந்த யோகாவும் ஏதேது கோணங்களில் ஒற்றுமைப்படுகிறது அல்லது வேற்றுமைப்படுகிறது என்று ஆராய்வது இதற்கு உதவியாக அமையும்.

யோகாவின் பழமை

மூன்று தலைகளோடு பத்மாசனத்தில் இருக்கிற ஒரு யோகியின் கற்சிற்பம் மொகஞ்சதாரோ-ஹரப்பா அகழ் வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்றது. இது சிவனின் சிற்பம் என்ற கருத்தும் உள்ளது. எனவே ஆரியர் வருகைக்கு முன்னரே யோகா இந்தியாவில் பிரச்சாரத்தில் இருந்தது என்று வாதிடுவோரும் உள்ளனர். ஒரு சில உபநிடதங்களிலும், புத்த-சமண இலக்கியங்களிலும் யோகாவை விளக்கும் கருத்துக்கள் உள்ளன. ஸ்வேதசொதரோ உபநிடதம் யோகாவைப்பற்றி பல்வேறு அத்தியாயங்களில் விளக்கமாக கூறியிருக்கிறது. தலையும் கழுத்தும் மார்பும் நேராகப் பிடித்து உடல் அசையாமல் மனதையும் புலன் களையும் இதயத்தோடு ஒருங்கிணைத்தால் பண்டிதரான ஒருவர் பிரம்மம் எனும் தோணியேறி பயத்தின் எல்லா ஆறுகளையும் தாண்டலாம் என ஸ்வேதசொதரோ உபநிடதமும், ஐம்புலன்களும் மனமும் செயல்படாமல் இருப்பதும், புத்தி அசைவற்று இருப்பதுமான ஒரு பிரத் யேக நிலைதான் யோகா என்றும் புலன்களை ஸ்திரத்தன்மையோடு கட்டுப்படுத்த முடிகிற ஒருவருக்கு புத்தியின் ஊசலாட்டங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும் கடோ உபநிடம் கூறுகிறது.

உபநிடதங்களிலும் புத்த-சமண இலக்கியங்களிலும் முக்கியமாக சாங்கிய தரிசனத்திலும் விளக்கப்பட்டிருந்த யோகா தத்துவங்களை ஒன்றுதிரட்டி ஒரு தனி தத்துவமாக உருவாக்கியவர் பதஞ்சலி எனும் முனிவராகும். “சமாதி, சாதன,விபூதி, கைவல்யம்” என்று நான்கு பகுதிகளில் 195 ஸுக்தங்களாக ஒரு சிறந்த கட்டமைப்புள்ள தரிசனமாக யோகாவை பதஞ்சலி உருவாக்கினார். மிகச் சரியானதொரு விளக்கத்தை யோகாவிற்கு பதஞ்சலி இவ்வாறு அளிக்கிறார்  “ யோகா சித்தவிருத்தி நிரோதா:” ஒருவருக்கு பல்வேறு உணர்ச்சிகள் உள்ளன, அவற்றின் வெளிப்பாடுகளே காம குரோத மோக போட்டி மனப்பான்மைகள். இவற்றிலிருந்து வெற்றி அல்லது விடுதலை கிடைத்தால் மட்டுமே அவருக்கு இயற்கையோ டான தொடர்பைப் பற்றிய தவறான ஞானம் அற்று “கைவல்யம்” அடையமுடியும். சித்த விருத்திகளிலிருந்து விடுதலை கிடைக்கவேண்டுமென்றால் ஸ்திரத்தன்மையற்ற மனதை மையப்படுத்தி நிலைபெறுவதற்கான பயிற்சிகள் தேவைப்படுகின்றன. “கைவல்யம்” அடைவதே யோகாவின் நோக்கம். இதை அடைய புருஷன் இயற்கையிலிருந்து வேறுபட்டவன் என்ற சரியான ஞானம் ஏற்படவேண்டும். புருஷன் அழிந்தாலோ கைவல்யம் அடைந்தாலோ இயற்கையானது மற்ற புருஷர்களுக்காக நிலைநிற்குமென்று யோகசூத்திரம் கூறுகிறது. அதாவது “சித்த விருத்தி நிரோதா” வழியாக கைவல்யம் அடைவதே யோகாவின் நோக்கமென்று யோகாவின் புராதனத் தத்துவம் கூறுகிறது.

அஷ்டாங்க மார்க்கம்

“யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரண, தியானம், சமாதி” எனும் எட்டுப்படிகள் யோகா பயிற்சியில் உள்ளன. எட்டுப்படிகளும் சரியான செய்முறைகளால் “பரமானந்தம்” எனும் முழுமையை அடையலாமென்று யோகா விளக்குகிறது. இந்த எட்டுப் படிகளில் ஒன்று மற்றொன்றிலிருந்து உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. ஆனால் இன்று ஆசன யோகா மட்டுமே கொண்டாடப்படுகிறது. அதுவும் யோக சூத்திரம் விளக்கும் படியாகவுமில்லை. எட்டுப்படிகளில் முதல் இரண்டு படிகள் ஒழுக்கமான வாழ்க்கை சம்பந்தப் பட்டதாகும். “அஹிம்சை, சத்யம், பிரமச்சரியம், அபரிக்கிரகம்” என்னும் ஐந்து விரதங்களாகும் யமம். இரண்டாம் படியில் அக-புற தூய்மை, தவம், மகிழ்ச்சி, சுயஞானம், ஈஸ்வர தியானம் ஆகியவை இடம் பெறுகின்றன. சுகமான அசைவற்ற இருப்பை (உட்காருதல்) ஆசனம் எனப்படுகிறது. உடலை அசைவற்ற நிலையில் சுகாசனத்தில் நெஞ்சையும் தலையையும் நிமிர்த்தி வைத்து நாலாம் படியான பிராணாயாமம் செய்யவேண்டியது. கட்டுப்படுத்தலுக்கு உள்ளாக்கிய மூச்சு இழுத்தலும் மூச்சு விடுதலும் தான் பிராணாயாமம். புறச்செயல்களிளிருந்து புலன்களை விலக்கி மனதை ஒருமுகப்படுத்துவதே பிரத் தியாகாரம். மனதை உடலின் புறமோ அகமோ உள்ள ஒரு பிரத்தியேகப் புள்ளியில் மையப்படுத்தி நிலைபெறச் செய்வது தாரண. இவ்வழிகளாக மனதின் ஒருமுகப் படுத்திய நிலையை எட்டுவது தியானம். தியான வழியாக உடலும் மனதும் ஒன்றோடொன்று இணைந்து இரண்டும் ஒன்றாக மாறுகின்ற ஒரு உன்னத வாழ்நிலையை சமாதியென்று கூறுகிறது. முற்றும் துறந்து புருஷன் பரபிரஹ்மத்திற்கு இணையாக தூய்மை பெறுவதே கைவல்யம். வாழ்க்கையிலிருந்து பரிபூரணவிடுதலை பெறுவதே பரமானந்தம் அதுவே கைவல்யம்.

இன்று யோகா சாமியார்கள் அனைவரும் ஆடம்பர வாழ்க்கையின் உயர் படிநிலைகளை எட்டியவர்களும் கோடீஸ்வரர்களும் ஆவர். அதுவே அவர்களுக்கு கைவல்யம். ஆசன யோகாவும் பிராணாயாமாவும் ஆகும். பாபா ராம்தேவின் விற்பனைச்சரக்குகள். ஸ்காட்லாந்தில் அவருக்கு ஒரு தீவே சொந்தமாக உள்ளது என்பது ஊரே அறிந்த செய்தி. யோகாவின் தந்தையான பதஞ்சலியின் பெயரைப் பயன்படுத்தி விற்பனை செய்கிற வியாபாரியாகவும் யோகாவின் உயர்ந்தபடியான ‘சமாதி அல்லது கைவல்யம்” அடைந்தவராக(!) ராம்தேவ் திகழ்கிறார் என்பதிலிருந்தே நாம் சிலவற்றை ஊகித்துக்கொள்ள முடியும். டபுள்ஸ்ரீ ரவிசங்கர் சுதர்சன கிரியா என்று பெயரிடப்பட்ட பிராணயாமத்தை விற்பனை செய்கிறார். உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடிகள் விலை மதிக்கிற சொத்து இவருக்குண்டு. இவர்கள் மட்டுமன்றி யோகா சாமியார்கள் அனைவருமே சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் கோடிஸ்வரர்களும் ஆவார்கள்.

                           II
இன்று பிரச்சாரம் செய்யப்படுகின்ற ஒரு யோகாசன முறையும் பதஞ்சலி முனிவரின் யோகா சூத்திரங்களைப் பின்பற்றப்படுவதில்லை. 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு துவங்கப்பட்டதும் 15-16ஆம் நூற்றாண்டுகளில் வலிமையடைந்ததுமான ‘ஹடயோகத்தின்’ தத்துவார்த்த மிச்சசொச்சங்களும் நவீன உடற்பயிற்சி முறைகளும் சேர்ந்த கலவையே இன்றைய யோகா. இது புராதன இந்தியா அளித்த கொடையுமல்ல, நமது பாரம்பரிய சொத்துமல்ல, உலகிற்கு நாம் அளித்த விலை மதிக்க முடியாத அறிவுமல்ல.

ஹடயோகா

ஹடயோக பிரதிபிகையும் சிவசம்கிதையும் ஹட யோகாவை விளக்குகிற பழமையான நூல்கள். பதஞ்சலியின் தத்துவத்தோடு ஹடயோகத்திற்கு தொடர்பில்லை. பின்னாட்களில் வியாக்கியானம் செய்து செய்து தொடர்புபடுத்தினர். 1896ல் எழுதப்பட்ட விவேகானந்தரின் ராஜயோகம் ஹடயோகத்தைப் புறக்கணிக்கிறது. சரியான தியானத்திற்கு உதவக்கூடிய அளவிற்கு சரிவர உட்காருதல் என்ற முக்கியத்துவம் மட்டுமே ஆசனத் திற்கு விவேகானந்தர் அளித்துள்ளார். யோகதரிசனத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும் விவேகானந்தரின் இராஜ யோகம் எனும் நூல். 70 வருடங்களுக்குப் பிறகு பி.கே. எஸ்.அய்யங்கார் இயற்றிய “Light on Yoga” என்கிற நூல் யோகாவின் மறைநூல் என்றறியப்படுகிறது.  ஹட யோகம் மட்டுமல்லாது யோகதரிசனத்தில் ஏற்பட்ட எல்லா பரிணாமங்களையும் விளக்குகின்ற விதமாக இந் நூல் அமைந்துள்ளது. புதிய ஆசனங்கள் உருவாகியதும் யோகாவைப் பற்றிய புதிய நூல்கள் எழுதப்பட்டதும் இந்த நூலை அடிப்படையாக கொண்டேயாகும்.

ஒருவருக்கு முதுமை பாதிக்காத நிலையை உருவாக்கு வதே ஹடயோகாவின் இலட்சியம். பாலியல் சம்பந்த மான பூடகத்தன்மையுடைய செய்முறைகள் (erotico mystical practice) என்று ஹடயோகத்தை அழைக்கப்படுவதுண்டு. இயற்கை நியதிகளையும் விதிகளையும் மீறி வாழ்வதற்கான வழிமுறைகள் இதில் உள்ளடங்கியிருக்கிறது. “ஜரா-நர-மிருத்யுவை” ஜெயிப்பதாகும் அது. அதற் காக நாலுவிதமான முறைகள் உண்டு. “கிரியைகள், ஆசனங்கள், முத்திரைகள், பிராணாயாமம்”. இவற்றில் “கிரியைகள்” ஆறுவிதமுள்ளன. அவைகளை ஷட்கர்மங்கள் என்று அழைக்கப்படுகிறது. அவைகள் தவுதி, வஸ்தி, நேதி, திறாடக, நவுளி, கபாலபாட்டி. 

தவுதி என்பது வயிற்றை சுத்தப்படுத்துவதற்கு, சுத்தமான துணியைச் சுருட்டி விழுங்கியப் பிறகு ஓர் ஓரத்தைப் பிடித்து திரும்ப இழுத்து எடுப்பது. நேதி என்பது ஒரு நூலினை மூக்கின் ஒரு துவாரம் வழியாக உள்ளே நுழைத்து இன்னொரு துவாரம் வழியாக இழுத்து எடுப்பது அல்லது தண்ணீரைப் பயன்படுத்தி இந்த மாதிரி செய்வது. நீர் எனிமா மூலம் வயிறைச் சுத்தம் செய்வது வஸ்தி. ஒரு பிரத்யேகப் புள்ளியில் கண்பார்வையை மையப்படுத்தி கண்களை தண்ணீர்மயமாக்கி சுத்தம் செய்தல் திறாடக. நவுளி என்பது வயிறை  எக்கி ஒட்டிப் பிடிக்கவைத்து மஸாஜ் செய்வது. கபாலபாட்டியானது வயிறை உள்ளாலே எக்கிஎக்கி மூச்சுக் கட்டுப்பாடு செய்வதாகும். கபாலபாட்டி தினமும் செய்தால் உடலில் ஒரு தனி ஆற்றல் உருவாகுமென்றும் அது இயற்கையான அணுக்கதிர் வீச்சு (natural radiation) என்றும் புற்று நோய் ஒழிய இது சிறந்த மருந்தென்றும் ஏழைகளான புற்றுநோயாளிகளுக்கு கபாலபாட்டியானது ஒரு வர தானமென்றும் ராம்தேவ் பிரச்சாரம் செய்கிறார். உடல் கூறு அறிவியல் பற்றிய அறியாமையால் பண்டைய ஹடயோகிகள் இதுபோன்ற முட்டாள்தனங்களை செய்தனர். ஆனால் இன்று வியாக்கியானங்கள் மூலம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக யோகாவை பிரச்சாரம் செய்வதைத்தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

ஆசனங்கள்

சிவ சம்ஹிதா 84 ஆசனங்கள் பற்றி கூறினாலும் சித்தா சனா, பரமாசனா, உக்கிராசனா, ஸ்வச்திகாசனா ஆகிய 4 ஆசனங்களை மட்டுமே செய்முறைப்படுத்த வலியுறுத்துகிறது. ஸ்வச்திகாசனா, கோமுகாசனா, வீராசனா, கூர்மா சனா, குக்குடாசனா, உதனகூர்மாசனா, தனுராசனா, மத்சி யாசனா, பச்சிமதானா சனா, மயூராசனா, சவாசனா, பத்மாசனா, சிம்மாசனா, பத்திராசனா ஆகிய ஆசனங்கள் பற்றி மட்டுமே கூறுகிறது ஹடயோக பிரதீபிகை. இன்று பிரச்சாரம் செய்யப்படும் பல ஆசனங்களை இந்நூல்களில் பார்க்க முடியாது. ஆசனங்களை முக்கிய இடத்திற்கு கொண்டுவந்த B.K.S. ஐயங்காரின் நூலில் 200 ஆசனங்களும் அதற்கான 592 படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 

முத்திரைகள்

மகாமுத்ரா, மகாபந்தா, மகாவேதா, கேஜரி, உட்யான பந்தா, மூலபந்தா, ஜலாந்தரபந்தா, விபரீதகரணி, வஜ் ரோலி, சக்திசாலனம் ஆகியவை. ஹடயோக பிரதீபிகையும் சிவசம்ஹிதையும் இந்த முத்திரைகளை ஒரே முக்கியத்துவத்தோடு விளக்குகின்றன. மரணம் மற்றும் முதுமையை வெல்வதற்கு இவற்றைச் செய்யவேண்டும் எனக் கூறுகின்றன. 

ஸ்தூல பிரபஞ்சமும் சூட்சும பிரபஞ்சமும் மனித உடலில் உள்ளன, ஆறும் கடலும் மலையும் சூரியனும் சந்திரனும் உடலில் உள்ளடங்கியிருக்கின்றன. பல்வேறு ரேதஸுக்களால் உருவான சந்திரன் சொர்க்கத்தின் ஒரு துளி அமிர்தமாகும். அமிர்து பொழிப்பது சந்திரனாகும். பனியும் மழையும் பெய்கிறதும் சந்திரனிலிருந்தாகும். சந்திரனிலிருந்து பொழிகிற அமிர்த ரசம் செடிகொடிகள் வழியாக மனிதனை அடைகிறது. சூரிய சந்திரன்கள் அமிர்தத்தைக் கைப்பற்ற நடத்துகின்ற பலபரீட்சையே பூமியில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறதென்று ஹடயோகிகள் நம்புகின்றனர். சூரியனுக்கு ஆதிக்கம் கிடைக்கிற காலமும் சந்திரனுக்கு ஆதிக்கம் கிடைக்கிற காலமும் உள்ளன. சந்திரன் அமிர்தத்தைச் சேமிக்கிறது, சூரியன் அதை அருந்தி வற்றச் செய்கிறது. சூரியனுக்கு ஆதிக்கம் வருகிற காலத்தில் நீர்த்தடங்கள் வற்றி வறள்கின்றன. அதுபோலவே மனிதனும். இதுதான் மரணத்தின் காலம்- உத்தராயன காலம். தட்சிணாயன காலம் என்பது சந்திரனுக்கு ஆதிக்கம் வருகின்ற காலம். அதாவது பசுமையின் காலம். பிரபஞ்சத்தின் இந்தக் கட்ட மைப்பு தான் மனிதனிலும் இருப்பதாக ஹடயோகிகள் அறிவியல் சமைக்கிறார்கள். சந்திரன் தலையிலிருந்து அமிர்து பொழிந்து கொண்டேயிருக்கிறது, சூரியன் அடிவயிற்றிலிருந்து அதை அருந்தி முடிக்கிறது. சந்திரன் பொழிகிற அமிர்தத்தை சூரியன் அருந்தி முடிப்பதனால் உடலில் நரையும் முதுமையும் ஏற்படுகின்றன. எனவே சந்திரன் பொழிகிற அமிர்தை சூரியன் அருந்தாமலிருக்க வேண்டுமானால் சூரியனை ஏமாற்றும் வகையிலான  விபரீதகரணி முத்திரையைச் செய்ய வேண்டும். கழுத்தை மடக்கி தரையில் குத்தி காலை மேல்நோக்கி நிறுத்தும் போது சந்திரன் பொழியும் அமிர்தம் தலையிலிருந்து கீழ்நோக்கி வந்து சூரியனுக்கு கிடைக்கும் வாய்ப்பு தடுக்கப்படும் விதமாக ரொம்பவும் புத்திசாலித்தனமாக வகுக்கப்பட்ட முத்திரையாம் இது. 

இந்த விபரீதகரணி முத்திரையின் நவீன பதிப்பாகும் சீர்ஷாசனம். தொடர்ந்து ஆறுமாதம் விபரீதகரணி செய்து வந்தால் ஜரா நரைகள் மாறும் என்றும் ஒரு நாளில்  இரண்டு மணி நேரம் தொடர்ந்து செய்துவந்தால் மரணத்தை வெல்லலாம் என்றும் ஐயங்கார் முதல் பழங்கால நூல்கள் வரை கூறுகின்றன. இந்தளவுக்கு முட்டாள் தனமான சித்தாந்தத்தை மறைத்துப் பிடிப்பதற்கு இன்று இதைச் செய்தால் ஜீரணசக்தி, மலச்சிக்கல், மூலம், பவுத் திரம், மாதவிடாய் பிரச்சினைகள், கருப்பை நோய்கள், மலட்டுத்தனம், பார்வைக்கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி என்று பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆசனங்களின் அரசனாக சீர்ஷாசனத்தை கொண்டாடுவதோடு தொய்வு ஏற்படுகின்ற மூளைக்கு டானிக்காகும் என்றும் இதன் மூலம் மூளையை நோக்கி ரத்தஓட்டம் அதிகரிக்கும் என்றும் போதிக்கிறார்கள். 

நமது மூளைக்குத் தேவையான ரத்தம் முறையாக கிடைக்கும் விதமாகத்தான் நமது உடற்கூறு பரிணாமம் வழி அமையப்பெற்றுள்ளது. மூளையின் அமைப்பு சம்பந்தமான அறியாமை பெரிய இன்னல்களை உருவாக்கும். மூளையை நோக்கிய ரத்தஓட்டம் கூடினாலோ குறைந்தாலோ பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தும். மிருதுவான உயிரணுக்களால் அமையப் பெற்றுள்ள மூளை இதன்மூலம் இற்றுப்போகவோ இறுக்கமேற் பட்டு நாசமடையவோ வாய்ப்பு அதிகமுள்ளது. கண்களில் திரவ அழுத்தம் அதிகரித்தால் Glukoma நோய் வருவதற்கு காரணமாகிவிடும்.

வஜ்ரோளி முத்திரை 

சந்திரனில் இருந்து பொழிகின்ற அமிர்தரசம் இரச தாது, இரத்த தாது, அஸ்தி தாது, மஜ்ஜ தாது, வேத தாது, சுக்ல தாது என்று ஆறு தாதுக்களாக பரிணமிக்கிறது. இதன் ஒவ்வொரு கட்டமும் உருவாகிவர ஐந்து நாட்களாகும், முப்பது நாட்களில் ரேதஸ் உருவாகிறது. இவ்விதம் உருவாகின்ற ரேதஸை பாதுகாப்பதே ஹடயோகியின் கடமை. அதற்கான இன்னொரு வழியே வஜ்ரோளி முத்திரை. ஆண் பெண்ணுடலில் செலுத்துகின்ற ரேதஸை திருப்பி எடுக்கிற செய்முறைதான் வஜ்ரோளி முத்திரை. அதற்காக கடுமையான பயிற்சிகளை ஹடயோகிகள் செய்யவேண்டியுள்ளது. ரேதஸ் சந்திரனுக்கு ஈடானதும் மாதவிடாய் ரத்தம் சூரியனுக்கு ஈடானதுமாகும். இரண் டும் யோகியின் உடலில் இணைக்கப்பட வேண்டும்.

சக்தி சாலன முத்திரை

குண்டலினியை உணர்த்துவதற்கான செய்முறை. ரேதஸை அமிர்தமாக்கி மாற்றுவது குண்டலினியாகும். மூலாதாரத்திலிருக்கிற குண்டலினியை படிப்படியாக மேல்நோக்கி உயர்த்தி சிரத்தில் சேர்க்கும்போது ரேதஸ் அமிர்தமாக மாறுகிறது. அது கீழ்நோக்கி பரவும்பொழுது உடல் முழுவதும் அமரத்துவத்தை எட்டுகிறது. வயிற் றின் கீழ்ப்பகுதியில் பாம்பை போன்று சுருண்டு தூங்குகின்ற குண்டலினியை உணர்த்துவதற்கு பத்மாசனத்தில் இருந்து பாதங்களை பயன்படுத்தி அழுத்தித் தொடுதல் வழியாகவும் வஸ்திரிகா பிராணாயாமம் வழியாகவும் இந்த முத்திரை செய்யப்படுகிறது.

கேஜரி முத்திரை

கீழ்த்தாடையிலிருந்து நாக்கின் தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து நாக்கின் வெளித்தள்ளுதலை நீட்டிக்கிற செயல். கண்ணிமைகளின் மத்தி வரை வளைத்துக் கொண்டுவருமளவிற்கு நாக்கை நீட்ட வேண்டும். சந்திரன் பொழிகின்ற அமிர்தத்தை நேரடியாக யோகி அருந்துவதற்காகத்தான் இது செய்யப்படுகிறது. செடி கொடிகளின் வழியாக கிடைப்பதில் ஏற்படும் சேதாரத்தை இது போக்குகிறது. நாக்கின் தொடுப்பு அறுந்தால் நாக்கு பின்னோக்கிச் சென்று சுவாசக்குழாய் அடைந்து மரணம் ஏற்பட வாய்ப்புள்ள இச்செயலை இன்று எந்த யோகியும் செய்ய முன்வரமாட்டார்கள் என நம்பலாம்!. 

பிராணாயாமம்

நாடிகளைச் சுத்தம் செய்வதற்கான செய்முறை. இடா, பிங்களா என்ற இரண்டு நாடிகள் வழியாக மூச்சு இழுத்தலும் விடுதலும் நடைபெறுகிறது என்று ஹடயோகிகள் விவரிக்கிறார்கள். இரண்டு நாடிகளும் ஒன்றோடொன்று பிணைந்து இடது நாடி வலது மூக்கின் துவாரத்திலும் வலது நாடி இடது மூக்கின் துவாரத்திலும் திறக்கிறது. இந்த நாடிகளின் மத்தியின் ஊடே சுஷ்முனா கடந்து செல்கிறது. இதன் நீளம் மலத்துவாரம் வரை நீள்கிறது.  சுஷ்முனாவில் ஆறு சக்கிரங்கள் கீழிருந்து மேலாக அமைந்துள்ளன. இந்த நாடிகளில் படிந்திருக்கிற அழுக்குகளை சுத்தப்படுத்துவதே பிராணாயாமத்தின் நோக்கம். வலது மூக்கை இடதுகை விரல்களால் அடைத்து இடது துவாரம் வழியாகவும் அதேபோல் திருப்பியும் மூச்சு இழுத்தலும் விடுதலும் செய்தலே இந்த முறை. உடலின் மூச்சு இழுத்தல் விடுதல் சம்பந்தமான கற்பனைகளும் உடலியல் சம்பந்தமான அறியாமைகளும் முட்டாள் தனமான சித்தாந்தங்களை உருவாக்கிட வழிவகுத்தது. பரிசுத்தி என்ற ஜோடனைக்காக உருவாக்கப்பட்ட இம் முறைகள் இன்று புதிய விளக்கங்களோடு உலா வருகின்றன. இரத்த அழுத்தம், இதயகுழாய் கோளாறுகள், மூட்டுவலி, சைனஸைடிஸ், பராலிசிஸ், ஆஸ்துமா, ஒவ்வாமை முதலியவற்றுக்கான சர்வரோக நிவாரணியாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சுதர்சன கிரியா பிராணாயாமம் அதி வளியோட்டத்திற்கு  (Hyper Ventilation) காரணமாகிறது. உடலின் கரியமில வாயுவின் நிலையை குலையச்செய்து இரத்த அணுக்க ளின் தேவையற்ற சுருங்கி-விரிவடைதல் மூலம் உடலின் பல்வேறு கோளாறுகளுக்கு காரணமாகிறது. உடற்கூறியல் தொடர்பாக ஒரு ஆரம்பக்கல்வி மாணவனுக்குண் டான புரிதல்கூட இல்லாமல் மூடநம்பிக்கையானதும் கற்பனைகளில் மூழ்கியிருப்பதும் அறிவியலுக்குப் பொருத்தமற்றதுமான நம்பிக்கைகளும் விளக்கங்களும் தான் எல்லா யோகா முத்திரைகளிலும் ஆசனங்களிலும் அடங்கியிருக்கின்றன. ஒரு சிலது மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜரா நரைகள் பாதிக்காமல், முதுமை ஏற்படாமல் அனேகாயிரம் வருடங்கள் வாழ்வதற்கான மோகமும் அதற்கான செயல்திட்டங்களும் விளக்குகிற கற்பனாவாத சித்தாந்தங்களே யோகா தரிசனங்கள். இதுபோன்ற மோகமும் கற்பனையும் உலகம் முழுவதுமுள்ள பண்டைக்கால மனிதகுலத்திடம் இருந்தது என்பது வரலாற்று உண்மையே.

                              III

15 முதல் 18-ஆம் நூற்றாண்டுவரை ஹடயோகிக் குழுக்கள் இந்தியாவில் வலிமையாக இருந்தன. வணிகத்தின் போக்கை மட்டுமல்ல அரசரைக்கூட கட்டுக்குள் வைக்கும் வலிமையை இவர்கள் பெற்றிருந்தனர். கிழக்கிந்திய கம்பனியின் வருகை இவர்களின் வலிமையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஹடயோகிகள் யோகாவை ஒரு மேடை நிகழ்ச்சியாக மாற்றி வருவாயை ஏற்படுத்திக்கொண்டார்கள். உடலின் மெய் வழக்கங்களை காசாக மாற்றுவதற்கு சர்க்கஸ் முறைகளையும் யோகாவோடு இணைத்துக்கொண்டனர். தனிமையாகவும் மறைவாகவும் பிரத்யேகமான சூழலிலும் செய்யவேண்டியதென்று போதிக்கப் பட்டவை மேடைநிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டன.

இன்றைய யோகா

19 நூற்றாண்டின் மத்தியகால அளவில் உடலழகு மேம்படுத்தலில் ஒரு புதிய கலாச்சாரம் ஐரோப்பாவில் வளரத் துவங்கியது. ஜிம்னாஸ்டிக்ஸ், தற்காப்புக்கலைகள் முதலியவை பெரிய அளவில் பிரபலமடைந்தன. காலனியாதிக்க இந்தியாவில், உடல்வலிமையற்றவர்களே இந்தியர்கள் என்ற பிரச்சாரம் மேலோங்கி நின்றது. நவீன உடலழகுக்கலையின் தந்தையெனவும் ஐரோப்பாவின் நாயகன் எனவும் பிரபலமடைந்த யூஜின் சாண்டோ இந்தியாவிற்கு வந்து தனது பயிற்சித்திட்டத்தை சந்தைப்படுத்தினார். தனது பயிற்சித் திட்டத்தை பின்பற்றினால் இந்தியர்கள் ஐரோப்பியர்களைப் போல உடலழகையும் வலிமையையும் பெறலாமென்றும் அதுவே விடுதலைக்கான சிறந்த மார்க்கமென்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. காலனியாதிக்க இந்தியாவில் இந்தக் கருத்து பல்வேறு குழுக்களிடையேயும் தனிநபர்களிடையேயும் பெரும் பிரச்சாரம் பெறவும் தாக்கம் ஏற்படுத்தவும் செய்தது. சாண்டோவால் கவரப்பட்டவரும் அவரது மானசிக சிஷ்யனுமாகிய அன்றைய ஒரு சிற்றரசாகிய அவுத்-தின் மன்னன் பிரடிநிதிபந்த், கருவிகளின் உதவி தேவைப் படாமல் செய்யப்படுகிற ஒரு உடற்பயிற்சி முறையை உருவாக்கினார். அதுவே சூரிய நமஸ்காரம். 20-ஆம் நூற்றாண்டின் ஒரு படைப்பாகிய சூரிய நமஸ்காரத்தின் மேல், பழமையானது என்று ஒரு போலிப்பெருமை  வர்ணம் பூசுப்பட்டதை தவிர வேறொன்றுமில்லை.

சாண்டோவால் உத்வேகமடைந்த ஜெ.சி.குணே (குவல்யானந்தா) இந்தியாவிற்கே உரித்தான ஒரு உடல்வலிமை திறம்படுத்துதல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென விரும்பினார். இதற்காக  ஐரோப்பாவில் அன்று பிரபலமடைந்திருந்த ஸ்வீடிஷ் உடற்பயிற்சி முறையான Ling முறையையும் இந்தியாவின் சில யோகாசன முறைகளையும் ஒன்றுபடுத்தி ஒரு கலவையாக மனம் மற்றும் உடல்வலிமையை வலுவாக்குகிற ஒரு உடற்பயிற்சி முறையை வடஇந்தியாவில் பிரச்சாரம் செய்தார். இதற்காக 1921ல் அவர் பம்பாயில் “கைவல்யதாமா” என்று பெரிய அளவிலான பயிற்சிமையம் ஒன்றை துவக் கினார். ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத்தலைவர்கள் இந்த மையத்தை பார்வையிட்டதனால் இது மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இதே காலகட்டத்தில் தென் இந்தியாவில் கே.வி.அய்யர், டி.கிருஷ்ணமாச்சாரி போன்றோர் ஹடயோகாவையும் சாண்டோ பயிற்சி முறைகளையும் கலந்து புதுவிதமான ஆசனங்களைக் உருவாக்கி அவற்றுக்கு சம்ஸ்கிருத பெயர்களையும் சூட்டி பிரச்சாரம் செய்துவந்தனர். 1947 வரையிலும் டி.கிருஷ்ணமாச்சாரிக்கு மைசூர் அரண் மனையிலிருந்து யோகா பிரச்சாரத்திற்காக நிதி அளிக்கப்பட்டு வந்தது, அப்படி அது ஓர் அரசுத்திட்டமாகவே செயல்பட்டு வந்தது. சுதந்திர இந்தியாவில் அரசுத்திட்ட மாக அல்லாமல் மாறிய யோகாவை மறுபடியும் அரசுத் திட்டமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தற்பொழுது மிக நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது.

புராதன இந்தியாவில் மோட்சம் அடைவதற்காக (கைவல்யம்) துவங்கப்பட்ட யோகா பிறகு அமரத்துவம் பெறுவதற்கான ஒன்றாகவும், சிற்றின்பம் அளிக்கக்கூடிய தாந்திரிக முறையாகவும், 18ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு மேடை நிகழ்ச்சிகளான சர்க்கஸ் முறைகளாகவும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து உடலழகு / ஜிம்னாஸ்டிக் /சர்க்கஸ் முறைகளாகவும், 20ஆம் நூற்றாண்டில் உடற்பயிற்சியாகவும், இன்று மருத்துவமுறையாகவும் மாறி உள்ளது. பணம் ஈட்டுவதற்கான வழிகளில் மருத்துவத்துறை முதன்மையான இடத்தை எட்டியிருக்கிறது. இன்று அனைத்துமே சிகிச்சைமுறைகளாக சந்தைப்படுத்தப்படுகிறது. மியூசிக்தெரபி, அரோமாதெரபி, சைக்கோ-ரிலிஜியஸ் தெரபி, தியானசிகிச்சை என்பது போல் தற்பொழுது யோகா தெரபியும். 

புராதன இந்தியாவின் விசித்திரமான கற்பனைகளை நவீன அறிவியலோடு ஒத்துப் போவதற்கு பொருத்தமான காரணங்கள் இருப்பதாக நிறுவுவது என்ற  பிடிவாதம் தான் ஜே.சி.குணே போன்றவர்களுக்கு இருந்தது. இன்றைய யோகாவை ஒரு உடற்பயிற்சியாகக் கூட ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதன் பல பயிற்சிகளும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதும் தேவையற்றதுமாகும். யோகா சாமியார்களின் இது குறித்தான விளக்கங்களெல்லாம் உள்ளீடற்றவைகளும் அறிவியலுக்குப் பொருந்தாததுமாகும். யோகாவின் பின்னுள்ள சில மனோவியல் பயிற்சிகள் பலபேருக்கு ஒரு போதைச் சுக மனநிலையை அளிக்கிறது. போதைப் பொருள்களும் இதைத்தான் அளிக்கின்றன. இரண்டுமே கேடு விளைவிப்பதுகளே.

உதவிய நூல்கள் :
பாரதிய தர்சனம் - கெ.தாமோதரன்
இந்தியயுடே ஆத்மாவு- கெ.தாமோதரன்
வாழும் கலை - அருணன்
ஓஷோ தர்சனம் - ஜெயிம்ஸ்
ஓஷோ விமர்சனம் - இடமருகு
Dr.C. நாராயணன்- ஆய்வு உரைகள்.



நேர்காணல்: மீரா நந்தா

                          
Science in Saffron (காவியில் அறிவியல்) என்கிற நூலை அண்மையில் வெளியிட்டுள்ள மீரா நந்தாவை  மதமும் அறிவி யலும் குறித்த ஆய்வாளரான ஸ்டீஃபனோ பிக்லியார்டி (Stefano Bigliardi) இத்தாலிய பகுத்தறிவு இதழான `லாய்டோ’வுக்காக (L’Ateo)   நேர்காணல் செய்தார். மீராவும் ஸ்டீஃபனோவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்நேர்காணலின் ஆங்கில  மொழியாக்கத்தை (Butterflies and Wheels (2016 Jan 29)  இதழ் வெளியிட்டிருந்தது. 


தமிழில்: கவின் மலர்
 ஸ்டீ: உங்கள் கல்வி மற்றும் தொழில் குறித்து எந்தெந்த விஷயங்கள் குறிப்பிடப்படவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்களை நான் நாத்திகவாதி என்பேன். அதை சற்றே விரித்து, உங்கள் நாத்திகத்தின் வேர்களையும் காரணங்களையும் குறித்துப் பேசலாமா?

மீரா: என் அறிவுசார்/தொழில்சார் பாதையும் என் “நம்பிக்கை” பாதையும் பின்னிப் பிணைந்தவை. ஒன்றோடொன்று தாக்கம் செலுத்துபவை.

மரபுக்கும் புதிய சிந்தனைகளுக்குமிடையே அல்லாடிய படியும், ஒரு பெண்ணாக என் சொந்தத்திறனின் மெல்லிய பிரதிபலிப்புக்கும் ஆணாதிக்கத்திற்குமிடையே ஊசலாடிய படியும் நான் வளர்ந்தேன். நாட்டின் விடுதலைக்காக பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய படியே என் தந்தை தன் இளமைக்காலத்தைக் கழித்தார். ஆழமான தேசியவாதத்திற்கும் தேசியவாத மனோநிலை தரும் ‘அவர்களா நாங்களா’ என்கிற குறுகிய எண்ணங்களுக்கெதிரான கலகத்துக்குமிடையில் சிக்கியிருந்தேன், இறுதியாக ஆனால் பெரும்பாலும், நம்பிக்கைக்கும் ஐயங்களுக்கும் இடையேயான போராட்டத்திலேதான் என் நாட்கள் கழிந்தன.

வட இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்து இந்த முரண்பாடுகளுடன்தான் வளர்ந்தேன். இந்தியாவின் திட்ட மிட்டு நிர்மாணிக்கப்பட்ட முதல் நகரம் அதுவே. தேசத்தின் புதிய பிறப்பின் அடையாளமாக அந்நகரம் நிர்மாணிக்கப்பட்டது. ஜவஹர்லால் நேருவின் கற்பனையிலும், பிரான்ஸின் புகழ்பெற்ற நகர் நிர்மாண நிபுணரான  லெ கார்புசியரின் வடிவமைப்பிலும் உருவாக்கப்பட்டது சண்டிகர் நகரம். உள்கட்டமைப்பிலும் தோற்றத்திலும் நகரம் நவீனமாக உருவானது. ஆனால் அந்த இடத்திற்கும் மக்களுக்குமான இயல்பான தொடர்பே உருவாகவில்லை. என் பெற்றோர் உட்பட அங்கு வசித்த பலரும் நாட்டுப் பிரிவினையின் ரத்தக்களறியில் அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள்.

மரபான பழக்கவழக்கங்கள் மற்றும் இந்துமதக் கோட்பாடுகளிலும் அமிழ்ந்த ஒரு சூழலில் தான் வளர்ந்தேன். குடும்பத்தின் வழிபாட்டுத்தலங்களில், அருகிலுள்ள இந்து மற்றும் சீக்கியக் கோயில்களில் நடக்கும் பிரார்த்தனைகளில் பங்குகொள்வதும், ராமாயண, பகவத் கீதை பாராயணங்களும் வாழ்வின் பகுதிகளாகிவிட்டன. என் கடவுளர்களை நான் மிகத் தீவிரமாக உள்வாங்கினேன். பிரார்த்தனைகளிலும், பிற சடங்குகளிலும் நான் முன்னால் நிற்பேன்.

சந்தேகத்தின் விதைகளை விதைத்து, அதன் விளைவாக முற்றிலுமாக மத நம்பிக்கைகளை இழக்கச் செய்தது நான் கற்ற அறிவியல் (நுண்ணுயிரியல்). மூலக்கூறு உயிரிய லும் (Molecular biology)  உயிர்வேதியியலும் (Biochemistry) எனக்கு அறிமுகமானது தான் திருப்புமுனையாக அமைந்தது. அதிலும் டிஎன்ஏ-வின் இரட்டை நூலேணி   வடிவம் குறித்து வாசிக்கும்போது என் மூளைக்குள் தீப்பற்றியது. வாழ்வின் அறியப்படாத ரகசிய கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் எனக்குத் தெரியுமென்று  நான் உணர்ந்தேன். புராணங்களின் கடவுள்கள் மற்றும் பெண் கடவுளர்களைவிட அவ்விடைகள் மிகுந்த நம்பகத்தன்மையுள்ளவை என்றும் தோன்றியது. அதிலிருந்து நான் வழிபடவே இல்லை.

அறிவியலில் மிகத் தீவிரமாகி, பிஎச்.டி ஆய்வு செய்ய முடிவெடுத்தேன். இந்தியாவின் மேல்தட்டு நிறுவனமான புதுதில்லி ஐஐடியில் பிஎச்.டி ஆய்வை முடித்தேன். ஆனால் ஆராய்ச்சியின் குறைவான தரம், அதிகாரமிக்க, ஏறத்தாழ நிலப்பிரபுத்துவமான முறையில் இயங்கும் பரிசோதனைச்சாலைகள், அவற்றுக்கும் வெளியுலகிற்கும் எத்தொடர்புமில்லாத தன்மை இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் (1983ல் நான் உயிரி தொழில் நுட்பத்தில் என் முதல் பிஎச்.டியை முடித்திருந்தேன்) உள்நாட்டில் வளர்ந்திருந்த காந்தியம் உட்பட பல் வேறு தத்துவங்களைக் கற்ற முக்கியமான அறிவுஜீவிகளாலும், writings of Critical Theory (Horkheimer and Adorno) மற்றும் அறிவியலின் புரட்சிகர தத்துவாதி பால் ஃப்யெராபெண்ட் உட்பட அறிவியலுக்கு எதிரான பலரின் மேற்குலக கருத்துக்களாலும் நவீன அறிவியல் கடும் தாக்குதலுக்குள்ளானது. அத்துடன் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டவரான தாமஸ் குன் மற்றும் ‘அறுபதுகளின்’ பெண்ணிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு இலக்கியங்களும் இப்பட்டியலில் உண்டு. (ஐரோப்பிய மையத்துவம் மற்றும் இந்தியாவின் நவீனத்துவம் போன்றவற்றின் மீது பின்நவீனத்துவ மற்றும் பின்காலனிய விமர்சனங்கள் வரத்தொடங்கியிருந்த நேரம் அது).

நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்கிறேன். நான் அறிவியலில் மேற்கொண்டு தொடரப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். ஒரு பெரிய நாளிதழிலில் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்) அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்கிற முடிவை பிஎச்.டி முடித்தவுடன் கைவிட்டேன். பின் அமெரிக்காவிற்குச் சென்று முதலில் வரலாறும் பின் அறிவியலின் தத்துவமும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் (ப்ளூமிங்டன்) பயின்றேன். அதன்பிறகு நியூயார்க்கில் உள்ள ரென்ஸெலேர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் இன்னொரு பிஎச்.டி முடித்தேன். 

என் இரண்டாவது கல்விப்புலப்பாதையை அறிவியலை ஆதரிப்பதற்காகவே அர்ப்பணித்தேன். அதுவே எனக்கு தனிப்பட்ட வகையில் விழிப்புணர்வையும் அறிவையும் வழங்கியது. இந்தியப் பண்பாட்டு வாழ்முறைகளில் புதிய ஞானத்தையும் மதச் சார்பின்மையையும் கொண்டுவரும் திட்டத்தில் தீவிரமாக வேண்டுமென தீர்மானித்தேன்.

என் பணிசார்ந்து நான் ஒரு வட்டப்பாதையை தேர்ந்தெடுத்திருந்தாலும், மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு ஐயங்கள் கொண்டு இயற்கைத்துவத்திற்கு ‘மாறிய’ அப் பயணத்திற்கு உண்மையாக இருந்திருக்கிறேன். அந்த மாற்றம் பல பத்தாண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேச்சரங்கம் ஒன்றில்தான் நிகழ்ந்தது.

ஸ்டீ: பல வடிவங்களில் “மாற்றுச்சிந்தனைகளை” விதைக்கும் நாடு என்றே தோற்றம் தரப் படுவதும் கூறப்படுவதும், மேலும் “ஒருவரின் உண்மையான சுயத்தைக்” கண்டடைவதற்கு இந்தியாவில் வழியுள்ளதெனவும் உங்கள் தாய்நாட்டைப் பற்றி இத்தாலியில் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த வழக்கமான இந்தியாவின் பிம்பத்தைத் தாண்டியும் ஒரு சிலர் அறிந்துள்ளனர். எடுத்துக்காட்டாக அதன் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியையும் அதன் விளைவான சிக்கல்களையும் அறிந்தவர்களாக உள்ளனர். இந்தியாவை மீரா நந்தாவின் சொற்களில் அறிந்து கொள்ளலாமா?

மீரா: இந்தியா பல முரண்பாடுகளின் நிலம். வெளியாட்களுக்கு தோற்றமளிப்பதைப் போல, ஆன்மிகத்தால் நிரம்பிய “மாற்றுச் சிந்தனை” மரபுகள் வழியாகவே ஒரு சாதாரண ஆணோ பெண்ணோ இந்தியாவைப் புரிந்துகொள்கின்றனர். ஆனால் இந்தியா, தான் தோற்றமளிப்பதைப்போல அத்தனை அன்பானதும் “ஆன்மிகமானது”மாக எப்போதும் இருப்பதில்லை.

சூழலை நான் எப்படி விவரிப்பேன்? உண்மை நிலவரங்களுக்காக ஒரு தேசிய நாளிதழின் தலையங்கத்தை துணைக்கழைக்கிறேன் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டிச 28, 2015)

  • ·ஷாம்லியில் ஓர் இளம்பெண் காணாமல் போகிறார். ஷாம்லி வட இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு சிறிய நகரம். இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக அப்பெண் இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டிருக்கிறார் என இந்து மதத்தைச் சேர்ந்த மூத்தோர் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் கோயில் பூசாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து வலதுசாரி அரசியல் கட்சியான பாஜகவின் தலைவர்களும் அக்கூட்டத்தில் பேசுகின்றனர். ( சில நாட்கள் கழித்து, அந்தப் பெண், தான் காதலித்த இஸ்லாமிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு டில்லியில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது). ‘லவ் ஜிகாத்’ என்றழைக்கப்படும் சதித்திட்டம் மூலமாக, இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை காதலித்து அவர்களை தங்கள் மதத்திற்கு மாற்றிவிடுவார்கள் என்கிற இந்துத்துவவாதிகளின் ஒழுக்கம் சார்ந்த கலாச்சார பீதிதான் ஷாம்லி விஷயத்தில் நாம் பார்ப்பது. 

  •  கிழக்கத்திய மாநிலமான ஒடிஷாவில் ஒரு சூனியக்காரர், வயிற்றுவலிக்கான சிகிச்சை என்கிற பெயரில் 17 நாட்களேயான பச்சிளம் குழந்தையை சூடான இரும்பு ஆணிகள் கொண்டு பச்சை குத்தியிருக்கிறார். இத்தகைய “சிகிச்சை” முறைகள் வெறும் மூட நம்பிக்கைகளால் மட்டுமல்ல, மருத்துவ வசதிகளின் கடும் பற்றாக்குறை இருப்பதன் காரணமாகவும் தான் பின்பற்றப்படுகின்றன. இந்த சூனியக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகும்பொழுது, சூனிய முறைகளில் கைதேர்ந்த பெண்கள் வேட்டையாடப்படப்பட்டு கொலை செய்யப்படுவது இந்தியாவின் பல பகுதிகளில் நடக்கிறது.           
  • சீக்கிய நம்பிக்கைகளின் “பாதுகாவலராகவும் பிரச்சாரகராகவும்” வடக்கில் உள்ள மாநிலமான பஞ்சாபில், ஆளும் அரசியல் கட்சியே தன்னை பிரகடனப்படுத்தியது. மதத்திலிருந்து அப்பாற்பட்டு அரசு இயங்கவேண்டும் என்கிற கருத்தையேகூட மாநில முதலமைச்சர் எள்ளிநகையாடினார். 
  • · இதனிடையே இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது:  இந்தியப் பிரதமர் “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டத்தை அறிவித்தார். நிதியமைச்சரோ இந்தியாவின் வணிகம் மிகவும் முன்னேறியுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சிவிகிதம் 7 முதல் 7.5 சதவிகிதம் இருக்குமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 
ஸ்டீ: அரசியல்ரீதியாகப் பார்த்தால், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. உண்மையில் அது மதச்சார்பற்ற ஜனநாயகமாக இருக்கிறதா?

மீரா: ஆம். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுதான். நியாயமான சுதந்திரமான தேர்தல் முறை மூலம் எங்கள் ஆட்சியாளர்களை நாங்களே தேர்ந்தெடுக்கிறோம் என்ற வழிமுறையானது பெருமைக்குரிய ஒன்றுதான். இதைவிட, ஏழைகளிலும் ஏழைகளாக, விளிம்புநிலையிலுள்ளவர்கள் அனைவரும் இந்த ஜனநாயக வழிமுறையில் கவனமாக உற்சாகமாக பங்கு பெறுகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம். ஆனால் மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் தேர்தல் ஜனநாயக முறையில் அடிமட்டத்திலுள்ளோர் பங்கு கொள்வதில்லை. இந்தியாவிலோ மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைவிட ஏழைகள் மிகப்பெருமளவில் வாக்களிக்கிறார்கள்.

மதச்சார்பின்மை என்பது முற்றிலும் வேறு கதை. அமையவிருந்த புதிய நாட்டின் அரசுக்கு இருக்கவேண்டிய தன்மையை வரையறை செய்யும் “மதச் சார்பற்ற” என்கிற சொல்லை இந்திய அரசியல் சாசனம் தொடக்கத்தில் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, “சோஷலிச மற்றும் மதச்சார்பற்ற” என்கிற சொற்களை அரசியல் அமைப்பின் முன்னுரையில் சேர்க்கச் செய்தார். இப்போதைய பாஜக தலைமையிலான அரசு இந்த சேர்க்கையை நீக்கிவிட்டு அரசியல் சாசனம் முன்பிருந்த நிலைக்குத் திரும்ப வேண்டுமெனத் திட்டமிடுகிறது.

சேர்ப்பது, நீக்குவது என்பது ஒருபுறமிருந்தாலும், அரசியல் சாசனம் தன்னளவில் மதச்சார்பற்றதே. சாதி, வர்க்கம் பாலினம், மதம் என்கிற அத்தனை அடையாளங்களையும் கடந்த குடியுரிமையை அது வழங்குகிறது. மத நம்பிக்கை எதுவாக இருந்தாலும் (இல்லாமலேயே இருந்தாலும்) குடிமக்களுக்கு சம உரிமையும் சுதந்திரமும் உண்டு.

ஆனால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பாரம்பரிய மதச்சார்பின்மை போல இந்திய மதச்சார்பின் மையை புரிந்துகொள்ள முடியாது. அரசுக்கும், மத நிறு வனங்களுக்கும் இடையே சுவரோ அல்லது வேலியோ கூட இல்லை. மத நம்பிக்கைகளிலிருந்து வெளியேற வேண்டுமென இந்திய மதச்சார்பின்மை அரசை கோரு வதில்லை. மாறாக அனைத்து மதங்களின் உரிமைகளும் சமமாகப் போற்றப்படவேண்டும் என்கிற அளவிலேயே உள்ளது. இந்து மரபில் உள்ள “சகிப்புத்தன்மை”யை மீண்டும் நினைவுபடுத்தியும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மையையும் வைத்து இவ்வகை மதச் சார்பின்மை நியாயப்படுத்தப்படுகிறது. 

இந்திய வகை மதச்சார்பின்மையில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. ஏட்டில் உள்ளபடி அரசு அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் அது அத்தனை எளிதாக இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளிலும் மக்கள்தொகையிலும் இந்துக்களே பெரும்பான்மையினர். எனவே அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ மதமாக இந்து மதமே உள்ளது. அரசின் சின்னங்கள், சடங்குகள், மரபுகள் அனைத்தும் இந்துமதத்திலிருந்தே உருவாக்கப்படுகின்றன. புனித வழிபாட்டுத்தலங்கள், புனித யாத்திரை செல்லுமிடங்களுக்கான சுற்றுலாவை ஆதரிப்பதன் மூலம் அவற்றின் பொருளாதாரம் வலுப்படுகிறது. சிறுபான்மையினரின் கல்வி மற்றும் சமூக நிறுவனங்களுக்கு உதவி மறுக்கப் படாத, அவர்களின் உள்விவகாரங்களில் அரசு தலையிடாத சுயேச்சைமுறை நடைமுறையில் இருக்கிறது என்றாலும், அளிக்கவேண்டிய நிதியுதவிகள் எல்லாம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்கே செல்கின்றன.

இதைவிட, பொதுவெளிகளில்- மருத்தவமனைகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை எல்லாம் இந்துச் சின்னங்களாலும் குறியீடுகளாலும் நிரம்பியுள்ளன. முக்கிய நிகழ்வுகளின்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட இந்து மதச்சடங்குகளை பின்பற்றுகின்றன. இந்தியாவில் மத அடையாளங்கள் இல்லாத பொது இடத்தைக் காண்பது அரிது.

ஸ்டீ: (இந்தியாவில்) அரசியலில் மதம் இப்படி தலையிடுவதால், கல்விக்கொள்கைகளில் அதன் விளைவுகள் என்னவாக இருக்கின்றன?

மீரா: தேசியவாத ஆதிக்கத்திற்கு கல்வி ஒரு பாதையாகிவிட்டது என்பதே எனக்கு மிக முக்கிய பிரச்சனையாகத் தெரிகிறது. இந்திய வரலாறு - குறிப்பாக இந்திய அறிவியலின் வரலாறு  இந்தியாவின் சிறப்பு மற்றும் ஒற்றுமை குறித்த கட்டுக்கதைகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவே பயன்படுத்தப்படுகிறது. (இதுதான் உண்மையில் என்னை Science in Saffron எழுதத் தூண்டியது. சாதனைகளை நேரடியாகவும், அறிவியலில் இந்திய பங்களிப்புகளை உலகளாவிய ஒப்பீடுகளுடனும் தர விரும்பினேன்).

இந்து தேசியவாதக் கட்சி ஒன்று (பாஜக) ஆட்சியில் இருக்கையில், கல்விக்கு இந்து சாயம் பூசும் வேலைகள் அதிகரித்துவிட்டன. பள்ளியின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையைக் கொண்டுவர ஏற்கனவே சில மாநில அரசுகள் திட்டமிட்டிருக்கின்றன. யோகா ஏற்கனவே பல பள்ளிகளில் அன்றாட வகுப்புகளில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. கல்விக்கொள்கையை மாற்றி எழுதத் திட்டங்கள் உள்ளன. இந்துமயமான ஒரு பாடத்திட்டம் வந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கிறது.  நாட்டின் உயர்ந்த பதவியில் நரேந்திர மோடி இருக்கையில், இந்துமயமான கல்விக்கான வேலைகள் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் பல மாநிலங்களில் இத்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. வெண்டி டோனிகரின் “The HIndus”  நூலை கூழாக்கும் முடிவை எடுக்க பெங்குயின் பதிப்பத்துக்கு அழுத்தம் தந்த தினாநாத் பத்ரா தான் இந்தப் பெரியளவிலான கல்வி “சீர்திருத்த” இயக்கத்திற்குப் பொறுப்பு. பதிப்பகங்களையும் மற்ற ஊடகங்களையும் அச்சுறுத்துவதும், சுய தணிக்கை செய்யப் பணிப்பதும் சகஜமாகிவிட்டன.

இந்து உரிமைகளைக் கொண்டு கல்வி நிறுவனங்களை சத்தமில்லாமல் கைப்பற்றுவது சில நாட்களாக நடந்து வருகிறது. முதல்முறை பாஜக ஆட்சிக்கு வந்ததன் பலனாக (1998-2004) பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாயின ( “பொதுத்துறை - தனியார் கூட்டு” என்று இதற்கு நாகரிகமாக பெயர் வைக்கப்பட்டது). ஜோசியராகவோ, சாமியாராகவோ மூச்சுப்பயிற்சி வழங்குகிறவராகவோ  ஆகவேண்டுமெனில் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து தொழில்முறை பட்டம் பெற்றுவிடலாம். மேல்தட்டு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட சுய பிரக்ஞை ஆய்வுகள் ( Consciousness studies) என்கிற பெயரில் பட்ட வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. அவை வேறொன்றுமில்லை. வேதாந்தங்களை கற்றுத் தருவதுதான். பிரபலமான குருக்கள், ஆசிரமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ணா போன்ற பக்தி மடங்கள் இவையெல்லாம் இந்த “கல்வித்” திட்டங்களை முன்னெடுக்கின்றன. அரசியல்வாதிகளில், அரசு அதிகாரிகளில், ஏன் பேராசிரியர்களில் கூட பலர் இந்தக் குருமார்களைப் பின்பற்றுபவர்களாக இருப்பதால், யாருடைய புருவமும் உயராமல் எந்தக் கேள்வியுமில்லாமல் கல்வித்துறைக்குள் இந்து மதத்தை நுழைப்பது ஓசையின்றி நடக்கிறது. 

இவை எல்லாவற்றையும் விட பாஜக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஆய்வுப் பேரவைகளிலும் (குறிப்பாக வரலாற்றாய்வு) இந்து தேசிய ஆதரவாளர்களை நுழைக்கின்றன. மார்க்சிய, மதச்சார்பற்ற வரலாற்றாளர்களை “தேசவிரோதிகள்” என்று வெளிப்படையாக இந்திய வரலாற்று ஆய்வுப் பேரவை அறிவிக்குமளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவின் பெருமைமிகு சமூக அறிவியல் மற்றும் மனிதமேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமான நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை இந்துமயமாக்கும் திட்டமிருக்கிறது. 

ஸ்டீ: இந்தியாவில் நாத்திகம் என்பது எந்த வடிவத்தில் இருக்கிறது? யார் அதன் வழிகாட்டிகள்? எப்படி நாத்திகம் செயல்படுகிறது? நாத்திகவாதிகளுக்கு ஆபத்துகள் உள்ளனவா?

மீரா: The God Market என்கிற என் அண்மைய நூலில் ஆவணப்படுத்தியுள்ளதைப் போல, இந்தியா பெருமளவில் மதம்சார்ந்த நாடாகவே உள்ளது. ஆய்வு முடிவுகளின்படி 96 சதவிகிதமானவர்கள் மத நம்பிக்கையுள்ளவர்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில் ‘உங்கள் மதம் என்ன?’ என்கிற கேள்விக்கு நீங்கள் ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை’ என்று பதிலளித்தால் நீங்கள் இந்து மக்கள்தொகையில் சேர்க்கப்படுவீர்கள். அந்தளவிற்கு மதம் சார்ந்த பாரபட்சம் உள்ளது. தன்னை இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ, சீக்கியராகவோ, பௌத்தராகவோ, ஜெயினராகவோ அறிவித்துக்கொள்ளாத ஒருவர் இங்கு இந்து என்றே புரிந்துகொள்ளப்படுவார்.

இந்தியாவில் நாத்திகம் இருக்கிறது. கண்கட்டு வித்தைகளையும் மூடநம்பிக்கைகளையும் மிக வெளிப்படையாகவும் ஆக்ரோஷமாகவும்  எதிர்த்துப் போராடும் பகுத்தறிவுக் குழுக்கள் பல இந்தியாவில் உண்டு. இணையத்திலும் பகுத்தறிவுக் கருத்துகள் மிகப் பரவலாக உண்டு. ஆனால் பொதுவில் அதன் இருப்பு மிகக் குறைவே.

நாத்திகம் எந்தளவுக்கு இருந்தாலும் அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியே இருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில், இந்து மூடநம்பிக்கைகளையும் இந்து மதத்தின் கட்டுக்கதைகளையும் குறித்து கேள்வி எழுப்பிய முன்னணி அறிவுஜீவிகளில் மூன்று பேர் படுகொலை செய்யப் பட்டனர். இந்துமதக் கண்ணோட்டத்தையும் பழக்க வழக்கங்களையும் கேள்வி கேட்டதால், நூல் எரிப்புகள், திரைப்படத் தடைகள் போன்றவை அதிகரித்துவிட்டன.

பல்கலைக்கழக வளாகங்களிலும் பொதுவெளியிலும் எழும் மதச்சார்பற்ற குரல்களை ஒடுக்கவும் அச்சுறுத்தவும் அரசு தன் இந்துத்துவ சார்புள்ள மாணவர் அமைப்பை பயன்படுத்தும் ஆபத்தான போக்கு பரவலாகியுள்ளது. இந்த வார்த்தைகளை நான் பேசுகையில்கூட, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிரச்சனை கொழுந்து விட்டெரிகிறது. தலித் (முன்பு தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த) மாணவர் ஒருவர் உயர் அதிகார மட்டத்திலிருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். பல்கலைக்கழகத்திலிருக்கும் இந்துத்வ சார்பு மாணவர் அமைப்பொன்றின் பொய்ப்புகாரை வைத்து  இடைநீக்கம் செய்தது நிர்வாகம். மேல்தட்டு நிறுவனங்களான ஐஐடி போன்றவற்றில்கூட மதச்சார்பற்ற, பகுத்தறிவுக் குரல்கள் (பெரும்பாலும் தலித்துகளால் எழுப்பப்படுபவை) நசுக்கப்படுகின்றன. வெகு சாதாரணமாக அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக ஆகிவிட்ட, அரசே முன்னின்று செய்யும் இந்த அச்சுறுத்தல் ஒருவித பயச்சூழலையும் சுய தணிக்கையையும் உருவாக்குகின்றது.

ஸ்டீ: உங்கள் நூல்களில் நீங்கள் “காவிமயமான அறிவியலை” விவரிக்கிறீர்கள், விமர்சிக்கிறீர்கள். அது வெறும் பின்நவீனத்துவ வழக்காறுதானா? அல்லது உண்மையாகவும் உறுதியாகவும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பாதகங்கள் இதனால் ஏற்படுமா? எப்படி?.

மீரா: காவியமயமான அறிவியல் எனும்போது, இரு விஷயங்கள் உள்ளன. முதலில், ஆன்மா என்பதன் இருப்பை இறுதியான உண்மையாகக் கூறி அதை மரணத் துக்குப் பிந்தைய வாழ்வு, மறுபிறப்பு போன்றவற்றோடு தொடர்புப்படுத்தும் மரபான இந்து நம்பிக்கைகளுக்குள் இருக்கும் முரண்பாடுகளின் சுவடுகளை நவீன அறிவியல் தலையீடு செய்து அழித்திருக்கிறது. இரண்டாவது, நவீன அறிவியல் கோட்பாடுகளான கோபர்நிக்கஸின் சூரிய மையம், பரிணாம வளர்ச்சி அல்லது குவாண்டம் இயற்பியல் போன்ற கோட்பாடுகளை பழங்கால இந்து அறிவியலுக்கான விளக்கம் என திரித்துச் சொல்வது.

காவிமயமான அறிவியலில் பின்நவீனத்துவம் என்று ஒன்று இல்லை. பின்நவீனத்துவம் மற்றும் அதன் இணைப்பான ஞானத்திற்கெதிரான கோட்பாடுகள் அனைத்துமே,  நவீன அறிவியலுக்கும் மற்ற “மாற்று” சிந்தனை முறைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை மறுப்பதன் மூலம் இந்துமயமாதலுக்கு உதவவே செய்கின்றன. தவிரவும், அறிவியல் குறித்த பின் நவீனத்துவ, பின்காலனிய சிந்தனைகள் யாவும் அறிவியல் என்பது  ஒரு மேற்கத்திய மற்றும் காலனிய கட்டமைப்பு என்றே நம்புகிறது. காலனிய நாடுகளின் மூலம் மேற்கு உலகம் உள்ளே நுழைந்ததனால்தான் அறிவியலின் தரவுகள் யாவும் உண்மையாகவும் உலகளாவிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் ஆகின என்கிற கருத்தையே அவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. உலகளாவிய பார்வையின்றி குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் பாவனையில் பேசும் இந்து தேசியவாதிகளின் மொழியிலேயே பேசுவதாக இக்கருத்துக்களும் அமைந்துவிடுகின்றன.

ஸ்டீ: அறிவியலும் மதமும் சீராக சமரசம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?

மீரா: இல்லை. ஸ்டீவன் வெயின்பெர்கின் அண்மை நூலான "To Explain the World" நூலை மேற்கோள் காட்டி நவீன அறிவியல் குறித்துச் சொல்கிறேன். நவீன அறிவியலின் கண்டுபிடிப்பு என்பது “கணக்கு சூத்திரப்படியும் சோதனைமுறையிலும் மதிப்பீடு செய்யப் பட்ட, தொடர்பில்லாத கொள்கைகள் மூலம் பெருமளவிலான வெவ்வேறு முறைகளை விளக்க முற்படுவது”.

நோக்கங்களுடனான எந்தக் கொள்கைக்கும் இதில் இடமில்லை அல்லது உணர்வுக்கும் இடமில்லை. அது அகம் சார்ந்த கடவுளானாலும் சரி எங்கும் வியாபித்துள்ள சாத்தானாக இருந்தாலும் சரி. கடவுளோ சாத்தானோ ஒரு கவிதையின் உருவகத்தில் இருக்கலாம், அதுவும் ஒரு மனோதத்துவ உதவி போல அவர்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே. அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.

நான் சொல்லவருவது என்னவென்றால், இயற்கை எப்படி இயங்குகிறது என்பதை விளக்குகையில் அதில் கடவுளுக்கும் அல்லது ஆன்மா தொடர்புடைய கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை: இயல்பான உலகம் நவீன அறிவியலிடம் சரணடைய வேண்டி இருக்கிறது. உலகை விளக்க கடவுளைக் கொண்டுவந்தால், சான்றுகளோடுதான் எதையும் விளக்கவேண்டுமென்கிற அறிவியல் சட்டதிட்டங்களுக்கும் இயல்பான உலகளாவிய பார்வைக்கும் பணிந்துபோக வேண்டும். ஆப்ரஹாமிய மதங்கள் என்று அழைக்கப்படும் யூதமதம், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களைப் போலல்லாமல், இந்து இறையியல் பொருளிலிருந்து தெய்வீகத்தைப் பிரித்துப் பார்ப்பதில்லை: பொருள் உலகை உடைத்துக்கொண்டே போனால் அணுக்கள் இருக்கும்- அதாவது பொருள் என்பது படிப்படியாக கட்டமைக்கப்பட்டது. அத்துடன் தூய உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றின் விளைவான இரண்டாம்நிலை நிகழ்வும்கூட. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்துமதம் ஆன்மிகத்தையும் பொருளையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகப் பார்க்கவில்லை. அதுபோலவே மதம் மற்றும் அறிவியல் தொடர்பான விஷயங்களையும் தொடர்புபடுத்தியே பார்க்கிறது. ஸ்டீபன் ஜே கோல்டின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ஆன்மீகம், அறிவியல் ஆகியவற்றை வெவ்வேறு- ஒன்று மற்றொன்றின்மீது படியாத படிக்கு இருக்கவேண்டிய- கற்பிக்கும் களங்களாக இந்து மதம் அடையாளப்படுத்துவதில்லை. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சவாலே இவற்றுக்குத் தொடர்பில்லை என நிறுவுவதே- “ஆன்மிக அறிவியல்” என்கிற பொய்யான, இல்லாத அறிவியல் வகையை உடைப்பது தான். தயக்கமே இல்லாமல் நிஜ அறிவியலின் சிறந்த சான்றுகளோடு “ஆன்மிக அறிவியலை” சோதனைக்குட்படுத்திப் பார்த்தால் மட்டுமே இது சாத்தியம். அதனால்தான் சுவாமி விவேகானந்தாவின் எழுத்துக்களையும் பிரம்மஞானிகளின் எழுத்துக்களையும் விலக்கிவைக்க வேண்டுமென்பதை தலையாயப் பணியாய் செய்துவருகிறேன். ஏனெனில் அவர்கள்தான் முதன்முதலாக,  இந்தியாவில், பொருள் குறித்த ஆய்வில் ஆன்மிக பரிமாணத்திற்கு “அறிவியல்பூர்வமான” நியாயங்களை வழங்கியவர்கள். 

ஸ்டீ: அறிவியல் கல்வியை (அல்லது பொதுவாக கல்வியை) இந்தியாவில் எப்படி சீர்திருத்த வேண்டும் என நினைக்கிறீர்கள்? எந்த நாட்டையாவது இதில் முன்மாதிரியாக வைத்திருக்கிறீர்களா?

மீரா: இது மிகவும் பெரிய விஷயம். என்னால் இதற்கு பதிலளிக்க இயலுமெனத் தோன்றவில்லை.

உலகளாவிய தரமான கல்வி என்று வருகையில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எல்லா இடங்களிலும் பொதுப்பள்ளிகள் வந்தால் அது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வழிசெய்யும்.

ஸ்டீ: இந்தியாவில் பெண்களும் (அறிவியல்) கல்வியும் - சிக்கல்கள் என்ன? சாத்தியமான தீர்வுகள்?

மீரா: அறிவியல் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் பெண்களை சட்டரீதியாகத் தடுப்பது எதுவுமில்லை. அமெரிக்காவில் இருக்கும் தங்கள் சகோதரிகளைவிட பெண்களுக்கு இங்கு அதிகமாகவே கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, பேறுகால விடுப்பு என்று வரும்போதும், அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் ஊதியத்துடனேயே அவ்விடுப்பு கிடைக்கிறது. 

பெண்கள் பாதை வகுத்திருக்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் பணியாற்றுகிறேன். அங்கே உள்நுழையும் பொழுதாவது பாலின சமத்துவம் இருக்கிறது. சக ஆண்களைவிட பெண்கள் துறைரீதியான படிப்பில் வல்லவர்களாக உள்ளனர்.

ஆனால் எல்லா நாடுகளிலும் உள்ளது போல இந்தியாவிலும் தொழில்ரீதியாக முன்னேறிச் செல்கையில் பெண்களின் எண்ணிக்கை குறைவே. அறிவியல் துறையில் பணியைத் தொடரமுடியாத பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

வீட்டில் குழந்தைகளையும் முதியவர்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு  என்கிற பெயரில் கூடுதல் சுமைகளை பெண்கள்மீது சுமத்துவது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆண்களும் பொறுப்புகளை உணர்ந்து நியாயமான முறையில் பணிகளில் பங்கெடுத்துக் கொள்ளாவிட்டால், பெண்களுக்கு அது பாதகமாகவே முடியும்.

- புது விசை - இதழ் 46 / ஜீலை 2016